புதியதோர் உலகு செய்வோம்/மானுடச் சிறப்பு


5. மானுடச் சிறப்பு


அண்மையில், மூளை வளர்ச்சிக் குறைபாடுடைய சிறுவர் சிறுமியர், வளர்பருவத்தினருக்காக அமைந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் சுயச்சார்பு என்ற இலக்கை எட்டப் பணிபுரியும் ஒருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர் குழந்தையாக, சிறுமியாக இருந்து வளர்ச்சி பெற்று, பெற்றோர் ஆசிரியர் அரவணைப்பிலும் சிறப்புப் பயிற்சியாளர் கண்காணிப்பிலும் மலர்ச்சி பெற்று இப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இவரை நான் குழந்தையாக இருந்த நாளிலிருந்து அறிவேன். குறைபாடு உள்ளவராகவே தெரியாது. வளர் பருவத்தில்தான் சிக்கல்கள் தொடங்கின. சராசரி இயல்புடைய குழந்தைகளைப்போல், மனத்திண்மையுடன் செயலில் ஒன்றி நிலைக்கும் நிதானம் இருக்காது. உணர்ச்சிகள் கட்டுக்கடங்காத எழுச்சிச் செயல்களாக வெளிப்படும். சாதாரணமாகவே குழந்தைகளிடம், காரண காரிய விளக்கம் தேட முடியாது. ஒன்றரை, இரண்டு வயசுக் குழந்தை, கொடுக்க இயலாத ஒன்றைக் கேட்கும். எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை, தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, குண்டு துளைத்து, ஒருவரைக் கொல்லக்கூடிய துப்பாக்கி வேண்டும் என்று அடம் பிடித்தது. ‘அதற்கெல்லாம் லைசன்ஸ் வேணும். உனக்குக் கிடைக்காது’ என்று தந்தை சாக்கு சொன்னார். அவனுக்கு லைசன்ஸ் என்று சொல்லத் தெரியவில்லை. நாள்தோறும் தந்தை அலுவலகத்தில் இருந்து வந்ததும் ‘லைசுஸ் வாங்கி வந்தியா? எனக்கு குண்டு போட்டா, செத்துவிடுற துப்பாக்கி வேணும்’ என்பான். கேப்பட்டாசு வெடிக்கும் துப்பாக்கியைத் துக்கி எறிவான். விரைவில் அந்தப் பருவம் மாறிவிட்டது.

ஆனால், அறிவு வளர்ச்சி பெற்று, தொழில் நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர், யுவதிகள், காதல் என்ற ஒன்றைக் காரணமாக்கி தங்கள் விருப்பத்துக்கு மற்றவர் இணங்கவில்லை என்றால், வெட்டிச் சாய்ப்பதும், மண் எண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதும், அறிவு வளர்ச்சிக்கோ, மூளைத் திறனுக்கோ எடுத்துக்காட்டாகுமா? இன்றைய சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் கொலைகளுக்கும் தற்கொலைக்கும் வறுமை மட்டும் காரணமா? தமது கட்சித் தலைவருக்கு ஏதேனும் ஆபத்தென்றால் தீக்குளிக்கும் தொண்டர்களை உள்ளடக்கிய அரசியல் கட்சிகள், இன்றைய குடியாட்சிச் சமுதாயத்தின் ஆரோக்கிய அடையாளங்களா? ஒரு தொண்டர் விரல்களை வெட்டிக் கொண்டு தியாகம் செய்கிறார். கோபுரத்திலிருந்து குதிப்பதாக அச்சுறுத்துவதும், வன்முறையினால் பொதுமக்களுக்குச் சேதம் விளைவிப்பதும் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளங்களா?

