பெருங்கதை/2 1 நகர் கண்டது

  • பாடல் மூலம்

இரண்டாவது இலாவாண காண்டம் 2 1 நகர் கண்டது

நகர மாந்தர் செயல்

தொகு

சயந்தியம் பெரும்பதி யியைந்தகம் புகுதலின்
தாதுமல ரணிந்த வீதி தோறும்
பழக்குலைக் கமுகும் விழுக்குலை வாழையும்
கரும்பு மிஞ்சியு மொருங்குட னிரைத்து
முத்துத் தரியமும் பவழப் பிணையலும் 5
ஒத்த தாம மொருங்குடன் பிணைஇப்
பூரணப் பெருங்கடைத் நோரண நாட்டி
அருக்கன் வெவ்வழ லாற்றுவ போல
விரித்த பூங்கொடி வேறுபல நுடங்க
எண்வகைச் சிறப்பொடு கண்ணணங் கெய்த 10
விடாஅ விளக்கொளி வெண்பூந் தாமமொடு
படாகையும் விதானமும் பாற்கடல் கடுப்ப
இருமயிர் முரச முருமென வுரறக்
கடமுழக் கின்னிசை யிடையிடே யியம்ப
வெந்துய ரருவினை வீட்டிய வண்ணலை 15
இந்திர வுலக மெதிர்கொண் டாங்கு
மகளிரு மைந்தருந் துகணிலந் துளங்க
நற்பெருங் கடைமுத னண்ணுவனர் குழீஇப்
பொற்பெருங் குடத்திற் புதுநீர் விலங்கி

நகரமாந்தர் உதயணனுக்கு உபசாரங்கூறி வரவேற்றல்

தொகு

இருள்கண் புதைத்த விருங்கண் ஞாலத்து 20
விரிகதிர் பரப்பிய வெய்யோன் போல
வெங்க ணிருட்டுய ரிங்க ணீக்கிய
பொங்குமலர்த் தாரோய் புகுகென் போரும்
…….ளுட்கா தொழுகிற்
பகைவ ரெண்ணம் பயமில வென்னும் 25
நீதிப் பெருமைநூ லோதியு மோராய்
யானை வேட்கையிற் சேனை நீக்கிப்
பற்றா மன்னனிற் பற்றவும் பட்டனை
பொற்றொடிப் பாவையை யுற்றது தீரக்
கொற்ற மெய்திக் கொண்டனை போந்த 30
மிகுதி வேந்தே புகுகென் போரும்
பயங்கெழு நன்னாடு பயம்பல தீரப்
புகுந்தனை புகன்றுநின் புதல்வரைத் தழீஇ
ஒன்னா மன்னனை யோடுபுறங் கண்டு
நின்னகர் நடுவண் மன்னுகென் போரும் 35

நகரமாந்தர் வாசவதத்தையைக் கண்டு கூறல்

தொகு

மாயோன் மார்பிற் றிருமகள் போலச்
சேயோன் மார்பிற் செல்வமெய் தற்கு
நோற்ற பாவாய் போற்றெனப் புகழ்தரும்
திருமலர்ச் செங்கட் செல்வன் றன்னொடு
பெருமகன்மடமகள் பின்வரக் கண்டனம் 40
உம்மை செய்த புண்ணிய முடையம்
இம்மையின் மற்றினி யென்னீ கியரென
அன்புறு கிளவிய ரின்புறு வோரும்
மண்மீக் கூரிய மன்னவன் மடமகள்
பெண்மீக் கூரிய பெருநல வனப்பின் 45
வளைபொலி பணைத்தோள் வாசவ தத்தை
உள்ளென மற்றியா முரையிற் கேட்கும்
அவணலங் காண விவண்வயிற் றந்த
மன்னருண் மன்னன் மன்னுகென் போரும்

யூகியை வாழ்த்துபவர்

தொகு

கருத்திற் சூழ்ச்சியொடு கானத் தகவயிற் 50
பெருந்திறல் வேந்தனெம் பெருமாற் சிறைகொள
மாயச் சாக்காடு மனங்கொளத் தேற்றி
ஆய மூதூர் ரகம்புக் கவன்மகள்
நாகுவளை முன்கை நங்கையைத் தழீஇப்
போகெனப் புணர்த்த போகாப் பெருந்திறல் 55
யூகியு மன்னுக வுலகினு ளென்மரும்

உதயணனைப் புகழ்வோர்

தொகு

வியன்கண் ஞாலத் தியன்றவை கேண்மின்
நன்றாய் வந்த வொருபொரு ளொருவற்கு
நன்றே யாகி நந்தினு நந்தும்
நன்றாய் வந்த வொருபொரு ளொருவற் 60
கன்றாய் மற்றஃ தழுங்கினு மழுங்கும்
தீதாய் வத்த வொருபொரு ளொருவற்குத்
தீதே யாகித் தீயினுந் தீயும்
தீதாய் வந்த வொருபொரு ளொருவற்
காசில் பெரும்பொரு ளாகினு மாமெனச் 65
சேயவ ருரைத்ததைச் செவியிற் கேட்கும்
மாயி காஞ்சனம் வத்தவ ரிறைவற்குப்
பெருஞ்சிறைப் பள்ளியு ளருந்துய ரீன்று
தீயது தீர்ந்தத் தீப்பொரு டீர்ந்தவன்
செல்வப் பாவையைச் சேர்த்திச் செந்நெறி 70
அல்வழி வந்துநம் மல்ல றீர
நண்ணத் தந்தது நன்றா கியரெனக்
கண்ணிற் கண்டவன் புண்ணியம் புகல்நரும்
ஓங்கிய பெருங்கலந் தருக்கிய வுதயணன்
தேங்கமழ் கோதையென் றிருநுதன் மாதரை 75
வேண்டியுங் கொள்ளான் வேட்டனென் கொடுப்பிற்
குலத்திற் சிறியவன் பிரச்சோ தனனென
நிலத்தின் வாழ்ந ரிகழ்ச்சி யஞ்சி
யானை மாயங் காட்டி மற்றுநம்
சேனைக் கிழவனைச் சிறையெனக் கொண்டு 80
வீணை வித்தகம் விளங்கிழை கற்கென
மாணிழை யல்குன் மகணலங் காட்டி
அடற்பே ரண்ணலைத் தெளிந்துகை விட்டனன்
கொடுப்போர் செய்யுங் குறிப்பிஃ தென்மரும்
மற்று மின்னன பற்பல பயிற்றி 85
மகளிரு மைந்தரும் புகழ்வன ரெதிர்கொள
அமரர் பதிபுகு மிந்திரன் போலத்
தமர்நகர் புக்கனன் றானையிற் பொலிந்தென்.

2 1 நகர் கண்டது முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/2_1_நகர்_கண்டது&oldid=482582" இலிருந்து மீள்விக்கப்பட்டது