புல்லின் இதழ்கள்/பாடியது யார்?


 
16. பாடியது யார்?

ம்பிக்கை’ என்ற மகத்தான கவசத்தைப் பூட்டித்தான் மனிதனைக் கடவுள் உலகுக்கு அனுப்பி வைக்கிறார். நம்பிக்கை இல்லையேல் வாழ்வு ஏது? அதில் ரசனைதான் ஏது?

ஆனால், பாகவதருடைய வாழ்க்கை என்னவோ ரசனையற்றுத்தான் போய் விட்டது. ரெயில் விபத்திலிருந்து அவர் பிழைத்ததே மறு பிறப்பு என்றுதான் எல்லோரும் எண்ணினர். பம்பாய் மெயிலில் வந்து இறங்கிய பாகவதர், வண்டியிலிருந்து பிளாட்பாரத்தில் காலை வைத்த போது வண்டி ஒரு முறை குலுங்கி, முன்னும் பின்னும் அசைந்து நின்றது. பிடித்திருந்த பிடியை விட்டுப் பாகவதர் அப்படியே நிலை தவறி விழுந்து விட்டார். பஞ்சு அண்ணா பாய்ந்து வந்து பிடித்துக் கொள்வதற்குள், மண்டையில் பலமான அடிபட்டு ரத்தம் வந்தது. பாகவதரும் பிரபலமானவர், விழுந்த இடமும் பிரபலமான இடம்; கூட்டம் கூடி விட்டது. பாகவதரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். நல்ல காலம், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்றாலும், தலையிலும், காலிலும் அடி பலமாகத்தான் பட்டு விட்டது.

முதல் சிகிச்சை செய்த டாக்டர் எவ்வளவு கேட்டுக் கொண்டும், பாகவதர் சென்னையில் தங்க மறுத்து, “நான் ஊருக்கே போய் விடுகிறேன். அதுதான் எனக்கு நிம்மதி” என்று கூறி விட்டார்.

பாகவதருடன் பிரயாணம் செய்த சங்கீத ரசிகர் ஒருவர், “அப்படியானால் நீங்கள் ரெயிலில் போகக் கூடாது” என்று கூறித் தமது காரை அனுப்பி வைத்தார்.

பாகவதர் வந்து சேருவதற்குள், அந்த விஷயம் ஊரில் பரவி விட்டது. அவர் சுவாமிமலை வந்ததும், லட்சுமியம்மாள் உடனே அந்தக் காரை திருவிடைமருதூருக்கு அனுப்பி வைத்தாள். சுந்தரியும், வசந்தியும், ஹரியும் புறப்பட்டு வந்த போது வீடு முழுவதும் கூட்டமாக இருந்தது.

பாகவதருடைய தலையில் இருந்த கட்டைப் பார்த்து, சுந்தரியும், வசந்தியும் கலங்கி விட்டனர். ஹரி அவர் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தான். நினைவு திரும்பிய போதெல்லாம், அவர் ஹரியின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார்.

அவன் அவரருகிலேயே இருந்து இரவு, பகல் பாராமல் உதவி வந்தான். பகலெல்லாம் அவனுக்கு, கச்சேரி கேட்டு எழுதுகிறவர்களுக்குப் பதில் எழுதுவதும், கச்சேரி ஒப்புக் கொண்டிருக்கிற இடங்களுக்குப் பாகவதர் சுகவீனம் காரணமாக வர இயலாமை குறித்துக் கடிதம் எழுதுவதுமாக வேலைகள் அதிகம் இருந்தன.

வசந்தியும், சுந்தரியும் வந்த அன்றே திரும்ப ஊருக்குச் சென்று விட்டனர். பிறகு, தினம் ஒரு தடவை அவர்களில் யாராவது ஒருத்தி வந்து பார்த்து விட்டுச் சென்றாள்.

