புல்லின் இதழ்கள்/சிறப்புரை


டாக்டர் கலைஞரின் சிறப்புரை

காவிரியின் வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்து மண்ணில் நெல்லும் விளையும், புல்லும் விளையும்; அது போல இசையும், வாழ்வும் இரண்டறக் கலந்து, இன்ப வெள்ளத்தைக் கொடுக்கும் பண்பும் இந்த மண்ணுக்கு உண்டு என்பதை நாடு நன்கறியும்.

“புல்லின் இதழ்கள்” என்ற இந்தப் பெருங்கதையில் நண்பர் திரு. கே. பி. நீலமணி அவர்கள் தஞ்சையின் இசை மணத்தைத் தரம் குன்றாது, தவழ விட்டுள்ளார்கள். இசையினை உயிர் மூச்சாகக் கருதி, உயர் வாழ்வு நடத்தும் ஆசான் ஒருவர், ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டு குடும்பச் சூறாவளியில் சிக்கிச் சுழல்வதையும்; அவரது மாணவன் ஒருவன் அதே போன்று இசை வெள்ளத்தில் அழுந்தி, அன்புச் சுழலில் சிக்கி, அமிழ்ந்து, தக்க தருணத்தில் நீந்தி, இறுதியில் வெற்றிகரமாக வாழ்க்கையின் கரையினை எட்டுகின்ற காட்சிகள் கருத்துக்கு விருந்தாக இந்நூலில் காணக் கிடக்கின்றன. எளிய நடையாயினும் சுவை குன்றாது படித்து முடிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது அதன் தனிச் சிறப்பாகும். அனைவரும் படித்துப் பயன் பெறத் தக்க விதமாக இந்நூலினை ஆக்கித் தந்துள்ள அன்பரைப் பெரிதும் பாராட்டுகிறேன்.