புறப்பொருள் வெண்பாமாலை/கைக்கிளைப் படலம்

பதினொன்றாவது

கைக்கிளைப் படலம்

தொகு

ஆண்பாற் கூற்று

தொகு
காட்சி யையந் துணிவே யுட்கோள்
பயந்தோர்ப் பழிச்ச னலம்பா ராட்டல்
நயப்புற் றிரங்கல் புணரா விரக்கம்
வெளிப்பட விரத்த லெனவிவ் வொன்பதும்
ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்.
  1. காட்சி
  2. ஐயம்
  3. துணிவு
  4. உட்கோள்
  5. பயந்தோர்ப் பழிச்சல்
  6. நலம் பாராட்டல்
  7. நயப்புற்றிரங்கல்
  8. புணரா விரக்கம்
  9. வெளிப்பட இரத்தல்

என இவ் ஒன்பதும் ஆண்பால் கூற்றுக் கைக்கிளை யாகும்.

காட்சி

தொகு
சுரும்பிவர் பூம்பொழிற் சுடர்வேற் காளை
கருந்தடங் கண்ணியைக் கண்டுநயந் தன்று.
சோலையில் வேலேந்திய காளை
கருந்தடங் கண் கொண்டவளைக் கண்டு விரும்புதல்
கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
அரும்பிவர் மென்முலை தொத்தாப் – பெரும்பணைத்தோட்
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே.
அவளுக்கு இருக்கும்
கண் வண்டு
வாய் தளிர்
முலை பூங்கொத்து
தோள் பணைமூங்கில்
இப்படிப்பட்டவளை கண்டதும் என் கண்கள் களிப்புற்றன

ஐயம்

தொகு
கன்னவி றோளான் கண்டபி னவளை
இன்னளென் றுணரா னையமுற் றன்று.
அவன் அவளைக் கண்டு இன்னாள் என்று தெரியாமல் ஐயமுற்றது.
தாமரைமேல் வைகிய தையல்தொ றாழ்தளிரிற்
காமருவும் வானோர்கள் காதலிகொல் – தேமொழி
மையம ருண்கண் மடந்தைகண்
ஐய மொழியா தாழுமென் னெஞ்சே.
தாமரை மேல் இருக்கும் தையலோ
வானவர் காதலியோ
கண்ணில் மை பூசும் மண்மகளோ
யார் என்று தெளிவு பெறாமல் என் நெஞ்சம் ஐயம் கொள்கிறது.

துணிவு

தொகு
மாநிலத் தியலு மாத ராமெனத்
தூமலர்க் கோதையைத் துணிந்துரைத் தன்று.
இந்த உலகில் வாழும் பெண்தான் என மூடிவுக்கு வருதல்
திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும்
இருநிலஞ் சேவடியுந் தோயும் – அரிபரந்த
போகித ழுண்கணு மிமைக்கும்
ஆகு மற்றிவ் ளகலிடத் தணங்கே.
இவள் நெற்றி வேர்க்கிறது.
இவள் மாலை வாடியிருக்கிறது.
கால்கள் நிலத்தில் நிற்கின்றன.
கண்கள் இமைக்கின்றன.
ஆதலால் இவள் மண்ணுலகில் வாழும் பெண்தான்.

உட்கோள்

தொகு
இணரார் கோதையென் னெஞ்சத் திருந்தும்
உணரா ளென்னையென வுட்கொண் டன்று.
உள்ளத்தில் இருக்கும் அவள் என்னை உணரவில்லையே எனல்
கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும்
செவ்வாய்ப் பெருந்தோட் டிருநுதலாள் – அவ்வாயில்
அஞ்சொன் மாரிபெய் தவியாள்
நெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே.
ஊரார் என்னைத் தூற்றுமாறு என் உள்ளத்தில் இருக்கும் அவள்
என்னிடம் இனிமையாகப் பேசி என் நெஞ்சைச் சுடும் தீயை அவிக்கவில்லையே

பயந்தோர்ப் பழிச்சல்

தொகு
இவட்பயந் தெடுத்தோர் வாழியர் நெடிதென
அவட்பயந் தோரை யானாது புகழ்ந்தன்று.
இவளை இவ்விடத்தில் சேர்த்தவரும், இவளை பெற்றவரும் வாழ்க என்று தலைவன் வாழ்த்துதல்
கல்லருவி யாடிக் கருங்களிறு காரதிரும்
மல்லலஞ் சாரன் மயிலன்ன – சில்வளைப்
பலவொலி கூந்தலைப் பயந்தோர்
நிலவரை மலிய நீடுவா ழியரே.
களிறு முழங்கும் மலைச்சாரலில் காணப்படும் சில்வளைக் கூந்தலாளைப் பெற்றவர் நீடு வாழ்க.