தந்தையைப் பார்க்க வேண்டுமென்று தோன்றிய போதெல்லாம், வசந்தி தயங்காமல் வந்தாள். காயத்திரியும், பெரியம்மாவும் அவளிடம் மிகவும் அன்போடு பழகினார்கள். விரைவிலேயே பாகவதருடைய உடல் தேறி வந்தது. தலைக் கட்டைப் பிரித்தார்கள்; தழும்பு ஆறி வந்தது. ஆனாலும் குளிக்கவோ, எழுந்து நடமாடவோ கூடாது என்று டாக்டர் கட்டளை பிறப்பித்திருந்தார்.

ஒப்புக் கொண்ட கச்சேரிகள் எல்லாம் ரத்தாகின்றனவே என்று அவர் மனம் வேதனைப்பட்டது. அந்த வேதனைகளை மறந்திருக்க, அவருக்கு ஒரே மருந்துதான் பயனுள்ளதாக உதவியது; ஹரியை ஓயாமல் பாடச் சொல்லிக் கேட்பதுதான் அது—

இந்தச் சந்தர்ப்பத்தில் ஹரிக்குப் புதிய பாடங்கள் நிறைய நடந்தன. சாதாரண சமயமாக இருந்தால், பாகவதர் மாதத்தில் பத்து நாள் ஊரில் தங்குவதே அபூர்வம். அதிலும், பாடம் நடத்த நான்கு நாள் கிடைப்பதே அரிது. இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை ஹரி பரிபூர்ணமாகப் பயன்படுத்திக். கொண்டான்.

பாகவதர் அவனுக்கு சிம்மநந்தன தாளத்தில் ஒரு பெரிய பல்லவியைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதை அவன் பாடிக் காட்டிக் கொண்டிருந்த போது, வாசலில் நாலைந்து பேர்—பாகவதரைப் பார்க்க வந்தவர்கள்—உள்ளே பாடிக் கொண்டிருப்பதை அறிந்து, திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தனர்.

லட்சுமி அம்மாள் அவர்களைத் தெரிந்துக் கொண்டு உள்ளே வந்து உட்காரும்படி கேட்டுக் கொண்டும், அவர்கள் பாட்டு முடிகிற வரையில் திண்ணையிலேயே இருந்தனர். காரணம், வந்திருந்தவர்கள் பஜனை மடத்தின் நிர்வாகிகள்; பாகவதரின் குணத்தை நன்கு அறிந்தவர்கள்.

பாடம் முடிந்து லட்சுமியம்மாள் போய்க் கூறவும், பாகவதர் அவர்களை “வாருங்கள் வாருங்கள்” என்று அன்புடன் வரவேற்றார். சிறிது நேரம் உடல் நிலையைப் பற்றி விசாரித்த பின், அவர்கள் வந்த காரியத்தைக் கூறினர்;

“வருகிற வெள்ளிக் கிழமையிலிருந்து பஜனை மடத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் ஆரம்பம். அன்று உங்கள் கச்சேரி போட்டிருக்கிறது. உங்களுடைய சௌகரியத்தைத் தெரிந்து கொண்டு போகலாம் என்றுதான் வந்திருக்கிறோம்” என்றனர்.

“என் சௌகரியம் என்ன இருக்கிறது? இதைப் பற்றி உங்களுக்கு முன்னதாக, நான் யோசனை செய்து வைத்திருக்கிறேன். இப்போது உங்களுடைய அபிப்பிராயமும் தெரிந்து விட்டால், முடிவான மாதிரிதான்.”

“இது உங்களுடைய சொந்த உற்சவம் மாதிரி. நீங்கள் எப்படிச் சொன்னாலும் அதன்படி நடக்கிறோம்.”

பாகவதர் ஒரு நிமிஷம் அவர்களுடைய முகத்தைப் பார்த்து விட்டுக் கூறினார்.

“நான் இப்போது சொல்லப் போவது என் சம்பந்தப்பட்ட விஷயம். இல்லாவிட்டால், இதற்குள், ‘நீங்கள் இப்படிச் செய்யுங்கள், அல்லது அப்படிச் செய்யுங்கள்’ என்று அபிப்பிராயத்தைக் கூறியிருப்பேன். இது பொது விஷயம். என்னதான், என்னை நீங்கள் எல்லாரும் தூக்கி வைத்துப் பேசினாலும், நாளைக்குக் கமிட்டியில் யாராவது ஒரு வார்த்தை சொல்லும்படி ஆகி விட்டால், எனக்குத தாங்காது. அதற்காகத்தான் முதலிலேயே இவ்வளவு தயங்குகிறேன்.”

