அன்னை ருக்மிணி தேவிக்கு…
★
|
‘சதிராட்டம்’ என்றழைத்து வந்த கொச்சை மொழி நடனத்தை— ‘பரதக் கலை’ — எனப் பெயர் உயர்த்திப் பார் புகழ வைத்த உன் சலங்கையொலிக்கும்
|
★
|
அம்பலத்தில் ஆடுகின்ற அந்நியப்பட்ட ஆரணங்குகளுக்கே சொந்தமென்றிருந்த அக்கலையின் அவல நிலை மாற்றி— இல்லந்தோறும் இனிய ‘கிண்கிணிச்’ சலங்கை ஒலிக்கச் செய்த உன் அயராத போராட்ட வெற்றிக்கும்—
|
★
|
சாதி மதக் குலச் சடங்குகளால் - சமுதாயக் கொடிகள் தாறுமாறாகப் பறந்து குலத் தாழ்ச்சி உயர்ச்சி - பேசி வந்த மக்கள் மத்தியில்—
|
|
உள்ளத்து உறவே உறவென்று புதுமைப் பெண்ணாய்ப் பூத்துக் குலுங்கிய உன் திருமணப் புரட்சிக்கும்
|
★
|
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் — என்றுரைத்த வள்ளலாரின் உள்ளத்து வழித் தோன்றலென. வாயில்லாப் பிராணிகளிடமும் கருணை முகம் காட்டி — அன்பு கூட்டி: மக்களுக்கு மட்டுமல்ல சங்கமும் சமதர்மமும் — இங்கு மாக்களுக்கும் அவை உண்டென நலம் பேணிக் குழு அமைத்த உன் தலைமைக்கும்
|
★
|
ஆலிலை மேல் துயில் கொள்ள ஒருநாள் வருவான் கண்ணன் எனக் கனவு கண்டோ என்னமோ.— ஆலமரங்களையே கொண்ட அடையாறைத் தேர்ந்தெடுத்து — அங்கே குழலும், யாழும், இன்னிசை முழங்க — கந்தர்வர்களோ —அரம்பையரோவென ஆடவரும் அணங்குகளும் இனிய நடனங்கள் பல புரிந்து சகுந்தலையும் — துஷ்யந்தனுமாய் உன் முன்னிலையில் கந்தர்வ மணம் புரியவும் — வில்லொடித்து வீரராகவன், ஜனக மகள் சீதையைத் தெய்வத் திருமணம் புரியவும் — ஆலமா மர நிழலில் அழகிய அரங்குகள் பல அடுக்கடுக்காய்ச் சமைத்து — வடமொழி, தென்மொழிகளில் அரிய பல நாட்டிய நாடகங்களை அற்புதமாய்ப் படைத்துப் பார்புகழ் கொண்ட உன் கலை உள்ளத்திற்கும்—
|
★
|
ஏடு தேடி—காடு மேடென்று ஆண்டுகள் பல சுற்றிச் சுற்றித் தமிழ்த் தொண்டாற்றிய தாத்தாவின் ஒப்பற்ற சங்கத் தமிழ்ப் பணி—என்றும் வங்கக் கடலோரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்க உன் க்ஷேத்திரத்தே ஓர் அரிய நூலகமும் சமைத்து—ஈடற்ற இலக்கியப் பணிக்கு அன்பு நீர் வார்த்த உன் இணையிலாத் தமிழ்ப் பற்றிற்கும்—
|
★
|
வெளி நாட்டினரையும் உன் கலையால் கவர்ந்து பாரதத்தில் பரதம் பயில அழைத்து—பயில்வித்து; கடல் கடந்து இந்தியப் புகழ் பரப்பிய உன் அடக்கமான கலைப் பணிக்கும்—
|
★
|
இயல், இசை, நாடகம் என்னும் முத்தான முத்தமிழும்—கலாசாரத்திற்கு ஒரு க்ஷேத்திரமென உன் அகத்தே முழங்கிட—பழம் பெரும் பாவலர், இசைப் புலவர்கள் பலரையும் ஆதரித்து; அன்புடன் இடமளித்து குருகுல முறைப்படி இளம் மாணவர்களுக்கு நல் இசை வகுப்புகள் பல நடத்தி—பாட்டிலும்—எழில் நாட்டியத்திலும் இளம் கலைஞர்கள் பலரை உருவாக்கி, இவ்வுலகுக்களித்து ஈடில்லாப் புகழ் பரப்பி நிற்கும் உன் இனிய இசைத் தொண்டிற்கும்—
|
|
|