நலம் பாராட்டல்

தொகு
அழிபட ரெவ்வங் கூர வாயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று.
தன் மனத்துன்பம் தீர கண்ட ஆயிழையின் நலத்தைப் பாராட்டுதல்
அம்மென் கிளவி கிளிபயில் வாயிழை
கொம்மை வரிமுலை கோங்கரும்ப – இம்மலை
நறும்பூஞ் சார லாங்கண்
குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே.
கிளி போல் பெசும் இவள் முலை கோங்கம்பூ அரும்பு போல் உள்ளது.
இவள் கண் சுனையில் பூக்கின்றன.

நயப்புற்றிரங்கல்

தொகு
கொய்தழை யல்குல் கூட்டம் வேண்டி
எய்துத லருமையி னிறப்பப் புகழ்ந்தன்று.
அவள் அல்குல் உறவை விழும்பியவன் அவளை அளவு கடந்து புகழ்தல்
பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண்முறுவற் பேதை – திருமுலை
புல்லும் பொறியி லேனுழை
நில்லா தோடுமென் னிறையி னெஞ்சே.
பெருகிய மடமை
சிறிய நெற்றி
சிவந்த வாய்
கருத்த கண்
வெளுத்த புன்னகை
பேதமைத் தன்மை
கொண்ட இவளது முலையைப் புல்லும் வாய்ப்பு எனக்கு இல்லை
என்றாலும் என் நெஞ்சம் என் நிறைவுடைமைக்குக் கட்டுப்படாமல் ஓடுகிறது.

புணரா இரக்கம்

தொகு
உணரா வெவ்வம் பெருக வொளியிழைப்
புணரா விரக்கமொடு புலம்புதர வைகின்று.
உணரமுடியாத மன உளைச்சலை ஒளியிழை தருதலால் அவளைப் புணரமுடியாமல் அவன் புலம்புதல்
இணரா நறுங்கோதை யெல்வளையாள் கூட்டம்
புணராமற் பூச றரவும் – உணராது
தண்டா விழுப்படர் நலியவும்
உண்டா லென்னுயி ரோம்புதற் கரிதே.
பூங்கோதை எல்வளையாள் என்னிடம் பூசல் செய்துகொண்டு என்னை விரும்பாமல் என்னைத் துன்புறுத்துவதால் என் உயிரே போய்விடும் போல் இருக்கிறது.

வெளிப்பட இரத்தல்

தொகு
அந்தழை யல்கு லணிநலம் புணரா
வெந்துயர் வெளிப்பட விரந்தன்று.
அவள் அல்குல் உறவைத் தராததால் அதனைத் தரும்படி வெளிப்படையாகவே கேட்டல்
உரவொலி முந்நீ ருலாய்நிமிர்ந் தன்ன
கரவருங் காமங் கன்றற – இரவெதிர
முள்ளெயி றிலங்கு முகிழ்நகை
வெள்வளை நல்காள் விடுமென் னுயிரே.
என் காமம் கடல்போல் பெருகுகிறது.
சிரிக்கும் சேயிழையே!
நீ உன்னைத் தராவிட்டால் என் உயிர் போய்விடும்
அவன் சொல்கிறான்


ஆண்பாற்கூற்றுக் கைக்கிளை முற்றிற்று

பெண்பாற் கூற்று

தொகு
காண்ட னயத்த லுட்கோண் மெலிதல்
மெலிவொடு வைகல் காண்டல் வலித்தல்
பகன்முனி வுரைத்த லிரவுநீடு பருவரல்
கனவி னரற்ற னெஞ்சொடு மெலிதல்
பெண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்.
  1. காண்டல்
  2. நயத்தல்
  3. உட்கோள்
  4. மெலிதல்
  5. மெலிவொடு வைகல்
  6. காண்டல் வலித்தல்
  7. பகல் முனிவு உரைத்தல்
  8. இரவுநீடு பருவரல்
  9. கனவில் அரற்றல்
  10. நெஞ்சொடு மெலிதல்

ஆகியவை பெண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்.

