புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/மெரீனா ஸ்வெட்டேவா

எனது தீர்ப்பு நாளில்,
எனது இரண்டு
சிறகுகளே பாதுகாப்பாகத்
திறந்த மேனியோடு நிற்பேன்.




மெரீனா ஸ்வெட்டேவா
(1892—1941)


படைப்பாற்றல் + அறிவு நுட்பம் + கிறுக்குத்தனம் = கவிஞன் என்ற கணக்கு, மெரீனா ஸ்வெட்டேவாவுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. அவள் புல்லரிக்கும் புதிர்க்கனவு ; எல்லை தாண்டிப் பூத்த இலக்கிய வசந்தம்; யாரும் நிரந்தரமாகச் சொந்தம் கொணடாட முடியாத மந்த மாருதம். காதலை ஆராதித்த சீதமதி. பட்டினிப் பாலையில் வாழ்ந்த போதும், தனக்கென்று படைத்துக் கொண்ட ஒயாசிஸில் ஓயாமல் கூவிக் கொண்டிருந்த ஒற்றைக் குயில்.

ஸ்வெட்டேவா மாஸ்கோவில் புகழ்பெற்ற பேராசிரியருக்கும், நாகரிகமிக்க ஒரு மங்கை நல்லாளுக்கும் மகளாகப் பிறந்தவள் ஸ்விட்சர்லாந்திலும் தெற்கு ஜெர்மனியிலும் கல்வி பயின்றவள்; பாரிசு சார்போன் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து உலகப் பேரறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டுத்தான் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டவள்; ருசியக் கவிஞர் வொலோவினின் கவிதையாற்றலால் ஈர்க்கப்பட்டு, கிரிமியாவில் அவருக்குச் சொந்தமான கோக்டெபெல் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ‘செர்ஜி எஃப்ரன்’ என்பவரைச் சந்தித்து மணந்து இரண்டு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் மகவையும் பெற்றெடுத்தவள்.

ருசியாவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இவள் கணவன் செர்ஜி, ஜாரின் வெண்படைக்கு ஆதரவாக இருந்தான். உள் நாட்டுப் போரில் வெண்படை தோற்றபோது, இவளும் இவளுடைய கணவனும் ருசிய நாட்டைவிட்டு வெளியேறினர். இவளுடைய கணவன் சோவியத் அதிகாரிகளுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டான், பல இடங்களில் சுற்றியலைந்துவிட்டு 1922-இல் செக்நாட்டின் தலைநகரான பிராகுவில் இருவரும் ஒன்று சேர்ந்தனர். மூன்று ஆண்டுகள் பிராகுவின் புறநகரில் வாழ்ந்த பிறகு இவளுடைய கணவன் தன் கொள்கையை மாற்றிக் கொண்டு ஸ்டாலினின் உளவுப் படையில் சேர்ந்து பணியாற்றினான். டிராஸ்கியின் மகனுடைய கொலையில் இவனுக்கும் பங்குண்டு. அரசியற்பணி நிமித்தம் இவளுடைய கணவன் பல இடங்களில் சுற்றியலைந்த காரணத்தால், ஸ்வெட்டேவாவின் வாழ்க்கை பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது.

தனிமை பலரோடு காதல் தொடர்பு கொள்ளும் சூழ்நிலையை இவளுக்கு உருவாக்கியது. 1915-16ஆம் ஆண்டுகளில் ருசியக் கவிஞர் மேண்டல்ஸ்டாமைக் காதலித்து அவருடன் வாழ்ந்தாள். 1925-இல் பிராகுவில் வாழ்ந்தபோது, ஒரு வெண்படை அதிகாரியைக் காதலித்து அவருடன் ஓராண்டு வாழ்ந்தாள். பிறகு 1926-இல் தன் கணவன் செர்ஜியுடன் மீண்டும் சேர்ந்து கொண்டாள், பாரிசில் வாழ்ந்த காலத்திலும் இவளுக்குப் பலரோடு தொடர்பிருந்தது. இவள் ஓயாமல் காதலித்தாள்: காதலிக்கப்பட்டாள்; உணர்ச்சி மிகுந்த காதற்கவிதைகள் எழுதிக் குவித்தாள்,

பொதுவுடைமைக் கொள்கையும், ஸ்டாலினின் சர்வாதிகாரமும் இங்ளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. கவிஞனுக்கும் அவன் படைப்புக்கும் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்று கருதினாள். அறிஞர்கள் சுதந்திரமாகச் சிந்திக்க அனுமதிக்கப் படவேண்டும் என்பது அவள் கொள்கை. கவிஞனின் கற்பனைக்கும் பாடு பொருளுக்கும் எல்லை கட்டிய ருசிய அதிகாரவர்க்கத்தை வெறுத்தாள்; அவர்களுக்குத் துதி பாடிய ருசியக் கவிஞர்களைச் சொல்லம்புகளால் சாடினாள்.