யோசிக்க வேண்டி இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பலம், இத்தகைய வன்முறைத் தொண்டர்களாலும் சிறுபிள்ளைகள் போல ஒருவருக்கொருவர், அறிக்கைகளால் குத்திக் கொள்வதும், மக்கள் தொடர்பு சாதனங்கள் இந்த வகையில் ஊட்டம் பெற்று, வாழ்வாதாரங்கள் சுரண்டப்பட்ட நிலையில் அன்றாடம் போராடும் மக்களைக் குழப்புவதும் ஒரு நாகரிக வளர்ச்சி பெற்ற குடியாட்சி சமுதாயத்துக்குரிய அடையாளங்களா? புரியவில்லை.

நாம் அரசியல் விடுதலை பெற்று ஒரு பொன் விழாக் காலமும், மேலும் ஏழாண்டுகளும் ஓடிவிட்டன. விடுதலைப் போராட்டம், காந்தியடிகளின் வருகைக்குமுன், வளர்ச்சி பெறாத குழந்தையின் செயல்களைப் போல் உணர்ச்சி கரமான குண்டுவீச்சுகளும், வன்முறை, தற்கொலைகளுமாகத்தான் இருந்தது. உணர்ச்சிகளை அடக்கி, மனஉறுதியும், இலட்சியத்துக்கான வலிமையுடனும் அடக்குமுறைகளைச் சாத்துவீகமாக எதிர்நோக்கும் போராட்டத்தைக் காந்தியடிகள் முதன் முதலில் செயல்படுத்தினார்.

அந்நிய நாட்டில், ரயில் வண்டிப் பயணத்தில் தாம் முதல் வகுப்புக்குரிய பயணச்சீட்டை வைத்திருந்தும், நடுவழியில் சாமான்களைத் தூக்கி எறிந்து அவரையும் வெளியேற்றியபோது, தம் ஒருவருடைய தன்மானம் மட்டும் குத்தப்பட்டதாக அவர் உணர்ச்சி வசப்படவில்லை. தாம் பிறந்த இந்திய நாட்டின் மக்கள் சமுதாயத்துக்கே ஊறு ஏற்பட்டுவிட்டதாகச் சிந்தித்தார். வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக, அவர் படைபலம் திரட்டவில்லை. ஆனால், அடிமைகளாக உழைத்துத் தேய்ந்த எழுதப் படிக்கத் தெரியாமல், எதிர்த்துப் பேசத் தெரியாமல், ஒடுங்கிக் கிடந்த, இந்திய மண்ணில் அடி வைத்துக்கூட அறிந்திராத மக்களின் உள்வலியில் நம்பிக்கை கொண்டார்.

உலகிலேயே முதன்முதலான அறவழிப் போராட்டம், வரலாறு பெற்றது. தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்று கைத்தறித் துணிகள் விற்பனை மாளிகைக்கும் பெயரிடப்பட்டிருக்கிறது.

தில்லையாடியைப் பார்த்தேயிராத வள்ளியம்மை, காந்தியடிகளின் உள்ளத்தில் இந்த அறப்போராட்டத்தை நாட்டு விடுதலைக்கான முக்கிய சாதனமாகக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையின் ஆதாரமாகத் திகழ்ந்தாள் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். கைத்தறி மாளிகைக்கு மட்டும் அவர் பெயர் வைக்க வேண்டுமா?

ஆடம்பரமான பட்டுச்சரிகை மாளிகைக்கும் வைக்கலாம். காந்தி பெயரிலோ, இராஜாஜி பெயரிலோ, மதுக்கடையோ, புகையிலை, சிகரெட் சாமான்களோ தயாரித்தாலும் இந்நாட்களில் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. பிரபலமான பெயர்கள், வாணிபம், இலாபம், அவற்றால் ஏற்படும் பொருள் வளம், அரசியல், பதவிகள், அதிகார உரிமைகள் எல்லாமே படிப்படியாக இந்தக் குடியாட்சியில் மக்கள் புரிந்துகொண்டிருக்கும் செய்திகள். எந்த வழியிலும் பெறக்கூடியவை. காந்தி ஜெயந்தி, சுதந்திர நாள், குடியரசு நாள் எல்லாம் விடுப்பு நாட்கள். தொலைக்காட்சியில், புத்தம் புதிய என்ற அடைமொழியுடன் ஒரு வன்முறை, வெட்டு, குத்து, பெண் கூடிய படங்கள் ஒளிபரப்பாகும். தியேட்டர்களில் இளைஞர்களுக்காகவே திரையிடப்படும் படங்கள், கூட்டங்களை இழுக்கும் ஆளுயர விளம்பரங்கள், போக்குவரத்தைத் தடுமாறச் செய்யும். இந்த விடுப்புகளுக்கும் வழக்க நடைமுறைக்கும் தொடர்பே இல்லை. இன்றைய அடையாளங்களில் அந்தப் பழைய சத்தியத்தின் ஓர் இழைகூட இல்லை என்பது பெரும் சோகம்.

