பிள்ளையார் சிரித்தார்/கார்த்திகேயன் கனவு

5

கார்த்திகேயன் கனவு


[பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதிய பார்த்திபன் கனவுக்கு
இந்தக் கார்த்திகேயன் கனவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்
என்று எண்ணி வாசகர்கள் மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.]

இரவு மணி எட்டே கால். திருவனந்தபுரம் மெயில் எழும்பூர் ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்டது.

ஒடுகிற ரெயிலில், ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு மெத்தையொன்றில் சுகமாகப் புரண்டுகொண் டிருந்த சேகரின் உள்ளத்தில் எண்ணங்களும் உருண்டு புரண்டுகொண்டிருந்தன.

இப்போது அவன் எஸ். எஸ். எல். ஸி. பாஸாகி விட்டான். அதனால் இனிமேலும் அவனே அவனுடைய தந்தை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, இந்த முறை எப்படியும் அப்பாவினுடைய அந்த ரகசிய அறையைப் பார்க்காமல் தான் பட்டணம் திரும்பப் போவதில்லை என்கிற உறுதியுடன் சென்ருன்.

தஞ்சை ஜில்லாவிலுள்ள பெரிய மிராசுதார்களுள் சேகரின் தந்தை கார்த்திகேயன் பிள்ளையும் ஒருவர். வளமான காவிரிக் கரையில் அவருக்கு நன்செயும் புன்செயுமாக ஏராளமான நிலங்கள். கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டையில் பெரிய பண்ணை. அதன் மத்தியில் அழகான பெரிய மாடி வீடு. சுற்றிலும் ஏராளமான தோட்டம் துரவுகள். கூப்பிட்ட குரலுக்குச் சிமிட்டுகிற நேரத்தில் பத்துப் பேர் கைகட்டி நிற்பார்கள்.

இத்தனையிருந்தும் பிள்ளையின் மனத்தில் ஒரு பெரிய குறை. அது, அவருடைய குடும்பத்தில் பரம்பரையாக யாருக்குமே கல்வி அறிவு-அதாவது போதிய பள்ளிப் படிப்பு-கிடையாது என்பதுதான்.

எத்தனைதான் மலையாகச் செல்வம் குவிந்திருந்தாலும், கார்த்திகேயன் உள்ளத்தில் இது ஒர் உறுத்தலாகத்தான் இருந்தது. இந்தக் குறைக்குச் சிகரம் வைத்தாற்போல் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.

கார்த்திகேயன் புதிதாக வாங்கியிருந்த ஒரு நிலத்தில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக, ஒரு தஸ்தாவேஜியை அவரிடம் ஒருவர் கொண்டுவந்து காண்பித்து, தமக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சரி பண்ணிவிடுவதாகக் கூறினார்.

பிள்ளை அந்தப் பத்திரத்தை வாங்கிப் பார்த்தார். அது முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பேசாமல் நம்பி, ஆயிரம் ரூபாயை எண்ணிக் கொடுத்துவிட்டார். ஆனால், அதன் பின்புதான் தெரிய வந்தது, அவர் வாங்கிய நிலத்தில் அப்பழுக்கு இல்லை என்று.

பணம் ஆயிரம் ரூபாயைக் கார்த்திகேயன் பொருட்படுத்தவே இல்லை; ஆனால், பாஷை தெரியாத காரணத்தால்-படிக்காத குறையினால், ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்கிற தாழ்வு உணர்ச்சி, அவரது உள்ள்த்தில் பலமான அடியாக விழுந்துவிட்டது.

அதனால், தம்முடைய குடும்பத்தில் ஒருவனேயாவது பட்டப்படிப்புப் படிக்க வைத்துப் பார்க்காமல் கண் மூடுவதில்லை என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டு விட்டார்.

கார்த்திகேயன் பிள்ளையினுடைய ஐம்பதாவது வயதில் அருமையாகப் பிறந்த ஒரே மகன் சேகர். அவனைத் தவிர அதற்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை. ஆகவே, அவருடைய ஆசைகள் நம்பிக்கைகள் எல்லாம் சேகர் ஒருவனிடமே இருந்தன.

அவன் அடுக்கடுக்காய்ப் படித்துப் பெரிய பட்டம் பெற, கிராமத்துச் சூழ்நிலையை மறக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்காக வேண்டியே அவர் பட்டணத்தில் ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி, சமையலுக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களைத்துனைக்கு அனுப்பி ஏற்பாடு செய்தார்.

சேகரும் தந்தையின் விருப்பத்தைப் பூாத்தி செய்யும் விதத்திலேயே நன்றாகப் படித்து - அந்த வருஷம் எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையும் பாஸாகிவிட்டான்.

