புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/இரண்டு உலகங்கள்
இரண்டு உலகங்கள்
ராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம்.
அவர் காலேஜில் ஒரு ஸயன்ஸ் பண்டிதர். வாழ்க்கையின் வசதிகள், முக்கியமாக புஸ்தகங்கள், எல்லாம் கிடைக்கக்கூடிய நிலைமை, கவலையற்ற வாழ்க்கை.
அவர் மனைவி ராஜத்திற்கு ஏகதேசக் கல்வி. அதாவது, ஒரு முழத் தாளில் தனது பெயரை, குறைந்தது இரண்டு தவறுகளுடன் ஒரு வரி பூராவாக எழுதக்கூடிய கல்வி. ராமசாமி பிள்ளைக்கு எப்பொழுதுமே அவருடைய மனைவியின் கடிதத்தைப் படிப்பதென்றால் குறுக்கெழுத் து, நேரெழுத்து என்று வந்துகொண்டிருக்கும் வார்த்தைப் போட்டிகளுக்குச் சரியான விடை கண்டு பிடிப்பது மாதிரி. அவளுக்குத் தன் புருஷன் என்றால் அடங்காத பெருமை, ஆசை. இன்னும் என்னென்னவோ அவள் மனதில் எழுந்து அவள் உடல் முழுவதும் பரவசப்படுத்தும். அவர்களுடைய குழந்தை, ஒன்றரை வயதுக் குழந்தை, அதுதான் தனது கணவன் கொடுத்த செல்வங்களைக் காட்டிலும் மகத்தான பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டிருப்பவள்.
அன்று ஒருநாள் அவருக்கு ரஸல் எழுதிய புஸ்தகம் கிடைத்தது. அது அவருடைய மனதில் இருந்துகொண்டிருந்த பெரிய குழப்பமான சிக்கல்களுக்கு எல்லாம் ஒரு தீர்ப்பு, அறிவுக்கு ஒத்த தீர்ப்புக் கொடுத்து விட்டது. அன்று சாயங்காலம்வரை அதை உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். நேரம் சென்றதுகூடத் தெரியவில்லை.அப்பொழுது ராஜம் குழந்தை மீனுவை இடையில் எடுத்துக்கொண்டு, கையில் காப்பி பலகாரங்களுடன் ராமசாமி பிள்ளையின் அறையில் நுழைந்தாள். ராமசாமி பிள்ளையின் கவனம் முழுவதும் அந்தப் புஸ்தகத்தில் அழுந்திக் கிடந்தது.
அவரைத் தொந்திரவு செய்யக் கூடாது என்று பக்ஷணங்களை மெதுவாக மேஜைமீது வைத்துவிட்டு, குழந்தையுடன் சற்றுத் தள்ளி தரையில் உட்கார்ந்தாள்.
குழந்தை என்ன தர்க்கத்தைக் கண்டதா அல்லது அறிவைக்கண்டதா? "அப்பா!" என்று சிரித்தது. ராஜம் மெதுவாகக் குழந்தையின் வாயைப் பொத்தினாள். அது என்ன கேட்கிறதா? அதற்குப் போக்குக் காட்டுவதற்காகக் குழந்தையை மடியில் எடுத்து, பால் கொடுக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் குழந்தை அதில் ஈடுபட்டது.
ராஜம் கவனியாத சமயத்தில் குழந்தை திடீரென்று எழுந்து 'அப்பா' என்று கத்திக்கொண்டு, தள்ளாடி ஒடி அவர் காலை கட்டிக் கொண்டது.
அப்பொழுதுதான் பிள்ளையவர்கள் தம்முடைய அறிவியல் போதையிலிருந்து விழித்தார். ராஜம் எழுந்துசென்று மெதுவாக அவர் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களை வளைத்து அவரது உதடுகளில் முத்தமிட்டவண்ணம் "காப்பி கொண்டுவந்திருக்கிறேன்" என்றாள்.
ராமசாமி பிள்ளை தமது உதடுகளைப் புறங்கையால் துடைத்துவிட்டு, "என்ன ராஜம், உனக்கு எத்தனை நாள் சொல்வது? உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூடச் சொன்னேனே. காப்பி எங்கே? இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா?" என்றார்.
