புறப்பொருள் வெண்பாமாலை/காஞ்சிப் படலம்

காஞ்சிப்படலம் தொகு

காஞ்சி காஞ்சி யதிர்வே தழிஞ்சி
பெரும்படை வழக்கொடு பெருங்காஞ் சிய்யே
வாள்செல வென்றா குடையது செலவே
வஞ்சினக் காஞ்சி பூக்கோ ணிலையே
புகழ்தலைக் காஞ்சி தலைமா ராயம்
தலையொடு முடிதன் மறப்பெயர்க் காஞ்சி
மாற்றரும் பேய்நிலை பேய்க்காஞ் சிய்யே
தொட்ட காஞ்சி தொடாக்காஞ் சிய்யே
மன்னைக் காஞ்சி கட்காஞ் சிய்யே
ஆஞ்சிக் காஞ்சி மகட்பாற் காஞ்சி
முனைகடி முன்னிருப் புளப்படத் தொகைஇ
எண்ணிய வகையா னிருபத் திரண்டும்
கண்ணிய காஞ்சி துறையென மொழிப.
  1. காஞ்சி
  2. காஞ்சியதிர்வு
  3. தழிஞ்சி
  4. படைவழக்கு
  5. பெருங்காஞ்சி
  6. வாள்செலவு
  7. குடைச்செலவு
  8. வஞ்சினக் காஞ்சி
  9. பூக்கோள் நிலை
  10. தலைக்காஞ்சி
  11. தலைமாராயம்
  12. தலையொடு முடிதல்
  13. மறக்காஞ்சி
  14. பேய்நிலை
  15. பேய்க்காஞ்சி
  16. தொட்ட காஞ்சி
  17. தொடாக்காஞ்சி
  18. மன்னைக் காஞ்சி
  19. கட்காஞ்சி
  20. ஆஞ்சிக் காஞ்சி
  21. மகட்பாற் காஞ்சி
  22. முனைகடி முன்னிருப்பு

என 22 துறைகளைக் கொண்டது காஞ்சிப் படலம்

காஞ்சி தொகு

வெஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று. - கொளு
வெஞ்சினம் கொண்டு தாக்கும்
மாற்றானாகிய வேந்தனை விடுவிப்பதற்காக,
காஞ்சிப் பூ சூடிப் போரிட்டுக் காப்பாற்றுவது
அருவரை பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப்
பெருவரைச் சீறூர் கருதிச் – செருவெய்யோன்
காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ
தோஞ்செய் மறவர் தொழில்.
போர் இல்லாவிட்டால் மலையிலிருந்து குதித்து உயிர் துறப்பேன் என்னும் மறவன்
தாக்கிய மன்னனிடமிருந்து தன் ஊரைக் காப்பாற்ற காஞ்சிப் பூ சூடிக்கொண்டு நின்றான்

காஞ்சியதிர்வு தொகு

மேல்வரும் படைவரன் மிகவு மாற்றா
வேல்வ லாடவன் விறன் மிகுத் தன்று. - கொளு
மாற்றான் படை மிகுதியாக வர
வேல் மறவன் வீறாப்புடன் எதிரில் நிற்றல்
மன்மேல் வருமென நோக்கான் மலர்மார்பில்
வென்வேன் முகந்த புண் வெய்துயிர்ப்பத் – தன்வேல்
பிடிக்கலு மாற்றாப் பெருந்தகை யேவத்
துடிக்கண் புலையன் றொடும்.
எதிர் மன்னன் தாக்கத்தை எதிர்பார்க்காத மறவன்
மலர் மார்பில் விழுப்புண் கொண்ட மறவன்
வேலைக் கையில் பிடிக்கவும் முடியா நிலையில் இருந்தபோது
புலையன் துடியை முழக்கி எழுச்சி ஊட்டினான்

தழிஞ்சி தொகு

பரந்தெழுதரு படைத்தானை
வரம்பிகவாமைச் சுரங்காத்தன்று. - கொளு
பகைவர் விரிந்து தாக்க வரும்போது
ஊருக்குள் நுழைய விடாமல்
வரும் காட்டிலேயே தடுத்து நிறுத்தல்
குலாவுஞ்சிலையார் குறும்புகொள வெஃகி
உலாவு முழப்பொழிக வேந்தன் – கலாவும்
இனவேங்கை யன்ன விகல்வெய்யோர் காவல்
புனவேய் நரலும் புழை.
பகைவர் வில்லால் ஊரைத் தாக்கியபோது
அவர்களின் உழைப்பு வீணாகும்படி
வேங்கை போல் மூங்கில் காட்டிலையே தடுத்து நிறுத்தினான்

