புல்லின் இதழ்கள்/பால் கறக்கவா?
பாகவதரைப் போன்ற மனோதைரியமும், நெஞ்சுறுதியும் உள்ளவர்களைப் பார்ப்பது அரிது. எந்த நிலைமையையும் எதிர்த்து நின்று, உறுதியோடு சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். எதற்கும் கலங்காதவர். அப்படிப்பட்டவரே அன்று கண் கலங்கி விட்டார்.
கச்சேரி ஒன்றுக்காகக் காலண்டரைப் புரட்டிப் பார்ப்பதைத் தவிர, எதிர் காலத்தைப் பற்றி அவர் கனவு கூடக் காண்பவரல்ல. அதற்காக எந்தத் திட்டமும் அவர் வகுக்கவில்லை. ஆனால், இப்போது அதையெல்லாம் தாம் கவனிக்கத் தவறியது பெரும் தவறு என்று அடிக்கடித் தோன்ற ஆரம்பித்தது. குடும்ப பாரத்தைப் பற்றி சிந்திக்கலானார். காயத்திரியைப் பற்றி நினைத்த போதெல்லாம் கண் கலங்கியது. அவளுடைய எதிர்காலத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும் என்று எண்ணினார்.
சுசீலா, வசந்தி திருமணததைப் பற்றி எண்ணினார். இத்தனைக்கும் மேலாக ஹரியைப் பற்றி எண்ணிக் கவலைப் பட்டார். இப்படி கவலைப்படுவதே வழக்கமாகி விட்ட பின், இனித் தாம் எழுந்து கச்சேரி செய்ய முடியும் என்ற தைரியத்தையும் அவர் அறவே இழந்து விட்டார். திடீரென்று ஒரேயடியாக முதுமையை அடைந்து; உடல் தளர்ச்சியடைந்து விட்டாற் போல் தோன்றியது அவருக்கு. கண் கலங்கியது.
அருகில் இருந்த வசந்தி, “ஏன் அப்பா அழுகிறீர்கள்?” என்று கவலையோடு கேட்டபோது, அவளுக்கு என்ன பதில் கூறுவதென்றே அவருக்குத் தெரியவில்லை.
“உங்களையெல்லாம் எண்ணித்தான் அம்மா, கவலைப் படுகிறேன்” என்று பொதுவாகத்தான் அவரால் கூற முடிந்தது. ஆனால், அப்படிக் கூறியதே எத்தனை தவறாகி விட்டது!
“எங்களைப் பற்றி என்னப்பா கவலை? அம்மாவும் நானும் இருப்பது, உங்களுக்குப் பாரமாகத் தோன்றுகிறதா, அப்பா?”
வசந்தியின் வார்த்தைகள் ‘சுரீர்’ என்று பாகவதரின் உச்சி நரம்பைச் சென்று தாக்கின.
“வசந்தி, நான் என்ன சொன்னேன்; நீ என்ன பதில் சொல்லுகிறாய்? உங்களைப் பற்றி என்றால், நீயும் அம்மாவுந்தானா? இங்கே உள்ளவர்களை ஏன் தள்ளி வைத்து விட்டாய்? உன்னை நான் மிகவும் புத்திசாலி என்று எண்ணியிருந்தேனே, வசந்தி! இந்த வார்த்தைகள் உன் பெரியம்மா காதில் விழுந்தால், அவள் மனம் என்ன பாடுபடும்? உங்களைப் பற்றி என்றால் காயத்திரி, நீ, சுசீலா ஆகியவர்களையும் பற்றித்தான் கூறினேன். மனிதன் எழுந்து நடமாடும் போது, மனமும் கூத்தாடுகிறது. அவன் விழுந்து விட்டால், அதுவும் படுத்து விடுகிறது. இனி மேல் முன்போல் எழுந்து நடமாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கே இல்லை.” பாகவதர் மளமளவென்று பேசித் தீர்த்தார்.
