பெரியாரும் சமதர்மமும்/17
17. பெரியாரும் அவர் தங்கையும்
சிறைப்பட்டனர்
தந்தை பெரியாரின் அடிப்படை உணர்வு எது? மக்கள் இனப்பற்று.
மக்கள் இனத்திற்கு அரசியல் நிலை உண்டு. அந்நிலை எப்படி இருக்க வேண்டும்? குடிமக்கள் சொன்னபடி, குடி வாழ்வு என்று இருக்க வேண்டும். அன்னிய ஆட்சி அதற்குத் தடை. தன்னாட்சி பெற்ற நாட்டிலும், அரசர்களும், சமயவாதிகளும், செல்வர்களும் விரும்பிய வண்ணம், ஆட்சி நடப்பது, மக்கள் நிலை அடைவதற்குக் கேடான வேர்ப் புழுவாகும்.
மனிதப் பற்றே, பெரியாரை, இந்திய விடுதலைப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. செல்வத்தில் திளைத்த அவரைச் சிறைச்சாலைக்குள் தள்ளியது; தமிழ் மக்களிடையே, விடுதலை உணர்வை வளர்ப்பதில், தன்னேரிலாத வெற்றியைக் காணச் செய்தது.
மக்கள், சமுதாயத்தின் உறுப்பினர்கள்; சமுதாயத்தில் வாழ்பவர்கள். பெரும்பாலான இந்துக்களின் வாழ்க்கை, பிறவி பற்றி இழிவாக்கப் பட்டது; தாழ்த்தப்பட்டது. சாதி ஏற்றத் தாழ்வுகள் உலகில் எங்குமில்லாது, இந்திய நாட்டில் மட்டுமே இருக்கும் தனிப்பெருங் கொடுமையாகும்; ஆழ வேரூன்றி விட்ட தீமையாகும். அதன் அடியைத் தேடிக் கண்டு பிடித்து, வேரோடு கல்லி எறிய வேண்டும். மற்றவர்கள் இறங்க அஞ்சிய இப்பணியில், பெரியாரும், தன்மான இயக்கமும் முழு மூச்சோடு பாடுபடக் கண்டோம். சாதிக் கோட்டைகள் இடியாவிடினும், பல விரிசல்கள் கண்டு விட்ட நிலை, பெரியாரின் தொண்டின் விளைவாகும்.
அரசியல் விடுதலை என்னும் கருவியைப் பெற்று, அதைப் பயன் படுத்தி, சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்கினாலும், மக்கள் இனம் முழு மனித நிலையை எட்டி விடாது.
மக்கள், பொருள்களை ஆக்குபவர்கள்; பொருள்களைத் துய்ப்பவர்கள். ஆக்கும் ஆற்றலுக்கு வாய்ப்பு பெறாதவர்கள். முழு மனிதர்களாக வளர இயலாது. துய்ப்பதற்கு இல்லாதவர்களும், மனிதத் தன்மையை அடைய முடியாது.
சுக வாழ்வு என்னும் சோம்பேறி வாழ்க்கை, மனித இயலுக்கு மாறானது; மனித வளர்ச்சியைக் கெடுப்பது. அதே போல் வறுமை வாழ்வு—பஞ்ச வாழ்வு—மனிதரைக் குறுக்கி விடும். அவர்கள் கோணலின், கோழைத் தனத்தின், கசப்பின், நம்பிக்கையின்மையின் கலப்பாகி விடுவார்கள்.