“அண்ணா, அப்படியெல்லாம் ஒருக்காலும் நேரவே நேராது. உங்களை மீறிப் பேசக் கூடியவர்கள் இந்த ஊரில் யாரும் இல்லை. நீங்கள் தாராளமாக உங்கள் மனத்திலுள்ளதைச் சொல்லலாம்” என்றார் உதவிக் காரியதரிசி.

பக்கத்தில் இருந்த ஹரியைப் பார்த்துச் சிரித்தபடி, பாகவதர் கேட்டார், “ஹரி பாடி நீங்கள் கேட்டதில்லையே?”

“கேட்டதில்லை. ஆனால் வந்ததும் தம்புரா சப்தம் கேட்டது. பாடம் நடக்கிறது என்று எண்ணினோம். பிறகு, நீங்களே பாடிக் கொண்டிருந்தீர்கள். அதனால், உங்களைத் தொந்தரவு செய்யாமல், ஆனந்தமாகத் திண்ணையில் உட்கார்ந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தோம்.’

பாகவதர் மனத்துக்குள் சிரித்துக் கொண்டார். அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பாவோடியது.

“சற்று முன்பு உள்ளே பாடியது என் பாட்டைப் போலவா இருந்தது?” இந்தக் கேள்வியைக் கேட்ட போது அவரது மனம் பெருமையால் பூரித்தது.

“என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? உங்கள் பாட்டு எங்களுக்குத் தெரியாதா?”

“இல்லை, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள். இந்த உடம்போடு நான் பாடுகிறதாவது? வாயைத் திறந்தால் தலையில் ‘விண் விண்’ என்று தெறிக்கிறது. நீங்கள் கேட்டது ஹரியினுடைய பாட்டு.”

பாகவதர் கூறி முடிக்கு முன்பு, வந்திருந்தவர்கள் ஆச்சரியத்தினால் வாயைப் பிளந்தனர்.

“என்ன அண்ணா இது? ஷண்முகப்பிரியாவில் அத்தனை பெரிய பல்லவியை இத்தனை அழகாகப் பாடியது ஹரியா? நீங்கள் இப்போது சொல்லியுங்கூட எங்களால் நம்ப முடியவில்லை, அண்ணா!”

“சரி, உங்களுக்கும் ஹரியினுடைய பாட்டுப் பிடித்துப் போய் விட்டது. அப்படியானால் நான் ஒன்று சொல்லுகிறேன்; அதன்படிச் செய்யலாமா?”

“தாராளமாக.”

“இந்த வருஷம் எனக்குப் பதிலாக ஹரியைப் பாட வைத்து விடுவது; என்ன சொல்லுகிறீர்கள்?”

பாகவதருடைய இந்த வார்த்தையைக் கேட்டதும் வந்திருந்த அத்தனை பேருடைய முகங்களும் மலர்ந்தன.

காரியதரிசி பாபு சட்டென்று எழுந்து நின்று, “நாங்கள் இனி என்ன அண்ணா சொல்லப் போகிறோம்? சற்று முன்பு, நீங்கள் உடம்புக்கு முடியாதென்று கூறியதும், நாங்கள் உங்களிடம் என்ன கேட்க வேண்டுமென்று எண்ணினோமோ, அதை நீங்கள் சொல்லி விட்டீர்கள். கமிட்டியில் பாஸ் செய்து பத்திரிகை அச்சடித்து விடுகிறோம் அண்ணா” என்றார்.

அத்தனை நேரம் அங்கே நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரி, சட்டென்று பாகவதரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவன் இமைகள், நீர் கோத்து ஈரமாக இருந்தன.

