புல்லின் இதழ்கள்/பொருள் கிடைத்தது


23. பொருள் கிடைத்தது

ன் திட்டங்களைத் தவிடு பொடியாக்க வேண்டுமென்று ஏதோ ஒரு சக்தி கங்கணம் கட்டியிருப்பது போல் ஹரிக்குத் தோன்றியது. திடீரென்று பசு கத்துமென்றோ, காயத்திரி எழுந்து செல்லுவாள் என்றோ அவன் எண்ணவே இல்லை.

கூடவே தானும் எழுந்து போய்ப் பார்க்க எண்ணினான். ஆனால் இப்போது அங்கே எப்படிப் போவது? ‘என்ன நேர்ந்தாலும் தான் இந்த இடத்தை விட்டு எழுந்திருப்பது உசிதமல்ல. கொல்லையில் சிங்கப்பூர்ப் பக்கிரி நின்றிருப்பதைப் பார்த்துக் காயத்திரி பயந்து கூச்சல் போட்டால் பிறகு எழுந்து போகலாம்’ என்று. மனத்தை அடக்கிக் கொண்டு படுத்துக் கிடந்தான்.

காயத்திரி கொல்லைக் கதவுகளை திறந்து கொண்டு போன போது பரம சாது போல் தொழுவத்தில் நின்ற பசு அவளைப் பார்த்து ஆசையோடு கழுத்தை நீட்டியது. ‘போக்கிரி, பாதி ராத்திரி வந்து உனக்குச் சொரிந்து கொடுக்க வேண்டுமாக்கும்? இதற்காகவா இப்படிக் கத்தி எல்லாரையும் எழுப்பினாய்?’ என்று கழுத்தையும், இரண்டு கொம்புகளுக்கு மத்தியிலும் சிறிது நேரம் சொறிந்து கொடுத்தாள். பசுவும் அந்தச் சுகத்தில் தலையைப் பக்குவமாக நாலாப்பக்கமும் திருப்பித் திருப்பிக் காட்டியது. காயத்திரி கையை எடுத்தவுடன் கன்றுக்குட்டி ‘ம்மே’ என்று பெரிசாகக் கத்தியது.

“அடப் போக்கிரி! இந்த வயசிலேயே உனக்கு இத்தனை பொறாமையா? இரு, இரு. முதுகில் இரண்டு வைக்கிறேன்” என்று செல்லமாகக் கடிந்து கொண்டு அதன் அருகில் சென்ற காயத்திரி, மறு கணம் சிலை போல் பிரமித்து நின்றாள்.

கையிலிருந்த லாந்தர் வெளிச்சத்தில், கன்றுக்குட்டியின் கழுத்தில் சுசீலாவின் நெக்லெஸ் டால் அடித்தது.

காயத்திரியின் உடம்பெல்லாம் ‘குப்’பென்று வியர்த்துக் கொட்டியது. உலகத்திலுள்ள பயமெல்லாம் ஒன்று திரண்டு வந்து அவளை அப்பிக் கொண்டது.

சுசீலாவின் கழுத்திலிருந்த நெக்லெஸை அறுத்துக் கொண்டு போனவன், அதைக் கன்றின் கழுத்தில் கட்டிய மர்மம் அவளுக்குத் தெரியும்; ‘ஆனால், அந்தத் திருடன் இன்னும் போகாமல் கொல்லையிலேயே ஒளிந்து கொண்டிருந்தால்?’ என்று எண்ணிப் பார்த்தவுடன், காயத்திரிக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை ஓர் உலுக்கு உலுக்கியது. அங்கே விநாடியும் தாமதிக்கத் தைரியமில்லாமல், நெக்லஸைக் கழற்றிக் கொண்டு தன் தாயாரின் அருகில் ஓடி வந்தாள்.

“என்னடி, ஏன் கத்தியது?” என்று லட்சுமியம்மாள் விசாரித்தாள்.

