புது வெளிச்சம்/அந்ருதாத் சத்யமுபைமி

5

அந்ருதாத் சத்யமுபைமி



ன் அருமை நண்பனே! உன் வாய் திறந்து சொல். ‘அந்ருதாத் சத்ய முபைமி' என்று. ஓதி உணர்ந்து பிறர்க்கு உரைத்துத் தானும் அதற்கு தக அடங்கி ஒழுகாத ஒருவன் பேதையிலும் பேதை என்கிறார். நமது திருவள்ளுவர். திருவள்ளுவர் யாரென நீ தமிழனாய்ப் பிறந்தும், கலாசாலைக் கல்வி கற்றும் இன்னும் சரிவர அறிந்து கொள்ளவில்லை. மெய்யாகவே அவர்! தமிழர்தம் ஆத்மீக ஆசான். ஆகவே நான், 'அந்ருதாரத் சத்ய முபைமி' என உன்னைச் சொல்ல வேண்டுகிறேன். இந்த அருமைச்சூத்திரத்தின் பொருள் விளக்கிச் சொல்லுவதற்கு முன்பேயே ஒரு தடவை உன் வாய் உரைக்கட்டும் என்றுதான் வேண்டுகிறேன். அப்படிப்பட்ட மேன்மைக்குரிய பொருள் இதில் என்னதான் இருக்கிறது? என்று கேட்கிறாயா? சரி! இதோ சொல்கிறேன். கேட்டுக்கொள், பயப்படாமல் கேட்டுப் புரிந்துகொள், நீ புரிந்துகொண்டொழுகும் போதுதான், 'சரியான தமிழன்’ எனும் தகுதிக்குரியவனாகிறாய்.

'பொய்யை விட்டு நான் மெய்யை நாடுகிறேன். என்பது தான் அதன்பொருள்; புரிகிறதா? ஏன் விழிக்கிறாய், நினைவு தவறி விட்டதா? நல்ல வேளை, மூர்ச்சை போட்டுக்கொண்டு கீழே விழவில்லை, அந்த அளவில் நான் உன்னை மெச்சிப் பாராட்டுகிறேன். சொல்ல பயமாக இருக்கிறது. அல்லவா?

பொய்யை விட்டு, மெய்யை நாடிக் கொள்ளாதவரையில் நீ உள்ளம் சுத்தமில்லாதவனாகவே இருப்பாய். உடலை மட்டும் நீராடிச் சுத்தம் செய்துகொண்டு உள்ளத்தைப் பொய்யால் மாசுபடுத்திக்கொண்டு வாழும் வாழ்க்கை அசுத்த வாழ்க்கை, முற்றிலும் அவல வாழ்க்கை என்பதை புரிந்துகொள்ளாததேன்? எதையறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அல்லது எல்லா நூல்களாலும் எது ஒன்றே அறியப்பட வேண்டியதாகுமோ அது இதுவேதான். அறிய வேண்டியதை அறிந்தவன் அடைய வேண்டியதை அடைந்தே தீருகிறான். அகமகிழ வேண்டியதற்கு மாறாய் அச்சமடைவது அறியாமை எனப்படும். நண்பா! என் வார்த்தையை நீ நம்பாவிடினும் நமது ஆசான் வார்த்தையை நம்பலாமல்லவா?

'உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்திலெல்லாம் அவன் நிலைபெற்று என்றென்றும் உள்ளவனாகிறான்”, என்பது நூற்றுக்கு நூறு உண்மையானது, உலகத்தில் மனிதனாகப் பிறந்த ஒருவன் அடைய வேண்டிய பெரும் பேறுகளில்இதைவிடவேறெதுவும் உயர்ந்த தொன்றில்லையே.

