பெரியாரும் சமதர்மமும்/02

2. காங்கிரசில் பெரியார்

சாதி ஏற்றத்தாழ்வு பல்வேறு உருவங்களில் மக்களை வாட்டியது. சமுதாய ஏணியின் கீழ்ப் படிக்கட்டுகளில் உள்ளவர்கள், கோயிலுக்குள் நுழையக் கூடாது; பொதுத் தெருக்களில் நடமாட முடியாது: பொதுக் கிணறுகள், குளங்களைப் பயன்படுத்த முடியாது. ஆறுகளில் தனித் தனிப் படித்துறைகள். இப்படிப் பல்வேறு வகையாக மக்களை வதைத்தது.

கேரளத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் போராட்டமொன்று தொடங்கப்பட்டது. என்ன போராட்டம்? கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், ஈழவர் சமுதாயத்தார் நடக்க உரிமை கோரி, போராட்டம் தொடங்கப்பட்டது. இது 1924-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.

அப்பக்கத்து முற்போக்குவாதிகள் சிலர் மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். சில நாள்கள் வரை மறியல் செய்த தொண்டர்கள் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். பிறகு மறியல் குழுவைச் சேர்ந்த பதின்மூன்று பேர்கள் மொத்தமாகக் கைது செய்யப்பட்டார்கள்.

மறியல் நின்று போகக் கூடிய நெருக்கடி ஏற்பட்டது. போராட்டத் தலைவர் கிரூர் நீலகண்ட நம்பூதிரிபாத் ஈ. வெ. ராமசாமிக்கு அழைப்பு அனுப்பினார். ஈ.வெ.ரா. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரசின் தலைவர். வைக்கம் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அதை நடத்துமாறு ஈ.வெ.ரா.வுக்கு அழைப்பு வந்தது.

பெரியார் வந்து பொறுப்பேற்கா விட்டால், மறியல் தோற்று விடுமென்று தந்தி மேல் தந்தி வந்தன. பெரியார் வைக்கம் சென்றார்.

வைக்கம், திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்தது. திருவிதாங்கூர் அரசர் ஈ. வெ. ராமசாமிக்கு நண்பர்; மிகவும் வேண்டியவர். பொதுத் தொண்டில் நட்பு குறுக்கிடும்படி விடலாமா? கூடாது. தனிப் பாசம் திசை திருப்ப விடலாமா? ஆகாது.

ஈ.வெ. ராமசாமி, அரசரின் அன்பிற்குத் தாட்சண்யப்படவில்லை. வைக்கம் போராட்டத்திற்குப் பொறுப்பேற்றார். மறியலைத் தொடர்ந்து நடத்தினார்; சிறைப்பட்டார். ஒரு திங்கள் சிறை வாழ்க்கைக்குப் பின் வெளி வந்தார்.

இதற்கிடையில், ஈ.வே.ராவின் ஆலோசனைப்படி திருமதி நாகம்மையாரும், திருமதி கண்ணம்மாவும், ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்தடைந்தார்கள்; மறியலை நடத்தினார்கள். போராட்டம் சூடு பிடித்தது.

விடுதலையான ஈ. வெ. ராமசாமி சிறிது இடைவெளிக்குப் பின், மீண்டும் மறியல் செய்தார். இம்முறை ஆறு திங்கள் சிறை வாசம் கிடைத்தது.

வைதீகர்கள் யாகத்திடம் அடைக்கலம் புகுந்தார்கள். ‘சத்துரு சங்கார யாகம்’ நடத்தினார்கள். யாகம் முடிவதற்குள், திருவிதாங்கூர் அரசர் மறைந்தார். மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காந்தியாரின் தலையீட்டை நாடினார்கள். ஒரு தெருவையாவது ‘ஈழவர் நடக்கக் கூடாத தெருவாக’ வைக்க முயன்றனர்.

ஈ. வெ. ராமசாமி உறுதியாக நின்றார். போராட்டம் வெற்றி பெற்றது.

எல்லா ஊர்களிலும், எல்லாப் பொதுத் தெருக்களிலும், எல்லாச் சாதியாரும் நடக்கலாம் என்று அரசு அறிவித்தது. ஈ.வெ. ரா. வெற்றி வாகை சூடி ‘வைக்கம் வீரராக’ தமிழகம் திரும்பினார்.

