புல்லின் இதழ்கள்/மண்டபச் சாதகன்
ஏழையாகப் பிறப்பதே குற்றம். அதை விடத் தனக்கென்று சில விருப்பு வெறுப்புகளைச் சுமந்து திரிவது எவ்வளவு பெரிய குற்றம்? அந்தக் குற்றத்துக்கு உரிய தண்டனையைத்தான் கண்ணப்பனின் மனம் அப்போது அநுபவித்தது.
அப்பன் மனம் போனபடி அடித்து நொறுக்கியவுடன் பதிலுக்கு அவனால் செய்ய முடிந்தது, மனம் போனபடி அழுது தீர்ப்பது என்கிற ஒன்றுதான்.
கல்யாண வீடு வருவதற்குள் அவனாகவே தன்னைத் தேற்றிக் கொண்டான். மூலைக்கு மூலை குட்டிப் பிசாசுகளைப் போல விளக்குகள் அவனைக் கண்டு, ‘வா, வா’ என்று அழைத்தன.
‘சொன்னபடி மரியாதையாக முதலிலேயே எங்களிடம் வந்து உட்கார்ந்திருந்தால், இந்த அடியும் உதையும் உனக்குக் கிடைத்திருக்குமா?’ என்று அவை அவனைக் கேட்பன போலிருந்தன. கண்ணப்பன் தன்னையும் மீறி நகைத்து விட்டான்.
மேலும், பெரியசாமி கண்ணப்பனையே முழுவதும் நம்பிக் கல்யாண வீட்டில் இருக்கும்படி வற்புறுத்திக் கூறியதற்குக் காரணம் உண்டு. பெட்ரோமாக்ஸ் விளக்குகளைப் பற்றிய எல்லா நுணுக்கங்களையும் பெரியசாமி, கண்ணப்பனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தான்.
வெளிச்சம் மங்கி விளக்கு மக்கர் பண்ணினால், அவ்வப்போது காற்று அடித்துச் சரி பண்ணவோ, பின் போட்டு நிப்பிளைத் திறந்து தடைப்பட்டுப் போன எண்ணெயைச் சரி செய்யவோ, சமயத்தில் ‘மாண்டில்’ அறுந்தால், புதியதைக் கட்டிச் சமாளிக்கவோ, எல்லாம் அவனுக்கு அந்த வயதிலேயே புரிந்து விட்டன. ஆனால், அவன் மனம் மட்டும் இசையின்பத்தில் லயித்திருந்தது. அதற்காக, தான் சங்கீத வித்வானாக வேண்டும்; யாரிடமாவது பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் அவன் உள்ளத்தில் எழவில்லை. சில சமயங்களில், அவன் கேள்வி ஞானத்தில் அறிந்ததை வீட்டில் எப்பொழுதாவது பாடுவான். பாடுகிற அந்த வாயில் தவறாமல் அப்போதே அடி விழும். “சோற்றுக்குக் குடும்பம் தாளம் போடுது; அக்கறையா இன்னும் பத்துக் காசு அதிகம் சம்பாதிச்சுக்கிட்டு வரத்துக்கு துப்பில்லை; உனக்குப் பாட்டு ஒரு கேடா?” என்ற சிற்றன்னையின் கொடும் தாக்குதல்களுக்கு அவன் பல முறை இலக்காயிருக்கிறான். அதன் பிறகு, கண்ணப்பன் அந்த வீட்டில் வாயே திறந்ததில்லை. யாரும் இல்லாத தோட்டமும், துரவும், ஆற்றங்கரை மண்டபமுந்தாம் கண்ணப்பனுடைய இசையார்வத்தைத் தணிக்கும் ஆஸ்தான மண்டபங்களாகத் திகழ்ந்தன.
நாகசுரத்தைக் கேட்க ஐந்து நாட்களாகக் கூடிக் கூடிப் பேசி ஊரே காத்துக் கிடக்கும் போது, அவன் மட்டும் அந்தப் பந்தற்கால்களையும், சம்பந்தி வீட்டுக்காரர்களையும் பார்த்துக் கொண்டு விளக்குக்குக் காவல் இருப்பதா?
ஊர்வலம் கிளம்பித் தெரு முனையை அடைந்தது. இனி மேல்தான் சிவன் கோயில் நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலம் வந்தாக வேண்டும். நாகசுர இன்னிசையும், தவுலின் நாதமும் அவனை அழைத்தன. அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். மறுகணம், தன்னை நம்பியிருக்கும் அத்தனை விளக்குகளையும் அநாதைகளாக்கிக் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து விட்டான்.
