புறப்பொருள் வெண்பாமாலை/உழிஞைப் படலம்
ஆறாவது
உழிஞைப்படலம்
தொகு- உழிஞை யோங்கிய குடைநாட் கோளே
- வாணாட் கோளே முரச வுழிஞை
- கொற்ற உழிஞையோ டரச உழிஞை
- கந்தழி யென்றா முற்றுழி ஞையே
- காந்தள் புறத்திறை யாரெயி லுழிஞை
- அருந்தோ லுழிஞை குற்றுழி ஞையொடு
- கோட்புறத் துழிஞை பாசி நிலையே
- ஏணி நிலையே யிலங்கெயிற் பாசி
- முதுவுழி ஞையே முந்தகத் துழிஞை
- முற்று முதிர்வே யானைக்கைக் கோளே
- வேற்றுப்படை வரவே யுழுதுவித் திடுதல்
- வாண்மண்ணு நிலையே மண்ணுமங் கலமே
- மகட்பா லிகலே திறைகொண்டு பெயர்தல்
- அடிப்பட விருத்த றொகைநிலை யுளப்பட
- இழுமென் சீர்த்தி இருபத் தொன்பதும்
- உழிஞை யென்மனா ருணர்த்திசி னோரே.
- உழிஞை
- குடைநாட்கோள்
- வாள்நாட்கோள்
- முரசவுழிஞை
- கொற்ற உழிஞை
- அரச உழிஞை
- கந்தழி
- முற்றுழிஞை
- காந்தள்
- புறத்திறை
- ஆரெயில் உழிஞை
- தோல் உழிஞை
- குற்றுழிஞை
- புறத்துழிஞை
- பாசிநிலை
- ஏணிநிலை
- எயிற்பாசி
- முதுவுழிஞை
- அகத்துழிஞை
- முற்றுமுதிர்வு
- யானைக்கைக்கோள்
- வேற்றுப்படை வரவு
- உழுதுவித்திடுதல்
- வாண்மண்ணுநிலை
- மண்ணுமங்கலம்
- மகட்பால் இகல்
- திறைகொண்டு பெயர்தல்
- அடிப்படவிருத்தல்
- தொகைநிலை
என்று 29 துறைகளைக் கொண்டது உழிஞைத்திணை
உழிஞை
தொகு- முடிமிசை யுழிஞை சூடி யொன்னார்
- கொடி நுடங் காரெயில்கொளக்கரு தின்று. - கொளு
- உழிஞைப் பூவைத் தலையில் அணிந்துகொண்டு பகைவரின் கோட்டையைக் கைப்பற்றக் கருதுதல்
- உழஞை முடிபுனைந் தொன்னாப்போர் மன்னர்
- விழுமதில் வெல்களிறு பாயக் – கழிமகிழ்
- வெய்தாரு மெய்தி யிசை நுவலுஞ் சீர்த்தியனே
- கொய்தார மார்பினெங் கோ.
- உழிஞைப் பூவைத் தலையில் சூடிக்கொண்டு
- பகைவர் மதிலில் தன் யானை பாய
- என் அரசன் தன் தார்ப்படையை நடத்திச் சென்றான்
குடைநாட்கோள்
தொகு- செற்றடையார் மதில்கருதிக்
- கொற்றவேந்தன் குடைநாட்கொண்டன்று. - கொளு
- தன்னிடம் பணிவாக வந்தடையாத மன்னரின் மதிலைக் கொள்ளக் கருதி
- வெற்றிவேந்தன் தன் குடையை நடத்தி விழாக் கொண்டாடுதல்
- நெய்யணிக செவ்வே னெடுந்தேர் நிலைபுகுக
- கொய்யுமோ கொல்களிறு பண்விடுக – வையகத்து
- முற்றக் கடியரண மெல்லா முரணவிந்த
- கொற்றக் குடைநாட் கொள்
- வேலுக்கு எண்ணெய் பூசுங்கள்
- தேரைப் பூட்டுங்கள்
- யானை போர் பண்ண விடுங்கள்
- என்று சொல்லி நம் வேந்தன் குடை நடத்தியதும்
- பிறர் கோட்டைகளின் பகைமை அவிழ்ந்தது
வாணாட்கோள்
தொகு- கலந்தடையார் மதில்கருதி
- வலந்தருவா ணாட்கொண்டன்று - கொளு
- பகைவர் மதிலைக் கைப்பற்றக் கருதி வெற்றி தரும் வாளுக்கு நாள்விழா நடத்துதல்
- வாணாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப்
- பேணார் பிறைதொடும் பேமதிற் – பூணார்
- அணிகொள் வனமுலையா ராடரங்க மேறிப்
- பிணிகொள்பே யாடும் பெயர்த்து.