“நான் தவறாகப் பேசி விட்டதற்கு, என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நீங்கள் இவ்வளவு கவலைப்பட்டு, அதைரியமடைவதற்கு அர்த்தமே இல்லை. இப்போது எங்களுக்கு என்ன வந்து விட்டது? நீங்கள் விரைவிலேயே குணமடைந்து கச்சேரி பண்ணத்தான் போகிறீர்கள். வீணாக, நீங்களே இப்படிக் கவலைப்பட்டால், எங்களுக்கு. ஆறுதல் கூற யார் இருக்கிறார்கள்? நீங்கள் கீழே விழுந்த செய்தியைக் கேட்டதிலிருந்து, அம்மா அரை வயிற்றுக்குக் கூடச் சாப்பிடுவதில்லை. எல்லாரையும் போல் கூடவே இருந்து, இந்தச் சமயத்தில் பணிவிடை செய்யக் கூடக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன்’ என்று அழுது கொண்டே இருக்கிறாள். ஆனால் யார் எது வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். நான் இப்போது தினம் வந்து, உங்களைப் பார்த்து விட்டுப் போவது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள் வசந்தி.
இதைக் கேட்டதும், பாகவதர் சற்றுக் கோபமாகப் பேசினார்: “யார் உன்னை என்ன நினைத்துக் கொள்ள இருக்கிறது? நீ என்னுடைய பெண்; உன் தாய் என் மனைவி. இந்த விஷயத்தை ஒளிவு மறைவில்லாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சுப்பராமன் தவறான வழிக்குப் போக மாட்டான். என் மனத்துக்குச் சரி என்று பட்டதை, இந்த உலகமே எதிர்த்து வந்தாலும், நான் அதிலிருத்து தவற மாட்டேன். அதற்கு ஹரியினுடைய உதாரணம் ஒன்று போதாதா? அவனை நான் வீட்டோடு வைத்துக் கொண்டு சங்கீதம் சொல்லிக் கொடுப்பதற்கு, என்னை எத்தனை பேர் எவ்வளவு கேள்விகள் கேட்டிருப்பார்கள் என்று உனக்குத் தெரியுமா? நான் எதையாவது லட்சியம் செய்திருப்பேனா? இந்தப் பொறாமை பிடித்த உலகம்—பிறர் வாழ்ந்தாலும் பார்க்கப் பிடிக்காமல், கண்ணை மூடிக் கொள்ளும்; தாழ்ந்தாலும், எங்கே உதவி கேட்க வந்து விடுவானோ என்று பயந்து, கண்ணை மூடிக் கொள்ளும். இதை நானா மதிப்பவன்?”
உணர்ச்சி வேகத்தோடு பேசியதானால், பாகவதருக்கு இரைத்தது. அதற்குள், ஹரியும் அங்கே வந்தான். உடனே பாகவதர் அவனிடம், “போன காரியம் என்ன? ராஜப்பாவையும், சாமாவையும் பார்த்தாயா? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்.
“அவர்கள் இரண்டு பேருமே வெளியூர்க் கச்சேரி முடிந்து வெள்ளிக் கிழமை காலையில்தான் ஊருக்கு வருகிறார்களாம்” என்று ஹரி கூறினான்.
“சரி, ஆண்டவன் விருப்பப்படியே நடக்கட்டும். அதற்கு மேல் நாம் என்ன செய்ய? இந்த இரண்டு நாளைக்கும், நீ எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம்; இங்கே இருப்பவர்கள் கவனித்துக் கொள்வார்கள். கச்சேரிக்கு வேண்டியதை எல்லாம் தயார் பண்ணிக் கொள்’ என்றார்.
வசந்தி, ஹரியை ஒரக் கண்ணால் ஒரு முறை பார்த்தாள். பாகவதர் உடம்பு சரியில்லாமல் ஆனதிலிருந்து, வசந்திக்கும், சுசீலாவுக்கும் பாடம் நின்று போய் விட்டது. அதன் பிறகு, ஹரி திருவிடைமருதூருக்குப் போகவில்லை. வசந்தியாலோ, ஹரியைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது போலிருந்தது. அதற்கேற்ப அம்மாவின் உத்தரவும் அநுகூலமாக இருந்தது. சுசீலாவின் கண்காணிப்பைப் பற்றியோ, அலட்சியத்தைப் பற்றியோ அவள் லட்சியம் செய்யத் தயாராக இல்லை.
