புதியதோர் உலகு செய்வோம்/ஆயிரம் காலத்து பயிர் அரக்கன்

15. ஆயிரம் காலத்து பயிர் அரக்கன்

சமகால இந்தியப் பெண்ணின் சமூக வரலாற்றில், அண்மைக் காலங்களில் நம்பிக்கையின்மை என்ற இருள் படர்ந்து விடாதவண்ணம் ஒளிப்புள்ளிகள் தோன்றி இருக்கின்றன. அறிவியலிலும், ஆற்றலிலும் உள்வலியிலும் ஆனுக்குச் சளைத்தவள் அல்ல என்று பல துறைகளிலும் சாதனை படைத்த நாயகியரே இந்த ஒளிப்புள்ளிகள். வடநாட்டில் ஒரு நிஷா சர்மா, தென்னாட்டில் ஒரு வித்யா இவர்கள் முன்னுரை எழுதிவிட்டார்கள்.

மக்களவைப் பிரதிநித்துவத்துக்கான முப்பத்து மூன்று சதவிகிதமானாலும், விவசாயத்தில் இருந்து வீட்டு வேலை, பராமரிப்பு, நிர்வாகம் என்ற பொறுப்புகளுக்கான நியாயமான (பொருள்) மதிப்பும் மரியாதையுமானாலும், போராட்டங்கள் பலனற்றவையாகவே தொடருகின்றன.

இந்தப் பின்னணியில் பெண் கருவழிப்பு, பெண் சிசுக்கொலை, துளிர்க்கும்போதே பாலியல் வன்முறையில் நசுக்குதல், மொட்டாகவே நாரில் தொடுத்து இறுக்கி வாணிபம் செய்தல், மலர்ந்தபின் கைப்பிடிக்குள் அடக்க திருமண நாண் பூட்டி ஒடுக்குதல். இத்தனை கொடுமைகளுக்கும் காரணமாக இருப்பது வரதட்சணை அரக்கனே என்றால் தவறில்லை. அதுதான் நிச்சயமான உண்மை! இந்த அரக்கன் எப்படித் தோன்றினான்?

இந்தியத் திருநாட்டில், வரனுக்கு தட்சிணை கொடுத்து பெண்களை கரையேற்றிவிடவேண்டுமென்ற ஒரு கட்டாய வழக்கம், மேல் வருண சமுதாயத்திலிருந்துதான் தோன்றியது எனலாம். சநாதன வேதம் 'பெண் பூப்படையும் முன் தாலியைக் கட்ட ஒருவனைப் பிடி’ என்று மொழிந்ததாக இல்லை. திருமணம் என்பதே, ஓர் ஆணும், பெண்ணும் இணைந்து சமுதாய மறு உற்பத்திக்கான மக்கள் பேற்றை அடையும் ஒரு சமுதாய ஒழுக்க அடையாளம்தான். பெண் முழு வளர்ச்சி பெற்று, ஆரோக்கியமான மகவைப் பெற்றெடுக்கும் தகுதி யுடையவளாக இருக்க வேண்டும். ‘திருமண அவையில் இந்த வது (முழு வளர்ச்சி பெற்ற) சுமங்கலியாக இருக்கிறாள் பாருங்கள். இவள் கணவன் வீடு செல்கிறாள். வந்து வாழ்த்திச் செல்லுங்கள்’ என்று பொருள்படும் ருக்வேத மந்திரம் இன்று வரையிலும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது (நான் கூறும்) இந்தப் பொருளில் அது சொல்லப்படுவதில்லை. இந்த வெற்றுரை, 'சுமங்கலி’ என்ற சொல்லுக்கு, பூ, பொட்டு, மஞ்சள், குங்குமம், தாலி, மெட்டி, பட்டு என்றெல்லாம் ஜிகினா வைத்து, இவள் கணவனை உடையவள் என்றும், இதற்கு எதிர்ப்பதமாக ‘அமங்கலி’ என்ற ஒருசொல்லை உருவாக்கி அவள் இனிய பிறப்பு நலங்களை உருவிப் போடுவதற்கும் இந்த மேல் வருண சமுதாயம் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது.