ஆனால், ஒவ்வொரு வருஷமும் ஊருக்கு வந்த போதெல்லாம், அழகிய அந்த வீட்டிலுள்ள ஓர் அறை மட்டும் எப்போதும் பூட்டியே இருக்கிற காரணத்தை அறிய, சேகர் எவ்வளவோ பிடிவாதம் பிடித்ததுண்டு.

பி-சி. -3 அதற்கெல்லாம் அவன் தந்தை, "சமயம் வரும் - நீ எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையில் பாஸ் செய்...பிறகு நானாகவே அந்த அறையைத் திறந்து உனக்குக் காட்டத் தான் போகிறேன். அதுவரை பொறுமையாக இரு" என்று கூறிவிட்டார்.

ஆனால் இப்போது?

மகன் பிரமாதமாகப் படித்துப் பாஸ் செய்துவிட்டு வந்ததற்காகப் பிள்ளை அகமகிழ்ந்து போனார். பட்டணத்திலிருந்து சேகர் வந்திருக்கிற செய்தி கேட்டு அந்த வட்.டாரம் முழுவதிலுமுள்ள உறவினர்களும் நண்பர்களும் வந்து கூடினார்கள். நாலைந்து வாரங்கள் வரை விருந்து மயமாகவே வீடு அமர்க்களப்பட்டது.

ஒரு வழியாக அந்த அமர்க்களம் ஒய்ந்து, வீடு பழைய நிலைமையை அடைந்தவுடன், கார்த்திகேயனே சேகரை அழைத்துச் சென்று, அவன் ஆவலோடு பார்க்கத் துடித்துக்கொண்டிருந்த அறையைத் திறந்து காண்பித்தார்.

ஆனால் அதைக் கண்டதும்?

சேகர் ஒருகணம் பிரமித்து அப்படியே சிலைபோல் நின்றுவிட்டான். பிறகு, வந்த சிரிப்பை அடக்க முடியாமல், அவன் வாய் விட்டே உரக்கச் சிரித்துவிட்டான்.

ஆமாம்! அந்த அறையில் அவன் பார்க்கத் தவித்தபடி பரபரப்பூட்டும் அதிசயம் ஒன்றும் இல்லாவிட்டாலும், தந்தைக்கு இப்படி ஒரு கற்பனையா? வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்ட அவன் கண்ட காட்சி இதுதான்---

அறையின் மத்தியில் அழகிய கண்ணாடி அலமாரி ஒன்று இருந்தது. அதனுள், பளபளவென்று கறுப்பு நிற வெல்வெட்டில் தைத்த கான்வகேஷன் உடை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றிலும் உள்ள சுவர்களில், பெரிய அளவில் என்லார்ஜ் செய்யப்பட்ட வண்ண வண்ண ஒவியங்கள்.

அனைத்தும் சேகரின் முகச்சாயலே---

முதல் படத்தில் சேகர் பட்டதாரிக் கறுப்பு உடையில் கம்பீரமாகக் கையில் சர்ட்டிபிகேட்டுடன் நிற்கிறான்.


அடுத்ததில் ஒரு டாக்டராக; அதற்கடுத்ததில் ஒர் எஞ்சினியராக; மற்றொன்றில் ஒரு பெரிய கம்பெனி டைரெக்டராக; பெரிய வக்கீலாக; இப்படிப் பல தோற்றங்கள் - விதவிதமான படங்கள்.

"இவையெல்லாம் என்ன அப்பா? - ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்ட சேகருக்குக் கார்த்திகேயன் அமைதியாக ஒரே வார்த்தையில் பதில் அளித்தார்:: "கனவு".

'இதுதான் என் கனவு. இதுபோல், நீ கல்லூரிப் படிப்புப் பட்டதாரியாக வேண்டும். அந்தக் காட்சியைக் கண்ட பிறகுதான் என் மனம் குளிரும்.

படித்துப்பட்டம் பெற்ற பிறகு, இவற்றுள் உனக்கு விருப்பமான எந்தத் துறையில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால் நான் உயிரோடு இருக்குபோதே. . . . நீ பட்டதாரியாகிவிடுவதைப் பார்த்துவிட வேண்டும்.

கண்களில் நீர் மல்க, சிறு குழந்தையானார் கார்த்திகேயன்.

சேகருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. 'அப்படியே செய்கிறேன், அப்பா' என்று வணங்கினான்.

மகனே அப்படியே வாரித் தழுவிக்கொண்டு உச்சி மோந்தார் கார்த்திகேயன். ஆனால், உலகத்தில், மனிதர்கள் போடுகிற திட்டப்படியே எல்லாம் நடந்துவிடுகின்றனவா? இல்லையே?

