புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/நன்றி

நன்றி

புதுமைப்பித்தனின் ஏழு கதைகளுக்கு முதல் வெளியீட்டு விவரங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை; நான்கு கதைகளுக்கு நம்பகமான பாடம் கிடைக்கவில்லை; இரண்டு கதைகளின் முதல் வடிவம் வெளிவந்த இதழ்களை அறிந்திருந்தும், அவற்றை வைத்திருப்பவர் அவற்றைப் பார்வையிடவும் அனுமதி மறுக்கும் நிலை - இவ்வாறு சில மனக்குறைகள் இருந்தாலும், 'அன்னை இட்ட தீ’ முன்னுரையில் வாக்களித்தவாறு 'புதுமைப்பித்தன் கதைக'ளின் முழுத் தொகுப்புச் செம்பதிப்பாக வெளி வந்துவிட்டது.

இந்த மகிழ்ச்சியை, இதற்கு உதவிய அன்பர்களுக்கு என் நன்றியறிதலைப் புலப்படுத்துவதோடு, வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எளிய செயல்கள்கூடப் பலரின் ஒத்துழைப்போடுதான் இயல்வதாகும் என்னும்போது, பெரிய வினைப்பாடுகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஓட்டைப் பானையிலும் கொழுக்கட்டை வேவதற்கு வழி செய்தவர் பலர்.

புதுமைப்பித்தன் படைப்புகள் அனைத்தையும் செப்பமாக வெளியிடுவதென முடிவெடுத்ததுமே, பதிப்பு நெறியினை முதலிலேயே வகுத்துக் கொள்வது தேவை என்று உணர்ந்து, இது தொடர்பாகப் புதுமைப்பித்தன் அன்பர்களைக் கலந்துகொள்வதென முடிவு செய்யப்பட்டது. பதிப்புச் சிக்கல்கள் பற்றி நான் தயாரித்த வரைவு அன்பர்களின்முன் வைக்கப்பட்டது. . 19 ஏப்ரல் 1998 அன்று நாகர்கோவிலில் ஒரு முழுநாள் பதிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கை முழுவதும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டது. திரு சுந்தர ராமசாமி, முனைவர் எம். வேதசகாயகுமார், முனைவர் பா. மதிவாணன், முனைவர் பழ. அதியமான், திரு. ராஜமார்த்தாண்டன், திரு. கி. அ. சச்சிதானந்தன், திரு. எம். சிவசுப்ரமணியன் (எம்.எஸ்.), திரு. வே. மு. பொதியவெற்பன், முனைவர் அ. கா.பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். உடல் நிலை காரணமாகத் திரு. தொ. மு. சி. ரகுநாதன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. ஆயினும், அதற்கு முந்தியநாள் இரவு அதியமானும் மதிவாணனும் நானும் அவரது நெல்லை வீட்டில் கண்டு பேசி அவர் கருத்துகளைப் பெற்றுக்கொண்டோம். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தம் கருத்துகளைத் தெரிவித்து உதவியதோடு, இப்பணிக்கு ஒத்துழைப்பை நல்குவதாகவும் வாக்களித்தனர். பதிப்பு நெறி பற்றிய தெளிவு ஏற்படுவதற்கு இவர்கள் கருத்துரை மிக்க உதவியாக இருந்தது. முனைவர் எம். வேதசகாயகுமார் இந்தப் பதிப்புத்திட்டமே பிழையென்றும், இதற்குப் பொறுப்பேற்றவர் இதனைச் செய்து முடிப்பதற்குரிய தகுதியும் ஆற்றலும் உடையவரல்லர் என்றும் வலுவாக எடுத்துரைத்து, இதற்கு எவ்வகையிலும் உதவ இயலாதெனக் கூறிவிட்டார். அவருடைய கருத்துகளும் பதிவு செய்து கொள்ளப்பட்டன.

புதுமைப்பித்தன் படைப்புகளைக் காலவரிசையில், திருத்தமான பாடத்தோடும், பாடவேறுபாடுகளோடும் பதிப்பிப்பது எனத் தீர்மானித்ததும், அவை முதலில் வெளியான மூல இதழ்களையும், அவை நூலாக்கம்பெற்ற முதல் பதிப்புகளையும் தேடி எடுக்க வேண்டியிருந்தது. சான்று மூலங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்வது என்பதற்குப் பதிலாக, சான்று மூலங்களைத் தேடுவதே தமிழ் ஆய்வுலகில் பெரிய ஆராய்ச்சி என்பதாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில், பழம் இதழ்களைப் பாதுகாத்து, ஆய்வாளர்களுக்குப் படிக்க வசதி செய்துதரும் நூலகங்களையும் அவற்றின் பொறுப்பாளர்களையும் சப்பரத்தில் வைத்துச் சுமந்து சென்றாலும் சரியே. அவர்களுள் முக்கியமானவர்கள்:

சென்னை மறைமலையடிகள் நூல் நிலையமும் அதன் செயலாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களும்; சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் அதன் முதல் இயக்குநர் (மறைந்த) திரு. ப. சங்கரலிங்கம் அவர்களும் இன்றைய இயக்குநர் திரு. சு. தியடோர் பாஸ்கரன் அவர்களும்; சென்னை உ. வே. சாமிநாதையர் நூல் நிலையமும் அதன் பாதுகாவலரும்; தமிழ்நாடு ஆவணக்காப்பகமும் அதன் சிறப்பு ஆணையாளரும்; காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூல் நிலையமும்; புதுக்கோட்டை மீனாட்சி நூல் நிலையமும் அவற்றின் உரிமையாளர்களான திரு. பா. கிருஷ்ணமூர்த்தி, திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையரும்; ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தற்கால வரலாற்றுக்கான ஆவணக்காப்பகமும், அதன் தலைவர் பேராசிரியா கே. என். பணிக்கர் அவர்களும்; தமிழ் இலக்கிய வரலாற்றுப் பேரறிஞர் மறைந்த மு. அருணாசலம் அவர்களின் தனி நூலகமும், அதன் உரிமையாளர் திரு. அ. சிதம்பரநாதன் அவர்களும்; ஆண்டிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நூலகம்.

இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் இந்தியா அலுவலக நூலகப் பிரிவில் சில முதல் பதிப்புகளையும். சிகாகோவிலுள்ள ஆய்வு நூலகங்களுக்கான மையத்தில் 'மணிக்கொடி'யின் நுண்படச் சுருளையும் பார்வையிட்டுப் படியெடுக்க முடிந்தது. சிகாகோவில் இதற்குரிய ஏற்பாடுகளை எனக்குச் செய்து கொடுத்தவர், சிகாகோ பல்கலைக் கழகத தெற்காசியப் பிரிவின் நூலகர் திரு. ஜேம்ஸ் நை.

மருங்கூர்.சண்முகானந்த நூல் நிலையத்தில் சில முதல் பதிப்புகள் கிடைத்தன. இதற்கு உதவியவர்கள் முனைவர் தே. வேலப்பன், முனைவர் அ. கா. பெருமாள்.

தம்மிடம் உள்ள 'மணிக்கொடி' இதழ்களைப் பார்வையிடக் கொடுத்தவர் திரு. கி. அ. சச்சிதானந்தன். 'சிற்பியின் நரகம்' கதை அவரிடமிருந்த 'மணிக்கொடி இலிருந்தே ஒப்பிடப்பெற்றது.

திரு. பொள்ளாச்சி நசன் அவர்களும், பேராசிரியர் வீ. அரசு அவர்களும் தம்மிடமுள்ள இதழ்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி மறுத்துவிட்டனர்.

இப்பதிப்புத் தொடர்பான சில முக்கிய உதவிகளைச் செய்தவர் திரு. ரகுநாதன். புதுமைப்பித்தன் பற்றிய எந்த வேலைக்கும் அவருடைய உதவியும் ஆலோசனையும் இன்றியமையாதன. 'அன்னை இட்ட தீ', 'படபடப்பு ஆகியவற்றின் கையெழுத்துப்படிகள், சில முதல் பதிப்புகள், புதுமைப்பித்தன் கைப்படத் திருத்தம் செய்த 'நாசகாரக் கும்பல்', 'பக்த குசேலா' நூல்கள் ஆகியவற்றைப் பார்வையிடவும் ஒளி நகலெடுக்கவும் அவர் அனுமதி நல்கினார். பதிப்புத் தொடர்பான ஐயங்கள் பலவற்றையும் களைந்து உதவினார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அயராது புதுமைப்பித்தன் புகழை நிறுவி வரும் ரகுநாதனின் பொது வாழ்க்கைச் செயல்பாடுகளுக்காக மட்டுமல்லாமல், இப்பதிப்பின் செம்மைக்குத் துணைநின்ற அவரது பண்புக்காகவும் இந்த நூலை அவருக்குக் காணிக்கையாக்குவது மிகப் பொருத்தமுடையது.

இப்போது எட்டயபுரத்திலுள்ள ரகுநாதன் அவர்களின் நூற் சிப்பங்களைப் பிரித்துப் பார்க்கத் துணைநின்றவர் திரு. அழகர்சாமி அவர்கள். புதுமைப்பித்தனின் சிறுவயதில் எடுக்கப்பட்ட குடும்பப் படத்தைக் கொடுத்துதவியவர் அவர் தம்பி திரு. சொ. முத்துசாமி.

பாடவேறுபாடுகளைக் குறிப்பதற்கெனப் பல பாடங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருந்தது. இந்தச் 'சள்ளை பிடித்த' வேலையில் சலிப்பில்லாமல் என்னுடன் செயலாற்றியவர் செ. ஆனந்த். தளவாய் சுந்தரமும், முனைவர் நா. கண்ணனும் இதன் தொடர்பில் துணை நின்றனர்.