ஹரி மாடிக்குப் போனதும், சிறிது நேரத்துக்கெல்லாம் வசந்தியும் மாடிக்குச் சென்றாள். ஹரி பாடுவதற்காக உட்கார்ந்தான். அவளைப் பார்த்ததும், அவனுக்கு வியப்பாக இருந்தது.
“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? இங்கேயும் வந்து விட்டாளே என்றா? உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும். அதை அப்புறம் சொல்கிறேன். முதலில் தம்பூராவை இப்படிக் கொடுங்கள். நான் போடுகிறேன்; பிறகு, நீங்கள் பாடலாம்” என்று கையை நீட்டினாள்.
ஹரிக்கு உடம்பு முழுவதும் குப்பென்று வியர்த்து விட்டது. ‘வர வர வசந்தியின் துணிச்சல் பெருகிக் கொண்டே போகிறதே! இன்றைக்கு என்ன, வாட்ச்மென் சுசீலா ஸி.ஐ.டி. வேலையை விட்டு ஓடிப் போய் விட்டாளா? எங்கே அவளை இன்னும் காணவில்லை? வசந்தி வந்தது தெரிந்தால், இதற்குள் நூறு தடவை குறுக்கும் நெடுக்குமாக வந்திருப்பாளே!’ என்று ஆச்சரியப்பட்டான்.
“நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்து விட்டீர்களே; உங்கள் அரங்கேற்றத்துக்கு நான்தான் தம்பூரா போடப் போகிறேன். சரிதானா?”
“ரொம்ப சரி, பிரமாதமாக இருக்கும். அப்படியே செய்து விடு. எழுந்து போகிற கூட்டம், உனக்காகவாவது கலையாமல் கடைசி வரையில் இருக்கும்” என்றான்.
அதற்குள், கீழேயிருந்து “ஹரி, ஹரி!” என்ற சுசீலாவின் குரலைக் கேட்டு, இருவரும் பேச்சை நிறுத்தினர்.
“காணோமென்று கவலைப்பட்டீர்களே! இதோ வந்தாச்சு. போய் என்னவென்று கேட்டு வாருங்கள்” என்றாள் வசந்தி.
ஹரி அவள் முகத்துக்கெதிரே போலிக் கோபத்தோடு, கையைக் காட்டி விட்டுக் கீழே இறங்கினான்.
ஹரியைக் கண்டதும், “வசந்தி எங்கே? பாடச் சொல்லி அப்பா அனுப்பினாராம். பாட்டையும் காணோம், தம்புராச் சத்தத்தையும் காணோம். அரை நாழிகையா அரட்டைதான் கேட்டுக் கொண்டிருக்கிறது. அரங்கேற்றத்துக்கு இன்னும் இரண்டு நாள் இல்லை. இது தான் சாதகம் போலிருக்கிறது! வாருங்கள் சாப்பிட” என்று கூறி, அடுக்களையை நோக்கிச் சென்றாள்.
வசந்தி இதைக் கேட்டுக் கொண்டே, கீழே இறங்கி வந்தாள். “இவள் என்ன என்னை அதிகாரம் பண்ணுகிறது? அரட்டை அடிக்கிறாளாமே அரட்டை! இந்த வீட்டுக்கு இவள் எஜமானியா, அல்லது சர்வாதிகாரியா? நீங்கள் இந்த வீட்டில் இவளோடு எப்படித்தான் இருக்கிறீர்களோ, தெரியவில்லை. நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இவள் படுத்துகிற பாட்டை. அப்பாவிடம் சொன்னால்தான் நல்லது. எனக்கு சாப்பாடும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். நீங்கள் போய்ச் சாப்பிடுங்கள்” என்றாள் வசந்தி, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்.
