புதியதோர் உலகு செய்வோம்/பெண் மொழி

6. பெண் மொழி

பெண் எழுத்து, அல்லது மொழி, அக்கினிப் பிரவேச கட்டத்துக்கு வந்திருக்கிறது. பெண் மொழி, உடல் சார்ந்த உடல் மொழியாகவே இருப்பதால் ஆபாசம் என்ற கூக்குரலும், எங்கள் உடல், எங்கள் உணர்வுகள், எங்கள் எழுத்துரிமை என்ற எதிர்க்குரலும் செக்குமாட்டு வாழ்வில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “சமுதாயம் பாழ்பட்டுப் போகும். உங்கள் உரிமைகளுக்கும் எழுத்துகளுக்கும் எல்லைகள் உண்டு. அடங்கு அல்லது அடக்குவோம். வெட்டு, குத்து, எரியூட்டு” என்பன போன்ற ஆத்திரவெடிகளும் “ஆண்டாள் எழுதவில்லையா அல்லது மீரா எழுதவில்லையா” என்ற அடங்கிய எதிர்க் குரல்களுமாக அரங்குகள் கலகலத்தன.

இந்தப் பெண் மொழி என்பதோ உடல் மொழி என்பதோ இத்தனை நாட்களில் புரிந்திருக்கவில்லை. பெண் எழுத்து என்பதும் கற்பு மீறிய எல்லைகளைத் தொடலாகாது என்ற நடப்பியல் இப்போது புரிகிறது. இந்த உடல் மொழி (அல்லது பெண் மொழியை ஆராய்ந்து பார்த்தால், அது பெண்ணுடல் சார்ந்த போகம் தொடர்பான சொற்களை வைத்துக் கட்டிய இலக்கியம் என்பதாக இருக்கிறது). ஆண் இத்தகைய படைப்பை உருவாக்கினால், அது ‘அற்புதப் படைப்பா’கிறது. பெண் இப்படி ஒரு படைப்பை உருவாக்கினால் அது ‘ஆபாச’மாகிறது.

நாயக நாயகி பாவம் என்ற அலங்காரங்களில், பெண் போகமே செய்தியாகும். இங்கே பெண், போகத்துக்கான உடற்கூற்றினால் மேன்மை பெறுகிறாள். காலம் காலமாகப் பெண், ஆணுக்கு அனுபவிப்பதற்குரிய சாதனமாகவும், வமிசம் தழைக்க ஓர் ஆண், அல்லது பல ஆண் மக்களைப் பெற்றுத்தரும் கருவியாகவும் மட்டுமே நெறிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறாள். இவளுடைய அறிவுக்கண்ணும் சிந்தனைத் திறனும் இந்த உடல் கருத்தியலால் குருடாக்கப்பட்டு, பொது மகள், குலமகள் என்ற கற்பு வட்டத்தில் சுழலும் செக்கு மாடாக்கி இருக்கின்றன. பழங்காலத்தில் எண்ணெய்ச் செக்கை இழுக்கச் சூழலும் மாடுகள், எள் நெய்ப் பிண்ணாக்கு மணம் வாசம் மூக்கிலேற, வட்டம் விட்டு மிரள முற்படும். சுளீரென்று சாட்டையடி விழும். மாடு தலைகுனிந்து தன் வட்டத்தைத் தொடரும். இதுவே பெண்ணின் நிலைமை.

இந்த உடல் மொழியை, தாயின் வடிவ ஆராதனைத் துதிப்பாடல்களிலும் காணலாம். துறவியரின் ஆக்கமாக, தாய் வடிவ ஆராதனையானாலும் பெண்ணுடல் அங்கே பவித்திரமாகிறது. இன்னொரு வகையில், பெண்ணுடலின் போகங்கள் அணுஅணுவாக விரிந்து, காமச் சேற்றில் ஒர் ஆணை அழுத்தும் நரகாகவும், அந்தக் குழியில் இருந்து இவரை மேலேற்றிவிட்டு குமரனின் பெருங்கருணையில் முடிவு பெறும். அந்தப் பெருங்கருணையை விளக்க, அத்துணை இழிவுகளைப் பெண்ணுடலம் சுமக்கும்.