படை வழக்கு தொகு

முத்தவிர்பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படைவழங்கின்று. கொளு
முத்துப் பூண் அணிந்த மறவேந்தன்
தகுதி உள்ளவர்களுக்குப் படைக்கருவி வழங்குதல்
ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
ஐயிலை யெஃக மவைபலவும் – மொய்யிடை
ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
வாட்கடி வன்க ணவர்க்கு.
தகுதி உடையவனா எனத் தெரிந்துகொண்டு
வெல்களிற்று அண்ணல்
ஐயிலைவேல், எஃகம், வாள் முதலானவற்றை வழங்கினான்

இதுவுமது

கொடுத்தபின்னர்க் கழன்மறவர்
எடுத்துரைப்பினு மத்துறையாகும் - கொளு
படைக் கருவிகளை வாங்கிக்கொண்ட மறவனுக்கு
மன்னன் கூறினும் அத் துறை
துன்னருந் துப்பிற் றொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னம ரொள்வாளென் கைதந்தான் – மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து.
படைமறவர்கள் சூழ்ந்திருக்கும்போது
என் கையில் வாளைக் கொடுத்த மன்னவனுக்கு
விண்ணகம் வேண்டுமோ என்று வீரன் வினவினான்

பெருங்காஞ்சி தொகு

தாங்குதிறன் மறவர் தத்த மாற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று. - கொளு
மறவர்கள் அவரவர் ஆற்றலை மன்னன் முன் வெளிப்படுத்துதல்
வில்லாக் குறும்பிடை வேறுவே றார்த்தெழுந்த
கல்லா மறவர் கணைமாரி – ஒல்லா
வெருவி மறவேந்தர் வெல்களி றெல்லாம்
இருவி வரைபோன்ற வின்று.
வில்மறவர் ஒவ்வொருவரும் அவரவர் ஆற்றலை எடுத்துரைத்துத்துப் போரிட்டனர்
பகைவேந்தன் களிறுகள் கதிர் அறுத்த தினைத்தட்டை போல் ஆள் இல்லாதவர் ஆயின

வாள்செலவு தொகு

அருமுனையா னறைகூவினபின்
செருமுனைமேல் வாள்சென்றன்று. - கொளு
எதிராளி அறைகூவலுக்குப் பின்னர் வாள் மறவர் போரிடப் புகுல்
உணங்கு புலவறா வொன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி – அணங்கிய
குந்த மலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்கென்றான் வாள்.
நம் ஊருக்குள் பகைவர் வந்த பின்னர் போரிடுக என்று குதிரை மேல் இருந்த மன்னன் கூறினான்

குடை செலவு தொகு

முதுகுடி மறவர் முன்னுறச் சூழக்
கொதியழல் வேலோன் குடைசென் றன்று. - கொளு
மறவர் சூழ்ந்துகொண்டு முன்னே செல்ல
குடை நிழலில் மன்னன் செல்லல்
தெம்முனை தேயத் திறல்விளங்கு தேர்த்தானை
வெம்முனை வெற்றி விறல்வெய்யோன் – தம்முனை
நாட்டிப் பொறிசெறித்து நண்ணார்மேற் செல்கென்று
காட்டிநாட் கொண்டான் குடை.
தேர்ப்படை தெம்முனை தேயச் செல்க என்று கூறி,
விறல் வேந்தன் கொற்றக்குடை நிழலில் சென்றான்

வஞ்சினக் காஞ்சி தொகு

வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப
வஞ்சினங் கூறிய வகைமொழிந் தன்று. - கொளு
வெஞ்சினம் கொண்ட வேந்தன்
பகைவரைப் பணியச் செய்வேன் என்று
வஞ்சினம் கூறல்
இன்று பகலோ னிறவாமு னொன்னாரை
வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் – என்றும்
அரணவியப் பாயு மடையார்மு னிற்பேன்
முரணவிய முன்முன் மொழிந்து.
இன்று பகலவன் மறைவதற்கு முன்
பகைவரை வென்று வேலை உயர்த்துவேன்
இல்லாவிட்டால்
என் கோட்டை அழிய,
பகைவர் முன் நிற்பேன் ஆகுக - என்று மன்னன் கூறினான்