நீரில் விழுந்த உப்பைப் போல, காலம் ஒளி வெள்ளத்தில் கரைந்தது. ஆனால், அத்தனை நேரம் ஒழுங்காக எரிந்த விளக்குகள் கண்ணப்பன் போனதும், மக்கர் செய்தன. ஒரு விளக்கு ‘பக்-பக்’ என்றது. கூடத்து மூலையில் இருந்த விளக்கும் பற்றி எரிந்தது. சில அணைந்தே போயின.
அவ்வளவுதான், சிறிது நேரத்துக்கெல்லாம் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டு, எல்லாரும் ஏக காலத்தில் “லைட் பாய், லைட் பாய்!” என்று கத்தினர். கண்ணப்பன் அங்கே இருந்தால்தானே? சம்பந்தி வீடு இருளில் தவித்தது. இதற்குள் இந்த விஷயம் மிகப் பெரிய குற்றமாக உருவெடுத்துப் பெண் வீட்டுக்காரர் காதுக்கு எட்டியது. ‘இது வரை குற்றங்குறை கூற இடம் இல்லாமல் கவனித்தும், இறுதியில் சம்பந்தி வீட்டாரிடமிருந்து இப்படி அவசியமில்லாத புகாரைக் கேட்க வேண்டியதாகி விட்டதே’ என்று பெண் வீட்டாருக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.
ஊர்வலம் முடிந்து வந்த பெரியசாமியைப் பெண்ணின் தகப்பனார் பிரமாதமாகக் கோபித்துக் கொண்டார். “விளக்குக்காக ஒரு தம்பிடி கூடத் தர முடியாது. உன் முதலாளியை வரச் சொல்லு” என்று கூறி விட்டார். எல்லாவற்றையும் புரிந்து கொண்ட பெரியசாமி அப்படியே வெலவெலத்துப் போனான்.
“என் மகனை நம்பி மோசம் போயிட்டேனுங்க. அவன் இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை எசமான். தப்பெல்லாம் என் மேலேதான். இந்த ஏழையை இந்த ஒருவாட்டி மன்னிச்சுப்புடுங்க எசமான்” என்று நெடுஞ்சாண் கிடையாகப் பெண் வீட்டுக்காரர் காலில் விழுந்து புலம்பினான் பெரியசாமி. அவர்கள் கோபம் தணியவில்லை. தரதரவென்று மகனையும் இழுத்துக் கொண்டு வந்து, எஜமானின் கால்களில் விழச் செய்தான். இதற்குள் அங்கு வந்த மைனர் எல்லா விஷயங்களையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
அவருக்குக் கண்ணப்பன் மேல் தப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. சங்கீதப் பித்துள்ள மகனின் விருப்பத்துக்கு மாறாக அவனைப் பந்தலில் விட்டுச் சென்றதற்காகப் பெரியசாமியையே கோபித்துக் கொண்டதோடு, சங்கீத ரசனை உள்ள பிள்ளையைப் பெற்றதற்காகவே பெரியசாமியையும் மன்னித்து அனுப்பி விட்டார் மைனர். ஆனால், அதைப் புரிந்து கொள்ளப் பெரியசாமியால் முடிந்தால்தானே?
வீட்டுக்குச் சென்றதும் முனியம்மாளிடம் அன்று நடந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது; ரகளை பண்ணுவாள் என்று பயந்து, பெரியசாமி எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும், மறுநாளே விஷயம் அவள் காதுக்கு எட்டி விட்டது. பக்கத்துத் தெரு லைட்டுக்காரப் பாவாடை, கல்யாண வீட்டில் நடந்ததை அன்றே அக்கறையோடு வந்து, முனியம்மாவிடம் சொல்லி விட்டான். பாவாடைக்கு எப்போதும் பெண்களிடம் தனித்துப் பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக்கும் பக்கத்து ஊர்ச் சின்னப் பெண்ணான முனியம்மாவிடம் பேசுவதென்றால் அவனுக்குச் சோறு தண்ணியே வேண்டாம். இதற்காகவே, அவன் அடிக்கடி பெரியசாமியின் வீட்டுக்கு வருவான். வலிய வலிய, முனியம்மாளிடம் வந்து ஏதாவது பேசுவான். அவளுக்கும் பாவாடையின் பேச்சில், சிரிப்பில் ஒரு கவர்ச்சி இருந்தது.
அதைப் புரிந்து கொண்ட பாவாடை இப்போது அதைத் தனக்கு மிகவும் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டான். தொழில் துறையில் பெரியசாமியிடம் தனக்குள்ள விரோதத்தையெல்லாம் தீர்த்துக் கொண்டான். ஒன்றுக்குப் பத்தாக முனியம்மாளிடம் உருவேற்றிச் சென்றான். அவளும், அவன் அடித்த வேப்பிலையின் வேகத்தில், தன் புருஷன் வீட்டுக்கு வந்ததும் சரியானபடி ஆடித் தீர்த்தாள்.
