புதியதோர் உலகு செய்வோம்/அறிவாற்றலா? நுகர்வு கலாசாரமா?
நுகர்வு கலாசாரமா?
1958ம் ஆண்டில் குந்தை (நீலகிரி) நீர் மின் திட்டக் குடியிருப்பில் நான் வாழவந்த நாட்கள். நீர் மின் திட்டத்தில் பணியாற்றும் பொறியாளர், அலுவலகங்களிலும் தணிக்கைப் பிரிவிலும் பணியாற்றுபவர்கள். பல்வேறு கனரக ஊர்திகள், இயந்திரங்களை இயக்குவோர் ஆகியோருக்கான குடியிருப்பு அது. அங்கு தற்காலிக அலுவலகங்களும் வசிப்பிடங்களும் ஒரு சிறு துவக்கப் பள்ளியுமே இடம் பெற்றிருந்தன. கடைகண்ணி, பொழுது போக்குத் தலங்கள் எதுவுமே இல்லாத நிலையில், வீட்டுப் பெண்கள் அவ்வப்போது, சினிமா, கடைத்தெரு என்று செல்வதற்கு, குடியிருப்பை ஒட்டியிருந்த படகர் கிராமத்தையே நம்பியிருந்தனர். அங்கே கடைத்தெரு, காய்கறிச் சந்தை எல்லாம் தோன்றியிருந்தன. நான் அங்கு சென்றிருந்த நாலைந்து நாட்களுக்கெல்லாம், பொறியாளரின் மனைவியர் நாலைந்து பேர் என்னிடம், “மஞ்சூர் போகலாமா?” என்று வினவினர். பத்து நிமிடங்களில் ஏறிச் செல்லும் அந்த கிராமம் அப்போது நீர் மின் திட்டத்தினால் வளர்ச்சி பெற்றிருந்தது. ஓர் உயர்நிலைப் பள்ளியும், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளும் இருந்தன. அப்போது, பிற்பகல் நேரம் நடக்கவோ, சுற்றித்திரியவோ இதமான வெயிலும் இருந்தது. கடைவீதியில் கால் வைத்ததுமே, புதிதாகத் தோன்றியிருந்த துணிக்கடை எல்லோரையும் கவர்ந்தது எனலாம். தேன்மலர் கண்ட வண்டினம் போல இந்த வண்ணக் கும்பல் உள்ளே நுழைந்தது. ஆனால் என்னை ஈர்த்தது வேறோர் இலக்கு. கிளை நூலகம் - மஞ்சூர் - என்ற முகப்புடன் தெரிந்த கட்டிடத்துள் நான் நுழைந்துவிட்டேன். நூலகத்தின் காப்பாளர் போல் தென்பட்ட இளைஞர் எழுந்து நின்று என்னை வரவேற்றார். நூலகத்துக்குள் வேறு ஓர் ஈ காக்கை இல்லை. புதிய அலமாரிகளில் அணி அணியாகப் புதுக்கருக்கழியாத நூல்கள் காட்சியளித்தன. வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால நினைவுகள், ஆறு தொகுதிகளும், ஏ.ஜே.கிரானின் பர்ள்பக், மேரிகாரெல்லி போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் பல படைப்புகளும், நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா, எமர்ஸன் கட்டுரைகள் போன்ற நூல்களும் இடம் பெற்றிருந்தன. தமிழ்ப் பிரிவில் நூல்கள் அதிகமில்லை என்றாலும், டாக்டர் மு.வ.வின் படைப்புகள் என்னை மிகுதியாகக் கவர்ந்தன. நான் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்துக்கொண்டே ஊன்றியிருந்ததில் என்னுடன் வந்த தோழிகளின் நினைவே வரவில்லை. சுமார் ஒரு மணிநேரம் சென்றதும், உணர்வு வந்த நிலையில் நூலகத்தில் உறுப்பினராக ஒரு விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொண்டு படி இறங்கினேன். அப்போதுதான் அவர்கள் என்னைத் தேடிக் கொண்டு வந்தார்கள். “ஏய், நீ இங்கேயா இத்தனை நேரம் இருந்தாய்?” என்று வியப்புடன் வினவிய தோழி, இந்த அணைக்கட்டுத் திட்டத்துக்கு நான் வருமுன்பே நெருக்கமாகப் பழகியவள். கல்லூரிப் பட்டம் பெற்றவள். “இங்கே நல்ல புத்தகங்கள் இருக்கு வரீங்களா?” என்றேன் ஆர்வமுடன். “அப்ப, நீ புடவை, துணிகள் பார்க்க வரவேயில்லையா?” என்றாள் அவள். நான் எனக்கு அதில் சுவாரசியம் இல்லாததால் எதுவும் விடையிறுக்காமல் சிரித்தேன். “You are not at all a Woman!” - (நீ ஒரு பெண்ணே இல்லை!) என்று அவள் கூற மற்றவர் அதை ஆமோதித்துத் தீர்ப்பளித்தார்கள்.