பெண்ணுக்கு மணநாயகனைத் தேடும் உரிமை, கல்வி உரிமை எல்லாவற்றையும் மறுக்க, அறியாப்பருவத்தில் அவளை மணமகளாக்குவதையும் கட்டாயப்படுத்தும் வழக்கைக் கொண்டு வந்திருக்கிறது. மணமாகும் முன் பெண் பூப்படைந்துவிட்டால், அந்தக் குடும்பத்தை, தகப்பனை சமுதாயத்திலிருந்து விலக்கப்படுவாள் என்ற அச்சத்தளை பூட்டப்பட்டிருந்தது. அமரகவி பாரதி, அந்தக் காலத்தில் புதுச்சேரியில், இந்த வழக்கை மீறி, துணிவாக, மகள் தங்கம்மாள் பூப்படைந்த மங்கல நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். ஆனால், இந்தச் சமுதாயத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரை, திருமணமாகுமுன் பூப்படையும் பெண்கள் குடும்பங்களில் மன உளைச்சலுக்கும் அழுத்தங்களுக்கும் ஆளாகும் கொடுமைகளே நிகழ்ந்தன.

கறுப்பாகவோ, அழகற்றோ, ஒருபெண் பிறந்து விட்டால், செல்வ வளம் மிக்கவள், அதிகப் பணம், தங்கம், வெள்ளி வரிசைகள் செய்து அறியாப் பருவத்திலேயே அவளை ஒரு வீட்டுக்கு உரியவளாக்கிவிடுவார்கள். அந்த மாப்பிள்ளை கருப்பாக இருந்தாலும், நகரத்திலோ வெளி நாட்டிலோ கல்வி கற்று வரும்போது, இவள் அவன் மனதுக்கு உகப்பாக இருக்கமாட்டாள். தள்ளி வைப்பது, ஜீவனாம்சம் கொடுப்பது, நிராகரித்துவிட்டு வேறு தொடர்புகள் கொள்வது எல்லாமே சகஜம். இளம் விதவைகள் பெருகுவதற்கும் இதுவே காரணமாக இருந்தது.

‘சாரதா' சட்டம் வந்த பின்னரும், சட்டத்தை மதிக்காமல், துணிந்து பன்னிரண்டு வயசில் மகளுக்குத் திருமணம் செய்தவர்கள் பலர். இந்தச் சாதிகளில், மாப்பிள்ளை வீட்டார் இன்றுவரை, தாலிக் கூரை கூடப் பெண்ணுக்குத் தங்கள் பங்காகக் கொடுப்பதில்லை. பெண் வீட்டாரிடமிருந்தோ சகல பொருட்கள், வண்மை வரிசைகளைக் கறந்துவிடுவது ஏற்புடைய வழக்கமாகி இருந்து வருகிறது. பெண்ணைப் பெற்றவர்கள் பாவிகள்.

ஆனால், மற்ற சாதிச் சமுதாயங்களில், மாப்பிள்ளை வீட்டாரே பெண்ணைத் தேடி வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. பெண் பூப்படைதல், மங்கல நீராட்டல் எல்லாம், பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் மகிழ்ச்சி விழாவாகவே அமைந்தன. பரிசம் போடுதல், மாப்பிள்ளை வீட்டிலே திருமணம் போன்ற வழக்கங்கள் பெண்ணையும் பெண் வீட்டாரையும் கெளரவிக்கும் நடைமுறைகள். ஒரு திருமணம் என்பது இரு சாராரும் ஒத்து இசைந்து, சரிபாதி செலவு வரும்படி கெளரவம் செய்யும் நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது. இன்று வரையிலும் தொடர்கிறது.

தாலி, சம்பிரதாயச் சடங்குகள் ஏதுமில்லாமல், “பொன்னைக் கொண்டு வந்து தருகிறோம். பெண்ணைக் கொடுங்கள்” என்று விழையும் தொல்குடி சமுதாயத்திலும், ஒத்துப்போகவில்லையென்றால் வைக்கோல் துரும்பைக் கிள்ளிப் போட்டுப் பிரிந்து செல்வதும், பெண் மறுமணம் புரிந்து கொள்வதும், ‘விதவை’ என்ற சொல்லுக்கே அவள் மீண்டும் மணவாட்டியாவதும் வழக்கமாக இருந்த சமுதாயங்களிலெல்லாம் இந்த அரக்கன் தடம் பதித்துவிட்டான். தந்தையின் சமுதாயமாக இந்திய சமுதாயம் மாற்றம் பெற்றபோது, பிறந்த வீட்டை விட்டுப் புதிய வீட்டுக்குச் செல்லும் அருமை மகளுக்குப் பரிசுகள் அன்புடன் வழங்குவது இயல்புதான். அது சீதனம்.

