பிள்ளையார் சிரித்தார்/சுதந்தர மிட்டாய்
சுதந்தர மிட்டாய்
பொழுது விடிந்தால் சுதந்தரத் திருநாள். இரவெல்லாம் கண் விழித்து, விதவிதமான மிட்டாய்களைச் செய்தவண்ணமிருந்தான் பாவாடை. மைதாமாவும் ஜீனியும் அவன் கையில் வண்ண வண்ண நிறங்களில் அழகிய பண்டங்களாக உருப்பெற்று வளர்ந்து பெருகின. அவன் மனைவி மாரியம்மாளும் அவனுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.
அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த பையனுக்கு ஒன்பது வயது. ஐந்தாவது படித்து வந்தான். இளையவனுக்கு மூன்று வயது. குழந்தைகள் விழித்துக்கொண்டிருந்தால் தங்கள் வேலை நடக்காது என்று மாரியம்மாள், இரண்டிற்கும் விளக்கு வைத்ததுமே சோற்றைப் போட்டுத் தூங்கச் செய்துவிட்டாள். பொழுது விடிவதற்குள்ளாகப் பாவாடை எத்தனை விதவிதமான மிட்டாய்களைச் சிருஷ்டித் துவிட்டான்! கண்னைப் பறிக்கும் வண்ணத்தைப் புகழ்வதா கருத்தைக் கவரும் கைத்திறனைப் புகழ்வதா? மாரியம்மாள் மனத்திற்குள் பூரித்துப் போனள். எந்தச் சீமான் வீட்டுக் குழந்தைகளாய்த்தான் இருக்கட்டுமே, இவைகளைப் பார்த்தால் வாங்கித் தின்ன வேண்டுமென்று ஆசை பிறக்காமலா போய்விடும்?
உரித்த வெங்காயமும், மனைவி பிசைந்து போட்ட சோறும் பாவாடைக்கு-அவன் செய்து குவித்திருக்கும் மிட்டாய்களை விட ருசித்தன.
மூவர்ணக் கலரில் சொப்புச் சொப்பாகச் செய்து தள்ளியிருக்கும் மிட்டாய்களையெல்லாம், தலையில் சுமந்து செல்லும் வியாபாரத் தட்டில் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தான். பார்க்க அவனுக்கே, மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஆமாம்! அந்த ஊரில் மிட்டாய் வியாபாரத்தில் போட்டி இட்டு, பாவாடையை யாரும் மிஞ்சிவிட முடியாது. அதுவும் அன்று சுதந்தரத் தினமல்லவா? ஒரு கணிசமான தொகையை அவன் மனம் புள்ளி போட்டபடி இருந்தது.
இந்தச் சமயத்தில் திடீரென்று, மிட்டாய்த் தட்டு வைத்திருந்த அறையிலிருந்து 'நாயினா!’ என்ற கடைக் குட்டிப் பயலின் குரலைக் கேட்கவுமே, பாவாடை திடுக்கிட்டுத் திரும்பினான்.
அப்பொழுதுதான் எழுந்திருந்த சின்னப் பயல், தட்டிலிருந்த மிட்டாய் ஒன்றைக் கையிலெடுத்துச் சுவைத்த வண்ணம் நின்றுகொண்டிருந்தான்.
அவ்வளவுதான்! ஆவேசத்தோடு கையை உதறிவிட்டுப் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்திருந்துவிட்டான் பாவாடை . "பாவிப்பய மவனே! பொளுது ஒருபக்கம்-விடியுங்காட்டியுமா உனக்கு முட்டாய்க் கேக்குது? உருப்படாக்களுதே...போணிகூட ஆவாமெ, யாரெக் கேட்டுக்கிட்டு உன் தரித்திரம் பிடிச்ச கையை...?" என்றவன், வார்த்தைகளைக்கூட முடிக்கவில்லை. எட்டி ஒர் உதைவிட்டான்.
குழந்தை பத்தடி தூரத்தில் 'வீல்' என்று அலறிய வண்ணம் போய் விழுந்தது.
"ஐயோ! பாவி..! புள்ளெயெக் கொன்னுப் புட்டியே... " என்று அலறிப் புடைத்துக்கொண்டு ஒடிய மாரியம்மாள், குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.
கோபத்துடனேயே கையைக் கழுவிவிட்டு, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு புறப்பட்டு விட்டான்.
மாரியம்மாள் இறுதிவரை வாயே திறக்கவில்லை. அவளுக்குத் தெரியும் அவனுடைய குணம். கோபம் அடங்கிய பிறகு ஒன்றுக்குப் பத்தாக வட்டியும் முதலுமாக அவனை மண்டியிட வைக்கும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டு.
