பெருங்கதை/2 3 கட்டிலேற்றியது

  • பாடல் மூலம்

2 3 கட்டிலேற்றியது

சோதிடர் நல்ல முகூர்த்தம் அறிந்து கூறல்

தொகு

கடிகமழ் செல்வங் கலந்த காலை
இடியுறழ் முரசி னேயர்பெரு மகற்கும்
பிடிமகிழ் யானைப் பிரச்சோ தனன்மகள்
வடிமலர்த் தடக்கை வாசவ தத்தைக்கும்
ஓருயிர்க் கிழமை யோரை யளக்கும் 5
பேரிய லாளர் பிழைப்பிலர் நோக்கி
வழுவில் செந்தீப் பழுதில வேட்கும்
பொழுதுமற் றிதுவெனப் புரையோர்க் குரைப்ப

மணப்பந்தர்

தொகு

அறுதொழின் முத்தீ யருந்துறை போகிய
மறைநவி னாவின் மரபிய லந்தணன் 10
பல்பூம் பந்தருட் செல்வஞ் சிறக்கும்
இருநிலத் திலக்கண மியற்பட நாடி
வெண்மண னிரப்பங் கொளீஇக் கண்ணுறப்
புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை
முக்குழிக் கூட்டத் துட்பட வோக்கி 15
ஆற்றாச் செந்தீ யமைத்தனன் மேற்கொள
ஐயொன் பதின்வகைத் தெய்வ நிலைஇய
கைபுனை வனப்பிற் கான்முத றோறும்
ஆரசங் காகிய வணிமுளை யகல்வாய்ப்
பூரண பொற்குடம் பொலிய விரீஇ 20
வெண்மடன் ஞெமிரிய தண்ணிழற் பந்தருள்
ஐஇய வாசவா னெய்யொடு கலந்த
ஐவகை யுணவொடு குய்வளங் கொளீஇ
நறிய வாகிய வறுசுவை யடிசிற்
பெருஞ்சோற் றமலை பரந்துபலர் மிசையும் 25
மிச்சி லெய்தா வுட்குவ ரொருசிறை
….. விசை யம்மிக் குணதிசைக் கோணத்
தீடமை பீடிகை பாடுபெற விருந்த
பொன்னயி ராணி முன்வயிற் பேணிப்
பன்னிய பனுவற் பார்ப்பன முதுமகன் 30
அந்த ணாவிரை யலரு மறுகையும்
நந்தி வட்டமு மிடையிடை வலந்த
கோல மாலை நாற்றி வானத்
தருந்ததி யரிவையோ டாணிகற் பரவும்
பொருந்துமொழிப் புறநிலை புணர்ந்துபலர் வாழ்த்தி 35
நூன்முறை படைத்த நான்முகக் கடவுள்
தாண்முதற் றானத்துத் தகைபெற விரீஇப்

தெய்வ நிவேதன வகை

தொகு

பாலுலை வெந்த வாலவிழ்க் கலவையும்
தேனுலை வெந்த தூநிறத் துழவையும்
புளியுலை வெந்த பொன்னிறப் புழ்க்கலும் 40
கரும்புலை வெந்த கன்னற் றுழவையும்
நெய்யுலை வெந்த மைந்நிறப் புழுக்கொடு
பொன்னகன் மணியகல் செப்பகல் வெள்ளி
ஒண்ணிறப் போனக மண்ணக மலிர
அரிவைய ரடுமடை யமிழ்துகொண் டோச்சி 45

தேவரை வழிபடுதல்

தொகு

பஞ்ச வாசமொடு பாகுவலத் திரீஇ
அஞ்செஞ் சாந்தமொடு மஞ்ச ணீவி
இருப்பக னிறைந்த நெருப்புநிறை சுழற்றித்
தேவர் தூம மேவர வெடுப்பி
மலையினீ ராயினு மண்ணினீ ராயினும் 50
அலைதிரைப் பௌவத் தகத்தினீ ராயினும்
விசும்பினீ ராயினும் விரும்புபு வந்துநும்
பசும்பொ னுலகம் பற்றுவிட் டொழிந்து
குடைநிழற் றானைக் கொற்றவன் மடமகள்
மடையமைந் துண்டு மங்கலந் தம்மென 55
ஒப்பக் கூறிச் செப்புவன ரளிப்பக்