“உன் மவன் இனி இந்த வீட்டுக்குள்ளற வந்தா காலை ஒடிச்சிடுவேன்!” என்று கையில் விறகுக் கட்டையை எடுத்துக் கொண்டு நின்றாள். உடனேயே தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் மறைத்ததற்காகக் கணவனை வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்த்தாள். “அப்பனும் பிள்ளையும் ஒண்ணு; நான்தான் இந்த வீட்டிலே தனி. எனக்குத்தான் இங்கே யாருமே இல்லே. ஆதரவாயிருந்த பாவி பக்கிரியும் போயிட்டான்” என்று தம்பியில்லாக் குறையைச் சொல்லி அழுது புலம்பினாள். பிறகு, “நான் இப்பவே என் பிறந்த வீட்டுக்குப் போயிடறேன். இனிமே இந்த வீட்டிலே என்ன இருக்கு? உனக்கும் எனக்கும் ஒத்துக்காது” என்று சொல்லிப் பானையிலிருந்த பழம் புடைவையை எல்லாம் சுருட்டி மூட்டை கட்டிப் பாவலாக் காட்டினாள்.
பெரியசாமி இதைக் கண்டு உண்மையிலேயே நடுநடுங்கிப் போனான். வயசான காலத்தில், தன்னையும் கைக்குழந்தைகளையும் தனியாகத் தவிக்க விட்டு, அவள் ஊருக்குப் போய் விடுவாளோ? பெண்டாட்டியை அருமையாக வைத்துக் காப்பாற்றத் தெரியவில்லை என்று மற்றவர்களிடம் ஏச்சும், பேச்சும் வாங்க நேருமோ என்று மனம் பதைத்தான். வயதையும், தான் அவளுடைய கணவன் என்பதையும் மறந்து முனியம்மாளிடம் கெஞ்சினான். அவள் கையிலிருந்த துணி மூட்டையைத் தன் பலம் கொண்ட மட்டும் பிடித்திழுத்து வாங்கி வைத்துக் கொள்ளத் துடித்தான். எதற்கும் மசியாமல் முனியம்மாள் உக்கிரமாகவே நடித்தாள்.
தந்தையின் தவிப்பையும், கண்ணீரையும் கண்டு மனம் பொறுக்காத கண்ணப்பன், சிற்றன்னையின் காலில் விழுந்து அழுதான். முனியம்மாள் அவனை எட்டி உதைத்தாள்.
‘அந்தப் பயல் ஒரு இடைஞ்சல்’ என்று பாவாடை அவளுக்குப் போதித்திருந்தான். ஆகவே கண்ணப்பனைக் கண்டதும் முனியம்மாளுக்குப் பின்னும் கோபம் அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை. அவனை ஒழித்துக் கட்ட அதுவே சரியானக் கட்டம் என்று எண்ணி வாய்க்கு வந்தபடி திட்டினாள்.
“ஒண்ணு, இந்த வீட்டிலே இனிமே நீ இருக்கணும், இல்லாட்டி நான் இருக்கணும். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க முடியாது” என்று தீர்மானமாகக் கூறினாள். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத பெரியசாமி, மனைவியோடு சேர்ந்து மகனைக் கண்டபடி திட்டி, அவளுடைய திருப்திக்காகவே கை வலிக்கும் வரை அடித்தான். உடனே முனியம்மாள், “போ, எங்கேயாவது ஒழிஞ்சு போ! உருப்படாத உன்னை வச்சுக்கிட்டுத் தண்டச் சோறு போட என்னாலே ஆவாது; ஓடு!” என்று கடிந்து விரட்டினாள். பெரியசாமி வாய் திறக்கவில்லை.
கண்ணப்பனுக்கு இனிமேல் அந்த வீட்டில் இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பது புரிந்தது. தன்னை விடத் தந்தைக்குச் சிற்றன்னைதான் முக்கியம். அவள் உதவி, அவள் அன்புதான் அவருக்குப் பெரிது; அதுதான் உண்மையுங் கூட; இனி மேல் நாம் ஓடி விட வேண்டியதுதான் என்ற நிச்சயமான முடிவுக்கு வந்து விட்டான்.
