பெரியாரும் சமதர்மமும்/03

3. சுயமரியாதை இயக்கம் தோன்றியது

ஈ.வெ.ராமசாமி காங்கிரசை விட்டு விலகியது, அவருடைய பொதுத் தொண்டில் வரலாற்றுத் திருப்பு முனையாகும். காங்கிரசை விட்டு வெளியேறிய அவர், சலிப்புற்று வீட்டில் போய் உட்காரவில்வை. ஆண்டுக்கு இருபதாயிரம் ரூபாய்களை லாபமாகத் தந்த வாணிகத்தையே மூடினாரே, அதைப் பற்றியும் மீண்டும் சிந்திக்கவில்லை. மாறாக, சூறாவளியெனச் சுற்றுப் பயணஞ் செய்தார். தன்மான இயக்கத்தை வளர்த்தார்.

அவ்வியக்கத்தின் கொள்கைகள் என்னென்ன?

எல்லா மனிதர்களும் வாழ வேண்டும். மனித வாழ்வு வாழ வேண்டும். ஓரு நிலை மனிதர்களாக வாழ வேண்டும். பிறப்பால் சிலர் உயர்ந்தவர்கள்; பலர் தாழ்ந்தவர்கள் என்பது தவறு. இக்கொடுமை இந்தியாவில் மட்டும் பரவியுள்ள ஒன்று. இதை ஒழித்தால்தான், சமத்துவம் ஏற்படும். சாதிச் சுவர்களை ஒழிக்க, கலப்பு மணங்கள் பெருக வேண்டும். இத்தகைய சமத்துவக் கொள்கைகளைப் பெரியாரும் அவரைச் சார்ந்தவர்களும் பட்டி, தொட்டியெல்லாம் பரப்பி வந்தார்கள்.

பழமைப் பாதுகாவலர்கள் சும்மா இருப்பார்களா? நெடுங்கால மரபு என்னும் வாதத்தை மேற்கொண்டார்கள். இது அபத்தமானது. எப்படி?

கொசுவும், மூட்டைப் பூச்சியும் அனாதி காலமாக வருவது. அதற்காக, அவற்றைக் காப்பாற்றி, அவற்றின் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?

அதே போல், வைசூரி நோய் கணக்குத் தெரியாத காலத்திலிருந்து, நம் நாட்டில் பரவி, ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் உயிர்களைப் பலி கொண்டு வந்தது. தொன்மையானது என்பதற்காக, அந்நோயைத் தடுக்காமல் விட்டு வைத்தோமா?

குழந்தைப் பருவத்தே ஊசி போட்டுத் தடுத்து விடவில்லையா? நெடுங்காலமாகத் தொடர்வன என்பதாலேயே, தொல்லைகளைத் தாங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இதைத் தன்மான இயக்கம் தெளிவு படுத்தியது.

மருண்ட மதவாதிகள், ‘சாதி என்பது பிறவிப் பயன். ஒருவர் மேல் சாதியாகப் பிறப்பது அவர் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயன்; கீழ்ச் சாதியாகப் பிறப்பது போன பிறவியில் செய்த தீவினைகளின் பயன். இப்பிறவியில் பார்ப்பனர்களுக்குத் தொண்டு செய்வதின் வழியாக, அடுத்த பிறவியில் மேல் சாதிக்கு உயர முயல வேண்டும்’ என்று உளறினார்கள்.

ஞாயிறு சுடுவதும், வெண்ணிலா குளிர்விப்பதும் உலகம் முழுமைக்குமே பொது விதி. கோடைக்காற்றில் வறட்சியும், வாடைக் காற்றில் ஈரமும் கலந்திருப்பது பொது விதி.

முன்னை வினைப் பயன் என்பது பொது விதியானால், இந்தியாவில் மட்டும் செயல்பட்டு மேல் சாதி, கீழ்ச்சாதிகளை உருவாக்குவானேன்? பிறநாடுகளில், இவ்விதி செயலற்றுக் கிடப்பானேன்?

இது இந்து சமயப் பற்றாளர்களிடம் மட்டுமே வேலை செய்யும் என்றால், அச்சமயத்தில் இருந்து கொண்டு இழிமக்களாக இருப்பதை விட, அதற்குத் தலை முழுக்குப் போட்டு விட்டு, விடுதலை பெற்றால் என்ன? இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தன.

பழமை விரும்பிகளும், பண்டிதர்களும் பழைய இதிகாசங்களையும், புராணங்களையும் கொண்டு வந்து நிறுத்தி, சாதி அமைப்பிற்கு மேல், கீழ்ச் சாதிமுறைக்கு முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றார்கள். எனவே, அவற்றை ஆய்வு செய்து பார்க்கும் நிலைக்குத் தன்மான இயக்கம் தள்ளப்பட்டது.

