பெரியாரும் சமதர்மமும்/33

33. கல்விப் புரட்சியில்
காமராசரும் பெரியாரும்

‘எல்லோர்க்கும் கல்வி’ என்ற கொள்கையின் அடிப்படையில், கல்வி வளர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முந்நூறு மக்கள் கொண்ட சிற்றூர் தோறும் தொடக்கப் பள்ளி திறந்தது அம்முயற்சிகளில் ஒன்று.

தொடக்கப் பள்ளி தோறும், ஏழை மாணாக்கர்களுக்கு—தெரு சுற்றும் ஏழைகளுக்கல்ல—பகல் உணவு போட்டது, மற்றோர் முயற்சி. அதைப் பற்றிச் சிறிது விவரமாகவே தெரிந்து கொள்ளுங்கள்.

கர்ம வீரர் காமராசர் முதல் அமைச்சர் ஆன ஆறு தினங்களில், சென்னை மாநிலப் பொதுக் கல்வி இயக்குநர் பதவி, திடீரென காலியாக நேர்ந்தது. ‘காலியாகப் போகிறது. அதை தகுதியடிப்படையில் நிரப்ப வேண்டும்’ என்று அப்போதைய தலைமைச் செயலர் திரு. ராமுன்னி மேனன், அவரிடம் தெரிவித்த உடனே, முடிவு செய்து விட்டார். என்ன முடிவு?

அதிகாரிகளில், எவருடைய இரகசியப் பேரெடுகள் சிறப்பாக இருக்கிறதோ, அவருடைய பெயரைப் பரிந்துரையுங்கள் என்பதே அம்முடிவு. பேரேடுகளை ஆய்ந்த போது, என் பேரேடுகள், மற்றவரின் பேரேடுகளை விட நன்றாக இருந்ததாம். எனவே, எதிர் பாராத வகையில், திடீரென நான் சென்னை மாகாணப் பொதுக் கல்வி இயக்குநர் ஆனேன்.

சில திங்களில், நான், அன்று நம்மோடு இருந்த மலையாளம் மாவட்டத்திற்குச் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு, பெரிந்தல்—மண்ணா என்று ஒரூர்; அங்கு ஓர் உயர் நிலைப் பள்ளி. அப்பள்ளி மாணாக்கரிடம் அழைக்கப்பட்டேன். அங்கே சென்றேன். கூட்டம் தொடங்கிய அய்ந்து மணித் துளிகளில், இரு மாணவர்கள், ஒருவர் பின் ஒருவராக, மயங்கி வீழ்ந்தார்கள். எதனால்? பட்டினி தாளாமல். பிற்பகலில் இப்படி அறுபது, எழுபது பேர்கள் மயங்கித் தவிப்பார்கள் என்று தலைமை ஆசிரியர் கூறினார். அது என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அன்றிரவு முழுவதும் உறங்காமல், வேதனைப் பட்டேன்.

அடுத்த நாள் முற்பகல் பாலக்காட்டில், பெரிய ஆசிரியர் மன்ற ஆண்டு விழாவில், உரையாற்றினேன். ‘ஈரமில்லாத மண்ணில் பயிர் வளர்ப்பது எப்படி? பட்டினியால் வாடும் மாணாக்கரிடம் கல்வி வளர்ப்பது எப்படி?’ அதைக் கருப் பொருளாகக் கொண்டு, விரிவுரை ஆற்றினேன்; முன்னால் கண்ட காட்சியை எடுத்துரைத்தேன். என் வேதனையைக் கொட்டினேன்.

நான், பாலக்காடு ஆசிரியர் மன்றத்தில் பேசிய உரையை, ‘இந்து’ நாளிதழ், நடுப்பக்கத்தில் தலையங்கத்திற்கு அடுத்த பத்தியில், முக்கால் பத்தியளவு வெளியிட்டது. எனவே, அது முதல் அமைச்சர் காமராசர் கவனத்தை ஈர்த்தது.

அடுத்த நாள், சென்னை, மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாநில தனியார் தொடக்கப் பள்ளி நிர்வாகிகள் மாநாடு நடந்தது. முதல் அமைச்சருக்கு அடுத்து நான் அமர்ந்தேன். என்னோடு உரையாடினார்.

