புல்லின் இதழ்கள்/வீண் பழி
ஹரியினுடைய மனம் ஒரேயடியாகக் குழம்பிப் போயிருந்தது. தன்னை வசந்தி விரும்புகிறாள் என்பதை அவளுடைய பேச்சினாலும், செயல்களினாலும் ஹரி யூகித்து வைத்திருந்தான். ஆனால், அதற்கு அநுசரணையாகவோ அல்லது அவள் எண்ணத்தை வளர்க்கும் முறையிலோ அணுவளவு கூட இடம் கொடுக்காமல், அவன் மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டான். அதே சமயம், தன் உள்ளத்தில் அது போன்ற நினைவுகளுக்கெல்லாம் இடமில்லை என்பதையும் அழுத்தமாகச் சுட்டிக் காட்டத் தவறியதில்லை.
ஆனால், மகளின் விருப்பமே தாயின் விருப்பமும் என்று அறிந்ததும்தான், ஹரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன்னையும் வசந்தியையும் இணைத்து இணைத்துப் பேசிய பேச்சுக்களைக் கேட்டு, அவன் மனம் கலங்கிப் போனான். தனக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றிச் சுந்தரிக்கு எதிராகச் சொல்ல வேண்டி வந்து விடுமோ என்று அஞ்சினான். அந்தக் கவலையைச் சுமந்து கொண்டே ஹரி ரெயில் ஏறினான்; ரெயிலிலிருந்தும் இறங்கினான்.
சுவாமிமலையில் காலடி வைத்தவுடனே ஹரியின் மற்றக் கவலைகள் எல்லாம் பறந்து விட்டன. ஆனால் அதே சமயம் புதிய கவலை அவனை ஆட்கொண்டது.
ஹரி வீட்டை அடையும் போது, லட்சுமி அம்மாள் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். ஹரி உள்ளே போக வழியில்லாமல், சுசீலா வாசற்படியை மறைத்த வண்ணம் நின்றிருந்தாள்.
இதைப் பார்த்து விட்டு, “வழியை விடேண்டி அவனுக்கு உள்ளே போக” என்று சுசீலாவை அதட்டினாள் லட்சுமியம்மாள்.
சுசீலாவின் முகம் கோபத்தினால் வீங்கிப் போயிருந்தது. உள்ளே நுழைந்த ஹரியைத் தொடர்ந்து, அவளும் வேகமாக உள்ளே சென்றாள். போகும் போதே பெண்ணிடம், ஹரிக்குச் சாதம் போடுமாறு திண்ணையில் இருந்தபடி லட்சுமியம்மாள் குரல் கொடுத்தாள். ஆனால், சுசீலா அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
ஹரி வந்து விட்டதைக் காயத்திரி அப்போதுதான் கவனித்தாள். பாகவதர் ஹரியைக் கண்டதும், திருவிடை மருதூரிலுள்ள யோகக்ஷேமங்களை விசாரித்துத் தெரிந்து கொண்டார். அதற்கு மேல், அவனை அவர் ஒன்றும் கேட்கவில்லை. பாகவதருக்கு ஹரி எங்கிருந்தாலும், ஒன்றுதான். இரண்டுமே அவர் வீடுதாமே?
ஆனால், சுசீலா விடவில்லை. பின்னாலேயே சென்றவள், ஹரியை, “இன்றைக்கும் அங்கேயே தங்கி விட்டு மெதுவாக வருகிறதுதானே? இப்போது இங்கே என்ன அவசரம்?” என்று கேட்டாள்.
ஹரி ஒன்றும் பதில் பேசவில்லை. ஆனால் சுசீலா விடாமல், “உங்களைத்தான் கேட்கிறேன். நேற்றுக் காலையில் திருவிடைமருதூருக்குப் போய், இன்று இவ்வளவு நேரம் வரை அங்கே என்ன செய்தீர்கள்?” என்று கேட்டாள்.
“பாடம் சொல்லிக் கொடுக்கப் போனேன். பாட்டுச் சொல்லிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன்” என்றான் ஹரி,
“நான் சொல்லுகிறேன்; நீங்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போகவில்லை. அதற்கு இரண்டு நாளா?”