ஆகவே, இது விட்டுப் பிடிக்க வேண்டிய சமயம். வாயைத் திறக்காமல் தட்டைத் தூக்கி அவன் தலைமேல் வைத்தாள். கண்களால் விடை பெற்றுக்கொண்டு அவனும் போய்விட்டான், பள்ளிக்கூடத்தை நோக்கி.
அன்று திலகர் பள்ளி திமிலோகப்பட்டது. பள்ளி நிர்வாகிகள் சுதந்தர தினத்தை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்கள். காலையிலிருந்தே பள்ளி மாணவர்களும், பொது மக்களுமாக வந்து கூடியவண்ணமிருந்தனர். அன்றைய நிகழ்ச்சிக்குக் கல்வி மந்திரி வேறு தலைமை வகிப்பதாக ஏற்பாடாகி இருந்ததால் கூட்டத்திற்கும், போலீஸ் கெடுபிடிக்கும் கேட்க வேண்டுமா? சாலையின் இருமருங்கிலும் மொய்த்துக் கொண்டிருந்த பலூன் வியாபாரிகளையும், ஐஸ்கிரீம் வண்டிகளையும், மிட்டாய்க்காரர்களையும், அந்த நடைபாதையை விட்டுப் போகும்படி போலீஸார் மாறிமாறி விரட்டிய வண்ணமிருந்தனர். ஆனால், பலாப்பழத்தை விட்டு ஈயை யாரால் துரத்த முடியும் ?
பள்ளிக் குழந்தைகள் கூடியிருக்கும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல, அந்த ருசி கண்ட வியாபாரிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? வெப்புத் தொப்பி வேறு பக்கம் சென்றதும் பழையபடி அங்கேயே கடையை விரித்துவிடுவார்கள்!
இப்படிச் செய்தால் போலீஸ்க்கு மட்டும் ரோசம் வராதா என்ன? மந்திரி வருகிற சமயம் நெருங்கவுமே, ‚377 எங்கிருந்தோ பாய்ந்துகொண்டு வந்தான். பாவாடையின் மிட்டாய்த் தட்டு 377-இன் கையிலிருந்த 'லத்தி'க்கு இரையாகி, துள்ளிப் போய் நடுத்தெருவில் சென்று விழுந்தது.
கணநேரம் பாவாடை அப்படியே கதி கலங்கிப் போய் நின்றுவிட்டான். உருப்படியாக இருந்த ஒன்றிரண்டு மிட்டாய்களைக்கூடப் பொறுக்கி எடுக்க வழியின்றி, வேகமாக வந்த லாரி ஒன்று அரைத்துக்கொண்டு போய்விட்டது.
தட்டும் மடியும் காலியாக இருந்தாலும், துக்கம் நிாம்பிய மனத்துடன் பாவாடை திரும்பினான், வீட்டை நோக்கி. . ஆமாம்! காலையில் அந்தப் பச்சைப்பிள்ளை ஒரு மிட்டாயை எடுத்துச் சுவைத்ததற்காக, அவன்படுத்திய கொடுமைக்குத் தெய்வம் அவனைச் சரியாகப் பழிவாங்கி விட்டது. ஒரணுவிற்குக்கூட விற்கவில்லையே! ஆசையோடு தாவி எடுத்த மிட்டாயைப் பிஞ்சுக் கரங்களிலிருந்து பிடுங்கிப் பந்துபோல் குழந்தையை எறிந்துவிட்டு வந்தானே. அந்தச் சாபந்தானே!
அப்படியானால் ஊர்க்குழந்தைகளிடமெல்லாம் சிரிக்கச் சிரிக்கக் குழைவாகப் பேசிக் கன்னத்தைத் தடவி முத்தமிடுவதெல்லாம்?
எல்லாம் வெறும் பிழைப்புக்காக ஆடுகிற போலி நாடகம். இல்லாவிட்டால் அத்தனை குழந்தைகளும், எத்தனையோ கடைகளை விட்டு அவன் தட்டைச் சுற்றிக் கொண்டு நிற்குமா?
வீட்டை அடைந்ததும், "நயினா!” என்று ஓடிவந்த சின்னப்பயல், பாவாடையின் கால்களே வந்து கட்டிக் கொண்டான்.
துளிர்த்து நின்ற கண்ணிரைச் சுண்டி எறிந்து விட்டுப் பாவாடை பயலைத் தாவி அணைத்துக் கொண்டான். எவ்வளவு இருந்தாலும், தட்டில் அவனுக்காக ஒரு மிட்டாய் வைத்திருக்காமல் பாவாடை வியாபாரம் செய்யவே மாட்டான். இன்று....?
