புது டயரி/உண்பதும் ஒரு கலை
‘செய்வன திருந்தச் செய்’ என்று ஒளவையார் பாடியிருக்கிறார். செய்வன என்றால் எவை? மனிதன் செய்கின்ற எல்லாவற்றையுமே திருத்தமாகச் செய்யவேண்டும் என்பது அந்தப் பாட்டியின் உபதேசம். மனிதன் எத்தனையோ காரியங்களைச் செய்கிறான். இடைவிடாமல் செய்துகொண்டிருப்பது மூச்சு விடுகிற காரியம். அதை அவன் திட்டமிட்டுச் செய்கிறான் என்று சொல்லக்கூடாது, அது தானே நடந்துக்கொண்டிருக்கிறது. அவன் திட்டமிட்டுச் செய்கிற காரியங்களில் மிகவும் முக்கியமானது சாப்பிடுவது. அதைத் திருத்தமாகச் செய்யவேண்டும். சமைப்பதும் திருத்தமாக இருக்கவேண்டும், சாப்பிடுவதும் திருத்தமாக இருக்கவேண்டும். சமையல் ஒரு கலை; சாப்பிடுவதைக் கூடக் கலை என்று சொல்லலாம்.
விலங்குகள் கூட உணவை உண்கின்றன. அதில் கலை என்ன இருக்கிறது?. இப்படி நீங்கள் கேட்கலாம். விலங்குகள் உண்ணுவதற்கும் நாம் உண்ணுவதற்கும் வேறுபாடு இல்லையா? ஒரு வீட்டில் கீரைப் பாத்தி போட்டிருக்கிறார்கள். ஒரு மாடு எப்படியோ அங்கே நுழைந்துவிடுகிறது. தளதள என்று தழைத்து வளர்ந்திருக்கிற கீரையைக் கண்டு சும்மா இருக்குமா? அதைத் தின்னத் தொடங்குகிறது. எப்படி? நாவை நீட்டிக் கீரையை வேரோடு பறித்துச் சமூலமாகத் தின்றுவிடுகிறது. வேரையும் வேரடி மண்ணையும் கூட விழுங்கி விடுகிறது. மனிதன் என்ன செய்கிறான் கீரையைப் பறித்துவந்து வேரை நறுக்கி வெளியிலே போட்டுவிட்டு, தண்டை வேறாக்கிக் கீரையை வேறாக்கி, கீரையால் மசியல் செய்கிறான்; தண்டைக் குழம்பிலே தானகப்போடுகிறான்; உண்ணுகிறான். கீரையைக் கொஞ்சம் மிச்சம் வைத்துப் பிற்பகலில் கீரை வடை பண்ணிச் சாப்பிடுகிறான். மாடு, கீரையை உண்டதற்கும், மனிதன் அதை உண்டதற்கும் எத்தனை வேற்றுமை! ஏன்? மாடு பசிக்கு மட்டும் உண்ணுகிறது. மனிதனே ருசிக்கும் உண்ணுகிறான். அதனால் வெவ்வேறு வகையாகச் சமைத்துச் சுவைகூட்டி உண்ணுகிறான்.
மரகதத் தகடுபோல இலையை விரித்து ஓரத்தில் கறி, கூட்டு, பச்சடி, துவையல், கோசும்பரி, ஊறுகாய் எல்லாம் வைத்து, கீழே வலக்கைப் பக்கத்தில் பாயசமும் பருப்பும் பரிமாறி, பழம், பட்சண வகைகள் இடப்புறம் இட்டு, பிறகு வெள்ளை வெளேரென்று அன்னத்தைப் பரிமாறி, அதன்மேல் நெய்யையும்விட்டால், சாப்பிட உட்கார்ந்தவன் கலை உணர்ச்சி உடையவனாக இருந்தால் அந்தத் தோற்றத்தைக் கண்டே ஐந்து நிமிஷம் அநுபவிக்கலாம். என்ன என்ன நிறம் என்ன என்ன வடிவம் எத்தனை வகையான சுவைகள் ஆறு சுவையில் நூறுவகை தமிழ் நாட்டு உணவிலேதான் எத்தனை சம்பிரமம்! நளச் சக்கரவர்த்தியும் வீமசேனனும் சமையல் கலையில் வல்லவர்கள் என்று சொல்கிறார்கள். பத்துப் பாட்டில் வீமன் சமையல் கலையில் வல்லவன் என்ற செய்தி வருகிறது.