உள்ளத்தில் பேராசையை ஒளித்து வைத்துக்கொண்டு உதட்டளவில் நல்லவனைப்போல் பேசிக் கிடைத்த காசைக் கெட்டியாகப் பிடித்துகொள்வது. வழக்கமாயிருந்தால் ஒருவன் siiக்கிரம் பணக்காரனாய் விடலாம். 'நூற்றுக்குமேல் ஊற்று' என்பது அனுபவம். பணமிருந்தால் பணம் வந்து ஒட்டிக்கொண்டே இருக்கும். ஆனால், பணம் கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள ஒரு மனிதன், தன் வாய் திறந்து சொல்ல பயப்படுகிற சொல் இதுதான்; 'நான் பொய்யை விட்டு மெய்யை நாடுகிறேன்' என்று சொல்ல அவன் உளம் ஒப்பாது ஒப்பி உரைக்கினும் நடைமுறைக்கு வராது. எனவே அந்த மெய்யைக் கைகூப்பி வணங்குவான். காணிக்கையும் போடுவான். கோயிலும் கட்டித்திருவிழா எடுப்பான்.

தெய்வம் எனும் சொல்லின் பொருள் எந்தவொரு பணக்காரனும் அறியான். அவன் கும்பிடும் தெய்வத்தின் பெயர் மெய்மை - வாய்மை - உண்மை. இம்மூன்று சொற்களும் சத்தியம் என்ற ஒரே சொல்லின் பொருள் என்கிறது உபநிசத்து. எனவே ஒருதனவான் தெய்வத்தைக் கைகூப்பிக் கும்பிடுவான். ஆனால் தெய்வமாகும் துணிவு அவனுக்குக் கிடையாது.

நீ பொய்யை விட்டு மெய்யை நாடினால், அதன் விளைவுஎன்ன? என்பதையறிய விரும்புவாயானால், உன் பிறவி பயனுள்ளதாகும் என்பதில் ஐயமே, இல்லை. அடுத்து வரும் உபநிசத்து இதை விளக்குகிறது. 'மானுசாத்தைவமுபைமி'. இதன் கருத்து மனித இயற்கையை விட்டு நான் தெய்வத்தன்மையை நாடுகிறேன். என்பதாம்.

உண்மையாகவே எந்தஒரு மனிதனாயினும் சரி, பொய்யை விட்டு மெய்யை நாடும். அதே கணத்தில் மனித இயல்பை விட்டுத் தெய்வமாகி விடுகிறான் என்பது அங்கை நெல்லிக்கனிபோல் இந்தச் சூத்திரம் எடுத்துக்காட்டுகிறதல்லவா? இதைக் காட்டிலும் மனிதனாய்ப் பிறந்தவன்அடையக் கூடிய பெரும் பாக்கியம் வேறு என்னதான் இருக்க முடியும்.

இன்று நமது தேசம் சத்தியத்தை அறவே புறக்கணித்து ஒதுக்கி விட்டுள்ளது. சத்தியத்தைப் புறக்கணித்து விட்டதெனின் தெய்வத்தையே புறக்கணித்து விட்டுள்ளது என்றுதான் பொருள்படும் இதை எவரும் மறுக்க முடியாது.

‘பரம்பிரம்மம்' என்பது என்ன? எனில் உபநிசத்து சொல்லும் பதில், ரிதம் சத்தியம் பரபிரம்மம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. மேலும் விளக்கமும் தருகிறது, ரிதம் விவகாரிகம், உலகின் ஒழுங்கும் அழகும். சத்தியம் பாரமார்த்திகம், அடிப்படையான உண்மை என இந்த உண்மையை எந்த மடாதிபதியும் எடுத்துக் கூறிவிளக்காதது தான் நமது தேசத்தின் எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணம் எடுத்துக் கூறி விளக்காதது மட்டுமல்ல; குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்தது என்பது போல உருவ வணக்கத்திற்கு முக்கியம் கொடுத்து இன்றும் நாட்டை நாசமாக்கிக் கொண்டுள்ளனர். வெறும் பெயர்ச் சொற்களுக்கு உருவம் உண்டாக்கிக் கோயிலில் வைத்துக் கும்பிடுவது ஆத்மீகம் என்று கூறுகின்றனர்.

