புறப்பொருள் வெண்பாமாலை/பெருந்திணை

பன்னிரண்டாவது

பெருந்திணைப்படலம்

தொகு

பெண்பாற்கூற்று

தொகு
வேட்கைமுந் துறுத்தல் பின்னிலை முயறல்
பிரிவிடை யாற்றல் வரவெதிர்ந் திருத்தல்
வாராமைக் கழித லிரவுத்தலைச் சேறல்
இல்லவை நகுதல் புலவியுட் புலம்பல்
பொழுதுகண் டிரங்கல் பரத்தையை யேசல்
கண்டுகண் சிவத்தல் காதலிற் களித்தல்
கொண்டகம் புகுதல் கூட்டத்துக் குழைதல்
ஊடலு ணெகிழ்த லுரைகேட்டு நயத்தல்
யாடகச் சீறடி பணிந்தபி னிரங்கல்
பள்ளிமிசைத் தொடர்தல் செல்கென விடுத்தலென்
ஒன்பதிற் றிரட்டியோ டொன்று முளப்படப்
பெண்பாற் கூற்று ப் பெருந்திணைப் பால.
  1. வேட்கைமுந் துறுத்தல்
  2. பின்னிலை முயறல்
  3. பிரிவிடை யாற்றல்
  4. வரவெதிர்ந் திருத்தல்
  5. வாராமைக் கழிதல்
  6. இரவுத்தலைச் சேறல்
  7. இல்லவை நகுதல்
  8. புலவியுட் புலம்பல்
  9. பொழுதுகண் டிரங்கல்
  10. பரத்தையை யேசல்
  11. கண்டுகண் சிவத்தல்
  12. காதலிற் களித்தல்
  13. கொண்டகம் புகுதல்
  14. கூட்டத்துக் குழைதல்
  15. ஊடலுள் நெகிழ்தல்
  16. உரைகேட்டு நயத்தல்
  17. ஆடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்
  18. பள்ளிமிசைத் தொடர்தல்
  19. செல்கென விடுத்தல்
என்று ஒன்பதிற் றிரட்டியோ டொன்றும் உளப்படப்
பெண்பாற் கூற்றுப் பெருந்திணைப் பால.

வேட்கை முந்துறுத்தல்

தொகு
கையொளிர் வேலவன் கடலக் காமம்
மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று.
கையில் வேல் வைத்திக்கும் காளை கடல் போல் பெருகும் தன் காமத்தைத் தோளில் வளையல் அணிந்த அவனது காதலியிடம் கூறல்
எழுதெழின் மார்ப மெனக்குறித் தாகென்
றழுதழுது வைகலு மாற்றேன் – தொழுதிரப்பல்
வல்லிய மன்ன வயவேலோய் வாழ்கென
அல்லியந்தார் நல்க லறம்.
என் நெஞ்சம் எனக்கு உரித்தாக வேண்டும் என்று நாள்தோறும் அழுதுகொண்டு என் காதலியை எனக்குத் தா என்று மாமனை இரக்கிறேன்
அவன் அறநெறியில் அவளைத் தரவேண்டும்

பின்னிலை முயறல்

தொகு
முன்னிழந்த நலனசைஇப்
பின்னிலை மலைந்தன்று.
அவன் முன்னர் தந்த இன்பத்தை நினைத்து அவள் பின்னர் அவனைத் தொடர்ந்தது
மற்கொண்ட திண்டோண் மறவே நெடுந்தகை
தற்கண்டு மாமைத் தகையிழந்த – எற்காணப்
பெய்களி யானைப் பிணரெருத்திற் கண்டியான்
கைதொழுதேன் றான்கண் டிலன்.
அவன் மறவேல் நெடுந்தகை
அவன் இன்பத்தைப் பெற விரும்பி ஏங்கியதால் என் மாமை இழந்து பசலை எய்தினேன்
அவன் யானைமேல் வருவதைப் பார்த்தேன்.
அவனைத் தொழுதேன்
அவன் கண்டுகொள்ளவில்லை
அவள் இப்படிச் சொல்கிறாள்

பிரிவிடை யாற்றல்

தொகு
இறைவளை நெகிழ வின்னா திரங்கிப்
பிறைநுதன் மடந்தை பிரிவிடை யாற்றின்று.
அவனை நினைத்து வளையல் கழன்றபோதும் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு அவன் நல்குவான் என்னும் நப்பாசையோடு காத்திருத்தல்
ஓடுக கோல்வளையு மூரு மலரறைக
தோடவிழ் தாழை துறைகமழக் – தோடுடையும்
பூங்கான்ற சேர்ப்பன் புலம்புகொண் டான்மாலை
நீங்கானென் னெஞ்சகத்து ணின்று.
வளையல் கழறட்டும்
ஊர் அலர் தூற்றட்டும்
சேர்ப்பன் மாலையிலும் என்னைத் தனிமையாக்கிவிட்டான்
என்றாலும் என் உள்ளத்ததை விட்டு நீங்காமல் இருக்குறான்
அவள் சொல்கிறாள்

வரவெதிர்ந்திருத்தல்

தொகு
முகைபுரை முறுவன் முள்ளெயிற் றரிவை
வகைபுனை வளமனை வரவெதிர்ந் தன்று.
அவன் வரவுக்காக அந்த அரிவை வளமனையில் காத்திருத்தல்
காம நெடுங்கட னீந்துங்காற் கைபுனைந்த
பூமலி சேக்கைப் புணைவேண்டி – நீ மலிந்து
செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய்
எல்லாக நெஞ்ச மெதிர்.
காமக் கடலை நீந்துவதற்காக
பூ மெத்தையில் அவன் புணையாகவேண்டும்
நெஞ்சே
நீ அவனிடம் செல்
அவனைச் சிந்தித்துக்கொண்டிரு
அவள் சொல்கிறாள்

