புல்லின் இதழ்கள்/மனம் செய்த மாயை
நாணாவின் அந்த ஒரு வார்த்தை, உறுதியான தோளையும், சதைக் கோளங்களையும், எலும்புக் கவசங்களையும் கடந்து பலமான ஊமையடியாக, பாகவதரின் நெஞ்சின் அடித்தளத்தில் விழுந்து விட்டது. அந்த அடியின் வேதனையைத் தாங்க முடியாமல், அவர் உள்ளத்துக்குள்ளேயே துடித்தார்.
‘மனத்தை அடக்கி வசப்படுத்தி வைக்கத் தெரியாமல், சபலத்துக்கு இதயத்தில் இடம் கொடுத்து, இத்தனை காலமும் வாழ்ந்து விட்டு, இன்று திடீரென்று யாரோ ஏதோ சொன்னதை நினைத்துக் கொண்டு வருந்துவது, கோழைத்தனம் அல்லவா? நானே இப்படி வருந்தினால், என்னை நம்பித் தன் வாழ்வையே ஒப்படைத்திருக்கும் சுந்தரி எப்படிக் கலங்குவாள்? அவளுடைய அழகுக்கும், ஞானத்துக்கும், அவள் விரும்பியிருந்தால், மகாராஜாக்களைக் கூட மணந்திருக்க முடியுமே! இசையின் மீதுள்ள ஆர்வத்தினால்தானே இந்தப் பாடகனை மணந்து கொண்டு, தன் சமூகத்தையும் எதிர்த்து வாழ்கிறாள்? இது போன்ற எத்தனை அவதூறுகளை அவள் கேட்டிருப்பாள்? அவள் இது வரை எதைப் பற்றியாவது கவலைப்படுவதாகக் காட்டிக் கொண்டிருக்கிறாளா?’
பாகவதர் தமக்குத் தாமே கேள்வியும் பதிலுமாக ஜோடித்து, ஒடிந்து விழுந்த மனத்தைத் தேற்றி நிறுத்த முயன்றார். அதில் அவருக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன.
மனம் அமைதியை நாடி அலைந்தது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் இசையைத்தான் சரணடைவது வழக்கம். ‘எவ்வளவு சுலபமாக, எவ்வளவு கேவலமாக, “சரித்திர சுத்தமில்லாதவன்” என்று நாணா குறை கூறிச் சென்று விட்டான்’ என்ற உள்ளக் குமுறல் அடங்கவே இல்லை.
‘இவர்கள் எல்லாரும் மறக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுடைய பேச்சும், செய்கைகளும் ஒதுக்கப்பட வேண்டியவை. இவர்களைப் பற்றி எனக்கு என்ன கவலை?’ என்று மனத்தைத் தேற்றிய வண்ணம் தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்.
விரல்கள் தந்தியை மீட்டின. ஆனால் அது ‘சுந்தரி, சுந்தரி’ என்றே ஒலித்தது. சிந்தனை அவரை மீண்டும் அநாதையாக்கி ஓடி விட்டது. மனம் சுருதியின் ஒலியில் சென்று லயிக்கவே மறுத்தது.
லட்சுமி நிற்கும் இடத்தில் சுந்தரியும்; சுசீலாவும், காயத்திரியும் நிற்கும் இடத்தில் வசந்தியும் சிரித்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர். சுழல் விளக்கைப் போல் உருவங்கள் மாறி மாறிச் சுழன்றன. அவருடைய கண்கள் மட்டும், தன்னை அவதூறுக்கு ஆளாக்கிய-அல்ல-தன்னால் அவதூறுக்கு ஆளாகியுள்ள சுந்தரியையே வெறிக்கப் பார்த்தன.
சுப்பராம பாகவதர், பிரபல இளம் வித்துவானாகப் பொற்கொடி கட்டிப் பறந்த காலம். திருவிடைமருதூரில், வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த இளம் பெண் சுந்தரி, அவரது இசையில் உள்ளத்தைப் பறி கொடுத்தாள். அவரிடம் பயிற்சி பெற்றுச் சங்கீதத்தில் முன்னேற வேண்டுமென்று விரும்பினாள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் ஆதரவில் இருந்த அவள் தன் ஆசையைக் கூறினாள். பாட்டியும் பேத்தியினுடைய விருப்பப்படியே பாகவதரிடம் சங்கீதப் பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தாள். ஆனால் சுப்பராம பாகவதர் சுந்தரிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை.