“நீ எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் அதற்காகத்தான் போனேன். போன வாரம் முழுவதும் பாடமே எடுக்கவில்லை. அடுத்த வாரமும் ஓய்வு இருக்காது. அதனால்தான், இரண்டு நாள் சேர்ந்தாற் போல் பாடம் எடுத்தேன்.”
“சுத்தப் பொய். வசந்தியுடன் அரட்டை அடிப்பதற்காகவே நீங்கள் இங்கிருந்து போயிருக்கிறீர்கள். நீங்கள் ஊர் ஊராய்க் கச்சேரி செய்த பெருமையை எல்லாம் அவர்களிடம் பீற்றிக் கொள்ளப் போயிருக்கிறீர்கள். அவர்கள் அம்மாவும், பெண்ணுமாக, ‘ஆஹா ஒஹோ’ என்று உங்களைப் புகழ்ந்தவுடன், கண் மண் தெரியவில்லை. அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்து விட்டீர்கள். இல்லாவிட்டால், எனக்குந்தானே அதே போல், பாடம் எடுத்து நாளாயிற்று. உட்கார்ந்து அரை மணி எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?”
ஹரி ‘ஜிவு ஜிவு’ என்றிருக்கும் அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். கோபத்திலும், அவள் அழகாகவே இருந்தாள். மிகவும் தணிவான குரலிலேயே அவன் பேசினான்:
“சுசீலா, நானா உனக்குப் பாடம் எடுக்க மாட்டேன் என்றேன்? நீதானே நாக்கில் புண் இருக்கிறது, பாட முடியவில்லை என்று சொன்னாய்? ஆனால், இப்போது நன்றாய் ஆறி விட்டது என்று நினைக்கிறேன்.”
“எப்படி?”
“இல்லா விட்டால், உன்னால் இப்படித் துரித காலத்தில் பேச முடியுமா?”
“கிண்டல் வேறு பண்ணுகிறீர்களா?”
“ஏன், பண்ணக் கூடாதா?”
“நான் அப்படிச் சொல்லி எத்தனை நாளாயிற்று? இல்லை, அப்படியே நீங்கள் ‘இன்று பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் வா!’ என்றால், நான் மாட்டேன் என்று சொல்லி விடப் போகிறேனா. உங்களுக்கு உண்மையில் எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதில் அக்கறையோ, ஆர்வமோ இருந்தால்தானே அப்படியெல்லாம் கேட்பதற்கு!”
“இல்லை சுசீலா! இதெல்லாம் நீயாக கற்பனை பண்ணிக் கொள்வது. எனக்கு இரண்டு பேருமே ஒன்றுதான்.”
“இதை நான் நம்பத் தயாராயில்லை. உங்களுடைய குறியெல்லாம் ‘வசந்தி நன்றாக பாட வேண்டும். சீக்கிரம் அவளை மேடையில் உட்கார வைத்துப் பெயர் சம்பாதிக்க வேண்டும்’ என்பதுதானே. உங்களுடைய கெட்ட எண்ணம் எனக்கா தெரியாது?”
“அப்படியே இருந்தாலும், அது எப்படிக் கெட்ட எண்ணம் ஆகும் சுசீலா? உன்னைத் தவிர, இதை யாரும் இப்படிப் பேச மாட்டார்கள்?”
“ஆமாம், இந்த வீட்டில் எல்லாருக்கும் நான்தான் பொல்லாதவள், கெட்ட எண்ணக்காரி திருப்திதானே?” பதிலுக்குக் கூடக் காத்திராத சுசீலா, தாங்க முடியாத கோபத்தோடு மாடியை நோக்கிப் போனாள்.
காயத்திரி நீண்ட பெருமூச்சு விட்டாள். ஹரி வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து, அது வரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவள் உள்ளேயிருந்தபடியே கேட்டாள்.