பூக்கோணிலை தொகு

காரெதிரிய கடற்றானை
போரெதிரிய பூக்கொண்டற்று. - கொளு
கார்மேகம் பான்ற படை தாக்க வந்தவர் தலையில் சூடிய பூவினைக் கவர்ந்தது
பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன
குருதியா றாவதுகொல் குன்றார் – கருதி
மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார்
புறத்திறுத்த வேந்திரியப் பூ.
பகைவரைச் செவ்வானம் போலக் குருதிக் காடாக்கி
அவர்கள் சூடிய வஞ்சிப் பூவைக் கவர்ந்துகொண்டனர்

தலைக்காஞ்சி தொகு

மைந்துயர மறங்கடந்தான்
பைந்தலைச் சிறப்புரைத்தன்று. - கொளு
காஞ்சி மறவன் தன் வலிமையை உயர்த்திக் காட்டியவன் தலைமையான புகழைச் சொல்லியது
விட்டிடினென் வேந்தன் விலையிடினெ னிவ்வுலகின்
இட்டுரையி னெய்துவ வெய்திற்றால் – ஒட்டாதார்
போர்தாங்கி மின்னும் புலவா ளுறைகழியாத்
தார்தாங்கி வீழ்ந்தான் றலை.
வேந்தன் போரை விட்டால்தான் என்ன
விலையாகத் திறை கொடுத்தால்தான் என்ன
பகைவரின் தார்ப்படையைத் தாங்கியவண்ணம்
புலால் தாங்கிய வேலைத் தாங்கி மாண்டவன் தலையே சிறந்தது

தலைமாராயம் தொகு

தலைகொடுவந்தா னுண்மலியச்
சிலையுடை வேந்தன் சிறப்பீந்தன்று. - கொளு
மாற்றான் தலையைக் கொண்டுவந்தவன் உள்ளம் மகிழுமாறு வேந்தன்
மாராயன் என்னும் விருதுச் சிறப்பினை வழங்குதல்
உவன் றலை யென்னு முறழ்வின்றி யொன்னார்
இவன் றலையென் றேத்த வியலும் – அவன்றலை
தந்தாற்கு நில்கல் வியப்போ கிளந்தேத்தி
வந்தார்க் குவந்தீயும் வாழ்வு.
உவன் தலை என்று வேறுபாடு காட்டாமல்
பகைவன் தலையைக் கொண்டுவந்த இவன் தலையாயவன் என்று ஏத்தி
அவனுனுக்கு வாழ்வளிக்கும் விருதினை மகிழ்வுடன் வழங்கினான்

தலையொடு முடிதல் தொகு

மண்டமருண் மாறாமைந்திற்
கொண்டான் தலையொடு கொல்வளை முடிந்தன்று. - கொளு
போரில் முடிந்த தற்கொண்டான் தலையொடு
மனைவி தன் வளையலை உடைத்துக்கொண்டு தானும் இறத்தல்
கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன்
தலையானா டையலாள் கண்டே – முலையால்
முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே
உயங்கினா ளோங்கிற் றுயிர்.
காஞ்சிப்போரில் கொல்லப்பட்ட தன் கொழுநனை மனைவி தழுவினாள்
உயிர் துறந்தாள்

மறக்காஞ்சி தொகு

இலைப்பொலிதா ரிகல்வேந்தன்
மலைப்பொழிய மறங்கடைஇயன்று - கொளு
பகையரசன் தாக்கத்தின்போது
மலை போல் எதிர்த்து நின்று போரிட்டது
கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப்
பருந்தோ டெருவை படர – அருந்திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம்.
பகைவரின்
கருந்தலையும்
வெள்ளைக் கொழுப்பும்
சிவப்புத் தசைகளும்
பருந்து கொள்ளுமாறு
மன்னர் வியப்ப
மறவன் வேலை எறிந்தான்

