புல்லின் இதழ்கள்/அண்ணாவின் ஆணை

 


6. அண்ணாவின் ஆணை

வேக்காடு அதிகமானால் மழை உண்டாகிறது அல்லவா? அதே போல் மனப் புழுக்கம் தாங்காமல் கண்களில் நீர் வந்து விடுமோ! ஹரி கலங்கினான். யாருடைய வருகைக்காக அவன் காத்திருந்தானோ, அவர்கள் இப்போது அவனுக்காகக் காத்திராமல், தங்கள் சாப்பாட்டை முன்னதாகவே முடித்துக் கொண்டனர்.

நாணா மாமா போஜனத்துக்குப் பிறகு, கூடத்திலிருந்த ஊஞ்சலில் ஆடியபடியே, அருகில் இருந்த செல்லத்திலிருந்து தளிர் வெற்றிலையாக எடுத்து மடித்து மடித்துப் போட்டுக் கொண்டார். சட்டென்று ஹரியைக் கண்டதும் அவர், “எங்கேடா போயிருந்தாய் இத்தனை நேரம்? சீக்கிரமாகப் போய்ச் சாப்பிடு. அவர்களுக்கெல்லாம் வேலை இல்லையா?” என்று அவனையே கடிந்து கொண்டார். ஆனால் அவருடைய கேள்விக்குப் பதில் கூறமால், கொல்லையில் போய்த் தன் தட்டை அலம்பிக் கொண்டு வந்து வழக்கம் போல் உட்கார்ந்தான். கூடத்தில் இருந்த மாமா, சமையல் அறையில் அவன் தட்டை வைத்துக் கொண்டு உட்காருவதையும், லட்சுமி பரிமாறப் போவதையும் பார்த்து விட்டுப் பதறிப் போய் உள்ளே ஓடி வந்தார்.

“ஏண்டாப்பா, உனக்குச் சாப்பிட இந்த இடந்தான் கிடைத்ததா? இங்கே உட்கார்ந்தால்தான் இறங்குமோ? தட்டை எடுத்துக் கொண்டு முதலில் நடையில் போய் உட்காரு; சாதம் போடச் சொல்கிறேன்” என்று அவனிடம் ஓர் அதட்டல் போட்டு விட்டு, அடுத்தபடியாகச் சகோதரியிடம் பாய்ந்தார்.

“அவன்தான் தெரியாமல் வந்து உட்கார்ந்தான் என்றால், உனக்குப் புத்தி எங்கே போச்சு? சொல்ல வேண்டாம்?” என்று சீறி விழுந்தார்.

“அவன் ஒன்றும், தெரியாமல் வந்து உட்கார்ந்து விடவில்லை; நானும் தெரியாமல் போடப் போகவில்லை. அவன் வழக்கமாகச் சாப்பிடும் இடந்தான் இது. இங்கே தான் போட வேண்டும் என்பது அவர் உத்தரவு. நாங்கள் எல்லாரும் இங்கே ஒன்றாய்த்தான் சாப்பிடுகிற வழக்கம்.” லட்சுமியம்மாள் சாதாரணமாகத்தான் இதைக் கூறினாள். நாணா மாமாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“ஒன்றாய்த்தான் என்றால்? இங்கேயே இதே சாப்பாடு, எல்லாருக்கும் சமபந்தி, சம போஜனமா?”

“என்ன மாமா, நீங்கள் இப்படி ஆச்சரியப்படுகிறீர்கள்! இந்த வீட்டிலே சாப்பாட்டில் மட்டுமல்ல; எல்லாவற்றிலுமே ஹரிக்குத்தான் அப்பா முதல் இடம் கொடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு ஆண் வாரிசு இல்லையல்லவா? அந்தக் குறையை இப்படித் தீர்த்தாகிறது. நீங்கள் காவிரிக்குக் குளிக்கப் போய் அதிக நேரமானவுடன், அம்மாதான் கவலைப்பட்டு ஹரியைக் காவிரிக்கு அனுப்பியிருந்தாள். இல்லாவிட்டால், அவனும் நம்முடனேயே அப்பொழுதே சாப்பிட்டாகியிருக்கும்.” சுசீலா, மாமாவுக்கு வீட்டு நிலவரத்தை ஒரு கோடி காட்டி விளக்கினாள். நாணா இதை எல்லாம் கேட்டதும், நரசிம்ம மூர்த்தியாக மாறினார்.

“அவ்வளவு தூரத்துக்கு விஷயம் முற்றி விட்டதா? அதுதான் அவன் அப்படித் துளுத்துப் போயிருக்கிறான்; பார்க்கிறேன், அவன் எல்லாரோடும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுகிறதை; வித்தை சொல்லிக் கொடுத்தால், அது அந்த மட்டோடு! வரட்டும் சுப்பராமன்; நானே கேட்டு, இதற்கு ஒரு முடிவு கட்டி விட்டுப் போகிறேன்” என்றவர், சட்டென்று ஹரியின் பக்கம் திரும்பி, “இன்னும் ஏண்டா இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? நடையிலே போய்த் தட்டை வைத்துக் கொண்டு உட்காரு; சாப்பாடு வரும்” என்று கத்தியவர், தங்கை பக்கம் திரும்பி, “ராத்திரி எனக்கு வேறே சமையல் பண்ணுகிறதானால், இங்கே சாப்பிடுகிறேன்; இல்லையானால் சீமாச்சு வீட்டுக்கே போய் விடுகிறேன்; அதுவும் இல்லாவிட்டால், பத்துப் பழத்தைத் தின்று விட்டுப் பட்டினி கிடக்கிறேன். இத்தனை காலத்துக்குப் பிறகு என்னால் இந்த அநாசாரத்தை எல்லாம் தாங்க முடியாது” என்று அறுதியிட்டாற் போல் கூறி மாடியை நோக்கிச் சென்றார்.

பதில் பேசாமல் ஹரி தட்டை எடுத்துக் கொண்டு நடையில் வந்து உட்கார்ந்தான். துக்கம் பெரும் உருண்டையாக நெஞ்சை அடைத்தது.