புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

நான் இப்போது சிறியவன்.
யாரும் எதிர்க்க முடியாதபடி
என்னுள் ஒருவன்
உருவாகிக் கொண்டிருக்கிறான்



விளாடிமிர் மாயகோவ்ஸ்கி
(1893–1930
)


மாயகோவ்ஸ்கி தன் தந்தையின் பிறந்த நாளில் (ஜூலை 7) பிறந்தான். எனவே இருவர் பிறந்த நாட்களும் வீட்டில் ஒன்றாகவே கொண்டாட்ப்பட்டன.

ஐந்து வயதிலேயே, தன் வயதுக்கு அதிகமான பாடல்களை மனப்பாடம் செய்து கூறும் ஆற்றலைப் பெற்றிருந்தான். அவன் விரும்பிப்படித்த முதல் நூல் டான் குவிக் சாட்.

‘ஒரு பக்கம் கவிதை. மற்றொரு பக்கம் புரட்சி. கவிதையும் புரட்சியும் என் உள்ளத்தில் பின்னிப்பிணைந்து விட்டான்’ என்று தனது இளமைக் குறிப்பில் அவன், எழுதியிருக்கிறான். தனது பன்னிரண்டாம் வயதிலேயே காலையில் கண் விழித்ததும், ‘செய்தித்தாள் வந்து விட்டதா?’ என்று தான் முதலில் கேட்பான்.

தனது 16 ஆம் வயதிற்குள் மூன்று முறை சிறைக்குச் சென்றிருக்கிறான். சிறைப் பறவையாய் இருந்தபோது காவல் துறையின்ர் அவனுக்குச் சூட்டிய திருநாமம் ‘நெட்டையன்.’ உயரத்தில் அவன் ஒரு காகசஸ்: 6 அடி 8 அங்குலம்.

வீட்டை விட்டுக் கிளம்பும்போது வழக்கமான அவன் முசுமுசுத் தொப்பியைத் (Fur cap) தலையில் அணிந்ததும் அவன் வாய் முணு முணுக்கும் வாலிபப் பாடல் வரிகள்:

பயனற்ற ஆலை முதலாளி-வீட்டில்
படுத்திருப்பான் எப்போதும்
சோம்பேறி! காலி -
ஆமாம் படுத்திருப்பான் எப்போதும்
சோம்பேறி! காலி!

1909-ஆம் ஆண்டில் அவன் பதினாறு வயதுக் கட்டிளங்காளை. நொவின்ஸ்கயா சிறைச் சாலையில் அடைபட்டு இருந்த 13 பெண் அரசியற் கைதிகள் தப்பிச் செல்வதற்கு அவன் துணை புரிந்தான். அக்கைதிகள் மாறுவேடத்தில் தப்பிச்செல்ல அவன் தாயும் சகோதரிகளும் பள்ளிச் சீருடை தைத்துக் கொடுத்தனர். அதற்காக அவன் சிறைப்படுத்தப்பட்டான். பின்னர் ‘மைனர்’ என்று விடுதலை செய்யப் பட்டான்.

சிறையில் இருந்தபோதுதான் காந்தியடிகளுக்கு அறப் போரைப்பற்றிய ஞானோதயம் பிறந்தது. சிறையில் இருந்த போது தான் எதிர்காலத்தில் தான் சமைக்கவிருந்த சமதருமக் கலையைப் பற்றிய ஞானோதயம் அவனுக்கு ஏற்பட்டது.

ஷெல்லிகல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘நாத்திகத்தின் அவசியம்’ (The Necessity of Atheism) கட்டுரை எழுதி வெளியிட்டதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டான். கலைக்கல்லூரியில் பயின்றபோது பழைய மரபுக்கலையை (Bourgeois Art) இகழ்ந்து பேசியதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டான், மாயகோவ்ஸ்கி. கலைக்கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டபோது அவன் தாய் நீ எப்படியாவது இந்தப்படிப்பை (Painting) முடித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். என்று வருத்தத்தோடு சொன்னார். அதற்கு அவன் சொன்னான்:

“ஓவியத் தொழில் செய்யத் தனியாக ஒரு கூடமும் (Studio) திரைச் சீலைகளும் (canvas) வண்ணங்களும் தூரிகைகளும் இன்னும் பலவும் தேவைப்படும். ஆனால் கவிதை எழுத பழைய நோட்டுப்புத்தகம் ஒன்று இருந்தால்போதும்; எந்த இடத்திலும் உட்கார்ந்து கொண்டு எழுதலாம். எனவே நான் கவிஞனாகப் போகிறேன்.” என்று அவன் சொன்னபடி மாகவிஞன் ஆகிவிட்டான்.