மாணாக்கரின் பசி பற்றிப் பேசினோம். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பகல் உணவு போடும் அய்ந்து நாட்களில், படிப்போர் வருகை நன்றாயிருக்கிறது. சோறு போடாத, சனியன்று வருகை குறைந்து விடுகிறது. இச்செய்தியை என்னிடம் கேட்டறிந்தார். நாட்டுப் புறங்களிலும், பள்ளியில் படிப்போருக்கு உணவளித்தால், வருகை பெருகும் என்னும் முடிவுக்கு வந்தார்.

சென்னை மாநகராட்சியில், எவ்வளவு பேர்களுக்கு அப்போது உணவளித்தார்கள்? படிப்போரில் ஐந்தில் ஒருவருக்கு. அது போதவில்லை. நால்வரில் ஒருவருக்காவது போடும்படி கோரிக்கை வந்தபடி இருந்தது. அன்று தமிழ்நாட்டில், வறுமைப் பட்டிருந்தோர் நால்வரில் ஒருவரே. இருப்பினும், தாராளமாக, முப்பத்து மூன்று விழுக்காட்டினருக்குப் போடுவோம். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று மனக் கணக்குப் போட்டோம்.

பள்ளியில் சேரும் பிள்ளைகள் எவ்வளவு என்று கணக்கிடுவது? குடிக் கணக்கின்படி, படிக்கும் வயதுடையோரில் நூற்றுக்குத் தொன்னூறு பேர்களை சேர்த்து விடுவோமென்று அனுமானித்தோம். அவர்களில் மூன்றிலொரு பங்கினருக்குச் சாப்பாடு என்றார்.

ஆளுக்கு வேளைக்கு எவ்வளவு செலவு செய்வது? அன்றைய விலைவாசியில், மாநகராட்சி, வேளைக்கு ஒன்றரை அணா செலவு செய்தது. அதே அடிப்படையில், தனித் தனி கணக்கிட்டோம். இருவர் முடிவும் ஒன்றாக இருந்தது.

அடிப்படைகளை மறு பரிசீலனை செய்து விட்டு, திட்டத்தை, விவரமாக உருவாக்குவோம். தொடக்கப் பள்ளிகளில், பகல் உணவு திட்டத்தை நடத்துவது என்று இப்போதைக்கு முடிவு செய்வோம் என்றார்.

முதல் அமைச்சர் காமராசர், தனது உரையில் மேற்படி முடிவை அறிவித்து விட்டார். அதோடு நிற்கவில்லை.

அய்ந்து வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட மாணாக்கர் வயிறார உண்ண எவ்வளவு அரிசி தேவை என்பதைச் சிலரை விட்டு சோதித்தார். அப்போது அரிசி, படிக் கணக்கில்தான் விற்றது. ஒருபடி அரிசியை சமைத்தால், பத்துப் பிள்ளைகள் வயிறார உண்ண முடிந்தது.

மாநகராட்சி அந்த அளவில் அரிசி கொடுத்தது குறைவல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.

வெறும் சோறும், நீருமா கொடுக்கத் திட்டமிட்டார். இல்லை. சாம்பார் சாதம், தயிர் சாதம் போட முடிவு செய்தார். அவற்றிற்கு மேற்செலவு எவ்வளவு ஆகும் என்பதை உணவு விடுதி நடத்துவோரை அழைத்துப் பேசி தெரிந்து கொண்டார். அன்றைய விலை வாசி நிலவரத்திற்குச் சாப்பாட்டிற்கு ஒன்றரை அணா தேவை என்று முடிவு செய்யப்பட்டது.

காமராசர் ஆணைப்படி, பள்ளிப் பகல் உணவுத் திட்டத்தைத் தீட்டினேன்; இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்ட நகலில் சேர்த்தேன்.

