புல்லின் இதழ்கள்/யார் இந்தப் பையன்?


 
5. யார் இந்தப் பையன்?

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஸ்டேஷனுக்குத் தாமதமாக வந்ததற்காக ஹரி தன்னை மிகவும் நொந்து கொண்டான். குருவின் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விட்டது போல அவன் மனமே அவனைத் தண்டித்தது. வாசலில் வண்டிகள் நிற்கும் இடத்துக்கும், பிளாட்பாரத்துக்குமாக அவன் மாறி மாறி ஓடினான். தனக்குப் பழக்கமான வண்டிக்காரர்களை விசாரித்தான். அவர்களது பதில் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. மீண்டும் டிக்கெட் கலெக்டரிடம் வந்து கேட்டான். அவர் அவன் பேச்சைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளாததோடு, வழக்கப்படி. கையை நீட்டி, அவனிடமே டிக்கெட் வேறு கேட்டார்.

இரண்டாவது மணி அடித்ததும், ஹரி மீண்டும் ஒரு முறை ரெயில் வண்டியின் தலைக்கும், வாலுக்குமாக ஓடிப் பார்த்தான். ரெயில் வருவதற்கு ஒரு நிமிஷத்துக்கு முன்பே ஸ்டேஷனுக்கு வந்திருந்தால், மனம் இத்தனை கிலேசப் படாது அல்லவா? ‘குருநாதர் வந்திருந்து, ஒருவேளை என்னைக் காணாமல் வண்டியில் ஏறிப் போய் விட்டாரா? அல்லது இன்று வரவே இல்லையா?’ என்று எண்ணிக் கொண்டே ஓடிய போதுதான், திடீரென்று யாரோ, ‘ஹரி!’ என்று அழைக்கும் குரல் கேட்டது.

பிடில் பஞ்சு அண்ணா அவனைப் பார்த்து விட்டு அருகில் கூப்பிட்டார். “வழியில், பாகவதர் திருவிடை மருதூரில் இறங்கி விட்டார்” என்றும், “எப்போது வருவார் என்பது தெரியாது” என்றும் அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே வண்டி புறப்பட்டது. பச்சைக் கொடிக்குப் போட்டியாகப் பஞ்சு அண்ணா ஜன்னலுக்கு வெளியில் கையை ஆட்டிக் கொண்டேயிருந்தார். ‘நல்ல வேளை, குருநாதர் இந்த வண்டியில் வரவில்லை’ என்பதை அறிந்து நிம்மதியடைந்தான்.

ரி வீட்டை அடைந்த போது, உள்ளேயிருந்து ஒரு புதுக் குரல் கேட்டது. அந்தப் புதுக் குரலைச் சுற்றிலும் பழக்கமான குரல்கள் மிகவும் அன்போடும், அக்கறையோடும் யோகக்ஷேமங்களையும் நாட்டு வளத்தையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தன.

ஹரி எட்டிப் பார்த்தான். கட்டுக் குடுமியும், பஞ்ச கச்சமும், தங்க உருத்திராட்சமுமாகக் காட்சியளித்த அந்த முதியவரை அவன் அந்த வீட்டில் அது வரைக் கண்டதில்லை. அப்படியிருந்தும், அவன் அந்த முகத்தை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு தோன்றியது.

“ஐயா இந்த ரெயிலில் வரவில்லை” என்று உள்ளே வந்து கூறிய அவனைப் பார்த்ததும், “யார் லட்சுமி இந்தப் பிள்ளையாண்டான்? செக்கச் செவேல்ன்னு ராஜா மாதிரி இருக்கானே! சுப்புவோடே புதிய சிஷ்யனா?” என்று நாணா மாமா அக்கறையோடு விசாரித்தார்.

