புல்லின் இதழ்கள்/பிரிந்தவர் கூடினர்


 
10. பிரிந்தவர் கூடினர்

ன்று சுந்தரியின் வார்த்தைகளைக் கேட்டதும், பாகவதருக்குக் கோபம் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக அத்தனை கடுமையாக அவளிடம் நடந்து கொண்டிருக்க வேண்டாமே.

அந்தக் காட்சிகள் மீண்டும், மீண்டும் அவர் நினைவில் தோன்றிப் பழைய சம்பவங்களைக் கிளறி விட்டன—

“எப்போது உன் புகழை - முன்னேற்றத்தைக் கண்டு எனக்குப் பொறாமை ஏற்படலாம், நமக்குள் எண்ணங்கள் மாறும் என்று என்னைப் பற்றி எண்ணி விட்டாயோ, இனி உன்னிடம் என் மனம் ஒட்டாது. நாம் இருவரும் சேர்ந்து வாழவும் முடியாது” என்று சுந்தரியிடம் கோபித்துக் கொண்டு அவர் புறப்பட்டார். உடனே—

“நில்லுங்கள்! நீங்கள் புறப்பட்டுப் போவதை நான் தடை செய்யவில்லை; ஆனால் அதற்குள் நான் என் மனத்திலுள்ளதைக் கூறி விடுகிறேன். அதன் பிறகு, நீங்கள் விருப்பப்படியே போகலாம்” என்று தடுத்துக் கூறிய அவளது சொற்கள், அவர் செவிகளில் அசரீரி போல் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

சுந்தரி கூறினாள் : இன்று என் வாழ்க்கையில் மிகப் பெரிய குதூகலம் நிறைந்த மங்கள நாள் என்று நான் எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன். இறுதியில் என் மகிழ்ச்சியெல்லாம் கனவாகவே ஆகி விட்டது. இன்று மேடை ஏறிப் பாடும் போது கூட நான் எண்ணவில்லை; பாடி முடிந்ததும் இத்தனை பெரிய சூறாவளி என்னைச் சூழ்ந்து கொள்ளும் என்று பெறுதற்கரிய பேற்றைப் பெற்று விட்டதாகத்தான் மேடையில் பாடும் போது மகிழ்ந்து கொண்டிருந்தேன. ஆனால் நான் அநுபவித்த ஆனந்தம் மொட்டிலேயே கருகி மடிந்து விட்டது. கச்சேரி முடிந்து இரண்டு மணி நேரம் ஆகவில்லை. என்னைக் கண்ணீரும், கம்பலையுமாகக் கதறக் கதற அடித்து விட்டு, நீங்கள் புறப்பட்டுச் செல்லத் தயாராகி விட்டீர்கள்.

“உங்களைப் பொறாமைக்காரர் என்றோ, என் நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர் என்றோ நான் ஒருக்காலும் கூறவில்லை. நீங்கள் அப்படி எண்ணினால், அது நான் கூறியவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவே ஆகும். கிடைத்தற்கரிய பேறாகிய தாங்களே என்னை ஆட்கொண்ட பின்; நான் கற்றுக் கொண்ட இசையையும் உங்களுக்கே சமர்ப்பித்து மகிழவே விரும்புகிறேன் என்றால், அது குற்றமா? இருவரும் தொழிலில் இறங்கி, நம்மில் ஏற்றத் தாழ்வுகளை எடை போடும் பொறுப்பையும், விமரிசனம் செய்யும் சந்தர்ப்பத்தையும் ரசிகர்களுக்கு அளித்து, மன ஆயாசத்திற்கு வகை செய்ய வேண்டாமென்று கூறினால், அது தவறா? இந்த ஜென்மத்தில் உங்களையன்றி, மற்றோர் ஆடவரை நான் மனத்தாலும் நினையேன். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்காகவே உங்கள் நினைவாகவே, இங்கேயே இருந்து என் வாழ்நாளை ஓட்டி விட என்னால் முடியும். இவ்வளவுதான் நான் கூற விரும்பியவை: இனி தங்கள் விருப்பம் போல் தாராளமாகச் செல்லலாம்” என்று கூறியவள், பதிலுக்குக் கூட காத்திராமல் உள்ளே சென்று விட்ட காட்சி, திரைப்படம் போல் மீண்டும் ஒரு முறை அவரது இதயத் திரையில் ஓடி நின்றது.

அந்தக் காட்சியைக் காணச் சகிக்காதது போல் கண்கள் நீரை உமிழ்ந்தன. கோபந்தான் எத்தனைக் கொடியது: அது மனிதனை என்ன பாடு படுத்தி விடுகிறது?

