புல்லின் இதழ்கள்/பெண் பார்க்க வந்தவர்


7. பெண் பார்க்க வந்தவர்

கொந்தளிக்கும் கடல் போல் மனம் தறி கெட்டுப் புரண்டது. நெஞ்சிலே குமுறிய வேதனைகள் ஹரியின் வயிற்றுப் பசியை மறக்கச் செய்து விட்டன.

தட்டில் விழுந்த சோற்றிலிருந்து ஒரு பருக்கை கூட அவனுக்குத் தொண்டைக்குள் இறங்கவில்லை. சொந்த விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்டி, யாருடைய மனத்தையும் புண்ணாக்க அவன் விரும்பவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமான உணர்ச்சியை அவன் மென்று விழுங்கி விட்டாலும், அதை ஜீரணிக்க உள்ளத்தோடு, உடல் மறுத்தது. இந்தப் போராட்டத்தினால் தட்டத்தில் போட்ட சாதமும், குழம்பும் அப்படியே இருந்தன.

அண்ணாவின் முன்னால் எதுவும் செய்ய இயலாத லட்சுமியம்மாள், அவனைப் பார்த்து வருந்தி, “ஹரி, சாப்பிடு. ஒன்றும் யோசிக்காதே. ரசத்துக்கானதும் கூப்பிடு” என்று மெதுவாக அவனிடம் குனிந்து கூறி விட்டு, விருட்டென்று உள்ளே சென்றாள்.

ஹரிக்குப் பிரக்ஞை வந்தது. லட்சுமியம்மாளின் குரலில் தொனித்த பரிவும், பாசமும், அடிபட்ட அவன் உள்ளத்துக்கு ஒத்தடம் கொடுத்தன. தன் அசட்டுத்தனமான செய்கை அம்மாவின் மனத்தை எத்தனை தூரம் புண்ணாக்கி விட்டது என்பதை எண்ணியதும், மளமளவென்று அத்தனை சோற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டான்.

மேற்கொண்டு கூப்பிடாமல், அப்படியே எழுந்து விடுவோமா என்று ஒரு கணம் எண்ணியவன், மறுகணமே அந்த நினைப்பைக் கை விட்டு ‘அம்மா’ என்று அழைத்தான். லட்சுமி அம்மாள் மீண்டும் பழைய கலக்கத்துடன் வெளியே வந்தாள். ஆனால், ஹரியின் முகத்தைப் பார்த்ததும், அவள் உள்ளம் பிரகாசமடைந்தது. வழக்கத்தை விட அன்று வேண்டுமென்றே இரண்டு பிடி சாதம் அதிகமாகவே சாப்பிட்டுக் கை கழுவினான் ஹரி.

இத்தனையையும் காயத்திரி உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். காலையில் மாமா ஊரிலிருந்து வந்தது முதல், ஹரியைப் போட்டு எல்லாரும் வாய்க்கு வந்தபடி வறுத்து எடுப்பது; எல்லாவற்றுக்கும் மேல், இன்று வந்து நாளைக்குப் போகப் போகும் மாமாவின் ஆசாரத்துக்கும், அட்டகாசத்துக்கும் உடந்தையாக இருந்து குடும்பத்தில் சிறந்த ஒருவனாக அப்பா மதிக்கும் ஹரிக்கு இழைக்கப்படும் அநீதி, இதையெல்லாம் கண்டு அவள் மனம் குமுறினாள்.

ஆனால், நியாயமோ, அநியாயமோ, அதையெல்லாம் கண்டித்துக் கேட்டு வீட்டைச் சீர்திருத்த அவள் யார்? ‘நாளை அப்பா வரட்டும்; அவரிடம் நடந்ததை நடந்தபடியே சொல்லி விட்டால் போகிறது. பெரியவராக அப்பா ஒருவர் இருக்கிறாரே. பிறகு என்ன கவலை?’ என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு உள்ளேயே அடைந்து கிடந்தாள்.

பகற் பொழுதைப் போலவே, இரவிலும் காரியங்கள் நடந்தன. ஆனால் அவற்றில் குழப்பமோ, விவாதமோ இல்லை. லட்சுமியம்மாள் அண்ணாவுக்காகத் தனிச் சமையல் செய்திருந்தாள். ஹரி, எல்லாரும் சாப்பிட்டு முடிகிற வரை வெளியே எங்கேயோ சுற்றி விட்டு வந்தான். வந்தவன் புதிய வழக்கப்படி தட்டை எடுத்து வந்து, நடையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டான்.

நாணா மாமாவுக்குப் பரம சந்தோஷம். எத்தனையோ நாளாக அந்த வீட்டில் நடந்து வந்த அநாசாரத்தைத் தாம் வந்த ஒரே நாளில் சீர் படுத்தி, வைக்க வேண்டிவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டதாக உள்ளத்துக்குள் ஒரு மகிழ்ச்சி; சுசீலாவின் உள்ளத்திலும் அந்த எதிரொலியின் நிறைவும், திருப்தியும் நிலவியிருந்தன.