“சிலர் பிறக்கும்போதே போராட்டக்காரர்களாகப் பிற்ககிறார்கள்; அவர்களுள் மாயகோவ்ஸ்கியும் ஒருவன். உலகப் புகழ்பெற்ற புதுக்கவிஞர் முகாமில் மாயகோவ்ஸ்கி ஒரு போராட்டக்காரன்” என்றும், “ருசியா பெற்றெடுத்த கவிஞர்களுள் மாயகோவ்ஸ்கி பேராற்றலும் தீவிரமான போர்க்குணமும், எளிதில் பிறரால் வெற்றிகொள்ள முடியாத உறுதிப்பாடும் வாய்க்கப் பெற்றவன்” என்றும் கவிஞர் ஸ்வெட்டேவா குறிப்பிட்டிருக்கிறார். ‘புதிய ருசியாவில் பெருங்காப்பியமும் தன்னுணர்வுக் கவிதையும்’ (The Epic and the Lyric in Modern Russia) என்ற தனது கட்டுரையில் கவிஞர் பாஸ்டர் நாக்கைத் தன்னுணர்வுக்கவிதையென்றும், மாயகோவ்ஸ்கியைப் பெருங்காப்பியம் என்றும் குறிப்பிட்ட ஸ்வெட்டேவா அவ்விருவரையும் ‘கவிஞருள் அதிசயிக்கத்தக்கவர்கள்’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“காலங் கடந்த படைப்புக்களைப் போற்றிப் பாதுகாத்து வழிபடும், உயிரற்ற கலைப் பொருட் காட்சிச் சாலை நமக்குத் தேவையில்லை; தெருக்களிலும், வண்டிப்பாதைகளிலும், தொழிற் சாலைகளிலும், பணிமனைகளிலும், பாட்டாளிகளின் இல்லங்களிலும் காணப்படும் மனித உணர்வுகளின் உயிர்த் துடிப்பான தொழிற் கூடங்கள் தேவை” என்று மாய கோவ்ஸ்கி எழுதினான். இத்தகைய சிந்தனைகள் இளம் மாய கோவ்ஸ்கியை ஒரு சுறு சுறுப்பான அரசியல்வாதியாக உருவாக்கின. குலையை விடுதலைக்குரிய ஒரு போர்க்கருவியாக மாற்றி அடிமைத் தளையில் சிக்கித் தவித்த ஏழைகளின் கையில் கொடுக்க விரும்பினான். கலை மேட்டுக் குடியினருக்கே உரியது என்ற கனவைத் தகர்த்தெறிவதுதான் அவன் திட்டம்.

‘பழமையின் மறுமலர்ச்சியே பண்பாடு’ என்ற கொள்கையை அவன் ஒத்துக் கொள்ளவில்லை. உற்பத்திப் பெருக்கமும், மக்களுக்குப் பயன்படும் பொருள்களாக மூலப் பொருள்களை மாற்றியமைக்கும் திட்டமிட்ட தொழில் திறமையுமே பண்பாடு என்று புது விளக்கம் கொடுத்தான் மாயகோவ்ஸ்கி.

ஒளிமிக்க ஆன்மீக உலகைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருப்பதைக் கைவிட்டு விட்டுக் கலையானது வெட்கப்படாமல் உலகியலைப் பற்றியும், மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பற்றியும் பேசவேண்டும் என்று வற்புறுத்தினான். கலை, மனித உணர்வுகளைப்பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர, கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றைப் பற்றியதாக இருக்கக்கூடாது என்பது அவ்ன் கருத்து. மேலும், அது தனிப்பட்ட ஒரு மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடாக இருப்பதை விட, கொள்கைகளின் கூட்டுக் குரலாக ஒலிக்கும்போது அதன் பொருத்தம் புலப்படும் என்று சொன்னான்.

கலையைப்பற்றித் தான் வெளிப்படுத்திய கருத்துக்கள் மக்களிடையில் பரவி வேரூன்ற வேண்டுமென்றால் அவற்றை அறிக்கை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கருதிய மாயகோவ்ஸ்கி 1912-இல் ‘ஜனரஞ்சகத்தின் கன்னத்தில் ஓர் அறை’ (A slap In The Face of Public Taste) என்ற ஆத்திரமூட்டும் அறிக்கையொன்றை வெளியிட்டான். ருசியர்கள் மிகவும் போற்றி மதித்த இலக்கியவாதிகளான புஷ்கின், டாஸ்டாவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரைத் தமது புத்திலக்கியப் போர்க்கப்பலில் இருந்து தூக்கி எறியுமாறு இளந்தலை முறையினருக்கு அதில் ஆவேசக்கட்டளை இட்டிருந்தான். தனது புரட்சிக் கொள்கையை உள்ளடக்கி அதற்கு ‘முன்னோக்கியம்’ (Futurism) என்று பெயரும் கொடுத்தான். சமுதாயத்தின் அடிமட்டச் சூழ்நிலையிலிருந்து இக்கலைவடிவம் உருப்பெற்றாலும், எந்த உலகை நோக்கி இது பேசுகிறதோ அந்த உலகை அடியோடு மாற்றியமைக்கும் உயிர்ப் பேராற்றலாக விளங்குவதாக அவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டான்.

