புறப்பொருள் வெண்பாமாலை/நொச்சிப் படலம்
ஐந்தாவது
நொச்சிப்படலம்
தொகு- நுவலருங் காப்பி னொச்சி யேனை
- மறனுடைப் பாசி யூர்ச்செரு வென்றா
- செருவிடை வீழ்த றிண்பரி மறனே
- எயிலது போரே யெயிறனை யழித்தல்
- அழிபடை தாங்கன் மகண்மறுத்து மொழிதலென
- எச்ச மின்றி யெண்ணிய வொன்பதும்
- நொச்சித் திணையுந் துறையு மாகும்.
- நொச்சி
- மறனுடைப் பாசி
- ஊர்ச்செரு
- செருவிடை வீழ்தல்
- குதிரை மறம்
- எயிற்போர்
- எயில்தனை அழித்தல்
- அழிபடை தாங்கல்
- மகள் மறுத்து மொழிதல்
என நொச்சி 9 துறைகளைக் கொண்டது
நொச்சி
தொகு- ஏப்புழை ஞாயி லேந்துநிலை யரணம்
- காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று. - கொளு
- கோட்டையைக் காப்போர் சூடிய பூ பற்றிக் கூறுவது நொச்சித் துறை
- ஆடரவம் பூண்டா னழலுணச் சீறிய
- கூடரணங் காப்போர் குழாம்புரையச் – சூடினார்
- உச்சி மதி வழங்கு மோங்கு மதில்காப்பான்
- நொச்சி நுதிவே லவர்.
- பகைவர் சீறி வரும்போது கோட்டையைக் காப்பதற்காக வேல்வீரன் நொச்சிப் பூவைச் சூடிக்கொண்டான்
மறனுடைப் பாசி
தொகு- மறப்படை மறவேந்தர்
- துறக்கத்துச் செலவுரைத்தன்று. - கொளு
- பரந்து தாக்க வந்தவர் துறக்கம் செல்ல அனுப்பியது
- பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும்
- ஏயினா ரேய விகன்மறவர் – ஆயினார்
- ஒன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி
- வென்றி யமரர் விருந்து.
- கோட்டைக்கு வெளியில் பரந்து நிற்கும் மறவரைத் தாக்கி,
- அமரர்க்கு விருந்தாக்கினர்
ஊர்ச்செரு
தொகு- அருமிளையொடு கிடங்கழியாமைச்
- செருமலைந்த சிறப்புரைத்தன்று.
- வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி
- இளையுங் கிடங்குஞ் சிதையத் – தளைபரிந்த
- நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர்
- ஆனா ரமர்விலக்கி யார்ப்பு.
செருவிடை வீழ்தல்
தொகு- ஆழ்ந்துபடு கிடங்கோ டருமிளை காத்து
- வீழ்ந்த வேலோர் விறன்மிகுத் தன்று. -கொளு
- மிளைக் காட்டையும் அகழியையும் காத்து நின்றவன்
- போரில் வீழ்ந்த செய்தியைச் சொல்வது
- ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க்
- காண்டகு நீள்கிடங்குங் காப்பாராய் – வேண்டார்
- மடங்க லனைய மறவேலோர் தத்தம்
- உடம்பொடு காவ லுயிர்.
- புதர் மிகுந்த காவல் காட்டையும்
- கிடங்கையும்
- காத்து நின்ற மறவேலோன்
- தன் உடம்பையும் உயிரையும் அதற்காகக் கொடுத்தான்
குதிரைமறம்
தொகு- ஏமாண்ட நெடும்புரிசை
- வாமானது வகையுரைத்தன்று. - கொளு
- கோட்டையைக் காக்கும் குதிரைவீரன் திறம் பற்றிப் பேசுவது
- தாங்கன்மின் றாங்கன்மின் றானை விறன்மறவிர்
- ஓங்கன் மதிலு ளொருதனியா – ஞாங்கர்
- மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார்
- உயிருணிய வோடி வரும்.
- தாங்க மாட்டீர்கள்
- அந்தக் குதிரை வீரன்
- உங்கள் உயிரைக் கொல்ல வருகிறான்
எயிற்போர்
தொகு- அயிற்படையி னரண்காக்கும்
- எயிற்படைஞ ரிகன்மிகுத்தன்று. - கொளு
- வேல் படையை வைத்துப்பவண்டு அரணைக் காக்கும் எயில்படை மறவர்களின் போர் பற்றிக் கூறுவது
- மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின்
- உகத்தா முயங்கியக் கண்ணும் – அகத்தார்
- புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி
- மறத்திடை மானமேற் கொண்டு.
- தம் மார்பில் செங்குருதி வழியத் தாக்கியபோதும்
- கோட்டைக்கு உள்ளிருந்து வெளியில் வந்து
- பகைவரைத் தாக்கி அந்த மறவன் போரிடுகிறான்
எயிறனையழித்தல்
தொகு- துணிவுடைய தொடுகழலான்
- அணிபுரிசை யழிவுரைத்தன்று. - கொளு
- துணிவு கொண்ட தொடுகழலானின் அழகிய கோட்டையின் அழிவு நிலை பற்றிக் கூறுவது
- அகத்தன வார்கழ னோன்றா ளரணின்
- புறத்தன போரெழிற் றிண்டோள் – உறத்தழீஇத்
- தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
- வாட்குரிசில் வானுலகி னான்
- கோட்டையின் உள்ளே இருக்கும் வீரன்
- வெளியில் வந்து வாளால் தாக்கிப் போரிட்டபோது
- அவனது மனைவி பாராட்டும்படி விண்ணுலகு அடைந்தான்
அழிபடை தாங்கல்
தொகு- இழிபுடன் றிகல்பெருக
- அழிபடை யரண்காத்தன்று. - கொளு
- எண்ணிக்கையில் குறைந்தவராக இருந்தாலும்
- பெருகித் தாக்கும் பகைவர்களிடமிருந்து
- தம் அரணைக் காப்பது
- பரிசை பலகடந்து பற்றா ரெதிர்ந்தார்
- எரிசெ யிகலரணங் கொண்மார் – புரிசை
- அகத்தடி யுய்யாமை யஞ்சுடர்வா ளோச்சி
- மிகத்தடிந்தார் மேனின் றவர்.
- பகைவர்கள் படைகள் பலவற்றை வென்றனர்
- போரிட்டுக்கொண்டு உள்ளே உள்ளே நுழையும்போது
- எயில் காப்போர் அவர்களை உள்ளே நுழைய விடாமல் காத்தனர்
மகண்மறுத்து மொழிதல்
தொகு- வெம்முரணான் மகள்வேண்ட
- அம்மதிலோன் மறுத்துரைத்தன்று. - கொளு
- மாறுபட்ட வேந்தன் மகளைத் தரும்படி வேண்ட
- மதில் காப்போன் மறுத்துக் கூறுதல்
- ஒளிவான் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட்
- கள்வார் நறுங்கோதை காரணமாக் – கொள்வான்
- மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக்
- கருங்கண்ணி வெண்கட்டிற் கால்.
- மதிலகத்தானின் மகளைத் தரும்படி வேண்டி
- களிற்றின் மேல் வந்து தாக்கியபோது
- மகளைத் தர மறுத்துச் சினத்துடன் போரிட்டான்
ஐந்தாவது நொச்சிப்படலம் முற்றிற்று.