ஆனால் அந்த ‘சீதனம்’ கட்டாயப்படுத்தப்பட்டு, பெண்ணின் வாழ்வைக் கேள்விக் குறியாக்கும்போது, அது அந்த அரக்கனின் தடம் பதித்த திருவிளையாடல்தான்.

எழுபத்தைந்தாம் ஆண்டில், உலக மகளிர் ஆண்டென்று கொண்டாடினோம். பிறகு பத்தாண்டுகள் சென்று எண்பத்தைந்தில், ஏற்ற இறக்கங்களைக் கணக்கெடுத்தோம். அப்போது ஒரு கூட்டத்தில் பங்கெடுத்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியையான ஓர் அம்மையார், ‘ஸ்டவ்' வெடித்து வரும் இளம் பெண்களின் கருகிய கோலங்களை வர்ணித்தார் கல்லும் கரையும் வண்ணம். திருமணமாகிப் பத்தாண்டுகளுக்குள் இப்படி மரணங்கள் நடந்தால் விசாரணை செய்யச் சட்டம் வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

நமக்குத்தான் எத்தனை சட்டங்கள் இருக்கின்றன? வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ கூடாதுதான். ஆனாலும் பகிரங்கமாகச் சட்டமீறல்கள் நிகழ்கின்றன. ஏன்? திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். பெண்ணின் கழுத்தில் தாலி கிடக்க வேண்டும். அது வேலி, கற்புக்கு ஆதாரம். அவளுடைய படிப்போ, ஆற்றலோ ஏனைய தகுதிகளோ பொருளாதாரச் சுயச்சார்போ அந்தத் ‘தாலியை’ ஈடு செய்ய முடியாது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், முதல் வகுப்பு அதிகார பதவியில் இருந்த தன் மகளுக்கு ஒரு நண்பர் ஒரு லட்சம் செலவழித்துத் திருமணம் செய்தார். “இது கேவலமில்லையா? இப்படி ஒரு திருமணம் செய்யலாமா?” என்று கேட்டேன்.

“என்னம்மா செய்ய? இன்னொருவர் வந்து மேலும் பணம் கொடுத்து, இதே மாப்பிள்ளையைத் தட்டிச் செல்வார். என் பெண்ணுக்கு ‘எமோஷனல் செக்யூரிட்டி’ (ஊணர்வுப் பாதுகாப்பு) வேண்டுமே” என்றார்.

கல்லூரிகளிலும், வரதட்சணை எதிர்ப்பு அரங்குகளிலும், வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சூளுரை செய்த பெண்கள் படித்து முடித்து கஷ்டப்பட்டு கையூட்டுக் கொடுத்தேனும் ஒரு வேலை தேடி சுயசார்பு பெற்றதும், சூளுரை மடிந்து போகிறது. தன் திருமணத்துக்குப் பொருள் சேர்ப்பதில் குறியாக இருக்கிறாள்.

தாலி வேலி என்று வரதட்சணை அரக்கன் இவள் ஆளுமையை ‘துவம்சம்’ செய்கிறான். உழைப்பும், சுயசார்பும் இல்லற வர்க்கங்களில் பெண்ணுக்குக் கல்வியும் பொருளாதாரத் தன்னாற்றலும் இருந்தும் பரம்பரைப்பண்பாட்டில் ஆளுமையைத் தொலைக்கிறான். ஆனால், அவனுக்கும் மேலாக உடலுழைத்துக் கஞ்சி குடிக்கும் குடும்பப் பெண்களின் தற்சார்பையும் வரதட்சணைப் பேய் கபளீகரம் செய்கிறது. இந்த அவலத்திற்கு சுதந்திர அரசால் கொண்டு வரப்பட்டதவறான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் காரணமாகின்றன. கலைநயம் மிகுந்த, கண்களையும் கருத்தையும் கவரும் அற்புதச் சேலைகளை உருவாக்கும் எளிய குடும்பத்தில் ஒரு பெண்ணும் அத்தகைய திருமணச் சேலையை உடுத்த முடியாது. விவசாய உழைப்புப் பெண், உயர் சன்ன ரக அரிசியை வாங்கி உண்ண முடியாது. அவள் கஞ்சிக்குத் தட்டேந்தும் அவலத்தில்தான் நிற்கிறாள் இன்னும்.