உடனே லட்சுமியம்மாள், “ஒன்றும் புதிசில்லை; பழைய சிஷ்யன்தான். ஒன்பது வயதில் அழைத்து வந்தார்; அவனும் வந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆகிறது. நீ எங்கே இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறாய், இங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள? நீ வந்து போன மறு வருஷமே இவன் வந்து விட்டான்” என்று அவள் கூறி முடிப்பதற்குள், நாணா மாமா ஹரியைக் கூப்பிட்டு, “ஏண்டா அம்பி, உன் பெயர் என்ன?” என்று விசாரிக்க எண்ணினார்.

ஆனால் அதற்குள் கொல்லையிலிருந்து குளித்து விட்டு வந்த சுசீலா, “அம்மா, மாமா எப்பொழுது வந்தார்? அப்பா வரவில்லையா?” என்று ஆவலோடு கேட்டாள். அதற்குத் தாயினிடமிருந்து பதில் வருவதற்குள், அவசரம் தாங்காமல், “எப்பொழுது மாமா வந்தீர்கள்? வரப் போவதாக ஒரு கடுதாசி கூடப் போடவில்லையே?” என்று மாமாவிடமே கேட்டாள்.

“கடுதாசி போட்டுத் தகவல் கொடுத்து வர நான் என்னம்மா உன் அப்பாவைப் போல் பிரபல சங்கீத வித்வானா? கிராமத்தில் நிலத்தோடும், ஆட்களோடும் மாடு, கன்றுகளுடனும் போராடுவது போதாதென்று, உண்டியல் கடையில் பணத்தை அள்ளிக் கொடுத்து விட்டுக் கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் வேறே அலைந்து கொண்டிருக்கிறேன். இதற்கே நேரம் போதவில்லை. கடுதாசி எங்கே போடுவது? ஏதோ உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று; உடனே புறப்பட்டு வந்தேன். மேலும், முன்னே மாதிரி ஓர் இடத்துக்கு வந்து போகத் தள்ளவுமில்லை. பாரேன், இந்தப் பையைக் கூடத் தூக்கிக் கொண்டு வர முடியவில்லை” என்றார் ஆயாசத்துடன்.

“ஏன் மாமா, இந்த எட்டரை மணி வண்டியில்தானே வந்தீர்கள்? அதற்குத்தான் ஹரி வந்திருந்தானே? நீங்கள் ஏன் பையைத் தூக்கிக் கொண்டு வண்டிக்கு அலைய வேண்டும்? அவனிடம் சொவ்லுவதுதானே?” என்று சுசீலா அசட்டுத்தனமாகக் கேட்டாள்.

“நான் ஹரியைக் கண்டேனா, சிவனைக் கண்டேனா? இந்தப் பிள்ளையாண்டானையே நான் முன் பின் பார்த்திருந்தால் அல்லவா தெரிவதற்கு?” என்று கேட்டார்.

ஆனால் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், “உங்களுக்குத் தெரியா விட்டால்?” என்ற சுசீலா ஹரியைப் பார்த்து, “அப்பா ஊரிலிருந்து வரா விட்டால், அதற்காகக் கண்ணை மூடிக் கொண்டு வந்து விட வேண்டுமா? ஸ்டேஷனுக்குப் போன நீ மாமாவுக்குக் கொஞ்சம் உதவி செய்து, அவரோடு வண்டியில் வந்திருக்கக் கூடாதா ஹரி?” என்று சற்றுக் கோபமாகவே கேட்டாள். ஆனால் அதற்கு அவன், எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாமாவை அவனுக்கும், மாமாவுக்கு அவனையும் தெரியாது என்பது அங்குள்ள எல்லாருக்கும் தெரியும். இந்த நிலைமையில் யாருக்கு யார் உதவ முடியும் என்பது சுசீலாவுக்கும் தெரியும். ஆயினும், தெரிந்து கொண்டே; வேண்டுமென்று அவள் கேட்டாள். அப்படிக் கேட்பவளைக் கண்டிக்க வழி தெரியாமல் அம்மா மௌனமாக இருந்தாள். ஆனால், தங்கையின் இந்த அதிகப் பிரசங்கித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள காயத்திரியால் முடியவில்லை.

