புது டயரி/எழுதுகோலின் அவதாரம்
“எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” என்று பாரதியார் பாடுகிறார். எழுதுகோல் தெய்வம் என்பது முக்காலும் உண்மை. பேனா பென்ஸில்களைச் சரஸ்வதி பூஜையில் வைத்து வழிபடுகிறார்களே, அதை நினைத்து நான் இப்படிச் சொல்லவில்லை. தெய்வம் எப்படி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவத்தை எடுத்துக் கொள்கிறதோ, அப்படி எழுதுகோலும் எத்தனையோ அவதாரங்களை எடுத்திருக்கிறது. அவதாரம் எப்படிப் புதிதாக இருக்கிறதோ அதுபோல எழுதுகோல் எடுக்கும் அவதாரமும் புதிது புதிதாக இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் ராமாவாதாரம் ஆன பிறகுதான் கிருஷ்ணாவதாரம் கிருஷ்ணாவதாரத்தின்போது ராமர் இருக்கிறதில்லை. எழுதுகோல் அப்படி இல்லை. பழையதும் புதியதும் கலந்து நடமாடி வருகின்றன.
அந்தக் காலத்திலெல்லாம் காகிதம் கிடையாது. பனையோலேயில் தான் எழுதிவந்தார்கள். எழுத்தாணியால் எழுதி வந்தார்கள். நாம் இப்போது பேணாவினால் எவ்வளவு வேகமாக எழுதுகிறோமோ, அவ்வளவு வேகமாக எழுத்தாணியால் எழுதி வந்தார்கள். வேகமாக எழுதினார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்தில் வேகமாக ஓலையில் எழுதுபவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு எழுத் தாளர்கள் என்று பெயர். எழுத்தாளன் சேந்தன் என்று ஒரு புலவரே இருந்திருக்கிறார், கூலிக்கு எழுதிக் கொடுக்கிறவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு புலவரிடமும் யாரேனும் ஒருவராவது இருந்து அவர் சொல்வனவற்றை எழுதி வருவார். அவருக்குக் கற்றுச் சொல்லி என்று பெயர். ஒலையில் கூலிக்கு எழுதுகிறவர்கள் பெரிய புலவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஏதோ ஒரளவு தமிழில் பயிற்சியிருந்தால் போதும். நிரம்பிய புலமை இல்லாதனாதல் அவர்கள் தவறு செய்வதும் உண்டு. “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்று ஒரு பழமொழி வழங்குகிறது. “தவலை போயிற்று” என்று எழுத வேண்டியதை, “தலை போயிற்று” என்று எழுதுகிறவர்களும் இருந்தார்கள்.
மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. “மூண்ணும் முறை பகர்த்தும் போழ் ஸமுத்ரம் மூத்ர மாகுன்னு” என்பது அது. ஏட்டில் ஸமுத்திரம் என்று இருந்தது.பிரதி பண்ணினவன் ஸ வை விட்டு விட்டு முத்ரம் என்று எழுதி விட்டான். அதைப் பார்த்து மற்றொருவன் எழுதினான்; முத்ரமாக இருக்காது, மூத்ரமாகத்தான் இருக்க வேண்டு மென்று அவன் மூத்ரம் என்று எழுதிவிட்டான், ஸமுத்ரம் முத்ரமாகிப் பிறகு மூத்ரமாகி விட்டது. முன்றாவது முறை பிரதி செய்யும்போது ஸமுத்ரம் மூத்ரமாகும் என்பது மலையாளப் பழமொழியின் பொருள்.
தமிழ்ச் சங்கத்தில் நன்றாகப் படித்தவர்களே எழுத்தாளர்களாக இருந்தார்கள். அவர்கள் ஓர் அறையில் உட்கார்ந்திருப்பார்கள். அறைக்கு வெளியே புலவர்கள் அமர்ந்திருப்பார்கள். யாராவது புதிய புலவர் ஒருவர் அங்கே வந்து தாம் இயற்றியிருக்கும் கவிதையைப் பாடிக் காட்டுவார். அவர் பாடப் பாட உள்ளே உள்ளவர்கள் அதை எழுதிக் கொள்வார்கள். புலவர் பாடி முடித்தவுடன் சங்கப் புலவர்கள், “இந்த நூல் பழைய நூல்போல இருக்கிறதே!” என்று சொல்வார்களாம். வந்த புலவர், “இல்லையே! நான் புதிதாகப் பாடியது அல்லவா?” என்பார். “இந்த நூலின் பிரதி எங்கள் நூல் நிலையத்தில் இருக்கிறதே” என்று சங்கப் புலவர்கள் சொல்லுவார்களாம். உள்ளே இருந்தவர்கள், சொல்லச்சொல்ல எழுதிய நூலைக் கொண்டு வந்து காட்டுவார்களாம். வந்த புலவர் வயிறு எரிந்து போவாராம். இப்படிப் பல காலம் கடந்து வந்ததாம்.
