பெரியாரும் சமதர்மமும்/27

பெரியாரும் சமதர்மமும்
by டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு
இந்திய விடுதலை; பெரியாரின் கணிப்பு
562910பெரியாரும் சமதர்மமும் — இந்திய விடுதலை; பெரியாரின் கணிப்புடாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு

27. இந்திய விடுதலை:
பெரியாரின் கணிப்பு

27-8-1944-இல் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் தலைமையில் நடந்த சேலம் மாநாட்டில், அரசோடு ஒத்துழைப்பதில்லை என்று முடிவு எடுக்கப் பட்டதை முன்னர் கண்டோம். பட்டங்களையும், கௌரவப் பொறுப்புகளையும், விட்டு விட வேண்டுமென்பது அதன் கூறாக அமைந்தது. ‘இது பற்றிப் போதிய அறிவிப்பு இல்லை’ என்று சொல்லியவர்களுக்குப் போதிய காலம் கொடுப்பதற்காக, பத்தாயிரம் உறுப்பினர்களைச் சேர்த்த பின், தனி மாநாடு கூட்டி, மேற்படி முடிவுகளை உறுதிப்படுத்த, மாநாடு, ஒப்புக் கொண்டது.

அதன்படி உறுப்பினர்கள் சேர்ப்பதில், முனைப்பு காட்டப் பட்டது; எதிர்பார்த்த எண்ணிக்கையினர்களைச் சேர்க்க முடிந்தது. அதன் பிறகு, தனி மாநாடு கூட்டப் பட்டது. அது திராவிடர் கழகத்தின் பதினேழாவது மாநாடு ஆகும். அது எங்கே நடந்தது? திருச்சி, புத்தூர் திடலில் நடந்தது. பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையேற்றார். அம்மாநாட்டில், ஏற்றுக் கொண்ட ‘ஒத்துழையாமை’ முடிவு உறுதிப் படுத்தப் பட்டது.

திருச்சி மாநாட்டில், திராவிடர் கழகத்தின் இலட்சியமாக, பின் வருமாறு முடிவு செய்யப்பட்டது.

திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில் துறை, வாணிபம் ஆகியவற்றில் பூர்ண சுதந்தரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்.

அப்படி திராவிட நாடு ஏற்பட்டால், அதில் உள்ள மக்கள் எப்படி நடத்தப்படுவார்கள்? இக்கேள்விக்குப் பதிலாக, இரண்டாவது முடிவு அமைந்தது. அதைக் காண்போம்.

‘திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் சாதி, வகுப்பு, அவை சம்மந்தமான உயர்வு தாழ்வு, இல்லாமல், சமுதாயத்திலும், சம உரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும்.’

இப்படியென்றால் பொருள் என்ன? பார்ப்பனருக்கும், சமஉரிமை இருக்கும்; சம வாய்ப்பு இருக்கும்; வேலையிருக்கும்; வாழ்வு இருக்கும்; அவ்வாழ்வு சோம்பேறி வாழ்வாக, பிறவி உயர்வாக இராது என்று பொருள்.

‘எல்லோர்க்கும் வாழ்வு’ என்று முரசு கொட்டிய பிறகும், பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தை எதிர்ப்பதை விடவில்லை. அந்த எதிர்ப்பு, நாட்டுப் பற்றை அடிப்படையாகக் கொண்டது அல்ல; தங்களுக்குள்ள பிறவி உயர்வும், அதனால் தொடரும் தனி வாய்ப்புகளும் போய் விடுமோ, என்ற அச்சத்தால் எழுந்தது ஆகும்.

நம் நாட்டைப் பொறுத்த மட்டில், திராவிடநாடு பிரிவினை கோரிக்கையைக் காட்டி அழுது, தமிழ்நாட்டுப் பார்ப்பனப் படிப்பாளிகள், முன்னிலும் அதிகமாக இந்திய அரசிலும், பிற மாநில அரசுகளிலும், இந்திய முதலாளிகளிடமும், வேலைகளைப் பெற முன் வந்தார்கள். தமிழ்நாட்டுப் பார்ப்பனத் தொழில் அதிபர்கள், பெரியாரின் கிளர்ச்சிகளைத் தங்களுக்கு உதவியாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.