“மாமாவை முன் பின் பார்க்காமல் அவரை ஹரிக்கு எப்படி அம்மா தெரியும்? அப்படித் தெரிந்திருந்தால், நம் வீட்டு மனுஷாளை அவன் விட்டு வந்திருப்பானா?” என்றாள் காயத்திரி, தாயிடம்.

அவ்வளவுதான், சுசீலாவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இத்தனை நாள் ஹரிக்கு முன்பாகவும், அப்பா அம்மாவுக்கு முன்பாகவும் அவமானப்படுத்தியது போதாதென்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் மாமாவின் முன்பும் காயத்திரி அவமானப்படுத்துவதை அவளால் தாங்க முடியவில்லை.

“பார்த்தியா அம்மா, நான் எது சொன்னாலும் இந்த அக்கா ஹரிக்காகப் பரிந்து கொண்டு வருகிறதை! அடையாளம் தெரியாதாமே அடையாளம்! நம் வீட்டில் மாமாவின் படம் எத்தனை இருக்கிறது? நீயும், மாமாவும், மாமியும் இவள் கல்யாணத்தின் போது சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவுக்குப் போன மாதந்தானே ஹரி வேறே கண்ணாடி போட்டுக் கொண்டு வந்தான்? அக்கறை இருந்தால், நம்ம மனுஷாளை அத்தனை சீக்கிரம் மறந்து போய் விடுமா? வேறொன்றும் இல்லை; தன் கட்சியை எடுத்துப் பேசுவதற்கு ஓர் ஆள் இந்த வீட்டில் இருக்கிறது என்கிற தைரியம்; அதுதான்” என்று பெரிய மனுஷி போல் பேசி நிறுத்தினாள்.

பெண்ணினுடைய பேச்சையும்,தோரணையையும் பார்த்து லட்சுமியம்மாளுக்கே வியப்பாக இருந்தது. மாமாவுக்கோ, அடாப் பழியாயினும், தம் கட்சியை எடுத்துப் பேசிய சுசீலாவின் மீது மதிப்பு அதிகமாகியது. காயத்திரி தன் கடமையைச் செய்த நிம்மதியில் உள்ளே சென்றாள். ஹரியோ உள்ளேயோ, வெளியிலோ போக முடியாத தர்மசங்கடத்தில் சிறிது நேரம் தவித்தான்.

பிறகு மாமாவே சுசீலாவைப் பார்த்து, “போனால் போகிறது, கோபித்துக் கொள்ளாதே! பாவம் சின்னப் பையன்தானே? எல்லாம் உலக அனுபவம் ஏற்பட்டால் சரியாய் போய் விடும்” என்று கூறி, “அம்பி, இங்கே வாடா”’ என்று ஹரியைக் கூப்பிட்டார்.

அவனுடைய களை பொருந்திய முகமும், அடக்கமான குணமும் அவரைக் கவர்ந்தன. அவனைப் பக்கத்தில் இழுத்து முதுகைத் தட்டி, “உன் பேர்தான் ஹரியா?” என்று விசாரித்தார்.

“ஆமாம்” என்று ஹரி தலையை அசைத்தான். அவர் உடனே “ஹரி என்றால் ஹரிஹரனா, ஹரிஹர சுப்பிரமணியனா?” என்று கேட்டார்.

“ஏன் இன்னும் வெளியிலிருந்து வந்தபடி சட்டையைக் கழற்றாமல் இருக்கிறாய்? உனக்கு என்ன வயசு? பூணுால் போட்டாயிற்றா?”

“இல்லை”

“ஏன்? இன்னும் வயசாகலை என்கிற நினைப்போ?” என்று சிரித்துக் கொண்டே கேலியாகக் கேட்ட அவர் கவலையுடன் விசாரித்தார்.