சுப்பராம பாகவதருக்கு அப்போதே அநேக சிஷ்யர்கள் இருந்தார்கள். வீட்டிலேயே தங்கிச் சங்கீதம் சொல்லிக் கொள்கிறவர்களும், வேளைக்குப் பாடத்துக்கு மாத்திரம் வருகிறவர்களுமாகப் பல விதம். ஆனால், பெண்களுக்கு மாத்திரம் சிட்சை சொல்லிக் கொடுப்பதில்லை என்ற முடிவோடு இருந்தார். காரணம், அவருக்குப் பெண்களிடம் வெறுப்போ, அல்லது அவர்கள் சங்கீதம் கற்றுக் கொள்ள அருகதையற்றவர்கள் என்ற எண்ணமோ அல்ல. அவர்களுக்கு அவ்வளவு உயர்ந்த வித்தையைக் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொடுப்பதனால் முழுப் பலன் இருப்பதில்லை என்பது அவர் கருத்து.
எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டு, அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும், அவர்கள் கற்றுக் கொள்கிற அவர்களது சங்கீதம், திருமணத்தோடு அநேகமாக முற்றுப் பெறுகிறது. அதனால், கற்றுக் கொடுத்த வித்துவானுக்கும் புகழ் இல்லை; கற்றுக் கொண்ட பெண்ணுக்கும் பிரபலம் இல்லை. இத்தகைய வீண் முயற்சியில் இறங்குவானேன்? சிட்சை சொல்லிக் கொடுத்துச் சம்பாதித்தாக வேண்டும் என்ற அவசியமும் இல்லாததனால், பாகவதர் சுந்தரிக்குச் சொல்லிக் கொடுக்க மறுத்தார். ஆனால் சுந்தரியின் பாட்டியும், ‘அவர் இணங்காத வரையில் விடப் போவதில்லை’ என்று தீர்மானமாக இருந்தாள்.
இறுதியில் சுப்பராமனுடைய மாமனாரே சிபாரிசு செய்தார். அந்த அம்மாள் படுகிற அவஸ்தையையும், அந்தப் பெண்ணுக்குப் பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலுள்ள ஆர்வத்தையும் கண்டு மாப்பிள்ளையை ஒப்புக் கொள்ளும்படி கூறினார், சுப்பராமனும் சில நிபந்தனைகளின் பேரில், சொல்லிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.
‘சிட்சை முடிந்து நன்றாகக் கச்சேரிகள் செய்கிற வரை திருமணத்தைப் பற்றியே சிந்திக்கக் கூடாது. அதன் பிறகு, மணந்து கொண்டாலும், உன் வித்தையை வளர்த்து ஆதரிக்கும் குணமுடைய கணவனையே தேர்ந்தெடுத்து மணக்க வேண்டும்’ என்ற பாகவதரின் நிபந்தனைகளுக்குச் சுந்தரி எவ்வித மறு மொழியும் கூறாமல், சம்மதம் தெரிவித்தாள். இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதற்கு மேலும் மறுத்துப் பேச முடியவில்லை.
விஜயதசமியன்று சுந்தரிக்கு சிட்சை ஆரம்பமாயிற்று. தட்டு நிறையப் பூவும், பழமும், பணமுமாகக் கொண்டு வந்து வைத்துக் குருவை வணங்கினாள். சுந்தரி, வயதில் தன்னொத்தவளாயினும் குரு பத்தினி என்ற முறையில் உள்ளே சென்று லட்சுமியையும் வணங்கி விட்டுத் திரும்பினாள்.
‘பெண் கெட்டிக்காரிதான்’ என்று கண்டு கொண்ட சுப்பராமனுக்கு உள்ளூர மகிழ்ச்சி, பரம திருப்தி. இரண்டாம் நாளும், சுந்தரி பாட்டியுடன் தவறாமல் பாகவதர் வீட்டிக்கு வந்து கற்றுக் கொண்டு போனாள். அதன் பின், வாரம் ஒரு முறை பாகவதர் திருவிடை மருதூருக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுத்து வருவார்.
சுந்தரியின் ஆர்வத்தையும், சங்கீதத்தில் அவள் அடைந்து வரும் அபிவிருத்தியையும் கண்டு, சுப்பராமன் உள்ளத்துக்குள்ளேயே பூரித்தார். தாம் கற்ற வித்தையையெல்லாம் அவளுக்கு அப்படியே கரைத்துப் புகட்டினார். அவளும், அதை அப்படியே கிரகித்துக் கொள்ளக் கூடிய சிறந்த பாத்திரமாகத் திகழ்ந்தாள்.