இதுபோல் தம் கவித்திறனைக் காட்ட எந்தப் பெண்ணும் துணிந்ததில்லை. மாறாக, தம்மை அழுத்தி இழிமைப்படுத்தும் கருத்தியலை மனமுவந்து ஏற்றவர்களாக, அதே பாடல்களை இவர்களும் பாடிப் பரவசமெய்தினார்கள்.

ஆண்டாளும், மீராவும் அக்கமாதேவியும் துணிச்சலானவர்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டாலும், ஒரு சிலர், தமிழில், ஆண்டாளின் புனிதத்துவத்தைக் காக்க, அந்தப் பாடல்களைப் பாடியவர், பெரியாழ்வார் தாம் என்றும் கருத்துரைத்தார்கள்.

தஞ்சை மன்னர், புலவரவையை அலங்கரித்த முத்துப் பழனியம்மை, இந்தப் பெண் மொழியைக் கையாண்டு பாடல் புனைந்தார். அப்போதைய அவைப்புலவர்கள் அதை ஏற்று, அவருடைய கவித்திறனையும் புலமையையும் பாராட்டி மகிழ்ந்தார்களாம். ஆனால் ஒரு நூறு ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. ஆங்கிலேய அரசில், சமூக தருமங்களின் பாதுகாவலர்களாக விளங்கியவர்கள், முத்துப்பழனியம்மையின் பாடல்களுக்குத் தடை விதித்தனர். ஆனால், அதே தேவதாசி மரபில் பின்னர் வந்த நாகரத்தினம் அம்மாள், முத்துப்பழனியம்மையின் பிரச்சினைக்குரிய பாடல்களைத் தேடி அச்சிட்டபோது, கைம்பெண் மறுமணத்துக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அரும்பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதியான வீரேசலிங்கம் பந்துலு தீவிரமாக எதிர்த்தார். அப்பாடல்களுக்குத் தடை கோரினார். ஏன்? என் உடல், என் உரிமை, என் வாழ்வு என்ற கோட்டில் போராட்டக்காரியாக விளங்கிய நாகரத்தினம் அம்மாள், தேவதாசி ஒழிப்புச் சட்டத்தையே எதிர்த்தார்.

இந்த முரண்பாடு ஏன்?

ஒரு பெண்ணின் ஆற்றலை, அவள் இயக்கத்தை, உடல் உடலே என்ற கருத்தியலில் முடக்கலாகாது என்ற இலட்சியத்தை எட்டுவதற்குரிய, போராட்டத்துக்குரிய வழிகளே அவை. இரண்டு தடங்களிலும் அவள் பத்திரமாக முன்னேறவில்லை. தேவதாசி என்ற படியில் கல்வி கேள்விகளுக்கான வாய்ப்பு இருந்தது. ஆனாலும் அந்தக் கலைத்திறன் அவள் உடல் கருத்துடன் முடிந்தது. குலமகளுக்கோ எந்த வாய்ப்பும் இல்லை. பால்யமணம், கைம்பெண், இம்சைகளுக்காளாதல், புறக்கணிப்புகள் என்றெல்லாம் சுமந்த சமூகத் தீமைகளுக்கு ஒவ்வோர் அடியாகவே போராட வேண்டியிருந்தது. ஆனால் ஆதிக்க வர்க்கமோ, இவர்கள் அந்தக் காலத்திலும் ஒன்று சேர்ந்துவிடாத தற்சார்பு அற்ற நிலையிலேயே வைக்கக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

‘உடலுக்கப்பால், நீ உயர்ந்தவள், சக்தி வாய்ந்தவள். உன் ஆற்றலினால் நீ உலகையே வசப்படுத்த முடியும் என்று மொழிந்தவர் காந்தியடிகள்தாம். கற்பு நியாயத்தை இரு பாலாருக்கும் உரியதாக்கி மனித மேன்மைகள் அவளுக்கும் அளிப்போம் என்று குரல் கொடுத்தவர், பாரதி.

இலட்சிய அப்பத்தை முழுமையாகப் பெறும் நோக்குடன் டாக்டர் முத்துலட்சுமி அம்மையும் சிஸ்டர் சுப்புலட்சுமி அம்மையும் மாற்றங்களுக்கான போராட்டங்களில் தம்மை உட்படுத்திக் கொண்டார்கள். வெற்றியும் ஒரளவு கண்டார்கள்.