எனவே, மனிதன் மனிதனாக மதிக்கப்படுவதற்கு, நடத்தப் படுவதற்கு, வளர்வதற்கு, வாழ்வதற்கு, அரசியல் முறை சமுதாய முறை, பொருளியல் முறை ஆகிய மூன்றுமே சீரமைக்கப்பட வேண்டும். இதை உணர்வதே, முழுமையான காட்சியாகும். இக் காட்சியைப் பெற்றிருந்த பெரியார், 17-12-33 நாளைய ‘புரட்சி’ வார இதழில், மூன்று மாற்றங்களும், ஒரே தன்மையன; ஒரே அடிப்படையைக் கொண்டவை என்று தெளிவாக்கினார்; அத்தகைய மாற்றங்களுக்காகப் பாடுபடுவது குற்றமல்ல என்று சுட்டிக் காட்டினார். அதற்கு மேலும் சென்று, மேற்கூறிய மாற்றங்களால், உடனடியாகப் பாதிக்கப் படுவோர் உயர்நிலையில் இருப்போரே; அவர்கள் மனக்குறை படுவது இயற்கை; அக்குறை நீடிக்காது: அரை தலைமுறைக்குள் அகன்று விடும் என்று எழுதி, நம்பிக்கையை ஊட்டினார். பெரியார் அப்படி நம்பிக்கையூட்ட, அன்று காரணங்கள் இருந்தன.
அப்போது, வங்காளத்தில் நடந்த பரபரப்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பு, நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. வழக்கைத் தொடுத்தது, அம்மாநில அரசு. குற்றஞ் சாட்டப்பட்டவர் யார்? அனைத்து இந்தியத் தொழிலாளர் காங்கிரசின் அமைப்புச் செயலரான தோழர் ராஜம்காந்த் முகர்ஜி என்பவர் ஆவார். அவர் ஓர் பேச்சில், எட்டுக் கருத்துக்களை வெளியிட்டாராம். அதில் ஒன்று: ‘நாட்டின் பொருளாதார வாழ்க்கையைத் தொழிலாளரே கட்டுப்படுத்த வேண்டும்’ என்பதாகும். இது அரசிற்கு எரிச்சலையூட்டியது; வழக்குத் தொடுத்து, அடக்க முயன்றது. கல்கத்தா மாஜிஸ்டிரேட் வழக்கை விசாரித்தார். அவர் தமது முடிவில் ‘பேச்சுரிமையானது நாகரீகமும், ஞானமும் வாய்ந்ததெனச் சொல்லிக் கொள்ளும் ராஜாங்கத்தின் எல்லா குடிமக்களுடையவும் பிறப்புரிமையாகும்’ என்று சொல்லி, முகர்ஜியை விடுதலை செய்தார். இதைப் பெரியார் குடியரசில் வெளியிட்டார். இம்முடிவு பேச்சுரிமையைக் காக்கும் என்று நம்பியது ஒரு காரணம் ஆகும்.உயர் நிலையிலிருப்பதால், பாதிக்கப்படுவோர், அரை தலைமுறையில் மனக் குறையை ஓட்டி விட்டு, நன் மக்களாக—சமத்துவ மக்களாக—வாழ ஒப்புவார்களென்று, பெரியார் நம்பக் காரணம் என்ன? இரஷ்ய அக்டோபர்ப் புரட்சியால், அதிர்ச்சியும், ஆத்திரமும் கொண்ட உயர்ந்தோர், முதலில் நான்காண்டுகள் போராடிப் பார்த்தார்கள்; அதில் தோற்றார்கள்; பிறகு புதிய சமதர்ம முறைக்குத் தங்களைப் பக்குவப் படுத்திக் கொண்டார்கள். சோவியத் மக்களின் மனநிலையை நேரில் அறிந்து வந்த பெரியார், நம் மக்களும் மனித நிலையடைய, அவ்வளவு விரைவில் உடன்படுவார்கள்; அவ்வளவு எளிதில் மனப்பக்குவம் பெறுவார்கள் என்று எதிர்பார்த்தார்.
நடந்ததோ வேறு வகையில். முதலில் அரசின் போக்கைக் கவனிப்போம்.