“நீ சாப்பிடாமல் வேண்டுமானாலும் இரு; ஆனால் அப்பாவிடம் மட்டும், சுசீலாவைப் பற்றி ஒன்றும் சொல்லி விடாதே. அவர் ஏற்கனவே மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறார். இதைக் கேட்டதும் அவருக்குக் கோபம் வந்து, ஏதாவது பேசினால் பிறகு, அதன் பலனை நான்தான் சுசீலாவிடம் அநுபவிக்க வேண்டும். அதற்குச் சம்மதமானால், நீ தாராளமாய்ப் போய்ச் சொல்.”
ஹரியினுடைய வார்த்தையைக் கேட்டதும், வசந்திக்கு மேலும் கோபம் பற்றிக் கொண்டு வந்தது.
“நீங்கள் இப்படிப் பயந்து, பயந்து நடுங்குவதனால்தான், அவள் உங்களை இப்படி விரட்டுகிறாள். உங்களுக்கே அதுதான் இஷ்டமென்றால் அநுபவியுங்களேன்! எனக்கென்ன?” என்றவள், தந்தை படுத்திருந்த அறைக்குச் சென்று விட்டாள்.
ஹரி கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த போது, வசந்திக்கு நெஞ்சை நெருடுவது போல் இருந்தது. சுசீலாவின் அலட்சியமான பேச்சுக்கு, உடனே சரியான பதிலடி கொடுக்காமல் இருந்து விட்டதை எண்ணி, அவள் உள்ளம் குமுறியது. ‘இனி மேல், அப்பாவைப் பார்க்கக் கூட இங்கே அடிக்கடி வரக் கூடாது; ஹரிக்கு எப்போது ஊருக்கு வரத் தோன்றுகிறதோ, அப்போது வரட்டும், பார்த்துக் கொண்டால் போதும்’ என்று வசந்தியின் உள்ளம் ஒரு கணம் எண்ணியது.
பாகவதர் புரண்டு படுத்தார்.
“அப்பா!” என்று மெதுவாகக் கூப்பிட்டாள் வசந்தி.
அரைத் தூக்கத்திலோ, மயக்கத்திலோ இருந்த பாகவதர் தம் விழிகளை மெதுவாகத் திறந்து, “என்ன?” என்று மகளை நோக்கினார்.
“ஹரியின் அரங்கேற்றத்துக்கு அம்மாவும், நானும் வரட்டுமா அப்பா?” என்று கேட்டாள் வசந்தி.
“இது என்னம்மா அசட்டுக் கேள்வி? உன் அம்மா வந்திருந்து, ஆசிர்வதித்து அனுப்பாமலா ஹரி கச்சேரிக்குப் போய் விடுவான்? நீயும், அம்மாவும் வெள்ளிக் கிழமை காலையிலேயே வந்து விடுங்கள்” என்று கூறிய போதே லட்சுமியம்மாள் கையில் ஒரு பாட்டிலுடன் அங்கே வந்தாள்.
மனைவியைப் பார்த்ததும், பாகவதர் சிரித்துக் கொண்டே, “உன் பெண் என்னவோ சொல்லுகிறாள், பார். என்ன என்று கேள்” என்று தூண்டி விட்டார்.
லட்சுமியம்மாள் உடனே, “அதையும் கேட்கிறேன். நீங்கள் முதலில், இதைக் கேளுங்கள். சாப்பிடக் கூப்பிட்டு அனுப்பினேன். வரவில்லை. காலையில் வந்தவளுக்குப் பசிக்காமல் எப்படி இருக்கும்? ‘பசியே இல்லை’ என்று ஹரியிடம் சொல்லியனுப்பியிருக்கிறாளே உங்கள் பெண்” என்றாள் கணவரைப் பார்த்து.