1914-இல் அவன் பேசிய ஓர் இலக்கியப் பேச்சில் “முன்னோக்கியக் கவிதை என்பது நகரத்தைப்பற்றிய கவிதை. தற்கால உலகின் சங்கடத்தையும் காய்ச்சலையும் ...பிரதிபலிக்கும் தற்கால நகரத்தின் கவிதை. நகரத்தின் வளைவில் ஆற்றொழுக்கோ, அளவிடப்பட்ட கோடுகளோ இல்லை. கோணங்களும், ஒடிசல்களும், கோணல்மாணல்களுமே நகரின் அமைப்பை உருவாக்குகின்றன”, என்று விளக்கம் தொடுத்தான். காட்சிப் பொருள்களின் மீது மாயகோவ்ஸ்கி கொடுத்த கருத்தழுத்தம் மிகவும் குறிப்பிடத்தக்கது. மாயகோவ்ஸ்கி தனது மாஸ்கோ நகரவாழ்ககையை, ஓர் ஓவிய மாணவனாகத் தொடங்கினான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயகோவ்ஸ்கிக்குத் தனது ஆற்றல் மீதும், தான் தொடங்கிய புரட்சி இயக்கத்தின் ஆற்றல் மீதும் அளவுகடந்து நம்பிக்கையும் தன்மதிப்பும் இருந்தன மாயகோவ்ஸ்கியின் கவிதையாற்றலைப்பற்றிக் குறிப்பிட்ட ஸ்வெட்டிவா, "மாயகோவ்ஸ்கி தனது முதல் கவிதையை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே ஒரு முன்னோக்கியக் கவிஞன்; பிறவியிலேயே பேராற்றல் வாய்க்கப் பெற்றவன். இளமையிலேயே தம்முள் கொந்தளித்துக் கொண்டிருந்த ஆற்றலை அவன் உணர்ந்திருந்தான். ஆனால் அந்த ஆற்றல் எத்தகையது என்று அவனுக்குத் தெரியாது. ‘நான்’ என்ற தன்முனைப்பு அவனுக்கதிகம். மக்கள் அவனைப் பார்த்து ‘யார்நீ’? என்று கேட்டபோது நான் விளாடிமிர் மாயகோவ்ஸ்கி என்று கூறினான். ‘விளாடிமிர் மாயகோவ்ஸ்கி யார்?’ என்று அவர்கள் கேட்டபோது நான்தான்! இப்போது இதைத் தவிர வேறு பதில் இல்லை. ஆனால் எதிர்காலம் என்னைப் பற்றிச் சரியான பதிலை உங்களுக்குக் கூறும் என்று இறுமாப்போடு கூறினான்” என்று மாயகோவ்ஸ்கியின் இறப்பிற்குப் பின் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறாள்.

மாயகோவ்ஸ்கியின் தொடக்ககாலக் கவிதைகளில் அவனுடைய எல்லையற்ற தன்முனைப்பும், தன்னம்பிக்கையும் பொதிந்திருக்கக்காணலாம். ‘உங்களால் முடியுமா?’ என்ற தலைப்பில் அவன் எழுதிய கவிதையில் முன்னோக்கியத்தின் முடிச்சுகளையும், அறை கூவல்களையும் காணலாம்:

ஒரு குவளைச் சாயத்தை
எடுத்து வீசித்

திரைச் சீலையில்
உலகத்தையே உருவாக்கினேன்

ஒரு கிண்ணப்பாகில்
கடலின் புடைபரப்பை
உருவாக்கினேன்

சால்மன் மீனின்
செதில்களில்
மௌன உதடுகளின்
கூக் குரல்களைப்
படித்தறிந்தேன்.

ஒரு வடிகுழாயைப்
புல்லாங் குழலாக்கி
உள்ளத்தை மயக்கும்
உயர்ந்த கானத்தை
உங்களால் -
எழுப்ப முடியுமா?

இக்கவிதை மாயகோவ்ஸ்கியின் எல்லையற்ற ஆற்றலின் சுய விளம்பரம். யாரைப் பார்த்து இந்த அறை கூவலை அவன் விடுக்கிறானோ, அவர்களால் மாயகோவ்ஸ்கியை நெருங்க முடியாது என்பதும் இதில் அடங்கியிருக்கிறது.

தன் உள்ளத்தில் கவிதை எவ்வாறு உருவாகிறது என்பதை மாயகோவ்ஸ்கி கீழ்க் கண்டவாறு விள்க்குகிறான்:

“நான் என் கைகளை வீசி வார்த்தைகள் ஏதுமின்றி முணு முணுத்த வண்ணம் நடக்கிறேன்: என் முணு முணுப்புக்கு இடையூறு வராத வண்ணம் நடக்கிறேன்; என் நடையில் வேகம் கூடும்போது, நான் வேகமாக முணுமுணுக்கிறேன்.”