- வேந்தன் பகைவர் மதிலைக் கொள்ளக் கருதித் தன் வாளுக்கு நாள்விழா கொண்டாடினான்
- அதனை அறிந்த பகைவர் மதில்மறவரின் மனைவியர் மன்றுக்கு வந்து அச்சத்தால் ஆடினர்
முரச வுழிஞை
தொகு- பொன்புனை யுழிஞை சூடி மறியருந்தும்
- திண்பிணி முரச நிலையுரைத் தன்று. - கொளு
- பகைவர் மதிலைக் கைப்பற்றக் கருதிய வேந்தன் உழிஞைப் பூவைச் சூடி
- முரசுக்கு நாள்விழா நடத்துதல்
- கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி
- உதிரா மதிலு முளகொல் – அதிருமால்
- பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுள்
- மாக்கண் முரச மழை.
- புகழ் வெய்யோன் அரண்மனையில் முரசு மேகம் முழங்குகிறது
- அவன் யானையால் உதிர்க்கப்படாத மதிலும் இருக்குமா (இருக்காது)
கொற்ற வுழிஞை
தொகு- அடையாதா ரரண் கொள்ளிய
- படையோடு பரந்தெழுந்தன்று. - கொளு
- பகைவரின் அரணைக் கைப்பற்றப் படையுடன் பரந்து செல்லல்
- வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேற் றண்ணளியான்
- கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான் – நள்ளாதரர்
- அஞ்சுவரு வாயி லருமிளைக் குண்டகழி
- மிஞ்சிவரு ஞாயின் மதில்.
- வெள்ளை வாள்
- கருமைக் கழல்
- வெய்ய வேல்
- இரக்கக் கொடை
- கொண்ட வேந்தன்
- பகைவரின் மதில்வாயில், மிளைக்காடு, ஆழமான அகழி ஞாயில் ஆகியவற்றைக் கொள்ளக் கருதி,
- கொடிப்படையுடன் புறப்பட்டான்
அரச வுழிஞை
தொகு- தொழில்காவன் மலிந்தியலும்
- பொழில்கா வலன் புகழ்விளம்பின்று - கொளு
- காவல்காட்டை விஞ்சிய காவலனின் புகழைச் சொல்லுதல்
- ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி
- ஆக்க மவன்க ணகலாவால் – வீக்கம்
- நகப்படா வென்றி நலமிகு தாராற்
- ககப்படா வில்லை யரண்
- ஊக்கமும் சூழ்ச்சியும் அவனிடம் இருப்பதால்
- வேந்தனுக்கு அகப்படா அரண் இல்லை
கந்தழி
தொகு- மாவுடைத்தார் மணிவண்ணன்
- சோவுடைத்த மறநுவலின்று. - கொளு
- கந்து = காவல்-வலிமை
- மணிவண்ணன் ‘சோ’ என்னும் கோட்டையை அழித்த வரலாற்றைக் கூறி எழுச்சி பெறுதல்
- அன்றெறிந் தானு மிவனா லரண்வலித்
- தின்றிவன் மாறா வெதிர்வார்யார் – என்றும்
- மடையார் மணிப்பூ ணடையாதார் மாரபிற்
- சுடராழி நின்றெரியச் சோ.
- அன்று சோ என்னும் அரணைத் தன் ஆழியை வீசி வென்றவனும் இவன்தான்
- இன்று கோட்டையைக் கைப்பற்றப் போருக்கு எழுபவனும் அவன்தான்
முற்றுழிஞை
தொகு- ஆடிய லவிர் சடாயான்
- சூடியபூச் சிறப்புரைத்தன்று. - கொளு
- சடை விரித்து ஆடும் சிவன் பூவின் சிறப்பினை உரைத்தது
- மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே
- இயங்கரண் மூன்று மெரித்தான் – தயங்கிணர்ப்
- பூக்கொ ளிதழிப் புரிசெஞ் சடையானும்
- மாக்கொ ளுழிஞை மலைந்து.