திட்டத்தை ஆய்ந்த மூன்று மூத்த அய்.சி.எஸ். அலுவலர்களும் எதிர்த்தார்கள். எடுத்து விட முடிவு செய்தார்கள். நான் அடம் பிடித்தேன். நான் ஒப்பவில்வை என்பதை குறிப்பில் காட்டச் சொன்னேன். உடனே மாறி விட்டார்கள். அமைச்சர் அவை முடிவுக்கு விட்டு விடுவதாக ஒரு மனதாக முடிவு செய்தார்கள். அமைச்சர் அவையில் ஆலோசனைக்கு வந்த போது, வேறு இரு மூத்த அய்.சி.எஸ். அலுவலர்கள், அதனால் பணம் வீணாகுமே ஒழிய, பலன் இராது; அதைக் கை விட்டு விடுங்கள் என்றார்கள். முதல் அமைச்சர் பொறுமையிழக்கவில்லை. பகல் உணவுத் திட்டம் அய்ந்தாண்டுத் திட்டத்தில் சேரட்டும் என்று ஆணையிட்டார். முடிந்ததா எதிர்ப்பு? இல்லை.

இந்தியத் திட்டக் குழுவின் ஆலோசனைக்குப் போன போதும், நம் மூத்த அலுவலர்கள் அதை விட்டு விடச் சொன்னார்கள்; காமராசர் இசையவில்லை. முதல் அமைச்சர் உறுதியாக இருந்ததால், அதை நீக்க முடியவில்லை. அய்ந்தாண்டுத் திட்டத்தில், இடம் பெற்றது. அந்த அடிப்படையில், அடுத்த ஆண்டிற்கான மாநில வரவு செலவுத் திட்டம் தீட்டப்பட்டது. சென்னைச் சட்ட மன்றம் பகல் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை, ஒப்புக் கொண்டது.

‘சாமி வரங் கொடுத்தாலும், பூசாரி வரங் கொடுக்கவில்லை’ என்பார்களே! அதைப் போல், சட்டமன்றம் ஒப்புக் கொண்ட பகல் உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையைக் கோட்டை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இதற்கிடையில், தூத்துக்குடி நகர ஆசிரியர் மன்ற ஆண்டு விழாவில் நான் பேசினேன்.

‘நாட்டுப்புறக் குடியானவர்கள், ஒப்படையானதும், முதல் அளவையை ‘சாமி’க்கும் இரண்டாம் அளவையை ஊர்க்காவலர்களுக்கும் அளந்து வைப்பது மரபு. இனி, மூன்றாவது அளவையை பள்ளிக்கூட அன்ன தானத்திற்கு என்று ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை கூறினேன்.

இச்செய்தியைப் படித்தவர்கள் பலர். நடைமுறைப் படுத்த முதலில் முன் வந்தவர்கள் திருநெல்வேலி மாவட்ட நாகலாபுரத்துப் பெரியோர்கள்.

அவர்கள் களத்து மேட்டு நன்கொடைகளைக் கொண்டு, பகல் உணவுத் திட்டத்தை நடத்த முடிவு எடுத்தார்கள். அச்செய்தி பெரிய எழுத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள், அதே வகையில், பகல் உணவைத் தொடங்க முடிவு செய்தார்கள்.

முழுக்க, முழுக்க மக்கள் விருப்பப்படி, அவர்கள் நன்கொடைகளைக் கொண்டே, பள்ளிக்கூட பகல் உணவுத் திட்டம் 1956ஆம் ஆண்டு ஜூலை திங்கள் தொடங்கிற்று. அது பல மாவட்டங்களுக்கும் பரவிற்று.

நூற்றுக்கணக்கான பகல் உணவுத் திட்டங்களை, முதல் அமைச்சர் காமராசரே தொடங்கி வைத்து ஊக்கினார். இப்படியாக, 4,200 பள்ளிகளுக்கு இது பரவிற்று. அப்பள்ளிகள் அனைத்திலுமாக, ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் பேர்களுக்குச் சோறு போட்டார்கள். மக்கள் இயக்கமாக அவ்வளவு பரவியதைக் கண்டும், அரசாங்க இயந்திரம் இயங்கவில்லை.