மனிதன் நாகரிகம் வளர வளர அவன் அநுபவிக்கும் பண்டங்களில் பல வகைகள் உண்டாகின்றன. உள்நாடு, வெளிநாடு என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா நாட்டுப் பண்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறான். நாம் உடுக்கும் உடைகளில் எத்தனை வகை! மேல் நாட்டுப் பாணி எவ்வளவு தூரம் உடையில் நம்மிடம் கலந்து விட்டது! தாய்மார்கள் உடுக்கும் புடைவைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கின்றன. கட்டடங்களில்தான் எத்தனை வடிவங்கள்! அவ்வாறே உணவுக் கலையும் விரிந்துகொண்டே வருகிறது. நாம் இப்போதெல்லாம் மிளகாய் இல்லாமல் சமையல் பண்ணவே முடியாது. ஆனால் அந்த மிளகாய் நம் நாட்டுச் சரக்கு அல்ல. அமெரிக்காவிலுள்ள சிலி என்ற பிரதேசத்திலிருந்து வந்தது அது. அதனால்தான் அதற்குச் சிலீஸ் (Chillies) என்று ஆங்கிலத்தில் பெயர் வழங்குகிறது. மிளகுதான் பழைய காலத்தில் இந்த நாட்டில் இருந்தது. கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் இறைவனுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதங்களுக்குச் சேர்க்க இன்ன இன்ன பண்டங்கள் இன்ன இன்ன அளவு என்ற செய்தியைக் காணலாம். அவற்றில் மிளகு பலம் இவ்வளவு என்று இருக்குமே ஒழிய மிளகாயைப் பற்றிய பேச்சே இல்லை. மிளகாயைப் போல் எத்தனையோ உணவுப் பொருள்கள் வேறு நாடுகளிலிருந்து வந்து இங்கே நிலைத்துவிட்டன; நாமே பயிரிடுகிறோம்.
அப்படியே உணவு வகைகளும் வெளியிலிருந்து எத்தனையோ வந்திருக்கின்றன. பஜ்ஜியும் சொஜ்ஜியும் நம்முடையவை அல்ல; பாதாம் கீர் என்ற பெயரைக் கேட்டாலே ஹிந்தி வழங்கும் நாட்டிலிருந்து வந்தது என்று தெரியவரும். மேல் நாட்டிலிருந்து பிஸ்கோத்தையும் கேக்கையும் ஜாமையும் ஐஸ் கிரீமையும் நாம் தெரிந்து சுவைக்கிறோம். இப்படி நம் சாப்பாடு அகில உலக இணைப்பை காட்டுகிறதாக இருக்கிறது. ஆனாலும் அரிசிச் சாதமும் குழம்பும் ரசமும் நமக்கே சொந்தம்.நம்முடைய ரசத்துக்கு ஈடு இணையே கிடையாது. நம்முடைய இட்டிலியும் தோசையும் உலகத்திலே திக்விஜயம் செய்யத் தொடங்கிவிட்டன. மேல்நாட்டுக்காரர்கள் எவ்வளவு ஆசையோடு தோசை உண்ணுகிறார்கள் தெரியுமா!