இப்படி அக்கிரமம் நடந்து வருவதை இடைக்காடர் என்னும் புலவர் கேள்வியுற்றார் எப்படியாவது இந்த அநியாயத்தை வெளிப்படுத்தி மறுபடி நடக்காமல் செய்து விடவேண்டுமென்று அவர் தீர்மானித்தார்.
அவர் சங்கத்துக்குப்போய்த் தாம் ஒரு நூல் பாடியிருப்பதாகச் சொன்னர். “வெண்பாவால் ஆனது அந்த நூல்” என்றும் சொன்னார். சங்கப் புலவர்கள் அதைச்சொல்லும் படி சொன்னார்கள். இடைக்காடர் சொல்லப் போவதை எழுதிக் கொள்ள உள்ளே சிலர் தயாராக இருந்தார்கள். இடைக்காடர் பாடத் தொடங்கினார். பாட்டின் நடுவில் காக்கை முதலியவற்றின் ஒலியைக்கவிதையோடு இணைத்துப் பாடினார். அந்த ஒலிகளை எப்படி எழுத்தால் எழுதுவது. என்று தெரியாமல் உள்ளே இருப்பவர்கள் யோசித்தார்கள். அதற்குள் இடைக்காடர் மேலே சில பாடல்களைச் சொல்லிவிட்டார். அவர் பாடி முடித்தவுடன் சங்கப் புலவர்கள், “இந்த நூல் எங்களிடம் இருக்கிறதே!” என்று சொன்னாா்கள். இடைக்காடர், “எங்கே எடுத்துவரச் சொல்லுங்கள்” என்று கேட்டார். உள்ளே இருந்த எழுத்தாளர்களை வருவித்து ஏட்டைப் பார்த்தபோது அரையும் குறையுமாக எழுதியிருந்தார்கள். திருட்டு வெளிப்பட்டுவிட்டது. “இனி இப்படிச் செய்யாதீர்கள்” என்று சொல்லிவிட்டுப் போனாராம் இடைக்காடர். எழுத்தாணிக்கு ஊசி என்றும் ஒரு பெயர் உண்டு. இடைக்காடர் பாடிய நூல் எழுத்தாணியினால் எழுத முடியாமல் அதன் தொழிலை முறியச் செய்தமையால் அதற்கு ஊசி முறி என்று பெயர்.
“காக்கை யிருந்து கஃறென்ன” என்று அந்த நூலில் வரும். காக்கையின் ஒலியை எப்படி எழுதுவது? ஏதோ ஒருவகையில் கஃறென்ன என்று எழுதிவைத்திருக்கிறார்கள். ஆட்டை ஓட்டும்போது கோனான் நாக்கை ஒருவகையாக மடித்து ஓர் ஒலியை எழுப்புவான். அதை எப்படி எழுதுவது? ‘இச், இச்’ என்றுதான் எழுத வேண்டும். அவன் எழுப்பும் ஒலி தெரியாவிட்டால் அந்த எழுத்துக்களிலிருந்து அதைத் தெரிந்து கொள்ள முடியாது.
எழுத்தாணியில் குண்டெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என்றெல்லாம் பலவகை உண்டு. ஒலையைச் சீவுவதற்குக் கத்தி ஒரு பக்கத்திலும் எழுத்தாணி ஒரு பக்கத்திலும் இருக்க மடக்கிக் கொள்ளும்படி இருக்கும் ஒருவகை எழுத்தாணி உண்டு. நீளமாக ஒருபக்கம் கத்தியும்.மற்றொரு பக்கம் எழுத்தாணியுமாக மடக்காமலே அமைந்த எழுத்தாணியும் உண்டு.மரத்தினாலும் தந்தத்தினாலும் பிடிபண்ணி எழுத்தாணியைப் பதித்திருப்பார்கள்.