வாராமைக்கு அழிதல்

தொகு
நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட
வடிவே லண்ணல் வாராமைக் கழிந்தன்று.
அவன் வரவை எதிர்நோக்கியிருக்கும் அவள் அவன் வராததால் மனம் அழிதல்
நுடங்கருவி யார்த்திழியு நோக்கருஞ் சாரல்
இடங்கழி மான்மாலை யெல்லைத் – தடம்பெருங்கண்
தாழார மார்பன் றமியே னுயிர் தளர
வாரான்கொ லாடும் வலம்.
என் இடக்கண் துடிக்கிறது
அவன் வரமாட்டானோ
அவள் நினைக்கிறாள்

இரவுத்தலைச் சேறல்

தொகு
காண்டல் வேட்கையொடு கனையிரு ண்டுநாள்
மாண்ட சாயன் மனையிறந் தன்று.
அவனைக் காணும் வேட்கையில் நள்ளிருளில் அவள் தன் மனையை விட்டுச் செல்வது
பணையா வறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் – துணையாய்க்
கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்கேன்
வழிகாண மின்னுக வான்.
அவன் அருவி முழங்கும் நாடன்.
என் காமம் அழைத்துச் செல்ல
அவன் மார்பினைத் தழுவுவதற்காகச் செல்கிறேன்
வானமே! மின்னி வழிகாட்டு
அவள் கூறுகிறாள்

இல்லவை நகுதல்

தொகு
இல்லவை சொல்லி யிலங்கெயிற் றரிவை
நல்வய லூரனை நகைமிகுத் தன்று.
அவன் இல்லாமையைச் சொல்லி அவள் தனக்குள் சிரித்தல்
முற்றா முலையார் முயங்க விதழ்குவிந்த
நற்றா ரகல நகைதரலின் – கற்றார்
கலவே மெனநேர்ந்துங் காஞ்சிநல் லூர
புலவேம் பொறுத்த லரிது.
முலை முயக்கம் இல்லாமல் குவிந்திருக்கும் வாய் இதழ்கள் சிரிக்கின்றன.
என்றாலும் நான் புலவி கொள்ளவில்லை
அதனை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை

புலவியுட் புலம்பல்

தொகு
நல்வளை மடந்தை நற்றார் பரிந்து
புலவி யாற்றாள் பலம்புற் றன்று.
ஊடல் தீராமல், மாலையைக் கழற்றி வீசிவிட்டு, அவள் ஊடுதல்
ஓங்கிய வேலான் பணியவு மொள்ளிழை
தாங்காள் வரைமார்பிற் றார்பரிந் – தாங்கே
அடும்படர் மூழ்கி யமைமென்றோள் வாட
நெடும்படர்க ணீந்தின நீர்.
அவன் பணிந்தான்
அப்போதும் அவளால் தாங்கமுடியவில்லை
மார்பில் இருந்த மாலையைக் கழற்றி வீசிவிட்டு,
கண்ணீரைக் கொட்டினாள்

பொழுதுகண்டு இரங்கல்

தொகு
நிற்ற லாற்றா நெடிதுயிர்த் தலமரும்
பொற்றொடி யரிவை பொழுதுகண் டிரங்கின்று.
நிற்றவும் முடியாத அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டு மாலைப் பொழுதில் வருந்துதல்
இறையே யிறந்தன வெள்வளை யுண்கண்
உறையே பொழிதலு மோவா – நிறையைப்
பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை
உருகா வுயங்கு முயிர்.
வளையல் தோளில் நிற்கவில்லை
கண்ணில் நீர்மழை
இப்படி என்னை ஆளாக்கிக்கொண்டு மாலைக்காலம் வருகிறது
என் உயிர் உருகுகிறது
அவள் சொல்கிறாள்

பரத்தையை ஏசல்

தொகு
அணிவய லூரனொ டப்பிவிழ வமரும்
பணிமொழி யரிவை பரத்தையை யேசின்று.
ஊரன் மார்போடு தன்னை அப்பிக்கொண்டு விழாக் கொண்டாடும் பரத்தையை மனைவி ஏசுதல்
யாமுயங்கு மென்முலையால் யாணர் வயலூரன்
தேமுயங்கு பைந்தார் திரைமுயங்க – யாமுயங்க
எவ்வையர் சேரி யிரவு முமைபொருந்தாக்
கவ்வை கருதிற் கடை.
நான் முயங்கும் ஊரன் மார்பினை
சேரி வாழ் என் அக்காமார் முயங்குதலை
ஊர் கௌவை பேசுகிறது
அவள் ஏசல்

கண்டுகண் சிவத்தல்

தொகு
உறுவரை மார்ப னொள்ளிணர் நறுந்தார்
கறுவொடு மயங்கிக் கண்சிவந் தன்று.
கணவன் மார்பு மாலை கசங்கி இருப்பது கண்டு மனைவி சினத்தல்
கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின்
ஆடிய சாந்தி னணிதொடர்ந்து – வாடிய
தார்க்குவளை கண்டு தரியா விவண்முகத்த
கார்க்குவளை காலுங் கனல்.
கணவன் மனைவியை அணைக்க வந்தான்
அவன் மார்புச் சந்தனம் கலைந்திருந்தது.
அவன் மாலை கசங்கியிருந்தது.
மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
அவள் கண்கள் தீப்பொறி விசின

காதலிற் களித்தல்

தொகு
மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிட லறியாக் காதலிற் களித்தன்று.
அவன் மார்பில் கிடப்பதைக் கைவிட முடியாமல் காதல் இன்பத்தில் அவள் களிப்புறுதல்
காதல் பெருகிக் களிசெய்ய வக்களியாற்
கோதையுந் தாரு மிடைகுழைய – மாதா
கலந்தாள் கலந்து கடைக்கண்ணாற் கங்குல்
புலந்தாள் புலரியம் போது.
காதல் பெருகும் களிப்பு
களிப்பில் குழையும் மாலை
கலவி இப்படி
கலவி இன்பம் நீட விடாமல் இரவு கழிந்துகொண்டிருக்கிறதே என்று இரவுக்காலத்தின்மீது அவளுக்குப் புலவி

கொண்டகம் புகுதல் .