“சரிதான். நீயும் ஒரு புகாரை வைத்துக் கொண்டிருக்கிறாயா? நாம் இரண்டு பேரும் இப்படி மாறி மாறிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தால், குழந்தை திணறிப் போய் விடுவாள். அது இருக்கட்டும்; கையில் என்னவோ கொண்டு வந்திருக்கிறாயே, என்ன அது?” என்று மெதுவாகப் பேச்சை மாற்றினார் பாகவதர்.
“சுந்தரிக்கு ஆவக்காய் உறுகாய் என்றால், ரொம்பப் பிடிக்கும். நேற்று சித்தூரிலிருந்து உங்கள் ஆந்திர சங்கீத ரசிகர் கொண்டு வந்தாரே, அதில் ஒரு பாட்டிலை அனுப்பலாம் என்று கொண்டு வந்திருக்கிறேன், வசந்தியிடம் கொடுத்து அனுப்பட்டுமா?”
“ஏன்? நீதான் ஒரு தடவை, வசந்தியோடு திருவிடை மருதூருக்குப் போய் வாயேன். ஹரியின் அரங்கேற்றத்துக்குக் காலையிலேயே எல்லாருமாக இங்கே வந்து விடுங்கள். என்ன யோசிக்கிறாய்? நான் சொல்லுவது சரிதானே?“
”சரிதான். போனால் சுந்தரி கூட நீங்கள் சொல்வது போல் சந்தோஷப்படுவாள். ஆனால், இங்கே உங்களை எப்படித் தனியாக விட்டுப் போவது?“
”அசடு மாதிரி பேசாதே. நான் இங்கே தனியாகவா இருக்கிறேன்? படுக்கையில் விழுந்த பிறகு, ராஜோபசாரம் அல்லவா நடக்கிறது? தினம் என்னைப் பார்த்துப் போக, எத்தனைப் பேர் வருகிறார்கள்! பேசாமல் போய் வா. ஹரியும், உன் பெண்களும் இருக்கிறார்கள்; கவனித்துக் கொள்வார்கள். நிம்மதியாக நீ இரண்டு நாள் இருந்து விட்டு வா“ என்று மனைவிக்கு உத்தரவு கொடுத்து, வசந்தியோடு சேர்த்து அனுப்பினார்.
அம்மா போன பிறகு, வீட்டு வேலை முழுவதும் காயத்திரி தலை மேல் விழுந்தது. ஹரி குருவுக்குப் பணி விடை செய்வதும், குடும்பத்துக்கு வேண்டிய காரியங்களைச் செய்வதும், அரங்கேற்றத்துக்காகத் தன்னைத் தயார் செய்து கொள்வதுமாக நேரம் போதாமல் திணறினான். சுசீலாவுக்கோ, ஹரியை விரட்டிக் கொண்டிருப்பதற்கே நேரம் போதவில்லை.
ஹரி சாப்பிட்டு முடிந்ததும், கையலம்பி விட்டு வந்தான். சாப்பிட்ட எச்சிலைக் காயத்திரி சாணமிட்டு மெழுகிக் கொண்டிருந்தாள். தேய்க்க வேண்டிய காலியான பாத்திரங்கள் ஒரு பக்கம் குவிந்திருந்தன. அம்மா இருந்தால், இப்படி இவ்வளவு வேலைகளையும் போட்டு விட்டுச் சுசீலா வெளியே போயிருக்க மாட்டாள். ஆனால், அம்மா இல்லாதது அவளுக்கு எல்லா விதத்திலும் கொண்டாட்டமாகி விட்டது. இனிமேல் காயத்திரிதான் அவ்வளவு பாத்திரங்களையும் தனியாகத் தேய்க்க வேண்டும். அதன் பிறகு, அடுக்களையைக் கழுவி விட்டுத் தேய்த்த பாத்திரங்களை அதனதன் இடத்தில் கவிழ்த்து முடிப்பதற்குள், அப்பாவுக்குக் காபிக்கு நேரமாகி விடும். உடனே பால் கறக்கப் போய் விடுவாள்.
