நூல் பயன்
[வெண்பா]


புத்தரின் பொன்மொழி போற்றுவோர் தீஅவாப்
பித்தது நீங்கிப் பெரியராய்—நித்தலும்
அல்லன நீக்கி அறநெறி பற்றியே
நல்லன கொள்வர் நயந்து.



பிற் சேர்க்கை
(புத்தர் பல்வேறு வேளைகளில் பலர்க்குக் கூறியவை)


நம்முடைக் குறையைச் சொல்வோர்
நன்மையே செய்வோ ராவர்.
நம்முடைக் குறையை அன்னார்
நவின்றிடா ராயின், ஓர்ந்[1]தே
நம்முடைக் குறைகள் முற்றும்
நாமறிந் திடுதல் எங்ஙன்?
நம்மைநாம் திருத்த இங்ஙன்
நல்வழி செய்வோர் வாழ்க!

1



ஒருபொருள் நாம்பி றர்க்கே
உதவிடின், அவர்ம றுப்பின்
தருபொருள் நமையே மீண்டும்
சார்ந்திடும் தன்மை போல,
ஒருவரை நாமி கழ்ந்தால்
ஒப்பவே மாட்டார்; அந்த
வெருவரும்[2] இகழ்ச்சி நம்மை
விரைவிலே மீண்டும் சேரும்.

2

மற்றவர் கடைப்பி டிக்கும்
மதத்தினைத் தாழ்த்திப் பேசல்,
உற்றதன் மார்பில் மல்லாந்[3]
துமிழ்வது போன்ற தாகும்.
மற்றவர் கொள்கை யாவும்
மாண்புடன் அணுகி ஆய்ந்து
நற்றமா யுள்ள வற்றை
நயமுடன் ஏற்றல் நன்று.

3



உடம்பினைப் போற்றா விட்டால்
ஒன்றுமே செயலொண் ணாதே[4],
உடம்பதின் நலவி யக்கம்
உயிரெனப் படுவ தாகும்.
உடம்பினைப் போற்று தல்தான்
உயிரினைப் போற்ற லாகும்.
உடம்பினை நன்கு போற்றி
உயர்செயல் புரிதல் வேண்டும்.

4



உலுத்திடும் கட்டை யாலே
ஒள்ளழல்[5] கடைதல் இல்லை,
அலுத்திடும் உடம்பி னாலே
அடைபயன் ஒன்றும் இல்லை.
கலைத்திறன் வளர்க்க நல்ல
கழகமும் காணல் போல,
நிலைத்திடும் உடம்பு வேண்டும்
நெடும்புகழ்ச் செயல்கள் ஆற்ற.

5



உடலினை வாட்ட லாலோ,
உணவினை மிகவும் மாந்தி[6]
உடலினைப் பெருக்க லாலோ
உறுநலம் ஏதும் இல்லை.
கெடலிலா தளவாய் உண்டு,
கிளர்பொறி அடக்கி ஆளும்
நடுநிலை வழியாம் ஒன்றே
நலவழி பயப்ப துண்மை.

6



காட்டிலே புல்லைத் தின்றால்
காணலாம் 'மோட்சம்' என்றால்,
காட்டுள மான்கள் யாவும்
கானுமோ மோட்ச வீட்டை?
ஈட்டமாம்[7] நீருள் தங்கின்
எய்தலாம் 'மோட்சம்' என்றால்,
கூட்டமாய் நீருள் வாழ்வ
குறுகுமோ வீடு பேற்றை?

7



ஆறுகள் யாவற் றிற்கும்
அளவிலாப் பெயர்கள் உண்டாம்;
ஆறுகள் அனைத்தும் ஓடி
ஆழ்கடல் கலந்த பின்னர்க்
கூறிடும் பெயர்கள் நில்லாக்
கொள்கைபோல் 'சாதி' யாவும்
வேறறு கழகம்[8] சாரின்
விரைவிலே மறைந்து போகும்.

8



இறைவரே உலகில் எல்லாம்
இயற்றினார் என்றால், அந்த
இறைவரே, பற்பல் தீமை
இயற்றுவோர்க் கெலாம்பொ றுப்போ?
இறைவரை நோக்கி ஏதும்
ஈகென வேண்ட லின்றி
முறைவழி கடமை ஆற்றின்
முன்னுவ[9] எல்லாம் முற்றும்.

9



அறவுரை வழங்கல் எல்லா
அறங்களின் சிறந்த தாகும்.
அறம்உரை சுவையின் மிக்க
அருஞ்சுவை யாதும் இல்லை.
அறம்தரும் இன்பின்[10] மேலாய்
ஆர்ந்திடும் இன்பம் உண்டோ
அறந்தனை இறுகப் பற்றி
அவாவினை அறுத்து வாழ்க.

10



(வேறு)


அறமென்னும் விளைநிலத்தில் அவாவென்னும் களையகற்றி
அறிவென்னும் கலப்பையுடன் ஆள்வினையாம் காளைபூட்டி
                                              
அறஉழுதே[11], அரியகாட்சி யாம்விதைகள் ஆரஇட்டே,
                                             
அரியபண்பாம் நீர்பாய்ச்சி அமைதியினை விளைத்திடுவீர்.

11

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
"https://ta.wikisource.org/w/index.php?title=புத்தர்_பொன்மொழி_நூறு/6&oldid=1684176" இலிருந்து மீள்விக்கப்பட்டது