ஒரு நிமிஷம் என்ன பதில் சொல்லுவதென்று காயத்திரி தயங்கினாள். பிறகு சட்டென்று, “சும்மாதான் அம்மா கத்தியிருக்கிறது. போட்ட வைக்கோல் அப்படியே இருக்கிறது. போனவுடன் கழுத்தை நீட்டுகிறது. சொரிந்து கொடுக்க வேண்டுமாம். முதுகில் நாலு வைத்து விட்டு வந்தேன்” என்று பளிச்சென்று பதில் கூறினாள்.

“எல்லாம் நீ செய்து காட்டியிருக்கிற பழக்கந்தானே. சந்தோஷம் வந்தால், கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சுகிறது. சரி, விளக்கைச் சின்னதாக்கி விட்டுத் தூங்கு” என்று கூறித் தானும் படுத்துக் கொண்டாள்.

காயத்திரியோடு போட்டி போட்டுக் கொண்டு, குறைப் பொழுதுக்கும் தூக்கம் வராமல், அந்த வீட்டில் இன்னோர் உயிரும் தவித்தது. ‘கொல்லையில் போன காயத்திரி என்ன ஆனாள். அவள் தாயிடம் என்ன பதில் சொல்லப் போகிறாள். பக்கிரி அவள் கண்ணில் பட்டிருப்பானோ? இல்லை, சொன்னது போல் கன்றுக் குட்டியின் கழுத்தில், நெக்லெஸைக் கட்டி விட்டு ஓடிப் போயிருப்பானா?’ என்று எண்ணித் தவித்தான் ஹரி.

சாயங்காலமெல்லாம் அவன் கொல்லைப் பக்கம் சுற்றியதைச் சுசீலாவைப் போலவே, காயத்திரியும் கவனிக்கத் தவறவில்லை. இப்படி அவன் நடந்து கொள்கிற வழக்கமில்லை. என்றாலும், அதைப் பற்றிக் காயத்திரி அக்கறை கொள்ளாமல் விட்டு விட்டாள். சுசீலா சி.ஐ.டி. போல், அவனுடைய செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து வந்தாள்.

ஆனால், யார் செய்த பூஜா பலனோ, இருட்டிய பிறகு அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே, ஹரி கொல்லைப் பக்கம் சென்றதைச் சுசீலா கவனிக்கவில்லை. யாருடனோ அவன் பேசியதையெல்லாம், மறைந்திருந்து கேட்டவள் காயத்திரிதான். ஆனால், அதையே சுசீலா கேட்டிருந்தால், வேறு வினையே வேண்டாம்!

இப்போது காயத்திரிக்கு மடியில் இருந்த நெக்லெஸ் பாறாங்கல்லை விட அதிகமாகக் கனத்தது. மாடு சத்தம் போட்டு அம்மாவையும், அவளையும் எழுப்பி அனுப்பியிரா விட்டால், யாருக்கும் தெரியாமல் நிச்சயம் ஹரிதான் அதைக் கன்றுக் குட்டியின் கழுத்திலிருந்து எடுத்திருப்பான். அதன் பின்னர் அதை என்ன செய்வான் அல்லது எப்படி இந்த வீட்டில் சேர்க்க நினைத்திருந்தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று அவர்கள் பேசிக் கொண்ட ரகசியம், இந்தக் கன்றுக் குட்டியின் கழுத்தில் நெக்லெஸைக் கொண்டு கட்டுகிற விஷயம்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.

‘அநேகமாக, இன்றிரவு ஹரி தூங்கியிருக்க மாட்டான். எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கும்’ என்று காயத்திரி எண்ணியதற்கு ஏற்பவே, கருக்கலில் அவள் எழுத்திருக்கும் போதே, அவனும் எழுந்திருந்து பின் கட்டுக்குச் சென்றான்.