பிரிட்டனில் பேச்சுரிமைக்குப் பெருமதிப்பு கொடுத்து வந்த ஆங்கிலேயர், அதே உரிமையை இந்தியர்களுக்கு வழங்கவில்லை. 1857இல் நடந்த முதல் இந்திய உரிமைப் போர் ஆங்கிலேய ஆட்சியாளரிடை கிலியை ஏற்படுத்தி விட்டது. நிர்வாக நடைமுறைகள் பற்றிக் குறை சொன்னாலும், அதை ஆட்சியைக் கவிழ்க்கும் சதியாகவே கருதி, அஞ்சத் தலைப்பட்டார்கள். பல மாவட்டங்கள் முழுவதுமே, பொதுக்கூட்டங்களைத் தடை செய்து பார்த்தார்கள். அச்சகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து பார்த்தார்கள். ஆள் தூக்கிச் சட்டமியற்றி, அதைப் பயன்படுத்தி அடக்க முயன்றார்கள். ஆட்சியை இழக்க எவருக்கு மனம் வரும்? எல்லாக் கெடுபிடிகளும், அடக்கு முறைகளும் எதிர்ப்பை, கிளர்ச்சியை, போர்க் குரலை வளர்ப்பதையே கண்டது இந்திய ஆங்கிலேய ஆட்சி.
‘மீரத் சதி,’ ஆட்சியின் கிலியைப் பல மடங்கு பெருக்கிற்று. அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலர், பொது உடைமைவாதிகள். பகத் சிங்கின் லாகூர் குண்டு வீச்சு, அடக்கு முறையைப் பெருக்கிற்று. அரசு பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவதைத் தடை செய்தது.
உடனே, நிர்வாகத்தின் நீண்ட கரங்கள் பலரைப் பிடித்தன; தொல்லைப் படுத்தின. 20-12-33 அன்று பிற்பகல் 2 மணிக்குத் தந்தை பெரியாரும், அவரது தங்கை கண்ணம்மாளும் திடீரெனக் கைது செய்யப்பட்டார்கள். பெரியார் அப்போது ‘புரட்சி’யின் ஆசிரியர். திருமதி கண்ணம்மாள் அதை வெளியிடுபவர். எனவே, புரட்சி அலுவலகத்தைக் காவல் துறையினர் சோதனையிட்டார்கள். நாற்பத்தாறு கடிதங்களைக் கைப்பற்றிக் கொண்டு போனார்கள். இருவர் பேரிலும் சாட்டப்பட்ட குற்றங்கள் எவை! பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியது; இரண்டாவது அரசு வெறுப்பு ஊட்டியது.
இக்காலத்தில் நிர்வாகமும், நீதியும் இணைந்திருந்தன. மாவட்ட நிர்வாகத்திற்குப் பொறுப்பாளியான மாவட்ட ஆட்சியாளரே, மாவட்டக் குற்றவியல் நடுவராகவும் செயல் பட்டார்.
ஈ. வெ. ராமசாமி, கண்ணம்மாள் இவர்களின் வழக்கு கோவை மாவட்டக் குற்றவியல் நடுவராகிய ஜி. டபில்யூ. வெல்ஸ் முன் வந்தது.
வழக்கம் போல், ஈ.வெ. ரா. எதிர் வழக்காடாமல், வழக்கு மன்றத்தில் தன்னிலை விளக்க அறிக்கையைப் படைத்தார். அதைப் படிப்போம். அது வருமாறு:
(1) என் பேரில் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.
(2) வழக்குக்கு அஸ்திவாரமான ‘குடியரசு’ தலையங்கத்தை இப்போது பல தரம் படித்துப் பார்த்தேன், அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
(3) அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது, வாக்கியங்களுக்காவது ராஜத் துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால், இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப் பற்றி, ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ, யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப் பட்டதாகும்.
(4) என்ன காரணத்தைக் கொண்டு என் மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்
காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னும் முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. கட்டுரையின் விஷயத்திலாவது, சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.
(5) முக்கியமாக, அதில் சொல்லப்பட்ட விஷயமெல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்குக் கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவதில்லையென்றும், இப்படிப்பட்ட முறையால், லாபம் பெறும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும், உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு, ஏமாந்து போகாமல் வரப் போகும் தேர்தல்களில், ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டுமென்று ஏழைப் பொது மக்களுக்கு எடுத்துக் காட்டியதே ஆகும்.
