பெரியாரும் சமதர்மமும்/30

30. சேலம் சிறைக் கொடுமைகள்

‘அதிகாரம் பொல்லாதது; அது நல்லவர்களையும் அல்லவர்கள் ஆக்கும் இயல்புடையது’ என்பதற்குச் சான்றாக நின்றது 11-2-1950 இல் சேலம் மத்திய சிறையில் நடந்த துப்பாக்கிச் சூடு. அச்சிறையின் இணைப்புப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த 350 கம்யூனிஸ்டுகள் அடைக்கப் பட்டிருந்தார்கள். கேரளத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்.

சிறைப்பட்டிருந்த கம்யூனிஸ்டுகளில் பலர், இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டவர்கள்; பல முறை சிறைக் கொடுமைகளைத் துய்த்தவர்கள்.

ஆங்கிலேய ஆட்சியின் போது கூட நடக்காத கொடுமைகள், நம்மவர் ஆட்சியில் நடந்தன. அவை என்ன?

அரசியல் கைதிகளாகிய கம்யூனிஸ்டுகள் கூட, மற்ற கைதிகளைப் போல, குல்லாய் போட்டுக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. கைதியின் எண்ணைக் குறிக்கும் சட்டையை அணிய வேண்டும் என்று இழிவு படுத்தினார்கள். சிறைக்குள்ளிருந்து தண்ணீர் இறைக்க மாடுகளுக்குப் பதில், கம்யூனிஸ்ட் கைதிகள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள். சாலை போடும் கல் உருளையை இழுக்கும்படி வற்புறுத்தப் பட்டார்கள்.

இக்கொடுமைகளுக்கு உடன்பட மறுத்தார்கள் என்ற சாக்கில், சிறை அலுவலர்கள் சொல்லத் தகாத சொற்களைச் சொல்லி, வம்புக்கு இழுத்தார்கள். அது முற்றும்படித் துண்டினார்கள். அதைச் சாக்காக்கி, அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

வெறியடங்கும் மட்டும், துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளினார்கள். தடி கொண்டு தாக்கி, கை, கால்களை உடைத்தார்கள்.

மனித உள்ளம் உடைய எவரும், ரத்தக் கண்ணீர் வடிக்குமளவு, உயிர்ப் பலி கொடுக்க நேர்ந்தது.

கண் மூடிக் கண் திறப்பதற்குள், நடந்த சிறைக் கொடுமை. 22 உயிர்களைக் குடித்தது. 103 பேர்கள் காயம் பட்டு அவதிப்பட்டார்கள்.

இக்கொடுமைகளைக் கண்டித்து, அடுத்து, அடுத்து எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் தந்தை பெரியார்; தொடர்ந்து கண்டித்து எழுதி, மக்கள் கவனத்தைக் கவர்ந்தது ‘விடுதலை’ நாளிதழ். அஞ்சாது, அயராது எழுதியவர் குத்தூசி குருசாமியார்.

சேலம் சிறைக் கொடுமையைக் கண்டித்து 15-2-1950 அன்று, ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. அதன் தலைப்பு என்ன? ‘இது வரையில் 22’ என்பதாம்.

அத்தலையங்கத்தைப் படியுங்கள்:

“சேலம் பலி 22 ஆகி விட்டது. காயம் பட்டவர்களில், இன்னும் எத்தனை பேர் அதிகார வெறிக்குப் பலியாகப் போகிறார்களோ, தெரியவில்லை. ரயில் விபத்தோ, பஸ் விபத்தோ ஏற்பட்டால், விபத்தில் மாண்ட உயிர்களின் பெயர்கள், உடனே வெளி வந்து விடுகின்றன. ஆனால், சேலம் பலிப் பட்டியல் மட்டும் வெளி வராத காரணம் தெரியவில்லை.

“தங்கள் கொள்கைக்காக, உயிர் விட்ட ஒப்பற்ற வீரர்களை, அதிகார வர்க்கம் மரக் கட்டைகளாகக் கருதி இருக்கிறதா? அல்லது, அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் உண்டு என்று கருதியிருக்கிறதா? சவங்களைக் கூட, இவர்கள் கண்ணில் காட்டியதாகத் தெரியவில்லை.