- இவன் உழிஞை சூடிப் போரிடுகிறான்
- முப்புரம் எரித்தவன் சூடிய இதழி (கொன்றை)ப் பூ போல அது இருக்கிறது
- இதன் பெருமையை உணரவல்லார் யார்
காந்தள்
தொகு- கருங்கடலுண் மாத்தடிந்தான்
- செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று. - கொளு
- கருங்கடலில் சூரபன்மாவைக் கொன்ற முருகன் சூடிய காந்தள் போவோடு ஒப்பிட்டு உழிஞைப் பூவைச் சிறப்பித்தல்
- குருகு பெயரிய குன்றெறிந் தானும்
- உருகெழு காந்தண் மலைந்தான் – பொருகழற்
- கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப்
- போர்கருதி யார்மலையார் பூ.
- குருகு பெயரிய குன்றம் எறிந்த முருகன் சூடிய காந்தள் பூப்போல்
- படையுடன் சென்று மதிலைத் தாக்குபவன் சூடிய உழிஞை இருக்கிறது
புறத்திறை
தொகு- மறத்துறை மலிந்து மண்டி மாற்றார்
- விறற்கொடி மதிலின் புறத்திறுத் தன்று. - கொளு
- மற வலிமை மிக்கு, மாற்றான் கொடிமதிலின் புறத்ததே படையுடன் நிற்றல்
- புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப்
- பல்லார் மருளப் படைபரப்பி – ஒல்லார்
- நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின்
- புறத்திறுத்தான் பூங்கழலி னான்.
- எளியோர் புகவோ, போகவோ முடியாதபடி தடுத்துக்கொண்டு
- பலரும் மருளும்படியாகத் தன் படையைப் பரப்பி
- மதிலின் புறத்தே நிறுத்தியிருக்கிறான்
ஆரெயிலுழிஞை
தொகு- வாஅண்மறவர் வணங்காதார்
- நீஇண்மதிலி னிலையுரைத்தன்று. - கொளு
- எயில் காக்கும் மறவர் வணங்காமை பற்றிக் கூறுவது
- மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக்
- கயிற்கழலார் கண்கனல் பூப்ப – எயிற்கண்ணார்
- வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ
- மாயப்போர் மன்னன் மதில்.
- மகளிர் ஊட்டிய தேறலை உண்ட மறவர்
- கையில் கழல் அணிந்து
- கண்ணில் தீப்பொறி பறக்கப் போரிட்டாலும்
- மதில் மன்னன் வெற்றி வெறுதல் அரிது
தோலுழிஞை
தொகு- வென்றி யோடு புகழ்விளைக் கும்மெனத்
- தொன்று வந்த தோன்மிகுத் தன்று. - கொளு
- வெற்றியோடு புகழையும் விளைவிக்கும் என்று
- தோல்படையைப் பாராட்டுதல்
- நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
- இன்றுநாம் வைக லிழிவாகும் – வென்றொளிரும்
- பாண்டி னிரைதோல் பணியார் பகையரணம்
- வேண்டி னெளிதென்றான் வேந்து.
- நின்ற புகழ் வேண்டும்
- நில்லா உயிரைப்பற்றிக் கவலையில்லை
- என்று போரிடும் மார்புக் கவசம் அணிந்த மறவர் விரும்பினால்
- பகைரின் கோட்டையைக் கைப்பற்றுதல் எளிது
குற்றுழிஞை
தொகு- கருதாதார் மதிற்குமரிமேல்
- ஒருதானாகி யிகன்மிகுத்தன்று. - கொளு
- பகைவரின் அழியா மதில்மேல்
- தனியொருவனானகக் குற்றுதல் (தாக்குதல்)
- குளிறு முரசினான் கொண்டா னரணம்
- களிறுங் கதவிறப் பாய்ந்த – ஒளிறும்
- அயிற்றுப் படைந்த வணியெழு வெல்லாம்
- எயிற்றுப் படையா விடந்து.