பயிற்சி பூர்த்தியானதும், அரங்கேற்றத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் பாகவதருடைய விருப்பப்படியே சுந்தரியின் பாட்டி பிரமாதமாகச் செய்தாள். திருவிடை மருதூர்க் கோயிலில் மூகாம்பாள் சந்நிதியில் அரங்கேற்றம் விமரிசையாக நடைபெற்றது. மகாவித்துவான்கள் எல்லாரும் வந்திருந்து, கச்சேரியைக் கேட்டுச் சுப்பராமனையும், சுந்தரியையும் ஆசீர்வதித்தனர். சுந்தரி மேடை மீது சர்வாலங்கார பூஷிதையாகப் பணிவுடன் அமர்ந்து, சிறிதும் சபைக் கூச்சம் இல்லாமல், தன் திறமையெல்லாம் பிரகாசிக்கப் பாடினாள்.
சுந்தரியின் பாட்டி பெருமையாலும், மகிழ்ச்சியாலும் பூரித்துப் போனாள். கண்ணேறு படாமலிருக்க வீட்டுக்குச் சென்றதும், முதல் காரியமாகப் பேத்திக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டாள். ஆனால், அதையும் மீறி எப்படியோ ஒரு கொள்ளிக் கண் சுந்தரியின் மீது பட்டுத்தான் விட்டது.
ஆம்! சுந்தரி அரங்கேற்றத்துக்கு மேடை மீது உட்கார்ந்து பாடிய பிறகு, அடுத்த கச்சேரிக்கு அவள் மேடை மீது உட்கார்ந்து பாடவே இல்லை. அதற்கான வாய்ப்பே அவளுக்குக் கிட்டவில்லை.
காரணம் வேறொன்றும் இல்லை. அன்று சுந்தரிக் கச்சேரி செய்கிற போதே சுப்பராமன் மனத்துக்குள் திட்டமிட்டு விட்டார் ; ஆயுள் முழுவதும் சுந்தரி தமக்கே சொந்தமாகி, அவளுடைய இசையை நினைத்த போதெல்லாம் கேட்டுப் பருகி இன்புற வேண்டும். அதற்கு, சுந்தரி மாற்றானுக்கு மனைவியாகாமல், அவளைத் தாமே ஏற்றுக் கொள்வது ஒன்றுதான் வழி என்ற எண்ணம் எப்படியோ சுப்பராமன் உள்ளத்தில், கோவிலிலேயே பிறந்து விட்டது. வீட்டுக்கு வந்ததும் அவளைத் தனியாக அழைத்தார்.
குருதட்சிணையாக அவள் கொடுத்த பொன்னையும், பொருளையும் தட்டோடு அவள் எதிரில் வைத்தார். அவள் பிரமித்து நின்றாள். “சுந்தரி, இவையொன்றும் எனக்கு வேண்டாம். இவற்றுக்கு மேலாக, இவற்றை விட எத்தனையோ ஆயிரம் மடங்கு உயர்ந்த ஒன்றை உன்னிடம் யாசிக்கப் போகிறேன். நீ தருவாயா?” என்று அவளது இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்டார்.
குருநாதருடைய இந்தத் திடீர்ச் செய்கையும், போக்கும் சுந்தரியைத் திடுக்கிட வைத்தன. அவள் செயலற்றுச் சிலை போல் நின்றாள்.