“இப்படியே தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு கவிதைக்கு அடிப்படையான சந்தம் பீறிட்டுக் கிளம்புகிறது. அவ்வாறு கிளம்பும் அந்த ஓசையிலிருந்து சொற்கள் வடிவம் பெறுகின்றன.”

“பீறிட்டுக் கிளம்பும் அந்தச் சந்த ஓசை, எங்கிருந்து வருகிறது என்று யாருக்குத் தெரியும்? அது எனக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் ஒலி; ஒரு தாலாட்டு; என்னுள் மீண்டும் மீண்டும்தோன்றும் ஏதோ ஒன்றுக்கு நான் கொடுக்கும் ஒலி வடிவம்.”

“அந்த ஒலிகளை முயன்று இயக்குதலும், ஒன்றைச் சுற்றி அந்த ஒலிகளை ஒழுங்கு படுத்துவதும், அவற்றின் இயல்பையும் பண்பையும் கண்டறிதலும் தான் கவிதையின் தொடர்ந்த உழைப்பாகும், சந்தக் குவிப்பும் ஆகும். சந்தம் எனக்கு வெளியிலிருந்து தோன்றுகிறதா, உள்ளிருந்து தோன்றுகிறதா என்று எனக்குத் தெரியாது. இசைப்பெட்டியில் அசைவு ஏற்படும்போது, அதன் நரம்புகளில் இனிய ஓசை கிளம்புவது போல், என் உள்ளம் குலுங்கும் போது சந்தம் உருப் பெறுகிறது.”

“சந்தம் கவிதையின் அடிப்படை ஆற்றலாகவும் உயிர்ப்பாகவும் விளங்குகிறது. சந்தத்தைப்பற்றிப் பேசலாம். ஆனால் காந்தத்தைப் பற்றியும் மின்சாரத்தைப் பற்றியும் எப்படி விளக்க முடியாதோ, அதைப் போல் சந்தத்தையும் விளக்க முடியாது. சந்தம் பற்றிய உணர்வை ஒவ்வொரு கவிஞனும் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.”

மாஸ்கோ மன்றங்களில் அவன் தனது கவிதைகளைப் படித்தபோது, இளைஞர் பட்டாளம் உணர்ச்சி வசப்பட்டு, மெய் மறந்து ஆரவாரம் செய்வது வழக்கம். ஆனால் அதே சமயத்தில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவன் கவிதைக் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன என்று புரியாது; அவன் கருத்துக்கள் தீவிரமானவையா, நகைச்சுவையானவையா என்று புரியாமல் விழிப்பர். புரியாத இவன் குறியீட்டுக் கவிதைகள் பற்றி அவன் தாய் ஒரு முறை கேட்டபோது. மாயகோவ்ஸ்கி கீழ்க்கண்டவாறு விளக்குகிறான்

“எல்லாருக்கும் புரியும்படி தெளிவாக எழுதிவிட்டால் நான் மாஸ்கோவில் இருக்க மாட்டேன். சைபீரியாவில் கண்காணாத இடத்துக்கு நாடு கடத்தப்படுவேன், காவல் துறையின் கழுகுக் கண்கள் எப்போதும் என்மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நான் எப்படி வெளிப்படையாகப் பாட முடியும்? அடக்குமுறை ஒழிக! ...”

மாயகோவ்ஸ்கி ருசியாவில் முக்கிய நகரங்களுக்கெல்லாம் சென்று மாலைக் கூட்டங்களில் தனது கவிதைகளைப் படிப்பது வழக்கம். இத்தகைய மாலைக் கூட்டம் மாஸ்கோவில் அடிக்கடி நடைபெறுவதுண்டு. அக்கூட்டிங்களில் மாயகோவ்ஸ்கியின் சகோதரி அடிக்கடி கலந்து கொள்வாள். ஒரு முறை அவன் தாய், தானும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது அவன் சொன்னான்:

“நான் என் கவிதையைக் கூட்டங்களில் படிக்கும்போது என் எதிரிகள் என்னை இகழ்ந்து பேசுவார்கள்; எதிர்த் தாக்குதல் நடத்துவார்கள். உன்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. உள்ளம் உடைந்து வருந்துவாய் எனவே நீ வர வேண்டாம்!”</poem>

உணர்ச்சி வசப்படும் கவிஞர்கள். காதலைப் பொறுத்தவரையில் எப்போதும் கட்டுப்பாடற்றவர்கள், சந்த வேறுபாடுகளும், சாயல் மயில் வேறுபாடுகளும் அவர்களால் தவிர்க்க முடியாதவை. பைரன், ஷெல்லி, கெதே, போதலேர், பாப்லோ நெருடா எல்லாரும் காதல் மன்னர்களே! மாயகோவ்ஸ்கி மட்டும் அதற்கு விதிவிலக்கா?மாயகோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பூந்தோட்டங்கள்! குளிர் அருவிகள்! இளமரக்காடுகள்!

