புதியதோர் உலகு செய்வோம்/நச்சுக்கனிகளை அகற்றுவது எப்படி?


13. நச்சுக்கனிகளை அகற்றுவது எப்படி?

பெண் கருக்கொலையை ஒழிக்க சமய பீடங்கள் ஒருங்கிணைந்து இயக்கம் காண விழைவதாகச் செய்தி வந்துள்ளது.

பெண்ணாகப் பிறந்தவள்’, ‘பொம்மனாட்டி என்று பெண் குறிக்கப்படுவதுபோல், ஆணாய்ப் பிறந்தவன்’ என்று ஆண் சொல்லப்படுவதில்லை. அவனை யாரும் ஆளப்படுவதற்குரியவனாகக் கருதுவதும் இல்லை.

மனித மதிப்பையும் உழைப்பு மதிப்பையும் கல்வி மதிப்பையும் அறிவாற்றலுக்குரிய மதிப்பையும் இழந்து பொன்னும் பொருளும் நுகர்பொருள்களின் குவிப்பும் இணையக்கூடிய வெறும் உயிர்க்கூடாகப் பெண் மாறி விட்டதற்கு சமயங்களே காரணம் என்றால் அதுதான் மெய்.

மேல் வருணத்தின் பிடிகளுக்குள், பட்டுத்துணிப் புழுதிக்குள் பொதிந்திருந்த வேத-தரும-சாத்திரங்கள் இந்நாட்களில் அறிவியல் தகவல் தொழில்நுட்பக் கட்ட விழ்ப்பில் எங்கே, என்ன, ஏன், எப்படி என்ற ஆராய்ச்சிக் கண்களைத் திறக்கச் செய்திருக்கின்றன. அறிவியல் தொழில்நுட்பக் கலைகளில் ஆண்களை விடப் பல மடங்குகள் தம் திறமையை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

எந்த மேலாண்மைக்கும் ஆண்கள் நியாயம் காண முடியாது. என்றாலும், திருமணம் என்று வரும்போது “நீ ஒரு மனைவியாக உன் கடமையைச் செய்ய முடியாது. என் உணவு, சுகவாழ்வுத் தேவைகளைக் கவனிக்க உன் ஆற்றல் தடையாக இருக்கும்” என்று தவிர்க்கிறான். காரணம், ஆதிக்க சமயமரபுதான்.

தொழில்துறையில் வெற்றி கண்ட ஓர் ஆண், அதே திறமையுடைய பெண்ணின் ஆளுமையை ஒத்துக் கொள்வதில்லை. இவன் அமெரிக்காவில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் ஆதிக்க மரபு ஓடிக் கொண்டிருக்கிறது. அவன் எல்லாச் சடங்குகளையும் விட்டாலும் இந்த மரபு மாயாமல் இருக்க ‘உயிர்த்தண்ணி’ வார்ப்பவர்கள் சமயபிடங்களே.

“பத்மாவதித் தாயாரின் தாலி வீழ்ந்ததாம்; போய் தாலியைப் பத்திரமாகப் புதிப்பித்துக் கட்டிக் கொள்ளுங்கள்” என்று எவரேனும் ஒரு வதந்‘தீ’யைப் பரப்பினால் இந்தியப் பெண் டிம்பக்டுவில் இருந்தாலும் தாலி காக்க ஒடுவது ஏன்?

பெண் ‘சம உரிமை’ என்ற ஒன்றை நினைக்கவும் ஆகாது; மலையில் வளர்ந்தாலும் உரலில் மசிய வேண்டும். ஒருவனின் தாலியைக் காலா காலத்தில் சுமந்து அவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் ஊழியம் செய்து, குலம் விளங்க ஆண் மக்களைப் பெற்றுத் தந்து அவன் மரிக்கு முன் இவள் பூவும்பொட்டுமாக வானுலகமேகி அவனை வரவேற்றுப் பணிபுரிய வேண்டும்.

இந்த நியதிகளில் ஒன்று முரணானாலும் அவள் வாழ்க்கை பதர். கன்னியாக இருக்கலாகாது; வாழை மரத்தை வரித்து, தாலியணிந்து அதை வெட்டி, தாலியெடுத்து தரிசு மண்ணாகக் காலம் கழிக்க வேண்டும். பெற்ற மக்களை நடுத்தெருவில் விட்டாலும் அவன் தந்தை, ஆதிக்கம் செலுத்துவான்.

