பெருங்கதை/1 47 உரிமை விலாவணை

  • பாடல் மூலம்

1 47 உரிமை விலாவணை

வராகன் செயல்

தொகு

செய்வதை யறியா ராகிப் பல்லவர்
கைவிரல் பிசைந்து பையென வருவழி
வில்கைக் கொண்டவன் விடுக்கப் பட்ட
வல்வினைக் கொடுந்தொழில் வராகன் வந்துதன்
கோமக னிருந்த கோயி னெடுங்கடைத் 5
மோரணக் கந்தின் றாண்முதல் பொருந்திக்
கடிகமழ் நறுந்தார்க் காவலற் குறுகி
அடியுறை யருண்மொழி யான்பணிந் துரைப்பச்
செவ்வி யறிந்து நொவ்விதின் வருகெனக்
கோற்றொழி லவற்குக் கூறின னிற்ப 10

நிமித்திகன் கூற்று

தொகு

ஈரிதழ்த் தாரோ யிற்றை நாளால்
காரொ டுறந்தவிக் கடுவளி நிமித்தம்
ஊரொ டுறந்த வுறுகண் காட்டி
இன்னா வின்ப நின்வயிற் றருமெனத்
தொன்னூ லாளன் றோன்றக் கூற 15

பிரச்சோதனன் வினவுதல்

தொகு

இன்னா வின்பத் தியற்கை யென்னென
மன்னவன் வினாய மாத்திரைக் கண்ணே

வாயில்காவலன் செயல்

தொகு

செறியிலைப் பொற்குழை சிறப்பொடு தூக்கிய
சிறுதுளைக் காதிற் செங்கட் செந்நோக்
கருளொடு படாஅ வறிதெழு சினத்தன் 20
ஆர மார்ப னருமறைப் பள்ளியுள்
உற்றது கூறுங் கொற்ற வாயிலன்
கோலொடும் வாளொடுங் கூப்பிய கையன்
முன்பணிந் திறைஞ்சிய தன்மை கண்டே
செந்தா மரைக்கணிற் செவ்விதி நோக்கி 25
வந்தது கூறென வணங்கி வாய்புதைத்
தந்தர விசும்பினு மணிநில வரைப்பினும்
பெண்ணே ருருவம் பிறர்தமக் கில்லா
நுண்ணேர் மருங்கினும் மடித்தியெம் பெலுமான்
வடிவேற் றடங்கண் வாசவ தத்தைக் 30
கடிவழிப் படூஉ முரிமையுட் கம்மியன்
வல்வில் லிளையன் வராக னென்போன்
சொல்லுவ துண்டெனச் செவ்வி வேண்டி
நின்றனன் பல்லாண் டென்றவ னிறைஞ்ச

பிரச்சோதனன் செயல்

தொகு

அகன்மொழி தெரியு மருமறைப் பொழுதும் 35
மகண்மொழி யல்லது மற்றைய கேளா
இயற்கைய னாதலிற் பெயர்த்துப்பிறி துரையான்
வருக மற்றவன் வல்விரைந் தென்றலின்

வாயில் காவலன் செயல்

தொகு

ஆணை வேந்த னருங்கல நிதியம்
பேணாது பிழைத்த காவ லாளன் 40
திருத்தகை மார்பற் குரைப்பதொன் றுள்ளான்
நின்றன னிமைப்பிடைச் சென்றன னுணர்த்தக்

