பெரியாரும் சமதர்மமும்/28

28. இடைக்கால இந்திய அரசும்
கம்யூனிஸ்டுகள் மீது
அடக்குமுறையும்

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் சட்டப்படி இந்திய நாடு விடுதலையான நாள். ஏறத்தாழ, அதற்கு ஓராண்டு முன்னதாகவே, இந்தியாவை ஆளும் பொறுப்பு இந்தியர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. பண்டித சவகர்லால் நேரு பிரதமராயிருந்து ஆட்சி செய்தார்.

அவ்வேளை, நாட்டின் பற்பல பகுதிகளில் கோரிக்கை ஒலிகள் கேட்டன; ஊர்வலங்கள், பேரணிகள் நடந்தன. ஏன் அப்படி?

இந்தியர்களில் பெரும்பாலோர் பாட்டாளிகள்; ஏழைகள்; வாய்ப்புகளை இழந்து நலிந்தவர்கள். அன்னியர்கள் ஆண்ட காலத்தில், அவர்கள் வெளியேறினால், தொல்லைகள் அனைத்தும் தொலைந்து விடுமென்று பலரும் பேசினர்; எழுதினர். ‘விடியல்’ எளிதாக வந்து விடும் என்று அப்பாவி மக்கள் நம்பினார்கள்.

காலையில் வெளியே சென்ற தந்தை, மாலையில் வீட்டிற்குள் நுழைந்ததும், நாலு பிள்ளைகளும் ஓடி வந்து, சுற்றி நின்று ஒரே நேரத்தில், ஆளுக்கொரு முறையீடு செய்வதுண்டு. அதைப் போன்ற சூழல் இந்தியர் ஆட்சிக்கு ஏற்பட்டது.

சமதர்மவாதியாகக் கருதப்பட்ட நம் நேருதானே ஆட்சி செய்கிறார். இவரிடம் முறையிடாமல், எவரிடம் முறையிடுவது? இப்போது முறையிடாமல், எப்போது முறையிடுவது? இப்படிக் கருதினார்கள், நலிந்தோர் அனைவரும்.

மூலைக்கு மூலை குறைபாடுகள்; அனைத்தையும் அடுக்கினார்கள், வேலையில் இருந்த தொழிலாளிகள். அலுவலர்களோ, சோவியத் நாட்டை ஒப்பிட்டு, பிற வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டு, அங்குள்ள வாய்ப்புகளும், வசதிகளும் கோரினார்கள். அவர்களுக்கு அமைப்புகள் உண்டு. அந்த அமைப்புகளின் முழக்கமே, எல்லாமாகத் தோன்றியது. அமைப்புகளின் கீழ் வராத கோடிக்கணக்கான உதிரித் தொழிலாளர்கள் குமுறல் காதுகளில் எட்டவில்லை. வேலையற்றுத் திண்டாடும் பட்டினிப் பட்டாளமோ, குரல் எழுப்பவும் வலிவின்றி, வதைப்பட்டது.

நாட்டின் சிறுபான்மையாளர்களாகிய அமைப்புகளுக்குட்பட்ட பாட்டாளிகளின் கோரிக்கைகளே, புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எரிச்சல் ஊட்டின; தொல்லை கொடுப்பதற்காகவே எழுப்பப்படுவனவாகத் தோன்றின.

பதவிகளைப் பெறுவது அருமை; எதற்கும் பயன்படுத்த முடியாத, உப்பு சப்பு இல்லாத பதவிகளைப் பெற்று விட்டால் கூட, அவற்றை உதறி விட்டுப் போக துணிச்சல் வருவது, அதனினும் அருமை; அந்நிலையில் நண்பர்களையும், சதிகாரர்களாக நினைப்பார்கள். ஆட்சியில் உட்கார்ந்து விட்டவர்கள், தங்கள் நாற்காலிகள் ஆட்டங் காண்பதாக நினைத்து விட்டால், ஒரே மருந்தையே கையாள்வார்கள். அது என்ன மருந்து? அடக்கு முறை மருந்து.

1946இல் இந்தியாவில், இடைக்கால இந்திய ஆட்சி ஏற்பட்டதுமே, அடக்குமுறை வெடித்தது. வழக்கம் போல, பொது அமைதிக்குக் கேடு விளையாமல் காக்கும் பொருட்டு என்ற சாக்கில், இந்திய மாநிலங்களில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. அவை பின்னர் சட்ட மன்றங்களால், சட்டமாக்கப்பட்டன.

