புதியதோர் உலகு செய்வோம்/பற்றிப் படரும் ’பற்றுதல்’

14. பற்றிப் படரும் ‘பற்றுதல்’

‘மனத்தை அலையவிடும் மாந்தர் பற்றுதலுக்கு இடம் கொடுக்கின்றனர்; அந்தப் பற்றுதல் ஆசைக்கு இடமளிக்கிறது. ஆசையினால் சினம்; சினம் குழப்பத்துக்குக் காரணமாகிறது. குழப்பத்தின் விளைவு தெளிவின்மை. அத்துடன் அறிவு தொலைகிறது. பிறகு அழிவுதான்’ என்பது கீதை உரை.

‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற வள்ளுவர் வாக்கும் இதையே சுருக்கமாக உரைக்கிறது.

‘பற்றுதல்’ என்ற சொல், மனிதருக்குரிய ஒழுக்க நெறி அனுமதிக்காத ‘பற்றுதல்’ என்ற பொருளில் இந்த இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. இயற்கை வகுத்த தடத்தோடு வாழ்க்கையில் புலனின்பங்கள் எல்லாவற்றையும் மனிதர் துறந்துவிட வேண்டும் என்று இவ்வுரைகள் குறிப்பிடவில்லை. ஏனெனில் துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே மேலானது; அது இன்றியமையாத சமுதாய ஒழுக்கம் என்பதை வள்ளுவர் வாக்கே, ‘துறந்தார்க்கும் துவ்வாதவருக்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான்துணை’ என்று அறிவுறுத்துகிறது. எனவே, ‘பற்றுதல்’ என்பது, ஒருவரின் மனச்சான்றை மழுங்கடிக்கும் வகையில் உள்ளே நுழைந்து வலிமை பெறக்கூடிய தீமை அதற்கு இடம் கொடுத்தால் பேராசை என்ற பெருங்காற்று வீச, அது விரைவில் மனிதத் தத்துவத்தையே சுட்டுப் பொசுக்கிவிடும் என்று எச்சரிக்கையாகக் குறிப்பிடப்படுகிறது.

தன்னலமற்ற அன்பு பாராட்டி அனைவருடனும் பகை இல்லாமல் வாழ வேண்டும் என்று அக்காலத்தில் கதைகள் வாயிலாக இந்த நெறி சிறுபிராயத்திலிருந்தே அறிவுறுத்தப்பட்டது. நாம் இப்போது புத்தாயிரம் என்ற நுழை வாயிலுக்கு வந்துள்ளோம். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், மனித நாகரிகம் பல்வேறு வகைகளில் மாற்றமடைந்து வந்திருந்தும், வாழ்க்கைச் சாதனங்களும் தேவைகளும் பெருமளவுக்கு மனித சமுதாயத்தைப் பாதித்திருந்தும் தன்னலமற்ற அன்பு பாராட்டுவதுதான் மனிதர் வாழ்வியல் நெறியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் எந்த வகையான மாற்றமும் வந்துவிடவில்லை.

அதுவும், உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி வாழ வேண்டும் என்ற இலட்சியத்தைக் கைக்கொண்டு வாழ்ந்த ஆன்றோர், எக்காலத்தும் 'பற்றுதல்’ என்ற சிறு பொறி உள்ளே நுழைய ஊசி முனையளவு இடமும் கொடுக்கலாகாது என்று தங்கள் வாழ்வின் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளனர்.

நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த காந்தியடிகள், நமது வாழ்வில், ஒரு மகத்தான திருப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதுதான் நம் அரசியல் விடுதலை இது காறும் உலக வரலாற்றில் இல்லாத வகையில் போரும் பகைமையும் இல்லாமலேயே அஹிம்சை, அன்பு என்ற பாதையில் நம்மை ஈடுபடுத்தி, அந்த வெற்றியை நமக்களித்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவர் விடை பெற்றபோது அங்கிருந்த இந்தியச் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணிக்காக விலையுயர்ந்த பரிசுகள் காந்தி தம்பதிக்கு அளிக்கப் பெற்றன. அதுவரை அவர்களிடம் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த அணிமணிகள் இருந்ததில்லை. காந்தியடிகள் இரவு முழுவதும் உறங்கவில்லை. பின்னர், அந்த விலை உயர்ந்த பரிசுகளைக் கொண்டு, தென்னாப்பிரிக்க இந்திய சமூக மேம்பாட்டுக்கு ஒரு நிதியமைக்க முடிவு செய்தார். ஆனால் அன்னை கஸ்தூரிபாவுக்கோ அந்தப் பரிசுகளில் இருந்த ஒரே ஒரு வைரமாலையையேனும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அண்ணலோ அது, சமுதாயப்பணிக்காக அளிக்கப்பட்ட கொடை என்று பிடிவாதமாக மறுத்தார். ‘நமக்கு இல்லாவிட்டாலும், நாளை மகன்கள் திருமணத்துக்கு அது உதவும் அல்லவா!’ என்றார் அந்தப் பேதை, ஆனால் காந்தியடிகள் அந்த ஊசிமுனை இடத்தையும் அழுத்தமாக அடைத்துவிட்டார்.