தொகு
காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக்
கோதையார் பிணித்துக் கொண்டகம் புக்கன்று.
மனைவி காதல் கணவனைக் கண்டதும் மகளிர் மகிழ்ந்து அவளை அவளது கொண்டவன் மனைக்கு அழைத்துச் செல்லுதல்
கண்டு களித்துக் கயலுண்க ணீர்மல்கக்
கொண்டகம் புக்காள் கொடியன்னாள் – வண்டினம்
காலையாழ் செய்யுங் கருவரை நாடனை
மாலையான் மார்பம் பிணித்து
காணாமல் இருந்த கணவனைக் கண்டதும்
அவனைத் தழுவிக்கொண்டு
தன் கொண்டவன் இல்லம் சென்றாள்

கூட்டத்துக் குழைதல்

தொகு
பெய்தா ரகலம் பிரித லாற்றாக்
கொய்தலை யல்குல் கூட்டத்துக் குழைந்தன்று.
அவன் மார்பகப் பிரிவை ஆற்றிக்கொள்ள முடியாமல் இருந்தவள் அவன் கூடியபோது குழைந்தது
மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பிற்
றயங்கு புனலூரன் றண்டார் – முயங்கியும்
பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னும்
கோதைசூழ் கொம்பிற் குழைந்து.
கணவன் மார்பினைத் தழுவிக்கொண்டு
இன்னும் பிரிவாயா எனக் கண்ணீர் விட்டாள்

ஊடலு ணெகிழ்தல்

தொகு
நள்ளிருண் மாலை நடுங்கஞர் நலிய
ஒள்வளைத் தோளி யூடலு ணெகிழ்ந்தன்று.
மனைவி கணவனுடன் ஊடல் கொள்ளுதல்
தெரிவின்றி யூடத் தெரிந்துநங் கேள்வர்
பிரிவின்றி நல்கினும் பேணாய் – திரிவின்றித்
துஞ்சே மென்மொழிதி தூங்கிருண் மான்மாலை
நெஞ்சே யுடைய நிறை.
நாம் ஊடினால் கணவர் பிரிவு இல்லாமல் இருப்பார் என்று எண்ணிக்கொண்டு அவள் ஊடினாள்

உரைகேட்டு நயத்தல்

தொகு
துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
உயர்வரை நாட னுரைகேட்டு நயந்தன்று.
ஊடித் துயரத்தோடு இருந்தவள் அவன் உணர்த்தும் சொல்லைக் கேட்டு அவனை நயப்பது
ஆழ விடுமோ வலரொடு வைகினும்
தாழ்குர லேன்றஃ றலைக்கொண்ட – நூழில்
விரையாற் கமழும் விறன்மலை நாடன்
உரையாற் றளிர்க்கு முயிர்.
அவள் ஊடும்போது அவன் அவளை அழும்படி விட்டுவிடுவானா
அவன் அமைதி கூறினான்
அப்போது அவள் உயிர் தளிர்த்தது

பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்

தொகு
கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கின்று.
கணவன் கைகளைக் கூப்பித் தன் காலடியில் பணியும்போது ஊடிய மனைவி இரக்கம் காட்டுதல்
அணிவரு பூஞ்சிலம் பார்க்கு மடிமேல்
மணிவரை மார்பன் மயங்கிப் – பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை
நிற்கென்றி வாழியர் நீ.
சிலம்பணிந்த காலுக்கு அடியில் விழுந்து கணவன் பணிந்தான்
அப்போது வாழ்க என அவனை வாழ்த்திச் சினம் தணிந்தாள்

பள்ளிமிசைத் தொடர்தல்

தொகு
மாயிருங் கங்குல் மாமலை நாடனைப்
பாய னீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று.
அவள் தன் பாயிலிருந்து எழுந்து அவன் பள்ளிகொள்ளும் இடத்திற்குச் செல்லல்
யானை தொடருங் கொடிபோல யானுன்னைத்
தானை தொடரவும் போதியோ – மானை
மயக்கரிய வுன்கண் மடந்தைதோ ளுள்ளி
இயக்கருஞ் சோலை யிரா.
யானையில் கட்டிய மன்னன் கொடி யானை செல்லுமிடமெல்லாம் செல்வது போல
அவள் தன் படுக்கையை விட்டு எழுந்து அவன் இருக்குமிடம் செல்கிறாள்
அவனும் அவ்வாறு நடந்துகொள்கிறான்

செல்கென விடுத்தல்

தொகு
பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கிச்
சேயிழை யரிவை செல்கென விடுத்தன்று.
கணவன் பணியாற்றச் செல்லும்போது ‘செல்க’ என மனைவி விடுத்தல்
விலங்குந ரீங்கில்லை வென்வேலோய் சென்ற
இலங்கிழை யெவ்வ நலியக் – கலங்கிக்
குறியுள் வருந்தாமைக் குன்றுசூழ் சோலை
நெறியுள் விரிக நிலா.
வெற்றி வேலோய்!
உன்னைத் தடுப்பவர் இல்லை
செல்லலாம்
நீ செல்லுமிடத்தில் நிலா தன் ஒளியை வீசட்டும்
அவள் இப்படிச் சொல்கிறாள்

பெருந்திணைப் படலத்துட் பெண்பாற் கூற்று முற்றிற்று.