‘அவசரச் சட்டங்கள் இன்றைய அடக்கு முறைக் கருவிகள்’ என்று ஆத்திரப்படுபவர்கள், இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும். எதை? இந்தியாவின் தன்னாட்சி உரிமை ‘அவசரச் சட்டம்’ என்னும் அடக்கு முறையோடு பிறந்தது. அன்று முதல், அடுத்தடுத்து ஒவ்வோர் வேடத்தில் அடக்கு முறை அரங்கேறி ஆட்டம் போடுகிறது.

இந்தியச் சிந்தனையாளர்கள், பொதுத் தொண்டர்கள் ஒவ்வோர் முறையும், தங்களுக்குள் இருக்கும் அற்ப கருத்து வேறுபாடுகளைப் பலமடங்கு பெரிதாக்கிக் காட்டிக் கொண்டு, ஒரு பிரிவினர் மாறி, மறுபிரிவினர் அடக்குமுறைக்குத் தோள் கொடுக்கிறார்கள்.

இடைக்கால இந்திய அரசு ஏற்பட்டதும், பற்பல தொழிற்சங்கங்கள் தங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டதாகக் கருதிக் கொண்டு, தாங்கள் படும் துன்பங்களை விரித்துரைத்தார்கள். அதைப் போக்கக் கூடிய கோரிக்கைகளை முன் வைத்தார்கள்; சிற்சில இடங்களில், வேலை நிறுத்தஞ் செய்யப் போவதாக அறிவிப்புக் கொடுத்தார்கள்.

அந்நிலையில் மெய்யான மக்கள் ஆட்சியிடம், எதை எதிர்பார்க்க வேண்டும்? நசுக்குகிறவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்து, நசுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குறிப்பு காட்டுவார்களென்று எதிர்பார்ப்பது தவறல்ல.

அப்படி நடந்ததா? இல்லை. இந்திய முதலாளிகளின் சுரண்டலுக்கு மட்டுமா, நம் அரசுகள் அரண் ஆயின? இல்லை. அயல்நாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கும், அட்டகாசத்திற்கும் காவல் தந்தன.

பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கக் கூடிய எவரையும் கைது செய்து, சிறையில் அடைக்கும் ‘ஆள் தூக்கி’ அதிகாரத்தை நிர்வாகத்திற்குக் கொடுக்கும் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்த மாநில அரசுகள், அவற்றைச் செயல்படுத்தின. தில்லி, பம்பாய், மதுரை போன்ற இடங்களில் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் ஆகியவை சோதனையிடப்பட்டன. செயல் வீரர்கள் புதிய சட்டத்தின் கீழ், சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்; செய்த குற்றத்திற்காக அல்லாது, முன்நடவடிக்கையாகப் பலரும் கைது செய்யப்பட்டனர். திரு.பி.இராமமூர்த்தி முதலானோர் கைதானார்கள்.

சென்னையில் பக்கிங்காம் கர்னாடிக் ஆலைத் தொழிலாளிகள் 14,500 பேர்கள் தக்க அறிவிப்புக்குப் பின், வேலை நிறுத்தஞ் செய்தார்கள். சென்னை மாகாண ஆட்சி—தேசீய காந்தீய மரபில் வந்ததாகக் கூறப்பட்ட ஆட்சி, என்ன செய்தது? சாய்ந்தது எவர் பக்கம்? அந்த ஆலையின் வெள்ளை முதலாளிகள் பக்கம். அப்போதைய தொழில் அமைச்சர் டாக்டர் டி.எஸ்.எஸ்.இராசனுக்கு அப்போராட்டம் எப்படித் தோன்றிற்று? பொது அமைதிக்கும், ஆட்சிக்கும் வேட்டு வைக்கும் முயற்சியாகவே தோன்றிற்று.

பல்லாண்டுகளுக்கு முன்பு, சேரன்மாதேவி குருகுல மாணவர்கள் அனைவருக்கும் சமபந்தி நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரசின் செயற்குழு முடிவு செய்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தன் உறுப்பினர் பதவியை உதறி, விலகியவர் ஆயிற்றே டாக்டர் இராசன். அவருக்கு பி.&சி. தொழிலாளர் போராட்டம் சதியாகத் தோன்றிற்று; அப்புறம் அமைச்சரவை முத்திரை குத்தாமல் இருக்குமா?