தமிழன் வாழ்வில் எளிமை இருக்கும்; அதே சமயத்தில் சிறப்பும் இருக்கும். இதற்கு இட்டிலி ஒரு பெரிய எடுத்துக்காட்டு. அரிசி, உளுந்து, உப்பு, ஜலம் இவற்றைக் கொண்டே இட்டிலி தயாராகிறது. மற்ற உணவுகளைப் போல ஊர்ப்பட்ட சாமான்கள் வேண்டும் என்பது இல்லை. ஆனால் நல்ல உழைப்பு வேண்டும். உளுந்தை நன்றாக அரைத்து, அளவாகக் கலக்க வேண்டும். அதுதான் கலை. சரியானபடி கலந்து இட்டிலி பண்ணினால் பஞ்சுபோல மெதுவாக இருக்கும். என் நண்பர்கள் வீட்டுக்கு நான் போனால் சில சமயம் இட்டிலி வழங்குவார்கள். அதன் மென்மையையும் வெண்மையையும் பார்த்து, “இதை இலையிலா வைப்பது?” என்று கேட்பேன். “என்ன சொல்கிறீர்கள்?” என்று நண்பர்கள் கேட்பார்கள். “இது மல்லிகைப் பூ மாதிரியல்லவா இருக்கிறது? இதைத் தலையில் அல்லவா வைத்துக்கொள்ள வேண்டும்?” என்பேன்.
சமையல் பண்ணுவதற்குரிய பண்டங்கள் எல்லாம் குறைவற இருந்தால் போதுமா? அவற்றைச் சமைக்கிறவருக்குக் கலையுணர்வு இருக்கவேண்டும். ஒவ்வொரு கலையிலும் கலைஞர்களுக்குள்ளே சிறந்தவர்களாகச் சிலரே இருப்பார்கள். சமையல் கலையிலும் அப்படித்தான். இல்லாவிட்டால் நளனுக்கும் வீமனுக்கும் மட்டும் பெயர் வரக் காரணம் என்ன? கலை என்பது புத்தகங்களைப் படிப்பதனால் மட்டும் வராது. குருவினிடம் பயின்று வர வேண்டும். அதற்கு மேல், கற்றுக்கொள்ளும் மாணாக்கனுக்கு இயல்பாகவே ஓர் உள்ளுணா்வு (intution) இருக்க வேண்டும். சமையற் கலையிலும்கூடத்தான். ‘என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன உதாரணம் சொன்னால் விளங்கும். நம்முடைய வீட்டில் பெண்மணிகள் சமைக்கிறார்கள் தராசு, சமையல் புத்தகம் இவற்றை வைத்துக்கொண்டு அவர்கள் சமைப்பதில்லை. வீட்டில் ஆறு பேர் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய சமையல் நடைபெறும். அவர்களுடைய கைதான் தராசு. புளியானாலும் உப்பானாலும் அளவாகப் போட அவர்களுக்குத் தெரியும். உப்புப் போட்டுவிட்டுச் சரியாக இருக்கிறதா இல்லையா என்று வாயில் விட்டுப் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். இப்போது, சில படித்த பெண்கள் அப்படிப் பண்ணுகிறதாகக் கேள்வி!
ஆறு பேருக்குச் சமைக்கும் பெண்மணி, வீட்டில் ஏதாவது விசேஷமென்றால் பல வகையான உணவு வகைகளைச் சமைக்கிறாள். அறுபது பேருக்குச் சமைக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதும் அவளுடைய கையே உப்பை நிதானம் அறிந்து போடுகிறது. அவளிடம் உள்ள உள்ளுணர்வே எல்லாவற்றையும் அளவாகப் போடும் காரியத்தைச் சாதிக்கிறது.
இதைவிடப்பெரிய ஆச்சரியம் சமையற் கலையில் இருக்கிறது. பதினாயிரம், இருபதினாயிரம் பேருக்குச் சாப்பாடு போடவேண்டும். நூறு சமையற்காரர்களுக்கு மேல் வேலை செய்வார்கள். அவர்களுக்குள் தலைமைச் சமையற்காரர் ஒருவர் இருப்பார். அவர் அடுப்படிக்கே வரமாட்டார். அடுப்புக்கு முப்பது கஜ தூரத்துக்குமேல் அரிசி மூட்டையாகிய சிங்காதனத்தின்மேல் அமர்ந்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டிருப்பார்.