இருபாற் பெருந்திணை

தொகு
சீர்செல வழுங்கல் செழுமட லூர்தல்
தூதிடை யாட றுயரவற் குரைத்தல்
கண்டுகை சோர்தல் பருவ மயங்கல்
ஆண்பாற் கிளவி பெண்பாற் கிளவி
தேங்கமழ் கூந்தற் றெரிவை வெறியாட்
டரிவைக் கவடுணை பாண்வர வுரைத்தல்
பரிபுரச் சீறடிப் பரத்தை கூறல்
விறலி கேட்பத் தோழி கூறல்
வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல்
பரத்தை வாயில் பாங்கிகண் டுரைத்தல்
பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்
குற்றிசை யேனைக் குறுங்கலி யுளப்பட
ஒத்த பண்பி னொன்றுதலை யிட்ட
ஈரெண் கிளவியும் பெருந்திணைப் பால.


  1. செலவழுங்கல்
  2. மடலூர்தல்
  3. தூதிடையாடல்
  4. துயரவற்குரைத்தல்
  5. கண்டுகை சோர்தல்
  6. பருவ மயங்கல்
  7. ஆண்பாற் கிளவி
  8. பெண்பாற் கிளவி
  9. தேங்கமழ் கூந்தற் றெரிவை வெறியாடல்
  10. அரிவைக்கு அவள் துணை பாண் வரவுரைத்தல்
  11. பரிபுரச் சீறடிப் பரத்தை கூறல்
  12. விறலி கேட்பத் தோழி கூறல்
  13. வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல்
  14. பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல்
  15. பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்
  16. குற்றிசை
  17. குறுங்கலி - உளப்பட ஒத்த பண்பின் ஒன்று தலையிட்ட ஈரெண் கிளவியும் (17) பெருந்திணைப் பால.

செலவழுங்கல்

தொகு
நிலவுவே னெடுந்தகை நீள்கழை யாற்றிடைச்
செலவுமுன் வலித்துச் செலவழுங் கின்று.
பொருளுக்காகச் சென்றவன் மனைவி நினைவில் பாதி வழியில் மீளுதல்
நடுங்கி நறுநுதலா டன்னலம்பீர் பூப்ப
ஒடுங்கி யுயங்க லொழியக் – கடுங்கணை
வில்லே ருழவர் விடரோங்கு மாமலைச்
செல்லே மொழிக செலவு.
என் நன்னுதலாள் பீர் பூப்ப அவளை விட்டுவிட்டுச் செல்லமாட்டேன் என்று
மலைவழியில் செல்லும்போது நினைத்துக்கொண்டு தலைவன் மீள்கிறான்

மடலூர்தல்

தொகு
ஒன்றல்ல பலபாடி
மன்றிடை மடலூர்ந்தன்று.
காதலியின் புகழைப் பலவாறாகப் பாடிக்கொண்டு பனைமடல் குதிர்ரைமேல் ஊர் மன்றத்தில் செல்லுதல்
இன்றிப் படரோ டியானுழப்ப வைங்கணையான்
வென்றிப் பதாகை யெடுத்தானாம் – மன்றில்
தனிமடமா னோக்கி தகைநலம்பா ராட்டிக்
குனிம்மடன்மாப் பண்ணிமேல் கொண்டு.
இன்று காதல் துன்பத்தில் வருந்துகிறேன்
காமன் தன் 5 மலரம்புகளைத் தொடுத்து வெற்றிக்கொடி நாட்டுகிறான்.
நான் பனைமட்டையில் குதிரை செய்து, ஊர் மன்றத்தில் அவளைப் பாராட்டிக்கொண்டு, அந்த மடலமா மேல் ஊர்கிறேன்
இவ்வாறு தல்லைவன் கூறுகிறான்

தூதிடை யாடல்

தொகு
ஊழி மாலை யுறுதுயர் நோக்கித்
தோழி நீங்கா டூதிடை யாடின்று.
தோழி தலைவனிடம் தூது செல்லல்
வள்வாய்ந்து பண்ணுக திண்டேர் வடிக்கண்ணாள்
ஒள்வாள் போன் மாலை யுயல்வேண்டும் – கள்வாய
தாதொடு வண்டிமிருந் தாம வரைமார்ப
தூதொடு வந்தேன் தொழ.
குதிரைமீது வார் சாட்டை வீசித் தேரோட்டிக்கொண்டு தலைவியிடம் செல்க.
மலைமாலை மார்ப
அதற்காகத்தான் தூது வந்திருக்கிறேன்
தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்

துயரவற் குரைத்தல்

தொகு
மான்ற மாலை மயிலியல் வருத்தல்
தோன்றக் கூறித் துயரவற் குரைத்தன்று.
இருளும் மாலைக்காலம் உன் காதலி மயிலியலை வருத்துகிறது - என்று தோழி தலைவனிடம் கூறுதல்
உள்ளத் தவலம் பெருக வொளிவேலோய்
எள்ளத் துணிந்த விருண்மாலை – வெள்ளத்துள்
தண்டா ரகலந் தழுஉப்புணையா நீநல்கின்
உண்டாமென் றோழிக் குயிர்.
என் தலைவி உள்ளத்தில் அவல வெள்ளம் பாய்கிறது
உன் மார்பை அவளுக்குத் தந்தால் அவள் உயிருடன் இருப்பாள்
இவ்வாறு தோழி தலைவனிடம் கூறுகிறாள்