ஹரி யோசித்தான். அவனுக்குப் பாத்திரம் தேய்க்கத் தெரியாது; மாடு கறக்கவும் தெரியாது. பாத்திரம் தேய்ப்பதை விட மாடு கறப்பது அவனுக்குச் சுலபமாக பட்டது. அதில் காயத்திரிக்கு உதவி செய்தால் என்ன? ஒரு வேலை என்றால் ஒரு வேலை. அது அவளுக்கு மிச்சந்தானே?
ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல், தேய்க்க வேண்டிய பாத்திரங்களை முதலில் கிணற்றங்கரையில் கொண்டு போய்ப் போடலாம் என்று எண்ணினான். அப்போது அடுக்களையிலிருந்து வந்த காயத்திரி, அவன் கையில் இருந்த வெண்கலப் பானையைப் பிடுங்கிக் கீழே வைத்தாள்.
“ஆண் பிள்ளைகள் செய்ய வேண்டிய வேலையைத்தான் ஆண் பிள்ளைகள் செய்ய வேண்டும். இது உன் வேலை அல்ல. போய்ச் சாதகம் பண்ணு. கச்சேரிக்கு இன்னும் இரண்டு நாள் கூட இல்லை. அப்பாவை நான் பார்த்துக் கொள்கிறேன். அவரைப் பற்றிய கவலைகளை மறந்து, நீ மாடிக்கு போ” என்று உத்தரவு பிறப்பித்து விட்டுப் பற்றுப் பாத்திரங்களுடன் பின்கட்டை நோக்கி நடந்தாள்.
ஹரி அவள் சென்ற திக்கையே வெறிக்கப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். காயத்திரியின் உருவில் ஒரு பெண் தெய்வம் அசைந்து செல்வது போல் தோன்றியது. ஆனால், அந்தத் தெய்வத்துக்கு ஆலயமும் இல்லை, வழிபாடும் இல்லை. சாந்தித்தியம் இல்லாத மூர்த்தியைப் போல், அவள் வாழ்வை இழந்து விட்ட ஒரு சிலை!
தன் மீது மட்டும் அல்ல, தன் முன்னேற்றம் பற்றியும் அவள் கொண்டிருக்கும் அக்கறையையும், சற்று முன்பு தன்னை உற்சாகப்படுத்தி அவள் கூறிய ஆறுதலான வார்த்தைகளையும் திரும்பத் திரும்ப மனத்துக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டான். அவன் மனம் சுயநலத்தை நாடி மாடிக்குச் செல்வதை ஒப்பவில்லை. கொல்லையை நோக்கி நடந்தான். அவனைக் கண்டதும், காயத்திரிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“பாடப் போகச் சொன்னேன்; இங்கே வந்து நிற்கிறாயே. என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.
“இன்றைக்கு நான்தான் பால் கறக்கப் போகிறேன். அதற்குள், தேய்த்த பாத்திரங்களையெல்லாம் இங்கே கொடுங்கள். உள்ளே கொண்டு போய் வைக்கிறேன்.” என்றான்.
“கொஞ்சம் முன்தானே சொன்னேன், இதெல்லாம் என் வேலை என்று? நாளைக்குப் பெரிய சங்கீத வித்வானாகப் போகிறவன், இப்படிப் பாத்திரம் அலம்பவும், மாடு கறக்கவும் ஆசைப்படலாமா?” சிரித்துக் கொண்டே கேட்டாள் காயத்திரி.
“பரவாயில்லை. நான் பரம்பரைச் சங்கீத வித்வானாக இருந்தால், நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம். நான் உங்களால் வித்துவானாக உருவாக்கப்பட்டவன். அந்த நன்றியைக் காட்டாமல், போலி கௌரவம் கொண்டாட நான் விரும்பவில்லை. அது எனக்கு வேண்டவும் வேண்டாம். உதவிக்கு வருகிறவனைத் தடுக்காமல், செம்பைத் தேய்த்துக் கொடுங்கள். இன்று நான்தான் பால் கறக்கிறேன்.”