கன்னி மகளிர் செயல்

தொகு

கன்னி மகளிர் துன்னுவனர் சூழ
நான்முகக் கடவுளொடு தாண்முதற் றானம்
அன்னத் தொழுதியின் மென்மெல வலங்கொண்
டம்மென் சாயற் செம்முது பெண்டிர் 60
உழுந்துஞ் சாலியு முப்பு மலரும்
பசுங்கிளிச் சிறையெனப் பக்க நிறைத்த
பாகுஞ் சாந்தமும் போகமொடு புணர்ந்த
மங்கல மரபின வங்கையு ளடக்கிக்
கொழுமுகைச் செவ்விரல் போதெனக் கூப்பி 65
எழுமுறை யிறைஞ்சுகென் றேத்துவனர் காட்ட
ஐதேந் தல்குலர் செய்கையிற் றிரியா
மடைத்தொழில் கழிந்தபி னடைப்பட நாட்டி

காஞ்சனை வாசவதத்தையை உதயணனுக்கருகில் இருக்கச் செய்தல்

தொகு

அரம்போ .ழவ்வளை யணிந்த முன்கைச்
சுருங்காச் சுடரொளிச் செம்பொற் பட்டம் 70
சூளா மணியொடு துளங்குகடை துயல்வரும்
புல்லகம் பொருந்திய மெல்லெ னோதிப்
பொன்னணி மாலை பொலிந்த பூமுடீஇ
வண்ணப் பூமுடி வாசவ தத்தையைச்
செண்ணக் காஞ்சனை செவ்விதிற் றழீஇ 75
இலக்கத் திரியா தியற்பட விரீஇ
நலத்தகை மன்னவ னட்பொடு புணர்த்த

உதயணன் திருமணச் சடங்குகளைச் செய்தல்

தொகு

புண்ணியப் புறநடைப் பண்ணமை யிருக்கையன்
உறுவரை யுதயத் துச்சிமுக நோக்கி
அமைதிக் கொப்ப வளந்துகூட் டமைத்த 80
சமிதைக் கிரிகை சால்புளிக் கழிப்பி
மந்திர விழுநெறித் தந்திரம் பிழையாது
துடுப்பிற் றோய்த்த சேதா நறுநெய்
அடுத்த செந்தீ யங்கழ லார்த்திப்
பாம்பொற் கிண்கிணி பரட்டுமிசை யார்க்கும் 85
செந்தளிர்ச் சீறடி செவ்வனம் பற்றிப்
போகமுங் கற்பும் புணர்ந்துட னிற்கென
ஆகுபொருள் கூறி யம்மிமுத லுறீஇ
நன்னெய் தீட்டிய செம்மல ரங்கைப்
பொம்மல் வெண்பொரி பொலியப் பெய்தபின் 90
நன்னிலை யுலகினு ணாவல் போலவும்
பொன்னணி நெடுமலை போலவும் பொழில்வயின்
மன்னுக விவரெனத் தன்னெறி பிழையான்
விதியிற் கூறிய விளங்கிழை வேட்கும்
அதிரா நெறியி னத்தொழில் கழிந்தபின் 95
மதியி னன்ன வாண்முகம் பொலிய
ஓடுகொடி மூக்கி னூடுபோழ்ந் தொன்றாய்க்
கூடுதல் வலித்த கொள்கைய போலப்
பொருது போந்துலாம் போதரித் தடங்கண்
அமிழ்துசேர்ந் தனவக விதழ்நா ணிறக்கமொடு 100
பிறந்தவிற் பெருங்கிளை நிறைந்தொருங் கீண்டப்
பால குமரர் தோள்புகன் றெடுப்ப
நாடு நகரமுங் கூடுதற் கருளி
யாயு மெந்தையுந் தீமுன் நின்று
வாயிற் கூடுதல் வராதிவண் வந்தென 105
வலிபுணர் வதுவைக்குச் சுளியுநள் போல
நடத்த றேற்றா மடத்தகை மாதரை
வளைபொலி முன்கை வருந்தப் பற்றித்
தளையவிழ் தாரோன் வலமுறை வந்து
மறுவில் காதன் மக்களைப் பெறுகென 110
முறைமையிற் பிழையாது முகிழ்விரல் பற்றித்
தகாஅக் காலந் தலைவரு மெனினும்
பகாஅக் காதலொடு பத்திமை……
செஞ்சுடர் போன்ற வங்குலி நுழையா
வெஞ்சுடர் வீர னெஞ்சுமுத னீவித் 115
தென்மருங்கு மடுத்த தீர்த்தப் புன்மிசை
மென்மருங்கு கெழிலியை மெல்லென நடாஅய்
வதுவைத்தரனம் பொதுவந் தொன்றி
அந்த ணாள ராசிடை கூற
வெந்திறல் வேந்தன் பைந்தொடி யோடும் 120
உத்தர கோணத் தத்தக வமைத்த
வேற்றுரி யதன்மிசை யாற்றுளி யிருந்து
படுசுடர்ச் செக்கர்ப் பசலை தீர
விடுசுடர் மதியமொடு வெண்மீ னிவர்ந்த
வடபான் மருங்கிற் சுடர்மீக் கூரிய 125
கற்புடை விழுமீன் காணக் காட்டிய
பொற்றொடி நுதன்மிசைப் புனைவிரல் கூப்பி
மன்னிய வுலகினு ணின்னியல் பாக
என்வயி னருளென மும்முறை யிறைஞ்சுவித்
தெதிர்த்த விரதமொ டியல்பிற் பிழையாது 130
சதுர்த்தி யிருந்து கதிர்த்த காப்பொடு
மெய்ம்முத றிரியாது வேண்டுங் கிரிகையிற்
கைம்முதற் கேண்மை கழுமிக் கழிந்தபின்