தொழுவத்துக்குள் நுழையப் போன ஹரியைக் காயத்திரி மெதுவாகக் கூப்பிட்டாள். “வீணாக அங்கே போய்த் தேடாதே! நான் ராத்திரியே கழற்றிக் கொண்டு வந்து விட்டேன். இந்தா” என்று இடுப்பிலிருந்த நெக்லெஸை எடுக்கப் போனாள்.

ஹரி உடனே, “எடுக்க வேண்டாம் அக்கா. அது கொல்லையில் கிடந்தது என்று வீட்டில் சேர்ப்பித்து விடுங்கள். எனக்காக இந்த உதவி செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு நான் எல்லா விஷயங்களையும் விரிவாகச் சொல்லுகிறேன்” என்று அவன் சொல்லி முடிக்கு முன்னர், ‘நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எல்லா விஷயமும் எனக்கும் தெரியும்’ என்பதே போல், காயத்திரி அவனைப் பார்த்தாள். ஆனால், ஹரிக்கு அவளை அப்படி விட்டு விட விருப்பமில்லை. இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று, காரியதரிசி மூலம் கேள்விப் பட்டதிலிருந்து, பக்கிரி முன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்தது, நகையை மீட்க ஏற்பாடு செய்தது வரை, அத்தனையையும் விளக்கமாகவும், சுருக்கமாகவும் சொல்லி, காயத்திரிக்குத் தான் நிரபராதி என்பதைப் புரிய வைத்து விட்டான். பிறகுதான் கவலையை மறந்து தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டு, ஆனந்தமாகப் பாட உட்கார்ந்தான்.

பொழுது விடிந்து வெகு நேரமாகி விட்டது. சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்த சுசீலா, “என்ன டீச்சர் ஸார், இன்று சாதகம் எல்லாம் அமர்க்களமாக இருக்கிறது. வேலூர்க் கச்சேரியா?” என்று ஹரியிடம் கிண்டலாகப் பேசியபடியே, கையில் பற்பொடியைக் கொட்டிக் கொண்டு, கிணற்றங்கரையை நோக்கிப் போனாள்.

சற்றைக்கெல்லாம், ‘அம்மா’ என்று கொல்லையிலிருந்து கத்திய சுசீலாவின் பலத்த குரலைக் கேட்டு, அடுக்களையில் பால் காய்ச்சிக் கொண்டிருந்த லட்சுமியம்மாள் என்னவோ, ஏதோ என்று புழக்கடையை நோக்கி ஓடினாள். ஹரி பாடுவதை நிறுத்தி விட்டுக் காதைத் தீட்டிக் கொண்டான். காயத்திரி குளியல் அறையிலிருந்து வெளியே வரவேயில்லை.

சுசீலா இடக்கையில் காணாமற் போன நெக்லெஸைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, “அம்மா! இது நான் பல் தேய்க்கிற இடத்திற்கருகில் கிடந்தது அம்மா” என்று ஆச்சரியத்துடன் நீட்டினாள். லட்சுமியம்மாள் சட்டென்று பெண்ணின் கையிலிருந்த நெக்லெஸை வாங்கிப் பார்த்தாள். “இது உன்னுடைய நெக்லெஸ்தானேடி?” என்றாள் ஆச்சரியத்துடன்.

“ஆமாம். அம்மா!”

“இது இங்கே எப்படி வந்தது?”

“அதுதானம்மா எனக்கும் தெரியவில்லை. தொட்டியிலிருந்து ஜலம் எடுக்க குனிந்தேன். பக்கத்திலே ‘பளபள’ என்றது. எடுத்துப் பார்த்தேன்; என்னுடைய அதே நெக்லெஸ்.”

“அறுத்துக் கொண்டு போனவனே, கொண்டு வந்து போட்டு விட்டானா? அதுதான் ராத்திரியெல்லாம் பசு கத்திக் கொண்டேயிருந்ததோ. நல்ல வேளை, வந்த திருடன் அவள் கழுத்திலும் நாலு போடாமல் போனானே!”

