பெரியாரும் சமதர்மமும்/34

34. பெரியாரின் இறுதி இலட்சியம்
சமதர்மமே

இந்திய மக்களின் ஏழ்மைக்கும், வறுமைக்கும், கல்லாமைக்கும் காரணம், அன்னிய ஆட்சி மட்டுமே என்று நம்பிய காலத்தில், ஈ.வெ ராமசாமி, இந்திய தேசிய காங்கிரசிலே சேர்ந்து, தமிழ் நாட்டில் அக்கட்சியை வளர்ப்பதில், அரும்பணியாற்றினார்; தியாகம் பல புரிந்தார்; காங்கிரசுக் கட்சியை வளர்க்க, அவர் ஏற்றுக் கொண்ட இழிவும் பெரிது.

ஈ.வெ. ராமசாமியும், திரு. எஸ். சீனிவாச (அய்யங்காரும்) சேர்ந்து, காங்கிரசுப் பிரசாரத்திற்காகத் திண்டுக்கல் சென்றார்கள். அங்கே, ஒரு பார்ப்பன வக்கீல் வீட்டில் தங்க நேர்ந்தது. ஈ.வெ. ராமசாமியைத் தனியாக உட்கார வைத்து, உணவு பரிமாறினார்கள்; பொறுத்துக் கொண்டார் பெரியார்.

மற்றோர் முறை, ஈ.வெ.ரா. பெரிய குளம் சென்றார். அங்கேயும், ஒரு பார்ப்பன வீட்டில் தனியே உட்கார வைத்து, உணவு போட்டார்கள். பொறுத்துக் கொண்டார், தன்மான இயக்கத் தந்தை ஈ. வெ. ராமசாமி.

இஸ்லாமியர்களுக்கு வகுப்புரிமை கொடுக்கச் சித்தமாயிருந்த காங்கிரசு, அதை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டுமென்றும், தமிழ்நாடு காங்கிரசு மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்தார், ஈ.வெ.ரா ; ஆறு முறை முயன்றும், பலன் இல்லை. ஆறாம் முறை, அப்பேச்சையே எடுக்க விடவில்லை.

வெகுண்டு வெளியேறிய, ஈ. வெ. ரா. தன்மான இயக்கங் கண்டார். சூறாவளிப் பயணங்களை மேற்கொண்டார். மூவாயிரம் ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, விம்மியழவும் வலிவிழந்து கிடந்த மக்கள், விடிவெள்ளி கண்டது போல், மகிழ்ந்தார்கள்.சாதிக் கலைப்புப் பணி சூடேறிற்று.

சிந்தனை வானில், மேலும் மேலும் உயர் சாதனைகளைக் கண்டு வந்த பெரியார், வகுப்புரிமை, நோயை மறக்க வைக்கும் தூக்க மாத்திரை; நோய் போக்கும் மருந்தல்ல, என்பதை உணர்ந்தார். சோவியத் நாட்டிற்குச் செல்வதற்கு முன்பே, சமதர்மக் கொள்கையும், பொது உடைமைக் கோட்பாடுமே, தன்மான இயக்கத்தின் குறிக்கோள் என்று மாநில மாநாட்டின் முதல் முடிவாக, முரசு கொட்டச் செய்தார். பெரியார் சமதர்மத்திற்குப் பாடுபட்ட அளவு, வேறு எதற்கும் பாடுபடவில்லை என்பது உண்மை.

சுயமரியாதைச் சமதர்மத் திட்டத்தை அறிவித்து, அதைப் பரப்புவதில் முனைப்பைக் காட்டி, வெற்றி பெறத் தொடங்கினார். அதன் வீச்சைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய ஆட்சி, தந்தை பெரியாரைத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது.

சில ஆண்டுகளுக்குப் பின், பெரியார் சமதர்மப் பணியைப் பின்னுக்குத் தள்ளி, சாதியொழிப்புப் பணியில் ஈடுபட நேர்ந்தாலும், நீதிக் கட்சி சுயமரியாதை - சமதர்மத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டார். ‘ஏழைகளைப் பற்றியே சிந்திக்கிற ஒரே செல்வருமான பெரியார் காலத்திலேயே சமதர்மத்தைக் காண’த் துடித்தார்கள். சிந்தனையாளர்கள்.