‘ஹரியைப் பற்றி இவளுக்கு ஏன் இத்தனை அக்கறை? அவனிடம் யார், எப்படி நடந்து கொண்டால் இவளுக்கு என்ன? அதைப் பற்றியெல்லாம் விசாரிக்கவோ, கண்டிக்கவோ இவள் யார்? என்ன உரிமையில், இவள் இப்படி ஹரியையும், மற்றவர்களையும் விரட்டிக் கொண்டிருக்கிறாள்? இவளை இப்படியே வளர விடுவது தவறு’ என்கிற முடிவுக்குக் காயத்திரியின் மனம் வந்தது.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்ததைப் போல், பாகவதர் உடம்பில் இனிப் புதிதாய் ஊசி குத்த இடமில்லாமல் படுத்திருந்தார்,
ஹரி சம்பாதிக்கிற பணமெல்லாம், மருந்தாகவும், மாத்திரையாகவும், ஊசியாகவும் மாறி மாறிப் பாகவதரின் உடம்பில் சென்றது. கை நிறையச் சோற்றையெடுத்துச் சாப்பிட முடியாமல்; வாய் நிறைய மருந்தைக் குடித்துத்தான் பாகவதர் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
நெஞ்சு வலி குறைவாக இருந்தால்; வயிற்று வலியால் புழுப் போல் துடித்தார். நாபியிலிருந்து குரலை எழுப்பிப் பந்தல் கோடியில் இருப்பவன் வரை கேட்க, தேவ கானமாகப் பொழிந்தவர்; கட்டிலில் படுத்து நரக வேதனைப் பட்டுக் கொண்டிருந்தார். வயிற்றில் ‘அல்ஸர்’ உருவாகி இருக்கிறதாம். ஒரு பருக்கை விழுந்தால், ஊசி குத்துவது போல் வலித்தது. வர வரச் சாப்பாடே மருந்தாகியது. பார்த்துப் போகிறவர்கள் எல்லாம் கண்ணீர் பெருக்கினர். பாகவதருடைய பொன்னான மனத்துக்கும், நல்லெண்ணத்துக்கும் இப்படிப்பட்ட அவஸ்தைகள் என்ன நியாயம்?
பாகவதர் இறந்த காலத்தைப் பற்றி எண்ணிப் பார்த்தார். அவரைப் போலவே, இன்று ஹரியும் இசை உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறான். இந்த மகிழ்ச்சியும், ஆத்ம திருப்தியுமே அவரது உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆறுதல் அளிக்கும் மருந்தாக இருந்தன. ஹரிக்கு ஏராளமாகக் கச்சேரிகள் நடக்கிறபடியால் அவனும் பாதி நாள் ஊரிலேயே இருப்பதில்லை.
நாளுக்கு நாள் பெருகி வரும் பணத்தின் தேவையையும், காத்திருக்கிற வைத்தியச் செலவுகளையும் ஹரி மனத்திற் கொண்டு தனக்கு வருகிற ஒரு கச்சேரியைக் கூடத் தவற விடாமல், உழைத்துப் பாடினான். குருவைப் போல் தொழில் பண்ணினான். ஆனால், அவரைப் போல் பணத்தைத் துச்சமென்று மதிக்கவில்லை.
ஹரியினுடைய பெயரும், புகழும் நாளுக்கு நாள் பெருகி, பெரிய பெரிய சபைகளிலெல்லாம் அவனுடைய கச்சேரிகள் ஏற்பாடாயின. கல்யாண சீசனில் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் அவனுடைய கச்சேரி நடந்தது. பணம் இல்லா விட்டாலும், தன்னை அழைக்கும் உற்சவக் கச்சேரிகளுக்கும் அவன் போகாமல் இருப்பதில்லை. ஆனால், அவன் செய்கிற ஒரு கச்சேரியிலாவது அவனைக் கல்யாணி பாடாமல் ரசிகர்கள் விட மாட்டாாகள்.
ஹரியும் மறுக்காமல், ரசிகர்கள் விரும்பிக் கேட்டதையெல்லாம் பாடி விட்டுத்தான் எழுந்திருப்பான். பத்திரிகைகளில் அவனுடைய பெயர் அடிக்கடி வந்தது. இதனால் பக்கிரியும், ஹரியை அடிக்கடிச் சந்தித்துக் குடும்பச் செலவுக்குப் பணம் கேட்கத் துவங்கினான்.