பிறப்பினாலேயே அறிவினால் ஞானம் பெறும் சாதியென்றும் ஆளும் சாதியென்றும் அடிமை ஊழியச் சாதியென்றும், போகத்துக்கும் மக்களைப் பெற்றுத் தருவதற்கும் பெண் பிறப்பென்றும், எட்டடிக்கு அப்பால் நின்றாலே தீட்டென்று ஓராயிரம் பிளவுகளையும் பல்வேறு சமயங்களையும், வழிபடு கடவுளரையும், மூடதருமங்களில் பெயர் பெற்ற ஆயிரமாயிரம் சிற்றரசுகளையும் கொண்டிருந்த இந்தத் துணைக்கண்டம், அடிகளின் வரவுக்குப் பின்னரே, காலனியாதிக்கத்தை எதிர்க்கத் திரண்டது.

அவர் திரட்டியது, உள்வலியை சுயநலம் கொன்ற தியாகங்களை; ஆத்மசக்தியை இங்கே ஆதிக்கம் செலுத்திய பகைவன் அழியவில்லை; நண்பனானான். ஆகஸ்டில் சுதந்தரம் பெற்றபோது, நாட்டுப் பிரிவினை நடப்புகள் அண்ணலைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தன. அப்போது, மவுண்ட்பேட்டன் துரை, எலிசபெத் அரசியின் திருமண அழைப்பிதழை, காந்தியிடம் அளித்தார். அண்ணல் மனமுவந்து, “நான் ஒரு பரிசளிக்க விரும்புகிறேன் கொண்டு சேர்ப்பீர்களா?..” என்றார். “இந்த ஏழைப் பக்கிரியிடம் அரசியாரின் மணவிழாவுக்குப் பரிசு கொடுக்க என்ன இருக்கும் என்று பார்க்கிறீர்களா?” என்று நகைத்தார்.

அவர் கையால் நூற்று இரட்டை இழை முறுக்கால் உறுதி செய்யப்பட்ட நூலைக் கொண்டு ஒரு பஞ்சாபிச் சிறுமியினால் குரோஷே ஊசியினால் பின்னப்பட்ட அற்புதமான சால்வை அது. மிக உயரிய பரிசுப் பொருட்களுக்கிடையே, அந்தப் பூச்சால்வையைப் பார்த்த அரசியும், மணாளரும் மனம் உருகிப் பாராட்டி, வியந்து, நன்றிக் கடிதம் எழுதினார்களாம். ‘இதை நான் எந்தப் பொது விழாவுக்கும் எடுக்கமாட்டேன். நெஞ்சோடு வைத்துப் பாதுகாக்கும் மிக உயர்ந்த பரிசாகக் கருதுகிறேன். அன்பின் அடையாளமாக வைத்திருப்பேன்’ என்று ஒரு தடவை மட்டுமல்ல, பல ஆண்டுகள் சென்ற பின்னரும் குறிப்பிட்டாராம்.

அந்த மனிதப் பண்பு, அன்று எப்படிப் பூத்தது?