வடஇந்திய சமதர்ம சக்திகளும், தென்னிந்திய சமதர்மவாதிகளும் ஒன்றிணைந்து விட்டால், சாதி முறையும், தனியுடைமை முறையும் இடிந்து வீழ்வது உறுதியென அஞ்சிய, இராசகோபாலாச்சாரியார் 1938-இல் கட்டாய இந்தியைத் திணித்தார். பிறர் முன் வந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாததால், பெரியாரும், அவரது இயக்கமும் ஈடுபட நேர்ந்தது. மீண்டும் 1948இல் இந்தித் திணிப்பு வந்தது. அப்போதும், பெரியார் இயக்கமே போராட வேண்டியதாயிற்று. இப்படியிரு முறை சமதர்மப் பயணம் தடைப்பட்டது. 1949இல் ஏற்பட்ட கட்சிப் பிரிவினை, பயணத்தைப் பாழாக்கிற்று.

பெரியார் திராவிட நாடு பிரிவினைக்குப் போராடியது ஏன்? பெரிய இந்தியாவில், சமதர்மத்தைக் கொண்டு வருவதை விட, விரைவாகவும், எளிதாகவும் திராவிட நாட்டில் கொண்டு வர முடியும் என்று நம்பியதால். இந்தியா முழுவதும், சமதர்ம முறையின் கீழ் வரக் கூடுமானால், திராவிட நாடு தேவை இல்லை என்றே பெரியார் அறிவித்தார்.

குலக்கல்வி முறை என்னும் திசை திருப்பும் முயற்சியில், இராசகோபாலாச்சாரியார் வென்றார். பெரியார் போராடி, அப்பீடையைத் தொலைத்தாலும், அம்முயற்சி, நம் உழைப்பையும், சிந்தனையையும் விழுங்கி விட்டது.

காமராசர் காலத்தில் மீண்டும் இந்தியைத் திணிக்க, தில்லியிலிருந்து தூண்டுதவ் வந்தது. அதைத் தடுக்க மறுபடியும் அதிர்ச்சி மருத்துவம் செய்தார், பெரியார். தேசியக் கொடியை எரிக்கப் போவதாக அறிவித்தார். அம்மருத்துவம் பலித்தது. கட்டாய இந்தி நுழையவில்லை.

இராசகோபாலாச்சாரியார். குலக் கல்வியைக் கொண்டு வந்து, பல கட்சியினர்களின் ஒருமித்த எதிர்ப்பை வரவழைத்துக் கொண்ட போது, வலிமை கொண்ட கட்சியான பொது உடைமைக் கட்சி, அவருக்கு மறைமுகமாக உதவி விட்டது என்ற தோற்றம் ஏற்பட்டது. அதனால்,. திராவிடர் கழகத்திற்கும், பொது உடைமைக் கட்சிக்குமிடையில் ஏற்பட்டிருந்த நெருக்கமான தோழமை முறிந்தது. அதற்கு மருத்துவம் செய்து, பொருத்திக் கொள்வதற்குப் பதில், இரு கட்சியினரும் ‘ஆகாத பெண்டாட்டி, கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’ என்னும் பாணியில், செயல்படத் தொடங்கினார்கள். இரு தரப்பிலும், தியாகத்திற்குக் குறைவில்லை. பொதுக் குறிக்கோளை அடைவதற்குப் பயன்பட வேண்டிய தெளிவு, உழைப்பு, தியாகம் ஆகியவை ஒன்றிற்கு ஒன்று தடைக் கல்லாக இருப்பதற்குப் பயன்பட்டன. வேதனை தரும் நிலை.

சாதிக் கலைப்பு, சாதிகளை வளர்க்கும் சமய நம்பிக்கை ஒழிப்பு, ஆகியவை புரட்சிக்கு முன்னணி வேலைகள் ஆகும். அவற்றில் முனைப்பு காட்டாவிட்டாலும் குறுக்கே நிற்காமலாவது, விலகியிருந்தால், சமதர்மக் கொள்கையின் வெற்றிக்கு வாய்ப்பு நெருங்கியிருக்கும். சமதர்ம வாய்ப்பு விரைந்து விலகிக் கொண்டே இருக்கிறது.