“நீங்கள் என்னிடம் எதை விரும்பினாலும், அதை நான் மறுக்காமல் அளிக்க சித்தமாக இருக்கிறேன். தங்கள் மனத்தில் உள்ளதைத் தாராளமாகச் சொல்லலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அதை நிறைவேற்றுவது என் கடமை” என்று பாகவதருடைய தயக்கத்தை போக்கினாள் சுந்தரி. உடனே பாகவதர், “சுந்தரி, உரிமைக்கும், கடமைக்கும் அப்பாற்பட்டதை என் மனம் நாடி விட்டது. என் தகுதிக்கு மேல் அல்லது தகாத ஒன்றை நான் விரும்புகிறேன் என்பதும் எனக்குப் புலனாகிறது. ஆனால் என்னால் என் எண்ணங்களினின்றும் மீள முடியவில்லை. என் மனம் உன்னையே நாடுகிறது. ஆனால் என் விருப்பத்துக்காக நீ எதையும் பலவந்தமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. தாராளமாக உன் மனத்திலுள்ளதைத் தெரிவிக்கலாம். அதைப் பற்றி நான் எவ்வித தப்பெண்ணமும் கொள்ள மாட்டேன். என் ஆசை தவறாக இருந்தால், என்னை மன்னித்து விடு” என்று பாகவதர் சுற்றிச் சுற்றிப் பேசிக் கொண்டிருந்த போதே சுந்தரி இடைமறித்துக் கூறினாள்:
“நீங்கள் தீண்டிய இந்தக் கரங்கள் இரண்டும்; இனி ஆயுள் முழுவதும் உங்கள் சேவைக்காகவே காத்திருக்கும். நீங்கள் விரும்பியதைக் கேட்டதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், உங்கள் மனைவியும், உலகமுமே என்னைத் தூற்றுவார்கள். இந்த உலகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறவள் அல்ல. நான்; ஆனால், உங்கள் மனைவியைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. நான்தான் உங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தேன் என்று தூற்றலாம். ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணின் வாழ்க்கைக்குப் போட்டியாக முளைத்த கொடுமைக்கு ஆளாகி விட்டேன். இந்தத் துயரந்தான் என் மனத்தைப் பெரிதும் வருத்துகிறது. ஆனால் இனி மேல் அதைப் பற்றியும் சிந்தித்துப் பயன் இல்லை. விதிப்படி நடப்பவை நடந்தேறி விட்டன. இதோ உங்கள் சொத்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறியவள் அவர் பாதங்களில் வணங்கினாள்.
பாகவதர் ஒரு நிமிஷம் வெடித்துச் சிதறுவது போல் வெலவெலத்துப் போய் விட்டார். அவரது நாடி நரம்புகள் எல்லாம் துடித்தன. உடல் முழுவதும் தெப்பமாக நனைந்து விட்டது. முதலில் தம் செவிகளையே அவரால் நம்ப முடியவில்லை என்றாலும், கண் முன் நிகழும் காட்சிகளை ஏற்காமல் இருக்க முடியவில்லையே!
அப்போது அவர் உள்ளத்தில் ஓர் அர்த்தமற்ற சந்தேகம் எழுந்தது. தன் எண்ணத்தைக் கேட்டவுடன் சுந்தரி வேதனைப்படுவாள், அல்லது ஒரேயடியாக மறுத்து விடுவாள் என்று அவர் எண்ணியதற்கு மாறாகக் காரியங்கள் நடைபெறவே, ‘அவளும் ஒரு வேளை தன்னையே நினைத்துக் கொண்டிருப்பாளோ?’ என்று எண்ணினார். ஆனால் அது எவ்வளவு அபத்தம் என்பதை அவரால் உணர முடிந்தது.
எண்ணங்களின் சுமையாக இயங்கிக் கொண்டிருந்த பாகவதரைச் சுந்தரியின் ஸ்பரிச உணர்ச்சி, சுய உணர்வுக்கு உந்தித் தள்ளியது. அவர் பாதங்களில் ‘டப் டப்’ பென்று உஷ்ணமான கண்ணீர்த் துளிகள் விழுந்தன. அவளைத் தூக்கி நிறுத்தினார் பாகவதர்.
இதயமே சுக்கு நூறாக வெடித்துச் சிதறி விடும் போலிருந்தது அவருக்கு. “சுந்தரி, அழுகிறாயா? நான்தான் உன்னிடம் முன்னமே கூறி விட்டேனே; இது என்னுடைய வேண்டுகோளேயன்றிக் கட்டளையல்ல என்று. உன் விருப்பத்துக்கு மாறாக, எதுவும் நடைபெறக் கூடாது. இதில் உனக்கு நான் ஒரு வார அவகாசம் தருகிறேன். நன்றாக ஆலோசனை செய். உன் பாட்டியைக் கலந்து கொண்டு முடிவு கூறினால் போதுமானது. ஒரு காரியத்துக்குத் துணிவதற்கு முன்பு, யோசிப்பதற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் செலவிடலாம், காத்திருக்கலாம்; ஆனால், முடிவுக்கு வந்த பிறகு, அதைப் பற்றி எண்ணி வருந்தக் கூடாது. இதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள். திடீரென்று நான் இத்தனை பெரிய கேள்வியைக் கேட்டு உன்னைத் திணற வைப்பேன் என்று நீ சிறிதும் எதிர் பார்த்திருக்க மாட்டாய். ஏன், நானே எதிர்பார்த்தவன் அல்ல.