“எடுத்துச் சென்றவன், எப்படியம்மாத் திருப்பிக் கொண்டு வந்து போட முடியும்? அவன்தான் போலீஸில் இருக்கிறதாகப் பாபு ஸார் வந்து சொல்லி விட்டுப் போனாரே” என்றாள் சுசீலா.

“அப்படி என்றால், நீ கச்சேரிக்கு நெக்லெஸே போட்டுக் கொண்டு போகவில்லை என்று நினைக்கிறேன். கழுத்தில் போட்டுக் கொண்டு, முகம் கழுவ வந்த போது இங்கே விழுந்து விட்டதோ என்னவோ? பாவம் அநியாயமாக, இந்தப் போலீஸ் யாரையோ பிடித்து அடைத்து வைத்திருக்கிறதே!” என்று அங்கலாய்த்த வண்ணம், “ஏண்டி சுசீலா விழிக்கிறாய்? உனக்குக் கச்சேரிக்கு நெக்லெஸைப் போட்டுக் கொண்டு வந்ததாக நன்றாக ஞாபகம் இருக்கிறதா?” என்று லட்சுமியம்மாள் படபடப்புடன் கேட்டாள்.

“இரு அம்மா, அதுதான் யோசிக்கிறேன். கழுத்திலே மாட்டிக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. பிறகு முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று மறுபடியும் கிணற்றடிக்கு வந்தேன்” என்று சசீலா கூறி முடிப்பதற்குள், “பின்பு என்ன? அது இங்கேயே கழன்று விழுந்து விட்டது. நல்ல வேளை, தெருவில் விழாமல் போனதே” என்று லட்சுமியம்மாள் முடித்தாள். சுசீலாவின் அஜாக்கிரதையையும், அதிர்ஷ்டத்தையும் பற்றியே பேசினாள். அதற்குள் குளியலறையிலிருந்து வந்த காயத்திரி, “என்ன அம்மா, ஏன் சுசீலா கத்தினாள்?” என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்டாள். அதன் பிறகு காயத்திரி உட்பட, எல்லாருமே லட்சுமியம்மாளின் வார்த்தைகளை ஊர்ஜிதம் செய்வது போல் சுசீலாவுக்கு அசட்டுப் பட்டம் கட்டினர். ஹரி மனதில் காயத்திரியை வணங்கியபடி, தம்பூராவை எடுத்து வைத்து விட்டு, எழுந்து போனான்.

அதற்குள் உள்ளே வந்த சுசீலா, “என்ன டீச்சர் ஸார், உங்களுக்கு நேற்றே தெரியும் இல்லையா?” என்று கையிலிருந்த நெக்லெஸை ஆட்டியபடியே கேட்டாள்.

“என்ன அது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஹரி.

“அதுதான் டீச்சர், நேற்றுச் சாயங்காலத்திலிருந்து, சுத்திச் சுத்திக் கொல்லையில் தேடிக் கொண்டு இருக்கவில்லை?”

“நான் என்ன தேடினேன். சுசீலா?” அவன் குரலின் ஸ்தாயி உயர்ந்து நின்றது.

“சரிதான் ஸார். ஏன் என்னிடமே இப்படி மறைக்கிறீர்கள்? இதோ என் நெக்லெஸ் கிடைத்து விட்டது. எல்லாருக்குமே, இதை நான் கொல்லையில் போட்டு விட்டுக் கச்சேரிக்கு வந்திருப்பேன் என்று சந்தேகம் போலிருக்கிறது. நீங்களும், இதைத்தானே நேற்றுச் சாயங்காலத்திலிருந்து கொல்லையில் தேடினீர்கள். அக்கா கூடக் காலையில், கொல்லையைக் கூட்டிப் பெருக்கியிருக்கிறாள். ஆனால், யார் கண்ணிலேயும் படாமல், என் கையிலேயே கிடைத்திருக்கிறது பார்த்தீர்களா!” என்று சுசீலா பெருமையுடன் கூறினாள்.