கண்டுகை சோர்தல்

தொகு
போதார் கூந்தற் பொலந்தொடி யரிவை
காதல் கைமிகக் கண்டுகை சோர்ந்தன்று.
காதல் உணர்வுடன் இருக்கும் தலைவியைக் கண்டு தோழி மனம் சோர்தல்
ஆம்ப னுடங்கு மணிவளையு மேகின
கூம்பன் மறந்த கொழுங்கயற்கண் – காம்பின்
எழில்வாய்ந்த தோளி யெவனாங்கொல் கானற்
பொழிலெல்லா மீயும் புலம்பு.
வளையல் கழல்கிறது
கண் மூடவில்லை
தோழி!
இப்படி இருந்தால் நிலைமை என்ன ஆகும்
தோழி இவ்வாறு தலைவியிடம் கூறுகிறாள்

பருவமயங்கல்

தொகு
உருவ வால்வளை யுயங்கத் தோழி
பருவ மயங்கிப் படருழந் தன்று.
பருவம் அன்று; பருவ மயக்கம் என்று தோழி கூறுதல்
பெரும்பணை மென்றோள் பிரிந்தாரெம் முள்ளி
வரும்பருவ மன்றுகொ லாங்கொல் – சுரும்பிமிரும்
பூமலி கொன்றை புறவெல்லாம் பொன்மலரும்
மாமயிலு மாலு மலை.
கொன்றை பூத்திருக்கிறது
மயில் ஆடுகிறது
என்றாலும் இது வருவதாகச் சொன்ன கார்காலம் அன்று
அவர் வரவில்லையே என்று ஏங்கவேண்டாம் - என்கிறாள் தோழி

இதுவுமது

ஆங்கவர் கூறிய பருவ மன்றெனத்
தேங்கமழ் கோதை தெளிதலு மதுவே.
வந்தது பருவம் அன்று தலைவி தெளிலும் இந்தத் துறை
பொறிமயி லாலின் பொங்க ரெழிலி
சிறுதுவலை சிந்தின சிந்த – நறிய
பவர்முல்லை தோன்றி பரியாம லீன்ற
அவர்வருங் காலமீ தன்று.
மயில் ஆடுகிறது
மேகம் பொழிகிறது
முல்லை, தோன்றி மலர்கள் பூக்கின்றன
என்றாலும் இது அவர் வரவேண்டிய கார்காலம் அன்று
அவர் சொன்ன சொல் தவறாதவர்

ஆண்பாற் கிளவி

தொகு
காமுறு காமந் தலைபரிந் தேங்கி
ஏமுற் றிருந்த விறைவனுரைத்தன்று.
காமத்தில் தலைவன் ஏக்கம் கொண்டு வருந்துதல்
கயற்கூடு வாண்முகத்தாட் கண்ணிய நெஞ்சம்
முயற்கூடு முன்னதாக் காணின் – உயற்கூடும்
காணா மரபிற் கடும்பகலும் கங்குலும்
நாணாளு மேயா நகை.
அவள் கயல்கண்கள் மேயும் முகம் என் செஞ்சில் இருக்கிறது
முயன்று கூடுவேன் ஆயின் இரவும் பகலும் மகிழலாம்

பெண்பாற் கிளவி

தொகு
வெள்வளை நெகிழவு மெம்முள் ளாத
கள்வனைக் காணாதிவ் வூரெனக் கிளந்தன்று.
வளையல்கள் நழுவுகின்றன
ஊர் அவனைக் கண்டுபிடித்துத் தரவில்லையே என்று தலைவி கூறுதல்
வானத் தியலு மதியகத்து வைகலும்
கானத் தியலு முயல்காணும் – தானத்தின்
ஒள்வளை யோடவு முள்ளான் மறைந்துறையும்
கள்வனைக் காணாதிவ் வூர்.
வானத்து நிலாவில் இருக்கும் மறு மங்கலால்தான் ஊரார் அவனைக் கண்டுபிடித்து எனக்குத் தர முடியவில்லலை

வெறியாட்டு

தொகு
தேங்கமழ் கோதை செம்ம லளிநினைந்
தாங்கந் நிலைமை யாயறி யாமை
வேங்கையஞ் சிலம்பற்கு வெறியாடின்று.
தலைவி அவள் காதலன் செம்மலை நினைத்து வாடியிருப்பதை அறியாமல் தாய் வேங்கை மரத்தடி முருகனை வழிபட்டு வெறியாடுதல்
வெய்ய நெடி துயிரா வெற்ப னளிநினையா
ஐய நனிநீங்க வாடினாள் – மையல்
அயன்மனைப் பெண்டிரொ டன்னைசொ லஞ்சி
வியன்மனையு ளாடும் வெறி.
அவள் வெற்பன் அளியை எண்ணி மையலில் வாட்டமுடன் இருந்தாள். ஊரார் அலர் தூற்றினர். தாய் தன் மனையில் வெறியாட்டு நடத்தினாள்.

பாண்வரவுரைத்தல்

தொகு
மாணிழைக்கு வயலூரன்
பாண்வரவு பாங்கி மொழிந்தன்று.
பாணன் தூது வந்திருப்பதைத் தலைவிக்குத் தோழி கூறுதல்
அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையாய் தாநொடியும்
வஞ்சந் தெரியா மருண்மாலை – எஞ்சேரிப்
பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரால்
எண்ணிய தென்கொலோ வீங்கு.
ஆயிழையாய்
மாலையில் நம் சேரிக்கு
யாழை மீட்டிக்கொண்டு பாணன் வந்திருக்கிறான்
அவன் என்ன சொல்வானோ தெரிவில்லை
தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்

பரத்தை கூறல்

தொகு
தேங்கமழ் சிலம்பன் றாரெமக் கெளிதென
பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று.
சிலம்பன் மாலையைப் பெறுதல் எனக்கு எளிது என்று பரத்தை கூறல்
பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வய லூரன்
நிலவுரைக்கும் பூணவர் சேரிச் – செலவுரைத்து
வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ளல்
எங்கட் கவன்றா ரெளிது.
விறலி ஆட்டத்தைப் பார்க்க நம் சேரிக்கு ஊரன் வந்துள்ளான்
அவன் தழுவுதலைப் பறுதல் எங்களுக்கு எளிது.
பரத்தை இவ்வாறு கூறுகிறாள்.