வராகன் செயல்

தொகு

கோயிற் கோதிய கோல முடைத்தாய்
வாயிலுந் தகைப்பும் வகையமைந் தியற்றிய
முளைக்கோற் பெருந்திரை வளைத்த வட்டத்து 45
நிலாவெண் மாடமொ டுள்ளறை சூழ்ந்த
உலாவு மண்டபத் துலாவுத லின்றி
அங்கண் ஞாலத் தழலுமிழ்ந் திமைக்கும்
செங்கதிர்ச் செல்வனிற் சீர்பெறத் தோன்றிச்
சீயஞ் சுமந்த செம்பொ னாசனத் 50
தாய்மணி யணைசார்ந் தரத்த மீக்கோள்
தாண்முத லசைத்தோர் தாமரைக் கையன்
இருந்த மன்னவற் கெழுகோ லெல்லையுட்
பொருந்தல் செல்லாது புக்கவ னிறைஞ்ச
வண்ணமும் வடிவு நோக்கி மற்றவன் 55
கண்ணி வந்தது கடுமை சேர்ந்ததென்
றெண்ணிய விறைவ னிருகோ லெல்லையுள்
துன்னக் கூஉய் மின்னிழை பக்கம்
மாற்ற முரையென மன்னவன் கேட்ப
இருநில மடந்தை திருமொழி கேட்டவட் 60
கெதிர்மொழி கொடுப்போன் போல விறைஞ்சப்
பின்னுந் தானே மன்னவன் வினவ
மறுமொழி கொடாஅ மம்மர் கண்டவன்
உறுமொழி கேட்கு முள்ள மூர்தர
நெஞ்சி னஞ்சாது நிகழ்ந்தது கூறென 65
றாருயிர்க் கபயங் கோமான் கொடுப்ப
எரியுறு மெழுகி னுருகிய முகத்தன்
ஆர மார்பநின் னருள்வகை யாங்கொல்
கார்முகத் தெழுந்தது கடுவளி வளியென
நகைத்தொழி லறியா நன்னகர் வரைப்பகம் 70
புகைக்கொடி சுமந்து பொங்கெரி தோன்றப்
புறமதிற் சேரியுங் குறுகுதற் கரிதாக்
காற்று மெரியுங் கலந்துடன் றோன்ற
எப்பான் மருங்கினு மப்பான் மலைக்குநர்த்
தப்புத லல்லது மிக்குயல் காணோம் 75
கூற்று மஞ்சுநின் னாற்ற லாணை
உரைப்பவு மொழியாது தலைத்தலை சிறப்பநின்
அடிநிழல் வட்ட மடையத் தரூஉம்
கடியர ணின்மையிற் கையற வெய்தி
வெம்முரண் வேழத்து வெஞ்சின மடக்கிய 80
உண்முர ணறாஅ வுதயண குமரனொ
டுடன்பிடி யேற்ற லுற்றென மாகித்
தடம்பெருங் கண்ணியைத் தலைவயிற் பணிந்திரந்
தேற்றின மேற்றலுங் காற்றெனக் கடாஅய்
எம்மொடு படாஅ னிந்நகர் குறுகான் 85
தன்னகர்க் கெடுத்த தருக்கின னாதலின்
ஆயிரத் தைவர் காவற் காளையர்
மாயிரு ஞாலத்து மன்னுயி ருண்ணும்
கூற்றெனத் தொடர வேற்றுமுன் விலங்கி
வயவ ரென்றியாம் வகுக்கப் பட்டோர் 90
பயவ ரன்றிப் பணிந்தவர் தொலைய
வென்றி யெய்திக் கொன்றுபலர் திரிதரப்
பின்றையு நின்றியான் பிடிப்பின் செல்வுழி
அடுத்த காத லணங்கைத் தந்தவன்
விடுக்கப் போந்தனென் மீண்டிது கூறெனத் 95
தடக்கை கூப்பிநின் னடித்திசைக் கிறைஞ்ச
ஒழிந்தியான் வந்தன னிகழ்ந்ததை நினைப்பினோர்
மாயம் போலுங் காவல வருளென