இதைக் கேட்டதும், “நெக்லெஸ் கிடைத்து விட்டதா? இப்படிக் கொடு பார்க்கலாம்” என்று ஹரி கையை நீட்டினான்.

ஹரியினுடைய நடிப்பைக் கண்டு காயத்திரி மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள்.

“எந்தப் போலிஸ் உதவியுமின்றி, நானே கண்டு பிடித்து விட்டேன்” என்று சுசீலா குதித்துக் கொண்டே போய், அப்பாவிடம் நெக்லெஸ் கிடைத்து விட்டதைக் கூறினாள்.

பாகவதர் மனத்துக்குள் வியந்து கொண்டார். அதற்குள் சுசீலா, “என்னப்பா இவ்வளவு சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லுகிறேன்; நீங்கள் ஒன்றுமே பதில் பேசவில்லை? என் நகை திரும்ப கிடைத்து விட்டதில் உங்களுக்குச் சந்தோஷத்தையே காணோமே?” என்று அலுத்துக் கொண்டாள்.

பாகவதர் அவளையும், அருகிலிருந்த லட்சுமியம்மாளையும் பார்த்து, “நகையைத் தொலைத்து விட்டு வந்ததற்காக, உன்னை நான் கொபித்துக் கொண்டால் அல்லவா, கிடைத்து விட்டதற்காகப் பாராட்ட! பிராணனை விட்டுப் பாடி, உழைத்துச் சம்பாதித்த காசு. தெய்வம் என்று ஒன்று இருந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. அது தெருவில் காணாமற் போனதைக் கொல்லையிலே கொண்டு வந்து போட்டு, சத்தியத்தைக் காப்பாற்றுகிறது. இதற்கு உன்னை நான் புகழ்ந்து, மாலை போட வேண்டுமா?” என்று பாகவதர் கூறிய போதே, “அண்ணா” என்று அழைத்துக் கொண்டு காரியதரிசி உள்ளே வந்தார்.

“இப்போது நான் வரும் போது செல்லிக் கொண்டிருந்தீர்களே, அது லட்சத்தில் ஒரு வார்த்தை. சத்தியம் என்று ஒன்று உலகத்தில் இன்னும் உயிரோடு இருக்கத்தான் செய்கிறது. அதை யாராலுமே மறைக்க முடியாது அண்ணா” என்று அவர் கூறிய போது, “இல்லையா பின்னே? நாம் ஒருவருடைய சொத்துக்கு அநியாயமாக ஆசைப்படாமல் இருந்தால், பகவான் நம்முடைய சொத்தை இன்னொருவன் விரலாலே தொடப் பார்த்துக் கொண்டிருப்பானோ?அதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தேன்” என்றபடி சுசீலாவின் பக்கம் திரும்பி, “சுசீலா, என்னிடம் வந்து சொன்னாயே, அதை இவரிடம் அல்லவா முதலில் சொல்ல வேண்டும். சொல்லு” என்றார் பாகவதர். “என்ன அண்ணா லிஷயம்?” என்று காரியதரிசி ஆச்சரியத்துடன் கேட்டார்.

“என்னுடைய நெக்லெஸ் கிடைத்து விட்டது மாமா. இன்று காலையில் கொல்லைப்புறம் போனேன். கிணற்றடியிலே கிடந்தது” என்று சுசீலா கொடுத்தாள்.

அதை ஆச்சரியத்துடன் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்த போது, பாகவதர், “‘நகைதான் கிடைத்து விட்டதே, காரியதரிசியிடம் சொல்லிப் போலீஸில் புகார் கொடுத்திருப்பதை வாபஸ் வாங்கச் சொல்லலாமா?’ என்று ஹரி கேட்டான். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள். ஆமாம், நீங்கள் வந்த விஷயத்தைக் கூறவே இல்லையே?” என்று கேட்டார்.

