பெரியாரும் சமதர்மமும்/31
31. குலக் கல்வித் திட்டத்தைப்
புகுத்தி இராஜாஜி
மீண்டும் திசை திருப்பினார்
நிழலை, உண்மை என்று கருதி, அதன் பின்னே ஓடுவது போல, வெறும் ஆள் மாற்றத்தை, உண்மையான அரசியல் விடுதலை என்று பொது உடைமைக் கட்சியினர் நம்பினர்; வேறு பிரிவினர்களும் நம்பினர்.
கும்பலிலே கோவிந்தா போட்டு வளராத தந்தை பெரியாரோ, ‘1947இல் கிடைக்கப் போவது மெய்யான விடுதலை அல்ல; சுரண்டும் உரிமை மாற்றம்; அன்னியனே பெரிதும் சுரண்டிய இடத்தில், நம்மவர்களே அதிகம் சுரண்டும் உரிமையும், வாய்ப்பும் பெறுவதற்குத் தொடக்கம்’ என்று எச்சரித்தார். அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. இதற்காகப் பெரியாரை அன்றும் தூற்றினார்கள்; இன்றும் தூற்றுகிறார்கள். அது பலருடைய பொழுது போக்கு.
தந்தை பெரியாரின் எதிர்பார்ப்புப் படியே, விடுதலை பெற்ற சூட்டோடு, அடக்கு முறை கட்டவிழ்த்து விடப் பட்டது. பொது உடையைக் கட்சியினரும், அகலக் கால் வைத்து மாட்டிக் கொண்டார்கள். பலப் பல உயிர்கள் பலியாயின. பல்லாயிரக் கணக்கானவர்கள் சிறைகளில் அவதிப்பட்டார்கள்.
விருப்பு வெறுப்புகளைப் பாராமல், சமத்துவக் கொள்கைக்கும், பொது வாழ்க்கையில், நேர்மைக்கும் மட்டுமே தலை வணங்கும் பெரியார், பொதுவுடைமைக் கட்சிக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசினார்; எழுதினார். கொடுமைகளுக்கு ஆளான மக்கள் மேல் பொது மக்களுக்கு, இயற்கையாகவே பரிவு ஏற்படும். அப்பரிவினை, பெரியார் இயக்கத்தின் தொண்டர்கள் ஊதி, ஊதி வளர்த்தார்கள்.
இதற்கிடையில், எந்த அமெரிக்காவை—பிரிட்டனை நிறைவு படுத்த, இந்தியாவில் பொது உடைமைக் கட்சிக்குத் தடை விதிக்கப் பட்டதோ, அந்த அமெரிக்காவும், பிரிட்டனும் மெய்யான நண்பர்கள் அல்ல என்பது தெளிவாயிற்று. எப்படி?இந்தியாவில், பொதுத் துறையில், புதியதோர் எஃகாலை கட்ட, பிரதமர் நேரு விரும்பினார். அவருடைய தனிப்பட்ட பற்று எப்படியிருப்பினும், பொது மக்கள் மிரண்டு விடக் கூடாது என்பதற்காக, பிரதமர் நேரு முதலில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ நாடுகளின் உதவியை நாடினார். உதவி கிடைக்கவில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள்?
‘தனியார் துறையில் எஃகாலை வைப்பதானால், எங்கள் முதலாளிகளை முதலீடு செய்ய விடுவதானால், புதிய எஃகாலைக்கு உதவுவோம்’ என்றார்கள்.
அயல் நாட்டார் ஆதாயத்திற்காக, இந்தியாவில் தொழில் தொடங்குவதானால், அவர்கள் உதவக் கூடுமென்றார்கள். நமக்கென்ன நன்மை? நம் உழைப்பாளிகளுக்குக் கூலி கிடைக்கும்; நம் பட்டதாரிகளுக்குப் பிழைப்பு கிடைக்கும்; நம் முதலாளிகள் சிலருக்கு இலாபத்தில் பங்கு கிடைக்கும்.