வேலை நிறுத்தத்தை முறியடிக்க முனைந்தது. அன்றைய தொழிலாளர் தலைவர் தோழர் எஸ்.சி.சி. அந்தோணி (பிள்ளை)யை விசாரணையின்றிச் சிறையில் தள்ளியது. பின்னர் நாடு கடத்தியது.

தோழர் பக்கிரிசாமி (பிள்ளை), ஏழுமலை, முத்தையா போன்ற மற்ற தலைவர்கள் பலரையும் அப்படியே சிறைப்படுத்தியது. பிறகு போராட்டத்திற்குப் பொறுப்பேற்ற திரு. வி. கல்யாண சுந்தரனாரைத் தன் வீட்டை விட்டு அகலாதிருக்க, அடக்கு முறை ஆணையிட்டது.

சட்டப்படி, கொட்டி முழங்கி தன்னாட்சி பெற வேண்டிய 15-8-1947க்கு அய்ந்தாறு திங்களுக்கு முன்பே, சென்னை மாகாணத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்தப் பாணங்கள், பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியினர் மேலும், தொழிற்சங்கச் செயல் வீரர்கள் மேலும் விடப்பட்டன.

அவ்வளவோடு நின்றார்களா? இல்லை. வலிமை மிக்க இந்திய அரசு உள்நாட்டு அமைச்சர் வல்லபாய் படேலின் தூண்டுதலால், இந்தியத் தேசியத் தொழிற் சங்கம் (I.N.T.U.C) தோற்றுவிக்கப்பட்டது. அதன் வழியாக, இந்தியத் தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டனர்.

இத்தனையும் நடந்த பிறகும், வரப்போவது கெடுதலை அல்ல, விடுதலை என்று கருதியவர்கள் ஏராளம்.

செல்வர்களே காலத்தில் கனிந்து, தங்கள் சொத்தை அறக் கட்டளைகளாக்கி விட்டு, உழைத்து உண்பார்களென்று இன்றும் எண்ணற்றவர்கள் நம்புகிறார்களே! அதைப் போல், அன்றும் நம்பினார்கள்.

பெரியார் சென்னை பி.&.சி தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தந்தார். சமதர்மக் கருத்துக்களைப் பரப்பிக் கொண்டே இருந்தார். அவரது ‘விடுதலை’ நாளிதழ் அடக்குமுறைக்கு ஆளானது. நன்னடத்தைப் பணம் கட்ட நேரிட்டது.

தன்னாட்சி விடியலில் தொடங்கிய அடக்கு முறை, தடுப்புக் காவலில் வைத்தல், வாய்ப்பூட்டு போன்றவை ஏறத்தாழ மூன்றாண்டுகள் நீடித்தன. முன்னர் கூறியபடி, அவை கம்யூனிஸ்ட்டுகள் மேல் ஏவப்பட்டன. மோகன் குமாரமங்கலத்தைப் பம்பாயில் கைது செய்து கொண்டு வந்து, வேலூர் சிறையில் அடைத்து வைத்தது அரசு; தனியறையில் பூட்டி வைத்தது.

மோகன் குமாரமங்கலத்தைத் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தியது சட்டத்திற்குப் புறம்பானது. அதைக் காட்டி, வழக்கு தொடரப்பட்டது. ஆகவே, அவரை உச்ச நீதி மன்றத்தின் முன் கொண்டு வந்து காட்ட வேண்டுமென்று கோரப்பட்டது.

நீதி மன்றம் அப்படியே ஆணையிட்டது.

பம்பாய் காவல் துறையினரின் ஆணைப்படி, சென்னை மாகாண ஆட்சி மோகன் குமாரமங்கலத்தை, சிறையில் வைத்திருப்பது செல்லாது என்று முடிவு கூறி, உச்ச நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது.

சென்னையில், ஏ.கே. கோபாலன் என்ற பொது உடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவர், அப்படியே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதை எதிர்த்து வழக்காடியதில், சென்னை உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது. அவர் நீதி மன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், மீண்டும் கைது செய்யப்பட்டார். மறுபடியும் எதிர்த்து வழக்காடி, விடுதலை பெற்றார்.