எழுத்தாணி போன பிறகு இறகு பேனா வந்தது. பறவைகளின் இறகின் அடிப்பாகத்தைக் கூர்மையாகச் சீவி அதை மையில் தோய்த்து எழுதினார்கள். அந்தப் பேனாவாகிய இறகின் அடியைக் கூர்மையாகச் சீவுவதற்காகச் சிறிய கத்தி இருக்கும். பேனாவைச் சீவ உபயோகப்பட்டதால் அதற்குப் பேனாக் கத்தி என்ற பெயர் வந்தது. பூர்ஐ பத்திரத்தில் ஒருவகைத் தூரிகையால் பழங்காலத்தில் எழுதினார்கள்; வடநாட்டில் அதிகமாக எழுதினார்கள். பிறகு, இரும்பு முள் வந்தது. அந்த முள்ளுக்கு நிப் (Nib) என்று ஆங்கிலத்தில் பெயர். அதைச் செருக ஒரு குவளை; அதைச் செருக ஒரு கட்டை. இப்படி மூன்று அங்கங்களோடு உருவான எஃகுப் பேனாவை மைக்கூட்டில் தோய்த்து எழுதினார்கள். எழுதுகோல் எழுத்தாணியாக இருந்தது மாறிப் பேனாவாயிற்று. பேனா என்று ஆங்கிலத்தில் வழங்குவதையே நாம் பேனா என்று அழகிய தமிழ் வடிவம் கொடுத்து வழங்கிவருகிறோம்.
பேச்சு, எழுத்து ஆகிய இரண்டும் இனமானவை. அழகாகப் பேசுவது, அழகாக எழுதுவது இரண்டும் கல்வித் திறமையுடையவர்கள் செய்கிற காரியம். பேசுவதற்கு உதவுவது நா; எழுதுவதற்கு உதவுவது பேனா. பேசும் திறமையுள்ளவர்களை நாவலர் என்று சொல்கிறோம்; எழுதும் ஆற்றல் உள்ளவர்களைப் பேனாவலர் என்று சொல்ல லாம் அல்லவா? பென்னைப் பேனாவாகத் தமிழில் ஆக்கிக் கொண்டதனால் இப்படி நயம்படச் சொல்ல முடிகிறது. யாழ்ப்பாணத்துக்காரர்கள் பேனா என்று சொல்கிறதில்லை; பேனை என்றுதான் சொல்வார்கள். பென்னிலிருந்து பேனா வந்து, பேனாவிலிருந்து பேனை வந்திருக்க வேண்டும்.
எஃகுப் பேனாவுக்கு ஜோடி மைக்கூடு. அந்தக் காலத்தில் கடுக்காய் மையை அவரவர்களே தயாரித்துக் கொள்வார்கள். அது நல்ல கறுப்பாக இருக்கும். நன்றாக எழுதுகிறவர்கள் அந்த மையில் எழுதினால் அச்சுப் போலவே இருக்கும். மைப் பவுடர் வாங்கி மை கரைத்துக் கொள்வார்கள். மைவில்லையும் இருந்தது. அந்த மையினால் எழுதினால் எவ்வளவு பளிச்சென்று இருக்கும் இப்போது மைகள் வருகின்றனவே, எல்லாம் அழுது வடிகின்றன!
கணக்குப் பிள்ளைகள் எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை கூடிக் கணக்குகளைச் சரிபார்த்து எழுதுவார்கள். அதற்கு ஜமாபந்தி என்று பெயர். அப்போது ஒரே மைக் கூட்டை நடுவில் வைத்துக்கொண்டு பல பேர் தம் பேனாவை அதில் தோய்த்துத் தோய்த்து எழுதுவார்கள். அந்த மைக் கூடு சமதர்ம மைக்கூடாக இருக்கும். யார் பொருளாவது பலருக்குப் பயன்பட்டால் அதை “ஜமாபந்தி மைக்கூடு” என்று சொல்வார்கள்.