விறலி கேட்பத் தோழி கூறல்

தொகு
பேணிய பிறர்முயக் காரமு தவற்கென
பாணன் விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று.
தலைவன் பிறரை முயங்கியதை தோழி பாணனுக்கும் விறலிக்கும் கூறல்
அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் – சுரும்போ
டதிரும் புனலூர காரமிர்த மன்றோ
முதிரு முலையார் முயக்கு.
அரும்புக்கும் மணம் உண்டு
அலர் நாறுகிறது
அவன் முதிர்முலையாளை முயங்கினான்

விறலி தோழிக்கு விளம்பல்

தொகு
ஆங்கவன் மூப்பவர்க் கருங்களி தருமெனப்
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று.
அவன் மூப்பு எனக்கு களிப்பு தருகிறது என்று விறலி தோழிக்குக் கூறுதல்
உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் – விளைத்த
பழங்க ணனைத்தாய்ப் படுகளி செய்யும்
முழங்கும் புனலூரன் மூப்பு.
பக்கத்தில் இருப்பவர் சொல்லும் உரை எல்லாம் கிடக்கட்டும்
அவன் மூப்பால் துன்புறுகிறான்
இவ்வாறு விறலி தோழியிடம் கூறுகிறான்

பரத்தை வாயில் பாங்கிகண்டுரைத்தல்

தொகு
உம்மி லரிவை யுரைமொழி யொழிய
எம்மில் வலவனுந் தேரும் வருமெனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று.
பரத்தை தலைவியின் தோழியிடம் சொல்கிறாள்
உன் தலைவியின் சொல்லைக் கேளாமல்
அவள் கணவன் தேரோட்டியுடன் தேரில் வருவதைக் காண் - எனல்
மாணலங் கொள்ளு மகிழ்நன் றணக்குமேற்
பேணலம் பெண்மை யொழிகென்பார் – காணக்
கலவ மயிலன்ன காரிகையார் சேரி
வலவ நெடுந்தேர் வரும்.
கணவன் என்னை விட்டுச் சென்றால் என் பெண்மை நிலைக்காது என்று கூறும் தலைவி கண்ணில் காணுமாறு
மயில் போன்ற காரிகையார் வாழும் தெருவில்
வலவன் ஓட்டும் அவன் தேர் வருவதைக் காண் - இவ்வாறு பரத்தையின் தோழி சொல்கிறாள்

பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்

தொகு
மற்றவர் சேரியின் மைந்த னுறைந்தமை
இற்றென விறலி யெடுத்துரைத் தன்று.
தலைவன் சேரிப்பண்ணுடன் துயின்றதை விறலி தலைவியிடம் கூறுதல்
தண்டா ரணியவாந் தையலார் சேரியுள்
வண்டார் வயலூரன் வைகினமை – உண்டால்
அறியே னடியுறை யாயிழையாற் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு.
தண்டாரணியத்துத் தையலார் சேரியில் உன் வயலூரன் இருக்கிறான்
வேறெதுவும் எனக்குத் தெரியாது
அவள் எனக்குச் சிறப்பு செய்தாள்
அவ்வளவுதான் - என்று விறலி தலைவியிடம் தெரிவித்தாள்

குற்றிசை

தொகு
பொற்றா ரகலம் புல்லிய மகளிர்க்
கற்றாங் கொழுகா தறங்கணமா றின்று.
கற்றபடி ஒழுகாமல்,
தன்னைப் புல்லிய மகளிருடன் வாழ்தல்
அறக்கண் மாறியதாகும்
கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை
மரிய கழிகேண்மை மாந்த – தெரியின்
விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத்
தெளிந்தாரிற் றீர்வது தீது.
கரிய கண்ணும்
வெளுத்த வளையலும் கொண்டவள் நட்பை அவன் விரும்புகிறான்
செத்தாலும் அவளை விட்டு வரமாட்டான்
இப்படிச் சொல்பவரை நம்புவது தீது

குறுங்கலி

தொகு
நாறிருங் கூந்தன் மகளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வீயக் கூறின்று.
கணவன் கூந்தல் மகளிரை விரும்ப
மனைவி மனைவி வேட்கை வீதலைக் கூறுவது
பண்ணவாந் தீஞ்சொற் பவளத் துவர்ச்செவ்வாய்ப்
பெண்ணவாம் பேரல்குற் பெய்வளை – கண்ணவாம்
நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ
தொன்னல முண்டார் தொடர்பு.
மனைவி காம வேட்கையில் மேனி பசலை பாய விட்டுவிட்டு
இனிக்கப் பேசும் சிவந்த வாயும்
பெண்மை உணர்வு அவாவும் அல்குலும்
கொண்டவளை அவாவுதல்
தொன்னலம் உண்டார் தொடர்பு (தீயோர் நட்பு)

பன்னிரண்டாவது பெருந்திணைப்படலம் முற்றிற்று.