- முரசு முழக்கத்துடன் கோட்டையைக் கைப்பற்றினான்
- கோட்டைக் கதவினை அதன் ‘எழு’த் தாழ்ப்பாள் உடையும்படி,
- களிறு தன் கோட்டால் குத்தி முறித்தது
இதுவுமது
- வளைஞரல வயிரார்ப்ப
- மிளைகடத்தலு மத்துறையாகும்.- கொளு
- சங்கு, கொம்பு ஊதிக்கொண்டு
- மிளை என்னும் காவல் காட்டு அரணைக் கடத்தலும் இந்தத் துறை
- அந்தரந் தோயு மமையோங் கருமிளை
- மைந்தர மறிய மறங்கடந்து – பைந்தார்
- விரைமார்பின் வின்னரல வெங்கணை தூவார்
- வரைமார்பின் வைகின வாள்.
- வானளாவும் மூங்கில் கொண்டு அந்த மிளை
- கணைமழை பொழிந்தும்
- வாளால் தாக்கியும்
- அதன் வலிமையைத் தகர்த்தனர்
இதுவுமது
- பாடருந்தோற் படைமறவர்
- ஆடலொடடையினு மத்துறையாகும் - கொளு
- தோல்படை மறவர் திறம் பற்றிச் சொன்னாலும் இந்தத் துறை
- நிரைபொறி வாயி னெடுமதிற் குழி
- வரைபுகு புள்ளின மான – விரைபடைத்தார்
- வேலேந்து தானை விறலோன் விறன்மறவர்
- தோலேந்தி யாட றொடர்ந்து.
- பகைவரை வீழ்த்தும் பொறிகள் கொண்டது அந்த மதில்
- மலையில் நுழையும் பறவைகள் போல அதில் நுழைந்தனர்
- அது வேல்மறவர் படை
- தோல்மறவர் படை
புறத்துழிஞை
தொகு- விண்டோயு மிளைகடந்து
- குண்டகழிப் புறத்திறுத்தன்று. - கொளு
- வானளாவ உயர்ந்த மரங்களைக் கொண்ட மிளை என்னும் காவல் காட்டைக் கடந்து
- அகழியின் புறத்தே படையை நிறுத்துமல்
- கோள்வாய் முதலைய குண்டகழி நீராக
- வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான் – நீள்வாயில்
- ஓங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப
- ஆங்கொ லரிய வமர்.
- முதலை மேயும் ஆழமான அகழியின் புறத்தே
- நுழைவாயிலில் தன் படையை நிறுத்தியுள்ளான்
- ஓங்கி உயர்ந்த இந்தக் கோட்டை
- அதன் உள்ளே இருக்கும் மகளிர் பெருமூச்சு விடுமாறு ஆகிவிடுமோ
பாசிநிலை
தொகு- அடங்காதார் மிடல்சாயக்
- கிடங்கிடைப் போர்மலைந்தன்று. - கொளு
- பகைவரின் வலிமையைக் குறைக்க கிடங்கில் போர் புரிதல்
- நாவாயுந் தோணியு மேல்கொண்டு நள்ளாதார்
- ஓவார் விலங்கி யுடலவும் – பூவார்
- அகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப்
- பகழிவாய் வீழ்ந்தார் பலர்.
- அகழியில் நாவாய், தோணி ஆகியவற்றில் இருந்துகொண்டு பகைவர் விலகி ஓடும்படி குருதிப்போர் புரியும்போது வீழ்ந்துபட்டோர் பலர்.
ஏணிநிலை
தொகு- தொடுகழன் மறவர் துன்னித் துன்னார்
- இடுசூட் டிஞ்சியி னேணிசாத் தின்று. -கொளு
- மதிலைக் கடக்க ஏணி சார்த்திப் போரிடுதல்
- கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும்
- விற்பொறியும் வேலும் விலக்கவும் – பொற்புடை
- பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சாத்தினார்
- ஏணி பலவு மெயில்.
- மதிலின்மீது கல் எறியும் பொறிகளும், கடிக்கும் பாம்புகளும், எறியும் தீப் பந்தங்களும், கடிக்கும் குரங்குகளும், ஆள் இல்லாமல் தானே எய்து தாக்கும் வில்பொறிகளும் வேல்களும் இருக்கும்.