‘ஆலையில்லா ஊரில், இலுப்பப்பூ சர்க்கரை.’ வறியோர் செறிந்த இந்தியாவில், ஆயிரங் கோடிச் சொத்து, முதல் வரிசைச் சொத்து. பிற நாட்டு முதலாளிகளின் செல்வமோ, பல ஆயிரங் கோடி என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அந்நிலையில், நம் முதலாளிக்கு ஒரு பங்கு இலாபம் கிடைத்தால், அன்னிய முதலாளிகள் பத்து பங்கு எடுத்துக் கொண்டு போவார்கள். அதற்கு உடன்பட முடியுமா? அதுவும் மிக முக்கியமான எஃகு, பாதுகாப்புக் கருவிகள், ஆகியவற்றில் அயல் நாட்டுச் செல்வம் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்து. எனவே, பிரதமர் நேரு, வேறு பக்கம் திரும்ப நேர்ந்தது. சோவியத் நாட்டை நாட வேண்டிய நிலை உருவானது.
பொது உடைமைக் கட்சியைத் தடை செய்து, அடக்கி ஒடுக்கும் ஆட்சிக்கு, சோவியத் ஆட்சி உதவாது, என்று நினைத்திருக்கக் கூடும்.
அளவிற்கு மீறிய அடக்கு முறை, பொது மக்களிடையே காங்கிரசு ஆட்சியின் மேல் எதிர்ப்பை வளர்த்தது; பொது உடைமைக் கருத்தின் மேல் கவனத்தைத் திருப்பியது. அதே நேரத்தில், சோவியத் உதவியை நாடவும் நேர்ந்தது. இந்தக் ‘காலத்தின் கட்டாயங்கள்,’ ஆட்சியாளர், வேறு முறைகளைக் கையாளும்படி செய்தன. பொது உடைமைக் கட்சிக்கு இருந்த தடையை நீக்கி விட்டு, பொதுத் தேர்தல் நடத்த இந்திய அரசு விரும்பியது.
தலை மறைவாக இருந்த பொது உடைமை வாதிகள் சிலர், இரகசியமாகக் கூடினர். கலந்துரையாடினர். ‘வேட்டு’ முறையைக் கை விட்டு விட்டு, ‘ஓட்டு’முறைக்கு மாறுவது, என்று முடிவு செய்தனர். பின்னர் இம்முடிவு, நாடு தழுவிய பெரிய கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பொது உடைமைக் கட்சியின்மேல் இருந்த தடை நீக்கப் பட்டது; பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தில், தந்தை பெரியாரின் தூண்டுதலால், காங்கிரசு அல்லாத கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு உருவாயிற்று. காங்கிரசை எதிர்த்து, பலமான போட்டி, உருவாயிற்று.
ஏற்கனவே, குறிப்பிட்ட, அடக்கு முறைகளுக்கு மேலாக, உணவுப் பற்றாக்குறை பற்றி, பொது மக்கள் காங்கிரசு ஆட்சியின் மேல், வெறுப்புக் கொண்டிருந்தார்கள்.
போட்டியிட்ட கட்சிகள் சிலவற்றிற்குள்ளே ஏற்பட்ட தேர்தல் உடன்பாடு—தந்தை பெரியாரின் சூறாவளித் தேர்தல் சுற்றுப் பயணம்—முதலியன காங்கிரசைச் சிறுபான்மைக் கட்சியாக்கிற்று.
ஆட்சி இயந்திரத்தைக் கையில் வைத்திருந்த காங்கிரசு கட்சி, மாகாண சட்டசபைக்கு 367 இடங்களுக்குப் போட்டியிட்டு, 152 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 131 இடங்களில் போட்டியிட்டு 62 இடங்களைப் பிடித்தது. எந்தக் கட்சியிலும் சேராது நின்ற 667 பேர்களில் 62 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
சட்ட மன்றத்தில் சிறுபான்மையாகி விட்ட போதிலும், காங்கிரசு கட்சி அமைச்சரவை அமைத்தது. மற்ற எந்தக் கட்சியும் பெறாத அளவு அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற காரணத்தால், காங்கிரசு பொறுப்பேற்றது. அரசியல் துறவு பூண்டிருந்த ஆச்சாரியார் முதல் அமைச்சரானார். அதற்கு உதவும் பொருட்டு, சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராக, ஆளுநரால் நியமிக்கப்பட்டார்,முதல் அமைச்சரான இராசகோபாலாச்சாரியார், பெரியாருக்குத் தூது அனுப்பினார்; பெரியாரின் ஆதரவைக் கோரினார்.