ஹரி தட்டை எடுத்து அலம்பினான். தான் தனித்துச் சாப்பிட்ட இடத்து எச்சிலைச் சாணமிட்டு மெழுகினான்; துணியினால் துடைத்தான். புதுப் பழக்கமானாலும், எல்லாவற்றையும் பொறுமையாகவும், செம்மையாகவும் செய்தான்.

சுசீலாவுக்கு அவன் படுகிற அவஸ்தைகள் வேடிக்கையாக இருந்தாலும், அவளையும் மீறிச் சிறிது சலனமும் ஏற்பட்டது. அதிலிருந்து அவள் மீண்ட போது, அவளையும் அறியாமல் ஒரு வித மகிழ்ச்சி தோன்றியது.

இரவு ஒன்பது மணி அடித்தது. தெருவில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்திருந்த அண்ணாவுக்கு, தங்கை அருமையோடு பால் கொண்டு வந்து கொடுத்தாள். இரவு முழுவதும் அவர் வந்த காரியத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

சுசீலாவை அவர் முன்பு பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் உருவத்தில், அழகில், அந்தஸ்தில், குணத்தில் கூட எவ்வளவோ மாறுதல்கள் இருப்பது புலனாயிற்று. தம் மூன்றாவது பிள்ளை ராமபத்திரனுக்குச் சுசீலா சரியான இணையாவாள் என்று அவர் மனம் முடிவு செய்தது. சுப்பராமன் வத்ததும், ஒரு வார்த்தை கேட்டு விட்டால் போதும். மீதிக் காரியங்களை தங்கை கவனித்துக் கொள்வாள். தம் பிள்ளையைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவன் அவருடைய இடுப்பிலிருக்கும் பொடி மட்டை. நினைத்த போது எடுத்து உறிஞ்சலாம். இழுத்த இழுப்புக்கு வரக் கூடியவன். அப்பா சொன்னால், அதுவே வேத வாக்கு. பாடசாலையில் முறைப்படி அத்தியயனம் பண்ணினவன்.

இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தாள் சுசீலா. எண்ணங்கள் அவளைக் குளவியாகக் கொட்டின. ஊரிலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயம் செய்திருக்கும் மாமா எதற்காக வந்திருக்கிறார் என்பதை அவளால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. போதாததற்கு அம்மா வேறு, தெரியுமோ தெரியாதோ என்று, அடிக்கடி ஜாடைமாடையாகச் சொன்னாள்.

முறைப்படி அத்தியயனம் பண்ணி முடித்து, வைதிகத் தொழிலுக்குப் பூரணத் தகுதியும் பட்டமும் பெற்ற தம் திருக்குமாரனுக்குச் சுசீலாவைக் கேட்கவே அவர் வந்திருக்கிறார். இனி அப்பா வந்ததும், பேச்சு எப்படியெல்லாம் போகுமோ, அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற கவலை அவளைப் பலமாகக் கவ்விக் கொண்டது.

தலையில் கட்டுக் குடுமியும், இடையில் பஞ்சகச்சமும், இளம் தொந்தியுமாகத் திகழும் மாமாவின் பிள்ளை ராமபத்திரனைக் கற்பனை செய்து பார்த்தாள் சுசீலா. அவளது உடலும், உள்ளமும் ஏக காலத்தில் அதை வெறுத்தன. ‘மாமாவின் பிடிவாதத்துக்கு மசிந்து, அப்பா எங்கே என்னை ஒரு வார்த்தைக் கூடக் கேட்காமலே, தாரை வார்த்துக் கொடுத்து விடுவாரோ?’ என்கிற பயம் ஒரு கணம் எழுந்தாலும், மறு கணமே, ‘அப்பா நிச்சயம் என்னைக் கேட்காமல் முடிவு செய்ய மாட்டார்’ என்ற ஆறுதலும் பிறந்தது.

இப்படி எண்ணங்களினால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த சுசீலாவுக்கு தூக்கம் எப்படி வரும்? விழிப்பு அவளுக்கு வேதனையூட்டியது. புரண்டு புரண்டு படுத்தாள். உறக்கம் நெற்றியில் தேங்கி, இமைகள் கனத்து, விழிகளைப் பாரம் அழுத்தியது.

மெல்லிய திரை போல் ஹரியின் நினைவு அவள் கண் முன் படர்ந்தது. ‘இன்னும் பொழுது விடியவில்லையா? ஹரி பாட ஆரம்பித்தால், அந்த இசையைக் கேட்டாவது, மனத்தின் தவிப்பைத் தணித்துக் கொள்ளலாமே!’ என்று எதிர்பார்த்து ஏங்கினாள். ஆனால் பொழுது விடிந்ததே தவிர, அவள் ஆவலுடன் எதிர்பார்த்த இசை பிறக்கவே இல்லை.