முப்பதுகளில் தந்தை பெரியார், சமதர்மக் கொள்கையைப் பரப்புவதில், பெற்ற சாதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். அடக்கு முறை காலத்தில் பெரியாரும், அவரது தளபதியாம் குத்தூசி குருசாமியும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவர்கள் சிலருக்கும் பாதுகாவலர்களாகச் செயல்பட்டதையும் மறந்தது போகட்டும். பொதுத் தொண்டில் நன்றியை விட, அடுத்து நடக்க வேண்டியதே முக்கியம்.

கடவுளையே கேள்விக் குறியாக்கும் துணிச்சல் பெற்று விட்டால், அச்சமுதாயம் சமதர்ம வார்ப்புக்கு, ஆயத்தமாகி விடும் என்பதை உணர முடியாத குழந்தைகளா கம்யூனிஸ்ட் கட்சிகளை நடத்துபவர்கள்? சமதர்ம வெற்றியை நினைத்தாகிலும் வம்புகளை, வலியத் தேடும் போக்கைக் கை விட்டிருக்கலாம். மாறாக, தொடர்ந்து ‘கோப அரசியல்’ நடத்தி, உடைந்து, எங்கெங்கோ அண்ட வேண்டிய நிலைக்கு ஆளாக்கிக் கொண்டே இருக்கிறார்களே? கூர்த்த மதி—வியத்தகு தியாகம்—நாடு தழுவிய அமைப்பு—அனைத்தும் வீணாகிக் கொண்டே இருக்கிறதே!

கிடைக்கும் வாய்ப்பு ஒவ்வொன்றையும், பொது உடைமைக்கு ஆதரவு தேடும் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மூன்றாம் தர பொது ஊழியர்கள் போல், காற்றோடு போக வேண்டிய நிகழ்ச்சிகளை, செய்திகளைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதி நூற்றாண்டு விழா, கடைசியாகக் கிடைத்த பெரு வாய்ப்பு. புரட்சி இயக்கத்தை வளர்க்க, ஓராண்டில் எவ்வளவு ஆட்களை—நேரத்தை—முயற்சிகளைச் செலவிட வேண்டுமோ, அவ்வளவை தோழர்கள் இவ்விழாவில் செலவிட்டார்கள். அதைக் கொண்டு, சமதர்ம உணர்வைப் பொது மக்களிடம் வளர்த்துக் கொண்டார்களா? பொது உடைமை ஆதரவாளர்களைப் பெருக்கிக் கொண்டார்களா? இல்லை; இல்லை.

அரசும், பிற அமைப்புகளும் பாரதி நூற்றாண்டு விழாவை விழலுக்கிறைத்த நீராக்கியது போலவே, கம்யூனிஸ்ட் கட்சியின் ஊக்குதலால் நடத்தப்பட்ட பாரதி விழாக்கள், ‘ஆரியர்’ என்பதை நியாயப்படுத்தவும், அதற்கு வலிந்து பொருள் கூறவும், பாரதியின் பக்திப் பாடல்களைப் பரப்புவதிலும் பாழாகி விட்டன.

பக்திப் பாடல்கள், எத்தனையோ கவிஞர்களிடம் பெறலாம்! பாரதியின் தனித் தன்மைக்கு அடையாளம் பக்திப் பாடலா? சமதர்மப் பாடலா? சாதி மறுப்புப் பாடலா? ஆரியர் சிறப்புப் பாடலா? சமத்துவப் பாடலா?

காலட்சேபஞ் செய்து பிழைப்பு நடத்துகிறவர்களைப் போல, பாரதியின் பக்திப் பாடல்களை உச்சி மேல் வைத்துப் போற்றி, ‘பண்பாடு பண்பாடு’ என்று முழங்கி, சத்தியம் செய்வதில் போட்டி போடும் அறிஞர்களை நம்பி, வாழும் பாழ் வழிக்கு ஆளாகிக் கொள்கிறார்கள் அருமைத் தோழர்கள்.