“உனக்கு இத்தனை காலம் நான் சிட்சை சொல்லிக் கொடுத்த போது, உன் எதிரில் மணிக் கணக்கில் உட்கார்ந்திருந்து விட்டு எழுந்திருப்பதைப் பெருந்தபஸ் போல எண்ணி வெற்றி கண்டிருக்கிறேன். கண்டவரைக் கிறங்க வைக்கும் உன் கட்டழகு என் சிந்தையில் மிருக வெறியை ஊட்டியதில்லை. ஆனால், அரங்கேற்ற மேடையில் உன்னைக் கண்டதும், உன் தெய்விக இசையைக் கேட்டதும், நான் மனம் பேதலித்துப் போனேன். என் வாழ்வின் ஜீவ ஒளியாக என்றும் நீ என் அருகிலேயே இல்லா விட்டால், நான் உயிருடன் இருக்க முடியாது போல ஒரு விதப் பயமும், ஏக்கமும் என்னைத் தாக்கின. இறுதியில் முழுக்க, முழுக்க உன்னை என்னுடையவளாகவே ஆக்கிக் கொள்வதைத் தவிர, இதற்கு வேறு மார்க்கமே இல்லை என்று என் மனம் முடிவு செய்து விட்டது.”
உள்ளத்தைத் திறந்து கொட்டிக் கொண்டிருந்த பாகவதர் சட்டென்று ஒரு நிமிஷம் நிறுத்தினார்.
“சுந்தரி, ஏன் எதற்குமே பதில் பேசாமல் நின்று கொண்டிருக்கிறாய்? இதுவரை நான் என் மனப் போராட்டத்தைத்தான் கூறினேனே தவிர, என் புத்தித் தடுமாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு உன்னை நான் வற்புறுத்தவில்லை. நான் மணமானவன். பேராசையால் இரண்டாந் தாரமாக உன்னையும் ஏற்க என் மனம் விழைகிறது. ஆனால், உன் இள மனத்தில் எத்தனையோ பசுமையான எண்ணங்களை நீ சுமந்து கொண்டிருக்கலாம். உன் அழகுக்கும், அறிவுக்கும், இப்போது நீ அடைந்திருக்கும் சங்கீதத் திறமைக்கும் அழகிலும், இளமையிலும், செல்வத்திலும் சிறந்த மணமகன் உனக்கு நாளையே வரலாம். அதுவே உன் விருப்பமாகவும் இருக்கலாம். ஆகவே நான் உன்னிடம் முன்பே கூறியபடி ஒரு வார அவகாசம் உனக்காக இல்லாவிட்டாலும், எனக்காக எடுத்துக் கொள்கிறேன். நீ இப்போது அவசரப் பட்டு ஏதாவது பதில் கூறி விட்டால், என் இதயமே நின்று விடும். ஆகவே, காலம் நம் இருவருக்கும் சில நாளாவது மன அமைதியைக் கொடுக்கட்டும். நான் வருகிறேன் சுந்தரி” என்று புறப்பட்டார்.
அவள் சட்டென்று கூறினாள், “எங்கே புறப்படுகிறீர்கள்? என் வரையில் இனி மேல் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் முடிவு செய்து விட்டேன்.” அவளுடைய சொற்கள் கணீரென்று அவர் செவிகளில் ஒலித்தன.
“என்ன சுந்தரி? அதற்குள்ளாகவா? வேண்டாம்.” சுப்பராமன் படபடப்புடன் கூறினார்.
“ஏன்? இந்த அவகாசம் போதாதா? இவ்வளவு காலமில்லாமல், என்னைப் பார்த்து இப்படிக் கேட்க வேண்டும் என்று உங்களுக்கு இந்த எண்ணம் திடீரென்றுதானே எழுந்தது? அதை உடனே நிறைவேற்றுவதைத்தான் என் கடமையாக மதிக்கிறேன். உங்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டுமே என்பதைத் தவிர நான் எனக்கென்று எந்த விருப்பு வெறுப்புக்களையும் தனியாகச் சுமந்து கொண்டு வாழவில்லை. இனி மேல், எனக்கு இது பற்றி யோசிப்பதற்கோ, யாருடைய அபிப்பிராயங்களையும் கேட்பதற்கோ விருப்பமில்லை. ஆனால், நீங்கள் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும்; கொடுக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
“தாராளமாகக் கேள், சுந்தரி” என்றார் சுப்பராமன்.