ஆட்சியைப் பிடிப்பதில் நாட்டமில்லாத பெரியார், எப்போதும் ஆட்சியிலிருப்பவர்களிடம், சரியான வேலை வாங்குவதிலேயே கருத்தாயிருப்பார்.
பெரியாரின் கொள்கைகளையும், போக்குகளையும் அறிந்த மூத்தவர், தூது அனுப்பினால், அதற்குப் பொருள் என்ன? பெரியாரின் கருத்துக்கு நேர் எதிர்ப்பான எதையும் இராஜாஜி செய்யமாட்டாரென்பதே உட்பொருள். தனிப்பட்ட முறையில், இராஜாஜியின் நாணயத்தில் பெரியாருக்கு நம்பிக்கை உண்டு. எனவே, பழைய பகையை பெருந்தன்மையோடு மறந்து விட்டார். இராஜாஜியின் அமைச்சரவையை ஆதரித்து எழுதினார். அரிசிப் பங்கீட்டை எடுத்து விட வேண்டுமென்று ஆலோசனை கூறினார். ஆட்சியில், நிர்வாகத்தில்—கட்சிக்காரர்களின் தலையீடு இல்லாது, இராஜாஜி பார்த்துக் கொள்வாரென்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
பெரியார் விரும்பியபடி நடந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை, இராஜாஜி ஒழித்தார். கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு, நியமனங்களிலும், நிர்வாகத்திலும் தலையிடுவதைப் பெருமளவு அடக்கி விட்டார். இவற்றின் வாயிலாக, மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, பொது மக்கள் தலையில் கை வைக்கும் வேலையில் ஈடுபட்டார். அது என்ன?
‘குலக் கல்வித் திட்டம்’ என்பதாம். இப்பெயர் இராஜாஜியால், சூட்டப்பட்டது. இத்திட்டத்தை வேறு எவரும் அப்படித் தவறாக அழைக்கவில்லை.
அத்திட்டம் என்ன?
நாட்டுப்புறச் சிறுவர், சிறுமியர் முழு நேரம் படிக்கக் கூடாது. அரை நாள் மட்டுமே படிக்க வேண்டும். பாதி நாள், குலத் தொழில், செய்யக் கற்றுக் கொள்ளட்டும். பொது மக்களின் குழந்தைகளுக்கு, எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.
ஒவ்வோர் நாட்டுப்புறப் பள்ளியும், இரு ஷிப்டுகளில் வேலை செய்யும். இரண்டு ஷிப்டுகளுக்கு வெவ்வேறு ஆசிரியர்கள் கிடையாது. இரண்டிற்கும் ஒரு ‘செட்’ ஆசிரியர்களே வேலை செய்ய வேண்டும். அதாவது, நாளைக்கு அய்ந்து மணிகள் வேலை செய்த நாட்டு புற ஆசிரியர்கள், புதிய திட்டத்தின் கீழ், ஆறு மணிகள் வேலை செய்ய வேண்டும்.
இத்திட்டம், திடீரென நடைமுறைப் படுத்தப்பட்டது. அது பற்றி, அன்றைய கல்வி அமைச்சருக்கோ, பிற அமைச்சர்களுக்கோ, அமைச்சரவைக்கோ, முன் கூட்டித் தெரியாது. கல்விச் செயலருக்கும் தெரியாது.
பள்ளிக்கூடக் கல்வியோடு தொடர்பே இல்லாத ஒருவரை, பொதுக் கல்வி இயக்குநராக்கி, அவரைக் கொண்டு, இப்படியொரு திட்டத்தைச் சுற்றறிக்கையாக அனுப்ப ஏற்பாடு செய்தார், முதல் அமைச்சர் இராஜாஜி.
இத்திட்டம் 1953ஆம் கல்வியாண்டிலிருந்து, நடைமுறைக்கு வந்தது. அது பற்றிய சுற்றறிக்கையைத் திடீரென செய்தித் தாள்களில் கண்ட அமைச்சர்களும், பெரிய அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.
“முதலமைச்சர் ஆணைப்படி நடந்தது. அவர்தான், இத்திட்டத்தை ஆலோசனையாக, ‘கோட்டை’க்கு அனுப்பாமல், நேரே ஆணையிட்டு விட்டு, தகவல் கொடு என்றார். அப்புறம் நான் என்ன செய்ய” என்று அன்றைய இயக்குநர், விளக்கஞ் சொல்ல நேர்ந்தது.