புஷ்கினும் அலெக்சாண்டர் பிளாக்கும் அவளுக்குப் பிடித்தமான கவிஞர்கள். அக்மடோவா, மாயகோவ்ஸ்கி, பாஸ்டர் நாக் ஆகியோரைப் பாராட்டிக் கவிதைகள் எழுதியிருக்கிறாள். ஐரோப்பியக் கவிஞர்களுள் ஜெர்மானியக் கவிஞரான ரில்க்கை மிக உயர்ந்த கவிஞராகப் போற்றினாள்; அவரோடு கடிதத் தொடர்பும் கொண்டாள்.

மாயகோவ்ஸ்கி மக்கள் கவிஞன், ஸ்வெட்டேவா தன்னைப் பற்றியும், தன் சொந்த உணர்ச்சிகளையும் பாடியவள். கொள்கையில் இருவரும் எதிரெதிர் துருவங்கள். என்றாலும் மாயகோவ்ஸ்கியின் படைப்பாற்றலை ஸ்வெட்டேலாவியத்து போற்றுகிறாள். 1928-இல் ‘ருசியாவிற்குப்பிறகு’ (After Russia) என்ற பாடலை சரியகோவ்ஸ்கிக்கு உரிமையாக்கிய போது ‘என்னைப்போல் வேகக் கால்களையுடைய கவிஞனுக்கு (To a poet as sleet of foot as I) என்று குறிப்பிடுகிறாள். மாயகோவ்ஸ்கி தனக்குச் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து ‘மாயகோவ்ஸ்கிக்கு’ என்ற தலைப்பில் ஒரு நன்றிக் கவிதை எழுதினாள் ஸ்வெட்டேவா.

சிலுவைகளையும்
புகைக் கூண்டுகளையும் விட
உயரமானவன்;
தீப்பிழம்பிலும்
புகைக் கருக்கலிலும்
தன் பெயரைச்
சூட்டிக் கொண்டவன்,
தடித்த மேனித் தேவதூதன்
விளாடிமிர் வாழ்க!

என்று உள்ளம் கசிந்து அப்பாடலில் மாயகோவ்ஸ்கியை வாழ்த்துகிறாள். மாயகோவ்ஸ்கியின் உயர்ந்த தோற்றத்தையும், பேராற்றலையும், அஞ்சாமையையும் நினைவு கூரும் வண்ணம் ‘அன்பரக்கன்’ (Kind giant) என்ற தொடரால் அவனை அடிக்கடி குறிப்பிடுகிறாள்.

மாய கோவ்ஸ்கி 1927-ஆம் ஆண்டு பாரிசு நகரம் சென்றிருந்த போது அங்கிருந்த ருசிய மாணவர்கள் வால்டையர் விடுதியில் (Cafe Voltaire) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் மாயகோவ்ஸ்கி தமது கவிதைகளை வாசித்ததோடு, ருசிய இலக்கியத்தின் வளர்ச்சி பற்றியும் பேசினான். அப்போது ‘ருசிய வெளியேறிகள்’ (emigres) அந்த விடுதிக்கு முன் கூடி நின்று குழப்பம் செய்து கூச்சலிட்டனர். இக் கூட்டம் நடந்தபோது ஸ்வெட்டேவா அங்கில்லை. என்றாலும் மாய கோவ்ஸ்கியை ஆதரித்து ‘யூரேசி’ (Eurasie) என்ற செய்தித்தாளில் ஓர் அறிக்கை வெளியிட்டாள். அவ்வறிக்கையைப் படித்த ‘ருசிய வெளியேறிகள்’ ஸ்வெட்டேவாவைத் தங்கள் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்தனர். தங்கள் ஏடுகளிலும் அவளுடைய படைப்புக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டனர்.