இயற்கையாக, தமிழ்நாட்டு முதலாளிகளுக்கு எவ்வளவு தொழில் உரிமம் கிடைக்குமோ, அதை விட, அதிகமாகவே உரிமங்களைப் பெற்றார்கள். யானை உண்ணும் உணவில் சிதறியவற்றை, எறும்புகள் பொறுக்கித் தின்பது போல, பார்ப்பனரல்லாத முதலாளிகள் சிலரும், பெருந் தொழில் நடத்த வாய்ப்பு பெற்றார்கள்.

தமிழ்ப் பொதுமக்களைப் பொறுத்த மட்டில், ‘பழைய கறுப்பனே’ என்னும் நிலை நீடிக்கிறது. எதனால்? எல்லோர்க்கும் வேலையும், எல்லா வேலைகளுக்கும் வாழ்க்கைப் போதுமான ஊதியமும் கொடுக்கக் கூடியது சமதர்ம பொருளியல் முறையே.

வேலை செய்யும் வயதினர் பலராகவும், வேலைகள், சிலவாகவும் உள்ள வரையில், செல்வாக்கோ, சாதகமோ உள்ள சிலர், வேலைகளைத் தட்டிக் கொண்டு போவதும், மற்றவர் வேலையில்லாது அலைவதும், தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இந்திய மக்களிடையிலும் சரி, தமிழ்நாட்டு மக்களிடமும் சரி, சென்ற முப்பதாண்டுகளில் சமதர்ம உணர்வு பரவியதை விட, நடுத்தர சுரண்டல் உணர்வு, நச்சுக் காற்று போல பரவி விட்டது.

சென்னை மாகாணம் முழுவதையும் திராவிட நாடாகப் பிரித்து, முழு ஆட்சி உரிமை உடைய நாடாக்க எண்ணிய திராவிடர் கழகம், தமிழ்நாட்டிற்கு அப்பால், அன்று பரவவில்லை.

கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில், திராவிடர் கழகத்தின் கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றி, கொள்கைப் பரப்பு முயற்சி அரிதாகவே இருந்தது. எனவே அப்பகுதிகளில் இருந்த, சமய நம்பிக்கையற்ற, சாதி உணர்வு அற்ற, சமதர்மக் கருத்துடையவர்கள் கூட, திராவிடர் கழகத்தோடு. பின்னிப் பிணைந்து, செயல்பட வாய்ப்புகள் வளரவில்லை.

இக்குறைபாட்டை கழகம் உணராமல் இல்லை. ‘பிற தென்னகப் பகுதிகளில், கழகக் கொள்கைகளைப் பரப்ப அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்று திருச்சி மாநாட்டின் 22வது முடிவு கட்டளையிட்டது. ஆனால், அது நடைபெறாமல் காலங் கடந்து விட்டது.

திருச்சி மாநாட்டிற்கு முன்பே, இரண்டாம் உலகப் போர் ஓய்ந்து விட்டது; வென்ற பிரிட்டானியரும் நலிந்து போய் விட்டனர். பிரிட்டானியப் பேரரசை அப்படியே கட்டிக் காக்க இயலாது என்பதை நம்மை விடத் தெளிவாகப் பிரிட்டானியர் புரிந்து கொண்டார்கள். கப்பற் படையைச் சேர்ந்த இந்தியர்கள், புரட்சியில் குதித்தார்கள். பிரிட்டானியக் கொடியை இறக்கி விட்டு, இந்திய காங்கிரசுக் கொடி, இந்திய முஸ்லீம் லீக் கொடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஆகியவற்றைப் பறக்க விட்டார்கள். நிலைமை முற்றி விட்டதை ஆங்கிலேயர் உணர்ந்தார்கள்.

இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை வழங்குவதைத் தவிர, வேறு வழியில்லை என்பது புலனாயிற்று. அப்படியே விடுதலை வழங்கி விட்டு, வெளியேறி விட, பிரிட்டானியர் ஏற்பாடு செய்தார்கள்; இந்திய அரசியல் கட்சிகள் சிலவற்றோடு உடன்பாட்டிற்கு வர முயன்றார்கள். கடைசியில், முழு ஆட்சி உரிமையுடைய இடைக்கால இந்திய அரசு உருவாயிற்று: முழு விடுதலைக்கு நாளும் குறிப்பிடப்பட்டது.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுக்க இசைந்த பிரிட்டானியர், திராவிட நாட்டைப் பிரிக்காமலே, இந்திய ஆட்சியிடம் ஒப்படைக்க முடிவு எடுத்தனர்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் நாள், இந்தியா முழு விடுதலை பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பெரியார் ஈ. வெ. ராமசாமி, ‘வர இருப்பது விடுதலை அல்ல; கெடுதலையே’ என்று அறிவித்தார்; ‘அதை மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடுவதற்கு இல்லை; துக்க நாளாகவே கொண்டாட வேண்டும்’ என்றார். ஏன் அப்படிச் சொன்னார்?

தன்னாட்சி என்ற பெயரால், வர இருப்பது, ஆள் மாற்றமேயொழிய ஆட்சி முறை மாற்றமல்ல என்பது பெரியாரின் கணிப்பு

‘வெள்ளைத் துரைமார் ஆதிக்கஞ் செலுத்திய இடங்களைக் கறுப்புத் துரைமார் பிடித்துக் கொண்டு, ஆதிக்கஞ் செலுத்துவார்கள். பிற நாட்டார் சுரண்டியதற்குப் பதில் நம் நாட்டவர் சுரண்டுவர்’ என்று பெரியார் சுட்டிக் காட்டினார்.

இந்திய பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவராகிய, தோழர் ம. சிங்காரவேலர், வர இருக்கும் ஆட்சி உரிமை பற்றி என்ன சொன்னார்?

“இது பழைய முதலாளி திட்டமே. ஆதிக்கமுடையோரும், பொருள் பெற்றோரும், அதிகாரிகளும் கூடி நடத்தும் திட்டம் இதுவே. பொதுத் தேர்தல் என்று பெயர் கொடுத்து விட்டு, பலவித சூழ்ச்சிகளால், ஆதிக்கமுடையோர் தங்களையே தேர்தல் செய்து கொண்டு, ஆட்சி புரிந்து வரும் திட்டமாகும்” என்று மதிப்பிட்டார்.

ஆனால், செய்தி நிறுவனங்களும், கருத்து மேடைகளும் பெரியாருக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டன.

ஏதுமறியாத பொதுமக்களோ, மெய்யாகவே விடிவு காலம் வரப் போகிறது, என்று, எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார்கள்.

தலைமுறைகளின் இடைவெளி, தென்பட்டது அவ்வேளை. அறிஞர் அண்ணா, விடுதலை நாளைக் கொண்டாடும்படி அறிக்கையை விட்டார். அது இயக்கத்தவர்களிடையே முதல் அதிர்ச்சியையும், விரிசலையும் உண்டாக்கியது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அழியாமல் தொடரும் சாதி, ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் அதற்கான முன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, எதிர்ப்பட்ட ஊரார் பகைக்கும், தூற்றலுக்கும் ஈடு கொடுத்து வந்த சமத்துவ வாதிகள், சமதர்மமே எல்லோரையும் வாழ்விக்கும் என்று புரிந்து கொண்டு, அக்கொள்கையைப் பரப்பி, நிலமுடையோர், பணமுடையோர், போன்றவர்களின் பகையைத் தேடிக் கொண்ட, முற்போக்குச் சிந்தனையாளர் தாங்கள் பட்ட பாட்டினை நொடியில் பாழாக்கி விட்டார்கள்.