இராஜாஜி, இப்படியொரு திட்டத்தைக் காதும், காதும் வைத்தாற் போல், நடைமுறைப் படுத்தச் சொல்லுவானேன்?
இளமை, முற்போக்குச் சிந்தனைக்குப் பிறப்பிடம்; புரட்சிகரமான செயல்களுக்கு உந்துதல்.
முதுமை, தளர்வின் பருவம்; ஆற்றாமையின் விளை நிலம்; புதிய சிந்தனைகளைக் கண்டு மிரளும் காலம். தனது பழைய கருத்துகளைப் பற்றியே அச்சமும், அவநம்பிக்கையும் சுரக்கும் நிலை, முதுமை நிலையாகும்.
மக்களின் உள்ளங்களைக் கவர வேண்டிய நிலையில் இருந்த காலத்தில், கவர்ச்சிகரமான தீண்டாமையொழிப்பு, பேதமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றிற்காக, இராசகோபாலாச்சாரியார் வழக்காடினார். வயது ஏற ஏற, அறிந்தும், அறியாமலும் அந்நிலையிலிருந்து நழுவினார்.1938ஆம் ஆண்டு, கீழ் வகுப்புகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது, இராஜாஜியின் இந்திப் பற்று உந்தியதால் அல்ல. ‘சமதர்மக் கோட்பாட்டை’ விரைந்து வளர்த்து வரும் தன்மான இயக்க வெள்ளத்தைத் திசை திருப்பி விட வேண்டும்; தென்னிந்திய சமதர்மக் கொள்கையினரும், வட இந்திய சமதர்மக் கொள்கையினரும் ஒன்று சேரவொட்டாதபடி, அவர்களுக்குள் வெறுப்பை வளர்த்து விட வேண்டும்.
இவை, காலந் தாழ்த்தாது நடக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. அதற்கேற்ற உபாயமாகவே, கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார். தமிழர்கள் கொதித்து எழுந்து போராடும் நிலைக்கு, அவர்களைத் தள்ளினார். இந்தி மொழிக்காரர்கள், தமிழர்களைப் பிறவிப் பகைவர்களாகக் கருதும் பாழ் நிலையை உருவாக்கி விட்டார். ஆனால், அவரே 1965இல் இந்தி எதிர்ப்புக்குத் தூண்டுகோலானார்.
அதே போல, ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கையை, ‘பசுவை வெட்டுவதா!’, ‘தாயைத் துண்டாடுவதா?’ என்று எதிர்த்து வந்த இராசகோபாலாச்சாரியார், பிறகு பாகிஸ்தான் பிரிந்து போவதை ஆதரிப்பதில் முன்னே நின்றார். அத்தகைய பிரிவினை, இரு நாட்டு மக்களிடையேயும் வாழையடி வாழையாகப் பகையை வளர்க்கும். அப்பகை உணர்ச்சி, இந்தியர்களின் சிந்தனையைச் சமதர்மத்திலிருந்து வேறு பக்கம் திருப்பி விடும் என்று, இராசகோபாலாச்சாரியாருக்குப் புலப்பட்டது ஆகவே, பிரிவினையை ஆதரித்தார்.
அதே உள்ளுணர்வுதான், குலக் கல்வித் திட்டம் என்னும் அணு குண்டை அவர் திடீரென வீசுவதற்குக் காரணம்.
கல்விக் கண் திறந்து, முன்னேற முயலும் நாட்டுப்புற மக்களின் பிள்ளைகள் பட்டங்கள் பெற்று, போட்டிக்கு வராதிருப்பதற்கு. குலக் கல்வி முறை உதவும் என்று நினைத்தார். அதோடு, பசுமையாக வளர்ந்து வரும் சமதர்மச் சிந்தனையை அழிக்கும் பூச்சியாக, கேடான இத்திட்டத்தைப் பயன்படுத்த நினைத்தார். இப்படியொரு திட்டம் வந்தால், தமிழர்களின் கவனம் அதை எதிர்ப்பதற்கே திரும்பி விடும். சமதர்மக் கொள்கையைப் பரப்ப, போதிய கவனமும், நேரமும், முயற்சியும் கிடைக்காது என்பது அவர் கணக்கு. எனவே, எந்த காமராசர் அழைத்து, முதல் அமைச்சர் ஆக்கினாரோ, அவருக்கும் சொல்லாமல், அரை வேளைப் படிப்பைத் திணித்தார்.அத்திட்டம் வெளியான அன்று, தமிழ் நாடு காங்கிரசின் தலைவர் காமராசர், விருதுநகரில் இருந்தார். அவருக்கு அதிலுள்ள கேடு பளிச்சென்று புரிந்தது. அன்று மாலை, விருதுநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காமராசர், ‘இந்தப் பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை,’ என்று சூளுரைத்தார். அப்போது அது, இயக்குநரின் விபரீத திட்டம் என்றுதான் அவர் நினைத்தார். இராஜாஜி திட்டம் என்பது, பின்னரே தெரிய வந்தது.