அவள் நிதானமாகவே கூறினாள்: “இனிமேல் நான் மேடையேறிக் கச்சேரி செய்யப் போவதில்லை. இன்று நான் செய்த கச்சேரிதான் என் முதலும், முடிவுமான கச்சேரி.”
இதைக் கேட்டதும் சுப்பராமன் அப்படியே நடுநடுங்கிப் போனார்.
“சுந்தரி, உனக்கு என்ன பைத்தியமா? இதற்காகவா உனக்கு இத்தனை அரும் பாடுபட்டுக் கற்றுக் கொடுத்தேன்? உன்னால்; உன் இணையற்ற சங்கீதத்தினால் என் பெயரும், புகழும் உயரும்; சிறந்த கலை ஞானமுடைய ஒரு பெண்ணரசியை முழுக்க முழுக்க எனக்கே சொந்தமாக உரிமை கொண்டாடப் போகிறேன் என்கிற என் கனவுகள் அனைத்தையும் ஒரே நொடியில் தகர்த்தெறிந்து, என் தலையில் பெரிய இடியாகப் போடுகிறாயே சுந்தரி! இது நியாயமா? உன் அசட்டுத் தனமான பேச்சுக்களை இத்துடன் நிறுத்திக் கொண்டு, இசைக் கலைக்கும், உனக்கும் பெருமையைத் தேடிக் கொள். ஆயிரமாயிரம் ரசிகர்கள் உன் இசை வெள்ளத்தில் திளைத்து மெய்ம்மறக்க வேண்டும்; எங்கும் உன் புகழ் பரவ வேண்டும். இதுவே என் விருப்பம். அதை அப்படியே நிறைவேற்றுவது உன் கடமை” என்று மழை கொட்டுவது போல் உள்ளுக்குள் எழுந்த உணர்ச்சியை அப்படியே கொட்டித் தீர்த்து விட்டார்.
அத்தனையையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி அவரை நோக்கி மெல்லச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் பொருள் அவருக்கு விளங்கவில்லை. அதன் காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அதன் வேகத்தைத் தாள முடியாமல் அவர் மௌனியானார். சொற்களை அவளது சிரிப்பு மென்று விழுங்கி அவரை ஊமையாக்கியது.
“உங்களிடம் எதிர்த்துப் பேச நேர்ந்து விட்டதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் இத்தனை நேரம் பேசிய அத்தனை விஷயங்களையும் நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் அசட்டுத் தனமாக எந்த முடிவும் செய்யவில்லை. செய்த முடிவை இனி மாற்றிக் கொள்வதாக எனக்கு உத்தேசமும் இல்லை. என்னால், இசைக் கலைக்குப் பெருமை ஏற்படும் என்றால், அதை விட அந்தக் கலைக்கு உங்களால் அதிகப் பயன் ஏற்படும். உலகத்தில் நல்ல சங்கீதத்தைப் பரப்ப வேண்டியது உங்கள் பணியாகவே இருக்கட்டும். நான் என்றும் தங்கள் அன்புக்கும், அபிமானத்துக்கும் பாத்திரமான ரசிகையாகவே உங்களிடம் கற்றுக் கொண்ட வித்தையால், உங்களையே மகிழ்விக்கும் சேவகியாகப் பணி செய்யவே என்னை அனுமதியுங்கள். அல்லாமல்-இருவரும்-கச்சேரிகள் செய்து, நம்முடைய சங்கீதத்துக்கிடையே உயர்வு, தாழ்வுகளைக் கற்பித்து, பிறர் விமர்சிக்க இடம் தர வேண்டாம். ஒருக்கால், அது நம் உறவை முறித்தாலும் முறிக்கலாம். இசையால் ஒன்று பட்ட நாம் என்றாவது ஒருநாள் பிரிந்து வாழவும் அந்த இசையே காரணமாகக் கூடாது என்பதனாலேயே, நான் தொழில் செய்வதை மறுக்கிறேன். கற்றுக் கொண்ட கலையைக் காசாக்கத்தான் வேண்டும் என்பதில்லையே! ஆயுள் முழுவதும் ஆத்மத் திருப்திக்காகவே என் இசைக் கலையை அர்ப்பித்து விட்டேன். நான் வணங்கும் உங்கள் மீது ஆணையாக இந்த உறுதியிலிருந்து பிறழ மாட்டேன். இது சத்தியம்!”
சுந்தரி வார்த்தைகளைக் கூறி முடிக்கவில்லை. அண்டசராசரங்களும் நிலை பெயர்ந்து தலை மேல் விழுந்து விட்டாற் போல் சுப்பராமன் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.