தங்கம் விலை கிடுகிடுவென்று உச்ச விலையில் உட்கார்ந்தாலும் வணிக நிறுவனங்கள் - தொலைக்காட்சி ஊடகங்களில் மாடல் பெண்கள் மேனிகளில் கடை விரிக்கும் பொன்னணிகள் பெண்ணின் கனவில் ஆசை வலை விரிக்கின்றன.

காதல் - கற்பு என்ற சொற்களைக் குறிப்பாக்கிக் கொண்டு, பெண் வாணிபத்துக்குத் தோதாகக் கதைகள் பின்னி - திரை ஊடகங்களில் விரசமான பாடல்கள், ஆட்டங்கள் என்று மனித அழகுகளைக் கொன்று பெண்களை விட்டில் பூச்சிகளாக்குகின்றன.

காலம் காலமாக உழவோட்டுவதும், நாற்று நடுவதும், பசுமை காண்பதுமாக இயற்கையோடிணைந்து தாமும் வாழ்ந்து உலகையும் வாழ வைத்த கிராம மக்கள் சமுதாயத்தில், பெண்கள் பல்வேறு கிடுக்கிப் பிடிகளில் வதைக்கப்படுகிறார்கள்.

மக்களுக்கு அவசியமில்லாத பல்வேறு பொருட்களைக் குவித்து சந்தைப் பொருளாதாரத்தில் வாழ்வாதாரங்கள் வற்றிய குடும்பங்களைச் சந்திக்கு இழுக்கும் பொருட்களாக வரதட்சணைப் பட்டியல் விரிகிறது. நாற்பதாயிரம் ரூபாய் வண்டி, கட்டில் - பீரோ, மாப்பிள்ளைக்குச் சங்கிலி, மோதிரங்கள், வாட்ச், தங்கப் பட்டை, பெண்ணுக்கு ஆபரண சவரன்கள், வெள்ளிச் சாமான்கள், அடுப்பு, குக்கர்... இன்னும் என்னென்னமோ..!

இத்தகைய பின்னணியில், வரதட்சணை என்ற பேயைத் தோற்றுவித்து, எந்தச் சட்டத்துக்கும், பெண்ணின் மேன்மைகளுக்கும் சாகாத சிரஞ்சீவிபோல் சமுதாயத்தில் வளர்த்துவிட்ட குடும்பங்களின் பிரதிநிதிபோல் பெண், ஓர் ஒளிப்புள்ளியைக் குத்தி, 'திருமணம்’ என்ற அலங்கார பலூனை வெடிக்கச் செய்து இருக்கிறாள். இது அழுத்தங்களின் உச்சக்கட்டத்தில் சிதறிய ஒளிப்புள்ளியானாலும் இத்தகைய புள்ளிகளைச் சமூகம் பொழுது போக்குக்காகக் கிடைத்த அவல் போல் மெல்லுவதுடன் நிற்காமல், வரதட்சணைப் பேயை வீழ்த்தப் பல முனைகளிலும் ஆண் பெண் அணிதிரண்டு புதிய வாழ்வுக்கான போராட்டத்தைத் தொடங்குவதற்கான உந்து சக்தி என்று அடையாளம் காண வேண்டும்.

(ஏற்கனவே, நிஷா சர்மாவைக் குறித்து 'அரக்கன்’ விடுத்த ஏவுகணைச் செய்தி ஒன்று பத்திரிகையில் வந்துவிட்டது. அரக்கர்கள் மாயாவிகள் என்பது புராண மரபு)

எனவே பெண்ணே, நீ உறுதியாயிரு. முன் வைத்த அடியைப் பின்னிழுக்காமல் அணிதிரண்டு போராடலாம்.


‘பெண்ணே நீ’,
ஆகஸ்ட், 2003