‘தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது’ என்றால், வீழ்ந்து வீழ்ந்து சிரிப்போம். சம்பூகன் என்னும் சூத்திரச் சிறுவன் தவம் புரிந்த குற்றத்திற்காக, எங்கோ ஒரு பார்ப்பான் இறந்து விட்டான் என்று சொல்லும் இராமாயணக் கதையைக் கேட்டுச் சிரிக்காமல் இருக்க முடியுமா? சம்பூகன் தலையை வெட்டியதை, நீதி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

இப்படிப்பட்ட கதைகளைப் புனிதமாகக் கொள்ள முடியுமா? என்று மடக்கிக் கேட்டு, பொது மக்களைச் சிந்திக்க வைத்தது தன்மான இயக்கம்.

எவரோ சொன்னார், எப்போதோ சொன்னார், எவ்வளவு காலமாகவோ சொல்லி வருகிறார்கள், எண்ணற்ற மக்கள் கூறுகிறார்கள் என்பதற்காகச் சும்மா இராமல், மேலும், மேலும் ஆய்ந்து உண்மைகளை, தன்மைகளை வெளிப்படுத்துதல் விஞ்ஞானப் போக்கு.

அவ்விஞ்ஞானப் போக்கு எத்தனைச் சாதனைகளுக்குக் காரணமாகியுள்ளது. பொத்தானை அழுத்தியதும், எரியும் மின் விளக்கு என்ன! இறகு பேனாவிற்குப் பதில் ஊற்றுப் பேனா, பால் பாய்ண்ட் என்னும் எழுதும் மைக்குச்சி, புகை வண்டி, கப்பல், வானவூர்தி ஆகிய அத்தனையும், விஞ்ஞானிகளின் புதிய புரட்சிகரமான சிந்தனைகளின் பலன்களாகும்.

‘முன்னே வாழ்ந்த மகான்களுக்கு’ மேதைகளுக்குத் தெரியாதது நமக்குத் தெரியாது, என்று விஞ்ஞானிகள் அஞ்சிக் கிடந்திருந்தால், இத்தனை புதுமைகளைக் கண்டிருக்க மாட்டோம்.

மேற்கூறிய விஞ்ஞான சிந்தனையையும், போக்கையும் பொது மக்களிடையே வளர்க்கப் பெரியார் பாடுபட்டார். புனிதமானது, தொன்மையானது என்பதற்காக எந்த அமைப்பையோ, வாழ்க்கை முறையையோ ஏற்றுக் கொள்ளாதீர்! நன்மையானது, எல்லாருக்கும் நன்மையானது; தேவையானது, காலத்திற்கு ஏற்றது என்னும் அளவு கோல்களால், அளந்து பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள். எத்தனை முறை அடியோடு இறைத்தாலும், மீண்டும் நச்சு நீரே சுரக்கும் கிணற்றைத் தூர்த்து மூடி விடுவதே அறிவுடைமை. அதைப் போல், ஏழ்மைக்கும், கீழ்மைக்கும் ஊற்றாக உள்ள மதக் கிணற்றைத் தூர்த்து மூடி விட வேண்டுமென்று பெரியார் தெளிவு படுத்தினார்.

இந்து சாத்திரங்களும், புராணங்களும், சடங்குகளும் மக்கள் இனத்தின் சுய சிந்தனையை, துணிச்சலான முயற்சியை, தன்னம்பிக்கையை, தோழமை உணர்வை, சமத்துவப் போக்கை, முளையிலே நசுக்கி அழித்து வருவதை, பெரியாரைப் போன்று எவரும் அம்பலப் படுத்தவில்லை.

மூன்றாண்டு காலம், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், பகுத்தறிவுச்சுடரை ஏற்றித் தன்மானப் பொத்தானைப் பொருத்தி விட்ட பெரியார், இயக்கத்தின் சார்பில் மாநாடுகளைக் கூட்டத் தலைப்பட்டார்.

முதல் மாகாண சுயமரியாதை மாநாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் செங்கற்பட்டில் கூட்டப்பட்டது. அது சமுதாயப் புரட்சிக்கு வித்தாக அமைந்தது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாச் சாதியினரும் சேர்ந்து உண்ணும் சமபந்தி உணவு என்பது நடைமுறையில் இல்லை. அதைப் பற்றிச் சிலரே பேசத் துணிந்தவர்கள். அவர்களும், அதைப் பொது நடவடிக்கையாக்க இயலவில்லை. ஈ.வெ.ராவோ அதை, முதல் சுயமரியாதை மாநாட்டின் இன்றியமையாத பகுதியாக்கி விட்டார். முதன் முறையாக, பல சாதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஆறாயிரம் பேர்கள் ஒன்றாக அமர்ந்து, உண்ட புரட்சியைக் கண்டேன். அன்று கல்லூரி மாணவனாகிய நானும் பங்கு கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/03&oldid=1690005" இலிருந்து மீள்விக்கப்பட்டது