இதுவுமது

மண்கெழு மறவன் மாறுநிலை நோனான்
புண்கிழித்து முடியினு மத்துறை யாகும். - கொளு
பகைமன்னன் வென்றது கண்டு
தன் புண்ணை மேலும் தானே கிழித்துக்கொண்டு தன்னை முடித்துக்கொள்ளினும் இந்தத் துறை
நகையம ராய நடுங்க நடுங்கான்
தொகையம ரோட்டிய துப்பிற் – பகைவர்முன்
நுங்கிச் சினவுற னோனா னுதிவேலாற்
பொங்கிப் பரிந்திட்டான் புண்.
ஆயத்தார் நடுங்கும்படி
பகைவர்களை ஓட்டியவன்
பகைவர் வென்றதால்
அவர்கள் நுங்காவண்ணம்
பொங்கி எழுந்து தன் வேலால்
தன் புண்ணைத் தானே கிழித்துக்கொண்டு மாண்டான்

பேய்நிலை தொகு

செருவேலோன் றிறநோக்கிப்
பிரிவின்றிப் பேயோம்பின்று. - கொளு
வேலோன் போரில் காட்டிய திறம் நோக்கி,
பேய் அவனைப் பிரியாமல் காத்தது
ஆயு மடுதிறலாற் கன்பிலா ரில்போலும்
தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பப் – பேயும்
களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம்புகல வோம்ப லுறும்.
அன்பில்லாதவர் இல்லம் போல அடுதிறலான் வீழ,
பேய் அவன் குருதியை வாரிக் குடித்துக்கொண்டு
அவனை விட்டுப் பிரியாமல் இருந்தது

பேய்க்காஞ்சி தொகு

பிணம்பிறங்கிய களத்துவீழ்ந்தாற்
கணங்காற்ற வச்சுறீஇயன்று. - கொளு
போர்களப் பிணக்காட்டில் வீழ்ந்தவன் முன் அணங்கு தோன்றி அச்சுறுத்துதல்
கொட்கு நிமிருங் குறுகுங் குடர்சூடிப்
பெட்ப நகும்பெயரும் பேய்மகள் – உட்கப்
புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து
கனல் விழிப்பவற் கண்டு.
குனிந்து, நிமிர்ந்து, குறுகி, குடலை மாலையாக அணிந்துகொண்டு, பேய்மகள் குருதியும், புலாலும் கிடக்கும் காட்டில் கனலும் மறவன் விழிகளைப் பார்த்துக்கொண்டிருந்தது.

தொட்ட காஞ்சி தொகு

வியன்மனைவிடலை புண்காப்பத்
துயன்முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று. - கொளு
கணவன் விழுப்புண்ணை மனைவி காத்துக்கொண்டிருக்கும்போது
தொங்கும் முலை கொண்ட பேய் அவன் புண்ணைத் தோண்டியது
கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய்
நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச் – சென்றொருத்தி
ஒட்டார் படையிடந்த வாறாப்பு ணேந்தகலம்
தொட்டாள் பெருகத் துயில்.
விழுப்புண் பட்ட வேலவனிடம் பேய்மகள் இருளில் சென்றாள்
நெருப்பைக் கக்கிக்கொண்டு உருத்து நோக்கினாள்
அவன் பெருந்துயில் கொள்ளுமாறு புண் பட்ட மார்பினைத் தோண்டினாள்

தொடாக் காஞ்சி தொகு

அடலஞ்சா நெடுந்தகைபுண்
தொடலஞ்சித் துடித்துநீங்கின்று. - கொளு
விழுப்புண் பட்டவன் அடலஞ்சா வீரன் ஆகையால்
பேய்மகள் அவன் புண்ணைத் தொடுவதற்கு அஞ்சி விலகி நின்றது
ஐயவி சிந்தி நறைபுகைந் தாய்மலர் தூய்க்
கொய்யாக் குறிஞ்சி பலபாடி – மொய்யிணர்ப்
பூப்பெய் தெரிய நெடுந்தகைபுண் யாங்காப்பப்
பேய்ப்பெண் பெயரும் வரும்.
ஐயவி எண்ணெய் தடவி
நறை மணம் புகைத்து
மலர் தூவி
புறிஞ்சிப் பண் பாடி
நெடுந்தகையின் புண்ணை நான் காத்தேன்
பேய்மகள் புண்ணைத் தொடலாம் என்று வந்தவள் தொடாமல் திரும்பினாள்