- அவை தாக்கும்போதும் குதிரையிலும் களிற்றிலும் வந்த மறவர்கள் மதிலின் மேல் ஏணியைஞ் சாத்தி ஏறினர்
எயிற்பாசி
தொகு- உடல்சினத்தார் கடியரணம்
- மிடல்சாய மேலிவர்ந்தன்று. - கொளு
- உடலும் சினம் கொண்டவர்
- காப்பு மிக்க கோட்டையின் வலிமை சாய
- ஏணி வழியே மதிலில் ஏறுதல்
- சுடும ணெடுமதில் சுற்றிப் பிரியார்
- கடுமுர எஃகங் கழிய – அடுமுரண்
- ஆறினா ரன்றி யரவு முடும்பும்போல்
- ஏறினா ரேணி பலர்.
- சுடுமண் செங்கல் வைத்துக் கட்டப்பட்ட மதில்
- மதிலின் நெடுமை கண்டு விலகிச் செல்லாமல்
- தாக்கும் வேல்களை ஒதுக்கிக்கொண்டு
- பாம்பு போலவும், உடும்பு போலவும்
- ஏணி வழியே மதிலில் ஏறினர்
முதுவுழிஞை
தொகு- வேய்பிணங்கிய மிளையரணம்
- பாய்புள்ளிற் பரந்திழிந்தன்று. - கொளு
- காவல் காட்டு அரணில் மள்ளர் பறவைப் பட்டாளம் பாய்வது போலப் பாய்ந்து போரிடுதல்
- கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதும்
- தோடுகொள் புள்ளின் தொகையொப்பக் – கூடார்
- முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ளர்
- அரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து.
- மலைநித்தில் இருக்கும் இரையைக் கண்டு பறவை இனம் பாய்வது போல மள்ளர் போர்க்களத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டு பாய்ந்து போரிட்டனர்
இதுவுமது
- செருமதிலோர் சிறப்புரைத்தலும்
- அருமுரணா னத்துறையாகும். - கொளு
- போரிடும் மதிலில் உள்ள மள்ளர்களின் சிறப்பினைச் சொன்னாலும் இந்தத் துறை ஆகும்
- அறியார் வயவ ரகத்திழிந்த பின்னும்
- நெறியார் நெடுமதிலு ணேரார் - மறியாம்
- கிளியொடு நேராங் கிளவியார் வாட்கட்
- களியுறு காமங் கலந்து.
- மதிலைக் கடந்து மறவர் உள்ளே நுழைந்த பின்னரும்
- அதனைப் பொருட்படுத்தாமல் மகளிர் கண்ணோடு கண் விளையாடும் போர் நடத்திக்கொண்டிருந்தனர்
அகத்துழிஞை
தொகு- முரணவியச் சினஞ்சிறந்தோர்
- அரணகத்தோரை அமர்வென்றன்று. - கொளு
- முரண்பாடு அவியுமாறு
- சினம் சிறந்த மறவர்
- மதிலுக்கு உள்ளே இருந்துகொண்டு போரிடுவோரை வென்றது
- செங்கண் மறவர் சினஞ்சொரிவாள் சென்றியங்க
- அங்கண் விசும்பி னணிதிகழும் – திங்கள்
- முகத்தா ரலற முகிலுரிஞ்சுஞ் சூழி
- அகத்தாரை வென்றா ரமர்.
- மறவர் சிவந்த கண்ணுடன் தாக்கிப் போரிட்டு
- நிலா முகம் கொண்ட மகளிர் அலறும்படி
- மதிலகத்தோரை வென்றனர்
முற்றுமுதிர்வு
தொகு- அகத்தோன் காலை யதிர்முர சியம்பப்
- புறத்தோன் வெஞ்சினப் பொலியுரைத் தன்று. - கொளு
- மதிலகத்தோன் காலையில் போர் முழசு முழக்கக் கேட்டு,
- மதிலின் புறத்தே இருப்பவர் வஞ்சினம் கூறலின் சிறப்பினை எடுத்துரைத்தல்
- காலை முரச மதிலியம்பக் கண்கனன்று
- வேலை விறல்வெய்யோ னோக்குதலும் – மாலை
- அடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார்
- தொடுகழலார் மூழை துடுப்பு.
