12. தன் தூய்மை இயல்


அயலவர் பலர்க்கும் மேலாம்
அறமுரைப் பவன்தான் முன்னர்
மயல[1]றத் தன்னை மிக்க
மாண்புடை யவனாய்ச் செய்ய
முயலுதல் கடமை; பின்னர்
மொழியலாம் ஊர்க்கு நன்மை.
செயலதும் சொல்வ தேபோல்
செம்மையாய் இருத்தல் வேண்டும். 35

எவருமே தமக்குத் தாமே
இரும்பெருந் தலைவர் ஆவர்.
எவர்க்குமே வேறோர் மாந்தர்
எங்ங்னம் தலைவ ராவர்?
எவருமே தம்மைத் தாமே
இயற்கையாய் அடக்கி ஆளின்,
எவரும் எய்தல் ஒல்லா[2]
இனியநல் தலைமை ஏற்பர். 36

மணிகளுள் வைரம் மற்ற
மணிகளைச் சிதைத்தல் போல,
தனதுளந் தனிலே, தீமை,
தங்கிடத் தோன்றி மேலும்
இணையிலாப் பற்பல் தீங்கை
இழைத்திடச் செய்து, பின்னர்த்
தனதுவாழ் வினையே கல்லித்[3]
தகர்த்திடும், விழிப்பாய்க் காக்க 37

நன்மைசெய் வோனும் நீயே!
நலமறத் துன்பு றுத்தும்
தின்மைசெய் வோனும் நீயே!
தின்மையோ நன்மை தானோ
உண்மையில் உனது செய்கை;
ஒருவரும் பொறுப்பா காரே.
உன்னையே நீயே தூய்மை.
உடையனாய்ச் செய்தல் வேண்டும்.

38



உன்னிலும் பெரியோர் என்றே
ஒருசிலர் மகிழப் போற்றி
அன்னவர் தமக்கு மட்டும்
அரியபல் நன்மை செய்தே
உன்னைநீ மறத்தல் வேண்டா
உன்னுடைக் குறிக்கோள் விட்டே;
பொன்னினும், நேர்மைப் பண்பைப்
போற்றியே காத்தல் வேண்டும்

39



18. உலக இயல்

நீரிலே குமிழி போல
நிலையிலை உலக வாழ்வு
காரளி நீரி ருக்கக்
கானலை நாட லாமோ?
ஆருமின் கனியி ருக்க
அருந்தலேன் காஞ்சி ரங்காய்?[4]
நேருற அறமி ருக்க
தேடலேன் தீமைப் பாதை?

40

மண்டிடும் அறியா மையாம்
மாவிருள் மூழ்கி யோன்பின்
கண்டரும்[5] அறிவுச் செல்வம்
கணக்கிலா தடைவா னாயின்
கொண்டலின் விலகித் தோன்றும்
குளிர்நில வினைப்போல் அன்னான்
மண்டிணி ஞால மீது
மகிழ்வொடு மிளிரு வானே.

41



கண்ணியில் அகப்பட் டோங்கிக்
கலுழ்ந்திடும்[6] பறவை கள்போல்
புண்ணுறும் அவாவில் வீழ்ந்து
புலம்புவோர் பலரா யுள்ளார்.
கண்ணியின் விடுபட் டோடிக்
களித்திடும் மானைப் போல,
மண்ணினில் அவாவின் நீங்கும்
மாண்பினர் சிலரே உள்ளார்.

42



ஒண்கடல் சூழும் இந்த
உலகெலாம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றி ஆளும்
வேந்துறு பதவி தானும்
விண்கடந் திருப்ப தாக
விளம்பிடும் வீடு பேறும்,
மண்டனில்[7]அவாவ றுத்தோர்
மகிழ்ச்சியின் மேலா காவாம்.

43

  1. 42
  2. 43
  3. 44
  4. 45
  5. 46
  6. 47
  7. 48
"https://ta.wikisource.org/w/index.php?title=புத்தர்_பொன்மொழி_நூறு/3&oldid=1148421" இலிருந்து மீள்விக்கப்பட்டது