புத்தர் பொன்மொழி நூறு/2
6. அறிஞர் இயல்
நம்முறு தவறைக் காட்டும்
நல்லவர் கிடைக்கக் கண்டால்
வெம்மை[1] சேர் பகைவ ராக
வெறுத்திடல் மடமை யாகும்.
நம்முடை நலத்திற் காக
நல்லபொற் புதையல் காட்டும்
செம்மைசேர் நண்ப ராகச்
சிறப்பொடு போற்றல் வேண்டும்.
17
ஆழ்ந்தநீர் நிலையில் தூய்மை
அமைதியோ டிருத்தல் போல
ஆழ்ந்தநல் அறிவு மிக்கோர் .
அகத்தினில் தூய்மை யோடு
தாழ்ந்திடும் அடக்கம் கொண்டு
தரையினர்[2] போற்ற வாழ்வர்
ஆழ்ந்திடத் துடிப்பர் பற்றில்
ஆழறி வில்லா மூடர்.
18
7. அருகந்தர் இயல்
முடுக்குறும் தேரின் பாகன்
முரண்டிடும் பரிகள் தம்மை
அடக்கியே கட்டுள் வைக்கும்
ஆற்றலார் செயலே போல
இடக்குசெய் பொறிகள் ஐந்தும்
இம்மியும் மீறா வண்ணம்
மடக்கியே கட்டிக் காக்கின்
மறைத்திடும் துன்பம் எல்லாம்.
19
நிலத்தினைப் போன்று தாங்கி
நிலைத்திடும் பொறுமைப் பண்பும்
உளைத்தினை யளவும் இல்லா
ஊருணி நேர்தூய் மையும்
நிலைத்துள வாயில் கம்பம்
நிகர்த்திடும் உறுதிக் கோளும்[3]
நலத்தொடு சேரப் பெற்றோர்
நலிந்திடார் துயரில் சிக்கி.
20
காடுதான் எனினும், சாலக்
கவர்ந்திடும் யாணர் மிக்க
நாடுதான் எனினும், நன்கு
நண்ணருங்[4] குழியென் றாலும்
மேடுதான் எனினும், நல்லோர்
மேவிடும் குடியி ருப்பே
ஈடிலா இடம தாகும்;
இவ்விடம் வாழ்தல் நன்றாம்
21
8. ஆயிரம் இயல்
ஆயிரம் பாவென் றாலும்
அரும்பொருள் இல்லை யாயின்,
ஆயுநற் பொருள்மி குந்த
அரியபா ஒன்றை ஒவ்வா.[5]
ஆயிரம் பேரைப் போரில்
ஆயிர முறைவென் றோனின்,
பாய்கிற உளத்தை வென்று
பண்படுத்து வோனே மல்லன்.
22
ஒழுக்கமும் உயர்ந்த பண்பும்
ஒருசிறி தளவும் இன்றி
இழுக்கமோ டாண்டு நூறோ
இன்னுமேல் பற்பல் லாண்டோ
வழுக்கி[6]யே வாழ்வோன் மெய்யாய்
வாழ்பவ னாக மாட்டான்.
ஒழுக்கமோ டொருநாள் வாழ்ந்தோன்
உண்மையாய் வாழ்ந்தோன் ஆவான்.
23
9. தீய நடத்தை இயல்
ஒன்றுதான் ஒன்றே ஒன்றென்(று)
உரைத்துநாம் தீமை செய்யின்,
ஒன்றுநீர்த் துளியும் சொட்டி
உயர்குடம் நிரப்பு தல்போல்
ஒன்றுவொன் றாகத் தீமை
ஒன்றியே மலையாய் மண்டும்
ஒன்றுவொன் றாக தன்மை
உஞற்றலே[7] உறுதி நல்கும்.
24
விள்ளரும்[8] பணம்கைக் கொண்டோன்
வேறொரு துணையும் இல்லோன்
கள்ளரால் திருட்டு நேரும்
கடுவழி செல்லா னாகி
நல்லவர் நடமா டுஞ்சீர்
நல்வழி செல்லு தல்போல்
எள்ளருத் தீமை நீக்கி
ஏத்திடும் அறமே செய்க.