அடுப்படியில் அவருடைய தொண்டர்கள் வேலைசெய்து கொண்டிருப்பார்கள்.அடுப்பில் ரசம் கொதிக்கும். அதற்கு உப்புப் போடவேண்டும். குட்டிச் சமையற்காரர் முறத்தில் உப்பை வாரிப் போட்டுக் கொண்டிருப்பார். அரிசி மூட்டைச் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் சமையற்கலை மன்னர் அங்கிருந்தபடியே கவனித்துக் கொண்டிருப்பார். ‘ஐந்து முறம் போடு’ என்பார். குட்டித் தொண்டர் போடுவார். ‘ஆருவது முறம் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தட்டு’ என்பார். அப்படியே அவர் தட்டுவார். ‘ஹும். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று மன்னர் சொல்லிக்கொண்டே வருவார். ஒரு நிலையில், “போதும்; நிறுத்து” என்பார். அந்த ரசக் குட்டையில் உப்புக் கணக்காகச் சேர்ந்து அதை மிகவும் ரசமுள்ளதாகச் செய்துவிடும். அந்த மன்னர் கண்ணினாலே பார்த்து அளவைக் கணிப்பவர். அவருக்கு அப்படி ஓர் உணர்வு!
இங்கே, என்னுடைய ஆசிரியப் பெருமான் மகா மகோபாத்தியாய ஐயாவர்கள் சொன்ன நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.
புதுக்கோட்டைச் சம்ஸ்தானத்தில் அந்தக் காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் என்பவர் திவானாக இருந்தார். அவர் மிகச் சிறந்த அறிவாளி. அவர் செய்த காரியங்களை யெல்லாம் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சமயம் ஒரு பெரிய சமையற்காரர் அவரிடம் வந்தார். “எத்தன ஆயிரம் பேரானாலும் என்ன என்ன வேண்டுமோ அவற்றையெல்லாம் நன்றாகப் பண்ணிப் போடுவேன்” என்றார். “உமக்கு நன்றாக ரசம் வைக்கத் தெரியுமா?” என்று திவான் கேட்டார். “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? ரசத்தில்தானே எங்களுடைய திறமையைக் காட்ட முடியும்?” என்றார்.
அந்தக் காலத்தில் ரசத்தில் தெளிவு இருக்கும். அடுப்பில் காயும்பொழுதே கம்மென்று மணக்கும். குழம்பு குழம்பாயிருக்கும்; ரசம் தெளிவாக இருக்கும். குழம்பில் தான் இருக்கும். ரசத்தில் அது இல்லை. வாழ்க்கை கூடக் குழம்புபோலக் குழம்பாமல் ரசம்போலத் தெளிவாக, ஞானக்தோடு இருக்கவேண்டுமானால் தான் என்ற அகந்தை இருக்கக் கூடாது. ஆனால் இப்போதெல்லாம் ரசம் வைக்கத் தெரியாதவர்களெல்லாம் அதில் தக்காளியைப் போட்டு அதிலும் தானைக் கலந்து விடுகிறார்கள்.
அந்தச் சமையல்காரர் தெளிவான ரசம் பண்ணுகிறவர். “நன்றாக ரசம் செய்வேன்” என்றார். புதுக்கோட்டையில் குடி தண்ணீருக்காகப் புதுக்குளம் என்ற பெரிய குளம் இருக்கிறது. அதற்குக் காவல் போட்டு வைத்திருப்பார்கள். சேஷையா சாஸ்திரியார் அந்தச் சமையற்காரரைப் பார்த்து, “புதுக்குளத்தில் ரசம் வைப்பீரா?” என்று கேட்டார். ஆள் அசந்து போவார் என்று அவர் நினைத்தார். அந்தக் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமோ?