மணவறைக் கட்டிலின் சிறப்பு

தொகு

மருப்பினும் பொன்னினு மணியினும் புனைந்த
திருத்தகு திண்காற் றிருநிலை பெற்ற 135
வெண்பூம் பட்டிற் றிண்பிணி யமைந்த
பள்ளிக் கட்டில் வெள்ளிதின் விரிந்த
கோடுயர் பல்படை சேடுறச் சேர்த்தி
வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும்
மணியு முத்து மணிபெறப் பரப்பி 140
அடிநிலை யமைத்து முடிநிலை காறும்

உதயணனையும் வாசவதத்தையையும் பள்ளிக்கட்டின் மேலேற்றுதல்

தொகு

தாம நாற்றிக் காமங் குயின்ற
கோலச் செய்கை வாலணிப் பொலிந்த
எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய
மயிலியன் மாத ரியல்பிற் படுத்த 145
கட்டின் மீமிசைக் கட்டலர் கமழும்
ஒண்டார் மார்பி னுதயண குமரற்குத்
தண்டாக் காதலொடு தக்கவை யறிந்து
விண்ணவர் கிழவன் வீற்றிடங் கடுப்ப
மண்ணக மன்னர் மரபறிந் தியற்ற 150
அவ்வளைப் பணைத்தோ ளதிநா கரிகியைக்
கைவயிற் பிழையாது காஞ்சனை தழீஇ
உண்மை யுணரா நுண்மைப் போர்வையிவள்
பெண்மை காணினொ பிழைப்பிலென் யானெனத்
தன்னொளி சமழ்த்திவள் பெண்ணொளி புகற்ற 155
மண்ணார் மணிப்பூண் மாதரை யிரீஇயபின்
கண்ணார் குருசிலைக் கவின்பெற வேற்றித்
தகைமலர்த் தாரோன் றடக்கை பற்றியவள்
முகைமலர்க் கோதை முடிமுதற் றீட்டிச்
செம்பொற் றால மலிரப் பெய்த 160
மங்கல வயினி மரபுளி யுறீஇ
ஒல்லென் சும்மையொடு பல்வளந் தரூஉம்
உருமண் ணுவாவின் பெருநகர் மாந்தர்
ஆசில் செங்கோ லவந்தியன் மடமகள்
வாசவ தத்தையொடு வத்தவ ரிறைவனை 165
முட்டில் செல்வமொடு முறையிற் பிழையாது
கட்டிலேற் றினராற் கருதியது முடித்தென்.

2 3 கட்டிலேற்றியது முற்றிற்று.