இது நிகழ்ந்து நாற்பத்தைந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் நாட்டிலும் அரசியல் - சமூக அரங்குகள் பெரிதும் மாற்றமடைந்திருக்கின்றன. பெண்கள் முன்னேற்றம் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கின்றது. கல்வி, தொழில், கலைகள் சார்ந்து மிகப் பெரிய முன்னேற்றத்தைப் பெண்கள் எட்டி இருக்கின்றனர். அறிவு சார் உலகை அவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். மருத்துவம், கல்விப் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி ஆகிய பல துறைகளில் அவர்கள் தங்கள் திறமைகளை வியக்கத்தக்க வகையில் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர். காலம் காலமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்றல், சமுதாய வளர்ச்சிக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பெண்ணின் சக்தி, மரபார்ந்த தடைகளுக்குள்ளும், நூற்றாண்டுகளின் அறியாமையில் பதப்படுத்தப்பட்ட மனப்பாங்குகளில் குறுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளும் சிறைப்பட்டிருந்த நிலை மாற்றப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்துகளில் கட்டாயமான மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு பல பெண்களின் போராடும் ஆற்றலையும் ஆக்கப்பூர்வமான படைப்பாற்றலையும் வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
எனினும், இத்துணை வளர்ச்சி - முன்னேற்றங்களும் சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கின்றனவா? வரதட்சினைக் கொடுமை, பாலியல் வன்முறையால் நலங்கள் சூறையாடப்படும் அவலம், பெண்கருவழிப்பு, மிருகத்தனமாகக் கசக்கிப் பிழியும் கொடுமைகள் எல்லாம் அன்றாடம் சமூக அவலங்களாக விரிகின்றன. வறுமைக்கோடு, பெண்ணை மையமாக்கியே மேலே மேலே உயர்ந்து நடுத்தர வருக்கத்தையும் கோட்டுக்குக் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. பெண்ணரசு, பெண் நிர்வாகம், பெண்-காவல் பாதுகாப்புத் துறைத் தலைமை, எல்லாமே, அடித்தளப் பெண்களின் நிலைமையை மாற்றி அமைக்க இயலாத செல்லாக் காசுகளாகவே எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏன்?
பெண்களின் பல்துறை அறிவு சார் மலர்ச்சியும் முன்னேற்றமும் ஆக்கபூர்வம் என்று கணக்கிடுவோம். இந்த மலர்ச்சி, வரவு வருமானம், ஒட்டுமொத்தமான சமுதாய வளர்ச்சியை மேம்பாட்டுக்குக் கொண்டு செல்கிறது. அதேசமயம்,பெண்ணின் ‘நான்’ என்ற சுய உணர்வு, அறிவுசார் பண்புகளில் மேம்பட வேண்டும். அந்தப் பண்புகளில் குறிப்பிடப்பட வேண்டிய தற்சார்பாகிய விடுதலை உணர்வு; துணிவு; தன்னம்பிக்கை, உறுதி ஆகியவையாகும்.
இது ஒரு வகை வழுக்கு மரம்தான்.