இதற்கிடையில். பல பகல் உணவுத் திட்ட விழாக்களில், காமராசர் என்னைப் பாராட்டினார். பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கிய ஊர்களில், குழுக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அக்குழுக்கள் அரசிடம் எவ்வித நிதி உதவியும் பெறவில்லை. தாங்களாகவே நடத்தி வந்த பகல் உணவுத் திட்டத்திற்கு வேண்டுகோள் அச்சிட்டு வழங்கியவர்கள் பலர். அவர்களில் சிலர், அத்திட்டத்தை ‘நெ.து.சு.திட்டம்’ என்று சொல்லி, நிதி உதவி கோரினார்கள். காங்கிரசையோ, காமராசரையோ பிடிக்காத செய்தி இதழ்கள், என்னை முன்னிலைப்படுத்தி, இது பற்றிய செய்திகளை வெளியிட்டன.

முதல் அமைச்சர் காமராசர் அழுக்காறு கொள்ளவில்லை. என் மேல் எரிச்சல் கொள்ளவில்லை. அத்தகைய வெளியீடுகளைப் பொறுத்துக் கொண்டதோடு, என்னைத் தொடர்ந்து பாராட்டினார்.

வடாற்காடு மாவட்டம், வேலூர் பகல் உணவுக் குழு., ‘நெ.து சு.வின் திட்டத்திற்கு உதவுங்கள்’ என்று வெளியிட்ட துண்டு வெளியீட்டை, அமைச்சர் ஒருவர் காமராசரிடம் கொடுத்து, குறைப்பட்டார். அப்போது நிதி அமைச்சர் உடன் இருந்தார்.

‘ஓராண்டுக்கு மேலாக பகல் உணவு நடக்கிறது. அதற்கு, அரசின் ஒப்புதல் இன்னும் அனுப்பவில்லை. அப்படியிருக்க, இது வரை, இயக்குநரை நம்பித்தானே நடத்தி வருகிறார்கள். அவரை நம்பி நடத்துகிறவர்கள், அவர் பெயரைச் சொல்லாமல், எவர் பெயரைச் சொல்லுவார்கள்? அரசு ஆணையிட்டிருந்தால், ‘நெ.து சு. பெயரில் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள்’ என்று கேட்கலாம்’ என்றார்.

விடிவு வந்தது. உடனே அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1956 ஜூலை முதல் 1957 அக்டோபர் முடிய, ஊரார் செலவில் நடத்திக் காட்டிய பிறகே, சென்னை மாநில அரசு பகல் உணவுத் திட்டத்தைத் தனதாக்கி, பெருமை பெற்று, வளர்த்து, கற்போருக்கு அதிகமாக உதவிற்று.

1957ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தொட்டு, பள்ளிக்கூட பகல் உணவுத் திட்டம், அரசின் திட்டமாயிற்று. அதாவது நடை முறைச் செலவில், நூற்றுக்கு அறுபது பங்கை அரசு மான்யமாக வழங்கிற்று.

ஆனால், சுருக்கமான காலவரை வகுத்துக் கொண்டு, அந்தக் காலத்திற்குள், எல்லாப் பள்ளிகளிலும், பகல் உணவு போட்டாக வேண்டுமென்று கெடுபிடி செய்யவில்லை.

ஊர் நன்கொடையாளர் கூடி, விதி முறைகளை முடிவு செய்து கொண்டு, அவற்றையொட்டி தலைவர், பொருளாளர் போன்ற நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஆய்வாளருக்கு எழுதினால், அவர் உணவு மையத்தை ஏற்றுக் கொள்வார். கிடைத்த நன்கொடைக்கு ஏற்ப, எத்தனை பேருக்கு உணவு அளிப்பது என்பதை முடிவு செய்வார்.

முதலில் சிலருக்குப் போட்டு, பின்னர் வளர்ந்து, பலருக்கும் போட்ட பள்ளிகளே ஏராளம். மாவட்டம் முழுவதற்குமாக மாணாக்கர்களை மொத்தமாகக் கணக்கிட்டு, அவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உணவு போடப்பட்டது. பல ஊர்களில் அந்த அளவிற்குக் கூட ஏழைகள் இல்லை. அதனால், அக்கால வரம்பு பற்றி, எந்த ஏழை மாணவனோ, மாணவியோ உணவு பெறாமல் போகவில்லை.