ஆனால், எந்தப் பற்றுதலுக்கு இடம்கொடுக்கலாகாது என்று நூற்றாண்டுகளாக ஆன்றோரும் சான்றோரும் எச்சரித்திருந்தார்களோ, அந்தப் பற்றுதல் இந்நாள், குஞ்சு குழந்தையிலிருந்து, ஆண்,பெண், முதியோர், ஏழை, பணக்காரர் எல்லோரும் மனமுழுதும் ஆக்கிரமிக்க இடம் கொடுத்திருக்கின்றனர்.

‘லட்சம், கோடி, தங்கம், போக சாதனங்கள்’ என்று புலனின் பங்கள் கட்டவிழ வெறிபிடிக்கும் நிலையில் சமுதாயம் பரபரத்து அலை பாய்கிறது. இந்த நோக்கில்தான் மூளை, அறிவு, ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம், கொலை, கொள்ளை எல்லாம் வளருகின்றன. இடை இடையே சிறிது ஊறுகாய் போல், சத்தியங்கள், காந்தி, வள்ளுவர், புத்தர், இயேசு, பாரதி, ஸத்குரு தியாக ப்ரும்மம்... என்ற வழிபாடுகள்!

காந்தியுகத்தில் அரிச்சந்திர நாடகமோ, கிராமிய நீதிக்கதைகளோ நாடோடிப் பாடல்களோ, மக்களின் கலைவடிவங்களாகவும் தொடர்புச் சாதனங்களாகவும் திகழ்ந்தன. அந்நாள் அச்சாதனங்களுள் சாம்பலுக்குள் நெருப்புப் பொறி போல் போற்றிக் காத்த சத்தியத்தை இன்றைய மேலாம் தொழில் நுட்பங்கள் விழுங்கிவிட்டன. இந்த நூற்றாண்டில் நம்பிக்கையுடன் தலைகாட்டும் அரும்புகளும் பிஞ்சுகளும், இந்தச் சூழலில் எத்தகைய ஊட்டத்தைப் பெறுகின்றனர் என்பதைச் சிந்தித்தால், நம்பிக்கை இருண்டு போகும் அபாயமே தென்படுகிறது.

பழனிமலை முருகனைச் சிரமமின்றித் தரிசிக்க, ஓர் ஏறு தொட்டில் சாதனம் அமைக்கப்பட்டபோது, எனக்குத் தெரிந்த ஓர் அம்மையார், ‘இது தப்பு.’ என்றார். அதற்கு அவர் சுட்டிக்காட்டிய காரணம், இன்று சிந்திக்கக்கூடிய தாக இருக்கிறது. முருகனும், ஐயப்பனும், இன்னும் பல தெய்வங்களும் காடுகளிலும் மலையுச்சிகளிலும் ஏன் இடம் பெற்றிருக்கிறார்கள்? தமக்குத் துன்பங்கள் வரும்போது இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ செய்த பாவங்களின் பயனாகவே அவை வந்தன என்று மாந்தர் நம்பினர். அப்பாவத்துக்குக் கழுவாய் தேடி தெய்வங்களைச் சரணடைந்தனர். நேர்த்திக்கடன் செலுத்த, தம் அகம் கரைய, மனம் ஒரே நிலையில் தெய்வ சந்நிதியில் ஒன்றுபட, உடல் நோக அத்தெய்வங்களின் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வந்தனர். மலை மீது ஏறும்போது உடல் மெலிந்து, நோவு தெரியாத வகையில் உள்ளம் இறையுணர்வில் ஒன்றுபடும். அவ்வாறு இறை சந்நிதியை எட்டாமல் சரணடைந்தாலோ, முக்தி என்று ஆறுதல் கொண்டனர். ஆனால், இந்நாளைய வசதிகள், இந்தத் தல யாத்திரைகளை 'உல்லாசப் பயண'மாக்கிவிட்டன. தெய்வ உணர்வு என்ற துண்டிலில் மக்களை மாட்டி, தங்கள் வருவாய்த் துறைக்குப் பணம் சேர்ப்பதில் மாநிலத்துக்கு மாநிலம் போட்டி நிலவுகின்றது. இதில், மக்களின் அறியாமை, வறுமை இரண்டும் என்றும் எந்நாளும் காப்பாற்றப்படும் சூக்குமமும் இருக்கிறது. காடுகள் நிறைந்த இயற்கைச் சூழல்களின் அழிவு ஆறுகளில் சேரும் அழுக்குகள்; மண் சீரணிக்க இயலாத குப்பைகள்; இடைவிடாத வண்டி வாகனங்கள் உமிழும் நச்சுப் புகைகள், புனித யாத்திரைத் தலங்களில், தன்னலமற்றவராக யாத்திரைக்கு வந்தவர்களுக்கு உதவும் தொண்டுப் பணிகள் எல்லாம் சொகுசு விடுதிகள் அமைத்துப் பொருள் கறக்கும் தொழில்களாக மாறிய அவலங்கள். அரசுக் கட்டிலில் அமர்ந்தவர்கள் தெய்வ தரிசனத்துக்கு வரும்போது, தெய்வங்களே திரைக்குப்பின் தள்ளப்பட்டு, அரசுத் தலைகளே வணக்கத்துக்குரிய இடங்களைப் பற்றிக் கொள்ளும் நடப்பியல் தரிசனங்கள். இப்படியெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