ஆங்காங்கே சில பொது உடைமைத் தலைவர்கள், தலை மறைவாகி விட்டார்கள். அவர்களில் ஒருவர் ஜீவானந்தம்; மற்றொருவர் மணலி கந்தசாமி. இவர்கள் வெவ்வேறு நாள்களில், குத்தூசி குருசாமி வீட்டில் தலை மறைவாகத் தங்கியிருந்தார்கள். வேறு ஏற்பாடுகள் செய்ததும், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்கள். மணலி கந்தசாமியின் தலைக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று காவல் துறை அறிவித்திருந்த போது, இப்படி அவரைத் தன் வீட்டில் பதுங்கியிருக்கச் செய்த துணிச்சல்காரர் சா. குருசாமி ஆவார்.

மணலி கந்தசாமி தன் வீட்டில் வந்து, தங்கித் தப்பிய பல நாட்களுக்குப் பிறகு சா. குருசாமி, ‘விடுதலை’ நாளிதழில், நாள் தவறாது குத்தூசி என்னும் புனை பெயரில் எழுதி வந்த ‘பலசரக்கு மூட்டை’ என்ற தலைப்பில், நகைச்சுவை பொங்க ஒர் கட்டுரை எழுதினார். துணிவுக்கு எடுத்துக்காட்டான, 16-10-1950 நாளைய அக்கட்டுரை இதோ:

இதோ! மணலி கந்தசாமி!

“எங்கே? எங்கே? காட்டு: சுட்டுத் தள்ளுகிறோம். எங்கே, அந்த ஆள்? இந்த ஒரு ஆளுக்காக மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறது? நிரபராதிகளை எல்லாம் அடித்து, எலும்பை முறிக்க வேண்டியதாயிருக்கே! காட்டு அவனை” என்று அதிகாரிகள் (அதாவது அகிம்சா ஆட்சி இயந்திரத்தின் சக்கரங்கள்) ஆத்திரத்துடன் கேட்கலாம். மந்திரிகள், ‘அகப்பட்டானா’ என்று பெருமூச்சு விடலாம்.

மணலி கந்தசாமி இருக்குமிடம் யாருக்குமே தெரியாது. காந்தி சோதிடருக்கும், சிவராம சோதிடருக்குமே தெரியாதென்றால், எனக்கு எப்படித் தெரியும்? கந்தசாமி எங்குமிருப்பார் பகவான் கிருஷ்ணனைப் போல! மந்திரிகள் வீட்டிலேயே, ப்யூனாக இருக்கலாம். போலீசார் வீட்டிலேயே, சமையற்காரனாக இருக்கலாம்; பணக்காரர் வீட்டிலேயே, தோட்டக்காரனா யிருக்கலாம். மாதம் 20,000 ரூபாய், 30,000 ரூபாய் சர்க்காருக்குத் தண்டச் செலவு வைக்கின்ற கந்தசாமியைப் பார்க்க வேண்டுமென்று, உங்களுக்கெல்லாம் ஆவலாயிருக்கிறதல்லவா? எனக்குக் கூட அப்படித்தான் இருக்கிறது!

“மணலி கந்தசாமி என்பவர் ஒரு கம்யூனிஸ்டாம். அவர் 2, 3 ஆண்டுகளாக அண்டர் கிரவுண்டில் (தலை மறைவாக) இருக்கிறாராம். அவரைத் தேடிப் பிடிப்பதற்காக, அதிகாரிகள் செய்கின்ற அட்டகாசம் உண்டே; எழுதினால், ஏட்டில் இடம் இருக்காது. தஞ்சை ஜில்லாவுக்கு நேரில் போய்ப் பார்த்தால்தான் தெரியும்.”

‘இதோ! மணலி கந்தசாமி! இந்த வைக்கோற்போரில் ஒளிந்திருக்கிறார்’ என்று தஞ்சை ஜில்லாவில் கூறி விட்டால் போதும், உடனே அதற்குத் தீ வைத்து விடுவார்கள் அதிகாரிகள்.

‘இதோ! இந்த எருமை மாட்டு வயிற்றுக்குள் இருக்கிறார் மணலி கந்தசாமி’ என்று யாரோ ஒரு சிறுவன் வேடிக்கைக்காகச் சொன்னால் போதும், டப்! டப்! டப்! டப்! துப்பாக்கிப் பிரயோகந்தான்.