“13-2-1950 திங்களன்று நாம் கேட்டுக் கொண்டபடியே, பொது விசாரணை நடத்துவதற்கு ஆட்சியாளர் ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறோம். மகிழ்ச்சி: ஆனால், அந்த விசாரணைக் கமிட்டியில், கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டியது பொருத்தம். அதற்கு வசதி இல்லாத காரணத்தினால், அகில இந்திய தொழிற் சங்கக் காங்கிரசின் (ஏ ஐ.டி யு.சி.) தலைவரான தோழர் வி.சர்க்கரைச் செட்டியாராவது, அவசியம் இருந்தாக வேண்டும். இல்லையேல், வெறும் மாஜி சர்க்கார் உத்யோகஸ்தர்களின் விசாரணையிலும், தீர்ப்பிலும் பொது மக்களுக்குத் திருப்தியிருக்காது.

அது மட்டுமல்ல. விசாரணை முடியும் வரையில், இந்தப் படுகொலை சம்பந்தப்பட்ட ‘டயர்கள்’ (Dyers) சஸ்பெண்ட் செய்யப் பட வேண்டும். தங்கள் அதிகார எல்லையை மீறி வெறித்தனமாக நடந்து கொண்ட சில்லறைத் தேவதைகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“என் எதிரியை அடிப்பதற்கு, என் கையில் கிடைத்த கருவியைப் பயன்படுத்துவேன்” என்று அந்நாளில் முதலமைச்சர் ஆச்சாரியார், இந்தி எதிர்ப்பாளர்கட்காகக் கூறியதை, ‘கண்ணன் காட்டிய வழி’யாகக் கருதி, இன்றைய அதிகாரிகள் நடந்து வருகிறார்களோ என்று அச்சப்படுகிறோம்.

“ஏனெனில் சர்தார் பட்டேல், பார்லிமெண்டில் கூறிய பதிலில், ‘இந்தியாவில் அரசியல் கைதிகள் இல்லை’ என்று மனந் துணிந்து கூறியிருக்கிறார். அதாவது, காங்கிரஸ் தியாகிகளைத் தவிர, மற்ற அரசியல் கட்சிக்காரர்கள் எல்லோரும் வெறும் கலகக்காரர்கள், குண்டர்கள் என்பதுதான் சர்தாரின் எண்ணம் போலும். இரும்பு மனிதருக்கு இரும்பு இதயந்தானே இருக்கும்?

“தண்டவாளத்தைப் பெயர்த்தும், தபாலாபீஸைக் கொளுத்தியும், நாச வேலைகள் செய்த ஆகஸ்ட் தியாகிகள், அரசியல் கைதிகள் என்றார்கள் அன்றைய ஆட்சியாளர்கள்.—அதாவது, வெள்ளையர். ஆனால் இன்றுள்ள காருண்ய சீலர்களின் காங்கிரஸ் ஆட்சியாளரோ, கம்யூனிஸ்டுகளை ‘அரசியல் கைதிகள்’ என்று அழைப்பதற்குக் கூட மறுக்கிறார்கள். கல்நெஞ்சு! கல்நெஞ்சு!

“ஊரெங்கும் 144 தடையும், ஊர்வலத்திற்குத் தடையும், தொழிலாளர் வாய்களில் அடக்கு முறைத் துணி முடிச்சும் இல்லாதிருந்தால், சேலம் நிகழ்ச்சிக்கு நாள் தோறும், கண்டனம் மாரியாகக் கொட்டுவதைக் காணலாம். இன்று மூச்சுப் பேச்சு இல்லை. பார்ப்பன—காங்கிரஸ் பத்திரிகைகள், காஷ்மீர் பற்றியும், பிரிட்டிஷ் பொருளாதாரத் திட்டம் பற்றியும் தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. 22 பிணங்களும், தொழிலாளர் உலகைக் கண்டு ஏளனமாகச் சிரிக்கின்றன. நினைக்க, நினைக்க நெஞ்சம் துடிக்கிறது!” இப்படித் தலையங்கம் தீட்டி, கம்யூனிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றதைச் சாடியது ‘விடுதலை.’