‘மக்கள் தொகையோ' அரசியல் கட்சிகளுக்கு வாக்கு வங்கிகள்! அந்த வங்கிகளில் தங்கள் செல்வாக்கைப் பதிக்க ஒவ்வொரு அரசியல்வாதியும், சார்ந்த கட்சியும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பல்வேறு விதங்களில் செயல்படுகிறார்கள். அரசியல் கட்சிகளுக்கென்று இருந்த இலட்சியங்களும் கொள்கைகளும் தொலைந்து வெகுநாட்களாயின. ஆட்சியில் இருப்பவர், அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் இல்லாதவர், அதைக் கவிழ்த்துத் தாம் அந்தப் பீடத்தில் அமரவேண்டும் என்பதுதான் இப்போது முக்கிய இலட்சியக் கொள்கை!

விழாக்கள் இந்த முயற்சிகளில் முதன்மை இடம் வகிக்கின்றன. அரசு சார்ந்த கட்சி எதையும் விழாவாக்கி ஆதாயம் தேடமுடியும். ஆனால், ஏனைய கட்சியினர், கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்களிடம் தீவிரமான ஈடுபாடும் அக்கறையும் தங்களுக்கு உண்டு என்று தெரிவித்துக் கொள்ள, புகழ்வாய்ந்த ஓய்வுபெற்ற அரசுத் துறை அல்லது வேறு தொழில் வல்லுநரைத் தங்களுக்குச் சாதகமாக அழைத்துக் கெளரவிப்பார்கள். இந்த எல்லா விழாக்களிலும் முக்கியமாக பொன்னாடை போர்த்துவதும் நினைவுப் பரிசென்று வழங்குவதும் சடங்கா சாரங்கள்! இந்த விழாக்களில், கட்சித் தலைவர் கடவுளைப் போல் புகழப்படுவார்; விருந்தினருக்கும் புகழ் மாலைகளுண்டு.

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில், கட்சி சார்ந்த தலைவர், துணைகள், பெருந்தலை, சிறிசு என்ற வரிசைக்கிரமப்படி பளபள பொன்னாடை, பட்டாடை, பருத்தியாடை, துவாலை என்று போர்த்தப்பட்டன. விருந்தினர் தமக்கும் ஒரு சால்வையேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு, கண்ணாடியோ, பிளாஸ்டிக்கோ - பேழைக்குள் ஓர் உருண்டை என்னும் நினைவுச்சின்னமே வழங்கப் பெற்றது. அந்தப் பெரியவர், உலகப் புகழ்பெற்ற தொழில் வல்லுநர், செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் குறைவில்லாதவர்; தாம் உரையாற்றுகையில், “வயதான எனக்கும் இந்தக் குளிருக்கு இதமாகப் போர்த்திக்கொள்ள சால்வை ஏதேனும் கிடைக்கும் என்றிருந்தேன்; நினைவுப் பரிசுடன் நிறுத்திவிட்டனர்” என்று மறைமுகமாக, ஏமாற்றத்தைக் கேலி போல் குறிப்பிட்டார். 'பற்றுதல்’ யாரை விட்டது?

ஸத்குரு தியாகப்ரும்மத்தைத் தஞ்சை மன்னர், அவைக்கு அழைத்து வர ஆள் அனுப்பியபோது, அரச போகங்களில் திளைத்து மமதைகூடிய நரஸ்துதி செய்வது சுகமா? எனது இஷ்ட தெய்வமான ராமநாமத்தை பஜனை செய்து இன்புறுவது நலமா என்ற பொருளில் பாடிய ‘நிதிசால சுகமா' கீர்த்தனையை அறிந்திராத கர்னாடக இசைக் கலைஞர் எவருமில்லை எனலாம். ஆனால் அந்த நாதப்ரும்மத்தின் ஆராதனை விழாவில், வரவேற்பாளராகிய அருங்கலைஞர், ஒவ்வோர் அரசியல் பெருந்தலைகளையும், மகாவிஷ்ணுவாகவும், இராமச்சந்திர மூர்த்தியாகவும், கணபதியாகவும், பரமசிவமாகவும், சரஸ்வதி தேவியாகவும், இலட்சுமியாகவும் மாற்றிப் புகழ்ந்ததை என்னவென்று சொல்வது? பொன்னாடை பட்டாடை நினைவுப்பரிசில்களின் தரப்பட்டியல் பற்றிச் சொல்ல வேண்டுமா?

'பற்றுதல்' பற்றிய கீதை உரையும், வள்ளுவர் வாக்கும் ஓடி ஒளிந்து கொண்டன!


‘தினமணி’
31.1.2001