கவிஞனின் செயற்பாட்டின் மீதும், அவன் படைப்பாற்றல் மீதும் பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ருசியக் கவிஞர், ஸ்வெட்டேவாவைப்போல் வேறு யாருமில்லை என்று சொல்லலாம். கலையும் வாழ்க்கையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கொடை பற்றி, ஸ்வெட்டேவா ஆணித்தரமான கொள்கைகளை வெளியிட்டிருக்கிறாள். ‘கவிதை என்பது விலை மதிப்பில்லாத சொத்து’ என்றும் ‘கவிஞன் சமுதாயத்தின் ஒப்பற்ற உன்னத விளைவு’ என்றும் தன்து படைப்புக்களில் பல இடங்களில் தீர்ப்பு வழங்கியிருக்கிறாள்.

ஸ்வெட்டேவாவின் உள்ளத்தில் நீங்காத இடம்பெற்ற ருசியப் பெருங்கவிஞர் அலெக்சாண்டர் பிளாக், தாம் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பாக மாஸ்கோ கலையரங்கம் ஒன்றில் தமது கவிதைகளை வாசித்தார். அதைப்பற்றித் தனது கவிதை யொன்றில் குறிப்பிட்ட ஸ்வெட்டேவா,

தனிமையில் அடைக்கப்பட்ட
சிறைக் கைதியின்
ஏகாந்தப் பேச்சைப் போலவும்
அல்லது-
உறக்கத்தில்
தானாக வெளிப்படும்
குழந்தையின் பேச்சைப்போலவும்
அலெக்சாண்டர் பிளாக்கின்
புனித இதயம்
அந்தப் பெரிய அரங்கில்
தன்னை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தது

என்று எழுதுகிறாள். ‘கவிதையின் முழுமையான குறிக்கோள் இதயம்’ என்பது ஸ்வெட்டேவாவின் கருத்து ‘இதயமும் ஆன்மாவும் சலனமற்று இருக்கும்போது, கவிதை தானாகப் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவரவேண்டும்’ என்ற கருத்தை பிளாக்கைப்பற்றிய பாடலில் குறிப்பிடுகின்றாள். தனது தத்திக்கவிதை (telegram style poetry) பற்றி ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘வேகமாகத் துளைக்கப்படுவது ஆன்மா’ (Pierced to the quick = the Soul) என்று எழுதுகிறாள்.

இந்த வேகக் கவிதை முறையை முதன் முதலில் கையாண்டவன் மாயகோவ்ஸ்கி. இடத்திற்கேற்ற ஓசைநயம், சுருக்கம், முரட்டுத் தொடர்கள், ஒலியழுத்தம் ஆகியவை இக்கவிதைப் பண்புகள். இப்பண்புகளைக் கவிதையில் கொண்டுவர மாயகோவ்ஸ்கி வரிகளை உடைத்து ஏணிப்படியாக (the Step-adder effect) அடுக்குவான்; ஸ்வெட்டேவா இணைப்புக் கோடு (—) கொடுத்து எழுதுவாள். ஸ்வெட்டேவாவின் தந்திக்கவிதை:

குழப்பம்-பரப்பாதீர்கள்
இதயம்-தளர்த்தி விடுங்கள்
முழங்கைகளும்-தலையும்
முழங்கைகளும்-உள்ளமும்
இளமை-காதலும் அர்ப்பணிப்பும்
முதுமை-தூக்கமும் கொட்டாவியும்
வாழ்வதற்கு நேரமில்லை:
தப்ப முடியாது.

கேட்டவுடன் உள்ளத்தில் தைத்துப்பாயும் உணர்ச்சிக் கவிதைகளைப் பாடவல்ல பெருங்கவிஞர்கள் இவ்வுலகில் அதிக நாள் வாழ்வதில்லை என்பது அவள் கணிப்பு. அவ்வாறு இளமையிலே தமது வாழ்வை முடித்துக் கொண்ட புஷ்கின், விளாக் போன்ற ருசியக் கவிஞர்களை எண்ணிக் கண்ணீர் விடுகிறாள் ஸ்வெட்டேவா. “புஷ்கின் அஞ்சாமை, பெருமிதம், நேர்மை, தனிமை, ஊழ் ஆகியவற்றின் ஒட்டு மொத்த விளக்கம்” என்று குறிப்பிடுகிறாள். இப் பண்புகளை மிகுதியாக விரும்பியதோடு, தன் வாழ்விலும் அளவுக்கு மீறிக் கடைப் பிடித்தாள்.

ஒரு கவிஞனுடைய பணியை, மிகப்புனிதமான ஒன்றாக அவள் மதித்தாள். 1921-ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட கலை (Craft) என்ற கட்டுரைத் தொகுப்பில் ஓர் இளங்கவிஞனின்.