மாயகோவ்ஸ்கியின் ‘முதற் காதல்’ அவனது 22ஆம் வயதில் ஒடிசா நகரில் மலர்ந்தது. மேரியா டெனிசோவா என்ற பதினெட்டு வயது அழகியை அவன் சந்தித்துக் காதல் கொண்டான். மெலிந்த உடல்வாகும், நெடியதோற்றமும், ஒளி வீசும் அழகிய கண்களும் வாய்க்கப் பெற்றவள் மேரியா. அவளைச் சந்தித்து, அவள் படத்தை வரைந்ததோடு குறிப்பெழுத்தில் (Cryptogram) தன் காதலையும் வெளிப் படுத்தினான்.

.. V . . O .

I love you

. . n . . o. . r... ic.

.. n. . J. you are nice

d. . rl.. b. e

dear lovable

a.. r. .l k. . s

adorabile kiss

me please

me please

do you love me?

do you love me?

ஆனால் இக்காதல் ஒரு தலைக்காதலாக முடிந்தது. இக்காதல் தோல்வியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தோல்வி, 'கால் செராய் அணிந்த மேகம் (The cloudin ants) என்ற தலைப்பில் உள்ளம் உருக்கும் ஒரு கவிதையாக உருப் பெற்றது.

மேரியா!
ஒரு கவிஞன்
தன் உள்ளத்தில்
திடீரென்று குதித்தெழுந்த
கவிதைச் சொல் ஒன்றை
மறப்பதற்கு
எப்படி அஞ்சுவானோ
அதுபோல்-
உன் பெயரை மறக்க
நான் அஞ்சுகிறேன்.

மேரியா!
போரில் மிஞ்சிய
தனது ஒற்றைக் காலை
ஒரு போர் வீரன்
எப்படி நேசிப்பானோ
அதுபோல,
உன் பளிங்கு மேனியை
நான் நேசிக்கிறேன்,
ஆனால் ...
நீ என்னை விரும்பவில்லை.

நீ யென்னை
ஒதுக்கியது உண்மையென்றால்
ஒரு நாய்
ரயில் சக்கரத்தில் சிக்கி
அறைபட்டுத் தொங்கும்
தனது காலைப்
பரிதாபமாக இழுத்துக் கொண்டு
நகர்வது போல்
நானும்
தனியாக
கண்ணீரில் நனைந்த
என் இதயத்தைச்
சுமந்து கொண்டு
நகர்ந்து செல்வதும் உண்மை!

[கால் செராய் அணிந்த மேகம்]

இவன் ஒரு பெண்ணை முழு மூச்சோடு காதலிக்கத் தொடங்கினால் உடனே அவளுக்குத் திருமணம் வேறொரு செல்வச் சீமானோடு முடிந்துவிடும். இது இவன் ராசி, மேரியாவுக்கு அடுத்தாற்போல் எல்சா என்னும் பெண்ணைக் காதலித்தான், மாயகோவ்ஸ்கி, அவன் லூயி அரகான் என்ற செல்வச்சீமானை மணந்து கொண்டாள். பின்னர் அவளுடைய தமக்கை லில்லி என்பவளைக் காதலித்தான். அவளும் ஆசிப்பிரிக் என்ற சீமானை மணந்து கொண்டாள். எனவே திருமணமான லில்லிபிரிக்கையே அவன் தொடர்ந்து காதலித்தான். அவர்கள் காதல் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வதாகப் பல முறை மிரட்டியிருக்கிறான் மாயகோவ்ஸ்கி. அந்தச்சமயங்களில் அச்சிக்கல்களைத் தீர்த்துச் சமரசம் செய்ய அவர்கள் இரண்டு பேருக்கும் தூதுவனாக இருந்து உதவியிருக்கிறான் லில்லியின் கணவனான சீமான் பிரிக். உலகக் காதல்வரலாற்றில் குறிப்பிடத்தக்க பொறுமைசாலி இந்தப்பிரிக் சீமான். இவர்கள் காதல் விவகாரம் இப்படி இழுபறியாகப் பத்தாண்டுக் காலம் நீடித்தது. மிக்க ஆர்வத்தோடு காதலித்த லில்லி, பிரிக் சீமானைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் இவன் அதிர்ந்து போனான். ஏமாற்றம் இவன் குரல்வளையை நெரித்து மூச்சுத் திணறும்படி செய்தது. அப்போது அவன் உள்ளத்தில் பீறிட்டெழுந்த கவிதை, குருதியில் குளித்து வந்தது என்று கூறலாம்.

நீ எங்கு
ஓடி ஒளிந்தாலும்
முடமான என காதற்சுமை
உன்னைக் கட்டாயம்
அழுத்திக் கொண்டிருக்கும்.