”ஐயா, இவர்கள் எல்லாம். ஏதோ உற்சாகத்தில் என்னைக் குஷி படுத்திப் பேசி விட்டார்கள். குருவி தலையில் பனங்காயைச் சுமத்துவது போல, அரங்கேற்றங் கூட ஆகாத என்னைக் கொண்டு போய், அத்தனை பெரிய சதஸில் உட்கார வைத்தால், என்னால் சாமளிக்க முடியுமா?” என்றான் பணிவாக,

”எல்லாம் சமாளிப்பாய். உன் யோக்கியதையையும், திறமையையும் இவர்கள் சொல்லியா நான் தெரிந்து கொள்ளப் போகிறேன்? பனங்காய் அல்ல, பர்வதத்தையே தாங்குகிற சக்தி உனக்கு இருக்கிறது. ராமர் சந்நிதியில் வெள்ளிக் கிழமை உனக்கு நடக்கப் போகிறது பார்; அதுதான் உன் அரங்கேற்றக் கச்சேரி. ஒன்றுக்கும் கவலைப் படாதே. எல்லாம் ஜமாய்த்து விடுவாய்” என்றார் பாகவதர்.

சிறிது நேரம் எல்லாரும் கச்சேரியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ஹரிக்கு யாரைப் பக்க வாத்தியமாகப் போடுவது என்பதைப் பற்றிச் சர்ச்சையைக் கிளம்பினார் பாபு. பிடிலைப் பொறுத்த வரை கைராசிக்காரரான பஞ்க அண்ணாதாம் என்பது எல்லாருடைய அபிப்பிராயமும். மிருதங்கத்துக்கும், மற்றப் பக்க வாத்தியங்களுக்கும் அப்படியும், இப்படியுமாக எல்லாம் போட்டுப் பார்த்து இறுதியில், ‘பாகவதருக்கு வழக்கமாக உள்ள பழைய செட்டே இருக்கட்டும்; ஒன்றும் மாற்ற வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்து நின்றனர். பாகவதருக்கும் அதுவே சரி என்று பட்டது. “இப்படியே கமிட்டியில் பாஸ் பண்ணி நோட்டீசுக்குக் கொடுத்து விடுகிறோம். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா” என்று விடை பெற்றுச் சென்றனர்.

அவர்கள் போன பிறகுதான், பாகவதருக்கு நல்ல மூச்சு வந்தது. ஹரியைப் பற்றி அவர்கள் எல்லாரும் புகழ்ந்து பேசியதும், தம்முடைய ஸ்தானத்திலேயே, முதல் நாள் ஹரியினுடைய கச்சேரியை அவர்கள் போட இருப்பதும், அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தன. ஆனால் அதே சமயத்தில், இது விஷயமாகக் கமிட்டியிலோ, அடுத்துப் பாடப் போகிற வித்துவான்களுக்கிடையிலோ ஏதாவது அபிப்பிராய பேதம் தலைதூக்கி விடக் கூடாதே என்றும எண்ணினார்.

காரணம், ஹரி முதன் முதலாகக் கச்சேரிக்கு உட்காருகிறவன்; இளம் வித்துவான். அரங்கேற்றம் இதுதான். இப்படி இருக்கும் போது அநுபவம் மிக்க பிரபல வித்துவான்கள் தவறாக எண்ணி விடக் கூடாதே என்பதுதான் அவரது கவலைக்குக் காரணம்.

இப்படிப் பல விதமான எண்ணங்களில் உழன்ற அவரது சிந்தனையைச் சுசீலா கலைத்தாள். பெண்ணின் அழைப்பைக் கேட்டு உணர்வு பெற்ற பாகவதர் திரும்பிப் பார்த்தார்.

பழரசத்தைத் தகப்பனாருக்குக் கண்ணாடித் தம்ளரில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே, “ஏன் அப்பா, இந்த வருஷம் உங்களுக்குப் பதிலாக, ஹரியா பஜனை மடத்தில் பாடப் போகிறான்?” என்று கேட்டாள்.

“ஆமாம்! அதற்குள் உனக்கு எப்படித் தெரியும்? நோட்டீஸ் கூட நாளைக்குத்தானே தயாராகும்?”

“போங்கள் அப்பா. வீட்டுக்குள் நடக்கிற விஷயத்தை நோட்டீஸில் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?”