உள்ளூரிலேயே தொடக்கப் பள்ளி. அங்கு எல்லார்க்கும் இலவசக் கல்வி; அதோடு ஏழைகளுக்குப் பகல் உணவு ஆகியவை கல்விப் பயிரை வளர்த்தது. இருப்பினும், பெண்கள், ஆண்கள் அளவு சேரவில்லை. ஆடையில்லாக் குறையே, அதற்குக் காரணம் என்று தெரிந்தது.

முதல் அமைச்சர் காமராசரின் அனுமதியையும், ஆதரவையும், ஊக்கத்தையும் பெற்று இலவசச் சீருடை இயக்கம் தொடங்கப்பட்டது. சிறுமிகளோடு, சிறுவர்களுக்கும் இலவசச் சீருடை கொடுக்கப்பட்டது, ஊருக்கு ஊர் போட்டி போட்டுக் கொண்டு சீருடை வழங்கினார்கள். இது முழுக்க, முழுக்க மக்கள் செலவில் நடந்தது. வசதி படைத்தவர்கள், அதே சீருடையைத் தங்கள் செலவில் தைத்துக் கொண்டார்கள்.

பல சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்டது, சாதி முறையை முறித்தது. சீருடை சாதி வேற்றுமைகளையும், ஏழை பணக்காரர் என்ற தோற்றத்தையும் மாற்றிற்று.

‘எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்,’ என்ற மனப்போக்கை வளர்க்கவே, இரண்டு சுமைகளும் என்பதை ஆசிரியர்களும், பொதுமக்களும், அலுவலர்களும், அமைச்சர்களும் நாடறியக் கூறினார்கள்.

நூறாண்டு காலமாக நடந்து வந்த எண்ணிக்கைக்குச் சரியாக, ஏழெட்டு ஆண்டுகளில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. முந்திய பள்ளிகளில் கூட இடம், தளவாடங்கள், பாடக் கருவிகள் போன்றவை பற்றாக்குறையாக இருந்தன. அவற்றோடு, புதிய பள்ளிகளுக்கு அத்தனையும் புதிதாகத் தேட வேண்டும். ஏறத்தாழ, பதினைந்தாயிரம் புதிய பள்ளிகளுக்குத் தேட வேண்டும். அரசு, அப்பெரும் பொறுப்பை, மக்களிடம் ஒப்படைத்தது. அந்தந்த ஊர் மக்களே தனித் தனியாகவோ, கூட்டாகவோ ஊர்ப் பள்ளியின் தேவைகளை நிறைவு செய்தார்கள். ‘பள்ளிச் சீரமைப்பு இயக்கம்’ என்னும் பெயரில் நடந்த அந்த மாநிலம் தழுவிய மக்கள் உதவி, கல்வியின் பால் கவனத்தைத் திருப்பியது.

தன்மான இயக்கத்தின் தொடக்க காலத்தில், கலப்புத் திருமணம் பற்றியே பேச்சாக இருந்தது போல், காமராசர் காலத்தில் கல்வி பற்றியே எங்கும் பேச்சு.

தொடக்க, உயர் நிலைப் பள்ளிக் கல்வி வளர்ந்தது போலவே, பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியும் வளர்க்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கும், பின் தங்கியோருக்கும் தொழிற்கல்வி தாராளமாகக் கிடைக்க வழி செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது! காமராசரைக் கல்விக் கண் கொடுத்த வள்ளல் என்று போற்றத் தலைப்பட்டார். காமராசர் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, பெரியாரின் தோள்களில் விழுந்தது.

பத்தாண்டு காலம் பெரியாரின் தொண்டும், இயக்கமும் ஏழைகளுக்கு ஆதரவான காமராசரின் ஆட்சியைக் காப்பதிலேயே செலவழிந்தது.

இதற்கிடையில், அனைத்திந்திய கல்விக் கொள்கை என்னும் சாக்கில், இந்தி மொழி எல்லா உயர் நிலைப் பள்ளிகளிலும் கட்டாய பாடமாகுமோ, எனும் அச்சத்திற்கு இடமேற்பட்டது. அதைத் தடுத்து நிறுத்த, பெரியாரைத் தவிர நாதி ஏது?