திரு. எம். சிவசுப்பிரமணியன் (எம். எஸ்), முனைவர் ஆ. ஸ்ரீவத்சன், திரு. 'வைகை குமாரசாமி, திரு. காஞ்சனை சீனிவாசன், திரு. எஸ். ரவிச்சந்திரன், முனைவர் ஸ்டீவன் ஹியூஸ், திரு. ப. தேசிகவிநாயகம், திரு. மகாதேவன், திரு. அரவிந்தன் ஆகியோர் சிறியதும் பெரியதுமான பல உதவிகளைப் புரிந்தனர்.

திரு. சி. சு. மணி, பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், பேராசிரியர் தொ. பரமசிவன் ஆகியோர் பல்வேறு நிலைகளில் இந்தப் பணிக்கு உதவினர்.

என் ஆய்வுத் தோழர்களான பழ. அதியமானும் பா. மதிவாணனும் இதழ் வேட்டையில் என்னோடு கலந்துகொண்டு கானமுயல்களோடு யானை பிழைத்த வேல்களையும் ஏந்தி வந்தனர். வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம் பற்றிய தங்கள் ஆய்வின் மூலம் பெற்ற பட்டறிவை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்துகொண்டனர். பதிப்பு வேலையின் ஒவ்வொரு நிலையிலும் இவர்கள் துணை எனக்கு உண்டு என்ற எண்ணம் தெம்பூட்டுவதாய் இருந்தது.

புதுமைப்பித்தன் படைப்புகள் அனைத்தையும் அவற்றின் மூலங்களிலிருந்து கண்டெடுத்துப் பதிவாக்கும் ஆய்வுத் திட்டத்திற்கு, சர் ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே ஒரு நல்கையைக் கலைகளுக்கான இந்திய மையம் (பெங்களூர்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலச்சுவடு அறக்கட்டளைக்கு வழங்கியது. பதிப்பு மற்றும் ஆராய்ச்சித் தேவைக்கென ஒளிநகல் எடுக்கும் நிலைமாறி, நுண்படச் கருளிலும் குறுந்தகட்டிலும் ஆவணமாக்கம் செய்து ஆராய்ச்சியாளர் அனைவர்க்கும் பயன்படுவதற்கு இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பென்னம் பெரிய இந்த நூலை, அதன் பல்வேறு சிக்கல்களோடும் நுட்பங்களோடும் அணியம் செய்வதென்பது சாதாரண வேலை அன்று காலச்சுவடு பதிப்பகத்தின் செல்வி சி. லீலாவும், திரு. அ. குமாரும் இதில் காட்டிய ஈடுபாடும் செயல்திறனும் போற்றத்தக்கன.

பதின்பருவத்திலேயே என்னைப் புதுமைப்பித்தனிடம் ஆற்றுப்படுத்தியவர்கள் என் முதலாசிரியர்கள் 'முகம்' மாமணியும், புலவர் த. கோவேந்தனும்.

புதுமைப்பித்தன் படைப்புகளைச் செம்மையாக வெளியிடுவதற்கு அனுமதி வழங்கிய திருமதி தினகரி சொக்கலிங்கம் அவர்களும் திரு. ஹெச். சொக்கலிங்கம் அவர்களும் காலச் செலவைப் பொருட்படுத்தாமல், இந்நூல் செம்மையாக வெளியாக வேண்டுமெனப் பொறுமை காத்தனர்.

இப்பதிப்பு வெளிவருவதில் திரு. சுந்தர ராமசாமி காட்டிய ஆர்வமும் தந்த ஒத்துழைப்பும் இயல்பானவை; எதிர்பார்க்கத்தக்கவை. இந்நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை பொருத்தமானது என்று சொல்வது மிகை. ஐம்பதாண்டுகளாகப் புதுமைப்பித்தன் பற்றி எவ்வளவோ பேசியும், இன்றும் புதிதாகச் சொல்வதற்கு அவருக்கு நிறைய இருக்கிறது.

பெரிய காரியங்களையும் திட்டமிட்ட, முனைப்பான முயற்சியால் செய்து முடித்துவிடலாம் என்று கண்முன் காட்டிவருபவர் கண்ணன். சுந்தர ராமசாமி குடும்பத்தினர் ஒவ்வொருவரும் இந்தப் பணியில் ஏதோ ஒரு வகையில் உதவி இருக்கிறார்கள்.

செய்ந்நன்றி கொன்றால் உய்வில்லையாதலால் இவர்கள் அனைவரின் உதவியையும் நெஞ்சார நினைவுகூர்கிறேன். இவர்களனைவரின் ஒத்துழைப்போடு புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளின் அடுத்த தொகுதிகளும் வெளிவரும் என்று நம்புகிறேன்.

திருநெல்வேலி

சலபதி

6 ஆகஸ்டு 2000