எழுதுகோல் பேனா வடிவம் மாத்திரமா எடுத்தது? பென்சில் வடிவமும் எடுத்தது. காகிதத்தில் எழுதுவது. காகிதப் பென்சில். சிலேட்டில் எழுதுவது சிலேட்டுப் பென்சில். அதற்குச் சிலேட்டுக் குச்சி, பலப்பம் என்றும் திருநாமங்கள் உண்டு. பள்ளிக்கூடத்துப் பையன் நீளமான சிலேட்டுக்குச்சி வாங்கி அதைச் சின்னச் சின்னதாக ஒடித்து வைத்துக் கொள்வான்; தன்னிடம் நிறையப் பென்சில்கள் இருப்பதாய்ப் பெருமையடித்துக் கொள்வான். காகிதப் பென்சிலில், கறுப்புப் பென்சில், காப்பியிங் பென்சில் என்று இரண்டு வகை உண்டு. பெருமாள் செட்டி காப்பியிங் பென்சில் என்றால் அந்தக் காலத்தில் மகிமை அதிகம்.லேசில் தேயாது. பல வருஷங்களுக்கு வைத்துக்கொள்வார்கள். சிவப்புப் பென்சில், லேப் பென்சில்களை வாத்தியார்கள் மார்க்குப் போட வைத்துக்கொள்வார்கள். ஒரு பக்கம் சிவப்பும் மற்றொரு பக்கம் நீலமும் இணைந்த பென்சில்களும் உண்டு.
பிறகு வந்தது ஊற்றுப் பேனா(Fountain Pen). ஊற்றுப் பேனாவில் எழுதுவது ஒரு காலத்தில் கெளரவம். இப்போதெல்லாம் ஊற்றுப் பேனா என்று யார் சொல்கிறார்கள்? பேனா என்றாலே ஊற்றுப் பேனாத்தான். முதல் வகுப்புப் படிக்கிற பையன் முதல்கொண்டு பேனாவில்தான் எழுதுகிறான். தனியே மைப்புட்டியை நாடாமல் தன் வயிற்றுக்குள்ளே மையை அடக்கிக் கொண்ட பேனா எழுதுவதற்கு எவ்வளவோ எளிதாக இருக்கிறது.
பேனாக்களில்தான் எத்தனே வகைகள் வந்துவிட்டன! கழுத்தைத் திருகி மையைப் போட்டுக்கொள்ளும் பேனாக்கள் மறைந்து வருகின்றன. பின்னாலே பம்பை வைத்து மைப் புட்டியில் வைத்துப் பம்பை இயக்கி உறிஞ்சும்படி உள்ள பேனாக்களே இப்போது அதிகம். பின்புறத்தைத் திருகி மையை உறிஞ்சச் செய்யும் பேனாவும் இருக்கிறது. பால் பாயிண்ட் பேனா வேறு வந்திருக்கிறது.
நான் முதல் முதல் ஊற்றுப் பேனா வாங்கினபோது எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. என்னுடைய நண்பருக்குப் பக்கம் பக்கமாக அதைக் கொண்டு கடிதம் எழுதினேன். கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் ஆவேசத்தோடு எழுதினேன். வெள்ளைத்தாளில் பேனா இயங்குவதைப் பார்த்தால் வெண் பளிங்கு மேடையில் குதிரை ஓடி வருவது போல அல்லவா இருக்கிறது?
ஆனால் பம்ப் பண்ணுகிற பேனாவில் ஒரளவுதான் மை பிடிக்கிறது. ஏதாவது சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கும்போது பேனாவில் மை ஆகிவிட்டால் எவ்வளவு கோபம் வருகிறது தெரியுமா? அதை ஒடித்துப் போட்டு விடலாமா என்று எரிச்சல் உண்டாகிறது. மைக் கூட்டைத் தேடிப் பேனாவை நிரப்பிக் கொள்வதற்குள் நமக்கு இருந்த கற்பனை வேகம் போய்விடுகிறது. சேர்ந்தாற்போலச் சில மணிகள் எழுதுவதற்கு இந்தப் பேனாக்கள் பயன்படுவதில்லை. அதற்காக மைப்புட்டியையே பேனாவில் கட்டிக் கொள்ள முடியுமா?