ஆனால் அந்த ஒரளவுக்குக் கீழேயே ஆண் ஆதிக்கக் கோட்டைக்கு அடி நிலையான பெண் உடல் கருத்தியல் குழி பறித்திருந்தது. அப்போது தெரியவில்லை. இந்நாட்களில் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. தேவதாசி முறை ஒழிப்பினால், இசை நாட்டியக் கலைகள் முடங்கி விடவில்லை. இயல்- இசை-நாடகம் ஒரே திரைத்துறையாகப் பரிணாமம் பெற்றிருந்த காலத்தில் அபூர்வமாகவே பெண்கள் நடிக்க வந்தார்கள். கைக்குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுக்கக் காசில்லாமல் குடும்ப வறுமையைப் போக்க வழி தெரியாமல் இந்த நிழலுக்கு வந்தார்கள். படத்தில் நடிக்க ஒப்பந்தம் என்று கையொப்பமிடும்போது உடைக்குறைவு, அத்துமீறல்களைப் பற்றிய முன்னுணர்வுகளே இல்லை. கூண்டில் பிடிபட்ட பிறகுதான் சிறகுகள் வெட்டப்பட்டது தெரியவரும். வயதாகிச் சக்கையாக வெளியேறும்போதும் அவளிடம் தவறு செய்த குற்றஉணர்வு இருக்கும். சாகும் வரை வாட்டி வதைக்கும். ஆனால் அறுபதாண்டு காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. சினிமா, தொலைக்காட்சிப் பரிமாணங்களுடன் மிகப் பெரிய வாணிபச் சந்தையைக் கடை விரிக்கிறது. பழைய குற்றஉணர்வுகளுக்கு இடமே இல்லை. இப்போதைய தொழில் நுட்ப ஜகஜ்ஜாலப் புரட்டுக் கலாசாரக் கவர்ச்சிக்கு மூலதனமே பெண் உடல்தான். விளம்பர முகவரிகளோடும் இல்லாமலும் கவர்ச்சிகள் பஞ்சமில்லாமல் காத்திருக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் பிழைக்க வழியில்லாமல் வறுமை துடைக்கத் தொழிலுக்கு வரவேண்டிய கட்டாயம் இருப்பதாக இன்று சொல்வதில்லை. ஏனெனில் பொறியியல் பட்டதாரி, கணினி மென்பொருள் நுட்பக்காரி எல்லோருமே இந்த நாபி கலாசாரத்தை ஏற்று நடிக்க வருகிறார்கள். வந்து மின்னி உயர்ந்த வேகத்தில் காணாமலும் போகிறார்கள். இன்றைய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பழமை வாய்ந்த நாளேடுகள், வார மாத இதழ்கள் முக்காலும் சினிமா, தொலைக்காட்சி நடிகர், நடிகையர், சீரழிந்த அரசியல் சமாசாரங்களை வைத்துப் பிழைப்பு நடத்த வேண்டிய கட்டாயத்திலும் மக்களுக்குத் தரமான தேவையான செய்திகளையும் தருகிறார்கள் என்பதுதான் ஆறுதல்.

சில நாட்களுக்கு முன் இப்படி ஒரு செய்தி வெளியாயிற்று. விபசாரத் தடைச் சட்டத்தில் ஒரு சினிமா நடிகையும் அவள் தாயும் (ஆண் கூட்டாளி அல்ல) கைது செய்யப்பட்டதையும் பிறகு விடுதலை பெற்றதையும் (தலை போகிற, போன) செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்.

இப்போதெல்லாம் காவல்துறையில் உயர் அதிகாரிகளிடம் இருந்து எல்லா நிலைகளிலும் பெண்கள் இருக்கின்றனர். சட்ட நுணுக்கங்களில் பழம் தின்று கொட்டை போட்ட மகளிரும் இருக்கின்றனர். விபசாரம் செய்பவர் யார் என்று எவரும் ஏன் கேட்கவில்லை? பெண்ணுடலையும், அது தொடர்பான விரசங்களையும் பாடல்கள், ஆடல்கள் என்று குஞ்சு குளுவான் முதல், கிழவர், கிழவிகள் வரை ரசிக்கும்படி முதல் வாணிபம் செய்பவர்கள் பெருமைக்குரியவர்களா? இந்த வாணிபம் கலை விளம்பரப் போர்வையில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்குக் கனம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் மெய்யோ?