ராஜம் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். மெதுவாக ஒரு பெருமூச்சு வந்தது. அவள் கடைக்கண்ணில் சற்று ஒளிவிட்டுப் பிரகாசித்ததே, அவள் முந்தானையால் துடைக்குமுன்....
"ராஜம், மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை. முதலில் பசி. இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது. பிறகு மூன்றாவது பக்கத்திலிருப்பதை அழிப்பது. இது மூன்றிற்கும் அடிப்படையான குணம், எல்லாவற்றையும் தனக்கென்று ஆக்கிக்கொள்ளும் ஆசை. மற்றதெல்லாம் வீண் பித்தலாட்டங்கள்...."
ராஜம் அவரை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள்.
"இந்தக் கற்பு, காதல் என்று பேத்திக்கொண்டு இருக்கிறார்களே, அதெல்லாம் சுத்த ஹம்பக்...."
"அப்படீன்னா...."
"சுத்தப் பொய். மனிதனுக்கு எல்லாவற்றையும் தனது என்று ஆக்கிக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறானே, அதில் பிறந்தவை. தன் சொத்து, தான் சம்பாதித்தது, கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது தனக்கே இருக்க வேண்டும் என்ற ஆசை. மனிதன்தான் செத்துப் போகிறானே. தனக்கில்லாவிட்டால் தனது என்று தெரிந்த, தனது ரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான். பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும்? அதற்குத்தான் கலியாணம் என்று ஒன்றை வைத்தான். பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்ற பொய் சொல்லி வேலி கட்டினான். பிறகும் பார்த்தான். காதல் என்ற தந்திரம் பண்ணினான். ஒருவருக்கொருவர் இந்த மாதிரி இஷ்டப்பட்டால் வாழ்க்கை பூராவாகவும் இஷ்டப்படுவார்களாம்.... இதெல்லாம் சுத்த ஹம்பக்...."
"எனக்கு ஒண்ணும் தெரியலியே!"
தமது உற்சாகமான பிரசங்கம் சுவரில்தான் பிரதிபலித்தது என்பதில் பிள்ளையவர்களுக்கு ஏமாற்றம். ராஜம் ஒன்றும் பேசாமல் குழந்தையை எடுத்துத் தனது மார்பில் இறுக அணைத்துக்கொண்டாள்.
"என்ன தெரியவில்லை? இது வெகு சுலபமாச்சே... சொல்லுகிறேன் கேள்..." என்று ஆரம்பித்தார்.
"எனக்குத் தெரிய வேண்டாம். வாருங்களேன் பீச்சுக்குப் போகலாம்" என்றாள். தன்னையறியாமல் அவள் கைகள் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டன.
ராமசாமி பிள்ளைக்கு இதைக் கவனிக்க நேரமில்லை. தமது சுகாதாரத்திற்கு, தமது குடும்ப சுகாதாரத்திற்கு அவசியமான கடற்காற்று வாங்க அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டார்.
"என்ன ராஜம், புறப்படலியா?" என்பதற்கு முன் "இதோ வந்தேன்" என்று குழந்தைக்கு ஒரு மாற்றுச் சட்டையணிந்து, அதை இடையில் எடுத்துக்கொண்டு தயாரானாள்.
குழந்தை, "அப்பா!" என்று அவரை நோக்கித் தாவியது.
புன்சிரிப்புடன் குழந்தையை எடுத்துக்கொண்டார். அப்பொழுது இருவர் கரங்களும் சந்தித்தன. ராஜத்திற்கு உள்ளத்தில் குதூஹலம் கலந்த ஒரு ஏமாற்றம் தோன்றியது.
2
கடற்கரையில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். குழந்தை மீனுவிற்கு மணலை வாரியிறைக்கும் தொழிலில் வெகு உற்சாகம். தலை எல்லாம் மணல், ராஜத்தின் மடி எல்லாம் மணல்.
குழந்தையுடன் விளையாடுவதில் ராஜத்திற்கு எல்லாம் மறந்து விட்டது. மீனுவின் அட்டகாசத்தில் தன்னை மறந்துவிட்டாள்.
கடலை பட்டாணி விற்பவன் ஒருவன் அவர்களை நெருங்கினான்.
"அம்மா! கடலை பட்டாணி" என்றான்."வேண்டாம் போ!"
குழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அது வேண்டும் என்று அவனை நோக்கிக் கைகளைக் காண்பித்தது. பிறகு அழுகை. கடலையையாவது தின்னத் தெரியுமா? வேண்டுமென்றால் மறுபேச்சேது?