கவிதையே!
என் துரதிர்ஷ்டமே!
என் செல்வமே:
என் புனிதக்கலையே!

என்ற வரிகளை மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறாள். கவிதையைத் ‘துரதிர்ஷ்டம்’ என்று அந்த இளங்கவிஞன் குறிப்பிட்டதற்குக் காரணம். உண்டு. கவிதை எல்லாருக்கும் புகழையும் செல்வத்தையும் வாரிக் கொடுத்து விடவில்லை. நல்ல கவிதை எழுதவேண்டும், என்பதற்காகச் சிலர் தங்கள் வாழ்க்கை வசதிகளையும், வருவாயையும், மகிழ்ச்சியையும் தியாகம் செய்வதை இன்றும் நாம் காண்கிறோம். கவிதைக்கு இவர்கள் கொடுக்கும் விலை இவை. இது கவிஞனுக்கு ஒரு வகை துரதிர்ஷ்டம் தானே?

ஒருதரமான கவிதையை எழுதி முடிப்பதற்கு எசு பெருமான் சிலுவையில் பட்ட துன்பத்தை ஒரு கவிஞன் அனுபவிப்பதாக ஸ்வெட்டேவா கருதுகிறாள். தன்னுணர்ச்சிக் கவிதை (Lyric poetry)த் தொகுப்பொன்றை எழுதி முடித்தவுடன், தான் பட்ட அனுபவத்தைக் கவிஞர் பாஸ்டர் நாக்கிற்குக் கடிதமாக எழுதியபோது, 'நான் மிகவும் களைத்துவிட்டேன்; ஆசிரிஸ்[1] துண்டு துண்டாக வெட்டி நொறுக்கி எறியப்பட்டது போல் நானும் உணர்கிறேன். நான் எழுதும் ஒவ்வொரு கவிதை நூலும் என்னிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட துண்டு; தாங்கிக் கொள்ளமுடியாத ஏக்கப் பிரிவு! சமயத் தூதர் தாமஸின் விரல்கள்[2] ஏசுவின் புண்களைத் தொட்டுப்பாரித்தது போல், நான் ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்கும் இடையில் தீண்டிப் பார்க்கிறேன்“ என்று உணர்ச்சி பொங்கிக் குறிப்பிடுகிறார்.

அவள் படைப்புக்களில் சைக் கவிதைகள் (Psyche_poems) மாஸ்கோ கவிதை (Verse about Moscow), செங்குதிரை மீது (Astride a Red Horse) என்பவை குறிப்பிடத்தக்கவை . சிறுமி ஜார் (The Girl Tsar) எகொருக்ஸ் (Egarukså) என்ற இரண்டும் குழந்தைகளுக்கான நீண்ட கற்பனைக் கவிதைகள் (Fairy tale poems), உள்ளறிவின் வெளிச்சத்தில் கலை (Art in the Light of Conscience) என்ற கட்டுரை நூலில், கவிதைகளைப் பற்றிய நுட்பமான சிந்தனைகளை ஸ்வெட்டேவா பொதிந்து வைத்திருக்கிறாள். தன் உள்ளத்தில் கவிதை உருவாகும் படைப்பு ரகசியத்தைக் கீழ்க்கண்டவாறு அதில் விளக்கியிருக்கிறாள்:

"என் உள்ளத்தில் ஒழுங்கிற்குட்பட்ட ஒன்று ஓயாமல் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்கிறேன். அது சில சமயங்களில் எனக்கு ஆணையிடுவது போலவும், சில சமயங்களில் யோசனை கூறுவது போலவும் இருக்கும். ஆணையிடும் போது அப்படியே ஏற்றுக் கொள்ளுவேன்; யோசனை கூறும் போது விவாதிப்பேன்.

"ஆணையின் ஓசை தனித்தன்மை மிக்கதாகவும், மாற்ற முடியாததாகவும், இடப்பெயர்ச்சி செய்ய முடியாததாகவும் இருக்கும்; அதுவே கவிதையின் சாரம். யோசனை ஒலியோ, கவிதையின் சந்தப்பாதை. அப்போது நான் ஓசையினிமையைத் தான் கேட்கிறேன்; சொற்களை அல்ல. சொற்களை நான் தேடியாக வேண்டும்; சில சொற்களின் வேகத்தைக்கூட்ட வேண்டும்; கட்டுப்படுத்த வேண்டும். இவைதான் நான் உணரும் யோசனையின் வழியாகப்பெறுபவை.