“ஒன்றுமில்லை அண்ணா. நெக்லெஸ் விஷயமாகப் போலீஸ் ஒருவனைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சாதிக்கிறான். போலீஸ் இன்னும் எங்கெல்லாமோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளையாக, நமக்குப் பொருள் கிடைத்து விட்டது முதல் காரியமாகப் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி விடுகிறேன்” என்று கூறிப் புறப்பட்டார்.

ளமளவென்று பொழுது ஏறிக் கொண்டே போவது போல், ஹரியும் பிரபலமாகிக் கொண்டே வந்தான். ஆயினும், சுந்தரி அவனைப் புகழ்வதை நிறுத்தவில்லை.

“நீ அன்று பஜனை மடத்தில் பாடிய போது, உன் குருவினுடைய அந்த நாட்கள்தாம் என் நினைவுக்கு வந்தன. குரலைக் கூடக் கடவுள் உனக்கு அவரைப் போலவேதான் கொடுத்திருக்கிறார். அன்று நீ பாடிய கல்யாணியைப் போல நான் என் ஆயுளில் கேட்டதில்லை” என்றாள்.

உடனே ஹரி, “போதும், போதும். நீங்களே என்னை இப்படியெல்லாம் கேலியாகப் பேசினால், நான் என்ன சொல்ல முடியும்? இதே கல்யாணியை நான் எப்போதாவது வீட்டில் பாடிக் கொண்டிருக்கும் போது, ஐயாவே என் அருகில் வந்து, ‘நீ இப்போது பாடியதைச் சுந்தரி அருகில் இருந்து கேட்க வேண்டும். அவளுக்கு கல்யாணி ராகம் என்றால் உயிர். அவளைப் போல் அந்த ராகத்தை என்னால் கூடப் பாட முடியாது. அவளுடைய பாட்டைக் கேட்டால், பட்ட மரமும் துளிர்க்கும்’ என்று கூறக் கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க, நீங்களா என் பாட்டைப் புகழ்வது?” என்று கூறிக் கொண்டிருக்கும் போது வஸந்தி தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

ஹரி வசந்தியிடமிருந்து தம்பூராவை வாங்கித் துல்லியமாகச் சுருதி சேர்த்துக் கொண்டு, சுந்தரியைப் பார்த்து, “நான் இன்று உங்களிடம் ஒன்று கேட்கலாமென்று நினைக்கிறேன். கேட்கவா?” என்று கேட்டான்.

“என்ன, இன்றைக்கு அம்மாவிடம் பேசுவதற்கே இத்தனை பீடிகை?” என்று சிரித்துக் கொண்டே கேட் டாள் வசந்தி.

“உனக்கு அம்மாவாக இருக்கலாம். ஆனால், அவர்களுடைய வித்தைக்கு நான் மதிப்புக் கொடுத்துத் தானே ஆக வேண்டும். அம்மாவின் பாட்டைக் கேட்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இங்கே வரும் போதெல்லாம் பாடிக் கேட்க வேண்டுமென்று எண்ணியே வருவேன். ஆனால், ஒவ்வொரு சமயமும் கேட்க அதற்கான துணிவில்லாமலே சென்று விடுவேன்” என்று ஹரி கூறும் போதே, “ஆனால், இன்று துணிந்து விட்டாய் போலிருக்கிறது” என்று சுந்தரி வேடிக்கையாகக் கூறியபடி ஹரியிடம் தம்பூராவைக் கேட்டாள்.

உடனே ஹரி “பரவாயில்லை. இன்று எனக்கு இந்தப் பாக்கியமும் கிடைக்கட்டும்; நானே போடுகிறேன். நீங்கள் பாடுங்கள்” என்றான்.