22-2-1950ஆம் நாளைய ‘விடுதலை’ தலையங்கம் என்ன? வேண்டுகோள் ஆகும். எவருடைய வேண்டுகோள்? தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமியின் வேண்டுகோள். எவருக்கு வேண்டுகோள்? பொது மக்களுக்கு வேண்டுகோள். என்ன செய்யும்படி வேண்டுகோள்? 5-3-1950இல் கண்டன நாள் கொண்டாடும்படி வேண்டுகோள். அதையும் படிப்போம்.

‘சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவல் கைதிகள், ஜெயில் அதிகாரிகளால் சுடப்பட்டு, 22 பேர் கொல்லப்பட்டும், 100 பேர்கள் காயப்பட்டும், வீழ்த்தப்பட்ட அகோர காரியமானது, பொதுமக்களால் மிகவும் கண்டிக்கப்படத் தக்க காரியமாகும் என்பதோடு, இனி, அப்படிப்பட்ட காரியம் நடக்காமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டியது பொது மக்கள் கடமையாகும். ஏனெனில், இது போல், இதற்கு முன்பும் பல தடவை நடந்துமிருக்கிறது.

“அதிகாரிகள் நடந்து கொண்ட தன்மையானது, சரியானதா, தவறானதா என்பதைப் பொது மக்களுக்கு விளக்குவதற்காக, சர்க்கார் நியமித்திருக்கும் கமிட்டியானது, பொது மக்களுக்கும், அதிகாரிகளால் துன்பம் அடைந்தவர்களுக்கும், நம்பிக்கையற்ற மக்களைப் பெரிதும் கொண்ட கமிட்டியாய் இருப்பதால், பொது மக்கள் அந்த விளக்கத்தை எதிர் பார்த்திருப்பதும் பயனற்ற காரியமாகும்.

“ஆதலால் அதிகாரிகளுடையவும், சர்க்காருடையவும் செய்கைகளை மக்கள் கண்டிக்கிறார்கள் என்பதையாவது சர்க்காருக்குக் காட்ட வேண்டியது, பொது மக்கள் கடமையாகும்.

“ஆகவே, இந்தக் கண்டனக் கருத்து தெரிவிக்கும் காரியத்திற்கு ஆக, திராவிடர் கழக அங்கத்தினர்கள் 5-3-1950ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆங்காங்குள்ள கழகங்கள் மூலம் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, தீர்மானம் செய்து, தீர்மானத்தைச் சர்க்காருக்கும், பத்திரிகைகளுக்கும் அனுப்பிக் கொடுக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள்.

“5-3-1950ஆம் தேதியன்று, கூட்டம் நடத்துவதற்கு முன்பு, கழகத்தார் கூடுமான வரை, பொது மக்களுடன், கழகத்திலிருந்து கோர்வையாகச் சென்று, கட்சி பேதமில்லாத பொதுக் கூட்டமாகவே நடத்தி. தீர்மானம் செய்ய வேண்டியது; போலீசாரிடம் அனுமதி பெற்றுக் கூட்டம் நடத்த வேண்டியது.

“போலீசாரோ, சர்க்காரோ தடை உத்திரவு போட்டால், நிறுத்திக் கொண்டு, சேலம் ஜெயிலில், குறிப்பிட்ட தேதியில், அதிகாரிகளும், சர்க்காரும் நடந்து கொண்ட கோரத் தன்மையைக் கண்டிப்பதாக எழுதி, உள்ளூர் மக்களிடம் கையெழுத்து வாங்கி, அனுப்ப வேண்டியது.

“கூட்டத்தில் ஆத்திரமும், அதிக்கிரமுமான பேச்சுகள் நிகழாமல், கழகத் தோழர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.”

இப்படி ஈ.வெ. ராமசாமி வேண்டுகோள் விடுத்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/30&oldid=1691015" இலிருந்து மீள்விக்கப்பட்டது