என்னுடைய எழுத்து அவ்வளவு மோசமானது அல்ல. நன்றாக இருக்கிறது என்று சிலர் சொல்வார்கள். அழகாக இருக்கிறது என்று சிலர் பாராட்டுவார்கள். மற்றவர்கள் பாராட்டுகிறார்களோ இல்லையோ, என் மனைவி, “ரொம்ப அழகாக இருக்கிறது” என்று பாராட்டுவாள். அவளுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்! அவளும் எனக்கு எழுதுவதுண்டு. அவள் எழுத்து எனக்கு மாத்திரம் அழகாக இருக்கும். மற்றவர்கள், “என்ன இது? ஈ மையில் விழுந்து உட்கார்ந்தாற்போல் எழுதுகிறாயே” என்று சொல்வார்கள். இதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு ரோசம் வந்துவிட்டது. கையெழுத்தைத் திருத்திக்கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். என் பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள். அவளுக்கென்று தனியே பேனா இருக்கிறது. ஆனாலும் என் பேனாவில் எழுதினால் எழுத்து நன்றாக வரும் என்பது அவள் நினைப்பு. அதை எடுத்து எழுதினாள். எப்போதாவது யாருக்காவது ஒரு கடிதம் அரைக் கடிதம் எழுதுகிறவள், சில காலமாக விழுந்து விழுந்து பலருக்குக் கடிதம் எழுதினாள். நான் ஆச்சரியப் பட்டேன். அவள் எந்தப் பேனாவினால் எழுதுகிறாள் என்பதை நான் கவனிக்கவில்லை.
நன்றாக எழுதிக் கொண்டிருந்த பேனா அது. சில காலமாக அது என் போக்கில் எழுதாமல் தன் போக்கிலே எழுதலாயிற்று. முள்ளைத் தடவிக் கொடுத்தேன். உதறிப் பார்த்தேன். முள்ளின் பிளப்பைச் சரிபண்ணுவதற்காக இப்படியும் அப்படியும் திருப்பினேன். கொஞ்சமாகப் பலகையில் வைத்து அழுத்திப் பிறகு எழுதினேன். என்னுடைய பழைய எழுத்து வரவே இல்லை. அப்போதுதான் எனக்கு ஒர் எண்ணம் வந்தது. வேறு யாரோ என் பேனாவை எடுத்து எழுதுவதனால் அது புதிய பாதையில் போகிறது என்று ஊகித்தேன். “என் பேனாவை யார் எடுத்து எழுதினார்கள்?” என்று கேட்டேன். “யார் எழுதுவார்கள் நான்தான் எழுதினேன்” என்று என் மனைவி தனக்கு உரிமை உண்டு என்று தொனிக்கும்படி பதில் சொன்னாள். “உன்னை யார் எடுக்கச் சொன்னது?” என்று கோபத்துடன் கேட்டேன். “பேனாவை எடுக்க யாரிடம் கேட்க வேண்டும் நான் அதை ஒடித்து விட்டேனா?” என்று அவள் எதிர்க் கேள்வி விடுத்தாள். “இதோ பார்; இது குட்டிச் 96 s புது ட்யரி
சுவராகிவிட்டது. எழுதவே வரவில்லை” என்று அதை மேஜை மேலே விட்டெறிந்தேன். “ஆமாம்! நான் தொட்டால் குட்டிச் சுவராகத்தான் ஆகும்” என்று சொல்லி விட்டு அவள் உள்ளே போய்விட்டாள். இரண்டு நாட்களாயின, அந்தக் கோபம் ஆற.
“பைத்தியமே, என் பேனாவ எடுக்கக் கூடாது என்று சொன்னதன் அர்த்தம் உனக்குத் தெரியவில்லையே! ஒவ்வொருவருடைய எழுத்தும் ஒரு மாதிரி. பேனா முள்ளில் பிளவு இருக்கிறது. இரண்டு பிளவாக இருப்பது உனக்குத் தெரியுமே சில பேர் இடது பக்கமாகச் சிறிது சாய்த்து எழுதுவார்கள். அந்தப் பேனா முள்ளில் இடது பக்கம் அழுந்திச் சற்றுத் தேயும். அப்படியே வலப்பக்கமாக எழுதுகிறவர்கள் பேனா முள் வலப்பக்கமாகச் சற்றுத் தேயும். ஒருவர் பேனா மற்றவருக்குச் சரியாக எழுதாது. அப்படி எழுதினால் பழைய நிலை மாறி இரண்டு பேருக்கும் சரியாக எழுதாமல் போய்விடும்” என்று அவள் சாந்தமாக இருக்கும்போது பேனாத் தத்துவத்தைப்பற்றி ஒரு சொற்பொழிவே ஆற்றினேன்.