"கடலைக்காரனா அது. உடம்பிற்காகாதே" என்று அழுகையைக் கேட்டுப் புஸ்தகத்தை மூடிக்கொண்டு திரும்பிய பிள்ளையவர்கள் கேட்டார்.
"காலணாவிற்குக் கடலை, உப்புக் கடலை, கொடு. என்னாப்பா உனக்கு எந்த ஊர்?" என்றார் பிள்ளை.
"தஞ்சாவூர் ஜில்லா சாமி!"
"என்ன! மன்னார்குடியா?"
"ஆமாஞ்சாமி!" என்று சிரித்தான்.
"உனக்கு அங்கே, பெரிய கடைத்தெரு சாமி நாயக்கர் தெரியுமா?"
"போன வருசம் அவுக கிட்டத்தான் வேலை பார்த்தேன் சாமி. கால தோசம்...என்னை இங்கே கொண்டாந்து தள்ளிட்டுது" என்று பிள்ளையவர்களின் கைக்குட்டையில் கடலையை அளந்து போட்டு விட்டு ஒரு கூழைக் கும்பிடு போட்டவண்ணம், "கடலை பட்டாணி!" என்று கத்திக் கொண்டு சென்று விட்டான்.
"ராஜம்! இதைப் பார்த்தியா? சமுத்திரக் கரையிலே எந்தக் கடலை பட்டாணி விக்கிறவன் கிட்டக் கேட்டாலும் இந்தப் பதில்தான். இது எது மாதிரி என்றால் அன்றைக்கு ஒரு ஜோரான ரஷ்யக் கதை படித்தேன். அதிலே விபசாரி வீட்டுக்குப் போகிறவனைப் பற்றி எழுதுகிறான். அங்கே போகும்பொழுது ஒவ்வொருவரும் முதல்லெ 'உன் பேரென்ன?' என்று கேட்பானாம். 'இதில் வந்து, அதாவது, நீ தவறி எவ்வளவு காலமாச்சு?' என்று கேப்பானாம். அவளும் ஏதாவது ஒரு பொய், சமீபத்தில்தான் சமூகக் கொடுமையால் வந்துவிட்டதாகக் கூறுவாளாம். அதை அவள் ஆயிரத்தெட்டாவது தடவை பாடம் ஒப்பிக்கிற மாதிரி சொல்லியிருப்பாள். இவனும் வாத்தியார் மாதிரிக் கேட்டுக் கொள்ளுவான். பிறகு இருவருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை - இதில் என்னவென்றால், மனிதனுக்கு விபசாரியானாலும் தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இருக்கிறான். சாயங்காலம் சொன்னேனே ஒன்று, அதுதான் அந்தத் தனக்கு வேண்டுமென்ற ஆசை, அதிலிருந்துதான்..."
"அதற்கென்ன இப்பொழுது?"
"இல்லை! உனக்குத் தெரியவில்லை என்றாயே அதற்குச் சொன்னேன்."
"எனக்குத் தெரிய வேண்டாம்."
அப்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. எங்கிருந்தோ, பக்கத்தில் தான், யாரோ பாரதி பாட்டு ஒன்றைப் பாடினார்கள்.'பிள்ளைக் கனியமுதே' என்ற இன்பக் கனவில் ராஜத்தின் மனம் லயித்துவிட்டது.
பாட்டு முடிந்தது.
மௌனம்.
"பாட்டு எவ்வளவு நல்லா இருக்கு! மீனுவிற்குப் பாடினாப்பிலே இருக்கே!" என்றாள் ராஜம்.
"அதில் என்ன இருக்கிறது. விஷயம் தெரியாமல் பாடுகிறான். வெறும் அசட்டுப் பாட்டு!" என்றார்.
மீனு அதற்குள் கடலை பூராவும் வாரி இறைத்துவிட்டு, வேறு 'ஸப்ளை' வேண்டுமென்று அழ ஆரம்பித்தாள்.
இருட்டில் மீனுவை எடுத்து இறுக அணைத்துக் கொண்டாள்.
ராமசாமி பிள்ளை, "நேரமாகிவிட்டது!" என்று எழுந்தார்.
ராஜத்தின் மனத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது.
ஊழியன், 12.1.1934