‘ஹரி தூங்கி விட்டானா? ஜூரமாக இருந்தால் கூட, காலை நேரச் சாதகத்தைத் துறக்கத் துணியாதவன், இன்று சோதனையைப் போல், ஏன் பாடவில்லை?’—

எல்லாரும் படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு, அவரவர் காரியங்களில் ஈடுபட்டனர். அம்மாவும், காயத்திரியும் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அவர்கள் சீக்கிரம் எழுந்து விடக் கூடியவர்கள். வாசல் பெருக்கிச் சாணம் தெளித்து, அம்மா கோலம் போடுவாள். காயத்திரி கொல்லையைக் கூட்டி, வீடு மெழுகிப் பால் கறப்பாள். சுசீலா செல்லப் பெண். அவள் எத்தனை நேரம் தூங்கினாலும், அவளை யாரும் எழுப்ப மாட்டார்கள். ஆனால் இன்று எல்லாருக்கும் முன்பு அவள்தான் படுக்கையிலிருந்து எழுந்தாள். ஹரி பாடாமல் ஏமாற்றி விட்டான். முந்திய நாள் அவன் பாடியதற்காக வெகுண்டாள்; இன்று அவன் பாடாதததற்காக வெகுண்டாள். ஹரியின் அறை வாசற்படியில் நின்று கொண்டு இரைய வேண்டும் போலிருந்தது. அவன் மீது அத்தனை கோபம் அவளுக்கு.

வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த மாமா எப்பொழுது காவிரிக்குப் புறப்பட்டுப் போனாரோ, யாருக்கும் தெரியாது. சுசீலா வாசல் திண்ணையில் தூணைப் பிடித்துக் கொண்டு, தெருவைப் பார்த்த படி நின்றாள், கோடியில் மாமா வருவது அவளுக்குத் தெரிந்தது.

ஸ்நானத்தோடு, ஜப தபங்களெல்லாங் கூடக் காவிரியிலேயே முடிந்து விட்டாற் போலிருக்கிறது. உடம்பு முழுவதும் பட்டை பட்டையாகத் திருநீறு துலங்கியது. பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, இளம் வெயில் வெறும் தலையைத் தாக்கிப் பித்தத்தைக் கிளப்பா வண்ணம், ஈரத் துண்டை நாலாக மடித்து மண்டையில் போட்டு, வலக் கையில் கிண்டி நிறையக் காவிரி நீரோடு, வாயில் ஏதோ மந்திரங்களை உருப் போட்டுக் கொண்டே வருகிறார்.

வேடிக்கை பார்த்த சுசீலா வேகமாக உள்ளே ஒடினாள். அம்மா தயாராக வைத்திருந்த காபியை நாலே மடக்கில் குடித்து விட்டு, மாடியறைக்குச் சென்றாள். ஆரம்பத்தில் வேடிக்கையும், விளையாட்டுமாகப் பேசியவளுக்கு, இப்போது மாமாவைப் பார்க்கவே பயமாக இருந்தது. அக்கா எதிலும் தலையிட மாட்டாள். அம்மா, அப்பா, மாமா எல்லாருமாகச் சேர்ந்து அவளை நடுவில் நிறுத்திக் கொண்டு சம்மதத்தைக் கேட்டால், என்ன பதில் சொல்லுவது?

கோவில் நந்தவனத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய பூக்களையெல்லாம் குடலையில் பறித்துக் கொண்டு வந்து வைத்திருந்தான் ஹரி. மாமா உடை மாற்றிக் கொண்டதும் காபி கூட குடிக்காமல், பூஜையில் உட்கார்ந்தார். காயத்திரி குடலையில் இருந்த பவழ மல்லிகையை நூலில் கோத்து, அழகாக இரண்டு மாலைகள் கட்டியிருந்தாள். சங்கு புஷ்பத்தையும், காசித் தும்பையும் உதிரியாகவே அர்ச்சனைக்காக வைத்திருந்தாள்.

சுசீலா மாடியிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தாள். ஹரி வேகமாக சந்தனம் அரைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்திருந்த அவன் தலையில், ஈரம் நன்றாகக் கூடப் போகவில்லை. அடர்ந்த சுருட்டையான கிராப்புத் தலை. அப்படியும் இப்படியும் அழகாக நெற்றியில் புரண்டு, முத்து முத்தான நீரைத் தெளித்துக் கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் வெள்ளிச் சிமிழைக் காயத்திரி கொண்டு வந்து வைத்தாள்.

சுசீலாவுக்கு அதற்கு மேலும் மாடியில் இருப்புக் கொள்ளவில்லை. ‘எதற்காக அர்த்தமில்லாமல், இந்த மாமாவுக்குப் பயந்து நான் ஓடி ஒளிய வேண்டும்? இவர் என்ன கரடியா, புலியா? கண்ணில் பட்டால், என்ன செய்து விடுவார்?’ என்று எண்ணியபடி விடுவிடென்று கீழே இறங்கி வந்தாள்.