“ஏன் ? அப்பா அம்மா இருக்கிறார்களா, இல்லையா”

“. . . .”

“பின்னே ஏன் போடல்லை?”

“கிடையாது.”

“கிடையாதுன்னா. . . . அப்பா, அம்மா கிடையாதா; பூணுால் கிடையாதா?” நாணா மாமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நிலையில் லட்சுமியம்மாள், “அண்ணா, இங்கே வாயேன்” என்று அவரை உள்ளே அழைத்தாள். ஹரி தன் வேலையைக் கவனிக்க வெளியே சென்றான்.

தபாலாபீஸிலிருந்து கடிதங்களை பெற்று, வீடு திரும்புவதற்குள் மணி பத்து அடித்து விட்டது. வீட்டுக்கு வந்ததும் கடிதங்கள் சம்பந்தமாக ஒரு மணி நேர வேலை இருந்தது.

கச்சேரிக்குத் தேதி கேட்டு எழுதியிருந்த சபாக் கடிதங்களையும், கல்யாணக் கச்சேரிக்கு நாள் குறிப்பிட்டுச் சம்மதம் கேட்டிருந்த கடிதங்களையும் தனியாக வைத்துக் கொண்டான். சமீபத்தில் பாகவதர் பாலக்காட்டில் பாடியதை வெகுவாகப் புகழ்ந்து ஒரு ரசிகரிடமிருந்து வந்த பாராட்டுக் கடிதத்தைத் தனியாக வைத்தான். பாகவதர் ஏற்கனவே கச்சேரிக்கு ஒப்புக் கொண்டிருந்த தேதிக்குச் ‘சௌகரியப்படுமா?’ என்று கேட்டிருந்த ஒன்றிரண்டு பேர்களுக்கு, நாட்குறிப்பைப் பார்த்து உடன் பதில் எழுதிப் போட்டான். ஆயுள் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து பணம் கட்ட வந்த பிரீமியம் நோட்டீசைப் பைல் பண்ணி வைத்தான். பங்களுர் அன்பர் ஒருவர், கச்சேரியின் போது கூறியபடி அனுப்பியிருந்த அசல் ஊதுவத்திப் பாக்கெட்டைப் பிரித்துப் பூஜையறையில் கொளுத்தி வைத்தான். மீதியை அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்தான். மறக்காமல், ஊதுவத்தி அனுப்பிய அன்பருக்கு, பெற்றுக் கொண்ட விவரத்துக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதினான். இப்படியெல்லாம் காரியங்களை ஒழுங்காகவும், உடனுக்குடனும் செய்து முடிக்கும் வகையில் பாகவதர் அவனைத் தயார் செய்திருந்தார்.

கல்வியறிவு இல்லாமல், தம்மிடம் வந்த அவனைக் காயத்திரியைக் கொண்டு ஆரம்பப் பாடங்களைக் கற்பித்துப் பிறகு சுசீலாவுக்கு வரும் பிரைவேட் வாத்தியாரிடமும் ஹரியை ஒப்படைத்து, அவனுக்குப் பூரண கல்வி ஞானத்தை ஏற்படுத்தினார்.

காலையில் ஊரிலிருந்து வந்த நாணா மாமா ரெயில் துணியையெல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தார். தலையில் அரைக் கீரை விதைத் தைலம் கம கமத்தது. தபால் வேலைகளை முடித்து விட்டு வந்த ஹரி, அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படுமா என்று அவர் அருகில் வந்து, “ஆற்றுக்கா குளிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான்.

அவன் சாதாரணமாகத்தான் கேட்டான். அதில் நாணா மாமாவுக்கு அத்தனை கோபம் வருவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் ஏனோ, அவருக்கு அவனுடைய பேச்சே பிடிக்கவில்லை. லட்சுமி கூறியவற்றையும் நினைவு படுத்திக் கொண்டு அவர் அவனை ஒரு முறை முறைத்து விட்டுப் புறப்பட்டார். அவன் அவர் மனத்தைப் புரிந்து கொள்ளாமல், மூட்டையைத் தூக்கப் போனான், அவர் அதற்குள் துணி மூட்டையைப் பாய்ந்து கையில் எடுத்துக் கொண்டு, வாய்க்கு வந்தபடி ஏசினார்.

