பெரியாரும் சமதர்மமும்/16

16. புரட்சி ஏட்டின் தலையங்கம்

ஈரோட்டில், சுயமரியாதை இயக்கச் செயல் வீரர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டம் பற்றி, தோழர் எஸ்.இராமநாதனுக்கும், தோழர் சிங்காரவேலருக்கும் இடையே எழுந்த வாதம், கருத்து மாறுபாடு போல் முதலில் தோன்றியது. உண்மையில் அது கருத்து மாறுபாடு அல்ல என்பது பின்னர் புலப்பட்டது; நடைமுறை பற்றிய மாற்றுப் போக்கு மட்டுமே என்பது சில தினங்களில் வெளிப்பட்டது.

இதற்கிடையில், பெரியாரின் வார் இதழான ‘புரட்சி’ சமதர்மக் கருத்தைப் பரப்புவதில், முனைப்பாக இயங்கியது. பற்பல பகுதிகளில் இருந்தும், சமதர்மத்திற்கு ஆதரவான கட்டுரைகள் வந்தன; வெளியாயின. கொழும்பிலிருந்து, தோழர் அய்.எம். இப்ராஹீம் என்னும் அன்பரின் கட்டுரையில்,

‘சர்வ மதங்களும், சர்வ முதலாளித்துவமும் ஒழிந்து, பகுத்தறிவு பரவி, சமதர்மம் நிலவினாலன்றி, மக்களுக்கு விமோசனம் இல்லை’ என்று திட்டவட்டமாக எழுதியிருந்தார். இப்படிப் பல தெளிவான, தீவிர சிந்தனையாளருக்கு ‘புரட்சி’ இடமளித்தது. அதோடு நின்றதா? இல்லை.

17-12-33 நாளைய ‘புரட்சி’யின் தலையங்கத்தைப் பார்ப்போம். அதன் ஒரு பகுதி வருமாறு:

“நாமும், நமது பகுத்தறிவைக் கொண்டு யோசிப்போம்.

ஒரு தனிப்பட்ட மனிதன், சமூக வாழ்வில் எந்தக் காரணத்தாலோ, உயர்ந்த சாதியானாகப் பாவிக்கும் யோக்கியதையை அடைந்து வருவதைச் சில தனி உரிமைகளை அடைந்து வருவதை, இன்றைய தினம் நாம் ஆட்சேபித்து, அப்படிப்பட்ட உரிமை, யாவருக்கும் இருக்க வேண்டும் என்றும், அது எல்லோருக்கும் சரி சமத்துவமாக இருக்க வேண்டுமென்றும் கூறுகிறோம். இன்றைக்குச் சில சட்ட இடையூறுகள் இருந்தாலும், அவைகளையும் மாற்றி, புதிய சட்டங்களையும், புதிய பழக்கங்களையும் செய்ய வேண்டுமென்கிறோம். “இப்படிச் சொல்வது, அவ்வுயர் சாதிக்காரனுக்கு துவேஷமாகவோ அல்லது வேறு எந்த தப்பிதமாகவோ இருக்கின்றது என்று கருதி, நாம் குற்றவாளியாக்கப் படுகிறோமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

“அது போலவே, ஒரு தனிப்பட்ட மனிதன் எந்தக் காரணத்தினாலோ, ஒரு நாட்டை, இலட்சக்கணக்கான உயிர்களையும், ரூபாய்களையும் பறி கொடுத்து, ஜெயித்து, அரசனாகி, ஏக சக்கராதிபதியாகி. அந்நாட்டின் மீது ஆதிக்கம் பெற்று, வெகு காலமாக ஆட்சி செலுத்தி, பெருமையடைந்து வருவதை இன்று நாம் ஆட்சேபித்து,

‘ஒரு நாட்டை ஆளும் பொறுப்பு, அந்த நாட்டு ஜனங்களாகிய, எங்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டுமேயொழிய, சண்டையிட்டு ஜெயித்து விட்டதனாலேயே, ஒரு தனிப்பட்ட மனிதன் அந்நாட்டைத் தனக்குச் சொந்தமென்று ஆளுவது, அதிகாரம் செலுத்துவது, எங்களுக்கு இஷ்டமில்லை. ஆதலால், அதை மாற்றக் கிளர்ச்சி செய்வோம்; புரட்சி செய்வோம்; அதற்கேற்ற சட்டங்கள் செய்யவும், முயற்சி செய்வோம். இதை யார் தடுத்தாலும், அத்தடுப்புக்குக் கட்டுப்படமாட்டோம்’ என்று சொல்லுகின்றோம்.

“இப்படிச் சொல்வது இன்று எந்தச் சட்டத்திற்கு உட்பட்டது? அல்லது எந்தச் சட்டப்படி குற்றமாகப் பாவிக்கப் படுகிறது? இதை எந்த அரசாங்கம், துவேஷமாகக் கொள்ளுகிறது? ஏதாவது ஒரு அரசாங்கம் துவேஷமாகக் கொள்ளுகிறது என்றாலும், அதற்காக எல்லோரும் பயந்து, அக்கிளர்ச்சியை விட்டு விடுகிறோமா?” என்று ‘புரட்சி’ கேட்டது.