காண்டல்

தொகு
தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதல்
காம்பேர் தோளி கண்டு சோர்ந் தன்று.
காளையின் கட்டழகைக் காரிகை கண்டு மனம் சோர்தல்
கடைநின்று காம நலியக் கலங்கி
இடைநின்ற வூரலர் தூற்றப் – படைநின்ற
எற்கண் டிலனந் நெடுந்தகை
தற்கண் டனென்யான் கண்ட வாறே.
காமம் என்னைத் துன்புறுத்துகின்றது.
ஊரார் அலர் தூற்றுகின்றனர்
அந்த நெடுந்தகை என்னைக் கண்டுகொள்ளவில்லை.
நானோ அவனை என் மனத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு அவள் கலங்குகிறாள்

நயத்தல்

தொகு
கன்னவி றிணிதோட் காளையைக் கண்ட
நன்னுத லரிவை நயப்புர்த் தன்று.
திணிதோளனைக் கண்டபோது அவள் நெஞ்சில் நப்பாசை ஊர்ந்தது.
கன்னவி றோளானைக் காண்டலுங் கார்க்குவளை
அன்னவென் கண்ணுக் கமுதமாம் – என்னை
மலைமலிந் தன்ன மார்பம்
முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே.
அவன் தோள் எனக்கு அமுதம் போல் தோன்றுகிறது.
அவன் மார்பு என் முலையைத் தழுவினால் அந்த அமுதத்தைப் பெறலாம்
அவள் நினைவு இவ்வாறு ஓடுகிறது.

உட்கோள்

தொகு
வண்டமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண்டொடி யரிவை யுட்கொண் டன்று.
கண்ணில் கண்ட மைந்தனை காரிகை தன் மனத்தில் மணாளனாக வைத்துக்கொண்டது
உள்ள முருக வொளிவளையுங் கைநில்லா
கள்ளவிழ் தாரானுங் கைக்கணையான் – எள்ளிச்
சிறுபுன் மாலை தலைவரின்
உறு துய ரவலத் துயலோ வரிதே.
அவள் உள்ளம் உருகிற்று. அவளது கைவளையல்கள் நழுவின. மாலை வேளை. அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை

மெலிதல்

தொகு
ஒன்றார் கூறு முறுபழி நாணி
மென்றோ ளரிவை மெலிவொடு வைகின்று.
அவனோடு உடலுறவு கொண்டால் தனக்குப் பழி நேருமே என்று உள்ளம் மெலிதல்
குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்கண்
அரும்பிய வெண்முத் துகுப்பத் – கரும்புடைத்தோள்
காதல்செய் காமங் கன்றற
ஏதி லான்றஃ கிழந்தனெ னெழிலே.
அவள் கண்ணீர் முத்துக்கள் அவள் முலைமேல் துளித்தன. தோள்களில் திணவெடுக்கும் காம மிகுதியால் அவள் அழகு அவளிடம் இல்லை.

மெலிவொடு வைகல்

தொகு
மணிவளை நெகிழ மாநலந் தொலைய
அணியிழை மெலிவி னாற்றல்கூ றின்று.
வளையல் நழுவ, நலம் தொலைய, அவள் மெலிவதைக் கூறுதல்
பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோள்
இறைபுனை யெல்வளை யேக – நிறைபுனையா
யாம நெடுங்கட் னீந்துவேன்
காம வொள்ளெரி கனன்றகஞ் சுடுமே.
பிறை போன்ற நெற்றியிலும், தோளிலும் பீர்க்கம்பூ போன்ற பசலை பூக்க, கையில் வளையல் கழல, காமத்தீ சுட, தன் நிறையுடைமையால் இரவெல்லாம் நீந்திக்கொண்டிருந்தாள்.

காண்டல் வலித்தல்

தொகு
மைவரை நாடனை மடந்தை பின்னரும்
கைவளை சோரக் காண்டல் வலித்தன்று.
அவனை மீண்டும் காண அவள் விரும்புதலைக் கூறுவது
வேட்டவை யெய்தி விழைவொழிதல் பொய்போலும்
மீட்டு மிடைமணிப் பூணானைக் – காட்டென்று
மாமை பொன்னிறம் பசப்பத்
தூமலர் நெடுங்கண் டுயிறுறந் தனவே.
விரும்பியதை அடைதல் பொய் போலும் என்று எண்ணிக்கொண்டு, தன் மேனியின் பொன்னிறம் மாறிப் பசலை பூப்ப, அவனைப் காட்டு தெய்வத்தை வேண்டிக்கொண்டு, அவள் கண்கள் இரவெல்லாம் உறங்காமல் கிடந்தன.