“என் எழுத்துக்கள் எல்லாமே என் கேட்கும் செயல், இதனால் நான் எழுதுவதற்கு முன்பாக எழுதியவற்றைத் திருப்பித் திருப்பிப்படிக்கிறேன். முன்னால் இருக்கும் இருபது வரிகளைப்படிக்காமல் நான் புதியவரி எதையும் எழுதுவதில்லை. ஏற்கனவே முற்றாகவும், சரியாகவும் எல்கோ எழுதிவைக்கப்பட்ட கவிதையை நினைவு கூர்ந்து, அதற்குத் துவக்கத்திலிருந்து முழுமையும் பரவசப்படுத்தும் இனிமையும் சந்தநயமும் கூடிய ஓவியத்தைப் படைப்பது போன்ற ஓர் உணர்வைப் பெறுகிறேன், உண்மையைச் சொன்னால், எனது தொழில் எனக்குள் கிளம்பும் ஒலியைச் சரியாகத் துல்லியமாகக் கேட்பதுதான் வேறு எதுவுமில்லை”

இவ்வுலக வாழ்வின் அடித்தளத்தில் புதைந்து கிடக்கும் தனது ஆன்மாவின் எல்லையற்ற உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடர்ச்சியற்ற-அங்கும் இங்குமான-சொற் கோவையையும் சொல்லாட்சியையும் ஸ்வெட்டேவா கையாண்டாள். தான் கையாண்ட வடிவமும், உத்தியும், சாரமும் பிறரால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாதவை என்பதை அவள் அறிந்திருந்தாலும் சொற்களையும் உலகத்தையும் இவ்வுலகத்தையும் மறுஉலகத்தையும் வேறுபடுத்திக் காட்ட விரும்பாமல், சிக்கலான குறியீடுகளாகவே வெளிப்படுத்தினாள்.

உயிரோட்டமுள்ள சொற்களைக் கவிதைகளில் மட்டுமன்றி உரைநடையிலும் பயன்படுத்தினாள் ஸ்வெட்டேவா. அச் சொற்கள் மிகுந்த உயிர்த் துடிப்போடு, விரைவும், பன்முக மாற்றமும் பெறக் கூடியவை. அதனால் அவள் கருத்துக்களைப் புரிந்து கொண்டு தொடர்ந்து செல்வது படிப்பவர்க்கு மிகவும் கடினமாக இருந்தது. தன் எழுத்தில் தேவையற்ற இடைச் சொற்களை யெல்லாம் நீக்கிவிட்டு எழுதினாள். அவள் கையாண்ட உவமைகள் கூட முழுமையான ஒற்றுமைத் தன்மையை வெளிப்படுத்துவனவாக இல்லை. அவள் படைப்புக்களில் ஒரு வேகமான அவசரம் காணப்படுகிறது. தன்னை இழந்து முற்றிலும் படைப்போடு ஒன்றும் ஆழ்ந்த தேவையிலிருந்து தோன்றிய அவசரம் அது. ‘உள்ளறிவின் வெளிச்சத்தில் கலை’ என்றதனது நூலில் ‘தன்னை இழக்கும் இன்பம்’ (The bliss of annihilation) என்று அவள் அதைக் குறிப்பிடுகிறாள்.

1916-இல் அவள் எழுதிய கவிதையொன்றில் ‘என்னை முற்றிலுமாக நான் எல்லாருக்கும் ஒப்படைப்பேன்’ என்று எழுதுகிறாள். அவ்வாண்டு அவள் எழுதிய கவிதைகளில் அவளுடைய கொடைக் குணமே மேலோங்கிக் காணப்படுகிறது. ருசியத் தலைநகரான மாஸ்கோவை, கவிஞர் பிளாக், அக்மடோவா மாண்டல்ஸ்டாம் ஆகியோருக்குக் கொடையாக வழங்குகிறாள். 1918-இல் எழுதிய காதற் கவிதைகளிலும் சைக், கவிதைகளிலும் அவளுடைய கொடைத்தன்மையே மலிந்திருக்கக் காணலாம்:

உனது பேனா எழுதும்
பக்கம் நான்
நான் ஒரு வெள்ளைப்பக்கம்;
எல்லாவற்றையும்
ஏற்றுக் கொள்கிறேன்.