குமரப்பருவத்தில் துரோகமிழைத்து தாலியை உருவிக் கொண்டு குரூரங்கள் இழைத்தாலும் அவன் கணவன், அவனுக்கு உட்பட வேண்டியது தருமம். இவளுக்கு வரும் ஓய்வூதியமோ எதுவோ பெற, மகன் கள்ளக் கையெழுத்துப்போட்டு வஞ்சித்தாலும் அவனை அரவணைக்க வேண்டும். அவன் மகன்!

“புருசன் அடிச்சுக் கொல்லுறான்மா” என்று காவல் துறைப் பெண் அலுவலரிடம் குற்றம் சொல்ல வந்தால், “புருசன்தானேம்மா அடிச்சான்; இது புகாரா?” என்று அலுத்துக் கொள்வார் அவர். அவரே புருசனிடம் ‘மரியாதை’ பெற்று வந்திருக்கலாம்.

குடிசையில் இருக்கும் குமரியில் இருந்து கோமகள் வரையிலும் பெண்ணுக்குரிய பருவத்தில் திருமணம் நிகழவில்லை என்றால், அவளுக்கு உணர்வுரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் பாதுகாப்பு இல்லை.

பெண் சிசுக் கொலைக்குப் பேர் போன ஓர் ஊரில் ஒரு பெண்மணி, பொட்டபுள்ள பத்துவயசில சமஞ்சு நிக்கும். பொண்ணு சமஞ்சா ஆணுக்குத்தான்னு பாடி வச்சிருக்காங்களே! எவனேனும் தொட்டுத்தொலச்சா என்ன செய்ய? அது அப்புறம் நஞ்சரைச்சிக் குடிக்கும். இப்பவே அது கண்ணு மூக்கக் காட்டு முன்ன, ஒரு நெல்லயோ துளி பாலயோ ஊத்திக் கதய முடிச்சிடனும்’ என்று கூறினாள்.

இந்தத் தொட்டுக்குலைக்கும் சமாசாரம் ஆண்களுக்கு விளையாட்டு. தொலைக்காட்சித் தொடர்களின் வண்ண விசித்திரமாய் தந்திரங்களில் இது களிப்பூட்டும் அம்சம். பெண்...?

அந்த நாசகாரன், சாதி, மதம், நிபந்தனைகள் பூதங்களாய் நிற்கும். உட்பட்டாலும் அந்தப் பெண் நெடுநாள் வாழாது.

அடுத்து, அன்றாடம் உணவுக்கு நெருப்பு மூட்டும் பெண், அந்திமத்தில் தாய்க்கோ தந்தைக்கோ எரியூட்டத்தகுதியில்லாதவள் என்று சமயசாத்திரம் கற்பிக்கும் அநியாயம்!

கணவனின் உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு ஆண்மகவைப் பெறாத மனைவியைச் சமயக் குருக் கொழுந்துகள் நடத்தும் அநாகரிகங்கள் சொல்லுக் கடங்காதவை. துயரச் சூழலில் அந்தத் தாய், ஊமையாகிப் போவாள்; செயலற்றுப் போவாள்.

எனவே, வயிற்றுக் கரு பெண் எனத் தெரிந்தவுடன் கலைத்துவிடத் துணியும் தாய்மாரின் மனநிலையை, சமயபீடத்தில் இருந்து அருளுரையும் ஆசி அறிவுரையும் நல்குபவர்களால் புரிந்து கொள்ள முடியுமா?

‘பெண் சமஉரிமை பேசலாகாது’ என்பது ஆதார சுருதி என்று முழங்கும் சமய மரபு, அவன்மீது என்றும் குற்றம் காண்பதில்லை. ‘ஆடவன் தொடுவான்; குலைப்பான். இவளே அடங்கி இருக்க வேண்டும்.’

‘வேலைக்குச் செல்லும் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேரும் ஒழுக்கம் காக்காதவர்கள்’ என்று (அ)யோக்கிய சிகாமணிக்களுக்குச் சான்றிதழ் வழங்கும் குருபீடங்கள், இவர்கள் ஊன்றி வளர்த்த வேரில் இருந்தே கிளைத்துச் செழித்திருக்கும் பெண் சிசுக்கொலை, கருஒழிப்பு போன்ற நச்சுக்கனிகளை எப்படி அகற்றப் போகின்றன?

பெண்ணின் நல்வாழ்வுக்கான வாயில்களை, பல்வேறு தடைகளால் அடைத்த பின், சுற்றிக் கிளைத்தெழும் பூண்டுகளை எப்படி அகற்றப் போகின்றனர்?

‘தினமணி’
28-5-2001