“நான் சொல்கிறபடி செய்து, வேண்டிய சாமான்களையும் கொடுத்தால் புதுக்குளத்தில் ரசம் வைத்துக் காட்டுவேன்” என்று துணிச்சலாகச் சொன்னார். “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார் திவான்.
“அந்தக் குளத்தைச் சுத்தமாக இறைத்துவிட வேண்டும். பதினைந்து நாள் யாரையும் உள்ளே விடக்கூடாது. நான் கொடுக்கிற லிஸ்டின்படி சாமான்களை வாங்கித் தர வேண்டும், அப்படிச் செய்தால் புதுக்குளத்தில் ரசம் உண்டாக்கித் தருகிறேன்.”
சேஷையா சாஸ்திரியார் விளையாட்டுக்காகக் கேட்கவில்லை. கலைஞரின் திறமையை அறிவதற்காகவே கேட்டார். அந்தக் கலைஞரும் திவான் சொன்னதை நடத்திக் காட்டுவதாக உறுதி மொழி கூறினார். அது கோடைக் காலம். குளத்தை இறைக்கச் செய்தார் திவான். கட்டுக் காவல் போட்டார். பருப்பு, உப்பு, புளி, மிளகாய், பெருங்காயம் முதலிய சாமான்களைச் சமையற்காரர் சொன்ன அளவில் வாங்கித் தந்தார். அவர் அந்தக் குளத்தில் எப்படி அவற்றைச் சேர்க்க வேண்டுமோ அப்படிச் சேர்த்தார். ஒரு வாரம் வெயிலில் ரசம் காய்ந்தது. பிறகு அதிலிருந்து ரசத்தைக் கொண்டு வந்து திவானிடம் கொடுத்தார். அற்புதமான ரசம் திவான் அந்தக் கைக்குத் தோடாப் பண்ணிப் போட்டாராம். கலைஞர்களை வேலை வாங்கத் தெரிந்தவர்கள் இருந்தால்தான் கலை பரிமளிக்கும்; வளரும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் விழாக் காலங்களில் அன்னம் பாலிக்கும் பெரிய தொண்டை முன் காலத்தில் ஒரு மகான் செய்து வந்தார். அவர் சமையற்காரராக இருந்தார். பிறகு அன்னதான சக்கரவர்த்தியானார். அன்னதான சிவம் என்றால் அக்காலத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய சமையல் ஏற்பாட்டை நான் கண்டு களித்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான பேர்களுக்கு மோர் வேண்டுமே! ஒரு நாள் இரண்டு நாள் பால் வாங்கித் தயிராக்கி மோர் கடைந்துவிட முடியுமா? அவர் ஆறு மாதங்களுக்கு முன்பே அங்கங்கே தயிா் வாங்கி பீப்பாய்களில் அடைத்துக் குளத்தில் போட்டு விடுவார். பிறகு வேண்டியபோது எடுத்து பயன்படுத்துவார். கொஞ்சங்கூடப் புளிக்காது.
சமையல் பண்ணும்போது மூங்கிற் பாயைப் பரப்பி ஒரு முறை உலை வைத்துச் சோற்றைச் சமைத்து அதன் மேல் பரப்புவார்கள். களைந்து வைத்திருந்த அரிசியை அந்தச் சோற்றுப் படலத்தின் மேலே பரப்பிவிடுவார்கள். மறுபடியும் அதன் மேலே மற்றெரு படலம் சூடான சமைத்த சாதத்தைப் பரப்புவார்கள். கீழ்ச்சூடு, மேல் சூடு இந்த இரண்டினாலும் நடுவிலே உள்ள களைந்த அரிசி பக்குவமாய்ச் சாதமாகிவிடும். இப்படியெல்லாம் எத்தனையோ கலை நுணுக்கங்கள்.