"என்ன? அப்படியே புள்ளெயெத் தூக்கிக்கிட்டு மலைச்சுப்போய் நிக்கிறே? வியாபாரம் படா ஜோருதான் போலிருக்குதே! தட்டில் ஒன்றுகூடக் காணோமே!"
மகிழ்ச்சி கொப்புளிக்கும் மாரியம்மாளின் பேச்சு பாவாடையின் இதயத்திலே சம்மட்டி கொண்டு அடிப்பது போல் மிகுந்த வேதனையை அளித்தது. நடந்த விஷய மனத்தையும் விளக்கி, 'ஓ' வென்று வாய் விட்டுக் கதறி விட்டான் பாவாடை.
"போனப் போவுது போ, கிடக்கு! அதுக்காக இப்படியா ஒரே முட்டா இடிஞ்சுப் போயுடுவாங்க?" மனைவியின் ஆறுதலொன்றும் பாவாடையின் செவியில் நுழையவில்லை. வாசலிலே வந்து நின்ற 'ஜீப்' பின் ஒசை அவன் கவனத்தைத் திருப்பியது.
அதிலிருந்து இறங்கிய ஒரு போலீஸ்காரர் பாவாடையின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு காரில் ஏறும்படி கூறினர். ஒன்றும் புரியாத அவன் 'மிரள மிரள' விழித்தவண்ணம் மனைவியின் முகத்தை நோக்கினான். அவள் ஒரேயடியாக, பயந்து போய் நின்று கொண்டிருந்தாள். மறு நிமிஷம் பாவாடையைச் சுமந்து சென்ற 'ஜீப்' அரசாங்க விருந்தாளிகள் விடுதியின் வாசலல் வந்து, ஓர் உலுக்கு உலுக்கி நின்றது.
உள்ளே நுழைந்த பாவாடை அங்கே கண்ட காட்சி! அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.
அவனுடைய பையன் தணிகாசலத்தைக் கல்வி மந்திரி தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
திலகர் பள்ளியில் மந்திரியின் முன்னிலையில் நிகழ்ந்த ஆறு போட்டிப் பந்தயங்களிலும் முதல் பரிசைத் தட்டிவிட்ட தணிகாசலம், மந்திரியின் மனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டான். அவனை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி, உள்ளம் கனிந்த அன்புடன் பரிசுகளை அவரே அவனுக்கு வழங்கினார்.
தனக்குக் கிடைத்த அந்தச் சலுகையை வைத்துக் கொண்டுதான் தணிகாசலம், மந்திரியை ஜாகையில் சென்று சந்தித்து, காலையில் அவர் பள்ளிவரும்போது 377-ஆல் தன் தந்தை வியாபாரத்தில் அடைந்த நஷ்டத்தைப்பற்றிக் கூறினான்.
அவனுடைய தைரியத்தையும், குடும்பப் பொறுப்பையும் உணர்ந்து மகிழ்ந்துதான் மந்திரி பாவாடையை அழைத்து வரச் சொல்லியிருந்தார். ஆனால் இவற்றுள், ஒன்றையும் அறியாத பாவாடை மேல்துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் வணக்கம் தெரிவித்து நிமிர்ந்தான்.
"நீர்தான் தணிகாசலத்தின் தந்தையா? மிட்டாய் மொத்தம் எத்தனை ரூபாய் விலை மதிப்பு இருக்கும்?" மந்திரிதான் கேட்டார்.
"ஐந்து ரூபாய்க்குள் இருக்குமிங்க !"
"இந்தாரும்! இந்தக் கவருக்குள் ஐம்பது ரூபாய் இருக்கிறது. இனிமேல் தட்டு வியாபாரம் வேண்டாம். சுகாதார முறைப்படி ஒரு சிறு மிட்டாய்க்கடை வைக்க இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளும்!" என்று மந்திரி அன்போடு அளித்தார்.
"'நன்றாகப் படித்து நீ முன்னுக்கு வரவேண்டும்" என்று பையனையும் வாழ்த்தி அனுப்பினர். அவருக்குத் தகப்பனும் பிள்ளையும் நன்றி தெரிவித்து, பிறகு வீட்டை அடைந்தனர். பெற்றவள் பிள்ளையை வாரி அணைத்துக் கொண்டாள்.
இப்போது திலகர் பள்ளிக்கெதிரிலிருக்கும் 'சுதந்தர மிட்டாய்க்கடை'யின் முதலாளி யார் தெரியுமா? அதே பாவாடைதான்!