நீ வழங்கும் பொருள்களுக்கு
நானே பொறுப்பாளி.
அவற்றை-
நூறு மடங்காகத்
திருப்பிக் கொடுப்பேன்

நான் ஒரு சிற்றூர்
கறுப்புமண்.

எனக்கு ஒளியும்
ஈரமழையும் நீதான்.

நீ-
எனது தேவன்;
தலைவன்.
நான்-
கறுப்புமண் :
வெள்ளைப் பக்கம்.

தன்னைத் தாராளமாகத் தனது 'தலைவர்'களிடம் ஒப்படைத்துக் கொண்ட இத்தன்மையால், தான் மதித்துப் போற்றிய 'கவிஞர் அக்ம டோவா' விடமிருந்து இவள் வேறுபடுகிறாள். இலக்கிய வாதிகள் அக்மடோவாவைப் 'பாதிப் பரத்தை; பாதித் துறவி' என்பர், ஸ்வெட்டேவாவுை 'முழுப் பரத்தை' என்பர்

1920 - இல் அவள் எழுதியுள்ள மற்றொரு கவிதையில்

என்னிடம்-
பேசத் தேவையில்லை.
இதோ என் இதழ்கள்,
அருந்த!
இதோ என் கூந்தல்,
வருட!
இதோ என் கைகள்,
முத்தமிட!
இல்லையென்றால்...
நாம் உறங்குவோம்!

என்று துணிச்சலாக, நாணமின்றிப் பாடுகிறாள்.

எந்த ஒரு புதுக் கவிஞரும் காதற்பிரிவினால் ஏற்படும் துன்பங்களை ஸ்வெட்டேவாவைப்போல் உணர்ச்சி பொங்கப் பாடவில்லை என்று நிச்சயமாகக் கூறலாம் (1921-இல் உள் நாட்டுப் போரில் கணவனைப் பிரிந்த போதும், 1925-இல் பிராகுவில் தன் காதலனைப் பிரிந்தபோதும், அவள் பாடிய காதற் கவிதைகள் படிப்பவர் உள்ளத்தை உணர்ச்சிப் பிழம்பாக்கும் தன்மையன. அந்த வகையில் அவள் எழுதியுள்ள ‘மலைப்பாட்டு’ (Poem of the Mountain), இறுதிப்பாட்டு (Poem of the End) இரண்டும் குறிப்பிடத்தக்கவை ‘இறுதிப் பாட்டில்’ - ‘பிரிவு’ என்னும் சொல் மாஸ்கோவில் உள்ள நாற்பது முறைக்கு நாற்பது மாதாகோவிலின்' (Forty times forty churches) மணியோசை போலச் சோகமாக ஒலிக்கின்றன. ஸ்வெட்டேவாவின் காதற்கவிதைகள் படிப்பவர் உள்ளத்தில் “ஓர் உறவை-நெருக்கமான உறவை அவளோடு ஒன்றாகப் படுக்கையில் உறைவதற்கும் மேலான உறவைப்” புலப்படுத்துவதாக ஓர் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

ஒரு கவிதையில் தனது ஆன்மா வெறிபிடித்த நிலையிலும், ஒன்றுக்கும் கட்டுப் படாத நிலையிலும் இருப்பதாகக் குறிப்பிடுகிறாள் ஸ்வெட்டேவா. தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் ஒரு மத வெறிக் கூட்டத்தைத் (Flagellants) தனது ஆற்றல் மிக்க உரைநடை நூலால் பாராட்டிப் புகழ்ந்திருப்பது அவள் உள்ளத்தில் படர்ந்திருந்த வெறியுணர்ச்சியின் விளைவே ஆகும். தனது எல்லைமீறிய செயல்களால் ‘கிறுக்குப் பிடித்த கவிஞர்’ என்ற பெயரையும் இவள் பெறுகிறாள்.(இவளுடைய) கவிதையாற்றலும், அறிவு நுட்பமும் வியக்கத்தக்க முறையில் அமைந்திருந்தாலும் தனக்குப்பிடிக்காதவர்களை ஸ்வெட்டேவா கடுமையாகத் தாக்கி எழுதி விருக்கிறாள். ருசிய இலக்கிய வாதிகள் இவளுடைய தாக்குதலை வலிப்புப்பேச்சாக (hysterics) வருணிக்கின்றனர் என்றாலும், தனது எல்லைமீறிய தன்மையை (extremity) ஒத்துக் கொள்வதோடு, அதைத்தான் வெற்றி கொள்ளும் நிலையில் இருப்பதாக, ஸ்வெட்டேவா கூறுவது உள்ளத்தை நெகிழ்விைக்கிறது. கிரேக்கக்கதைகளில் வரும் சைக்[3] (Psyche) என்ற தேவதையே தன்னுருவில் மறுபிறவி எடுத்து மீண்டும் தனது அதிர்ச்சிக்குரிய வாழ்க்கைப் பயணத்தைத் தொட்ங்கியிருப்பதாக ஒருகவிதையில் குறிப்பிடுகிறாள். கீழ்க்கண்ட வரிகள் அவளுடைய மனக்குழப்பத்தையும் அதிர்ச்சிப் பயணத்தையும் குறிப்பிடுகின்றன:

