புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/ஒரு கொலை அனுபவம்
ஒரு கொலை அனுபவம்
இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை விளக்கு.
அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான். உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே. ஆசாமி தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன்.
இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத் தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன் என்ன அங்கு போய் சாதிக்கப் போகிறான்? இதுவும் ஒரு வேடிக்கைதான்.
ஏறி இரும்புக் கம்பத்தின் குறுக்கில் உட்கார்ந்துகொண்டு "ராஜாதி ராஜன் நானே" என்று பாடுகிறானே. அவனும் ராஜன் தான்! இவனுக்கும் ஹிட்லருக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.
அடடா! முகத்தைப் பார்த்தால் என்போல் இருக்கிறதே! நான் தான் அவன். இதென்ன வேடிக்கை? முகத்தைப் பார்த்தால் எனக்கு இரட்டைச் சகோதரன் மாதிரி இருக்கிறான். எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ?
விளக்கெல்லாம் அணைந்துவிட்டதே! இதென்ன அதிசயம்? ஏன் விளக்கு அணைய வேண்டும்? இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி முழுகிவிடும்போல் இருக்கிறது.
அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன் இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான். முதல் வந்த ஆசாமிதானா அவன்? தலைதான் கம்பத்தின் மேல் தெரிகிறதே. எனக்குப் பைத்தியமா? அல்லது பிரம்மாவிற்குத்தான் பைத்தியம் பிடித்துவிட்டதா? அல்லது பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா?அந்த 'எனக்கு' ஏன் பயம் போட்டு ஆட்ட வேண்டும்? இரண்டு பிரதிபிம்பங்கள். இயற்கையின் கூத்தா? அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?
இரவில் இன்னொரு உருவம் அதற்குப் பின் ஒளிந்துகொண்டு வருகிறது. அவனாவது வேறு மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவது ஆசாமியை நெருங்குகிறானே.
முகம் தெரிகிறது. நல்ல காலம். அவனுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது. நானல்ல! என்ன? நன்றாகப் பார். அவனும் நான் தான். எனக்கு தாடியும் மீசையுமா முளைத்திருக்கிறது? எனது முகத்தில் ஒன்றையும் காணோமே! முகத்தையும் கண்ணையும் பார்த்தால் என்ன பயமாக இருக்கிறது. மூன்று பேரும் நான் தானா அல்லது 'எல்லாம் நானே' என்ற முக்தியை அடைந்துவிட்டேனா?
தாடியுடைய 'என்' கையில் என்ன மின்னுகிறது?
கத்தி.
முன் செல்லும் 'எனக்குப்' பின் வந்த இரண்டாவது 'நான்' ஏன் பதுங்கிப் பதுங்கிச் செல்ல வேண்டும்? முதல் 'நான்' எங்கே?
ஆமாம்! அவன் குஷியாக கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான்.
நெருங்கிவிட்டான்!
'அய்யோ கொல்கிறானே!'
மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்!
விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத் தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத் தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக் கொண்டு நாயுடன் துரத்த என்னால் முடியாது.
ஊழியன், 22.2.1935