அன்று முதல் கண்ணப்பன் பொதுவுடைமை ஆகி விட்டான். இந்தப் பரந்த பூமியெல்லாம் தனக்குச் சொந்தமாகவும், அதில் வாழும் அத்தனை மக்களுமே தன் உறவினர்களாகவும், நண்பர்களாகவும் அவன் கருதினான். தன் சாண் வயிற்றுச் சோற்றைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை. எப்படியோ வேளைக்கு வேளை, இடத்துக்கு இடம் அலைந்து, காலமும், நேரமும் தப்பினாலும், உணவு தப்பாமல் கிடைத்தது. ஏதோ வேலை செய்தான். அந்த நேரம் போகக் கச்சேரி எங்காவது இருந்தால், அதைக் கேட்பான். ஓய்வில் பாடுவான். இப்படியே ஊரூராகச் சுற்றிச் சுவாமி மலைக்கு வந்து சேர்ந்தான். அந்த ஊரும், கோயிலும், பாடுவதற்கு ஏற்ற ஆற்றங்கரை மண்டபமும் அவனுக்கு மிகவும் பிடித்தன. அக்கம்பக்கம் எங்கே சென்றாகிலும், வயிற்றுப்பாட்டை முடித்துக் கொண்டு, புடுக்கவும், பாடவும் மண்டபத்துக்கு வந்து விடுவான். அப்படி நாட்களைக் கழித்த போதுதான் ஒரு நாள் அவனை மகாவித்துவான் சுப்பராம பாகவதர் வலிய வந்து ஆட்கொண்டார்.
‘ஹரி’ என்கிற குரலைக் கேட்டு, அத்தனை நேரம் நினைவுச் சுழலில் சிக்கித் தவித்தவன், சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
கஞ்சிரா கோவிந்தராவ் நின்று கொண்டிருந்தார். “என்ன ஹரி, வாத்தியார் ஊரில் இல்லையா? எந்த ஊரில் கச்சேரி?” என்ற அவருடைய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்தான். ரெயிலுக்கு நேரமாகி விட்டதைக் கூறி, அவசர அவசரமாகத் துவைத்த துணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பாதி வழி வரும் போதே, வீட்டின் ஞாபகமும், எண்ணெய்ப் பிரச்சினையும் நினைவுக்கு வரவே, ஹரிக்குப் ‘பகீர்’ என்றது. வேகமாக நடந்து வந்த அவன் கால்கள் தாமாகவே பின்னலிட்டன. காயத்திரியும், சுசீலாவும் அவன் மனக் கண் முன் மாறி மாறித் தோன்றினர். வேதனையுடனேயே வீட்டுக்குள் நுழைந்த அவன் யாருடனும் பேசவில்லை. குருநாதருடைய துணிகளைக் கொல்லையில் அழகாக உதறிக் கொடியில் உலர்த்தினான்.
அவன் வருவதற்குள், சாப்பாட்டு அறையில் தயாராக அவனுக்குத் தட்டில் பலகாரமும், காபியும் இருந்தன. அவன் பாதி சாப்பிடும் போதே, “ரெயிலுக்கு இன்னும் அரை மணி கூட இல்லை” என்று சுசீலா தாயிடம் குறை கூறிக் கொண்டிருந்தாள். ஹரி பலகாரம் பண்ணிக் கையை அலம்பியதும், லட்சுமி யம்மாள். “இத்தனை நேரம் காவிரியில் என்ன பண்ணினாய் ஹரி? ஐயா இன்று ஊரிலிருந்து வருவது மறந்து விட்டதா?” என்று சுசீலாவின் ஆறுதலுக்காக இரண்டொரு கேள்விகளைக் கேட்டாள்,
அதற்குள் சுசீலா, “வீட்டில் இத்தனை நேரம், பொழுது விடியும் வரை கத்தினது போதாதென்று, மண்டபத்திலும் போய்ப் பாடினானோ என்னவோ? பழக்க தோஷம் எங்கே போகும்? பட்டிணத்திலிருந்து வருகிற அப்பாவுக்கு, ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வரவா வழி தெரியாது? யாரும் ரெயிலுக்குப் போக வேண்டாம்” என்று ஒரு குட்டி உத்தரவு போட்டாள். இத்தனைக்கும் ஹரி வாயே திறக்கவில்லை.
பதில் பேசாமல், சட்டையை மாட்டிக் கொண்டு, அவன் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தான். ஆனால் அவன் வருவதற்குள், ரெயில் ஸ்டேஷனில் வந்து நின்றிருந்தது. பிரயாணிகளில் சிலர் நடந்தும், வண்டியில் ஏறியும் வெளியே சென்றனர்.
ஹரி, எஞ்சினுக்கும், கார்டு வானுக்குமாக இரண்டு மூன்று முறை தேடி ஓடி அலைந்து பார்த்தான். குரு. நாதரைக் காணவில்லை.