சுந்தரியுடன் கோபித்துக் கொண்டு வந்த சுப்பராமன், அதன் பிறகு நீண்ட நாள் வரை திருவிடைமருதூர்ப் பக்கம் எட்டிப் பார்க்காமலே இருந்து விட்டார். அவரது உள்ளத்தில் அவளை எப்படியாவது மறந்து விட வேண்டும் என்ற எண்ணந்தான் முழுக்க முழுக்க இருந்தது. ஆனால் ஒரு நாள் அவருடைய நண்பர் பிடில் பஞ்சாமி, சுந்தரியைப் பற்றிக் கூறிய செய்தியைக் கேட்டதும் சுப்பராமன் பதறிப் போனார்.

உடனே மறு ரெயிலிலேயே திருவிடை மருதூருக்குச் சென்று சுந்தரியைக் கண்டார். படுத்த படுக்கையாய் இருந்த அவளைப் பார்த்ததும், அவர் கண்ணில் நீர் கசிந்தது. அழகு கொழிக்கும் அவளது பொன்னிற மேனி, மெருகு குன்றி களையிழந்து காட்சியளித்தது. அலையலையாக நெளியும் கருங்கூந்தல் எண்ணெய் கண்டு பல நாட்கள் ஆகிக் காற்றில் பறந்து கொண்டிருந்தது. அழகையே அவள் அழித்துக் கொண்டு வாழும் போது-அழகுக்கு அழகூட்டும் நகைகளையா அணிந்து கொள்ளப் போகிறாள்: சூறையாடப் பட்ட இளவரசி போல் அவள் மஞ்சத்தில் கிடந்தாள்.

பாகவதரைக் கண்டதும், அவளது முகத்தில் ஓர் ஒளி பிறந்தது. வறண்டிருந்த உதடுகளில் ஜீவ களையுள்ள புன்னகை பூத்தது. எழுந்திருக்க முயன்றாள். அவளால் இயலவில்லை. திரும்பப் படுக்கையில் விழுந்து விட்டாள்.

“பேசாமல் அப்படியே படுத்திரு” என்று செல்லமாய் அதட்டினார். உதவிக்கு அருகில் ஒரு சிறு பெண் மட்டுமே இருந்தாள். பாட்டியைக் காணவில்லை.

சுந்தரியிடம், பாட்டி எங்கே என்று விசாரித்தார். விழித் திரைகளில் நீர் படிய அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். “பாட்டியம்மாவா? அவுங்க ஒரு மாசத்துக்கு முன்னமே செத்துப் போயிட்டாங்களே!” பக்கக்தில் இருந்த் சிறுமிதான், பாகவதருக்குப் பதில் அளித்தாள். சுப்பராமனுக்குத் திக்கென்றது. எவ்வளவு பெரிய துக்கத்தைச் சுமந்து கொண்டு, அவள் ஆதரவின்றி அநாதையைப் போல் இருக்கிறாள் என்று எண்ணிய போது, அவருக்கே தாளவில்லை.

“பாட்டிக்கு என்ன உடம்பு? என்ன செய்தது? நீ ஏன் எனக்குச் சொல்லி அனுப்பக் கூடாது அல்லது ஒரு வரி எழுதக் கூடாது?” என்று கேட்டார்.