பிரச்சோதனன் செயல்

தொகு

உரைத்த மாற்ற முணரக் கேட்டே
செருச்செய் நெடுங்கண் டீயெனச் சிவப்பப் 100
பிரச்சோ தனனெனும் பெரும்பெயர் விளக்கம்
மகிழ்ச்சி யெய்தி வத்தவற் றெளிந்த
இகழ்ச்சி யளற்று ளிறங்கிற் றின்றெனச்
சுற்ற மாக்களைச் சுடுவான் போலப்
பொற்றார் மார்பன் பொங்குபு வெகுண்டு 105
முகைநகை முத்தொடு தகைமுடி தயங்க
அருவரை யகலத் தாரம் புரளத்
திருமுடி யண்ண றீப்படச் சீறி
எழுவுறழ் திணிணோ ளெடுத்தன னோச்சிப்
பொழிமணித் திண்டூண் பொறிபடப் புடைத்து 110
மாற்றுச் சிங்கத்து மறக்குரல் கேட்ட
ஏற்றுச் சிங்கத்தி னிடித்தெழுந் துரறிக்
கொடியணி தேருங் குதிரையும் யானையும்
வடிவே லிளையரும் வல்விரைந் தோடி
எய்கணை யியற்கை யியற்றமை யிரும்பிடி 115
கையகம் புக்க தன்றியிவ் வையகத்
தறத்தொடு பணர்ந்த துறைப்புன லாட்டத்
தற்றமும் பிறவு மொற்றுவன னோக்கி
வள்ளி மருங்கின் வயங்கிழைத் தழீஇ
எள்ளி யிறந்த வின்னா மன்னனைப் 120
பற்றுபு தம்மெனப் படையுறப் படுத்து
ஞாலந் தரும்பொரு ளியற்பட நாடிய
சாலங் காயனைத் தலைக்கை யாக்கப்
பல்பொருள் பொதிந்த பயந்தெரி பனுவற்
பரதகன் றன்னொடு பயந்தீர் நணபின் 125
மந்திர மாக்களு மந்த ணாளரும்
அகத்தாற் குழீஇய வ்வைய னாதலின்
முகைத்தார் வேந்தற்கு முகத்தெழு பெருஞ்சினம்
புனற்படு நெருப்பிற் பொம்மென வுரறி
ஆறிய வண்ண மணிமுக நோக்கித் 130
தெளிதரு கிளவி செவ்விதிற் கேட்ப

சாலங்காயன் கூற்று

தொகு

உளைவன செய்த வுதயண குமரனைத்
தளைவயி னகற்றலுங் கிளைவயிற் பெயர்த்தலும்
ஆர மார்பவஃ தியாவரு மறிவர்
வருமுலை யாகத்து வணங்குகொடி மருங்கில் 135
திருமக டன்வயிற் றெரிந்தனை காணிற்
குலத்தினு குணத்தினு நலத்தகு நண்பினும்
நிலத்தினி னின்னொடு நிகர்க்குந னாதலின்
மேல்வகை விதியின் விழுமியோர் வகுத்த
பால்வகை மற்றிது பழிக்குந ரில்லை 140
ஆறென வருளா யண்ணன்மற் றதுநீ
வேறென வருளிய வேட்கை யுண்டெனின்
முன்னிலை முயற்சியி னன்றி மற்றினிப்
பின்னிலை முயற்சியிற் பெயர்த்தனந் தருதல்
திருவளர் மார்ப தெளிந்தனை யாகென 145
ஒருபே ரமைச்ச னுள்விரித் துரைப்ப