“இத்தனை நாள் சுசீலாவால் வெறும் திட்டோடும், வசவோடும் இருந்தது. இன்று உன் உடம்புக்கு உதையும் கேட்கிறது போலிருக்கிறது.”
ஹரி ஒன்றும் புரியாமல் ஒரு கணம் விழித்தான்.
“நான் பொய் சொல்லுகிறேன் என்று மலைக்கிறாயா? செம்பை எடுத்துக் கொண்டு, மடியைத் தொடு. ‘சொத்’தென்று உதை கொடுக்கா விட்டால், என் பேர் காயத்திரி அல்ல. இந்த மாடு என்னைத் தவிர, வேறு யாருக்கும் மசியாது என்று உனக்குத் தெரியாதா? பேசாமல் உள்ளே போய்ப் பாடு. என்னிடம் உனக்கு அன்பு இருப்பது எனக்குத் தெரியும். அதை இப்படியெல்லாம் காட்டிப் பசுவிடம் பல்லை உடைத்துக் கொள்ள வேண்டாம். கச்சேரி செய்கிற இந்த அழகான முகத்திலே கட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா?”
ஹரிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ‘அழகான முகம்!’-காயத்திரியின் வாயால் கேட்ட அந்தச் சொல் அவனுக்கு அமுதமாக இனித்தது.
“சொல்லச் சொல்லக் கேளாமல், இன்னும் கொல்லையிலேயே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய்? போலீஸ்காரர்கள் கெடுபிடியும் வேண்டித்தான் இருக்கிறது. இந்தச் சுசீலா எங்கே தொலைந்து போனாள்?”
“என்னைப் பயமுறுத்துகிறீர்களா?”
“பயமுறுத்தவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்தில் பாட்டுச் சத்தம் காதில் விழா விட்டால், அப்பாவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி விடுவேன்!”
மறு நிமிஷம் ஹரி அங்கிருந்த மின்னலைப் போல் மறைந்து, மாடிக்குச் சென்றான். ஆனால், அதே சமயம் படியேறும் போதே பாகவதர் அறையிலிருந்து வந்த முனகல் சப்தமும்; ‘ஹரி ஹரி’ என்று நூலிழையில் வந்த தீனமான ஒலியும் அவனை மேலே செல்ல முடியாமல், அங்கேயே தடுத்து நிறுத்தின.
அறைக்குள் ஹரி ஓடிச் சென்று பார்த்த போது பாகவதர் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தார். நெஞ்சு வலி பொறுக்க முடியவில்லை என்று ஜாடை காட்டினார்.
ஹரி சட்டென்று அருகில் உட்கார்ந்து நெஞ்சைத் தடவி விட்டான். முதுகில் நீலகிரித் தைலத்தைத் தடவி, நன்றாகத் தேய்த்து விட்டான். கொல்லையில் இருந்த காயத்திரிக்குக் குரல் கொடுத்தான். அவள் வந்து பார்த்த போது, வலி பொறுக்க முடியாமல் பாகவதர் கண்களை மூடிக் கொண்டிருந்தார்.
“அப்பாவுக்கு என்ன ஹரி?” என்று மிக்க பரபரப்புடன் கேட்டாள்.
“என்னவோ தெரியவில்லை. திடீரென்று நெஞ்சை வலிக்கிறதாம். துடித்துக் கொண்டிருக்கிறார். போய் டாக்டரை அழைத்து வரட்டுமா?”
“வேண்டாம். கொஞ்சம் பார்த்துக் கொண்டு கூப்பிடலாம். முதலில் கொஞ்சம் தவிடு வறுத்துக் கொண்டு வருகிறேன். ஒத்தடம் கொடுத்துப் பார்ப்போம்” என்று சொல்லி, அடுக்களையை நோக்கி விரைந்தாள் காயத்திரி.