அத்திட்டம் வெளியானதும் அதைக் கண்டித்து, தந்தை பெரியார் அறிக்கை விட்டார். மாகாண கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கண்டன அறிக்கை விட்டார். அறிஞர் அண்ணாவின் அறிக்கையும், அப்படியே அமைந்தது. தென்னிந்திய ஆசிரியர் கழகத்தின் தலைவர், இக்கல்வியைக் கண்டித்து அறிக்கை விட்டார். இராஜாஜியிடம் பற்றுடைய டாக்டர் சுப்பராயன் கண்டித்தார். முன்னாள் முதல் அமைச்சர், ஓமந்தூர் இராமசாமியார் எதிர்ப்புத் தெரிவித்தார். அதிகார வர்க்கமும், பிற்காலத்தில் சுதந்திரா அணிக்குத் தாவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ‘தேசியவாதி’களும் மட்டுமே, அப்பன் தொழிலுக்குப் பிள்ளை போகும் கல்வி முறையை வரவேற்றார்கள்.
குலக் கல்வித் திட்டத்திற்கு எதிராக, கையெழுத்து வாங்கும் முயற்சியில், காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களே முனைந்தார்கள். பெரும்பாலோர், எதிர்த்துக் கையெழுத்திட்டார்கள்.
இதற்குள், குலக் கல்வித் திட்டம், முதல் அமைச்சர் இராசகோபாலாச்சாரியார் பெற்றெடுத்த கோரப் பிள்ளை என்பது, காமராசருக்குத் தெரிய வந்தது. அவருடைய நிலை, தர்ம சங்கடமாகி விட்டது. பொது மக்களுக்குக் கேடான ‘அரை வேளைப் படிப்பு’ என்கிற முறையை ஒழித்தாக வேண்டும்; அதே நேரத்தில், இராசகோபாலாச்சாரியாருக்கு எந்த வித பெருமைக் குறைவும் ஏற்படாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய சங்கடமான நிலையில், சட்ட மன்றக் காங்கிரசு கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் இராஜாஜி, ‘புதிய கல்வித் திட்டத்தைக் கை விட்டால், எதிர்க் கட்சிகளின், குறிப்பாக, திராவிடர் கழகத்தின் கை ஓங்கி விடும். சட்டமன்றத்தைக் கலைக்கும் நிலை ஏற்படலாம்’ என்று பொடி வைத்துப் பேசினார். அந்த நயமான மிரட்டல், ஓரளவு பயன்பட்டது. காங்கிரசு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை மறந்து விட்டு, அரசிற்கு ஆதரவு கொடுக்கும்படி, கட்டளையிடப்பட்டார்கள். இராஜாஜியே, அச்சோதனையின் விளைவைக் கவனித்த பிறகு, புதிய திட்டத்தைக் கை விட்டு விடுவார் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டார்கள்.
சட்ட மன்றக் கூட்டம் வந்தது. மன்றம் குலக் கல்வித் திட்டத்தை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் தீர்மானம் வந்தது. அத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற திருத்தம், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது.
முதலமைச்சர், அடிப்படையான திட்டம் என்று கருதிய ஒன்றை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தள்ளி விட்ட பிறகு, அத்திட்டத்தை உடனே எடுத்து விடுதல் அல்லது பதவியிலிருந்து விலகிக் கொள்ளல் என்பதே சரியான செயல்பாடு ஆகும்.