இத்துடன் பெண்களுக்கு ஆட்சி உரிமையில் ஒதுக்கீடு, முப்பது, முப்பத்து மூன்று என்ற இலக்கங்களும், ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடுகள் என்ற மையிடும் உபசாரங்களும் அரங்கேறுகின்றன. எல்லா அரசியல் கட்சிகளும், பெண்களைப் பொருளாதாரம் சார்ந்து, சக்தி பெற்றவர்களாக்குவோம் என்று முழங்குகின்றன. தங்கள் தங்கள் கட்சிகளில் பெண்களின் இலட்சிய அப்பத்தைத் துண்டாடி ஆதாயம் தேடிக் கொள்கின்றன.

ஒதுக்கப்பட்ட கிராமப் பெண்கள் சைக்கிள்களில் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். கறுப்புப் பூனைகளாகச் சாகசம் செய்கின்றனர். சுயஉதவிக் குழுக்கள், மகளிர் பஞ்சாயத்துப் பொறுப்புகள், எழுதப் படிக்கத் தெரியாத மகளிரையும் நேர் அநுபவக் குளங்களில் தள்ளி விட்டிருக்கின்றன. முங்கி முழுகித் திணறி நீச்சல் போட்டுக் கரையேற அநுபவங்கள் பெறுகிறார்கள். உயிர்களைப் பணயம் வைக்கும் போராட்டங்களும் நடக்கின்றன. ஒரு ‘சின்னப் பிள்ளை’யின் கால்களைத் தொட்டுப் பாரதப் பிரதமர் வணங்கிக் கவுரவிக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டிலும், பள்ளி இறுதித் தேர்வுகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக விழுக்காடு வெற்றி பெறுகின்றனர். என்றாலும் பெண் உடல் கருத்தியல் தகர்ந்துவிடாதபடி, வினாடிக்கு விநாடி கொட்டப்படுகிறாள்.

மழை பொழிந்தால் மண்ணுக்குத்தான், பெண் சமைந்தால் ஆணுக்குத்தான் என்று சர்வ வல்லமைக் கவிஞர் திரை இசைக்காகத் தீர்ப்பளித்திருக்கிறார்!

இப்போதெல்லாம் மழை பொழிவதில்லை. வேளாண் மக்களுக்குச் சங்கடந்தான். ஆனால் பெண் காயரும்பாக இருந்தாலும் தடையில்லை, பள்ளியில், வீட்டில்,வெளியில், எங்கும் ஆணின் வெறித்தனம் கட்டவிழலாம்.

அன்றாடம் கொலை, கொள்ளை, விபத்துகள் இளைய சமுதாயத்தினரைப் பலி கொள்ளும் விதமாக நிகழ்கின்றன. இவற்றில், பெண்சாவுகள், தற்கொலை, கொலைகள், பெண் மருத்துவர்களால் நிறைவேற்றப்படும் பெண் கருக் கொலைகள். (எழுதவே கூசுகிறது) மிக அதிகமானவை. இப்போது இலட்சிய அப்பத்தின் வடிவோ, இலக்கணமோ புரியவில்லை. ஆனாலும், படைபடையாக ஒளிக்கதிர்களை நோக்கிப் பறந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளைப் போல், எதிர்காலத்தை நோக்கி இளம்பெண்கள் கவடற்று வருகிறார்கள். சாதனை செய்வோம், வலிமை மிக்க பாரதத்தை மெய்ப்பிப்போம் என்று வருகின்றார்கள். வன்முறை வெறிகொண்ட தீக்குழிகளை இவர்கள் தாண்ட வேண்டும். உடல் கருத்தியலில் பெண் மொழிகள் முழுகிப் பொசுங்காமல் உன்னதங்களைத் தடுக்கும் பொய்ம்மைகளைத் தகர்க்க வேண்டும். இது நிகழ வேண்டும்.

அமுதசுரபி, ஆகஸ்ட் - 2004