ஈ. வெ. ராமசாமி எதை எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றியே முழு நேரமும் சிந்திப்பார்; திட்டம் தீட்டுவார்; பேசுவார்; எழுதுவார்.

இந்தியா விடுதலை பெற வேண்டும், ஆம், விரைந்து விடுதலை அடைய வேண்டும். அதற்கு என்ன தேவை? அன்னிய ஆட்சிக்கு எதிர்ப்பு தேவை. வெள்ளம் போன்ற எதிர்ப்பு தேவை. ஒருமித்த எதிர்ப்பு தேவை.

எல்லாச் சாதியினரும், ஏராளமாகக் கூடி எதிர்த்தால், அன்னிய ஆட்சி கால் கொள்ள முடியாது. ஆகவே, பொதுமக்களின் பேராதரவைத் திரட்ட வேண்டும். அதற்குத் தடைக் கற்களாக இருப்பவை எவை? அச்சம், அவநம்பிக்கை.

எது பற்றி அச்சம்? சமுதாயத்தின் பெரும்பாலோரை, மேல் மட்ட மக்கள் தொடர்ந்து அடக்கி ஓடுக்கி வருவார்கள் என்று பொதுமக்கள் அஞ்சினார்கள். வேலை வாய்ப்புகளை மேட்டுக் குடியினரே மடக்கி வைத்துக் கொள்வார்களென்று அஞ்சினார்கள்.

முன்னர் அப்படித்தான் இருந்தது. அது சிறுபான்மையினரான மேல் சாதிக்காரர் மேல், பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை வளர்த்தது. ‘சாதிகள் உள்ள வரை, பதவிகளில் வகுப்பு உரிமை வழங்கும் கொள்கையை ஒப்புக் கொண்டால், விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு வெள்ளமெனப் பெருகும். விடுதலை விரைந்து கிட்டும்’ இப்படி ஈ.வே.ராவின் சிந்தனை சென்றது. வகுப்புரிமை இன்றியமையாதது என்னும் முடிவுக்கு வந்தார். அப்புறம்?

காங்கிரசில், வகுப்புரிமைக்கு ஆதரவு திரட்ட முயன்றார். காங்கிரசுக் கூட்டங்களில், இதற்கு ஆதரவாகப் பேசினார்.

1920ஆம் ஆண்டு முதல், ஓவ்வோர் ஆண்டும் தமிழ் நாடு காங்கிரசு மாநாடுகளில், வகுப்புரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அய்ந்து முறை பேச்சோடு நின்றது. தீர்மானம் நிறைவேறவில்லை. ஆறாம் முறை அத்தகைய தீர்மானத்தை, முன் மொழியவும் விடவில்லை.

1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடந்த மாகாண மாநாட்டில், இப்படி நிகழ்ந்தது. ஈ.வெ.ராமசாமி, தான் அரும்பாடு பட்டு வளர்த்த காங்கிரசை விட்டு வெளியேறினார்.

அக்கால கட்டத்தில், ஈ.வெ.ராமசாமி, காங்கிரசு இயக்கத்தின் பெருந் தலைவர்களில் ஒருவர். புகழும், செல்வாக்கும் மிகுந்த தலைவர். காங்கிரசுக் கட்சியிலேயே இருந்திருந்தால், கால நீளத்தில், அனைத்திந்தியத் தலைவர்களில் ஒருவராகவும் உயர்ந்திருப்பார். இத்தகைய, எதிர் கால வாய்ப்பு ஈ.வெ.ராவுக்குப் புரியாததல்ல. இருப்பினும், மற்றோர் தியாகத்தைத் தயங்காது, மேற்கொண்டார்.

மாளிகை வாழ்க்கையைத் துறந்த சித்தார்த்தர், கடுந்தவமும் பயனற்றது என்று கண்ட போது, அதையும் விட்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அது அவருக்குத் தெளிவைத் தந்து புத்தராக்கியது.

அதே போல், வசதியான வாழ்வை விட்டு விட்டு, காந்தீயக் கடுந்தவம் புரிந்ததும், நாட்டு மக்களுக்குப் பயன்படாதென்பதை உணர்ந்த ஈ.வெ.ரா., காங்கிரசு இயக்கத்தை விட்டு வெளியேறி, பரந்த சமுதாயத் தொண்டில் குதித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/02&oldid=1689999" இலிருந்து மீள்விக்கப்பட்டது