உடனே சுந்தரியும், எவ்வித மறுப்பும் கூறாமல், கணீரென்று பாட ஆரம்பித்தாள். எத்தனை நாட்களுக்குப் பிறகு உட்கார்ந்து பாடப் போகிறோம் என்று சுந்தரி முதலில் தயங்கினாள். ஆனால், பாடப் பாட தயக்கமெல்லாம் தானாகவே சுந்தரியை விட்டு விலகின. “தான் பாடுவதை விட்டாலும், பாட்டு தன்னை விடாமல் - விலகாமல் - பற்றிக் கொண்டுதான் இருக்கிறது; நாம் நன்றாக முன் போலவே பாடுகிறோம்” என்பது அவளுக்கே புரிந்தது. மனத்தில் மேலும், மேலும் உற்சாகம் பிறந்தது. சுந்தரி தன்னை மறந்து பாடினாள்.

அன்று சுந்தரி தனக்குப் பிடித்தமானவைகளாகப் பாடினாள்; பாகவதருக்குப் பிடித்தமானவைகளையும் பாடினாள்; பிறகு, ஹரி கேட்டதையெல்லாம் பாடிக் கொண்டேயிருந்தாள். கல்யாணியை அவள் பாடிக் கேட்ட பிறகு, ஹரிக்கே, ‘இதுவல்லவா கல்யாணி. குருநாதருடைய வித்வத் திறமை இங்கேயல்லவா பிரகாசிக்கிறது? தாயாரிடம் இருக்கும் இத்தனை பெருமைகளும் தெரியாமலா, வசந்தி என்னிடம் பாட்டுச் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டாள்? இத்தனை நாளும் என்னுடைய பாட்டைக் கேட்டு, சுந்தரி என்ன நினைத்துக் கொண்டிருப்பாளோ?’ என்று ஹரி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

“என்ன ஹரி, தூக்கம் வருகிறதா? பாதியில், பாதியில் மீட்டுவதை நிறுத்தி விடுகிறாயே” என்று சிரித்தபடிக் கூறிய சுந்தரி எழுந்து கொண்டே “சரி, நான் உள்ளே போய்க் காரியங்களை கவனிக்கிறேன். நீ வசந்திக்குப் பாடத்தை எடு. இன்று தங்கி விட்டு நாளை போகலாம் என்றால், கேட்க மாட்டேன் என்கிறாய்; ஏன் அங்கே அப்படி என்ன அவசரம்?” என்று கேட்டாள்.

உடனே அருகிலிருந்த வசந்தி, தாயாரிடம், “நீ சும்மா இரு அம்மா. எல்லாம் நாளைக்குப் போனால் போதும். இன்று போவதைப் பார்க்கிறேன். சுசீலாவிடம் ஒரு நாளைக்கு பேச்சு வாங்கா விட்டால், ஒன்றும் மோசமில்லை” என்றாள்.

சுந்தரி, “சரிதான், இப்பொழுதே கேலி பண்ண ஆரம்பித்து விட்டாயா?” என்று செல்லமாக மகளைக் கடிந்து கொண்ட வண்ணம், அடுக்களையை நோக்கிப் போனாள்.

ஹரி, சுந்தரி கூறிய ‘இப்பொழுதே’யின் பொருளைத் தேடி ஆராய்ச்சிப் பண்ணிக் கொண்டிருந்தான்.

“ஏன் இப்படி விழிக்கிறீர்கள்? ‘நாளைக்குப் போனால் போதும்’ என்றவுடன், சுசீலா பயம் பிடித்து விட்டதா? இனிமேல் அவள் ஏதாவது உங்களிடம் வாயாடினால், நான் சும்மா விடப் போவதில்லை” என்று கூறிய வண்ணம் வசந்தி தம்பூராவை மீட்டினாள்.

‘இப்பொழுது எனக்கு என்ன புதிதாய்க் கிரீடம் முளைத்து விட்டது. இனி மேல் அவளை நீ சும்மா விடாமல் இருப்பதற்கு’ என்று எண்ணியபடி, வசந்தியிடம், “ஆமாம், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சுசீலாவின் நெக்லெஸ் கிடைத்து விட்டது. வந்ததுமே சொல்ல மறந்து விட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் ஹரி.