மன்னைக் காஞ்சி தொகு

வியவிடமருள விண்படர்ந்தோன்
இயல்பேத்தி யழிபிரங்கின்று. - கொளு
நிலைபேறு பெற்றதைச் சொல்லி இரங்குதல்
விண்ணுலகடைந்தவன் இநல்பினைப் போற்றி மனமிரங்குதல்
போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன்
ஊர்க்கு முலகிற்கு மோருயிர்மன் – யார்க்கும்
அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல்
நிறந்திறந்த நீளிலை வேல்.
போர் மறவர்களைத் தாங்கிச் செல்லும் புணையாக விளங்கினான்
உயர்ந்தவர்களுக்கு வில்லாயுதமாக விளங்கினான்
ஊருக்கும் உலகுக்கும் உயிராக இருந்தான்
அறம் திறந்த வாயில் வீடுபேறு அடைந்தான்
அவன் மார்பினை வேல் திறந்துவிட்டதே

கட்காஞ்சி தொகு

நறமலியு நறுந்தாரோன்
மறமைந்தர்க்கு மட்டீந்தன்று. - கொளு
நறவு மலர்த் தாரணிந்த
மற மைந்தனுக்கு மட்டுத்தேன் வழங்கியது
ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில்
மன்னன் மறவர் மகிழ்தூங்கா – முன்னே
படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும்.
போர்முனைப் பகைவரின் உறக்கம் இனிக் கெடுக
மன்னர் மறவன் மகிழ்ச்சியில் இருக்கிறான்
இவன் பழங்குடி முதியாள் மகன்
இந்த விடலைக்குக் கள் தந்திருக்கின்றனர்

ஆஞ்சிக் காஞ்சி தொகு

காதற் கணவனொடு கனையெரி மூழ்கும்
மாதர்மெல் லியலின் மலிபுரைத் தன்று. - கொளு
போரில் விழுப்புண் பட்டு மாண்ட கணவனை எரிக்கும் தீயில்
மனைவியும் மாளும் விழா பற்றிக் கூறுதல்
தாங்கிய கேளொடு தானு மெரிபுகப்
பூங்குழை யாயம் புலர்கென்னும் – நீங்கா
விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப்
புலாலித் தலைக்கொண்ட புண்.
தன்னைத் தாங்கிய கணவனொடு
தானும் எரி புக
தன் சுற்றம் விடவேண்டும் என்று
அவன் விழுப்புண்ணோடு கிடந்தவள் விரும்புகிறாள்

இதுவுமது

மன்னுயிர் நீத்த வேலின் மனையோள்
இன்னுயிர் நீப்பினு மத்துறை யாகும் - கொளு
கணவன் உயிர் நீத்த வேலால்
தன் உயிரை மாய்த்துக்கொண்டாலும் அத் துறை
கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் – அவ்வேலே
அம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற்
கொம்பிற்கு மாயிற்றே கூற்று.
இந்தக் கடுமையான கற்பைப் பற்றி ஊரே பேசுகிறது
கணவன்மீது பாய்ந்த வேலால்
தன்னையும் கிழித்துக்கொண்டு
மனைவியும் போர்களத்தில் மாண்டுவிட்டாளே

மகட்பாற் காஞ்சி தொகு

ஏந்திழையாட் டருகென்னும்
வேந்தனொடு வேறுநின்றன்று. - கொளு
மகளைத் தா என்ற வேந்தனை எதிர்த்து நிற்றல்
அளிய கழல் வேந்த ரம்மா வரிவை
எளியளென் றெள்ளி யுரைப்பிற் – குளியாவோ
பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த
கண்போற் பகழி கடிது
பண் போல் பேசும் பல்வளையாள் இவள்
இவளைப் பெற வேந்தன் போரிட வந்துள்ளான்
இவளை அவன் பெறுதல் எளிதோ

முனைகடி முன்னிருப்பு தொகு

மன்னர்யாரையு மறங்காற்றி
முன்னிருந்த முனைகடிந்தன்று. - கொளு
மன்னர் யாரும் போரிட வேண்டாம் என்று தடுத்துவிட்டுத்
தான் ஒருவனாகவே போர்முனையில் முன்னே நின்று பகைவரை முடுக்கியது
கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்லக்
கொடிமலி கொல்களி றேவித் – துடிமகிழ
ஆர்த்திட் டமரு ளடையாரை யம்முனையிற்
பேர்த்திட்டான் பெய்கழலி னான்.
கடைவாயில் கள் ஒழுகக் களிற்றில் வந்தவனை
துடி முழத்துடன் போர் முனையில் தடுத்து நிறுத்தினான்

நான்காவது காஞ்சிப்படலம் முற்றிற்று.