“பின், உன் வழக்கப்படி ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாயோ?”

“ஆமாம், உங்களுக்கு எப்போதும் என்னைக் குற்றம் சொன்னால்தான் பிடிக்கும். நான் ஒன்றும் ஒட்டும் கேட்கவில்லை; உடைசலும் கேட்கவில்லை. ஹரிதான் சற்று முன்பு, அக்காவிடம் கொல்லையில் வந்து பிரமாதமாக அளந்து கொண்டிருந்தான்; ‘என்னைக் கேட்காமலே, அப்பா எல்லா ஏற்பாடும் செய்து விட்டார். எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ? நல்ல பெயர் இல்லா விட்டாலும், கெட்ட பெயராவது வாங்கிக் கொடுக்காமல் இருந்தால் போதும்’ என்று.”

உடனே பாகவதர், “அதை நீ ஒட்டுக் கேட்டுக் கொண்டு வந்துதானே இங்கே சொல்லுகிறாய்? இல்லா விட்டால், உனக்கு எப்படித் தெரியும்? சுசீலா, நீ இந்தப் பழக்கத்தை விட்டு விடு. நிச்சயம் உன்னை அருகில் வைத்துக் கொண்டு, இதை அவன் காயத்திரியிடம் சொல்லியிருக்க மாட்டான். அவன்தான் உன்னைக் கண்டாலே நடுங்குகிறானே!” என்றார்.

“என்னைக் கண்டு எதற்கு நடுங்க வேண்டும்? நான் என்ன கரடியா, புலியா?” என்று கேட்டுச் சிரித்தாள் சுசீலா.

“சரி சரி, வாயாடி! ஹரியைப் பார்த்தால் இங்கே வரச் சொல்” என்றார் பாகவதர்.

உடனே சுசீலா, “அவன் வைத்தியர் வீட்டுக்குப் போயிருக்கிறான். என்னப்பா விஷயம்?” என்றாள்.

“ஒன்றுமில்லை; கச்சேரிக்கு முன்னால், எல்லாப் பக்க வாத்தியங்களோடும் இரண்டு நாளைக்குப் பாடி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அங்கே வந்து மிருதங்கக்காரருடைய ‘ததிங்கிணத்தோமி’லும், கஞ்சீராக்காரருடைய ‘மோராவிலும்’; கடக்காரருடைய கோர்வையிலும் மிரண்டு, தாளத்தைக் கோட்டை விட்டு விடாமல், ஒத்திகை பார்த்துக் கொள்வது நல்லதல்லவா? பஞ்சு அண்ணா ஒருவரைத்தான் அவனுக்குத் தெரியும். குழந்தை மாதிரி அநுசரித்துக் கொண்டு போய் விடுவார். நல்ல பழக்கமுண்டு. மீதிப் பேர் அவனுக்குப் புதிசுதானே? அவர்களை நான் வரச் சொன்னேன் என்று இவன் போய்ச் சொன்னால், உடனே வருவார்கள். அதற்குத்தான் கூப்பிடுகிறேன்.”

“சரி அப்பா, ஹரி வந்ததும், உடனே சொல்லுகிறேன்” என்று கூறிய சுசீலா உள்ளே சென்றாள்.

பாகவதர் அவள் செல்லுகிற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்தச் சுசீலா இன்னும் கொஞ்சங்கூடத் திருந்தவில்லை; அப்படியேதானே இருக்கிறாள்? இவளுக்கு எப்போது கோபம் வரும், எப்போது சிரிப்பு வரும், அழுகை வரும் என்று இன்னும் யாராலும் கண்டு பிடிக்கவே முடியவில்லையே! ஹரியிடம் இவள் எப்படியோ நடந்து கொண்டு போகட்டும்; பரவாயில்லை. விரட்டி, விரட்டிப் பிடிக்கிற இவளுடைய பூனைச் சுபாவத்துக்கு ஒத்தாற் போல், பதுங்கிப் பதுங்கி வாழ அவனும் கற்றுக் கொண்டு விட்டான். ஆனால், இந்தச் சுபாவத்தோடு நாளைக்கு இவள் புருஷன் வீட்டில் போய் எப்படி வாழப் போகிறாள்? அல்லது இவளது இந்தக் குணத்துக்கு யாரால் ஈடு கொடுக்க முடியும்?” என்று எண்ணி எண்ணிக் கவலைப்பட்டார்.