உடனே அந்த எருமை மாடு சுட்டு வீழ்த்தப்பட்டு விடும். அதன் வயிற்றுக்குள்ளே, சோதனை நடக்கும்.

கிண்டலுக்காக நான் இப்படிக் கூறவில்லை. திருவாரூரில் யாரோ ஒருவர் வீட்டில், மணலி கந்தசாமி ஒளிந்து கொண்டிருப்பதாக யாரோ ஒரு சோம்பேறி (துப்பறிகிற நிபுணன்) அதிகாரிகளுக்குக் கூறி விட்டான். அதிகாரிகளில் ஒருவர் மகா,மகா நிபுணர். அவர் என்ன செய்தார் தெரியுமா? இன்னொருவர் வீட்டில் போய், தடபுடல் செய்தார். இந்த வீடு, திராவிடர் கழகத் தோழர் ஒருவரின் வீடு. அவர் திடுக்கிட்டுப் போய் விட்டார். மாலை 3 மணிக்கு ரிசர்வ் படையுடன், திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து, பெண்டு பிள்ளைகளை எல்லாம் அலறச் செய்து, கழகத் தோழரைப் போலீஸ் வளையம் போட்டு ஒரே கலாட்டா! சந்து பொந்தெல்லாம் சோதனை! கூரையைக் கிளறிக் கீத்துக்குள்ளே கூடத் தேடினார்களாம். (ஆண்கள் வயிற்றைத்தான் ஆபரேஷன் பண்ணவில்லை.)

அதிகாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்களாம்

‘இந்த வீடுதானே, மாணிக்கம் வீடு?’ என்று கேட்டார் சலிப்படைந்த மேலதிகாரி.

‘இல்லை சார்! என் பெயர் அண்ணாமலையாச்சே!’ என்றார் கழகத் தோழர்.

தப்பான வீட்டில் சோதனை நடந்து விட்டதைக் கண்டார்கள். முகத்தில் அசடு வழிந்து, அண்டா நிறைந்ததாம். ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த சங்கதி இது!

“இன்ன மந்திரி வீட்டில் மணலி கந்தசாமி இருக்கிறார்” என்று சொன்னால் போதும், உடனே மந்திரி வீடும் இதே கதிதான்.

“எனக்கொரு யோசனை தோன்றுகிறது. யார் யார் கள்ள மார்க்கெட் வியாபாரத்துக்காகச் சரக்குகளைப் பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அந்த இடத்தைக் காட்டி, இந்த இடத்திலேதான் மணலி கந்தசாமி இருக்கிறார் என்று சொன்னால் போதும். பதுக்கல் சாமான்களெல்லாம், அம்பலத்துக்கு வந்து விடும். பூனையைத் தேடப் போய், யானை சிக்கினால் லாபந்தானே!”

தம்பி கந்தசாமி ! நீ இன்னும் என்னென்ன கூத்துக்குக் காரணமாயிருக்கப் போகிறாயோ! நீ எங்கே இருந்தாலும் சரி! பத்திரமாயிரு. உன்னால் ஆயிரம் போலீஸ்காரர்கள் சுகமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிரபராதிகள் அடிபட்டுச் சாகிறார்கள். அதற்கு நீ என்ன செய்வாய் பாவம்!

“கந்தசாமி, இரு இரு; பாணிவாலா மகராஜ் அண்டர் கிரவுண்ட் தண்ணீரைச் சிண்டைப் பிடித்து இழுத்து வருகிறாராம். அவரை வரவழைத்து (மந்திரி பக்தவத்சலனார் மூலமாக) உன்னையும், அண்டர்கிரவுண்டிலிருந்து அலாக்காகத் தூக்கி வரச் சொல்கிறோம் பார்!

“அண்டர்கிரவுண்ட்! அண்டர்கிரவுண்ட்! யாரிடத்திலே பலிக்கும் இந்த பாச்சா! இதோ எங்கள் போலீஸ்காரர்களையும், மந்திர கவச நிபுணர்களையும் அழைத்து வரப் போகிறோம்.

“சரி தம்பி! உன் நட்சத்திரம் என்ன என்று மட்டும் சொல்லேன். எங்கள் ஊர் வெள்ளப்பூண்டு ஜோசியரிடம் கேட்டுப் பார்க்கிறோம்.”

குத்தூசியாரின் கிண்டல் எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/28&oldid=1691011" இலிருந்து மீள்விக்கப்பட்டது