பெரியாரும், அவரது இயக்கமும் பொது உடைமை இயக்கத்தைப் போல், தன்னேரில்லாத வரலாறும், தொண்டும், தியாகமும், துணிவும், உறுதியும் உடையது. இரண்டாவது உலகப் போரின் இறுதியில், அமெரிக்காவிற்கு அணு குண்டு கிடைத்தது போல, பொது உடைமைக் கொள்கைக்கு பெரியார் கிடைத்தார். அதனால், அடக்கு முறையை வெல்ல முடிந்ததோடு, 1952 தேர்தலில் முன்பின் அறியாத வெற்றியைப் பெற முடிந்தது. கம்யூனிஸ்ட்டுகள், இராசகோபாலாச்சாரியாரை ஆதரித்து உதவியதாகப் பெரியார் கணக்குப் போட்டது தவறாக இருந்தால், அவரைக் கண்டு பேசி, விளக்கியிருந்தால், அது சமதர்மக் கொள்கைக்கு உதவியிருக்கும். , தேவையற்ற இந்தித் திணிப்பு, இந்தி எதிர்ப்பு என்பது இந்திய சமதர்ம வாதிகள் உண்மையாக இணைய முடியாதபடி செய்திருப்பதைப் போல, உப்புக்குதவாத தப்பெண்ணம் சென்ற முப்பது ஆண்டுகளில் பெருமரமாக வளர்ந்தது: திராவிடர் கழகமும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் விலகிக் கொண்டே போகின்றன. பரஸ்பர பரிவு காட்ட வேண்டிய வேளைகளில், சில்லறை வீரங்களைக் காட்டி, சவடால் அடிக்கின்றன.

‘ஆரியர்’ என்னும் எருக்கந் தழைகளையும், ‘திராவிடர்’ என்னும் ஒதியந் தழைகளையும் உரமாக்கிப் போட்டு, மனிதர் என்கிற மன நிலையை உருவாக்க வேண்டிய கால கட்டத்தில், ஆரியத்திற்கு முட்டுக் கொடுக்க முயலும் மூத்த கம்யூனிஸ்டுகளைக் கண்டு வெருளுவதற்குப் பதில், ‘அந்தோ! அவலம்’ என்று கண்ணீர் வடிக்கிறேன்.

சட்ட மன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் சிலருக்கு இடம் பிடிப்பதற்கு, இன்றைய போக்கு போதும். வீட்டை விட்டு ஓடி வந்து விட்ட சிறுவன், எவர் எவருக்கோ சிற்றாளாக இருக்க வேண்டியதாகி விடுகிறது. அந்நிலைமைக்கு, நம் இரு தரப்பு முற்போக்குவாதிகள், தியாகிகள் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? சமதர்மக் குறிக்கோள் நிறைவேற பதவி வேட்டைக்காரர்களின் ஆதரவு எப்படிப் பயன்படும்? முப்பது ஆண்டுகளில், எல்லாக் கட்சிகளையும் ஆதரித்துப் பார்த்த பிறகும், தொண்டை வீணாக்கலாமா?

சமதர்மம் என்பது எவருடைய ‘வாணிக முத்திரை’யும் அல்ல; அதற்குப் பாடுபடும் பொறுப்பு, எல்லார்க்கும் உண்டு. தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும், பிறவி இழிவு என்னும் என்புருக்கி நோயும், ஏழை பணக்காரத் தன்மை என்னும் நச்சுக் காய்ச்சலும், சேர்ந்து நம் மக்களை வாட்டுகின்றன. இரண்டிற்குமே ஒரே நேரத்தில், மருத்துவம் பார்க்க வேண்டும். கடும் நோய்க்குப் பத்தியம் போல், சிந்தனை நோய்க்குப் பத்தியம் கடவுள் மறுப்பு. அதுவே மருந்து அல்ல. எனவேதான், தந்தை பெரியார் கடவுள் மறுப்போடு நிற்கவில்லை. அதற்கு மேலும் சென்று, சுயமரியாதை சமதர்மத் திட்டத்தைக் கடைசிக் காலம் வரை பரப்பினார்.