“ஆமாம். இதுதான் எனக்கு இப்போது ரொம்பக் கவலை. பெரிய ஜயாயிரம் ரூபாய் வைர நெக்லெஸ் பறி போய் விட்டது. அது இப்போது கிடைத்து விட்டது. வெற்றி முரசு கொட்டுங்கள். இரண்டும் இமிட்டேஷன் கல்” என்று தோளில் இடித்துக் கொண்டு பாட ஆரம்பித்தாள்.

உடனே ஹரி, “ஆமாம், நீ பணக்காரி. எல்லாரும் உன்னைப் போல், அசல் வைரத்திலேயே ஜொலிக்க முடியுமா?” என்று கூறி முடிக்கு முன்னர், வசந்தி சட்டென்று பாடுவதை நிறுத்தி விட்டு, ஹரியினுடைய முகத்தை உற்று நோக்கினாள்.

“அவளைச் சொன்னால் உங்களுக்கு ஏன் இப்படி கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? ‘அவள் இமிடேஷன் இல்லை, நான் தான் இமிடேஷன்’ என்றுதானே குத்தலாகப் பேசுகிறீர்கள்?” அவள் கண்களில் கண்ணீர் பொல,பொலவென்று வந்து விட்டது.

ஹரி பதறிப் போனான். அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உள்ளே திரும்பிப் பார்த்தான். சுந்தரி அடுக்களையில்தான் இருந்தாள். வசந்தியைப் பற்றி அவதூறாகப் பேச வேண்டுமென்றோ, சுசீலாவைப் புகழ வேண்டுமென்றோ அவன் மனத்தாலும் கருதியவனல்ல. ஆனால், இதை அவனால் வசந்தியிடம் விளக்க முடியவில்லை. விளக்கினாலும், அவள் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஹரி எழுந்து, “சரி, இன்று இத்துடன் பாடம் போதும். நான் வந்த நேரம் சரியில்லை. நாளை வருகிறேன்” என்று கூறுமுன் வழியை மறித்துக் கொண்டு நின்ற வசந்தி, “அம்மா, சீக்கிரம் இங்கே வந்து பாரேன்” என்று கத்தினாள்.

கையில் உப்புமாவையும், காபியையும் எடுத்து வந்த சுந்தரி, “எதற்கடி, இப்படிப் பெரிதாகக் கத்தி அமர்க்களப் படுத்துகிறாய்?” என்று பெண்ணை அதட்டிய வண்ணம் அங்கு வந்தாள்.

“பாரம்மா, இப்பவே புறப்பட்டுப் போகிறேன் என்று கிளம்பி நிற்பதை?” என்று வசந்தி தாயாரிடம் ஹரியைப் பார்த்துக் குற்றம் சாட்டும் போதே, அவளுடைய குரல் கரகரத்துக் கண்களில் நீர் தளும்பியது.

உடனே சுந்தரி, “சரி, சரி, இரண்டு பேரும் டிபனைச் சாப்பிடுங்கள். ஹரி ஒன்றும் போக மாட்டான்; நான் பார்த்துக் கொள்கிறேன். என்னடா பாட்டுச் சப்தம் காணோமே என்று பார்த்தால், இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். வசந்தி, இதற்கெல்லாம் கொஞ்ச நாள் போகட்டும். உன் முரட்டுச் சுபாவத்தை இப்பவே காட்டாதே; ஹரி பயந்து போய், பிறகு கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விடப் போகிறான்” என்று சுந்தரி கேலியாக பேசிய போது, “போ அம்மா’ என்று வசந்தி சிணுங்கினாள்.

ஹரி கையில் எடுத்த உப்புமாத் தட்டு நழுவித் ‘தடா’லென்று தரையில் விழுந்தது.