சமைக்கிறது ஒரு கலையானால் சாப்பிடுவதும் ஒரு கலை தான். நல்ல பாட்டை ரசிக்கிறவர்கள் ரசித்தால்தான் பாடுகிறவனுக்கு உற்சாகம். அதுபோல நல்ல சாப்பாட்டைச் சுவைத்து உண்டால்தான் சமைத்தவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். என்னுடைய ஆசிரியப்பிரான் தமிழ்ப் பாட்டை நன்றாகச் சுவைத்து இன்புறுவதுபோல உணவையும் சுவைத்து உண்பார்கள். சுவை காணுகிறவர்கள் எதிலும் சுவை காணலாம். பெரிய பெரிய சிற்பங்களில் மட்டுந்தான் கலைத் திறமை என்று சொல்லலாமா? ஒரு சதுர அங்குலத்தில் அமைத்திருக்கும் சிறிய வடிவத்திலே கூடச் சிற்பத் திறனைக் கண்டு மகிழலாம். ஐயரவர்கள் அத்தகைய ரசிகர்கள். பலபல வகையான உணவு வகைகளையும் நன்கு சுவைத்து நுகர்வார்கள். வெறும் துவையல் அல்லது வேப்பிலைக் கட்டியைக் கூடச் சுவைத்துப் பாராட்டுவார்கள். திருப்பனந்தாளில் முன்பு தலைவராக ஸ்ரீ சாமிநாதத் தம்பிரான் என்பவர் இருந்தார். ஐயரவர்களிடம் தேவதா விசுவாசம் உடையவர். ஐயரவர்கள் வந்தால் மடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்திலிருந்து காய்கறிகளையும் கீரை வகைகளையும் பறித்துக்கொண்டு வரச் சொல்வார். அவற்றை ஐயரவர்களிடம் காட்டி, ‘என்ன என்னபடி சமைக்கவேண்டும்?’ என்று கேட்டு அப்படியே செய்யும்படி சமையற்காரருக்குச் சொல்வார். பச்சைப் பசேல் என்றிருக்கின்ற அவற்றைச் சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்துவிட்டு, இன்னது இன்னது செய்ய வேண்டும் என்று ஐயரவர்கள் சொல்வார்கள். அப்படியே சமையல் செய்து போடுவார்கள். சமையல்காரர் மனம் மகிழும்படி, நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள். மடாலயத்தின் தலைவரிடமும் சொல்லி நன்றியறிவு கூர்வார்கள்.
சிவஞான முனிவரிடம் ஒரு தவசிப்பிள்ளை இருந்தான். அவர் அவனிடம் இன்ன இன்னபடி சமையல் செய்ய வேண்டுமென்று சொல்வாராம். அப்படிச் சொன்னதாக ஒரு பாட்டுக்கூட இருக்கிறது.
- சற்றே துவையல்அறை; தம்பிஒரு பச்சடிவை;
- வற்றல்ஏ தேனும் வறுத்துவை;-குற்றம்இலை;
- காயம்இட்டுக் கீரைகடை; கம்மென வேமிளகுக்
- காயரைத்து வைப்பாய் கறி.
சமையல் பண்ணியதை நன்றாக அநுபவித்தால்தான் செய்தவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்று சொன்னேன். முன்னே சொன்ன சேஷையாசாஸ்திரியார் ஒரு முறை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்திருந்தார். அப்போது அம்பலவாண தேசிகர் என்பவர் ஆதீனகர்த்தராக இருந்தார். அவர் கலைகளை நன்கு சுவைக்கும் ரசிகர். சாஸ்திரியார் வந்தபோது அவருக்குப் பெரிய விருந்து போட வேண்டுமென்று நினைத்தார். எங்கும் பார்த்திராதவகையில் காய், கறி, குழம்பு, ரசம், பட்சியங்கள் பலபல செய்ய ஏற்பாடு செய்தார். கறி கூட்டு வகைகளே நூறு இருக்கும். துவையல்களில் இருபது. மற்றவற்றிலும் இப்படியே.