25
கையினில் புண்ணில் லாதான்
கடுவையும் தொடலாம் நன்கு;
கையினில் பொருளில் லாதான்
கள்வருக் கஞ்சல் வேண்டா;
பொய்மைசேர் தீமை செய்யான்
பொன்றுதல்[9] என்றும் இல்லை,
மெய்மையே பற்று வோனை
மேவிடும் நன்மை எல்லாம்.
26
காற்றெதிர் புழுதி தூவின்,
கடுகி[10]யப் புழுதி தன்னைத்
துாற்றிய வனையே சேர்ந்து
துன்புறச் செய்தல் போல.
ஆற்றவும் பிறர்க்குத் தீமை
ஆற்றிடின், அந்தத் தீமை
ஆற்றிய வனையே பற்றி
அல்லலில் சிக்கச் செய்யும்.
27
10. ஒறுப்பு இயல்
ஆயனும் மாட்டைக் கோலால்
அடித்தடித் தோட்டல் போல,
தீயவை, செய்தோன் தன்னைத்
தீயவே துய்க்க ஒட்டும்.[11]
தீயினில் வீழ்ந்த பின்னர்த்
தீயினுக் கஞ்சல் ஆமோ?
தீயவை செய்த பின்பு
தீமையின் தப்பல் இல்லை.
28
வேடரும் எய்தற் கேற்ப
வில்லினை வளைத்துக் கொள்வர்;
நீடிய வயலுக் கேற்ப
நீரினை உழவர் கொள்வர்;
நாடிடும் வடிவு[12]க் கேற்ற
நன்மரம் தச்சர் கொள்வர்;
கூடிடும் சூழற் கேற்ற
குறியினைக் கொள்ளல் வேண்டும்.
29
11. முதுமை நிலை இயல்
வண்ணமேல் தீட்டிச் செய்து
வயங்கிடும் பொம்மை காயம்;
புண்ணொடு பற்பல் நோய்கள்
பொருந்திய திந்தக் கூடாம்;
எண்ணரு அவாவாம் குப்பை
இருந்திடும் அழுக்கு மேடாம்
நிண்ணிடத் தூய்மை மாண்பு
நலமொடு காத்தல் வேண்டும்.
30
என்பினால் கட்டப் பட்ட
இவ்வுடற் கோட்டை மேலே
வன்பிலாத் தசையும் மூடி
வயங்கிடும் போலி யாக.
துன்பமார் பிணியும் மூப்பும்
தூய்மையில் தீய நோக்கும்
வன்பொடு[13] குடியி ராமல்
வல்லையே காலி செய்க.
31
ஒப்பனை பலவும் செய்தே
ஒளிவிடும் மன்ன ரின்தேர்
தப்புதல் இன்றிப் போரில்
தகர்ந்திடு வதுபோல், இந்தத்
துப்பறு[14] உடலும் மூப்பு
தொடுத்திடும் போரில் தோற்கும்;
உப்பொடு வாழும் போதே
உயரறம் செய்தல் வேண்டும்.
32
வீட்டினை யாத்த கொத்தா!
வீடுதான் சிதைதல் காண்பாய்!
வீட்டினைப் புதுமை யாக்கும்
வினைதனில் வல்லை[15] யோநீ?
வீட்டினைப் பிணிமூப் பென்னும்
வீணரோ அழித்து விட்டார்.
காட்டினை அடையு முன்பே
கடுந்தவம் செய்யுமோ வீடு?
33
உறுதியாம் இளமை தன்னில்
உயரறி வுற்றி டாரும்,
உறுதியாய் உடல்உள் ளக்கால்
உயரறம் செய்யா தாரும்,
அறுதியாய் மீனே வாரா
அகல்மடை[16] கொக்கு தங்கி
இறுதியில் ஏமா றல்போல்
இன்பமே எய்த மாட்டார்.
34