சொற்கள்-
கறுப்பு வானில்
செதுக்கப்பட்டன.
அழகிய விழிகள்
குருடாக்கப்பட்டன.

சாவுப் படுக்கை
எங்களுக்கு
அச்சந் தரவில்லை,
காதற் படுக்கையும்
எங்களுக்கு
இன்பமாக இல்லை

கிறித்தவ சமயத்தில் ஒரு பிரிவினர். தமது குற்றங்களுக்குத் தண்டனை வழங்கத் தாங்களே தங்களைச் சாட்டையால் அடித்துத் துன்புறுத்திக் கொள்ளும் இயல்பினர் இவர்கள் செயலை ஸ்விெட்டேவர் பாராட்டி எழுதியிருக்கிறாள்.

வியர்வை கசியும் எழுத்து
ஓயாத-
சிந்தனை மேய்ச்சல்,

நாங்கள்-
வேறொரு
நெருப்பை அறிவோம்
எங்கள் உச்சியில்
நாட்டியமாடும்
மெலிதான தீக்கொழுந்து
ஓர் ஆவி...
ஓர் தூண்டுதல்.

‘உள்ளறிவின் வெளிச்சத்தில் கலை’ என்ற கட்டுரை நூலில் கலையை இயற்கைக்கு ஒப்பிடுகிறாள். “இயற்கை எப்படி எல்லாவற்றுக்கும் மூலமாகவும், இயங்கு சக்தியாகவும்: படைப்பாற்றலாகவும், அழிவுச் சக்தியாகவும் இருக்கின்றதோ அதேபோல் கலையும் விளங்குகின்றது” என்று குறிப்பீடுகிறாள்.

பொது ஒழுக்கமும், மதமும் வற்புறுத்தும் மனச்சாட்சியை அவள் ஏற்றுக் கொள்வதில்லை. மோட்ச நரகங்கள் ஒருவருக்குப் பழவினையின்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்ற கோட்பாட்டையும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயற்கையின் அடிப்படைத் தத்துவங்களை மறுதலிப்பது தான் கவிஞனுக்கு நரகம் செயற்கையில் படிவது கலாச்சாரத்தைச் சீர்குலைத்து, ஒழுக்கக் கேட்டை விளைவிக்கும்' என்று கூறுகிறாள் ஸ்வெட்டேவா.

ஸ்வெட்டேவாவுக்கு சாவுப் படுக்கை எப்போதும், அச்சத்தைக் கொடுத்ததில்லை, 1915-இல் அவள் எழுதியுள்ள ‘நான் உண்மையை அறிவேன்’ (I Know the truth) என்ற பாடலில் ‘சாவு என்பது வாழக்கை என்னும் தூக்கமின்மை நோயிலிருந்து (insomia of tiving) ஒருவர் தேடும் விடுதலை என்று கூறிச்சாவையும் வாழ்வையும் சமனப்படுத்துகிறாள். என்றாலும் ருசியப் புரட்சிக் கவிஞன் மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்து கொண்ட போதும், ஹிட்லர் செக்கோஸ்லேவியா மீது படையெடுத்து அந்நாட்டு மக்களைக் கொன்று குவித்த போதும், சாவின் கொடுமையை எண்ணிப் புலம்பி அழுகிறாள், ஸ்வெட்டேவா. அதை எழுது மேசை (The Desk) என்ற உணர்ச்சிக் குறிப்புகளாக எழுதுகிறாள். அவற்றுள் அவளுடைய அஞ்சாமையும், நேர்மையும், பெருமிதமும், தனிமையுணர்வும் பொதிந்திருக்கக் காணலாம் அக் குறிப்பின் கடைசி வரிகள்:

எனது தீர்ப்புநாளில்
எனது-

இரண்டு சிறகுகளே
பாதுகாப்பாகத்
திறந்த மேனியோடு நிற்பேன்.