தேர்தலுக்கு நிற்காது, ஆளுநர் நியமன வழியாகச் சட்டமன்ற மேலவைக்கு வந்து, முதல் அமைச்சரானவர் பாராளுமன்ற மரபினைப் பின்பற்றவில்லை. சாதாரண அரசியல்வாதியின் நிலைக்குத் தாழ்ந்து போனார். அடிப்படையான திட்டம் பற்றி, அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது வெறும் பரிந்துரையே ஆகும் என்று வாதாடினார்.
மேற்படி தீர்மானம் நிறைவேறியதற்கு அடுத்த நாளே, இணைந்த சென்னை மாகாண சட்டமன்றத்தின் கடைசிக் கூட்டம். அதற்குப் பிறகு, ஆந்திர மாகாணம் பிரிந்து விடும்.
கடைசி நாளன்று, ஏழைகளுக்கு நிலம் ஒதுக்குவது பற்றிய தீர்மானம் ஒன்றை, எதிர்க் கட்சி உறுப்பினர் சட்ட மன்றத்தின் முன் கொண்டு வந்தார். அதை வற்புறுத்த வேண்டாமென்று அரசு சார்பில் கோரப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர், அன்று மன்றத்திற்கு வரவில்லை; பலர் ஊர் திரும்பி விட்டார்கள். அன்று அரசிற்கு ஆதரவாளர்களே அதிகமாக வந்திருப்பதும் புலப்பட்டது. இந்நிலையை எடுத்துக் காட்டியதையும் பொருட்படுத்தாது, தீர்மானத்தின் மேல் வாக்கெடுக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது. அப்படியே எடுக்கப்பட்டது. விளைவு? எதிர்க்கட்சி உறுப்பினர் திரு. வெங்கையாவின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதாவது, அரசின் எதிர்ப்பு வெற்றி பெற்றது; பதினேழு வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றது.
இராசகோபாலாச்சாரியாரின் சாணக்கியம் வேலை செய்தது. முந்திய நாள், ஒரு வாக்கு குறைவாகப் பெற்றுத் தோற்ற அரசுக்கு, அடுத்த நாள் தீர்மானத்தில் பதினேழு வாக்குகள் கிடைத்திருப்பது, அதன் மேல் முழு நம்பிக்கை இருப்பதைக் காட்டுவதாகும் என்று வாதிடப்பட்டது. அதைக் காட்டி, காங்கிரசு ஆட்சி தொடர்ந்தது.
கடைசி நாள், கட்சிக்காரர்கள் பலரும் வெளியூர் போய் விட்டதைத் தெரிந்து கொண்ட பிறகும், ‘முடிவைப்பற்றிக் கவலையில்லை’ என்று அடம் பிடித்து வாக்கெடுப்பை வற்புறுத்தியது, தவறான தோற்றத்தைக் கொடுத்தது.
காங்கிரசு ஆட்சி கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகளுக்குப் பலியானவர்கள் எடுத்த நிலை, இராஜாஜியின் ஆட்சிக்கு உயிர் கொடுத்து விட்டது என்று பொதுமக்கள் கருதி, அதிர்ச்சியடைந்தார்கள். அதற்குக் காரணம் கண்டு பிடிக்க முயன்றார்கள். அவரவர் கண்ணோட்டப்படி காரணம் தென்பட்டது. ஊர் வாயை மூட, உலை மூடி உண்டா?
‘பார்ப்பன இராஜாஜிக்கு உதவும் பொருட்டே, கம்யூனிஸ்ட் கட்சியின் பார்ப்பனத் தலைமை அப்படிச் செய்து விட்டது.’ என்றனர் ஒரு சாரார்.
‘இராஜாஜி பதவி விலகினால், சும்மா விலக மாட்டார்; சட்டமன்றத்தைக் கலைத்து விட்டே, விலகுவார். அதனால், தங்கள் பதவி போய் விடும் என்று அஞ்சியதால், அவருக்கு உதவி செய்து விட்டார்கள்’ என்று பேசியவர்கள் பலர்.
திடலில் தலை தெறிக்க ஓடி விளையாடுகிற பிள்ளை, ஆட்ட மயக்கத்தில் மூலையிலுள்ள பாழுங் கிணற்றில் வீழ்ந்து விட்ட நிலையாக இருக்கக் கூடாதா? சட்டமன்ற சதுரங்கத்திற்குப் புதியவர்களாக இருந்ததால், புது முறுக்கில், தங்கள் பகைவருக்கே உதவி விட்டார்களோ?