கத்தியின்றி இரத்தமின்றி இந்த ஒரு சாதனையைச் சாதிக்கச் செய்த அன்றைய இந்திய மக்களிடையே எழுதத்தறியாமை, வறுமை, மூடநம்பிக்கைகள் எல்லாம் இருந்தன. ஆனால் மனித நாகரிகத்தின் அடையாளம், வன்முறை கிளர்த்தும் உணர்ச்சிகளை அடக்கி, உள்வலியைப் பெருக்குவதுதான். அதற்குத் தன்னலம் கருதாது, எளிய வாழ்வில் மேன்மை கண்டு, உடலுழைப் பினால் உண்டு, அறிவினால் மக்கள் சேவை செய்யப் பழகி ஒவ்வொரு மனிதரும் உள்ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உலகமே வியந்தது அந்நாள்.

ஆனால், அன்றைய போராட்ட இலக்கு வேறு. அரசியல் விடுதலைக்குப்பின் அதே ஒற்றுமை, ஆக்கபூர்வ வளர்ச்சிக்குக் காக்கப்பட வேண்டும். அடிகள் தம் இன்னுயிரை ஈந்தும், எந்தத் தலைவரும் பாடம் கற்கவில்லை. இது இந்த ஐம்பத்தேழு ஆண்டு மக்கள் சமுதாய நடவடிக்கையில், வாழ்க்கைப் போராட்டங்களில் பளிச்சிடுகிறது. மண் வறண்டு நீராதாரம் வற்ற, செல்வம் கோடி கோடியாக எங்கோ சேருகிறது. தன்னலம் அழிக்கும் ஒழுக்கங்கள், எதுவுமே இந்த நாள், வருங்கால சமுதாயத்துக்கு உதாரணங்களாக எவரிடமும் இல்லை. ஆடையாபரணங்கள், அலங்கார உரைகள், சொல் வன்மைகள், மாலை மரியாதைகள், வண்ண விளம்பரங்கள், இவற்றைச் சாதிக்கும் திறமை, பணவசதி ஆகியவை எல்லா இளைஞருக்கும் இன்று இலக்காக இருக்கின்றன.

தொழில் நுட்பவியல் படித்துப் பட்டம் பெற்ற ஒரு பெண், காட்சி ஊடகத் துறையில் இருக்கிறாள். பின் ஏன் அந்தத் துறையில் படித்துப் பட்டம் வாங்கினார்கள்? இது வீண்தானே?

“இல்லை, இதில் திறமையாகச் சாதிக்கலாம் என்று வந்தேன்.”

“என்ன திறமை? படம் எடுப்பீர்களா? அல்லது அழகிய முகத்தால், நடிப்பால் பலர் முன் தோன்றிப் புகழ் பெறுவீர்களா?”

புரியவில்லை. ஆனால் அதுதான் இன்றைய இளைஞர் பலருக்கு இலக்காக இருக்கிறது. பன்னிரண்டாண்டுகள் அடைகாத்துப் பொரியும் முட்டைக் குஞ்சுகள், பொறியியல், மருத்துவமென்று, சாளரங்களில் நெருங்கி, நசுங்கி, உள் நுழைந்து, சிறகுபெற, பெற்றவரைக் கடன் பெறச் செய்து, கவலைகளைச் சுமக்கச் செய்து, வெளியே படித்து வர வேண்டும். அவை ஒரு உருப்படியாக சமுதாயத்தை, மண்ணை வாழ வைக்குமோ?

இல்லையேல் மண்ணை உதறிப் பறந்து செல்லுமோ? அற்ப உணர்வுகளில் அழியுமோ? தெரியவில்லை.

அண்மையில் ஆசியக் கோப்பைக்காக இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது, நான் முதலில் குறிப்பிட்ட நண்பர், அதை ஆர்வத்துடன் பார்த்தார். ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. யார் ஆடுகிறார்கள்? இந்திய ஆட்டக்காரர்கள் எப்படி ஆடுகிறார்கள்? என்ற தகவல்களை அப்போதைக்கப்போது இவர் சொல்ல வேண்டும். இந்த விவரங்களை அவரே தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே?