பதினேழு ஆண்டுகள் நாடுகடந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பிறகு, 1939- இல் தன் கணவனைத் தேடி ஸ்வெட்டேவா மீண்டும் ருசியாவிற்கு வந்தாள். நெடுநாட்களாகக் காண விரும்பிய கவிஞர் அக்மடோவாவை நேரில் சந்தித்தாள். அப்போது ருசியா மீண்டும் ஜெர்மனியோடு இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்தது. ருசிய அதிகாரிகள் எல்லாரையும் ஐயத்தோடு பார்த்தனர். ஐயத்துக்குள்ளானவர்களை இரக்கமில்லாமல் கொன்றனர். ஸ்வெட்டேவாவின் பழைய வரலாற்றை அறிந்த யாரும் அவளை ஆதரிக்கமுன் வரவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காகக் கூலிக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் செய்தாள். அவளுடைய குடும்பச் சொத்துக்கள் எல்லாம் ருசிய அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு எல்லாருக்கும் வழங்கப்பட்டு விட்டன. ஜெர்மன் படைகள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து விட்டபடியால், ஸ்வெட்டேவாவும் மாஸ்கோவை விட்டு ‘எலாபுகா’ என்ற உள்நாட்டு நகருக்குக் குடிபெயர்த்தாள். அங்குப் பிழைக்க வழியின்றிச் சுருக்கிட்டுக் கொண்டு இறந்தாள். ருசிய நாட்டின் புகழ்பெற்று கவிஞர்களுள் ஒருவரான ஸ்வெட்டேவா ஒரு சாதாரண இடுகாட்டில் எந்தச் சிறப்புமில்லாமல் புதைக்கப்பட்டாள்.

கவிஞர் மேண்டல் ஸ்டாமின் மனைவி ‘நா தெழ்டா’ ஸ்வெட்டேவாவைப்பற்றிக் குறிப்பிடும்போது, “மெரீனா ஸ்வெட்டேவாவின் முடிவைப்போல் துயரந்தரக் கூடியது ஏதுமில்லை... அவளுக்குத் தேவைப்பட்டதெல்லாம், அவளுடைய ஒவ்வோர் உணர்வையும் கடைசி எல்லைவரை அனுபவித்துப் பார்ப்பதுதான்” என்று எழுதுகிறாள்.

ருசியப் பெருங் கவிஞரான பாஸ்டர் நாக், ஸ்வெட்டேவாவின் இறப்புக்கு வருந்தி எழுதிய கல்லறைப் பாட்டில் “அவள் உண்மைக் குடிமகளாக விளங்கிய ஒரே நாடு- கவிதை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


  1. எகிப்தியப் புராணக் கடவுள் ஆசிரிஸ். அவன் மரமாக இருத்தபோது எதிரிகளால் துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்கப்பட்டான். அம்மரத் துண்டுகளைக் கட்டிலின் கால்களாகச் செய்தனர். ஆசிரிஸைப் பிரிந்த அவன் மனைவி ஒசிஸ்(Usis)ஒரு பறவையாக மாறித் தன் கணவன் இருப்பிடத்தைக்
  2. தாமஸ் ஏசுவின் சீடர், அபோலஸ்தர். ஏசு உயிர்த் தெழுந்ததை நம்பாமல், அவருடைய புண்களைத் தமது விரல்களால் தொட்டுப்பார் நம்பியவர். இதனால் இவரைச் சந்தேகத் தாமஸ் (doubting Thomas) சன்று விவிலியம் கூறும்.
  3. கிரேக்க புராணத்தில் ஆன்மா, வண்ணத்துப்பூச்சியின், சிறகுகளோடு பெண்ணாக உருவகப்படுத்தப்படுகிறது. அந்தப் பெண் கிரேக்கக் காதற் கடவுளான ஈராஸ்லின் (Eros) காதலியாக கூறப்படுகிறாள். அந்த ‘சைக்கோதேவதை’ தன்னுருவில் இவ்வுலகில் தோன்றி மீண்டும் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக ஸ்வெட்டேவா கூறுகிறான். அதனால்தான் தனது தனது எழுத்து மேசைக்குறிப்பில் இரண்டு சிறகுகளே பாதுகாப்பாகத் திறந்த மேனியோடு நிற்பேன் என்று எழுதுகிறாள்.