ஏமாற்றத்தின் கொடுமையைக்
கடைசி முறையாக
நான் அழுது தீர்க்கிறேன்

உழைத்துச் சலித்த எருது
தண்ணீரில் படிந்து
தன் தளர்ச்சியை
நீக்கிக் கொள்ளும்,
எனக்கோ-
உன் காதல் கடலைத் தவிர
முழகுவதற்கு
வேறு இடமில்லை.

ஆனால் -
வழியும் கண்ணீர்
என் பாதையை மறைக்கிறது.
களைத்த களிறு
களைப்புத்தீர விரும்பினால்
சூரியச் சூடேறிய மணலில்
சுகங்காணப் புரளும்.

எனக்கு
இதமான
சுகச்சூடுதரும் சூரியன்
உன்னையன்றி வேறில்லை.

ஆனால்-
இப்போது
உன்கையில் விளையாடும்
காதலன யாரென்று
என்னால்
ஊகிக்க முடியவில்லை.

(அன்பு லில்லிக்குப் பதில் கடிதம்)

நமக்கு மாயகோவஸ்கியின் காதல் விவகாரம் அவ்வளவு முக்கியமில்லை, இக்காதல் தோல்வியினால் ஏற்பட்ட தாக்கம் அவன் இலக்கியத்தைப் பெரிதும் பாதித்தது. மாயகோவஸ்கியின் காதல் தோல்வி பெற்றெடுத்த காற்செராய் அணிந்த மேகம்(Cloud in Pants) இது (it) , அன்பு லில்லிக்குப் பதில் கடிதம் என்ற கவிதைகள் மூன்றும் உணர்ச்சி மிக்க காதற் கவிதைகள். இவற்றுக்கு ஒப்பாக ஒரு சிலவற்றையே உலக இலக்கியத்தில் தேடிப்பிடிக்க முடியும். காதல் தோல்வி மாய கோவ்ஸ்கியை ஆயிரம் யானை பலத்தோடு கிளர்ந்தெழச் செய்தது. ஏழைகளின் காதலைக் கூட ஈவு இரக்கமில்லாமல் தட்டிப்பறிக்கும் முதலாளித்துவ சமுதாயப் பின்னணியைத் தன் தீக்கண்களால் உறுத்துப் பார்த்தான். அதைநோக்கி.-


நான்-
என்னைப் பொறுத்தவரை

மிகமிகச் சிறியவன்
என்பதை உணர்கிறேன்.

ஆனால்-
யாரும் எதிர்க்க முடியாதபடி
என்னுள் ஒருவன்
உருவாகிக் கொண்டிருக்கிறான்.
என்னை விட
ஒரு பிச்சைக்காரன்
வசதியானவன்
என்பதைச் சுட்டிக்காட்டிக்
கேலி செய்கிறாய்;
ஆனால்-ஒன்றை மட்டும் உணர்த்து கொள்!
வெசுவியஸ் எரிமலை
குமுறி எழுந்த போது
செல்வம் கொழுத்த
பாம்பி[1] நகரம்
உருத் தெரியாமல்
அழிந்தது போல்
நீயும் அழியப் போகிறாய்!

[கால் செராய் அணிந்த மேகம்]

என்று சாபம் கொடுத்தான். காதற் போட்டியில் முதலாளித்துவத்துக்குப்படைக் கலன்களாக இருந்து துணைபுரிந்த மதம் கலை, இலக்கியம், சமுதாய அமைப்பு யாவற்றையும் தன் எழுத்துச் சூறாவளியால் சுழன்றடித்தான். காதற் போட்டியில் மனிதனுக்கு மனிதன் சமநிலையிலிருந்து போட்டியிட வேண்டும் என்பது அவனுடைய காதற் கொள்கை.

மாயகோவ்ஸ்கியின் கடைசி காதலி ‘வெரோனிகா போலன்ஸ் கயா’ என்ற மாஸ்கோ நடிகை. அவளும் திருமணமானவள். அவளுடைய கணவன் மிகெய்ல்யான் ஷின் ஒரு நடிகர்; நாடக இயக்குநர், மாயகோவ்ஸ்கி வெரோனிகா கள்ளக் காதல் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள் மாய கோவ்ஸ்கி வெரோனிகாவை அவள் கணவனிடமிருந்து மண விலக்குப் பெற்றுக் கொண்டு தன்னோடு நிலையாகத் தங்கி விடும்படி வற்புறுத்தினான். அப்போது எழுந்த கருத்து வேறுபாட்டில் உள்ளம் உடைந்த மாயகோவ்ஸ்கி துப்பாக்கியைத் தன் இதயத்துக்கு நேராக வைத்துச் சுட்டுக் கொண்டு இறந்தான். அன்று 14- 4- 1930.