“சொல்லியனுப்புவதற்கான உறவுடன் நீங்கள் இங்கிருந்து செல்லவில்லையே! மேலும், பாட்டி இறக்கிற வரை உங்களைப் பார்க்காமலே இருப்பது நல்லது என்றே எனக்குப் பட்டது. அதனால்தான், நானும் சொல்லி அனுப்பவில்லை. அன்று அரங்கேற்றம் முடிந்து வந்து பிறகு, நாம் இருவரும் பேசிக் கொண்டிருந்த காரசாரமான சம்பாஷணைகளைப் பற்றிப் பாட்டி நீங்கள் போன பிறகு கேட்டாள். நான் அத்தனையையும் விவரமாகச் சொன்னேன். இதைக் கேட்டதும் அவளுக்குக் கோபம் கண் மண் தெரியாமல் வந்து விட்டது. ‘சிட்சை சொல்லிக் கொடுத்தார் என்றால், அதற்குத் தகுந்த பரிசுகளைக் கொடுத்தோம். இன்னும் வேண்டுமென்றால், கேட்பதெல்லாம், கேட்ட போதெல்லாம் மனம் கோணாமல் கொடுப்போம்; வித்தையைச் சொல்லி கொடுத்தவர் என்று ஆயுள் முழுவதும் அன்போடு இருப்போம்; அவரது ஆசியோடு வாழ்வோம். ஆனால், அதற்காக உன்னையே அவர் கேட்பதா? லாபத்தில் சாப்பிடலாம்; முதலையே தின்று விட்டால், வியாபாரம் பிழைக்குமா?’ என்று உங்களை வாய்க்கு வந்தபடிப் பேசினாள். ஏற்கெனவே அவளுக்கு ரத்தக் கொதிப்பு உண்டு. நானும் டாக்டரும் அவளுக்கு எவ்வளவு கூறியும், அவளது ஆவேசம் அடங்கவில்லை. அவளுடைய சம்மதத்தைக் கேளாமல், நானும் உங்கள் எண்ணததுக்குச் ‘சரி’ என்று தலையாட்டி விட்டது அவளுக்குத் தாளவில்லை. என் பெண் இருந்தால் இப்படியெல்லாம் நடக்கப் பார்த்துக் கொண்டிருப்பாளா? நோட்டம் பார்த்து முளையிலேயே கிள்ளி எறிந்து, வளர வேண்டிய விதமாக வளர்த்திருப்பாளே! பாவிக்கு அவ்வளவு சமர்த்தும், சாமர்த்தியமும் இருக்கக் கண்டுதான் எமனுக்கே பொறுக்கவில்லை; கொண்டு போய் விட்டான். ஜாம்பவான் மாதிரி நான் இருக்கிறேன் எல்லாத் துன்பங்களையும் பார்த்து அநுபவிக்க’-என்று என் தாயை நினைத்து ஓயாமல் அழுதாள். ‘என் மனத்தைக் கலைத்து விட்டீர்கள்’ என்று உங்களை வாயாரத் திட்டிக் கொண்டே இருந்தாள்; திட்டிக் கொண்டே ஒரு நாள் போயும் சேர்ந்தாள்”.

“ஏன், உன் பாட்டியின் இறுதி ஆசை பூர்த்தியாக, இப்போது நான்தான் வந்து விடடேனே, பாட்டிக்குப் பதில் உன் வாய் வலிக்கிற வரை என்னை திட்டித் தீர்த்து விடு. பாவம்! அவளுடைய ஆத்மாவாவது சாந்தியாகட்டும்” என்று சுப்பராமன் கூறிய போதே, அருகில் இருந்த சின்னப் பெண்ணும் அவருடன் சேர்ந்து சிரித்தாள்.

பிறகுதான் சுப்பராமனுக்கே சுருக்கென்றது. ‘இப்போது நாம் ஒரு நோயாளியைப் பார்க்க வந்திருக்கிறோம். அதுவும் பஞ்சு கூறியது போல்-தங்கச் சிலை போல் இருந்த சுந்தரி, புழுதியில் கிடக்கும் மண் பொம்மை போன்ற நிலைக்கு வரக் காரணம் நானேதான். அவளை அவள் போக்குக்கு விடாமல், ஆசையை திசை மாற்றி விட்டுப் பிறகு உதாசீனமும் செய்து விட்டுச் சென்ற தாங்க முடியாத ஏமாற்றம்தான் ஊமையடியாக விழுந்து அவளைக் கிடத்தி விட்டது. இனி மேல் அவள் முன் போல் எழுந்திருந்து, பழைய குதூகலமும், கலகலப்பும் பெற ஏதாவது வழி செய்வதுதான் நம்முடைய தற்போதைய பணியேயன்றிப் பரிகாசத்துக்கு இது அல்ல நேரம்’- என்று அவரது மனமே கடமையை சுட்டிக் காட்டியது.

அவர் அவளருகில் உட்கார்ந்து மிகவும் பரிவோடு விசாரித்தார்; “இந்தப் பெண்ணைத் தவிர உனக்கு வேறு யாரும் துணைக்கு இல்லையா, சுந்தரி?”

“இல்லாமல் என்ன? நான் என்ன அநாதை என்று எண்ணிக் கொண்டீர்களா? என்னைப் பார்த்து, என் பாட்டைக் கேட்டு ஒரு மகாவித்துவானே மயங்கிப் போய் விட்டார். போனவர் மயக்கம் தெளிந்து பாவம், இன்றுதான் வந்திருக்கிறார்” என்று கூறி விட்டு, கலகலவென்று நகைத்தாள். அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார். அதன் பிறகு, அந்த வீட்டில், அந்தச் சிரிப்பு ஓயவே இல்லை.