‘மன்னர் ஆட்சியை ஏற்க மாட்டோம்; மக்கள் ஆட்சியே தேவை’ என்னும் அரசியல் உரிமை உணர்வு எவ்வளவு முறையானதோ,

‘எல்லோரும் சரிநிகர் சமம், என்னும் சமுதாய உணர்வு இயற்கையானதும், முறையானதும் ஆக இருக்கிறதோ, அதே தன்மையானதே, சொத்து சமுதாய உடைமையாக வேண்டுமென்று கோருவதும்” என்று ‘புரட்சி’ வலியுறுத்திற்று. அதையும் காண்போம்.

“ஒரு தனி மனிதன் எந்தக் காரணத்தினாலேயோ, செல்வங்கள் தன் கைக்கு வரும்படியான முறைகள் செய்து, நாட்டு மக்கள் பாடுபட்டு உழைக்கும் பயன்கள், தனக்கு வந்து சேரும்படியான ஏற்பாடு செய்து, அதன் மூலம், ஒருவன் பொருளும், பூமியும் சேர்த்துப் பணக்காரனாகி விட்டால், அந்தச் செல்வத்தைப் பொது ஜனங்கள் பார்த்து, ‘அது எங்களுடைய செல்வம்; நாங்கள் பாடுபட்டதால், நீ சேர்த்துக் கொள்ள முடிந்தது; ஆதலால், எங்கள் எல்லோருக்கும் அதில் அனுபவமும், ஆதிக்கமும் இருக்க வேண்டுமென்று சொன்னால், அல்லது அதற்கேற்ற சட்டங்கள் செய்ய வேண்டுமெ’ன்று சொன்னால், இது எந்தச் சட்டப்படி குற்றமாகும்? இதை யார் எப்படி ஆட்சேபிக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

“உலக வாழ்க்கையின் எந்தக் கொள்கையையும், எந்தத் திட்டங்களையும், எந்த அனுபவங்களையும், புரட்டி அல்லது மாற்றி அமைத்துக் கொள்ளவும், அனுபவத்தில் கொண்டு வரவும், மனித சமூகத்திற்கு உரிமை உண்டு என்பதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆளும் மனிதனுக்கும், ஆளப்படும் மக்களுக்கும் உள்ள சம்பந்தம் எப்படியோ, அப்படித்தான், செல்வவான்களுக்கும், பாட்டாளிகளான ஏழை மக்களுக்கும் உள்ள சம்பந்தமாகும்.

“ஒரு கொடுங்கோல் அரசன், எப்படி தனது ஆட்சிக்குப் பீரங்கியையும், துப்பாக்கியையும், வெடிகுண்டையும், பட்டாளத்தையும் காவலாக வைத்திருக்கிறானோ, அதைப் போல்தான் ஒரு செல்வவான் தனது செல்வத்துக்குக் கச்சேரியையும் (வழக்கு மன்றத்தையும்), சிறையையும் போலீசையும் ஆதரவாக வைத்திருக்கிறான்.

“ஒரு கொடுங்கோல் அரசை ஒழிப்பதற்கு, எப்படி நாம் பீரங்கியையும், துப்பாக்கியையும், வெடிகுண்டையும் கையாளுகின்ற மக்களைக் கூப்பிட்டு, ‘தோழர்களே! அரசர்கள் சொற்படி கேளாதீர்கள்; இனி, இதில் சம்பந்தப்படாதீர்கள்; விலகி எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள், ஆட்சியில் நம் எல்லோருக்கும் பொறுப்பும், பங்கும் பெறலாம்’ என்று சொல்ல வேண்டுமென்கின்றோமோ, அதே போல்தான், தனிப்பட்ட மனிதனின் செல்வத் தன்மையை ஒழிப்பதற்கும், அதைப் பொதுவாக்குவதற்கும், அதே போன்ற வழிகளைப் பின்பற்ற வேண்டியதாகும்’ என்று தலையங்கம் தீட்டினார். பெரியார் அதோடு நிற்கவில்லை. மேலும், வழிவகை சொன்னார். அதையும் பார்ப்போம்.

‘உயர்ந்த சாதி’ என்னும் பேரால், தனிப்பட்ட உரிமைகளை அடைந்து வருவதையும் ஒழிக்க, அப்படிப்பட்ட வழிகளைப் பின்பற்ற வேண்டியதாகும். இவைகளை எல்லாம், எந்தக் காரணத்தை முன்னிட்டும் குற்றம் என்றோ, சட்ட விரோதமென்றோ சொல்லி விட முடியாது.

“ஆனால், இப்படிப்பட்ட காரியங்களால், உயர் நிலையில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். அதனால், எதிர்ப்பு ஏற்படலாம். இவையும், இயற்கையேயாகும். அப்படிப்பட்ட அதிருப்திகள் எவையும் நீடித்து நிற்காது. அரை தலைமுறைக்குள் அவ்வதிருப்திகள் மறைந்து விடும். பிறகு, உலக சுக போகமே—வாழ்க்கை முறையே இப்படித்தான் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டு விடும். பிறகு, அதிருப்தியோ, எதிர்ப்போ, ஆன காரியங்களுக்கு இடமே இருக்காது. ஆதலால், இதற்காக எவரும் பயப்பட வேண்டியதில்லை” இப்படி நம்பிக்கையை வளர்க்க முயன்றது, ‘புரட்சி’ வார இதழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/16&oldid=1690662" இலிருந்து மீள்விக்கப்பட்டது