பகன்முனிவுரைத்தல்

தொகு
புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவர லுள்ள மொடு பகன்முனி வுரைத்தன்று.
தனிமையில் இருக்கும் பெண் காதலனை எண்ணி வருந்தி பகல் காலத்தையும் வெறுத்துக் கூறுதல்
தன்க ணளியவாய் நின்றேற்க்குத் தார்விடலை
வன்கண்ண னல்கா னெனவாடும் – என்கண்
இடரினும் பெரிதா லெவ்வம்
படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.
அளியேனாய் நிற்கும் எனக்கு என் தார்விடலை நல்கவில்லை. அதனால் என் துன்பம் பெரிது. அவனை நினைப்பதைக் காட்டிலும் பெரிது.

இரவுநீடு பருவரல்

தொகு
புலம்பொடு வைகும் பூங்குழை கங்குற்
கலங்கினேன் பெரிதெனக் கசிந்துரைத் தன்று.
தனிமையில் இருக்கும் பூங்குழை இலவிலும் கலங்கிக் எசிந்து உருகுதலைக் கூறுவது.
பெண்மே னலிவுபிழையென்னாய் பேதுறீஇ
விண்மே லியங்கு மதிவிலக்கி – மண்மேல்
நினக்கே செய்பகை யெவன்கொல்
எனக்கே நெடியை வாழிய ரிரவே.
நிலவுடன் தோன்றும் இராப் பொழுதே! என்னைப் பெண் என்றும் பாராமல் துன்புறுத்துகிறாய். உனக்கு நான் பிழை செய்தேன். எதற்காக விடியாமல் நீண்டுகொண்டே இருக்கிறாய்.

கனவின் அரற்றல்

தொகு
ஒண்டொடி மடந்தை யுருகெழு கங்குலிற்
கண்டவன் கரப்பக் கனவி னரற்றின்று.
காதலனைக் கனவில் கண்டவள் பிதற்றுதல்
அயர்வொடு நின்றே னரும்படர் நோய் தீர
நயம்வரும் பள்ளிமே னல்கிக் – கயவா
நனவிடைத் தமியேன் வைகக்
கனவிடைத் தோன்றிக் கரத்தனீ கொடிதே.
பகலெல்லாம் வருத்திய உன் நினைவை மறப்பதற்காக இரவில் படுத்து உறங்கினேன். பகலில் தனித்து இருந்த நீ இரவில் என் கனவில் தோன்றி என்னுடன் இருந்துவிட்டு விழித்ததும் வருத்துகிறாயே.

இதுவுமது

பெய்வளை யவனொடு பேணிய கங்குல்
உய்குவன் வரினென வுரைப்பினு மதுவே.
இரவுக் கனவில் வந்தவன் பகலில் வந்தால் என்னைப்பற்றிச் சொல்லுவேன் என்று மனைவி கூறல்.
தோடவிழ்தார் யானுந் தொடர வவனுமென்
பாடகச் சீரடியின் மேற்பணிய – நாடகமா
வைகிய கங்கு றலைவரின்
உய்குவெ னுலகத் தளியேன் யானே.
இரவில் வந்த கனவில் என் ஊடலைத் தணிக்க என் காலடியில் அவன் கிடந்தான். நனவில் இது வெறும் நாடகம் போல் ஆயிற்று.

நெஞ்சொடு மெலிதல்

தொகு
அஞ்சொல் வஞ்சி யல்லிருட் செலீஇய
நெஞ்சொடு புகன்ற நிலையுரைத் தன்று.
இரவில் அவன் இருப்பிடம் செல்ல அவள் நினைத்தல்
மல்லாடு தோளா னளியவாய் மாலிருட்கண்
செல்லா மொழிக செலவென்பாய் – நில்லாய்
புனையிழை யிழந்த பூசல்
நினையினு நினைதியோ வாழியென் னெஞ்சே.
நெஞ்சே! அவனைக் காண இரவில் செல்லலாம் என்று நினைக்கிறாய். பகலெல்லாம் அவனை நினைத்து அவனிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தாயே. அதனை மறந்துவிட்டாயா

இதுவுமது

வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன்
அரிவைய ரறிகென வுரைப்பினு மதுவே.
அவனிடம் நானே செல்லப்போகிறேன் என்று மற்றப் பெண்களிடம் அவள் கூறல்
நல்வளை யேக நலந்தொலைவு காட்டிய
செல்லல் வலித்தேனச் செம்மன்முன் – பில்லாத
வம்ப வுரையொடு மயங்கிய
அம்பற் பெண்டிரு மறைகவெம் மலரே.
நான் மேனிநலம் கெட்டுக் கிடப்பதை அவனுக்குக் காட்ட அவன் முன் செல்லப் போகிறேன். வம்பு பேசும் பெண்களே! என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லி விருப்பம் போல் தூற்றுங்கள்.

பதினொன்றாவது கைக்கிளைப்படலம் முற்றிற்று.