நம் ஆட்டக்காரர்கள் அவர்கள் ஆடும்போது காட்சி பிடிக்கவில்லை என்றாலும், இவர்கள் ஆடும்போது, ஆட்டமிழந்து விட்டாலும், அவரால் அதைத் தாங்க முடியாது. அதனால் நண்பரின் வாயிலாக அதைத் தெரிந்து கொள்கிறார். அதே உணர்வுகளில் இவருக்கும் பாதிப்பு நேரும். முதல்நாள் தோல்வியில் இருந்து மிகக் குறுகிய பரபரப்புக் கட்டத்தில் வெற்றியை இந்தியா தேடியபோது, இரவு முழுதும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஆனால், இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்றபோது, நண்பரின் நண்பர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, வன்முறைக்குத் துணிந்து விட்டார். ‘ஒ, பொருட்களை உடைக்கிறான்’ என்று குடும்பத்தார் இந்த நண்பரிடம் சமாதானம் செய்யச் செய்தி விடுத்தனர். இவரையும் அந்தத் தோல்வி பாதிக்காமல் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் அசீரண உபாதைகளினால் துன்பப்பட்டார். இது, தேசப்பற்றா? அல்லது சிந்திக்கும் திறனில்லாத வெறியா?

இன்றைய இளைய சமுதாயம் ஒருபுறம் தொழில் நுட்பங்களில், நிர்வாகத் திறனில், இந்திய நாட்டின் பெருமைக்குரியவர்களாக, எதிர்கால வல்லரசை நிர்ணயிப்பவர்களாக விளங்குவதாக நம்பிக்கை காட்டப்படுகிறது. நடப்பியலில், புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் சாதனைகள், மனிதப்பண்புகளைக் குதறி எறியும் வாணிபங்களாக அசுர வளாச்சி பெற்றிருப்பதுதான் அன்றாட வாழ்வு உணர்த்துகின்றது.

மனிதம் உய்வதற்கான சேவைத் தொழில்கள் அனைத்தும் ‘ஆன்மிகம்’ உள்பட வாணிபமயமாகி விட்டன.

இந்நாள் கண்களை மூடிக் கொண்டு போட்டிப் பந்தய விறுவிறுப்புடன் பணம், பணம் என்று பயணித்து வந்த சமுதாயம், சிந்திக்கத் தொடங்கும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. ஏனெனில், இந்த இலக்கில்லாப் பயணத்தின் வெறுமை புரிகிறது, இன்று.

ஒரு வள்ளியம்மை, மகத்தான சக்திக்கான ஆற்றல் தந்தாள். அந்த நிலையில் இருந்து, நாட்டு விடுதலையோடு, இந்தியப் பொருளாதாரம், பண்பாடு, மனித வளம் என்ற இலக்கில் ஆயிரங்களில் ஒருவராக அந்நாளைய துர்காபாய் ஒரு முன்னுதாரணமானார். ஆனால், இந்திய ஜன நாயகத்தில் பிறகு சூழ்ந்த தவறான முன்னுதாரணங்கள், கல்விக்கூடங்கள், உடல் கவர்ச்சி, பாலியல் உணர்வுகளைக் கட்டவிழ்த்து, வாணிபம் செய்யும் கூடங்கள் என்ற கருத்தைப் பதிக்கும் சினிமா சின்னத்திரைகளின் நச்சு வளையங்களை அழிக்க இந்தப் புதிய இளைஞர் சமுதாயம் புறப்பட வேண்டும்.

நமது எதிர்கால நம்பிக்கைகள் காப்பாற்றப்பட வேண்டும். வெறி உணர்வுகளைத் துண்டிவிடும் கவர்ச்சிகளைத் தாண்டிச் சிந்திக்கச் செய்ய வேண்டும். இது நடக்குமா என்பது வினாவாக இருக்கலாகாது. நடக்க வேண்டும். மானுடம் சிந்திக்கும் ஆற்றல் பெற்றது. இதுவே மானுடச் சிறப்பு.

அமுதசுரபி, செப்டம்பர் - 2004