பெரியார் மூன்றாம் முறை, இந்தி எதிர்ப்பில் முனைய நேரிட்டது. அப்போராட்டத்தின் ஒரு கூறாக, தேசியக் கொடியை எரிக்கப் போவதாக பெரியார் அறிவித்தார். இந்திய நாடு முழுவதும் அது பற்றியே பேச்சு.

பிரதமர் நேரு, அதிர்ச்சி அடைந்தார். முதல் அமைச்சர் காமராசரோடு, படபடப்பாகப் பேசினார், காமராசரோ பொறுமையாகப் பதில் கூறினார்.

‘நாட்டு விடுதலைக்காக—பெரியார் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்? அவருடைய மதிப்பு என்ன? இவற்றை உங்கள் தந்தை மோதிலால் நேருவே, நேரில் அறிந்தவர், பெரியார் காங்கிரசில் இல்லாததால், நான் முதல் அமைச்சராக இருக்கிறேன். அவர் ஏன் இவ்வளவு தீவிர நடவடிக்கைக்குப் போகிறார் என்று தெரிந்து கொள்வது நல்லது’ என்று காமராசர் கூறினார்.

இருவரும் ஆலோசித்து பின், காமராசர் ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, இந்தி ஆட்சி மொழியாகவோ, கட்டாயப் பாடமாகவோ திணிக்கப் படாது,’ என்று அறிக்கை விட்டார். இந்திப் பாடத் தேர்வில், ஓரளவாவது மதிப்பெண் பெற வேண்டுமென்று கூட கட்டாயப்படுத்தவில்லை.

‘தமிழர்களுக்குக் கல்வியும், பதவிகளுமே இரு கண்கள்’ என்ற முடிவில், வாழ்நாள் முழுதும் பாடுபட்ட பெரியார், காமராசரை அடுத்தடுத்து ஆதரித்து, பதவியில் இருக்கச் செய்தது, எத்தகைய விளைவைக் கொடுத்தது?

முதல் அமைச்சர் அண்ணா, முதன் முறை அமெரிக்கா சென்று விட்டுத் திரும்பியதும், இக்கட்டுரையாளராகிய எனக்கு அவரைப் புது தில்லியில் கண்டு உரையாட வாய்ப்பு கிட்டியது.

தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உடன் இருக்க, அண்ணா எனக்குப் பேட்டி கொடுத்தார். என்னைக் கண்டதும், ‘நீங்களும், காமராசரும் அரும்பாடு பட்டு வளர்த்த கல்வியின் வளம், நான் அமெரிக்காவில் இருக்கையில் தெளிவாகத் தெரிந்தது.

‘முன்பெல்லாம், அமெரிக்காவிற்கு அலுவல் பார்க்கச் சென்றவர்கள், சில நகரங்களைச் சேர்ந்தவர்கள்; சில மேட்டுக் குடிகள்.

‘இப்போது தமிழ்நாட்டின் சிற்றூர்களைச் சேர்ந்தவர்கள் பலர், அங்கே அலுவல் பார்க்கிறார்கள்; அநேகமாக எல்லாச் சாதியாரும் இருக்கிறார்கள். எவரும் தாக்குப் பிடிக்க முடியாமல், திரும்பி ஓடி வரும் நிலையில் இல்லை.

‘கல்விப் பெருக்கோடு, அவர்கள் தன்னம்பிக்கைப் பெருக்கும் பெற்று விட்டதால், சிறந்து விளங்குகிறார்கள்.

‘இன்னும் ஒரு பத்தாண்டு காலம், தமிழ் நாட்டு மாணவ மாணவியரை, ஊர் வம்புகளை மறந்து, கல்வியின் பால் நாட்டமாக இருக்குபடிச் செய்து விட்டால், தமிழ்நாட்டுச் சமுதாய நிலை, எளிதாக மாறி விடும்,’ என்று கூறினார்.

‘அண்ணா காட்டிய அவ்வழியையாவது பின் பற்றுங்கள்’ என்று சொல்லவும் ஆள் இல்லையே! இப்படியா, தமிழகம் தாழ்ந்து போக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/33&oldid=1691028" இலிருந்து மீள்விக்கப்பட்டது