“அதனால்தான் உங்கள் பேனாவினால் நான் எழுதும் போது என் எழுத்து மோசமாக இருக்கிறதோ?” என்று அவள் கேட்டாள். நான் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொண்டாள். ஆனால் தன்னுடைய நல்ல எழுத்து என் பேனாவினால் மோசமாகி விட்டதாம்!
என்றாலும் நான் இல்லாதபோது என் பேனாவை எடுத்து எழுதும் சபலம் அவளுக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது; எடுத்து எழுதுகிறாள். நான் என்ன செய்வது: இதைவிட வேடிக்கையான நிகழ்ச்சி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பல ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் பரீட்சை எழுதினேன்; 1933-ஆம் ஆண்டு அந்தப் பரீட்சையில் நான் மாகாணத்தில் முதல் வகைத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் காசிமடத்துப் பரிசாகிய ஆயிர ரூபாயைப் பெற்றேன். அப்போது பார்க்கர் ஜூனியர் பேனா ஒன்று வைத்திருந்தேன். அதைக் கொண்டு பரீட்சை எழுதினேன்.
பரிசு பெற்ற பிறகு அந்தப் பேனாவிடம் எனக்கு மதிப்பு அதிகமாயிற்று. “இது ஆகிவந்த பேனா; எனக்குப் பரிசு வாங்கிக் கொடுத்தது” என்று என் நண்பர்களிடம் சொல்வேன். பிறகு என் மனைவியிடமும் அதைச் சொன்னேன். அந்தப் பேனாவை ஜாக்கிரதையாகப் பெட்டியில் வைத்திருந்தேன். பல ஆண்டுகள் ஆயின. எனக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிடமும், “அந்தப் பேனா ஆகிவந்த பேனா” என்று சொல்லி அதன் மகிமையை விவரித்தேன்.
என் மூத்த மகனுடைய நண்பன் ஒருவனுக்கு இந்தச் செய்தி தெரிந்தது. நான் பரீட்சையில் வெற்றி பெற்றதோடு பரிசையும் பெறும்படி செய்தது அந்தப் பேனா என்பதை என் மகனே அவனுக்குச் சொல்லியிருப்பான். தந்தையின் புகழைச் சொல்லும்போது மகன் பெருமிதத்தோடு சொல்வது இயல்புதானே? அந்தப் பையன் எஸ். எஸ். எல்.ஸி படித்துக் கொண்டிருந்தான். முதல் வருஷம் பரீட்சையில் தோல்வியடைந்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. என் மகனிடம், “இரண்டாம் முறை பரீட்சை எழுதப் போகிறேன். உன்னால் ஒர் உபகாரம் ஆகவேண்டும்” என்றான். “என்ன வேண்டும்?” என்று என் மகன் கேட்டான்.
“உங்கள் அப்பா அந்த ஆகிவந்த பேனாவை உள்ளே தானே வைத்திருக்கிறார் அதை அவருக்குத் தெரியாமல் எடுத்து வந்து கொடு. ஒரு வாரம் வைத்திருந்து பரீட்சை எழுதிவிட்டுப் பிறகு பத்திரமாகக் கொடுத்து விடுகிறேன். அது ஆகிவந்த பேனா அல்லவா? எனக்குப் பரீட்சை நிச்சயமாகப் பாஸ் ஆகும்” என்றான். என் மகன் அவன் வேண்டுகோளை நிறைவேற்றினான்.
பையன் ஆகிவந்த பேனாவைக் கொண்டு பரீட்சை எழுதினான். பேனா மறுபடியும் இருந்த இடத்துக்குப் பத்திரமாக வந்து சேர்ந்தது. பரீட்சை எழுதிய பையன் நிச்சயமாக்த் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பியிருந்தான். ஆனால்—? பரீட்சை முடிவு வந்தது; பழையபடி தோல்வி தான்!