புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/வாழ்க்கைக் குறிப்பு

பின்னிணைப்பு 6


புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு


யற்பெயர் சொ. விருத்தாசலம். பிறப்பு : 25 ஏப்ரல் 1906, திருப்பாதிரிப்புலியூர். தந்தை : வி. சொக்கலிங்கம் பிள்ளை (மறைவு: 1959). தாயார்: பர்வதத்தம்மாள். சிற்றன்னை: காந்திமதியம்மாள். உடன் பிறந்த தங்கை : ருக்மணி அம்மாள். தம்பி : சொ. முத்துசாமி.

தொடக்கக் கல்வியைச் செஞ்சி. திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் பெற்றார். தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918இல் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார்.

1931 ஜூலையில் திருமணம். மனைவி: கமலா; திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.

1933 அக்டோபர் 18இல் முதல் படைப்பு 'குலோப்ஜான் காதல்' காந்தியில் வெளியீடு. 1934 ஏப்ரலிலிருந்து மணிக்கொடியில் பல கதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டார். 1934ஆம் ஆண்டின் முற்பகுதியில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். ஆகஸ்டு 1934முதல் பிப்ரவரி 1935வரை ஊழியனில் உதவியாசிரியர். (சிறுகதை) மணிக்கொடியில் பி. எஸ். ராமையாவுடன் நெருங்கிய உறவு. 1936 முதல் 1943 செப்டம்பர் வரை தினமணியில் உதவியாசிரியர். நிர்வாகத்துடனான மோதலின் காரணமாக டி. எஸ். சொக்கலிங்கம் தினமணி ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகியபோது பிற உதவியாசிரியர்களோடு புதுமைப்பித்தனும் விலகினார்.

1939இல் உலகத்துச் சிறுகதைகள், பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார் ஆகியவை வெளிவந்தன. 1940இன் தொடக்கத்தில் முதல் சிறுகதைத் தொகுதி புதுமைப்பித்தன் கதைகள் நூலும் நவயுகப் பிரசுராலய வெளியீடாக வந்தது.

1944இல் டி.எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய தினசரியில் சேர்ந்தார். பின்பு அதிலிருந்தும் விலகித் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1946இல் ஜெமினியின் 'அவ்வை' மற்றும் 'காமவல்லி' படத்துக்காகவும் பணியாற்றினார். பின்பு 'பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். 1946 மே மாதத்தில் மகள் தினகரி பிறப்பு. எம். கே. டி. பாகவதரின் 'ராஜமுக்தி' படத்திற்காக 1947இன் பிற்பகுதியிலிருந்து 1948 மே தொடக்கம் வரை புனே வாசம். அங்குக் கடுமையான காசநோய்க்கு ஆளானார். 5 மே 1948இல் திருவனந்தபுரத்திற்குத் திரும்பினார். ஜூன் 30இல் மறைந்தார்.

காலச்சுவடு பதிப்பகம் 1998இல் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத / தொகுக்கப்படாத படைப்புகளை ‘அன்னை இட்ட தீ' என்ற தலைப்பில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதுமைப்பித்தனின் அனைத்துப் படைப்புகளையும் காலச்சுவடு பதிப்பகம் தொடர்ந்து கொண்டுவருகிறது.

இந்த முதல் தொகுப்பில் புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும் இடம் பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்பில் கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம் பெறுகின்றன. பல்லாண்டு கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.

காலச்சுவடு பதிப்பகம்