ஒழிபியல்

தொகு
பாடாண் பகுதியுட் டொல்காப் பியமுதல்
கோடா மரபிற் குணனொடு நிலைஇக்
கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
விடுத்த லறியா விறல்புரி வாகையுள்
வாணிக வென்றியு மல்ல வென்றியும்
நீணெறி யுழல னிலனுழு வென்றியும்
இகல்புரி யேறொடு கோழியு மெதிர்வன்
தகருடன் யானை தணப்பில்வெம் பூழொடு
சிவல்கிளி பூவை செழும்பரி தேர்யாழ்
இவர்தரு சூதிடை யாடல் பாடல்
பிடியென் கின்ற பெரும்பெயர் வென்றியொ
டுடையன பிறவு முளப்படத் தொகைஇ
மெய்யி னார்தமிழ் வெண்பா மாலையுள்
ஐய னாரித னமர்ந்துரைத் தனவே.

பாடாண் பகுதியுள் தொல்காப்பியம் முதல் கோடா மரபின் குணனொடு நிலைஇ

  1. கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
  2. விடுத்தல் அறியா விறல்புரி வாகையுள் வாணிக வென்றி
  3. மல்ல வென்றி
  4. நீணெறி யுழல னிலனுழு வென்றி
  5. இகல்புரி ஏறு
  6. கோழி
  7. மெதிர்வன் தகர்
  8. யானை
  9. தணப்பில் வெம் பூழ்
  10. சிவல்
  11. கிளி
  12. பூவை
  13. செழும் பரி
  14. தேர்
  15. யாழ்
  16. இவர்தரு சூது இடை
  17. ஆடல்
  18. பாடல்
  19. பிடி

என்கின்ற பெரும்பெயர் வென்றியொடு உடையன பிறவும் உளப்படத் தொகைஇ மெய்யினார் தமிழ் வெண்பா மாலையுள் ஐயனாரிதன் அமர்ந்து உரைத்தனவே.

கொடுப்போரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்

தொகு
சீர்மிகு நல்லிசை பாடிச் செலவயர்தும்
கார்முகி லன்னார் கடைநோக்கிப் – போர்மிகு
மண்கொண்ட வேன்மற மன்னரே யாயினும்
வெண்கொண்ட லன்னாரை விட்டு.
வேல்மறவரும், வெள்ளைமேகம் போன்றவருமாகிய மன்னரை விட்டுவிட்டு
கார்முகில் போல் கொடை வழங்குவார் கடைவாயிலுக்குச் செல்வோம்

வாணிக வென்றி

தொகு
காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங் கண்ணஞ்சான்
சாடுங் கலனும் பலவீயக்கி – நீடும்
பலிசையாற் பண்டம் பகர்வான் பரியான்
கலிகையா னீக்கல் கடன்.
வண்டியில் காடுகளையும், மரக்கலங்களில் நீர்நிலைகளையும் அஞ்சாமல் கடந்து சென்று பல பண்டங்களையும் கைக்குக் கை மாறச் செய்து பஞ்சத்தைப் போக்குதல் வாணிகன் கடமை

மல்வென்றி

தொகு
கண்டான் மலைந்தான் கதிர்வானங் காட்டியே
கொண்டான் பதாகை மறவல்லான் – வண்டார்க்கும்
காலை துயலு மருவிய மாமலை
போலுந் திரடோள் புடைத்து.
எதிராளியைக் காட்டில் கண்டவன் ஆயுத்தம் இல்லாமல் அவனுடன் மற்போர் செய்து தன் தோள் வலிமையால் வென்றான்.

உழவன் வென்றி

தொகு
மண்பத நோக்கி மலிவயலும் புன்செய்யும்
கண்பட வேர்பூட்டிக் காலத்தால் – எண்பதனும்
தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயர்போல்
வித்தித் தருவான் விளைவு.
வயலானாலும் புன்செய் நிலமாயினும் மண் ஈரமுடன் இருக்கும் பதம் பார்த்து ஏர் பூட்டிப் பருவகாலத்தில் விதைத்து விளைவினைத் தாய்போல் உதவுபவன் உழவன்.

ஏறுகொள் வென்றி

தொகு
குடைவரை யேந்தியநங் கோவலனே கொண்டான்
அடையவிழ் பூங்கோதை யஞ்சல் – விடையரவம்
மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத்
தின்று நமர்விட்ட வேறு.
பூங்கோதையே! அஞ்ச வேண்டாம். பறை முழங்க, மன்றத்தில் சுழலுமாறு நாம் விட்ட காளையை, மலையைக் குடையாகப் பிடித்த கோவலனே பிடித்து அடக்கினான்.

கோழி வென்றி

தொகு
பாய்ந்து மெறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும்வாய்க் கொண்டுங் கடுஞ்சேவல் – ஆய்ந்து
நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு.
நாம் சண்டைக்கு விட்ட கோழிச்சேவல் தன்னுடன் போரிடும் கோழியை, பாய்ந்தும், எறிந்தும், அதன்மேல் ஏறியும், பலமுறை சினம் கொண்டு தாக்கியும் வென்றது.

தகர்வென்றி

தொகு
அருகோடி நீங்கா தணைதலு மின்றித்
திரிகோட்ட மாவிரியச் சீறிப் – பொருகளம்
புக்கு மயங்கப் பொருது புறவாயை
நக்குமா னல்ல தகர்.
நாம் சண்டைக்கு விட்ட ஆட்டுக் கடா எதிர்த்த கடாமீது சீறிப் பாய்ந்தது வென்று தன் புறவாயைத் தன் நாவால் நக்கிக்கொண்டு நிற்கின்றது.