பாகவதருக்குத் தெரியாமல், ஹரி எந்தக் காரியமும் செய்வதில்லை. அவரே பக்கிரியின் விருப்பத்துக்கேற்ப, ஹரியை அவனுடைய ஏழைக் குடும்பத்துக்கு அதிகம் உதவும்படி கூறினார். ஹரியும் அதன்படியே செய்தான்.
அப்பாவின் உடல் நலக் குறைவுக்குப் பிறகு, அதையே ஒரு காரணமாகக் கொண்டு சுசீலா பாட்டை நிறுத்தி விட்டாள். ஆனால், வசந்திக்குப் பாடம் சொல்லி கொடுக்க ஹரி போவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்காக ஹரியைக் கண்டித்து; அங்கே போகக் கூடாது என்று தடுக்கவோ, உத்தரவு போடவோ அவளுக்குத் தைரியமில்லை . எனவே—வசந்திக்குப் பாடம் எடுத்து விட்டு வந்தால், எதையாவது வைத்துக் கொண்டு, ஹரியை வம்புக்கு இழுத்து, அவன் மனத்தைப் புண்படுத்தாமல் இருக்க மாட்டாள்.
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில், ஒரு நாள் ஹரியின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. நோட்டிசீல் ஹரியின் பெயரைப் பார்த்து, சுற்று வட்டார மக்கள் வந்து கூடி விட்டனர். மின்சார விளக்குகளினாலும், வண்ண வண்ண மலர்களினாலும் தெப்பம் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.
சுவாமிக்குப் பக்கத்தில், கச்சேரி செய்வதற்கான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும், தெப்பத்தில் அமர்ந்து கச்சேரி கேட்க மிகவும் முக்கியமானவர்களும், பிரபலஸ்தர்களும், கோயிலைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுமே அநுமதிக்கப் பட்டிருந்தனர். ஹரி வருவதற்கு முன்பே, தெப்பத்திலும், கரையிலும் ஆயிரக் கணக்கான மக்கள் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட சமயத்துக்கு, ஹரி கச்சேரி செய்யும் மேடையில் வந்து அமர்ந்தான். பக்க வாத்தியக்காரர்கள் எல்லாம் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர். சுருதி சேர்த்துக் கொண்டு,:ஹரி குருவை நினைத்துப் பாடத் துவங்கினான்.
மகிழ்ச்சியூட்டும் மனோகரமான இரவு நேரத்துப் பக்திப் பரவசச் சூழ்நிலை: மெல்லிய அலையெழுப்பிச் சுற்றி வரும் தெப்பம்; கடலிலிருந்து அலைகள் எழுவதே போல், குளத்தின் நடுவிலிலிருந்து ஹரி இன்னிசை அலையெழுப்பிக் கேட்போரைப் பரவசத்தில் ஆழ்த்தினான். மெய்ம் மறந்து பாடிய ஹரி எதேச்சையாகத் திரும்பிய போது; தெப்பத்தில், பெண்கள் வரிசையில் காந்தாமணியும், அவள் தாயாரும் அவனையே பார்த்த வண்ணம் கச்சேரியை ரசிப்பதைக் கண்டான். இதைச் சற்றும் எதிர்பாராத ஹரி, வியப்புடன் கச்சேரியைத் தொடர்ந்தான். இதே போல், தான் சற்றும் எதிர்பாராமல், அன்று அவனுடைய அரங்கேற்றக் கச்சேரிக்குக் காந்தாமணியும், அவள் தாயாரும் முன் வரிசையில் வந்து உட்கார்ந்து கொண்டு அவனை வியப்பில் ஆழ்த்தினார்கள்.
வித்தையை யாசித்துத் தாயும், மகளுமாகத் தன் குருநாதரைத் தேடி வந்ததும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதும், அவன் நினைவில் மின்னல் போல் தோன்றி மறைந்தன.
அமைதி தவழும் காந்தாமணியின் சாந்தமான முகமும், அவளுடைய இசை ஆர்வமும் அவனை உற்சாகப் படுத்துவது போலிருந்தது.
அந்த உற்சாகத்தினால்தானோ என்னமோ - ஹரி தன் திறமையை எல்லாம் காட்டி, தெய்வ சன்னிதியில் தேனினுமினிய தன் இசையால் அனைவரையும் மெய்ம் மறக்கச் செய்தான்.