இவள் சாண் ஏறுமுன், முழம் சறுக்க, தண்ணீரை அடிக்கிறார்கள்; கவனம் சிதறக் கொட்டலும் கூச்சலும், இழுத்தலும் நிகழ்கின்றன. பெண்ணுக்கு - மையழகு; இடுப்பழகு நடக்க முடியாத சீறடி அழகு, அணிபணிகள், மேலும் மேலும் அழகு சேர்க்கும்; அவளுக்கு நாணம், மூடத்தனம் எல்லாமே அழகு... இத்தகைய அழகுகளாலேயே அவள் மாட்சிமை பெறுகிறாள் - புடவைகள், மேற்பூச்சுகள், அலங்காரங்கள் என்று அவள் தன்னை மையப்படுத்திக் கொள்ளும் கருத்தியலில் இருந்து விடுபடாததால், அவளால் எத்துணை அறிவுசார் வருமானம் பெற்றிருந்தபோதிலும், முற்றிலுமாக அந்த வருமானத்தால் சமுதாயத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர முடியவில்லை. வருமானத்தைத் தேய்த்து மேலும் சுரண்டும் செலவுகளாக உடல்சார் உணர்வுகளைத் துண்டி இழுக்கும் கவர்ச்சிகள் அவளுடைய உண்மையான ஆளுமையை அமுக்குகின்றன. அல்லது அழித்து, தற்கொலைக்கு வழி வகுக்கின்றன. பொருளாதார சுதந்தரமும் பட்டப்படிப்பும் உள்ள பெண், கற்புச்சுருக்கில் கழுத்தைக் கொடுக்கிறாள். உடல் சார்ந்த கற்புக் கருத்தியல் உளவியல் சார்ந்த ஆளுமையை எப்போதுமே அவளை சுருக்குக் கயிற்றுள் வைத்திருப்பதால், பெண் சீண்டலிலிருந்து, அவளை அநுமதியின்றி, உரிமையின்றி ஆள்வது வரை ஆணுக்குச் சாத்தியமாகிறது. ஆணுக்குச் சமமாக மட்டுமின்றி, மேலாகவே பட்டங்களையும் பதவிகளையும் பெற்றாலும், திருமணம் என்ற ஒரு முளையில் கட்டப்பட வேண்டும் என்ற கட்டாயம், வாழ்க்கைக்கு உத்தரவாதமாகிறது.
இந்தக் கட்டாயக் கருத்தியல்களில் இருந்து விடுபடும் சுதந்தர மலர்ச்சி எந்தப் படியிலும் பெண்ணுக்குக் கிடைக்கவில்லை என்பதே நடப்பியல் உண்மை. ‘உடலழகை’ மட்டும் குறிப்பாக்கும், ‘மாடலிங்’ சினிமாத்துறைகளில் இன்றைய இளம் பெண்கள் விட்டில் பூச்சிகள் போல் கவரப்படுகிறார்கள். நவீன விளம்பர உத்திகள், காட்சி ஊடகங்களில், அன்றைய தேவதாசி முறையே சிறந்ததாகக் கருதும் வகையில் பெண் கடை விரிக்கப்படும் சரக்காகப் பரிணமிக்கச் செய்கின்றன.
இந்நாள் கைத்தறித் தொழிலாளரைக் காப்பாற்ற மாணவிகள், ஆசிரியர்கள் எளிய சேலைகளில் பவனி வந்தது பற்றிச் செய்திகள் ஆறுதலளிக்கின்றன. இளம் பெண்களுக்கு, கவர்ச்சித் தூண்டில்களில் மனம் கொடுக்காமல் உறுதி கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பக்குவப்படுத்தும் உரையாடல் பாடங்கள் இடம் பெற வேண்டும். பள்ளிகளில் இருந்தே அழகுப்போட்டிகளுக்குத் தயாராக்கப்படும் அவலம் கண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டு அழகு சாதன வலைகளில் பெண்கள் சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அழகுப் பராமரிப்பு நிலையங்கள், சாதனங்கள் தயாரிப்பு, தொழில் வளமல்ல. பல கோடிகளும், நேரமும் விரயமாகும் தேசிய இழப்பாகவே கணக்காகிறது.
பணிகள், முகப்பூச்சுகள் எல்லாமே அவளை வாணிப சாதனமாக்கித் தீர்ந்திருக்கிறது. அறிவுத்திறமை, சாதனை, பொருளாதார சுயச்சார்பு ஆகிய வண்மைகளை, உடலழகுக் கருத்தியல் சுரண்டிச் சாப்பிட்டுவிடுகின்றன. தனது ‘ஏற்றம்’ என்ற உயர்நிலையில் இருந்து, புதிய நகைகள், சேலைகள், கவர்ச்சிகள் என்ற பளபளப்புக்கு இளைய தலைமுறையினர் வஞ்சகமாக, பள்ளி அழகுப் போட்டிகளில் இழுக்கப்படுவதற்கு எதிர்ப்புக் காட்டுவதில்லை; மாறாக, அது சுதந்தரம் என்று பெருமிதம் கொள்கிறாள். மாடலிங், அழகிப் போட்டி வெற்றி திரை மின்மினி என்ற ஏணிகள் இளைய தலை முறையினரின் அறிவார்ந்த உணர்வுகளையே இருளுக்குள் தள்ளிவிடுகின்றன.