சூடேறிய விளக்குக் கூட்டின் மேல் இரு துளி தண்ணீர் பட்டால், கண்ணாடி சிதறிப் போவது போல், முற்போக்குச் சிந்தனையில் சூடேறிய காளைகள் சிதறிப் போனார்கள்.

சமத்துவத்திற்காக முன்னேறிக் கொண்டிருந்த பேரணி, ‘ஆகஸ்ட் 15, விடுதலை நாளா? கெடுதலை நாளா?’ என்ற வெட்டிப் பேச்சின் பக்கம் திரும்பி விட்டது.

சமதர்மத்திற்காகக் களம் நோக்கி நடந்த தியாகப் படை, அந்த ஒரு நாள் கூத்தைப் பற்றியே, பேசி, எழுதி, வீணாகி விட்டது.

‘அரசியல் உரிமை’ என்ற அக்கருவியைக் கொண்டு, பொருளியல் பொதுவுடைமையை வளர்க்கவும், சமுதாய ஒரு நிலையைப் பயிரிடவும், பொதுமக்களைத் திரட்ட வேண்டியவர்கள், ‘பெரியார் சொன்னது சரியா? அண்ணா சொன்னது சரியா?’ என்று வாதிட்டு ஏமாந்தார்கள்.

சென்ற முப்பத்து நான்கு ஆண்டுகளின் வரலாறு எதை மெய்ப்பித்தது?

பெரியார் கணிப்பு சரியென்பதை மெய்ப்பித்தது. சிங்காரவேலர் கூறியதைச் சரியென்று காட்டியது. வெள்ளையன் வெளியேறிய போது நடந்தது, ஆள் மாற்றம் மட்டுமே, என்பது உறுதியாயிற்று. ‘விடுதலை பெற்ற இந்தியாவில், பொதுமக்கள் நிலை, அன்னியர் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் மோசமாகி விடும்’ என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்று எல்லோரும் உணர்கிறார்கள்.

மதிப்பீடு சரியாக இருப்பதாலேயே, மருத்துவம் சரியாகி விடுவதில்லை. நம் மக்கள் பெரியாரின் மருந்தைப் போதிய அளவில் ஏற்கவில்லை. நான்கு நாட்களுக்கு ஒரு முறை, மருந்தை மாற்றிக் கொள்ளும் என்புருக்கி நோயாளியின் நிலைக்கு நம் சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது.

இந்தியா விடுதலை பெற்று, இமயத்திலும், மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சி ஏற்பட்டது.

சென்னை மாகாணத்திலும், காங்கிரசு ஆட்சி வந்தது. கட்டாய இந்திப் பாடமும் திரும்பி வந்தது.

இந்திய அரசியல் மேல்மட்ட வற்புறுத்தலின்படி, சென்னை மாகாணத்தில், ஓமந்தூர் ராமசாமியை முதல் அமைச்சராகவும், கோவை, தி. ச. அவினாசிலிங்கனாரை கல்வி அமைச்சராகவும் கொண்டிருந்த காங்கிரசு ஆட்சி, பழையபடி, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிற்று. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் இந்தி படித்து, தேர்ச்சி பெற வேண்டுமென்று ஆணையிட்டது.

அப்போதும், இந்தியை எதிர்ப்பதிலிருந்து, திராவிடர் கழகத்தை விடுவித்து விட்டுத் தாங்கள் பொறுப்பேற்கக் கூடிய பெரியவர்களோ, மக்கள் அமைப்புகளோ, இல்லை.

தமிழ் மக்கள் சாதாரண படிப்பு கூட பெற முடியாதபடி செய்யும், கட்டாய இந்திப் பாட முறையை ஒழிக்கும் பணிக்குத் திராவிடர் கழகம் திரும்ப நேரிட்டது. இன்றியமையாத இப்போரில் ஏற்பட்ட அக்கறை, சமதர்மப் பணியை ஓரளவு பின்னே தள்ளி விட்டது என்றால், மிகையல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/27&oldid=1691010" இலிருந்து மீள்விக்கப்பட்டது