மாயகோவ்ஸ்கி இறந்து எட்டு ஆண்டுகள் கழித்து, அவனோடு கொண்டிருந்த தொடர்பை ஒரு கட்டுரையாக எழுதித்தரும்படி வெரோனிகா போலன்ஸ்கயாவை 'மாயகோவ்ஸ்கி அரசு அருங்காட்சியகம் (Mayakovsky State Museum) கேட்டுக்கொண்டது. அக்கட்டுரை நீண்ட நாட்கள் வெளியிடப்படாமல் இருந்து 1988-இல் சோவியத் இலக்கியம் (Soviet Literature) இதழில் வெளியிடப்பட்டது. அதில் மாயகோவ்ஸ்கியிடம் தான் கொண்டிருந்த தொடர்பை விரிவாக எழுதியிருப்பதோடு, அவன் சாவுக்குக் காரணமான அடிப்படைக் காரணங்களையும் அவள் விளக்கியிருக்கிறாள்:

“விளாடிமிர் விளாடிமிரோவிச்[2] ருசியப் பொதுவுடைமைக் கட்சியின்பால் அளவுகடந்த பற்றும் மரியாதையும் வைத்திருந்தார்; சோவியத் அரசாங்கத்தின் சிறிய தவறுகளை நண்பர்களிடம் சுட்டிக்காட்டி வருந்துவாரே தவிர, சோவியத் அரசாங்கத்தையோ பொதுவுடைமைக் கட்சியையோ அவர் வெறுத்துப் பேசியதில்லை; சோவியத்துக்கு எதிராக யாரும் கேலி செய்து பேசுவதை அவர் பொறுத்துக் கொள்ளமாட்டார்.”

“நான் ஒருமுறை வெளிநாட்டு அழகுச்சாதனம் ஒன்றை விலைகொடுத்து வாங்கியதற்காக என்னை மிகவும் கடிந்து கொண்டார். ருசியாவில் உற்பத்தியாகும் பொருள்களையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்டிப்பானவர்.”

“அவர் மிகவும் வெளிப்படையானவர். பாசாங்கு அவருக்குப் பிடிக்காது. ருசியக் குடிமகன் ஒவ்வொருவனும் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியில் உண்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதற்கு மாறாக நடந்து கொள்பவர் யாராக இருந்தாலும், அதே இடத்தில் கண்டிக்கத் தயங்கமாட்டார்.”

“தமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அகில உலக நிகழ்ச்சிகளிலிருந்து, சோவியத் அரசாங்கத்தில் இடம் பெற்ற சிறிய நிகழ்ச்சிகள் வரை அவரை அதிகம் பாதித்தன.”

“விளாடிமிர் விளாடிமிரோவிச்சின் சோக முடிவுக்கு எங்கள் காதல் விவகாரமும் கருத்து வேறுபாடுகளும் அடிப்படைக் காரணம் அல்ல; வேறுபல காரணங்களும் இருந்தன. அவற்றை என்னால் ஊகிக்க முடியும்.”

“1930-ஆம் ஆண்டு இலக்கியத்துறையைப் பொறுத்த வரையில் அவருக்கு ஒரு தோல்வியாக முடிந்தது. ‘குரலின் உச்சி’யில் (At the Top of One’s voice) என்ற அவருடைய கவிதை வெற்றிப் படைப்பு என்றாலும், யாரிடமிருந்து அதற்குப் பாராட்டுக்கள் வரவேண்டுமென்று எதிர்பார்த்தாரோ அவர்களிடமிருந்து எந்தப் பாராட்டும் வரவில்லை. நிறைந்த எதிர்பார்ப்போடு எழுதப்பட்ட ‘குளியல் அறை’ (The Bath-House) என்ற நாடகமும் தோல்வியடைந்தது. மாஸ்கோ இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் அந்த நாடகத்தை அலட்சியப் படுத்தியதோடு, அதைப் பாராட்டியோ, எதிர்த்தோ எதுவும் எழுதவில்லை. இது விளாடிமிரோவிச்சின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது.

“அக்டோபர் புரட்சியின் பத்தாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, புரட்சியின் பிரச்சார இயக்கத் தலைவர் என்ற முறையில் லெனினைப் பற்றியும், சோவியத் நாட்டைப் பற்றியும் பாராட்டிக் கவிதைகள் எழுதியிருந்தாலும், சோவியத் அரசின் செயல் திட்டங்களும், சாதனைகளும் விளாடிமிரோவிச்சிற்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தன. அவருடைய கற்பனை வரண்டு விட்டது என்று சொல்லி அவரது சோவியத் பிரச்சார எழுத்துக்களை மாஸ்கோ இலக்கிய வாதிகள் கேலிசெய்தனர்.”

“அவரது இலக்கிய வாழ்க்கையில் இருபதாவது ஆண்டு விழாவை நண்பர்கள் கொண்டாடியபோது, சோவியத் அரசாங்கம் எந்தவிதமான ஆதரவோ, பாராட்டோ வழங்கவிலை.”