தந்தை பெரியார் மறைவதற்கு 76 நாட்களுக்கு முன்னர், 9-10-1973 நாளைய விடுலை தலையங்கம் கூறுவதைக் கவனித்து நடப்போம்.

‘தனி மனிதச் சொத்துரிமை ஒழிய வேண்டும்; பிறர் உழைப்பில், படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும், பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் கவுரமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்,’ என்பது பெரியார் கட்டளை.

பெரியாரைப் பின்பற்றுவோர், கடவுள் மறுப்பாளராக இருப்பது போதாது; சாதிக் கலைப்பாளராகச் செயல் பட வேண்டும். வகுப்புரிமைக்குப் போராடுவதோடு நிறைவு கொள்ளக் கூடாது; சமதர்ம முறையைக் கொண்டு வருவதில் முனைப்பாயிருக்க வேண்டும். அதுவே, எல்லா ஆதிக்கங்களையும், ஆணவங்களையும் தூக்கி எறியும்.

முடிவுற்றது

இவர்தான் நெ. து. சு.

1912-ஆம் ஆண்டில் செங்கற்பட்டு மாவட்டம் நெய்யாடு பாக்கம் கிராமத்தில் நெ.ச.துரைசாமி—சாரதாம்பாள் வாழ்க்கைத் துணைவர்களுக்குப் பிறந்தவர். 1929-ஆம் ஆண்டில் செங்கற்பட்டில், பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாநாட்டுக்கு நேரில் சென்று, கண்டு—கேட்டு உணர்வு பெற்றவர்.

சுயமரியாதை இயக்கத்துடன் அன்று நெ. து. சு. அவர்கள் தொடங்கிய பயணம், இன்றும் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில்…

கல்லூரிக் கல்வியை ஒழுங்காக முடித்து, எம்.ஏ., எல்.டி., பட்டங்களைப் பெற்றார். அரசுப் பணியில் சேர்ந்தார். கலப்புத் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையைத் தொடங்கினார். சுயமரியாதைச் சமதர்மக்காரராக வாழ்ந்து கொண்டே, அரசுப் பணிகளில் உயர் பதவிகளைப் பெற்றார்.

தமிழ்நாடு பொதுக் கல்வி மற்றும் பொது நூலக இயக்குநராக, இந்திய அரசின் இணை கல்வி ஆலோசகராக, தமிழ்நாட்டின் தலைமைக் கல்வி ஆலோசகராக மற்றும் கூடுதல் செயலாளராக—-சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக—இவ்வாறாகப் பல பெரிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார்.

இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்ற இவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும்—இன்றும்—தம் 75-ஆம் வயதிலும், இந்திய-சோவியத் பண்பாட்டுக் கழகத்தின் (ISCUS) தமிழ் மாநிலக் குழுவின் தலைவராகவும், அறிவு வழி ஏட்டின் சிறப்பாசிரியராகவும் செயல்படும் தோழர் நெ .து .சு. அவர்கள் சுயமரியாதை—சமதர்மக் கொள்கை பரப்பலுக்கு நாள்தோறும் எழுதியும், பேசியும் தொண்டாற்றி வருகிறார்.

புரட்சியாளர் பெரியார், கல்வி வள்ளல் காமராசர், லெனின் வாழ்கிறார், நஞ்சுண்டவர் ஆகிய நூல்களின் ஆசிரியர். பயண நூல்கள் எழுதுவதில் வல்லவர். ‘நினைவு அலைகள்’ என்ற பெயரில், இவர் எழுதிய தன் வரலாற்று நூல் இரண்டு தொகுதிகள் வெளி வந்துள்ளன. மூன்றாவது தொகுதி வெளி வர உள்ளது. நாற்பதுக்கும் மேலான நூல்களை இது வரை எழுதியுள்ளார்.

—கலசம்

புதுவாழ்வுப் பதிப்பகம்
23, நான்காவது முதன்மைச் சாலை,
கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-600 020.

மக்கள் நெஞ்சம்
4 (11), சி.என்.கே. சந்து,
சேப்பாக்கம், சென்னை-600 005.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/34&oldid=1691029" இலிருந்து மீள்விக்கப்பட்டது