“உன்னை நான் உதவிக்குக் கூப்பிட்டேனா? உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தால், என் துணியைத் தூக்க வருவாய்? அவ்வளவு துாரம் மட்டு, மரியாதை இல்லாமற் போய் விட்டது; இல்லையா? எல்லாம் இந்தச் சுப்பராமன் கொடுக்கிற இடம்!” என்று ஒரு முத்தாய்ப்பு வைத்து விட்டு, வேகமாகக் காவேரியை நோக்கி நடந்தார்.

காலையில் அன்பாகத் தன்னிடம் பேசிய நாணா மாமாவின் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. காலையில் சுசீலா தன் மீது புகார் பண்ணிய போது கூட, அவர் தன்னிடம் அன்பாக நடந்து கொண்டதாகத்தான் அவனுக்கு நினைவிருந்தது. ஆனால் தபாலாபீஸுக்குப் போய் வருவதற்குள் அவரிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாறுதலுக்கு என்ன காரணம்? யாராவது என்னைப் பற்றிக் குறைவாகப் பேசி, அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யக் கூடிய ஒரே நபர் சுசீலா ஒருத்திதான். அவளுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்?

பக்கத்துக் கிராமத்தில் நண்பர் ஒருவர் பாகவதரிடம் கைமாற்றாகப் பணம் வாங்கியிருந்தார். அவர் குறிப்பிட்ட இரண்டு, மூன்று தவணைகளும் தவறி விட்டபடியால் அதை ஐயா வருவதற்குள் வாங்கி வரலாம் என்று எண்ணினான். இதைக் கேட்டவுடன் லட்சுமியம்மாள், “அவ்வளவு துாரம் போவதானால் போகும் இடத்தில் எவ்வளவு நேரம் ஆகுமோ; சாப்பிட்டு விட்டுப் போ” என்று கூறினாள். அவனுக்கும் அதுவே சரி என்று பட்டது. எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட்டு விட்டால், அவரவர் மீதிக் காரியங்களைக் கவனிக்கச் சௌகரியமாக இருக்கும் அல்லவா?

ஆற்றங்கரையில் குளிக்கப் போன அதிதிக்காக அனைவரும் காத்திருந்தனர். நேரம் ஆக, ஆக அண்ணா வராததைக் கண்டு லட்சுமியம்மாளின் மனம் மிக்க கவலைக்குள்ளாகியது. ஆற்றில் புது வெள்ளம் கரை புரண்டு ஒடியது. பழைய பல சம்பவங்கள் அவளுடைய கவலைக்கு உரமூட்டின. ஹரியிடம் லேசாக ஒரு கோடி காட்டித் தன் கவலையை அவள் தெரிவித்தாள். அண்ணாவுக்காக, அவனைப் போய்க் காவிரியில் பார்த்து வரச் சொல்ல அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

காவிரிக்குப் போகும் போது கூட அண்ணா அவனிடம் சண்டை போட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஹரி அம்மாவின் கவலையை உணர்ந்து, மாமாவைத் தேடி ஆற்றை நோக்கி வேகமாக நடந்தான். ஆனால் அங்கே அவரைக் காணவில்லை. ஹரிக்குத் ‘திக்’கென்றது.

நீண்ட நேரம் அங்கும், இங்கும் தேடி விட்டு, ‘அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவது?’ என்பதே புரியாமல், கவலையுடன் வீட்டை அடைந்தான். ஆனால் வாசலுக்கு வரும் போதே உள்ளே நாணா மாமாவின் குரல் கேட்டது.