சாஸ்திரியார் பருத்த சரீரமுடையவர். முன்னே இலை போட்டுக் குனிந்து சாப்பிட அவரால் முடியாது. நீளமான திண்ணையில் மிகவும் நீளமான இலையைப் போட்டு அதில் எல்லாவற்றையும் பரிமாறினார்கள்.சாஸ்திரியாருக்குப் பக்கவாட்டில் திண்ணயிருக்கும்படி அருகில் ஒரு நாற்காலி போட்டு உண்ணச் செய்தார்கள். இரண்டு பேர் கையில் ஸ்பூன்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பதார்த்தத்திலும் சிறிது சிறிது எடுத்து, அதன் விவரத்தையும் சொல்லி அவர் கையில் வைத்தார்கள். ஒவ்வொன்றின் பெயரையும் செய்முறையையும் விசாரித்து உண்டு அவர் ரசித்துப் பாராட்டினாராம்.
ஒளவைப் பாட்டி பாரிமகளிராகிய அங்கவை,சங்கவை என்பவர்கள் வாழ்ந்த குடிசைக்குப் போனாள். தந்தையை இழந்த அவர்கள் வறிய நிலையில் இருந்தார்கள். ஒளவைப் பாட்டி போனபோது அவருக்கு உணவளித்தார்கள்.மிகவும் எளிய முறையில் உணவு வழங்கினார்கள்.கீரையை வதக்கிப் போட்டார்கள். “எங்களாலே வேறு ஒன்றும் செய்யமுடியவில்லையே” என்று வருந்தினார்கள். அப்போது ஒளவையார், “கீரையையா போட்டீர்கள்? அமுதத்தையல்லவா வழங்கினீர்கள்?” என்று சொல்லி அந்த எளிய உணவைச் சுவைத்து மகிழ்ந்தார். அந்தக் கீரையைப் பாராட்டி ஒரு பாட்டே பாடிவிட்டார்.
- “வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
- நெய்தான் அளாவி நிறையிட்டுப்-பொய்யே
- அடகுஎன்று சொல்லி அமுதத்தை இட்டார்
- கடகம் செறியாதோ கைக்கு?”
(வெய்தாய்—குடுள்ளதாய். நிறைய இட்டு என்பது நிறையிட்டு என வந்தது. அடகு-கீரை. இந்தக் கைக்கு இரத்தினக் கடகம் அல்லவா போடவேண்டும் என்பது கருத்து.)
இராமபிரானுக்கு எத்தனையோ வகையான திறமைகள் உண்டு. சுவை அறிந்து சாப்பிடுவதிலும் அவன் வல்லவன். அதனால்தான் சாப்பாட்டு ராமன் என்ற திருநாமம் அவனுக்கு உண்டாயிற்று. எப்போது தெரியுமா?
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து காய், கனி, கிழங்குகளையே உண்டுவந்தான். சீதையைப் பிரிந்த பிறகு சுவையே பாராமல் எப்படியோ கால் வயிற்றை நிரப்பி வந்தான். இராவண சங்காரம் ஆன பிறகு தன் படைகளுடன் வான விமானத்தில் திரும்பினான். இடையிலே பாரத்துவாஜ முனிவர் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் அவனுக்கு மிகவும் சுவையான விருந்து வழங்கினார். அதைச் சுவைத்து உண்டான். அந்த நுகர்ச்சியிலே ஈடுபட்டபோது அயோத்திக்குப் போவதில் தாமதம் உண்டாகலாம் என்று கருதி அநுமனை அனுப்பித் தானும் பிறரும் வந்துகொண்டிருப்பதைப் பரதனுக்குச் சொல்லச் சொன்னான்.
பாரத்துவாஜர் ஆசிரமத்தில் பெருமாள் சாப்பாட்டு ராமனாக இருந்தமையால் இப்படிச் செய்யவேண்டி நேர்ந்தது.
இராமனே உண்ணும் கலையில் வல்லவ னென்றால், நமக்கு வேறு கலை எதுவும் தெரியாவிட்டாலும் அந்தக் கலை யிலாவது சிறந்து நிற்கலாம் அல்லவா?