பிரச்சோதனன் செயல்

தொகு

எறிநீர் வரைப்பி னெப்பொரு ளாயினும்
என்னி ன்றிவோ ரில்லென மதிக்கும்
மன்னருண் மன்னன் மனத்திற் றேறி
இடத்தோ ளன்ன விடற்கருங் காதல் 150
உரிமை தேவியர்க் கொருமீக் கூரிய
பட்டத் தேவிக்குப் பட்டதை யெல்லாம்
ஏனோ ருணர்த்துத னீக்கிக் கோமான்
தானே யுணர்த்துந் தனமைய னாகி
அரசு கொற்றத் தருங்கடம் பூண்ட 155
முரசெறி வள்ளுவ முதியனைத் தரீஇக்
கார்பனி துளித்தக் கதிர்கண் புதைஇய
வார்பனி மாலைநம் வளநகர் புகுதல்
புனலாடு விழவிற் பொலிவின் றாதலின்
கோலங் குயிற்றிக் கோடணை யியற்றிக் 160
காலை புகுதல் காவலன் பணியெனத்
துறைநக ரறியப் பறையெடுத் தறைகெனச்
செல்சுட ரந்தி நல்லிய லோம்பிப்
பள்ளிக் கோயிலுட் பல்லிய மெடுப்ப
ஆய்பூஞ சேக்கையு ளருமணி சுடரப் 165
பாயல் கோடல் பலரறி வுறீஇய
கைக்கோ லிளையருங் காஞ்சுகி முதியரும்
அகக்கோ ளாளரொ டருமறை யாகப்
பண்டிவட் புகூஉம் பொங்குபுனல் வழவணி
ஆன்றவ ணிலனா யாவித் திழிந்த 170
இந்திர குமர னியற்கைய னாகிக்
கஞ்சிகைச் சிவிகையுட் கரணத் தொடுங்கி

பள்ளியறை

தொகு

வேண்டிடந் தோறுந் தூண்டுதிரிக் மொளீஇக்
கைவயிற் கொண்ட நெய்யகற் சொரியும்
யவனப் பாவை யணிவிளக் கழலத் 175
திருந்துசா லேகமொடு பொருந்துகத வொற்றிப்
பளிக்குமணி யிழிகைப் பவழக் கைவினைப்
புலிக்கா லமளிப் பொங்குபட் டசைஇ
எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படம் விரித்துக்
கலத்தி னல்லது காலின் வாரா 180
நலத்தகு பல்படை யழற்றற் குரியவை
ஆய்வனர் படுத்த வம்பூம் பள்ளியுட்

திருமாதேவியின் உட்கோள்

தொகு

பெருமூ தாட்டியர் பேணுவனர் சூழத்
திருமா தேவி யருநக ருற்ற
ஆகுலப் பூசலு மழலு மற்றிவை 185
காவல னறிந்த கருத்தின னாகியென்
வாசவ தத்தையை வலிதிற்கொண் டேகினும்
தீது நிகழினு மேத மில்லென
நினைப்புள் ளுறுத்த நெஞ்சின ளாகி
மனத்து ளோர்க்கு மம்மர் தீர 190
அருங்கடி காவல ரஞ்சின ரெதிர்கொள
இருஞ்சின வேந்தன் பெருஞ்சின மகற்றி
வாயிலுள் வருமிடத் தெதிர்கொளற் பொருட்டாக்
கோயிலு ளிருந்த கோப்பெருந் தேவிக்குப்

பிரச்சோதனன் செயல்

தொகு

பொலப்பூங் குடத்திற் போற்றித் தந்த 195
தலைப்பூ நறுநீர் சிறப்பு முந்துறீஇத்
தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து
வெண்முகிற் பொடிக்கும் வெய்யோன் போலக்
கைபுனை சிவிகையிற் கஞ்சிகை நீக்கி
அம்பூந் தானை யடிமுதற் றடவர 200
வெம்போர் வேந்தன் மெல்லென விழிந்து
நெடுவெண் டிங்க ளகடுறத் தழுவும்
கடிவெண் மாடத்துக் கன்னியங் கடிமனை
இல்லாத் தன்மையிற் புல்லெனத் தோன்றும்
பையுட் செல்வத்துக் கையற வெய்திப் 205
பொன்னு மணியும் புகரறப் புனைந்த
தொன்னா டமரத் துணைமுதற் பொறித்த
தோடமை கொளுவத் தூடுற வளைஇத்
தாழ்காழ் நகையொடு தாமந் துயல்வரும்
மாசி றிண்ணிலை வாயிற் பேரறைப் 210
பள்ளி மண்டபத் தொள்ளொளி கிளரத்
திருவுகொ ளுரோணி யுருவுநலம் விரும்பிய
விரிகதிர்ச் செல்வனின் வியப்பத் தோன்றிப்
பாயல் கொள்ளான் பட்டத் தேவி
சாயற் செல்வந் தலையளித் தோம்பி 215
அணியிய லமிர்த மாற்றிய பின்னவட்
டெளியக் காட்டுந் தெரிவின னாகிப்
பூங்கொடி புனைந்த வீங்குமுலை யாகத்து
வாங்கமைப் பணைத்தோள் வாசவ தத்தையை
நல்லியாழ் நவிற்றிய நளிமணிக் கொடும்பூண் 220
உறுவரை மார்பி னுதயண குமரன்
மறுவி றொன்று மனைவளந் தரூஉம்
செல்வி யாகச் சிறப்பொடு சேர்த்தியவன்
நாட்டகம் புகுத்தற்கு வேட்ட தென்மனன்
ஒண்குழை மடவோ யுவத்தி நோவென 225