வாணலியை, அப்பா படுத்திருந்த அறைக்குக் கொண்டு வந்து, சிறுகச் சிறுக தவிட்டை வறுத்துத் துணியில் கிழியாகக் கட்டி, ஹரியிடம் கொடுத்தாள். அந்த இளஞ்சூடு பாகவதருக்கு அப்போது இதமாக இருந்தது. மூச்சு முன்னை விடச் சற்று சுகமாக விட முடிந்தது. விழிகளைத் திறந்து ஹரியையும், காயத்திரியையும் மாறி, மாறிப் பார்த்து விட்டு, “சுசீலா எங்கே?” என்று கேட்டார்.
“இப்போது வந்து விடுவாள். நீங்கள் தூங்குங்கள்” என்று காயத்திரி அப்பாவை வேண்டிக் கொண்டாள்.
இரவு முழுவதும் பாகவதர் முனகிக் கொண்டும், விழித்துக் கொண்டும் இருந்தார். அதனால், உறக்கம் வந்தவர்களாலும் தூங்க முடியவில்லை. இந்த உபாதையைச் சுசீலாவினால் ஒரு நாள் கூடத் தாங்க முடியவில்லை. அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்த அவளுக்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. அடுக்கடுக்காகக் கொட்டாவிகளை விட்டாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள்; எழுந்து, நடமாடிப் பார்த்தாள்; புஸ்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு, படித்துப் பார்த்தாள். கையில் இருந்த புஸ்தகம் அவளையும் அறியாமல் நழுவிக் கீழே விழுந்தது. அதை அலமாரியில் கொண்டு வைக்கிற சாக்கில், அந்த அறையிலிருந்து பூனை மாதிரி நழுவியவள், பிறகு அங்கே வரவே இல்லை. அவள் சேஷ்டைகளை ஆரம்பத்திலிருந்து கவனித்த ஹரியும், காயத்திரியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்,
“அவள் இங்கே சாயங்காலத்திலிருந்து என்ன செய்தாள்? பேசாமல் அவளை எட்டு மணிக்கே அனுப்பியிருக்கலாம்” என்றாள் காயத்திரி.
உடனே ஹரி, “ஆ! நாமாக அனுப்பினால், ‘உங்களுக்கு மட்டும்தான் பொறுப்பா? எனக்கு இல்லையா?’ என்று நம்மிடம் படையாகச் சண்டைக்கு வந்து விட மாட்டாளா!” என்று கூறிய போது பாகவதர் இருமினார்.
சங்கிலி மாதிரி, அதைத் தொடர்ந்து பல இருமல்கள் வந்தன. அது அடங்குவதற்குள் மிகவும் களைத்துப் போய் விட்டார். உடம்பு குலுங்க, குலுங்க இருமியதில், விழிகளில் நீர் வழிந்தது. அருகில் இருந்த துண்டால் கண்களைத் துடைத்த ஹரியைப் பார்த்து, “மணி என்ன?” என்று கேட்டார்.
பிறகு இரண்டு மணி நேரங்களுக்கெல்லாம், மீண்டும் நெஞ்சு வலி பெரிதாக வந்து விட்டது. “ஹரி, உங்கம்மா எங்கேடா?” என்று பாகவதர் முனகினார்.
“நீங்கள் சொல்லியனுப்பினபடியே, அம்மாவும், எல்லாரும் காலையில் வந்து விடுவார்கள்” என்று சமாதானம் கூறினாள் காயத்திரி.
ஆனால், காலையில் லட்சுமியம்மாளும், வசந்தியும், சுந்தரியும் வீட்டுக்குள் நுழைந்த போது அங்கே கண்ட காட்சி, அவர்களை நடுங்க வைத்து விட்டது. பாகவதரைச் சுற்றிலும் எல்லாரும் நின்றிருந்தனர். நோயாளியின் கையில் ஊசி ஒன்றைப் போட்டுத் திரும்பிய டாக்டரிடம், “ஒன்றும் ஆபத்தில்லையே டாக்டர்?” என்று கவலையோடு கேட்ட காயத்திரியின் குரல் அவர்களின் நெஞ்சைக் கலக்கியது.