“ஓயாத உழைப்பால் அவர் உடல் நிலை சீர்கெட்டிருந்தது. அடிக்கடி மூட்டு வலியாலும், ஃப்ளு காய்ச்சலாலும் அவதிப்பட்டார். இவ்வாறு பலவித இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆட்பட்டிருந்த விளாடிமிரோவிச்சிற்கு என் உறவு ஆறுதலாக இருந்தது. அலை கடலில் அவதிப்பட்ட அவருக்கு நான் ஒரு துரும்பாகக் கிடைத்தேன். நானும் அவரோடு கருத்து வேறுபாடு கொண்டபோது, சாவை நோக்கி அவர் விரைந்தார்”

மாயகோவ்ஸ்கி உயிரோடு வாழ்ந்த காலத்தில் லெனினோ ஸ்டாலினோ அவனை மதித்துப் பாராட்டவில்லை. சோவியத் அரசாங்கமும் அவனைப் புரட்சிக் கவிஞனாக அங்கிகரிக்கவில்லை. ஐரோப்பிய இலக்கிய வாதிகளும் அக்காலத்திய ‘புஷ்கினாக’ அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. அக்மடோவா, பாஸ்டர்நாக், மேண்டெல்ஸ்டாம், ஸ்வெட்டேவா ஆகியோருக்கு அடுத்த நிலையிலேயே அவனுக்கு இடம் ஒதுக்கினர். 1985-இல் பொதுவுடைமைக் கட்சியின் வேண்டுகோளின்படி ஸ்டாலின் மனந்திறந்து மாய கோல்ஸ்கியைப் பாராட்டி அறிக்கை விட்டார். அதன் பிறகே மாஸ்கோ இலக்கிய வாதிகள் மாயகோவ்ஸ்கியை ஒப்பற்ற புரட்சிக் கவிஞனாக ஏற்றுக் கொண்டனர்; அவனது கவிதைகளும் எந்த வித விமர்சனமும் இல்லாமல் மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன. சோவியத் அரசாங்கம் புரட்சிக் கவிஞனாக அவனை அங்கீகரித்ததும், இவ்வளவு நாளாகப் போற்றிப்பாராட்டிய ஐரோப்பிய இலக்கிய வாதிகள்-அவன் சார்ந்திருந்த கட்சியின் காரணமாக- ஒதுக்கத் தலைப்பட்டனர்.

மாயகோவ்ஸ்கி தன்னைச் சுட்டுக் கொண்டு இறந்தான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், கவிஞர் பாஸ்டர் நாக்கிற்கு அவன் எழுதிய கீழ்க்கண்ட வரிகளே நினைவில் வந்து நின்றன.

என்னைக் குறிக்கும்
‘நான்’
எனக்கு
மிகச் சிறியதாக
நான் கருதுகிறேன்.
பொறுத்திருந்து பாருங்கள்
என்னிலிருநது
எவனோ ஒருவன்
வெடித்துக் கிளம்பக்
காத்திருக்கிறான்

“மாய கோவ்ஸ்கி பலவிதப் பேராற்றல்களைத் தன்னுள் அடக்கிய ஒரு மின்காந்த ஆக்கப்பொறி (Dynamo); அதன் மின்னிணைப்பில் ஏற்பட்ட கோளாறு (Short circuit) அதைப் பொசுக்கிவிட்டது” என்று பாஸ்டர் நாக் குறிப்பிட்டுள்ளார்.

‘விளாடிமிர் மாயகோவ்ஸ்கி-ஒரு சோகநாடகம்’ (Mayakovsky a tragedy) என்பது மாயகோவ்ஸ்கி எழுதிய ஒரு நாடகம் . அதில் தன்னைச் சிலுவையில் மரித்த ஏசுநாதருக்கு ஒப்பிட்டுக் கொள்கிறான்.

“ஒருவன் பிறருக்காகத் துன்பங்களை ஏற்றுக் கொள்ளலாம். பிறரை இரட்சிக்க முடியாத நிலையில் தனது உயிரைத்தியாகம் செய்து கொள்வது அதிகப்பட்ச செயல்; மேலும் பொருளற்றது; தேவையும்இல்லாதது;”

என்று ஓரிடத்தில் மாயகோவ்ஸ்கி குறிப்பிடுகிறான். இக் கூற்று அவனுக்கும் பொருந்தும்.”


  1. ரோமப் பேரரசின் புகழ் பெற்ற நகரம். கி. மு. 79- இல் வெசுவியஸ் எரிமலை குமுறி எழுந்து இந்நகரை அழித்தது, கி. பி. 1755-இல் இதன் அழிவுகள் தோண்டி எடுக்கப்பட்டன.
  2. வெரோனிகா மாயகோவ்ஸ்கியை விளாடிமிர் வினாடிமிரோவிச் என்று தான் குறிப்பிடுவது வழக்கம்.