திருமாதேவி கூற்று

தொகு

அருமையிற் பெற்றநும் மடித்தி தன்வயிற்
றிருமணச் சூழ்ச்சி யெழுமைத் தாயினும்
ஏத மின்றா லின்பம் பயத்தலின்
யானைக் கெழுந்த வெஞ்சின மடக்கிநின்
தானைத் தலைத்தா டந்த ஞான்றவன் 230
நிலையிற் றிரியா விளமைக் கோலம்
உயிர்பிற் றிரியா தொத்துவழி வந்த
மகளுடைத் தாயர் மனத்தகம் புகற்றலின்
யானு மன்றே பேணினெ னடிகள்
மான மில்லை மற்றவன் மாட்டென 235

பிரச்சோதனன் கூற்று

தொகு

உவந்த வொள்ளிழை யுள்ள நோக்கி
திகழ்ந்த திற்றென நெருப்பு நுனையுறீஇச்
சுடுநா ராசஞ் செவிசெறித் தாங்கு
வடிவேற் றானை வத்தவன் றன்னொடு
பாவை பிரிவினைக் காவல ணுணர்த்தலின் 240

திருமாதேவி வருந்தல்

தொகு

இசைகொள் சீறியா ழின்னிசை கேட்ட
அசுண நன்மா வந்நிலைக் கண்ணே
பறையொலி கேட்டுத்தன் படிமறந் ததுபோல்
நீலத்தன்ன கோலத் தடங்கண்
முத்துற ழாலி தத்துவன தவழப் 245
பெறலரு மென்மகள் பிரிந்தன ணம்மெனக்
கூறிய கிளவி கூற்றுவ னிமிழ்த்த
பாசம் போலப் பையுள் செய்ய
அலமந் தழூஉ மஞ்சி லோதியை

பிரச்சோதனன் தேற்றல்

தொகு

முகைமலர்ப் பைந்தார் குழைய முயங்கி 250
மடவை மன்ற மடவோய் மண்மிசை
உடைவயிற் பிரியா துறைநரு முளரோ
இற்றுங் கேண்மதி முற்றிழை மகளிர்
தத்துநீர்ப் பெருங்கடற் சங்குபொறை யுயிர்த்த
நித்திலத் தன்னர் நினைந்தனை காணென 255
ஆர்வக் காதலன் காரணக் கட்டுரை
இகப்ப விடாஅன் றெளிப்பத் தேறிக்
கயல்புரை கண்ணி யியல்புகிளந் தேத்திப்
பொன்னணி நகரமொடு தம்மனை புலம்ப
வான்மதி யிழந்த மீனினம் போலப் 260
பொலிவின் றாகிப் புல்லென் கோலமொடு
கலாவேற் காவலன் மடமகட் காணாது
விலாவித் தன்றால் விழவணி நகரென்.

1 47 உரிமை விலாவணை முற்றிற்று.