கார்த்திகேயன் கனவு நனவாவதற்குப் பெரும் தடையாக, சேகருடைய கல்லூரி அட்மிஷன் வந்து நின்றது.

எத்தனையோ கல்லூரிகளில் முயன்றும் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக வாக்களித்திருந்த ஒரு கல்லூரியின் காரியதரிசியும் இறுதியில் கையை விரித்தார்.

அந்த அதிர்ச்சியுடனேயே, இன்னது செய்வது என்று புரியாமல், தள்ளாடியபடியே மகனோடு கல்லூரிக் காம்பவுண்டைக் கடந்து சிறிது தூரம் வந்த கார்த்திகேயன் கீழே விழுந்துவிட்டார்.

இதற்குள், "என்னா....என்னா.." என்று அங்கே ஒரு சிறிய கூட்டமே கூடிவிட்டது.

சட்டென்று, அருகில் வந்த டாக்சியை நிறுத்திய பாதிரியார் ஒருவர்,சேகரின் மூலம் விஷயமறிந்து, அவனையும் அவன் தந்தையையும் ஏற்றிக்கொண்டு ஓர் ஓட்டலுக்குச் சென்றார்.

திரவமாக உள்ளே சற்று இறங்கியதும் பிள்ளை விழிகளைத் திறந்து பார்த்தார். கைகளைக் கூப்பினார்.

பாதிரியார் அவருக்கு ஆறுதல் கூறினார். பிறகு, அவர்கள் போய் வந்த அந்தக் கல்லூரி பிரின்ஸிபால் தமக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்றும், சேகரின் அட்மிஷனுக்குத் தாம் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுப்பதாகவும் கூறி, உடனே அந்தக் கடிதத்துடன் தவறாமல் மறுநாளே போய்ப் பிரின்ஸிபாலைப் பார்க்கும்படி சேகரிடம் கூறினார். தக்க சமயத்தில் கர்த்தரே தோன்றித் தங்களுக்கு அருள் புரிந்ததாகக் கார்த்திகேயன் மகிழ்ந்தார்.

மறுநாள்---

பாதிரியார் குறிப்பிட்டபடியே கல்லூரி முதல்வர் சிபாரிசுக் கடிதத்தைப் பிரித்துப் படித்தவுடன் இடம் கொடுப்பதாகவும் வாக்களித்தார். சேகரின் முதுகைத் தட்டிக் கொடுத்து, "நன்றாகப் படித்து, கல்லூரியின் கௌரவத்தைக் காப்பாற்று" என்று புத்திமதியும் கூறி அனுப்பினார்.

முழு மூச்சுடன் படிப்பிலேயே குறியாகப் படித்துப் பரிட்சை சமயங்களில் இரவு பகல் பாராமல் உழைத்தான் சேகர். அதன் பயன்—

சேகர், கல்லூரியில் மட்டுமல்ல, ராஜதானியிலேயே முதலாவதாகத் தேறி, பல்லாண்டுகளாகக் கிராமத்து அறையொன்றில் தொங்கிக்கொண்டிருக்கும் கவுனைப் போட்டுக்கொண்டு, பட்டத்தையும் வாங்கித் தந்தையின் கையில் கொடுத்துவிட்டான்.

தம் கனவு பலிதமான கார்த்திகேயன் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது நிறைவேறக் காரணமாயிருந்த பாதிரியாருக்கும், கல்லூரி முதல்வருக்கும் தம் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு மகனுடைய வெற்றியை ஒரு விழாவாகவே கொண்டாடத் திட்டமிட்டார் பிள்ளை.

சென்னையிலுள்ள தமது பங்களாத் தோட்டத்திலேயே விழாவுக்கும் பெரிய விருந்திற்கும் கார்த்திகேயன் ஏற்பாடு செய்துவிட்டார். சேகர் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான்.

கார்த்திகேயன் தம் கைப்படவே தமிழில் பாதிரியாருக்கும் கல்லூரி முதல்வருக்கும் தவறாமல் விருந்துக்கு வரும்படி வற்புறுத்திக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பாதிரியாரிடமிருந்து வந்த பதிலில், 'அந்தத் தேதியில் தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு ஜோலி இருப்பதாகவும், தம்மை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்றும், முடிந்தால் அவசியம் வருவதாகவும் எழுதியிருந்தார். ஆனால், கார்த்திகேயனா விடுபவர் ?

"இந்த விழாவும் விருந்தும் உங்களுடையவை.என் மகனுக்கு வாழ்வு கொடுத்தவர் தாங்கள். தவறாமல், நீங்கள் வந்து, என் மகனை ஆசீர்வதித்தால்தான், நானும் சேகரும் சாப்பிடுவோம்" என்று எழுதிப் போட்டார்.

குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மணிக்கு விருந்திற்கு அழைக்கப்பட்ட அனைவருமே வந்துவிட்டார்கள். இரவு மணி ஏழரை தாண்டி எட்டும் ஆகிவிட்டது. பாதிரியார் மட்டும் வரவில்லை. அனைவரும் காத்திருந்தார்கள். கார்த்திகேயன் தவியாய்த் தவித்தார்.

உடனே பிரின்ஸிபால், "அவர் வராவிட்டால் என்ன? அவர்தான் கடிதத்தில் எழுதியிருந்தார் என்கிறீர்களே. இதற்காக எவ்வளவு நேரம் மற்றவர்களைக் காக்க வைக்க முடியும்? நீங்கள் ஆரம்பித்துவிடுங்கள்!" என்றார்.

இதைக் கேட்ட. பிள்ளை ஒரு முறை சிரித்தார். "சார், உங்களை அறிமுகப்படுத்தி, என் மகனின் இந்த நிலைக்குக் காரணமான அவரையும் உங்களையும் கௌரவிப்பதுதான் இந்த விருந்தின் நோக்கமே" என்று கூறி விட்டார்.

பிறகு பிரின்ஸிபால், "அப்படியானால் நான் இப்போதே என் காரில் புறப்பட்டுச் சென்று, எப்படியும் என் நண்பரை அழைத்து வந்துவிடுகிறேன்" என்று புறப்பட்டுச் சென்றார். ஆனால், என்ன துரதிர்ஷ்டம்! பிரின்ஸிபால் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், பாதிரியாரே வந்து சேர்ந்துவிட்டார்.

பிள்ளையவர்களின் பாடு தர்மசங்கடமாகிவிட்டது.

"இப்போதுதானே பிரின்ஸிபால் உங்களைத் தேடிக் காரில் போகிறார். வழியில் பார்க்கவில்லையா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

பாதிரியார் வருத்தத்துடன், "அடடா, நான் பார்க்கவில்லையே. சரி; அதனால் என்ன, வந்தால் நான் சொல்லிக்கொள்கிறேன். அவருக்காக வேறு தாமதமாக்க வேண்டாம். விழாவை ஆரம்பிக்கலாம்" என்றார்.

கார்த்திகேயன் பிள்ளை, பாதிரியாருக்கும், பிரின்ஸிபாலிடம் கூறிய முன் பதிலையே திரும்பக் கூறினார்.

வேறு வழியின்றி பிரின்ஸிபாலைத் தேடிப் பாதிரியார் வெளியே போனார். சற்றைக்கெல்லாம் பிரின்ஸ்பால் வந்துவிட்டார். பாதிரியாரைக் காணோம்

விருந்திற்கு வந்திருந்த சேகரின் மாணவ நண்பர்கள் பொறுமையை இழந்தார்கள். எல்லாருடைய வயிற்றையும் பசி கிள்ளியது.

"இது என்னடா இது? பிரின்ஸ்பாலைத் தேடிப் பாதிரியார் போவதும், இவரைத் தேடி அவர் போவதும் அவரைத் தேடி இவர் போவதும் - இன்று நாம் விருந்து சாப்பிட்டாற் போலத்தான்" என்று அலுத்துக்கொண்டார்கள்.

இதைக் கவனித்த பிரின்ஸ்பால் சட்டென்று எல்லோருக்கும் மத்தியில் நின்று கூறினார் : "நண்பர்களே, என் அன்பார்ந்த மாணவர்களே, வருஷத்துக்கு ஒரு முறை அட்மிஷன் சமயத்தில், பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள, நான் நடிக்கிற நாடகந்தான், நண்பர் கார்த்திகேயனையும் உங்களையும் இத்தனை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. இது——என்னுடைய நடிப்புத் திறன்——எனக்கு ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது. வேண்டுமானால் அதே பாதிரியாரே இதோ, வந்துவிட்டார். அவரைக் கேளுங்கள்" என்று சொல்லி, தம் கைப்பையிலிருந்த நீண்ட வெள்ளை அங்கியையும், அதன்மீது சிவப்புப் பட்டியையும், சிலுவைச் சின்னம் கோத்த ஜப மாலையும் அணிந்துகொண்டு, பொய்த் தாடியையும் பொருத்தியபடி, கையில் பைபிள் புத்தகத்தையும் கல்லூரி முதல்வர் எடுத்துக்கொண்டார். உடனே மாணவர்களிடையே எழுந்த கைதட்டல் ஒலி அந்தத் தோட்டத்தையே .அதிர வைத்துவிட்டது.

கார்த்திகேயன் பிள்ளையும் சேகரும் பிரமித்து நின்றார்கள்.