'திரிபாதஸ்யாம் ருதம் திவி' - சத்து, சித்து, ஆனந்தம் என மூன்று பிரிவுகளாக உள்ளது. அந்தத் தெய்வம் என்கிறது. ஒரு உபநிசத்து. மற்றொரு உபநிசத்து, 'சத்தியம், ஞானம், ஆனந்தம், பிரம்மம்' என்று விளக்கித் தெளிவிக்கிறது. 'தேவாஸ்தம் பராதுர்யோஅன்யத்ராத்மனோ தேவான் வேத': தன்னுடைய ஆத்மாவுக்கு வேறாகத் தெய்வங்கள் உள்ளன என்று எவன் எண்ணுகிறானோ அவனை அந்தத் தெய்வமே தள்ளிவிடுகிறது என்கிறது இன்னொரு உபநிசத்து.

உபநிசத்துகள் மாத்திரம் அன்று: திருமந்திரமும் இப்படியே சொல்லித் தெரிவிக்கிறது. 'வானில் ஈசனைத் தேடும் மதியிலிகாள் தேனும் இனிமையும் சிவப்போ கருப்போ, - தேனும் இனிமையும் தேரவொன்றானதுபோல் சீவனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே', என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

விஞ்ஞானம் இரண்டு என்பர் அறிஞர். ஒன்று பொருளைப் பற்றிய விஞ்ஞானம் மற்றொன்று ஆன்மாவைப் பற்றிய விஞ்ஞானம். இன்று உலகம் முழுவதும் பயிலுகின்ற விஞ்ஞானம் பொருள் பற்றிய விஞ்ஞானம் மட்டும்தான். ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் திருமந்திரம், உபநிசத்துகள், திருக்குறள், புறநாநூறில் பல பாடல்களில் மட்டும் உண்டு. அவற்றில் உள்ளது உள்ளபடி விவரித்துக் கூறுவது உபநிசத்துகள். இந்த உபநிசத்துகளை மட்டும் தக்க ஆசிரியர்களைக் கொண்டு கல்லூரிகளில் ஒரு பாடமாகப் பயிற்று வித்தால் ஒரு சில ஆண்டுகளில் நமது தமிழகம் சுவர்க்கமாக மாறி விடும். மக்கள் தேவர்களாகிவிட முடியும் என்றும் நான் தெளிவாக அறிந்து இங்கு கூறுகிறேன்.

உபநிசத்தை ஆரியர்கள் தம் உடைமையாக மறைத்து வைத்துக் கொண்டு இன்றும் மக்களை உருவணக்கம் செய்து வைத்துக் கொண்டு வீணாக்கி வருகின்றனர் என்று நான் குற்றம் சுமத்துகிறேன் வந்த நீதி நிலையத்திலும் இதை நிரூபிக்கவும் தயாராய் இருக்கிறேன்.

சத்தியமே கடவுள், ஒழுக்கமே நடைமுறை என்று கூறி இப்பகுதியை முடிக்கிறேன்.

❖ எந்த அரசு நாட்டு மக்களின் சீவாதார உரிமைகளை
   அலட்சியப்படுத்துகிறதோ அந்த அரசு வெகு விரைவில்
   அழிந்துவிடும்.
- திப்பு சுல்தான்

❖ அன்பு இதயத்தின் இளமை; சிந்தனை அதன் வளர்ச்சி;
   பேச்சு அதன் கிழத்தனம்.
- கிப்ரான்

❖ 'சமுதாயம்’ எனும் பயிரில், ஒழுக்கமில்லாத ஒவ்வொரு
   மனிதனும் களைந்து எளியப்பட வேண்டிய களைகளைப்
   போன்றவனேயாவான்.

  காலத்தை வீணாய் கழிக்கும் ஒவ்வொரு மனிதனும்
  ஞாலத்திற்கு ஒரு நச்சுப் பொருள்.

  ஒரு தேசத்திற்கு பெரிய துன்பம் நேர்வது எப்போது என்றால்
  கெட்டவர்களை எல்லாம் நல்லவர்கள் என்று நினைக்கும்
  போதுதான்.
- வெ.