(6) நான் 7, 8 ஆண்டு காலமாய்ச் சுயமரியாதை இயக்கச் சமதர்ம பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது, அப்பிரச்சாரத்தின் முக்கிய தத்துவமாகும்.
(7) நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை, நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும், அவ்வுற்பத்திக்காகச் செய்யப்படவேண்டிய தொழில்களில், நாட்டு மக்கள் எல்லாரும் சக்திக்குத் தகுந்தபடி பாடுபட வேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.
(8) அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ, பிரச்சாரத்திலோ, அதற்காக நடைபெறும் குடியரசு பத்திரிகையிலோ, பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது, அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பது எனக்கு இஷ்டமான காரியம் அல்ல.
(9) அதற்கு அத்தாட்சி வேண்டுமானால், பல ஆண்டுகளாக இரகசிய போலீஸ் இலாக்கா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்து வைத்திருக்கும் அறிக்கைகளையும், சுமார் பத்தாண்டைய ‘குடிஅரசு’ பத்திரிகையின் கட்டுரைகளையும் சர்க்கார் கவனித்து வந்தும், என் மேல் இத்தகைய வழக்கை இதற்கு முன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.
(10) அரசாங்கமானது, முதலாளித் தன்மை கொண்டதாயிருப்பதால், அது இத்தகைய சமதர்ம பிரசாரம் செய்யும்
என்னையும் எப்படியாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்கு பெற்று போக போக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்து வரும் பணக்காரர்களும், மற்றும் மதம், சாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே, வாழ்க்கை நடத்துகின்றவர்களும், இப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு நேர்முகமாகவும் உதவி செய்து தீர வேண்டியவர்களாய் இருப்பதால், அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.
(11) பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கையென்றும் கருதும்படியாகச் செய்து, நிலை நிறுத்தப்பட்டு, நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாயிருந்தாலும், அவற்றை மாற்றி அமைத்தாலொழிய, மக்கள் வாழ்க்கையில் உள்ள அநேக காரியங்களும், குறைகளும் நிவர்த்தியாகி, சௌக்கியமாகவும், திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.
(12)இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும், அதற்காகப் பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவை இல்லாமல், பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது.
(13) ஏதாவதொரு கொள்கைக்குப் பிரச்சாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள், அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய், கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விடக் கூடாது. இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டுமென்று கருதி, இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால், அவர்கள் எப்படியாவது எனது விஷயத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவை இருப்பதாகக் கற்பனை செய்து தீர வேண்டியவர்கள் ஆகி விட்டார்கள். அந்தப்படி செய்யப்படும். கற்பனைகளால், நான் தண்டிக்கப்பட்டாலும், பொதுவாக என் மீது நம்பிக்கையும், நல்லெண்ணமும் உடையவர்களும், சிறப்பாகக் கூட்டு வேலைக்காரத் தோழர்களும், தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடுமாதலால், அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து,
உண்மையை விளக்கிட வேண்டுமென்றே, இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.
(14) இதனால், பொதுமக்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு, அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து, கிளர்சிக்குப் பலமேற்படக் கூடுமாதலால், என்மீது சுமத்தப்பட்ட இவ்வழக்கில், இந்த ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்து விட்டு, எதிர் வழக்காடாமல், இப்போது கிடைக்கப் போகும் தண்டனையை, மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
(15) இந்நிலையில், சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி, அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று நியாயத்தையும், சட்டத்தையும், லட்சியம் செய்து, வழக்கை தள்ளி விட்டாலும் சரி, இப்படிப்பட்ட அடக்கு முறையை வரவேற்குமாறு, எனது தோழர்களுக்கு வழி காட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.
முடிவு என்ன?
பெரியாருக்கு ஆறு திங்கள் வெறுங்காவல்; அதோடு ரூபாய் 300 அபராதம். கண்ணம்மாளுக்கு மூன்று திங்கள் வெறுங்காவல்; 300 ரூபாய் அபராதம்.
பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியதற்காகக் கிடைத்த தண்டனைகள் இவை.