- மதிலின் அகத்தே இருப்பவர் காலை முரசம் முழங்குவதைக் கேட்டு
- மதிலுக்கு வெளியில் இருப்பவர்
- மாலையில் பிணச்சோறு சமைப்போம் என்று கூறி,
- தம் போர்க்கருவிகளைத் துடுப்பாக இட்டனர்
யானை கைக்கோள்
தொகு- மாறுகொண்டார் மதிலழிய
- ஏறுந்தோட்டியு மெறிந்து கொண்டன்று. - கொளு
- எதிர்த்துப் போரிடுவோரின் மதில் அழியுமாறு
- தன் யானைமீது அங்குசம் பாய்ச்சுதல்
- ஏவ லிகழ்மறவர் வேய விகல்கடந்து
- காவலும் யானையுங் கைக்கொண்டான் – மாவலான்
- வம்புடை யொள்வாண் மறவர் தொழுதேத்த
- அம்புடை ஞாயி லரண்.
- வாள் மறவர் தொழுது வணங்கும்படி
- பகைமறவர் தாக்கத்தைக் கடந்து
- பகைவரின் கோட்டையையும் யானைகளையும் கைக்கற்றினான்
வேற்றுப்படை வரவு
தொகு- மொய்திகழ் வேலோன் முற்றுவிட் டகலப்
- பெய்தார் மார்பிற் பிறன்வர வுரைத்தன்று. - கொளு
- முற்றுகை இட்ட மன்னன் படையை விலக்கிக்கொள்ளும்படி
- மதிலத்துள்ளேரைக் காப்பாற்ற வேற்றுப்படை வரல்
- உவனின் அறுதுயர முய்யாமை நோக்கி
- அவனென் றுலகேத்து மாண்மை – இவனன்றி
- மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம்
- முற்றியார் முற்று விட.
- மதிலின் உள்ளிருப்போர் துயரம் கொள்ளாமல் இருக்க
- நண்பன் படை வர
- முற்றியவன் படை விலகிச் சென்றது
உழுது வித்திடுதல்
தொகு- எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித்
- துண்ணா வரகொடு கொள்வித் தின்று. - கொளு
- மதில் போரில் தோற்றவர் நிலத்தில்
- கழுதை ஏர் பூட்டி உழுது
- வரகும் கொள்ளும் விதைப்பது
- எழுதெழின் மாடத் திடனெலா நூறிக்
- கழுதையேர் கையொளிர்வேல் கோலா – உழுததற்பின்
- வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்
- கள்விரவு தாரான் கதம்.
- மதிலகத்தோரை அழித்து
- அவர்கள் நிலத்தில் கழுதை ஏர் பூட்டி உழுது
- வரகும் கொள்ளும் விதைத்த பின்னும்
- மன்னன் சினம் தணிந்தபாடில்லை
வாண்மண்ணுநிலை
தொகு- புண்ணிய நீரிற் புரையோ ரேத்த
- மண்ணிய வாளின் மறங்கிளந் தன்று - கொளு
- வென்ற கோட்டைக்குள் இருந்த புனித நீரில்
- உழிஞைப் போரில் வென்ற மற வாளை
- நீராட்ட மேலோர் பாராட்டல்
- தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கத்
- கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான் – பேர்த்துக்
- இடியார் பணை துவைப்ப விம்மதிலுள் வேட்டான்
- புடையா ரறையப் புகழ்.
- கொடித்தேரான் திசையெல்லாம் விளங்கும்படி, தன் கூர்த்த வாளை,
- முரசு முழக்கத்துடன் பூவிட்டு, வென்ற மதிலுக்குள் நீராட்டி வேள்வி வேள்வி செய்தான்
- சூழ்ந்திருந்தவர் புகழ்ந்தனர்
மண்ணுமங்கலம்
தொகு- வணங்காதார் மதிற்குமரியொடு
- மணங்கூடிய மலிபுரைத்தன்று. - கொளு
- தன்னை வணங்காதவர் மதிலாகிய குமரிப் பெண்ணோடு
- வேந்தன் திருமணம் செய்துகொண்ட மகிழ்ச்சியைக் கூறுவது
- எங்கண் மலர வெயிற்குமரி கூடிய
- மங்கல நாள்பா மகிழ்தூங்கக் – கொங்கலர்தார்ச்
- செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
- மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி.