“கூப்பிட்டீர்களா அப்பா?”—

மல்லாந்தபடி யோசித்துக் கொண்டே இருந்தவர், சட்டென்று குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார். பக்கத்தில் காயத்திரி நின்று கொண்டிருந்தாள்.

“உன்னை நான் கூப்பிடவில்லையே?” பாகவதர் ஆச்சரியத்துடன் கூறினார்.

“பாருங்கள் அப்பா, சுசீலாவின் குறும்புத்தனத்தை. ‘அப்பா உன்னைக் கையோடு கூப்பிடுகிறார்’ என்று பருத்திக் கொட்டை அரைத்துக் கொண்டிருந்த என்னை, இங்கே துரத்தி விட்டிருப்பதை” காயத்திரி சிணுங்கினாள்.

“போகட்டும்; அதுதான் பருத்திக் கொட்டை தின்கிற ஜன்மம் என்று தெரிந்திருக்கிறதே! நீ போய் வேலையைப் பார். ஹரி வந்தால், என்னிடம் அனுப்பி வை” என்று சமாதானம் கூறி அனுப்பினார்.

காயத்திரி மறு வார்த்தை பேசாமல், தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றாள். அவருடைய உள்ளம் ஒரு முறை குலுங்கியது- தாங்க முடியாத துக்கம் அவரது நெஞ்சுக் குழியை அடைத்துக் கொண்டது. அதை மென்று விழுங்குவதற்குள், பிராணனே போய் விடும் போலிருந்தது. கண்ணிலிருந்து, நீர் மாலை மாலையாக வழிந்தோடியது.

‘நிச்சயம் சுசீலா அமோகமாக, ஆனந்தமாக வாழ்க்கையிலே துளிக் கூட கஷ்டப்படாமல்தான் இருப்பாள். அவளை போன்ற இறுமாப்புச் சுபாவமும்; உலகத்தை எட்டி உதைக்கிற முழங்கால் உறுதியும் உள்ளவர்களால்தான் இந்தப் பூமியில் நடமாட முடியும். இல்லாவிட்டால், இந்தப் பொல்லாத உலகம் காயத்திரியைப் போன்ற மாணிக்கங்களை, மண்ணில் உருட்டிக் கல்லால்தான் நசுக்கி விடும்!’

—‘அம்மா காயத்திரி; உன்னைப் போல இத்தனை சத்தியமும், தன்மானமும், ரோஷமும் உள்ளவர்களுக்கு இது காலமல்ல. இல்லாவிட்டால், பூவும் மஞ்சளுமாகப் பூத்துக் குலுங்கிப் புது வாழ்வு வாழ வேண்டிய இத்தனை சிறிய வயதில், உன் நெற்றி பாழாகி, இந்தக் கோலம் வந்திருக்குமா; வீட்டுக்கு மூத்தப் பெண்; செல்லமாக வளர்ந்தவள்; உன் குணத்துக்கு ஒரு குறையும் வரக் கூடாது; நீ பிரமாதமாக வாழ வேண்டும் என்று எண்ணித்தானே, பணத்தைத் தண்ணீராக இறைத்துத் தங்க விக்கிரகம் மாதிரி ஜோடி சேர்த்தேன்? ஒரு வேளை தங்கமாக இருந்ததனாலேதான் ‘அவனுக்கு’ ஆபத்து வந்ததோ? எமதர்மராஜனுக்கு உன் புருஷனை அபகரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஆசை வந்ததோ?—திருமணமாகி ஆறே மாதத்தில் என் பெண்ணின் தாலியைப் பறித்துக் கொண்டு போய் விட்டாயே; கொள்ளைக்காரா!’ என்று குலுங்கக் குலுங்க அழுத பாகவதர், “அப்பா” என்ற குரலைக் கேட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினார். எதிரே வசந்தி நின்று கொண்டிருந்தாள்.