இளமைக்குத் துணிவு உண்டு; வேகம் உண்டு; ஆற்றலும் அதிகம். இந்த ஆற்றல், ஆணிடம் ஒடுக்கி அழிக்கும் ஆற்றலாகவும், பெண்ணிடம் பலவீனமாகவும் வலுப்பெறுகிறது. கலைத்துறையில் திரைக்குப்பின் ஓசைப்படாமல் நிகழும் தற்கொலைகள், கொலைகள், மனிதவள ஆற்றலின் பேரிழப்புக்களாகும். வயது முதிர்ந்தவர் தற்கொலை செய்து கொள்வதில்லை.
காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்தின் போது, தம்மைச் சந்திக்க வந்த பெண்களில் நகையணிந்த பெண்களைக் கண்டால், சிரித்தபடியே கழற்றச் சொல்லி, வாங்கி அரிசன நிதிக்கு ஆதாரமாக்கிக் கொண்டார். சுதேசிக் கதர் ஆரணங்குகளுக்கு ஆடையாயிற்று. இசை போன்ற கலைத்திறமை, மக்கள் மனங்களை இறையுணர்வுடன் இணைக்கும் ஊடகமாயிற்று. அந்நாட்களில் கல்லூரியில் அடி வைத்த பெண், நகைகளில்லாமல், வெள்ளையோ, வேறு பளப்பளப்பில்லாத எளிய நூல் சேலையோ அணிவதை நாகரிகமாக்கினாள்.அந்நாட்களில் சேவைப்பணிகளில் இருந்த மருத்துவர்கள், செவிலியர், உதவியாளர், வெறும் வெள்ளைச் சேலையணிவது வழக்கமாக இருந்தது. சேலை ஓரத்துக் கரைகள், சிறுபூக்கள் அச்சிட்ட தலைப்புகள் மட்டுமே வேறுபட்டன. திருமணங்கள் ஓசைப்படாமல் மனம் ஒத்த இணைதலுடன் சான்றோரின் ஆசிகளுடன் நடந்தேறின.
ஆனால் இந்தக் குறுகிய கால விரதங்கள், சுதந்தரம் வந்தவுடன் பெரும்பாலும் அரசியல்வாதிகளாலேயே உடைக்கப்பட்டன. தொழில்மய, முதலாளித்துவ கலாசாரங்களில் பெண் மீண்டும் ‘துரெளபதை’யாக்கப்பட்டாள். சீதைகளாக அக்கினிப் பிரவேசக் கற்பியலில் நெறிக்கப்படுகின்றனர். வழக்கொழிந்து விடுமோ என்ற அச்சத்துடன் வெள்ளைச் சீலை வைதவ்யமாகிய கைம்மையையும் மீண்டும் மீண்டும் காட்சி ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. இவற்றை எதிர்த்துச் சமாளிக்கக்கூடிய கல்வி, பெண்களுக்குக் கிடைக்கவில்லை.
காலையில் இரண்டு மூன்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு, மாலையில் அவர்களைப் பார்க்க வரும் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர்கள் கண்களைப் பறிக்கும் பட்டுடைகள், நகைகள், அடுக்கு மல்லிகைச் சரங்கள், கனத்த உதட்டுச் சாயம் என்று விளங்குவதை பார்த்துத் திகைக்கிறேன்.
‘நான் வெறும் உடலல்ல - அனைத்து மனித அறிவாற்றல்களுக்கும் உரிமைகளுக்கும் சொந்தக்காரி’ என்ற உணர்வைப் பெண்ணுக்குப் பிஞ்சுப் பருவத்திலிருந்து பதிய வைப்பது, ஒரு தாய், மூத்த சகோதரி, ஆசிரியை, பொதுநலம் பேணும் ஆட்சிபீடங்களில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கடமையாகிறது. ஒவ்வோர் ஆணாதிக்க வேர்களையும் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய வேண்டும். இந்தக் கருத்தியலே, ஒரு தாயைக் கருவழிக்கும், சிசுக் கொலை புரியும் இனவழிப்புக்குத் துணிய வைக்காமல் தடுக்கும்.
- பெண்ணே நீ