- எங்கள் கண்கள் மலர்ந்து காணுமாறு
- எயிலாகிய குமரிப் பெண்ணை
- மங்கல நாண் பூட்டித் தனதாக்கிக் கொண்ட நாளை
- மகிழ்வுடன் பாடி மகிழும்படி
- மதில் மன்னன் முடி
- வென்ற மன்னன் அடியை வணங்கிற்று
மகட்பாலிகல்
தொகு- மயிற்சாயன் மகள்வேண்டிய
- கயிற்கழலோ னிலையுரைத்தன்று. -கொளு
- மயில் போன்ற சாயலை உடைய மகளை அடைய விரும்பி
- கங்கணம் கட்டிக்கொண்ட நிலையை உரைத்தல்
- அந்தழை யல்குலு மாடமை மென்றோளும்
- பைந்தளிர் மேனியும் பாராட்டித் – தந்தை
- புறமதில் வைகும் புலம்பே தருமே
- மறமதின் மன்னன் மகள்.
- தழையணிந்த அல்குல்
- மூங்கில் போன்ற தோள்
- தளிர் போன்ற மேனி
- கொண்டவளைப் பாராட்டி
- அவள் தந்தையின் மதில் புறத்ததை மன்னன் வளைத்துக்கொண்டிருக்கிறான்
- அதனால்
- மறமதில் மன்னன் மகள் நமக்குப் புலம்புதலையே தருகிறாள்
திறைகொண்டு பெயர்தல்
தொகு- அடுதிற லரணத் தரசு வழிமொழியப்
- படுதிறை கொண்டு பதிப்பெயர்ந் தன்று. - கொஒளு
- மதிலக மன்னன் வழிமொழிந்து திறை கொடுக்க வாங்கிக்கொண்டு
- முற்றிய மன்னன் தன் ஊருக்குத் திரும்புதல்
- கோடும் வயிரு மிசைப்பக் குழுமிளை
- ஓடெரி வேய வுடன் றுலவாய்ப் – பாடி
- உயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப்
- பெயர்ந்தான் பெருந்தகையினான்.
- சங்கு, கொம்பு இசைக்க
- காவல் காட்டில் தீ பற்றி எரிய
- மதிலரசன் பணிய
- வேந்தன் தன் ஊர் திரும்பினான்
அடிப்பட விருத்தல்
தொகு- பேணாதார் மறங்கால
- ஆணைகொண் ட்டிப்படவிருந்தன்று. - கொளு
- தன் பகைவர் மறத்து வெளிப்படுத்த
- தன் ஆணையை நடத்தி
- தன் அடியின் கீழ்க் கொண்டுவந்தது
- ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப
- வென்றி விளையா விழுமதிலோர் – என்றும்
- பருந்தார் செருமலையப் பாடி பெயரா
- திருந்தா னிகன்மறவ ரேறு.
- இகல் மறவன்
- பருந்துகள் பிணம் தின்னும் போர் நடத்தி
- ஒரு வழியாக, தன் அடிப்பட்ட நாட்டு மக்கள் கூவி அழும் கூக்குரலைக் கேட்டுக்கொண்டு
- மதிலகத்துத் தன் வெற்றியை விளைவித்தான்
தொகைநிலை
தொகு- எம்மதிலி னிகல்வேந்தரும்
- அம்மதிலி னடியடைந்தன்று. - கொளு
- மதிலுக்காகப் போரிட்ட இரு வேந்தரும் அம்மதிலின் அடியிலேயே மாண்டது
- நாவல் பெயரிய ஞாலத் தடியடைந்
- தேவ லெதிரா திகல்புரிந்த – காவலர்
- வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின்
- முன்னின் றவிந்தார் முரண்.
- நாவலந்தீவு எனப் பெயர் கொண்ட இந்த உலகத்தில்
- பிறர் ஏவலுக்குக் கட்டுப்படாமல் எதிராளியாகிப் போரிட்ட காவலர் இருவரும்
- அம்மதிலின் முன்னேயே அவிந்துபோயினர்
ஆறாவது உழிஞைப்படலம் முற்றிற்று.