யானை வென்றி

தொகு
கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட
குஞ்சரம் வென்ற கொலைவேழம் – துஞ்சா
துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்றன்
நிழலையுந் தான்களிக்கு நின்று.
துணி போட்டுப் போர்த்தியிருக்கும் யானை தனக்கு அளித்த உணவுக் கவளத்தை உண்ட களிப்பில் பகையானையை வென்று தன் நிழலைப் பார்த்து அதனையும் தாக்கலாம் என்று எண்ணிற்று

பூழ்வென்றி

தொகு
சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற்
சொல்லும் பலவுள சொன்னபின் – வெல்லும்
நலம்வர நாடி நடுங்காது நூற்கட்
புலவரா லாய்ந்தமைத்த பூழ்
வளர்ப்பவரின் குறும்பூழ்ப் பறவை சண்டைக்கு விட்டபோது எதிர்த்த பறவையை வென்று புலவர் பாராட்டும் பேற்றினைப் பெற்றது.

சிவல்வென்றி

தொகு
ஒட்டியா ரெல்லா முணரார் புடைத்தபின்
விட்டோட வேண்டுமோ தண்ணுமை – விட்ட
சுவடேற்கு மாயிற் சுடரிழாய் சோர்ந்து
கவடேற்க வோடுங் களத்து.
தண்ணுமை முழக்கத்துடன் போரிட விட்ட சிவல் பறவை பின் வாங்கித் தாக்கி எதிர்த்த சிவல் பறவையை வென்றது.

கிளிவென்றி

தொகு
இலநா முரைப்பதன்க ணெல்வளை நாணப்
பலநாள் பணிபதமுங் கூறிச் – சிலநாளுள்
பொங்கரி யுண்கணாள் பூவைக்கு மாறாகப்
பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு.
காதலனிடம் பேசுமாறு பூவைக்குக் கற்றுக்கொடுத்ததை விட்டுவிட்டுக் கிளிக்குக் கற்றுக்கொடுத்தாள்

பூவை வென்றி

தொகு
புரிவோடு நாவினாற் பூவை புணர்த்துப்
பெரிய வரியவை பேசும் – தெரிவளை
வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்க ணாள்வளர்த்த
கிள்ளை கிளந்தவைகீண் டிட்டு.
அவள் காதல் பற்றிக் கிளி பேசியதைக் கேட்டு, அவள் வளர்த்த பூவை (மைனா) பறவையும் பேசிற்று.

குதிரை வென்றி

தொகு
ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்
கந்து மறமுங் கறங்குளைமா – முந்துற
மேல்கொண் டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான்
வேல்கொண்ட கண்ணாளை மீட்டு.
5 கதி
18 சாரி
கட்டுத்தரி மறம்
கற்றுச் சுழல்வது போர்க்குதிரை
அதில் ஏறிவந்து அவள் வேல்கண் வீச்சை வென்றான்

தேர்வென்றி

தொகு
ஒலிமணித் திண்டே ருடையாரை வெல்லும்
கலமணித் திண்டேராற் காளை – கலிமாப்
பலவுடன் பூட்டிப் படர்சிறந் தைந்து
செலவொடு மண்டிலஞ் சென்று.
பல குதிரைகள் பூட்டிய மணித்தேர் அவனுக்கு வெற்றி தந்தது

யாழ்வென்றி

தொகு
பாலை படுமலை பண்ணி யதன்கூட்டம்
கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின் – வேலைச்
சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த
அவையெலா மாக்கி வணங்கு.
அவள் தன் யாழில் படுமலைப் பண் இசைத்து அவையில் இருந்தோர் அனைவரும் வணங்குமாறு செய்தாள்

சூதுவென்றி

தொகு
கழகத் தியலுங் கவற்றி னிலையும்
அழகத் திருநுதலா ளாய்ந்து – புழகத்து
பாய வகையாற் பணிதம் பலவென்றாள்
ஆய வகையு மறிந்து.
அவள் சூதாடும் கழகத்தார், சூதாட்ட நிலைமை ஆகியவற்றை அறிந்து சூடாடி உடன் ஆடியவர் பணியும்படி வென்றாள்

ஆடல் வென்றி

தொகு
கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக்
கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு – பெய்பூப்
படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடும்
தொடுகழன் மன்னன் றுடி.
கை
கால்
புருவம்
கண்
பாணி
நடை
தூக்கு
ஆட்டம் காட்டி வென்று மன்னர்களைத் துடிக்கச் செய்தாள்

பாடல் வென்றி

தொகு
வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் கண்டறியக்
கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ்
அந்நரம்பு மச்சுவையு மாய்ந்து.
அவள் பாடினாள்
வெண்டுறை, செந்தஃறை வேற்றுமை தெரியும்படிப் பாடினாள்
கின்னர யாழின் இசையுடன் பாடினாள்
நரம்பின் சுவை எல்லாம் ஆராய்ந்தறிந்து பாடினாள்
பாட்டால் வென்றாள்

பிடி வென்றி

தொகு
குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச் செவ்வாய்
அவளொடு மாமையொப் பான – இவளொடு
பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப்
பேணிப் பெயர்ந்தாள் பிடி.
பாணி
தூக்கு
நடை
நெறி பிறழாமல் செல்லும் பிடி மேல் ஏறிக்கொண்டு அவள் சென்றாள்

ஒழிபு முற்றும்

சூத்திரம் 19

தொகு
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குடை யுழிஞை நொச்சி தும்பையென்
றித்திற மேழும் புறமென மொழிப
வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப்
போகிய மூன்றும் புறப்புற மாகும்.
  1. வெட்சி
  2. கரந்தை
  3. வஞ்சி
  4. காஞ்சி
  5. உழிஞை
  6. நொச்சி
  7. தும்பை

ஏழும் புறம்

  1. வாகை
  2. பாடாண்
  3. பொதுவியல்

மூன்றும் புறப்புறம்